என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, June 18, 2013

TTR செய்தது சரியா?

     சமீபத்தில் குற்றாலம்  சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக தென்காசி ரயில்வே நிலையத்தில்  பொதிகை எக்ஸ்பிரஸ் க்காக இரவு  7.00  மணி அளவில் காத்துக்கொண்டிருந்தேன். ரயில் சிறிது நேரத்தில் வர இருப்பதையும் எந்தப் பெட்டி எங்கே  நிற்கும் என்பதையும் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு நாம் ஏற வேண்டிய பெட்டியை தேடாமல் ஏற உதவியாக இருந்தது.

       நான் எனது இருக்கையை தேடி அமர்ந்துகொண்டேன். எதிர் இருக்கையில் ஏற்கனவே குழந்தையுடன் ஒரு இளம்பெண்ணும் (இருபது  வயதுக்குள்தான் இருக்கும்). நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணும் அமர்ந்து கொண்டிருந்தனர்.    ரயில்வே போலீஸ் ஒருவர் அவர்களிடம்  இந்த ஸ்டேஷன் இல் இறங்கி விடுங்கள் அல்லது முன்பதிவு இல்லாத பெட்டிக்கு சென்றுவிடும்படியும் கூறிக் கொண்டிருந்தார்.
      கவனித்ததில்  காரணம் தெரிந்தது. தக்கல் முறையில் முன்பதிவு செய்திருந்த  அவர்கள் அடையாள அட்டை எதுவும் கொண்டுவரவில்லை.
      எனக்கென்னம்மா? உங்க நல்லதுக்குத்தான் சொல்லறேன். TTR வந்தா நிச்சயம் ஒத்துக்கமாட்டார். ரொம்ப தூரம் போய்ட்டு நடுவழியில் இறக்கி விட்டுட்டா நீங்க ஊருக்கு  திரும்ப  போறது கஷ்டம். இங்கயே இறங்கி வீட்டுக்கு போய்டுங்க.இல்லன்ன  Unresevred  ல போங்க! கைகுழந்தை  வேற வச்சிருக்கீங்க. நான் சொல்றதை கேளுங்கம்மா?:"ன்று சொல்லிக்கொண்டிருந்தார்.
      அவர்களைப் பார்த்தால் விவரம் அறிந்தவர்களாக தெரியவில்லை. அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பது சங்கடமாக இருந்தது.
      அடையாள அட்டை எடுத்து வரவேண்டுமென்று எங்களுக்கு தெரியாது என்றனர். அவர்கள் சொல்வது உண்மை என்றே தோன்றியது. அதற்குள் TTR வந்துவிட்டார்.
      டிக்கெட்டைப் பார்த்துவிட்டு அடையாள அட்டை கேட்டார்.
 எங்ககிட்ட இல்லீங்க. எங்களுக்கு தெரியாதுங்க.டிக்கெட் வாங்கி குடுத்தவங்க எங்களுக்கு சொல்லலைங்க. 
      அதுக்கு நான் என்ன பண்ணறது? தக்கல்ல புக் பண்ணா I.D எடுத்துக்கிட்டுதான் வரணும். இல்லன்னா அபராதம் கட்டனும். அதுவும் முடியலன்னா Unresevred கம்பார்ட்டுமென்ட்டுக்கு போய்டுங்க!
      அதற்குள் இன்னொரு பெண் இந்த ஒரு தடவை மன்னிச்சுக்குங்க சார்!   மெட்ராஸ்ல இறங்கினதும் என் மருமகன்  அடையாள அட்டை எடுத்து வர போன் பண்ணி சொல்லறேன். அப்படி இல்லன்ன பணம்கொண்டு வரசொல்லி கட்டிடறேன். ரொம்ப நாள் கழிச்சி என் பொண்ணு அவ புருஷனோடு சேந்து வாழ போவுது. எங்க வீட்டில நடந்த பிரச்சனையினால எங்களுக்கு எதுவெல்லாம் கொண்டு வரணும்னு தெரியலீங்க என்று பரிதாபமாக சொல்லிக்கொண்டிருந்தார்.
  இந்த சூழ்நிலையில் குழந்தை வேறு அழ ஆரம்பித்துவிட்டது. எரிச்சலில் அந்த இளம்பெண் குழந்தையிடம் சனியனே! நேரம் காலம் தெரியாம நீவேற அழுவாத என்று திட்ட ஆரம்பித்து விட்டார்
   உங்க சொந்த பிரச்சனைக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.அடுத்து சங்கரன் கோயில் வருது. ஃபைன் கட்டுங்க இல்லன்ன அங்க இறங்கி UNRESERVED COMPARTMENT  ல ஏறிகோங்க. உங்களுக்கு பாவம் பார்த்தா என் வேலை போய்டும்.
 "எவ்வளோ பணம் கட்டனும்." என்று கேட்க
ஒருத்தர் 500 ரூபா கட்டனும். ரெண்டு பேருக்கு 1000  ரூபா கட்டனும்.என்றார் TTR  
  எங்க கிட்ட ஒரு 500 ரூபாதான் இருக்கு. ஒருத்தர் இங்க இருக்கோம்.இன்னொருத்தர்.வேற பெட்டிக்கு மாறிடறோம் என்று அந்தப் பெண் சொல்ல
  “இரண்டு பேர் பேரும் ஒரே டிக்கட்ல இருக்கு. போனா ரெண்டுபெரும்தான் போகணும்"
      அருகில் இருந்த பயணி ஒருவரிடம் "பாருங்க சார்! I.D  இல்லாம வந்து என் உயிரை எடுக்குறாங்க. என்ன சஸ்பென்ட் பண்ணிடுவாங்க. இது புரியாம இவங்க பேசிக்கிட்டிருக்காங்க!"
        அந்த பெண் நாங்க என்ன விதௌட் லயா ஏறி இருக்கோம். டிக்கெட்தான் வச்சிருக்கோம் இல்ல. பொம்பளங்கன்னு கொஞ்சம் கூட பாவம் பாக்காம பேசறீங்கசற்று வேகமாக சொல்ல,
      TTR  க்கு  கோபம் வந்துவிட்டது.
ஆமாம்மா!  I.D  இல்லன்ன விதௌட் தான். ரொம்ப திமிரா பேசற! என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
   பக்கத்தில் இருந்தவர் ஏம்மா! அவர்தான் சொல்றாரு இல்ல. I.D கட்டாயம் கொண்டு வரணும்னு பேப்பர்ல போட்டிருக்கான் . ஸ்டேஷன் லயும் சொல்லிட்டுதான இருக்கான். அவரு சொல்றபடி செய்மா அதுதான் உங்களுக்கு நல்லது என்று TTR க்கு SUPPORT ஆக பேசத் தொடங்கினார்.

    அஞ்சு நிமிஷத்தில வரேன் அதுக்குள்ள ஒரு முடிவு எடுங்க என்று  TTR கிளம்ப அவருக்கு ஆதரவாக பேசியவர் இன்னும் ஒரு சிலர் அவர் பின்னாலேயே சென்றனர்.
    பின்னர்தான் தெரிந்தது அவர்கள்  R.A.C  பயணிகள்.அந்தப் பெண்கள் இறங்கி விட்டால் தனக்கு பர்த் தரும்படி கேட்கவே அவர்கள் TTR பின்னால் சென்றனர் என்பது. சுய நலம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
    
    செய்வதறியாது திகைத்து நின்ற அவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை நான் அவர்களிடம் TTR  வரட்டும் இன்னொரு தடவை கேட்டுப் பாக்கலாம். அப்படி ஒத்துக்கலன்னா Fine கட்டறதுக்கு வேணும்னா நான் ஹெல்ப் பண்றேன். என்றேன்.

      பின்னர் TTR வந்ததும் நான் கேட்டேன். இவங்களுக்கு வேற எதுவும் வழி எதுவும் இல்லையா? மினிமம்  FINE வாங்கி கிட்டு உதவி பண்ணுங்க இவங்கள பாத்தா இன்னொருத்தர் டிக்கட்ல ட்ராவல் பண்ற மாதிரி இல்ல. நீங்க நினைச்சா உதவி செய்யலாம் .
      என்ன சார்.படிச்ச நீங்களே இப்படி பேசலாமா? சீனியர் டிக்கட் செக்கர் வந்தால் நான் லஞ்சம் வாங்கிகிட்டு இவங்க ட்ராவல் பண்ண  நான் உதவி செஞ்சன்னு என்மேல நடவடிக்கை  எடுப்பாங்க! இந்த மாதிரி பரிதாபப் பட்டவங்க எவ்வளோ பேர் மாட்டிக்கிட்டுருக்காங்க தெரியுமா? இவங்களுக்காக நான் ரிஸ்க் எடுக்க முடியுமா?
     முனகிக் கொண்டே அவர்களைப் பார்த்து சரிம்மா, நீங்க மாட்டிகிட்டா என்ன மாட்டி விட்டுடாதீங்க. நீங்களா தொலச்சதா சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு புலம்பிக்கொண்டே போனார்.
இறங்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. TTR  க்கு பணம் கொடுக்க முனைந்தபோது கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்று அந்தப் பெண் இறங்கும்போது சொன்னார் .  
 
     கிராமத்து ஏழை பெண்கள் அடையாள சான்றுக்காக எதை எடுத்து செல்ல  முடியும். அவர்கள் வைத்திருக்கும் ஒரே I.D ரேஷன் கார்டுதான். அதை அவர்கள் பயணம் செல்லும்போதெல்லாம் எடுத்துசெல்ல முடியுமா? அதிலும் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருக்குமே தவிர குடும்ப உறுப்பினர்கள் வேறு யாரேனும் பயணம் செய்தால் என்ன செய்வது.? இது போன்ற ஒரிஜினல் ஆதாரங்களை கொண்டு செல்லும்போது தவற விட்டுவிட்டால் பெறுவது எளிதா என்ன?
 
    பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் கடைபிடிப்பது சரியானதுதான் என்றாலும் இதனால் அதிகமாக பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே. முறைகேடுகளை செய்பவர்கள் போலி ஆதாரங்களை காட்டி தப்பித்து விடுகிறார்கள்.
    அந்த டிக்கட் பரிசோதகர் பரிதாபப்பட்டு விதிகளை    விட்டுக்கொடுத்தது சரியா? அல்லது ரயில்வே விதிகளின் படி பயணம் செய்ய அனுமதிக்காமலிருப்பது சரியா?   எனக்கென்னவோ மனிதாபிமான அடிப்படையில் பயணம் செய்ய அனுமதித்தது சரி என்றே தோன்றுகிறது.
 
  ********************************************************************

  கொசுறு : டிக்கெட் பரிசோதகரை TTR என்று அழைக்கிறோம். அதன் விரிவாக்கம் என்ன?
விசாரித்துப் பார்த்ததில் TTR என்பது தவறு TTE என்பதே சரி! TRAVELLING TICKET EXAMINER  என்பதே அதன் விரிவாக்கம் என்று தெரிந்து கொண்டேன்.   TTR என்பதற்கும் THROUGH TURNOUT  RENEWAL என்றும் ரயில்வேயில் விளக்கம் காணப்படுகிறது
 =======================

53 comments:

 1. ///அந்த டிக்கட் பரிசோதகர் பரிதாபப்பட்டு விதிகளை விட்டுக்கொடுத்தது சரியா? ///

  சரிதான் இதுல பெரிய பிரச்சனை ஏதும் இல்லைதான். ஏழைப் பெண்ணிடம் இந்த அளவுக்கு நியாயம் பேசிய டிடியார் அரசியல்வாதிகள் இப்படி வந்து இருந்தா இப்படி நியாயம் பேசிக் கொண்டிருப்பாரா என்ன

  ReplyDelete
 2. உண்மைதான். அரசியல் வாதியாக இருந்தால் டிக்கெட்டை வாங்கிக் கூட பார்த்திருக்க மாட்டார். சீனியர் செக்கரும் அதை கண்டு கொள்ள மாட்டார்.

  ReplyDelete
 3. விதிப்படி நடக்கவும் வேண்டும்
  சில சமயங்களில் மீறலாம்
  இது எனக்கு முரணாகத்தான் படுகிறது

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்

   Delete
 4. இப்படியுமா TTE இருப்பார்...?!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 5. மனிதாபிமான அடிப்படையில் பயணம் செய்ய அனுமதித்தது சரி என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆம்/ நன்றி கவியாழி சார்

   Delete
 6. தப்பில்லை. நடு வழியில கைக்குழந்தையோட இறாக்கி விட்டுட்டா பாவம் அவங்க் திணறுவாங்களே!

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு தான் அவர் சனரன் கோயில்ல இறங்கி அன்ரிசர்வேட் பெட்டிக்கு போக சொல்லிட்டார்

   Delete
 7. தெரிந்தே ஒரு தவறான பயணத்துக்கு அனுமதித்தார் என்றால் அது தவறு தான்... ஆனால் இந்த இடத்தில் அவர் செய்தது சரியே...

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் ஏமாற்றவில்லை என்பதை மட்டும் தெரிய வந்தது

   Delete
 8. நம்முடைய சட்டங்களும் திட்டங்களும் ஒன்னுக்கு ஒன்று முரண் பட்டதாகவே இருக்கிறதுதான் கொடுமையிலும் கொழுமை இல்லையா...!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மனோ சார்

   Delete
 9. Travelling Ticket examineR இதனால் TTR ன்னு சொல்றாங்களோ?

  ReplyDelete
 10. பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
  நன்மை பயக்குமெனில்

  ReplyDelete
  Replies
  1. இதில் பொய் ஏதுமில்லை.டிக்கெட் வாங்கியதும் அவர்கள்தான் பயணம் செய்பவர்களும் அவர்கள்தான் .அவர்க்லஈ அவர்கள் என்று சொல்ல ஆதாரம் இல்லை. சில விசாரணைகள் மூலம் உண்மையை தெரிந்து கொள்ள முடியும் என்பது என் கருத்து

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. நமது நாடு ஒரு விந்தையான நாடு. அடி நிலை ஊழியரில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் வரை அடிக்கும் கொள்ளை வாங்கும் லஞ்சம் கொஞ்ச நஞ்சமல்ல. ஊழல்களைப் பார்த்தால் லட்சம் கோடி கணக்கில் நடக்கிறது. இந்திய கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்பது அரசே ஒப்புக் கொண்ட உண்மை. இந்த மாதிரி ஊழல் சாக்கடையில் இருந்து கொண்டு நியாயமாக டிக்கட்டுக்கான பணத்தை கொடுத்துவிட்டு, இரவு நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்த இரண்டு விவரமறியாத கிராமத்துப் பெண்கள் அடையாள அட்டை இல்லாமல் இரயில் பயணம் செய்ததை குற்றமா குற்றமில்லையா என்ற பட்டிமன்றம் நடத்துகிறோம்! என்ன விந்தை இது??!!

  ReplyDelete
  Replies
  1. அய்யா உங்கள் கோபம் புரிகிறது. கட்டுரையாளர் தான் பார்த்த சம்பவத்தைக் கூறியுள்ளார். ஆனால் இதன் மூலம் நீங்கள் சொல்வதும் படிக்க ரத்தக் கொதிப்பை வரவழைக்கிறது.. நம் நாட்டில் ரவுடிகள் கள்ள மார்க்கெட் பேர்வழிகள் போதை பொருள் கடத்துபவர்கள் ரியல் எஸ்டெட் பெயரில் ரவுடிகள் எம்எல்ஏஎம்பி பதவிகள் வாங்கிக் கொண்டு திரியும் கிரிமினல்கள் கிரிமினல் மயமாகிப் போன வியாபார அரசியல் வர்த்தகம் என்று அக்கிரமங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம் . இவர்கள் ஒரு புறம். மறுபுரம் அப்பாவி அரைவயித்து கால் வயித்து ஏழைகள் பிறருக்கு தீங்கு நினைக்காமல் தனக்கு இழைக்கப் பட்டிந்தாலும் மௌனமாக ஏற்றுக் கொண்டு இருக்கும் சாதாரண பொது சனம் .. கோபம் தலைக்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.. நாளை விடியும் என்ற நம்பிக்கையும் காலத்தைக் கடத்த வேண்டியிருக்கிறது

   Delete
  2. இது போல் அப்பாவிகள் பாதிக்கப் படுவது தடுக்கப் படவேண்டும் என்பதே என் எண்ணம். இதற்கு மாற்று வழி ஏதேனும் கிடைக்க கூடும் என்பதே பதிவின் நோக்க,ம்

   Delete
 13. ரயிலில் புதிதாக பயணம் செய்பவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும் பரிசோதகர்கள் பயணிகளின் நிலை அறிந்து செயல்பட வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆம் சக்கர கட்டி

   Delete
 14. முரளி,

  சம்பவம் சிக்கலானது தான், தமிழ்நாட்டில் தான் இப்படிலாம் ,பிகார் பக்கமெல்லாம் எவனும் டிக்கெட் எடுக்க மாட்டான், கேட்கவும் ஆள் இருக்காது :-))

  எனக்கு ஒரு சந்தேகம், இதே சம்பவம் அப்படியே தினமலர் வாரமலரில் "வாசகர் அனுபவம்" ஆக முன்னர் வந்துள்ளது,அதுவும் இரு பெண்கள், கணவன் மனைவி சண்டைனு எல்லாம் உண்டு, தினமலரிலும் எழுதியது நீங்க தானா? வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தின மலருக்கு எவ்வளோ எழுதி அனுப்பி இருக்கிறேன் இதுவரை வந்ததில்லை.எழுதி அனுப்பி பல நாட்கள் கழித்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன்..வராது என்று நினைத்து . தொடர்ந்து பத்திரகையை பார்க்க வில்லை.
   நன்றி வௌவால் சார்

   Delete
 15. // எனக்கென்னவோ மனிதாபிமான அடிப்படையில் பயணம் செய்ய அனுமதித்தது சரி என்றே தோன்றுகிறது.//

  நானும் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.

  ReplyDelete
 16. பயணம் செய்ய அனுமதித்தது சரிதான். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அய்யா.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக மாற்று வழி தேவை நன்றி சார்

   Delete
 17. இந்தியாவிலேயே டிக்கெட் எடுத்து ஓரளவிற்கு ஒழுங்காக செல்லும் ஒரே மானிலம் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும் ... எத்தனையோ விதிமீறல்கள் செய்பவர்கள் மனிதாபிமானத்திற்காக இந்த மீறலை இன்னம் கொஞ்சம் முன்னமேயே செய்திருக்கலாம்....

  ReplyDelete
 18. மனிதாபமான செயல் சரிதான்! நீங்கள் TTR இடம் பேசியதும் நல்ல உதவி!

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேணும்னா பணம் கட்டுங்க என்று முதலில் கோபித்துக் கொண்டாலும் பின்னர் அனுமதித்தது திருப்தி அளித்தது

   Delete
 19. நல்ல விஷயம் செய்து இருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மருத நாயகம்

   Delete
 20. நீங்களும் அவர்களுக்கு ஆறுதலாக TTE யிடம் பேசி, ஏதுவும் பிரச்சனை இல்லாமல் இனிதே ப்யணம் செய்யமுடிந்ததில் மகிழ்ச்சிதான்.

  பெண்மணிகள் + கைக்குழந்தை வேறு. அவர்களின் நிலைமையை நினைத்தாலும் பாவமாக உள்ளது.

  மனிதாபிமானத்துடனும், தனக்கும் இதில் ஏதும் ஆபத்து வராதவாறு அறிவுரை கூறிச்சென்ற TTE பாராட்டுக்குரியவரே.

  இருப்பினும் அவர் கடமையை அவர் நிறைவேற்ற முடியாமல் போனது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எதிலும் இதுபோல பல்வேறு சிக்கல்கள் தான் ஏற்படுகின்றன.

  இடம், பொருள், ஏவல், சம்பந்தப்பட்ட நபர் போன்றவர்களைப்பொறுத்தே எல்லா சட்ட திட்டங்களும் வளைந்து கொடுக்கப்படுகின்றன.

  வாரணாசியிலிருந்து சென்னை வரும்போது, எனக்கும் ஆந்திரப்பிரதேஷ் “ஓங்கோல்” என்ற ஸ்டேஷனில் ஓர் விசித்திரப்பிரச்சனை ஏற்பட்டது. அதைப்பற்றி ஓர் தனிப்பதிவு தான் நான் தர வேண்டும்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பொதுவாக இது மாதிரி விஷயங்களில் நான் தலையிட மாட்டேன். அன்று என்னவோ அவர்களுடைய பரிதாப நிலை என்னை பேசும் நிலைக்கு தள்ளி விட்டது

   Delete
 21. மனிதனுக்கு முதலில் மனிதாபிமானம் தான் வேண்டும்.
  பிறகு தான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம்.

  பகிர்வுக்கு நன்றி மூங்கில் காற்று.

  ReplyDelete
 22. மனிதாபிமானத்துக்கு மீறிய சட்டங்கள் எதற்கு? இதில் இரண்டு பக்கமும் பேச முடியும். வழக்கமான முறையில் அல்லாமல் காசு அதிகம் கொடுத்து தட்கல் முறையில் இருக்கை முன்பதிவு செய்யப்படும்போது பற்றி அவர்களுக்கு அறிவிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.


  ReplyDelete
  Replies
  1. எங்கோ யாரோ புக் செய்து கொடுத்ததாக இருக்கும். அடையாள அட்டை எடுஹ்து செல்ல வேண்டும் என்பது தனக்கு தெரியாது என்றுதான் கூறினார்

   Delete
 23. ///அந்த டிக்கட் பரிசோதகர் பரிதாபப்பட்டு விதிகளை விட்டுக்கொடுத்தது சரியா? ///
  சரியே.?!.
  விதிமுறைகள் உருவாக்கப்பட்டதற்கு காரணம் நல்லவர்களை தண்டிக்க அல்ல!. மாறாக தீயவர்களை பிடிக்கவே?. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கவே அதிகாரிகள் முனைய வேண்டும். இயந்திரமாக செயல் பட மனித சக்தி எதற்கு?.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முருக பூபதி

   Delete
 24. மனிதகுலத்தின் நன்மைக்காகத்தானே சட்டங்கள்..நன்மை செய்யாததற்கு எதற்குச் சட்டம்?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 25. மனிதாபிமானம் என்று பார்த்தால், TTE செய்தது சரியே.
  நிஜமாகவே பெரிய பெரிய தப்பு செய்கிறவர்கள் தப்பித்துவிடுவார்கள். எளியவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.

  ReplyDelete
 26. கட்டாயமாக பின்பற்ற வேண்டியவிதிகள் மற்றும் சுழ்நிலைக்கேற்ப தளர்த்திக் கொள்ளக்கூடியவிதிகள் என்று பிரித்துக் கொள்ளவேண்டும். விதிகள் என்பது உருவாக்கப்பட்டது. இந்த பயணத்தில் டிடி.இ அந்த பெண்களை பயணிக்க அனுமதி தந்தது மனிதாபிமான அடிப்படையில்! இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 27. அவருக்குள்ளும் மனிதம் ஒட்டிக் கொண்டிருப்பதால் நல்ல முடிவு எடுத்தார்;நல்லதே

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895