என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 30 ஜனவரி, 2012

படிப்பிற்காக பிச்சை எடுத்த பெண். நெஞ்சை உலுக்கிய சம்பவம்


       இதோ இந்த படத்தில் உள்ள பெண்ணின் பெயர் ஷ்ரவாணி. வயது 17. இவரைப் பற்றி வெளியான செய்திதான். நெஞ்சை அதிர வைத்தது. "கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!" என்று அவ்வை சொன்னது இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் அதை செய்து காட்டிவிட்டார் இந்தப் பெண். ஆம். ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கான பணம் சேர்ப்பதற்காக கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
      ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் நரசிம்மன்னா என்பவரின் மகள்தான் ஷ்ரவாணி. இதய நோயாளியான நரசிம்மன்னா தன் இளைய மகளான ஷ்ரவாணியை +2 விற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. ஷ்ராவாணி ஆசிரியையாக விரும்பினார். +2 வில்  அவர் எடுத்த மதிப்பெண்கள் 752 / 1000. ஏழ்மை காரணமாக தந்தையால் தன்னை தொடர்ந்து படிக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்த ஷ்ரவாணி எப்படியாவது தனது கனவான ஆசிரியர் பயிற்சியில்  சேர பிச்சை எடுக்கவும்   துணிந்தார். ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தவராம் ஷ்ராவாணி. அவரது ஆங்கிலப் பேச்சுத் திறமை அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்ததாம்.
       அதே மாவட்டத்தை சேர்ந்த ஜங்கலப்பா என்பவரின் உதவியுடன் ஆலப்புழாவிற்கு வந்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவிற்கு  கட்டிடத் தொழிலாளியாக இவரது தந்தை வந்திருக்கிறார், அவருடன் ஷ்ரவாணியும் உடன் வந்திருக்கிறார்.

    ஒன்பது நாட்களாக பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஷ்ரவாணி ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் சம்பாதித்ததாகவும் தற்போது 2834 ரூபாய் பிச்சையின் மூலம் சேர்த்திருப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு மொத்தம் 24000 ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
       ஓரிரு முறை மட்டுமே தன்னை சந்தித்த ஜங்கலப்பா தனக்கு எந்தவித கமிஷனும் பெற்றுக்கொள்ளாமல் உதவியதாகவும், தங்குமிடத்திற்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் மட்டும் தந்ததாகவும் தெரிவித்தார்.
         ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஷ்ரவாணியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி மீட்டு மகிலாமன்றம் அமைப்பிடம் ஒப்படைத்தது. பின்னர் அவர் மீண்டும் அவரது சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
         பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ஷ்ரவாணி  படிப்பதற்கு நிதி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். எப்படியோ நல்லபடியாக ஊர் சேர்ந்து அவரது கனவு நிறைவேற வாழ்த்துவோம்.
       இதில் நெஞ்சை உறுத்துகிற விஷயம் என்னவென்றால் சுதந்திரம்  பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏழைகள் கல்வி பெற எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.? ஒருவேளை அந்தப் பெண் சமூக விரோத கும்பலிடம் சிக்கி இருந்தால் என்னாவது? எத்தனையோ திட்டங்கள் இருக்கிறதாகச் சொல்கிறார்கள்? ஆனால் இந்தப் பெண்ணுக்கு அவை என்ன உதவி செய்தது? இதற்கு காரணம் அரசியவாதிகளா? சமூகமா? ஒட்டுக்கேட்க ஓடிவரும் அரசியல் வாதிகள் எங்கே போனார்கள்? தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பயனில்லாத வெட்டிப் போராட்டங்களை நடத்துவதற்குத்தானே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது?.
       ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பணம் சேர்த்து படிப்பை தொடரலாம் என்று அவனால் முடிந்த அவனுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறானே? ஆனால் நாம் என்ன செய்தோம்? சுற்றி இருப்பவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை வாய் மூடி மௌனிகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டியவர்களே.
     அம்மா ஷ்ராவாணி! மனசாட்சி உள்ளவர்கள் சார்பாகக் கண்ணீருடன் கேட்கிறேன். எங்களை மன்னிப்பாயா?
************************************************************
இதையும் படியுங்க!

வெள்ளி, 27 ஜனவரி, 2012

முகம் தெரியாத முதல்வர்கள்



      63 வது 
      இனிய  
     குடியரசு தின
      வாழ்த்துக்கள்!  


      படத்தில் உள்ள இருவரும் யாரென்று தெரியுமா? இருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. முதலில் உள்ளவர் இந்திய சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்.இரண்டாவதாக உள்ளவர் நமது முதல் குடியரசு தினத்தின்போது முதல் அமைச்சராக இருந்த குமார சாமி ராஜா அவர்கள்.
      நாடெங்கிலும் குடியரசு தினவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்றைய தினத்தில் அன்றைய முதல்வர்கள் யாராக இருக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை தேடித் தெரிந்து கொண்டேன். என்னைப்போல் தெரியாதவர்கள் சிலர் இருக்கலாம். அதற்காகவே இந்தப் பதிவு. 
    நாம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றைய தேதி வரை முதல்வர்களாக பணியாற்றியவர்களை பட்டியலிட்டிருக்கிறேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்.

         பெயர்                             பதவிக்காலம்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்        23.03.1947 முதல் 06.04.1949 வரை 
குமாரசாமி ராஜா                                 06.04.1949 முதல்  09.04.1952 வரை 
ராஜாஜி                                  04.04.1952 முதல் 13.04.1954 வரை 
காமராஜர்                               13.04.1954 முதல் 31.03.1957 வரை 
காமராஜர்                               13.04.1957 முதல் 01.03.1962 வரை 
காமராஜர்                                15.03.1962 முதல் 02.10.1963 வரை 
பக்தவச்சலம்                            02.10.1963 முதல் 06.03.1967 வரை 
அண்ணாதுரை                          06.03.1967 முதல் 03.02.1969 வரை 
நெடுஞ் செழியன்                       03.02.1969 முதல் 10.02.1969 வரை 
மு.கருணாநிதி                          10.02.1969 முதல் 04.01.1971 வரை 
மு.கருணாநிதி                          15.03.1971 முதல் 31.01.1976 வரை 
எம்.ஜி.ஆர்.                               30.6.1977 முதல் 17.2.1980 வரை
எம்.ஜி.ஆர்.                               9.6.1980 முதல் 15.11.1984 வரை
எம்.ஜி.ஆர்.                              10.2.1985 முதல் 24.12.1987 வரை
நெடுஞ் செழியன்                       24.12.1987 முதல் 7.1.1988 வரை
ஜானகி எம்.ஜி.ஆர்.                     7.1.1988 முதல் 30.1.1988 வரை
மு.கருணாநிதி                         27.1.1989 முதல் 30.1.1991 வரை
ஜெ.ஜெயலலிதா                        24.6.1991 முதல் 12.5.1996 வரை
மு.கருணாநிதி                         13.5.1996 முதல் 13.5.2001 வரை
ஜெ.ஜெயலலிதா                       14.5.2001 முதல் 21.9.2001 வரை
ஓ.பன்னீர்செல்வம்                     21.9.2001 முதல் 1.3.2002 வரை
ஜெ.ஜெயலலிதா                       2.3.2001 முதல் 13.5.2006 வரை
மு.கருணாநிதி                         13.5.2006 முதல் 15.5.2011 வரை
ஜெ.ஜெயலலிதா                       16.5.2011 முதல் 


********************************************************************************************* 

புதன், 25 ஜனவரி, 2012

தெய்வீகக் காதல்?


                அன்பே!
 
                விடியும் வரையில் விழித்திருந்தே நான்
                கவிதை ஒன்று உனக்கென வரைந்தேன்
                உன்முகம் கண்ட நாள் முதலாய்
                உணவும் எனக்கு இறங்க வில்லை
                இமையும் ஏனோ உறங்க வில்லை
                கயல்விழி கொண்டு எனைநீ பார்த்தால்
                கனவில் மிதப்பேன்; காற்றில் பறப்பேன்;
                காலையும் மாலையும் உனையே நினைப்பேன்.
                மற்றவை அனைத்தும் இனிமேல் மறப்பேன்!
                நீயே பிரம்மன் செதுக்கிய சிற்பம்
                தமனா த்ரிஷா  உன்முன் அற்பம்
                புதுநிலவின் கவர்ச்சியதை  முகமே வெல்லும் 
                பூந்தளிரின் மென்மையை உன் மேனியும் சொல்லும்
                செவ்வாழை பூப்போலே விளங்கும் விரல்கள்
                மாதுளையின் முத்தெனவே மின்னும் பற்கள்
                புது ரோஜா நிறமுந்தன் இதழில்
                பூவாசம் மணக்கும்உன் கார் குழலில்
                இளமானின் அழகு உந்தன் கண்ணில்
                ரகுமானின் இசை உந்தன் குரலில்
                அழகிய கன்னம் ஆரஞ்சு வண்ணம்
                பழகிடத் துடிக்குதடி எந்தன் எண்ணம்
                அள்ளிப் பருகிடவே ஆசை பெருகுதடி
                தள்ளி நிற்காதே மனம் தவித்து உருகுதடி
                உறங்கும் போதும் உந்தன் நினைவு
                விழிக்கும் போதும் உந்தன் கனவு
                இரும்பாய் இருந்தேன் காந்தமாய் கவர்ந்தாய்
                கரும்பாய் இன்று நெஞ்சில் இனித்தாய்
                திரும்பாமல் நீயும் சென்று  விடாதே
                உனக்கென காத்துக் கிடந்தேன் வீதியில்
                படிப்பைக் கூட விட்டேன் பாதியில்
                நீஎனைக் கேட்டால் எதையும் தருவேன்
                உயிரைக் கூட உடனே தருவேன்.
                உனக்கென ஏங்குது எந்தன் இதயம்
                உன் நெஞ்சில் வருமோ காதல் உதயம்
                இன்றே இதைநீ படித்து விடு
                சம்மதம் என்றே சொல்லி விடு


                                        இப்படிக்கு
                            உன்னை உயிருக்குயிராய் காதலிக்கும்
                                    ?????????????????????
                பின்குறிப்பு;
               விருப்பம் இன்றேல் கிழித்துவிடாதே
               குப்பை தொட்டியில் எறிந்துவிடாதே
               மீண்டும் இதைநீ மடித்து விடு
               உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு
**********************************************************************************************************************
இன்னைக்கு காதல் இப்படித்தான் இருக்குதுன்னு சொல்லிக்கிறாங்க! ..ஹிஹிஹிஹி

திங்கள், 23 ஜனவரி, 2012

TTR செய்தது சரியா?


     
     சமீபத்தில் குற்றாலம் சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பொதிகை எக்ஸ்பிரஸ் க்காக இரவு  7.00  மணி அளவில் காத்துக்கொண்டிருந்தேன். ரயில் சிறிது நேரத்தில் வர இருப்பதையும் எந்தப் பெட்டி எங்கே  நிற்கும் என்பதையும் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு நாம் ஏற வேண்டிய பெட்டியை தேடாமல் ஏற உதவியாக இருந்தது.

       நான் எனது இருக்கையை தேடி அமர்ந்துகொண்டேன். எதிர் இருக்கையில் ஏற்கனவே குழந்தையுடன் ஒரு இளம்பெண்ணும் (இருபது  வயதுக்குள்தான் இருக்கும்). நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணும் அமர்ந்து கொண்டிருந்தனர்.    ரயில்வே போலீஸ் ஒருவர் அவர்களிடம்  இந்த ஸ்டேஷன் இல் இறங்கி விடுங்கள் அல்லது Unreserved Compartment க்கு சென்றுவிடும்படியும் கூறிக் கொண்டிருந்தார்.
      கவனித்ததில்  காரணம் தெரிந்தது. தக்கல் முறையில் முன்பதிவு செய்திருந்த  அவர்கள் அடையாள அட்டை எதுவும் கொண்டுவரவில்லை.
      எனக்கென்னம்மா? உங்க நல்லதுக்குத்தான் சொல்லறேன். TTR வந்தா நிச்சயம் ஒத்துக்கமாட்டார். ரொம்ப தூரம் போய்ட்டு நடுவழியில் இறக்கி விட்டுட்டா நீங்க ஊருக்கு  திரும்ப  போறது கஷ்டம். இங்கயே இறங்கி வீட்டுக்கு போய்டுங்க.இல்லன்ன  Unresevred  ல போங்க! கைகுழந்தை  வேற வச்சிருக்கீங்க. நான் சொல்றதை கேளுங்கம்மா?:"ன்று சொல்லிக்கொண்டிருந்தார்.
      அவர்களைப் பார்த்தால் விவரம் அறிந்தவர்களாக தெரியவில்லை. அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பது சங்கடமாக இருந்தது.
      அடையாள அட்டை எடுத்து வரவேண்டுமென்று எங்களுக்கு தெரியாது என்றனர். அவர்கள் சொல்வது உண்மை என்றே தோன்றியது. அதற்குள் TTR வந்துவிட்டார்.
      டிக்கெட்டைப் பார்த்துவிட்டு அடையாள அட்டை கேட்டார்.
 எங்ககிட்ட இல்லீங்க. எங்களுக்கு தெரியாதுங்க.டிக்கெட் வாங்கி குடுத்தவங்க எங்களுக்கு சொல்லலைங்க. 
      அதுக்கு நான் என்ன பண்ணறது? தக்கல்ல புக் பண்ணா I.D எடுத்துக்கிட்டுதான் வரணும். இல்லன்னா அபராதம் கட்டனும். அதுவும் முடியலன்னா Unresevred கம்பார்ட்டுமென்ட்டுக்கு போய்டுங்க!
      அதற்குள் இன்னொரு பெண் இந்த ஒரு தடவை மன்னிச்சுக்குங்க சார்!   மெட்ராஸ்ல இறங்கினதும் என் மருமகன்  அடையாள அட்டை எடுத்து வர போன் பண்ணி சொல்லறேன். அப்படி இல்லன்ன பணம்கொண்டு வரசொல்லி கட்டிடறேன். ரொம்ப நாள் கழிச்சி என் பொண்ணு அவ புருஷனோடு சேந்து வாழ போவுது. எங்க வீட்டில நடந்த பிரச்சனையினால எங்களுக்கு எதுவெல்லாம் கொண்டு வரணும்னு தெரியலீங்க என்று பரிதாபமாக சொல்லிக்கொண்டிருந்தார்.
  இந்த சூழ்நிலையில் குழந்தை வேறு அழ ஆரம்பித்துவிட்டது. எரிச்சலில் அந்த இளம்பெண் குழந்தையிடம் சனியனே! நேரம் காலம் தெரியாம நீவேற அழுவாத என்று திட்ட ஆரம்பித்து விட்டார்
      உங்க சொந்த பிரச்சனைக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.அடுத்து சங்கரன் கோயில் வருது. ஃபைன் கட்டுங்க இல்லன்ன அங்க இறங்கி UNRESERVED COMPARTMENT  ல ஏறிகோங்க. உங்களுக்கு பாவம் பார்த்தா என் வேலை போய்டும்.
 "எவ்வளோ பணம் கட்டனும்." என்று கேட்க
ஒருத்தர் 500 ரூபா கட்டனும். ரெண்டு பேருக்கு 1000  ரூபா கட்டனும்.என்றார் TTR  
  எங்க கிட்ட ஒரு 500 ரூபாதான் இருக்கு. ஒருத்தர் இங்க இருக்கோம்.இன்னொருத்தர்.வேற பெட்டிக்கு மாறிடறோம் என்று அந்தப் பெண் சொல்ல
இரண்டு பேர் பேரும் ஒரே டிக்கட்ல இருக்கு. போனா ரெண்டுபெரும்தான் போகணும்"
      அருகில் இருந்த பயணி ஒருவரிடம் "பாருங்க சார்! I.D  இல்லாம வந்து என் உயிரை எடுக்குறாங்க. என்ன சஸ்பென்ட் பண்ணிடுவாங்க. இது புரியாம இவங்க பேசிக்கிட்டிருக்காங்க!"
        அந்த பெண் நாங்க என்ன விதௌட் லயா ஏறி இருக்கோம். டிக்கெட்தான் வச்சிருக்கோம் இல்ல. பொம்பளங்கன்னு கொஞ்சம் கூட பாவம் பாக்காம பேசறீங்கசற்று வேகமாக சொல்ல,
      TTR  க்கு  கோபம் வந்துவிட்டது.
ஆமாம்மா!  I.D  இல்லன்ன விதௌட் தான். ரொம்ப திமிரா பேசற! என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
   பக்கத்தில் இருந்தவர் ஏம்மா! அவர்தான் சொல்றாரு இல்ல. I.D கட்டாயம் கொண்டு வரணும்னு பேப்பர்ல போட்டிருக்கான் . ஸ்டேஷன் லயும் சொல்லிட்டுதான இருக்கான். அவரு சொல்றபடி செய்மா அதுதான் உங்களுக்கு நல்லது என்று TTR க்கு SUPPORT ஆக பேசத் தொடங்கினார்.

    அஞ்சு நிமிஷத்தில வரேன் அதுக்குள்ள ஒரு முடிவு எடுங்க என்று  TTR கிளம்ப அவருக்கு ஆதரவாக பேசியவர் இன்னும் ஒரு சிலர் அவர் பின்னாலேயே சென்றனர்.
    பின்னர்தான் தெரிந்தது அவர்கள்  R.A.C  பயணிகள்.அந்தப் பெண்கள் இறங்கி விட்டால் தனக்கு பர்த் தரும்படி கேட்கவே அவர்கள் TTR பின்னால் சென்றனர் என்பது. சுய நலம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
    
    செய்வதறியாது திகைத்து நின்ற அவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை நான் அவர்களிடம் TTR  வரட்டும் இன்னொரு தடவை கேட்டுப் பாக்கலாம். அப்படி ஒத்துக்கலன்னா Fine கட்டறதுக்கு வேணும்னா நான் ஹெல்ப் பண்றேன். என்றேன்.

      பின்னர் TTR வந்ததும் நான் கேட்டேன். இவங்களுக்கு வேற எதுவும் வழி எதுவும் இல்லையா? மினிமம்  FINE வாங்கி கிட்டு உதவி பண்ணுங்க இவங்கள பாத்தா இன்னொருத்தர் டிக்கட்ல ட்ராவல் பண்ற மாதிரி இல்ல. நீங்க நினைச்சா ஹெல்ப் பண்ணலாம்.
      என்ன சார்.படிச்ச நீங்களே இப்படி பேசலாமா? சீனியர் டிக்கட் செக்கர் வந்தால் நான் லஞ்சம் வாங்கிகிட்டு இவங்க ட்ராவல் பண்ண  நான் உதவி செஞ்சன்னு என்மேல ஆக்ஷன் எடுப்பாங்க! இந்த மாதிரி பரிதாபப் பட்டவங்க எவ்வளோ பேர் மாட்டிக்கிட்டுருக்காங்க தெரியுமா? இவங்களுக்காக நான் ரிஸ்க் எடுக்க முடியுமா?
     அவர்களைப் பார்த்து சரிம்மா நீங்க மாட்டிகிட்டா என்ன மாட்டி விட்டுடாதீங்க. நீங்களா தொலச்சதா சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு புலம்பிக்கொண்டே போனார்.
இறங்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. TTR  க்கு பணம் குடுக்கா முனைந்தபோது கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்று அந்தப் பெண் இறங்கும்போது சொன்னார் .  
     கிராமத்து ஏழைப் பெண்கள் அடையாள சான்றுக்காக எதை எடுத்து செல்ல  முடியும். அவர்கள் வைத்திருக்கும் ஒரே I.D ரேஷன் கார்டுதான். அதை அவர்கள் பயணம் செல்லும்போதெல்லாம் எடுத்துசெல்ல முடியுமா? அதிலும் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருக்குமே தவிர குடும்ப உறுப்பினர்கள் வேறு யாரேனும் பயணம் செய்தால் என்ன செய்வது.?
    பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் கடைபிடிப்பது சரியானதுதான். என்றாலும் இதனால் அதிகமாக பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே. முறைகேடுகளை செய்பவர்கள் போலி ஆதாரங்களை காட்டி தப்பித்து விடுகிறார்கள்.
    அந்த டிக்கட் பரிசோதகர் பரிதாபப்பட்டு விதிகளை    விட்டுக்கொடுத்தது சரியா? அல்லது ரயில்வே விதிகளின் படி பயணம் செய்ய அனுமதிக்காமலிருப்பது சரியா? 

***********************************************************

 குறிப்பு: டிக்கெட் பரிசோதகரை TTR என்று அழைக்கிறோம். அதன் விரிவாக்கம் என்ன?
விசாரித்துப் பார்த்ததில் TTR என்பது தவறு TTE என்பதே சரி! TRAVELLING TICKET EXAMINER  என்பதே அதன் விரிவாக்கம் என்று தெரிந்து கொண்டேன்.  
TTR என்பதற்கும் THROUGH TURNOUT  RENEWAL என்றும் ரயில்வேயில் விளக்கம் காணப்படுகிறது ===========================================================.
இதையும் படியுங்க!
குழப்பியல் 

சனி, 21 ஜனவரி, 2012

குழப்பியல்!

அணு உலை 
கண்டது 
அறிவியல் 

அதை 
ஆதரிப்பதும் 
எதிர்ப்பதும் 
அரசியல் 

எங்களுக்கு 
எப்போதுதான் 
புரியும் 
இந்தக் 
குப்பில்?

***********************************************************************************************************************
இதையும் படியுங்க!

வெள்ளி, 20 ஜனவரி, 2012

எல்லாம் உன்னால்



என்னைக் 
கவர்ந்தது 
உன் நடை

என்னை 
மயக்கியது  
உன் இதழ்கள் 

என்னைக் 
காயப்படுத்தியது 
உன் கண்கள் 

என்னை 
போதையில் 
ஆழ்த்தியது 
உன் புன்னகை 

என்னை 
கவிஞனாக்கியது 
உன் கன்னங்கள் 

என்னை 
பைத்தியமாக்கியது 
உன் 
பளிங்கு முகம்.

என்னை 
கிறுகிறுக்க 
வைத்தது 
உன் குரல்

என் 
நண்பர்களை 
பொறாமை 
கொள்ள வைத்தது 
உன் நட்பு 

கடைசியில் 
என்னையும் 
ஏமாளியாக்கியது   
என் காதல்! 

**************************************************************
இதையும் படியுங்க!

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சச்சினுக்கு ஒரு கடிதம்.


அன்புள்ள சச்சின்,
       உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும்  ஒருவன். விளயாட்டுத் துறையில் சிறப்பாக செயல் பட்டவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் என்று மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ள நிலையில் உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் படலாம் என்ற பத்திரிகைச் செய்திகள் பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அரசியல் தலைவர்கள். விளையாட்டு வீரர்கள், உள்ளிட்ட பல்வேறு துறையினரும் உங்களுக்கு பாரத  ரத்னா வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்னா ஹசாரே போன்றவர்கள் கூட உங்களுக்கு பாரத ரத்னா விருது தரப்பட வேண்டும் அன்று வலியுறுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கதுதான்.

       நீங்கள் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப் படுகிறீர்கள். ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன்,"நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக நான்காம் இடத்தில் விளையாடுகிறார். என்று கூறியிருப்பது சாதாரண விஷயமல்ல. (I have seen GOD , he bats at no.4 for India in Tests. - Matthew Hayden)  இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களின் ஆதரவையும் பெற்றிருப்பது. ஆச்சர்யம்தான்.

       இந்திய இளைஞர்களும் சிறுவர்களும் உங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள். உங்களை விளம்பரத்தில் பார்த்தால் கூட பரவசம் அடைகிறார்கள். மைதானத்தில் நீங்கள் செஞ்சுரி  அடித்தால் நாங்கள் செஞ்சுரி அடித்ததாகவே நினைக்கிறோம். நீங்கள் செஞ்சுரியை தவற விட்டால் நாங்கள்  வருத்தம் அடைகிறோம். உங்களது நூறாவது செஞ்சுரியை நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    நீங்கள் எண்ணிலடங்கா கிரிக்கெட் சாதனைகளின் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் அதிக செஞ்சுரி,ஒருநாள் போட்டிகளில் அதிக செஞ்சுரி, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிகமான ஒருநாள்  மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். அதிக MAN OF THE MATCH விருது பெற்றவர் உள்ளிட்ட உங்கள் சாதனைகளை பட்டியலிட இந்தக் கடிதம் போதாது.

       கிரிக்கெட் உலகம் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பெயர் போனது. ஆனால்  நீங்கள் எந்த சர்ச்சையிலும் சிக்கியதில்லை. மைதானத்திலும் வெளியிலும் நீங்கள் நேர்மையானவராகவும் நாணயமாகவும் ஒழுக்கத்துடனும்  நடந்து கொண்டிருகிறீர்கள். உங்களைப் பற்றி விமர்சித்தவர்கள் மீதும்  நீங்கள் கோபம் கொண்டதில்லை. உங்களுடைய ஆட்டம்தான் அவர்களுக்கு பதிலாக அமைந்தது.  
     நீங்கள் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்திருக்கிறீர்கள். இருநூறு குழந்தைகளுக்கு கல்விக்கான செலவை அப்னாலயா என்ற அமைப்பின் மூலமாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். 140 அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான நிதியினைப் பெற உதவி இருக்கிறீர்கள்.

       குறை என்று உங்கள் மீது சொல்வதற்கு அதிக அளவில் ஏதுமில்லை என்றபோதும்., வெளி நாட்டில் உங்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட காரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக உங்களுக்கு  இந்திய அரசு அளித்த சலுகை சர்ச்சைக்குரியதாக இருந்தது. சமீபத்தில் நீங்கள் விளம்பரத்தில் நடித்து  சம்பாதித்த பணத்திற்கு போராடி வரிச்  சலுகை பெற்றது உங்கள் ரசிகர்களான எங்களுக்கு உறுத்தலாகத்தான் இருந்தது. அந்த வரியை செலுத்த முடியாத நிலையிலா நீங்கள்  இருந்தீர்கள்?

       சமீப காலங்களில் உங்கள் ஆட்டத்திறன் குறைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நூறாவது சதத்தை  அடிப்பதற்கு நீங்கள் படும் பாட்டை நாங்கள் அறிவோம். நீங்கள் ஒய்வு பெற வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே நினைக்கிறோம். இளைஞர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டியதும் அவசியமாகிறது.

       ஆனாலும்  நம் இளைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்துவது இல்லை என்பது வேதனைக்குரியது. தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரிலும் மற்ற வீரர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் நன்றாகவே விளையாடி இருக்கிறீர்கள்.

       உங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும். நீங்கள் கைம்மாறு செய்ய வேண்டும்.  ஆஸ்திரேலியா டூருக்கு உங்கள் மகன் அர்ஜுனையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அங்கு பயிற்சியின் போது  அவர் உங்களுக்கு பந்து வீசினார். அவருக்கு நல்ல பின்புலமாக நீங்கள் அமைந்திருக்கிரீர்கள்.  ஆனால்  No.10 T  சட்டை அணிந்து நாமும் ஒரு டெண்டுல்கராக வரவேண்டும் என்று கனவு காணும் ஏழை விளயாட்டு வீரர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. 
       இந்திய கிராமங்களில் பல்வேறு விளையாட்டுகளில்  திறமையானவர்கள் எவ்வளவோ பேர்  மறைந்து கிடக்கிறார்கள்.  அவர்களைக் கண்டறிந்து பட்டை தீட்டி ஒலிம்பிக் பந்தயங்களில் பதக்கங்களை வெல்லும் அளவுக்கு ஏதேனும் நீங்கள் செய்ய வேண்டும். இது என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.
       உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது. ஆனால்   பாரத ரத்னா பெறுவதற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளதகக் கூறப்படும்  இந்திய ராணுவத்தில்  பணியாற்றியவரும் ஹாக்கி விளயாட்டு வீரருமான   தியான் சந்த் அவர்களுக்கு (தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும்) வழங்கப்பட நீங்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

       தியான் சந்த் அவர்கள் மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லக் காரணமாக இருந்தவர். அவருடைய சாதனைகளும் சாதாரணமானவை அல்ல. அவற்றை விளக்க இந்தக் கடிதம் போதாது. அவை உங்களுக்கு தெரியாததல்ல. உங்கள் சாதனைகளை  நாங்கள் கண்ணால் கண்டிருக்கிறோம். தியான் சந்தின் சாதனைகளை நாங்கள் பார்த்ததில்லை. இன்றைய இளைஞர்கள் அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு பாரத ரத்னா ஒரு வாய்ப்பாக இருக்கும்.  நீங்கள் பாரத ரத்னா பெறுவதற்கு தகுதி உடையவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிந்து பின்னர் இவ்விருதைப் பெற வயதும் காலமும் உள்ளது.  விளையாட்டு  வீரர்களில் முதலில் பாரத ரத்னா விருது தியான் சந்த்  அவர்கள் பெற உங்கள் மனமார்ந்த ஆதரவை  அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
        நன்றியுடன்
                            இப்படிக்கு
             உங்கள் உண்மையான ரசிகர்களில் ஒருவன் 
*******************************************************************
இதையும் படியுங்க!
நானும் போனேன்! புத்தகக் கண்காட்சி 2012
நானும் நானும்
தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

திங்கள், 16 ஜனவரி, 2012

நானும் போனேன்! புத்தகக் கண்காட்சி 2012



     சென்னையிலே இருந்துகொண்டு புத்தகக் கண்காட்சிக்கு போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? 14.01.2012  அன்று நானும் போயிருந்தேன். தென் சென்னை பகுதியிலிருந்து புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இரு சக்கர வாகனம்,மின்சார ரயில்,பேருந்து என்று பயணம் செய்து கண்காட்சி நடக்கும் இடத்தை அடைய வேண்டி இருந்தது. 
     நல்ல கூட்டம் வந்திருந்தது. திறந்த வெளி அரங்க மேடையில் லேனா தமிழ்வாணனின் மகன் பேசிக் கொண்டிருந்தார்.தமிழ் வாணனின் பேத்தியை (இரண்டு வயது இருக்கும்) வேறு வாழ்த்துக்கூற அழைத்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர். குழந்தை பேச மறுத்தால் பிறகு வேறு முயற்சி செய்யலாம் என்று கூறினார். நல்ல காலம் குழந்தை அழகாகப் பேசியது. (பார்வையாளர்கள் தப்பித்தார்கள்.). வாரிசுகளை முன்னிலைப் படுத்துவதில் எந்தப் பிரபலங்களும் விதிவலக்கல்ல.

   சற்று அருகில் சென்று பார்த்தபோது, அட! நம்ம T. ராஜேந்தர். பக்கத்தில் அவ்வை நடராஜன். அவர்களுடைய  பேச்சைக் கேட்க ஆவலாக இருந்தாலும் நேரமாகி விட்டதால் உள்ளே நுழைந்தேன். புத்தக வாசனை மூக்கைத் துளைத்தது. எந்தப் புத்தகங்களை வாங்குவது என்று தெரியாமல் பல கடைகளை பார்த்துக்கொண்டே சென்று ஒரு சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஒரு சுற்று வந்தபின் பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.
       கடை எண் 334 டிஸ்கவரி புக் பேலஸ் இல் நமது கேபிள் சங்கர் வாசகர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு நண்பர் கேபிள் ஐ சமீப காலமாக கலாய்த் துக்கொண்டு வரும் (http://spoofking.blogspot.com)சாம் ஆண்டெர்சன் பற்றி அவரிடமே கேட்டுக்கொண்டிருந்தார். நானும் என்னை பிளாக்கர் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்பினேன். என்றாலும் எனது தன்மானம் தடுத்தது. காரணம்;  Face Book இல் எனது நண்பராய் இருந்த கேபிள் என்னை  friend list  இல் இருந்து எடுத்து விட்டார்.          (நண்பர்களின்  எண்ணிக்கை  5000 த்திற்கும் மேல் போய் விட்டதால் யாரோ ஒருவர் நண்பர்களில் சிலரை தூக்கி விடுங்கள் என்று கூற நண்பர்கள் லிஸ்ட்டில் நான் காணாமல் போனேன்.)  
         அதை விடுவோம். மூன்று மணிநேரம் கடந்து விட்ட நிலையில் 
ஜவஹர்லால் நேரு எழுதிய GLIMPSES OF WORLD HISTORY, சேத்தன் பகத் எழுதிய ONE NIGHT @ THE CALL CENTER, கே.என். ஸ்ரீநிவாஸ் எழுதிய 'கண்டு  பிடித்தது  எப்படி?' விகடன் பிரசுரத்தின் 'அச்ச ரேகை தீர்வு ரேகை', கீதா பிரஸ்ஸின் 'அத்யாத்ம ராமாயணம்' உள்ளிட்ட புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
 (அப்பாடா! புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவைப் போட்டுவிட்டேன். )

***********************************************************************************************
இதையும் படிச்சி பாருங்க! கருத்து சொல்லுங்க 


நானும் நானும்  
தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!
ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
யாரோ பார்க்கிறார்கள்!  

சனி, 14 ஜனவரி, 2012

நானும் நானும்

( மனித மனதின் முரண்பாடுகளை வெளிப்படுத்தும் கவிதை.
படித்து உங்கள் கருத்தை சொல்வீர்!)

என்னுள் இருப்பது இரண்டு ‘நான்’கள்
என்னையே கேட்டேன் எண்ணிலா ‘ஏன்?’கள்

நான் என்பது முரண்பாட் டுருவம்
நானும் நானும் எதிரெதிர் துருவம்

பொய்யைச் சொல்லி உதவியும் செய்வேன்
மெய்யைச் சொல்லி மாட்டியும் கொள்வேன்

புதுமை கண்டு போற்றவும் செய்வேன்
பழமை கண்டும் வியந்தும் போவேன்

முதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்
முட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்

தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்
குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்

கண்டதை எழுதி கவிதை என்பேன்
கவிதை படைத்துக் குப்பை என்பேன்

சிறுமை கண்டு சீறவும் செய்வேன்
துரோகம் கண்டு ஒதுங்கியும் செல்வேன்

வறியவர் கண்டு வாடவும் செய்வேன்
வறுமை கண்டு ஓடவும் செய்வேன்

பனியைப் போல உருகியும் விடுவேன்
பாறை போலே இறுகியும் விடுவேன்

இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்
இசையைக் கூட இரைச்சல் என்பேன்

காதலை ஒருநாள் கடவுள் என்பேன்
காமம் என்று மறுநாள் சொல்வேன்

முற்றும் துறந்திட முயற்சியும் செய்வேன்
சற்று நேரத்தில் சஞ்சலம் கொள்வேன்

அடக்கம் நானில் அடங்கி இருக்கும்

ஆணவம்இன்னொரு நானில் தொனிக்கும்

நானே வெல்வேன்! நானே தோற்பேன்!
நானின் தன்மை அறியா தலைவேன்

எதிரெதிர் 'நான்’கள் என்னுள் உறங்கும். 

எப்பொழுது எதுவெனத் தெரியா தியங்கும்

நான்கள் எனக்கு அடங்கு வதில்லை!

வழிவகை தெரிந்தால் தீருமென் தொல்லை!

 

**********************************************************

இதையும் படியுங்க!

தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை! 

மரியாதையா சிரிச்சுடுங்க! இல்லன்னா....அழுதுடுவேன்  

யாரோ பார்க்கிறார்கள்! 

செவ்வாய், 10 ஜனவரி, 2012

தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

 தானே புயல் தாக்கி பல நாட்கள் ஆகிவிட்டபோதிலும் அதன் தாக்குதலில் இருந்து கடலூர் பாண்டிச்சேரி பகுதிகள் இன்னும் சரியாக மீளவில்லை என்பதை சமீபத்திய பயணத்தின் போது தெரிந்து கொண்டேன். நான் நினைத்ததைவிட அதிகமான நீண்டகால இழப்புகளை ஏற்படுத்தியதை தாமதமாகவே  உணர்ந்து கொண்டேன். எந்தவித கட்சி பேதங்களின்றி மீட்பு நடவடிக்கைகள் நடைபெற உதவுவோம். அந்தப் பகுதியில் வசித்தவர்கள் அடைந்த துயரங்களில் ஒரு சில துளிகளை மட்டும்  கவிதை ஆக்கி இருக்கிறேன். 

            தானேன்னு பேர வச்ச
               தந்திரமா வந்த  புயலு
            தானே போயிடும்னு
               தப்பிதமா நினைச்சிட்டோம்.
            ஏனோ எங்க கூட
                இயற்கை மோதிடிச்சு.
            வீணா ஆக்கிடிச்சி
                 வெறியாட்டம் போட்டுடுச்சி


            முந்திரி மரமெல்லாம்
                 முழுசா சாஞ்சிருச்சு
            எந்திருக்க முடியாம
                 பலாமரம் படுத்துருச்சி.
            மந்திரிங்க வந்தாங்க
                மாயமா போனாங்க
            நொந்து நூலானோம்.
                நோய் நொடிக்கு ஆளானோம்.

 
            நோட்டைக் காட்டி நீங்க
                 நோட்டம் பாத்துக்கிட்டு.
            ஒட்டுக் கேட்டுஅப்போ
                 ஓடித்தான் வந்தீங்க
            சீட்டுக் கட்டு போல
                 சீர் கொலஞ்சி போன
            வீட்டுக் கூரைஎல்லாம்
               சீர் செய்ய வருவீங்களா?

            பேய்போல காத்தடிச்சி
                பெருமழையும் பெஞ்சிடிச்சு
            நாய்போல பொழப்பும்தான்
               நாறித்தான் போயிடிச்சு.
           பாய்போட்டு தூங்கிநாங்க
               பல நாட்கள் ஆயிடிச்சி.
           தாய்போல காப்பாத்த
                தவறாமல் வருவீங்களா?

            அம்மாவும் வந்தாங்க
                ஆறுதலும் சொன்னாங்க
            சும்மாவே நூறு பேரு
                 கூடத்தான் வந்தாங்க
            அவங்க வந்த ரோட்டை
                அவசரமா  போட்டாங்க
            எவங்க  வருவாங்க
                 எங்க பக்கம் சரிசெய்ய?


            குடிக்க தண்ணி இல்ல
                 லைட்டு போட கரண்டு இல்ல
            வடிக்க கஞ்சி இல்ல
                 வழிவகையும் தெரிய வில்ல
            படிக்க புள்ளைங்க
                    பள்ளிக்கூடம் போகவில்ல
            துடிச்சி கெடக்குறமே
                  துயரம் தீரலையே!



********************************************************************************************************************* 

இதையும் படியுங்க! 

சனி, 7 ஜனவரி, 2012

ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!



இசையைத் தவிர வேறு எதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் இல்லை  என்பது DAM 999  படம்  பற்றி அவர் கூறிய கருத்து நமக்குத் தெரிவிக்கிறது. அதை மறந்துவிட்டு  அந்த இசைக் கலைஞனை அவரது பிறந்த நாளில் (6.1.2012) வாழ்த்துவோம்.
        
        தமிழ் இசை மலையில் பிறந்து;
        இந்திய இசைச்  சமவெளியில் தவழ்ந்து;
        உலக இசைக்கடலில் நுழைந்த
        இசை நதியே !
                        
        தமிழ்த் திரை நிலத்தில் 
        விழுந்து முளைத்த           
        விதையே!
        இசையுலகில் செய்தாய் 
        புதிய விதியே!
                          
        சுற்றி வரும் பூமிக்கு     
        காதிருந்தால்
        சற்று நேரம்        
        நின்றுவிட்டுத்தான் செல்லும்!
        உன் இசை ஒலிக்கும்போது,
                          
        காற்று கூட              
        களிப்படையும்!             
        உன் இசையைக்             
        கடத்தும்போது, 

        வெற்றி தேவதைக்கும்         
        சந்தோஷம்;
        உன் கால்களை   
        பற்றிக்கொள்ளும்போது!
                          
        மயக்கும் இசை பிறக்கும் 
        உன் மனதில்;                                
        கலக்கும் இசை              
        கைகூடும்                
        உன் கைகளில்!
                         
        உன் கண்களில் கூட 
        தெரிவது   
        இசை வெளிச்சம்;
                           
        உன் இதயம்கூட 
        தாளத்தோடுதான் துடிக்கும்!
                         
        நாட்டுப்பற்றை
        நாற்பத்தேழோடு 
        மறந்து போன              
        மக்கள் மனதில் 
        வந்தே மாதரம் மூலம் 
        மீண்டும்              
        வந்தமரச் செய்தாய்!
                         
        இளைஞர்கள் மனதில் 
        இசையால் இடம் பிடித்தாய்!
                          
        இந்திய இசையை          
        இமயத்தில் 
        ஏற்றி விட்டாய்!
                           
        புதுப்புது              
        இசை வடிவங்களின் 
        பிரம்மாவே!                                 
        நீ              
        ஆஸ்கார் வாங்கியபோது          
        ஆ! என 
        ஆச்சரியப்பட்டது உலகம்!                                   
        ஜெய் ஹே! என்று முடியும்   
        தேசிய கீதம் கூட - இன்று        
        ஜெய் ஹோ!               
        என்று மாறிவிட்டது?  

        உலகமே 
        உனது இசையில் 
        மயங்கியது.
       
        நீயோ!
        இசையே 
        உலகமாக வாழ்கிறாய்!
         
         இன்னும் 
         பல்லாண்டுகள் வாழ்வாய்!
         இசைக் கயிற்றால் 
         இந்தியாவை இணைப்பாய்!
               
         உன்னை              
         தமிழகத்தில்               
         பிறக்கச் செய்ததால்          
         இறைவனை போற்றுகிறோம்!       
         'ல்லாப்புழும் றைனுக்கே!'