என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, June 11, 2012

பாலகுமாரனின் கவிதைகள்!

   எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் எல்லோரையும் போலவே எனக்கும்  பிடிக்கும். அவருடைய எழுத்து நடை காந்தம்போல ஈர்க்கும் தன்மை படைத்தது. அவரது கதாபாத்திரங்களின் உரையாடல்கள்  நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின்-நாம் அன்றாடம் பார்ப்பவர்களிடம் பேசுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும். குடும்ப உறவுகளுக்கிடையில் ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்தியிருப்பார். அவரது புகழ்பெற்ற நாவலான இரும்புக் குதிரைகளை பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறேன். தற்போது மீண்டும் அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   மிக அற்புதமான நாவல் அது. லாரி தொழிலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அத் தொழிலின் சிறு சிறு நுணுக்கங்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கும், ஆட்டோமொபைல் பொறியாலருக்குக் கூட தெரியாத பல தொழில் நுட்ப விஷயங்களை பாலகுமாரன் கூறியிருப்பது ஆச்சர்யத்தை  ஏற்படுத்தும் 
   இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதன் இலக்கியம்,கவிதைகள் ,சினிமா என்று ஆர்வம உடையவன். இயக்குனராகவேண்டும் என்ற எண்ணம உடையவன்.ஆனாலும் தனக்கு விருப்பமில்லாதா மோட்டார் துறையில் அலுவலராகப் பணி செய்து கொண்டிருப்பது வாழ்க்கைத் தேவைக்காக. சராசரி மனிதனாய் வாழ முடியாமல் அவன் படும் அவஸ்தைகளை நாமே படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பார் பாலகுமாரன்.  

    அவனுக்கு  குதிரைகள் மிகவும் பிடிக்கும்.அவனை பிரமிக்க வைத்த விலங்கு குதிரை.அவனது கனவுகளில் குதிரைகள் மட்டுமே வரும்  குதிரை அவனுக்கு ஆசான். அது வாழ்க்கை தத்துவங்களை அவனுக்கு உரைக்கும். குதிரைகள் சொல்வது அவனுக்கு வேதம்.அதை கவிதைகளாக வடித்தெடுப்பான்.
     விஸ்வநாதன் வாயிலாக அருமையான குதிரைக் கவிதைகளை படைத்திருப்பார் பாலகுமாரன். அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதை நிருபிக்கின்றன அந்தக் கவிதைகள். அந்தக் கவிதைகளுக்கு தலைப்பு இரும்புக் குதிரைகள் .இந்நாவலில் உள்ள பல குதிரைக் கவிதைகளை   உங்களோடு பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன். 
இன்று முதல் கவிதை

                குதிரைகள் கடவுள் ஜாதி -அதைக் 
                கும்பிடுதல் மனித நீதி
                புணர்ந்தபின்  குதிரைகள் 
                ஒருநாளும் தூங்கியதில்லை 
                பிடரியைச்  சிலிர்க்க ஓடும்
                பின்னங்கால்  வயிற்றில் மோத
                மனிதரில் உயர்ந்தவர்கள்
                மறுபடி குதிரையாவார் 
                மறுபடி குதிரையாகி
                மனிதரைக் காண வருவார் 
                குதிரைகள் பசுக்கள் போல 
                வாய்விட்டுக் கதறுவதில்லை 
                வலியில்லை என்பதல்ல 
                வலிமையே  குதிரை ரூபம்
                தொட்டதும் சிலிர்க்கும் குதிரை 
                சவுக்குக்குப் பணிந்து போகும் 
                குதிரைகள் எனக்குச் சொன்ன 
                வேதத்தின் முதலாம் பாடம் 

இரும்புக்  குதிரைகள் சொல்லும் அடுத்த வேதம் என்ன?
இனிவரும் பதிவுகளில்

   ***************************************************************************************
எனது ஒரு வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு ஆதரவு வழங்கிய பதிவர்களுக்கு நன்றி.

27 comments:

 1. பாலகுமாரனின் கவிதைகளில் ஒன்றை படிக்க தந்ததற்கு மிக நன்றி

  ReplyDelete
 2. நானும் பால குமாரனின் விசிறி
  அவருடைய மெர்குரிப் பூக்களை
  முதன்முதலாகப் படித்ததில் இருந்து
  அவருடைய எந்த நாவலையும் படிக்கத் தவறுவதில்லை
  இரும்புக் குதிரைகளை மிக அழகாக அறிமுகம்
  செய்துள்ளீர்கள்.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கரும்பு தின்னக் கூலியா தொடருங்கள் தொடர்கிறோம் .

  ReplyDelete
 4. அருமையான கவிதை, தொடருங்கள் தொடர்கிறோம் :)

  ReplyDelete
 5. ஆர்வம் தூண்டும் குதிரைக் கவிதை.
  வேகம், வலிமை என்பது தெரியும்.
  இன்னும் தொடருவேன்.
  நன்றியும் நல்வாழ்த்தும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. அன்புள்ள..

  நான் படைப்புலகில் எழுதத்தொடங்கியபோது மிகப் பெரிய ஆதர்சமாக கருதியது சுஜாதாவையும் பாலகுமாரனையும்தான். தேடித்தேடி ஓடிஓடிப் படித்தேன் பாலகுமாரனை. கிட்டத்தட்ட அகல்யா,,, மெர்க்குரிப் பூக்களுக்குப் பிறகு அதிகமுறை படித்தது இரும்புக்குதிரைகள்தான். அந்தக் கால நினைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நன்றிகள்.
  தொடக்கக்காலத்தில் எனது கதைகளைப் படித்து வாசகர் கடிதம் எழுதும் வாசகர்கள் பாலகுமாரனைப்போலவே உங்கள் கதைகள் இருக்கின்றன என்று எழுதினார்கள், அதற்காக ரொம்பப் பெருமைப்பட்டேன். இப்போது எனக்கென்று ஒரு வடிவம் பிடிபட்டுவிட்டாலும். பாலகுமாரன் என்று உச்சரித்தாலே ஒரு ஆனந்தம் பொங்கும். எனக்கு முன்னோடிகளில் அவருக்கு ஒரு தனித்த இடம் உண்டு, எத்தனை முறை படித்தாலும் அலுக்காத எழுத்து அவருடையது, அவரைப்பற்றி எழுதிக்கொண்டேபோகலாம் மனமும் உடலும் சலிக்காது,

  தொடர்ந்து வாய்ப்பமைவில் உங்கள் பதிவுகளை வாசிப்பேன்.

  ReplyDelete
 7. அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. //Avargal Unmaigal said...
  பாலகுமாரனின் கவிதைகளில் ஒன்றை படிக்க தந்ததற்கு மிக நன்றி//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 9. //Ramani said...
  நானும் பால குமாரனின் விசிறி
  அவருடைய மெர்குரிப் பூக்களை
  முதன்முதலாகப் படித்ததில் இருந்து
  அவருடைய எந்த நாவலையும் படிக்கத் தவறுவதில்லை
  இரும்புக் குதிரைகளை மிக அழகாக அறிமுகம்
  செய்துள்ளீர்கள்.தொடர வாழ்த்துக்கள்// வருகைக்கும் வாக்கிற்கும்,கருத்துக்கும் நன்றி ராமனை சார்,

  ReplyDelete
 10. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹ ர ணி சார்

  ReplyDelete
 11. //Sasi Kala said...
  கரும்பு தின்னக் கூலியா தொடருங்கள் தொடர்கிறோம்//
  வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி..

  ReplyDelete
 12. //வரலாற்று சுவடுகள் said...
  அருமையான கவிதை, தொடருங்கள் தொடர்கிறோம் :)//
  மிக்க நன்றி!

  ReplyDelete
 13. //Gobinath said...
  அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்//
  நன்றி கோபி!

  ReplyDelete
 14. //kovaikkavi said...
  ஆர்வம் தூண்டும் குதிரைக் கவிதை.
  வேகம், வலிமை என்பது தெரியும்.
  இன்னும் தொடருவேன்.
  நன்றியும் நல்வாழ்த்தும்.
  வேதா. இலங்காதிலகம்.//

  ReplyDelete
 15. பாலகுமரனின் கதைகள் சிலவற்றை படித்திருக்கிறேன் கவிதைகள் படித்ததில்லை!
  படிக்க வாய்ப்பு தந்தீர்! நன்றி
  சா இராமாநுசம்

  த ம ஓ 4

  ReplyDelete
 16. ரமணி சார் கூறியது போல நானும் அவரின் மெர்குரிப் பூக்கள் தான் முதலில் படித்தேன், சலிக்காமல் கதை சொல்லும் அவர் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் அதிகமான புத்தகம் இன்னும் படிகவில்லை. அவர் எழுதிய வரலாற்று நாவல்கள் படிக்க வேண்டும்


  படித்துப் பாருங்கள்

  வாழ்க்கைக் கொடுத்தவன்

  ReplyDelete
 17. பாலகுமாரனின் கவிதைகளைப் பகிர்ந்துகொண்டு பல நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். மிகவும் நன்றி முரளிதரன்.

  ReplyDelete
 18. ஆரம்ப காலத்தில் கணையாழியில் புதுக்கவிதைகள் பல எழுதியிருக்கிறார் பாலகுமாரன்.அவரது படைப்புகளின் ரசிகன் நான்.1972 இல்,ஜகதாம்பாள் காலனி வீட்டு வாசலில் நின்று கொண்டு அவருடன் உரையாடிய நாள் நினைவுக்கு வருகிறது.நன்று

  ReplyDelete
 19. நான் கவிதைகளை விருபுகிறவன் கவிதைகள் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை இருந்தும் வலைப்பதிவுகளில் காணக்கிடைக்கும் கவிதைகளை படிக்காமல் விடுவதில்லை எனக்கு ஒரு புதிய கவிஞரையும் கவிதையையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்...:)

  ReplyDelete
 20. பாலகுமாரனின் பல நாவல்களை நானும் படித்திருக்கிறேன். இரும்புக் குதிரைகளை எத்தனை முறை படித்திருக்கிறேன் எனக் கணக்கில்லை.

  குதிரைகள் சொல்லும் வேதங்கள்... நல்ல கவிதைகள். மீண்டும் இங்கே படித்ததில் மகிழ்ச்சி.

  உங்களது பக்கத்தினை தொடர்கிறேன்... இனி தொடர்ந்து வருவேன்...

  ReplyDelete
 21. மிக்க அருமை. பாலகுமாரனின் குதிரைக் கவிதைகளை நீங்கள் நினைவுறுத்தியதும் ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஜத்மாத்தவ் ன் "குல்சாரி" என்கிற குதிரையின் கதை ஞாபகத்தில் வந்து தோன்றியது. குலுங்கா நடையன், செக்கர் மேனியன் என்றெல்லாம் அந்த குதிரைக்கு பெயரிட்டு கதை தன் போக்கில் நீளும். அருமையான நாவல். மறுபதிப்பு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. என்னாது பாலகுமாரன் கவிதை எழுதி இருக்காரா .., எப்போ ???????

  ReplyDelete
 23. பாலகுமாரன் அவர்களின் குதிரை கவிதை அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 24. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நண்பரே

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895