என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!


ஜூனோ! இதுதான் எங்கள் செல்ல நாயின் பெயர். ஒரு வயதே நிறைந்த அது திடீரென ஒரு நாள் எதிர்பாராவிதமாக இறந்துபோய் எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன் இறப்பு  ஒருமாதத்திற்கும் மேலாக ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது. நாய் இறந்ததில் அப்படி என்ன பரபரப்பு இருக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் படித்தால் உங்களுக்கே தெரியும். எங்கிருந்தோ வந்து எங்களிடம் ஒட்டிக்கொண்ட ஜூனோ  எங்கள் அனைவரையும் அதன்  குறும்புகளாலும்  அன்பாலும் கவர்ந்துவிட்டது. அதன் பிரிவால் எங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை எல்லாம் சேர்த்து இரங்கல் கவிதையாக ஏற்கனவே  (ஜூனோ! எங்கள் செல்லமே! )பதிவிட்டிருந்தேன். அதை படித்தால் அதன் மீது நாங்கள் வைத்திருந்த அன்பு உங்களுக்குப் புரியும்.
     ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் வெளியே போர்டிகோவில் படுத்துகொள்ளும் ஜூனோ அன்று வெளியே செல்ல மறுத்தது. உள்ளே தான் இருப்பேன் என்று அடம்பிடித்தது. இன்று ஒரு நாள் ஹாலில் படுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்.
     ஜூனோவுக்கு ஹாலில் T.V. டேபிளுக்கு கீழே அதற்கென உள்ள பெட்ஷீட் போட்டு படுக்கவைத்தோம். நான், என் மனைவி, மகன்  மூவரும் A/C அறையில் படுத்துக் கொண்டோம். அது எங்கள் அறைக்குள் வருவதற்காக நாங்கள் படுத்திருந்த அறையின் கதவைப் பிராண்டியது. கதவு திறக்கப் படாததால் அதன் இடத்திலேயே போய்  படுத்துக்கொண்டது.

     விடியற்காலை 3.30 மணிக்கு நான் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தேன். பாத்ரூம் போய்விட்டு வரும்போது கவனித்தேன். ஜூனோ அது படுத்திருந்த இடத்தில் காணவில்லை. இது போன்ற சமயங்களில் ஜூனோ இன்னொரு அறையில் கட்டில்மேல் உள்ள மெத்தையில் படுத்து உறங்குது வழக்கம். அந்த அறைக்குச் சென்று பார்த்தேன். நான் நினைத்ததுபோல் கட்டிலில் மெத்தைமீது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. திரும்பிய நான் திடீரென்று சந்தேகம் கொண்டு மீண்டும் சென்று பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். ஜூனோ அசைவற்றுக் கிடப்பதுபோல் தோன்றியது.
ஜூனோ! ஜூனோ! என்று கூப்பிட்டேன். கண் திறக்கவில்லை. மெதுவாக   தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. நான் அதிர்ச்சி அடைந்து எனது மனைவியை அழைத்தேன். மனைவியும் மகனும் ஓடி வந்தனர். அவர்களும் நான் சொல்வதை நம்பாமல் ஜூனோவை எழுப்பிப் பார்த்தனர். எந்தப் பயனும் இல்லை. தூங்குவது போலவே காட்சியளித்த ஜூனோவை அது படுத்திருந்த நிலையை மாற்றிப்போட்டுப் பார்த்தபோதுதான் அது நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு  இறந்து கிடந்ததை உணர்ந்தோம்  . மேலும் அதன் நாக்கு  மட்டும் நீல நிறத்தில் மாறியிருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம்.
                                             

1 கருத்து:

  1. சகோதரர் T N முரளிதரன் அவர்களுக்கு, ஒரு மன அமைதிக்காக நீங்கள் எழுதிய உங்கள் ஜூனோ! என்ற செல்ல நாயினைப் பற்றிய கட்டுரைகளை படித்தேன். உங்கள் வலைப் பதிவில் ARCHIVE இல்லாததால் இந்த கட்டுரைகளை கண்டுபிடிக்க சற்று சிரமப் பட்டேன். நேரம் இருக்கும் போது ” ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி” என்ற எனது கட்டுரைக்கு கருத்துரை தரவும்.
    http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895