என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

சுறாமீன் தின்கிற பிராமின்-வாலி


       "சுறாமீன் தின்கிற பிராமின்" என்று தைரியமாக தன்னைப் பற்றி  சொல்லிக்கொண்ட பல தலைமுறைக் கவிஞர் வாலி மறைந்து விட்டார். கவியரங்கங்களில் கம்பீரமாக முழுங்கும் அவரது குரலை இனி கேட்க முடியாது. அவரது இழப்பு ஈடு செய்ய  முடியாதது. நேற்று காலையிலேயே தொலைக் காட்சியில் வாலியின் பாடல்களை போடத் துவங்கி விட்டார்கள்.

     திரை இசைக் கவிஞர்களின்  மும்மூர்த்திகளாக கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து மூவரையும் கூறலாம் 

       10000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியபோதும் வாலிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்ற ஐயம் எனக்கு உண்டு 

    அவர் நுழைந்த காலம் அப்படி. கண்ணதாசன் என்ற கவிதை சூரியன் கோலோச்சிய காலத்தில் பாடல் எழுதப் புறப்பட்டது அவருக்கு மிகப் பெரிய சவால் . அவரது  அதிர்ஷ்டம் கண்ணதாசனுக்கும் எம்ஜி ஆருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு. அதன் மூலம் எம்ஜியாரின் மனத்தில் இடம் பிடித்து அற்புதப் பாடல்கள் எழுதி இன்றுவரை நிலைத்து நிற்கும் வாய்ப்பு கிட்டியது . ஆனால் அந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அது எம்ஜிஆர்பாடல் என்பதுதான். பாராட்டெல்லாம் எம்ஜிஆருக்கே சென்று  விடும். அந்தப் பாடல்களில் எம்ஜிஆர்தான் தெரிவாரே தவிர வாலி கண்ணுக்குப் புலப்படமாட்டார். எதிரில்   இருப்பவர்களின் சக்தியில் பாதி வாலிக்கு வந்து விடும்.ஆனால் இந்த வாலியின் பாதி சக்தி எம்ஜியாருக்குப் போனது.

    ஆனால் கண்ணதாசன் பாடல்களுக்கு உரிய பெருமை அவருக்கே கிடைத்தது.  வாலி  பாடல்களில் தன் தனித்தன்மையை அதிகமாக வெளிப்படுத்தாமல் சூழலுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவே கொடுத்தார். கண்ணதாசனோ எத்தைகைய சூழலுக்கும் தன் கருத்தை புகுத்திக் கொண்டார்.  கண்ணதாசன் சகாப்தம் முடியும் நேரத்தில் வைரமுத்து புயலாய் நுழைய  வாலிக்கு,  முந்தைய நிலையே நீடித்தது .

     ஆனாலும் இன்று வரை அவரை நிலைக்கச் செய்தது மெட்டுக்குள் பாட்டை அனாயசமாக, மிக வேகமாக பொருத்திவிடும் அபார ஆற்றல்தான்.தமிழ்ப் புலமையும் சொல்லாடலும் அவருக்கு கைவந்த கலையாக அமைந்தது  அது அவரை இசை அமைப்பாளர்கள் விரும்பும் கவிஞராக மாற்றியது. 

      ஒருமுறை பேட்டியில் கங்கை அமரன குறிப்பிட்டிருந்தார். புதிய கவிஞர் ஒருவருக்கு மெட்டு கொடுக்கப் பட்டதாம். பல நாட்களாகியும் அவரால் எழுத முடியவில்லையாம். படப்பிடிப்பு தொடங்க வேண்டி இருந்ததால் பாடல் அவசரமாக தேவைப்பட வாலிக்கு அந்த மெட்டு தரப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் எழுதி கொடுத்தாராம். வாலியின் திறமைக்கு இவையெல்லாம் ஒரு சான்று. சமீப கால நிகழ்வுகளையும் பாடலில் பொருத்தி  பாடல் எழுதுவதில் அவருக்கு இணை ( உதாரணம் வாடா பின் லேடா) யாருமில்லை

      வைரமுத்து உச்சத்தில் இருந்தபோது இளையராஜாவுடன் கொண்ட கருத்து வேறுபாடு வாலிக்கு ஆதரவாக அமைந்தது. அதனால் பல நல்ல பாடல்கள் எழுதும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வந்தது. ரகுமானுக்கும் முக்காபலா போன்ற பாடல்களுக்கும் வாலி தேவைப்பட்டார்.ஜாலிப் பாடல்கள் என்றால் கூப்பிடுங்கள் வாலியை என்ற நிலை இருந்தது. இத்தகைய பாடல்கள் வெற்றி பெற்றாலும் விமர்சனத்துக்கும் உள்ளானதை தவிர்க்க முடியவில்லை 

  என்னதான் அருமையான பாடல்களை எழுதி இருந்தாலும் இயக்குனர்களின் சாய்சாக வாலி இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்.
இளையராஜாவை  விட்டு மணிரத்தினம் பிரிந்தபோது ரகுமானின் இசை யில் எழுத வைரமுத்துவையே நாடினார். அதன் பின்னர் மணிரத்தினம் படத்தில் வாலி எழுதி இருப்பதாகத் தெரியவில்லை.

   எத்தனை கவிஞர்கள் இடம் பெற்றிருந்தாலும் மற்றவர்களைவிட கவியரங்க மேடைகளில் வாலியின் கவிதைகளுக்கு பலத்த வரவேற்பு இருக்கும். வார்த்தை ஜாலங்கள் செய்து மேடையை தன்வசமாக்கக் கூடிய திறமை வாலிக்கு உண்டு. கலைஞரைப் போற்றுவதை தொழிலாகக் கொண்டிருந்த வைரமுத்து வைப் போல் வாலி, அவரது வாயும் நமது காதும் வலிக்கும் அளவுக்கு புகழ்ந்ததை அடிக்கடி காண முடிந்தது வாலிக்கு பெருமை சேர்ப்பதாக அமையவில்லை.

    பல புது முயற்சிகளையும் செய்யத் தவறவில்லை வாலி புதுக் கவிதையில் ராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரில் விகடனில் எழுதியது பெரும் வரவேற்பு பெற்றது அனைவரும் அறிந்ததே.  

     முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா என்ற பாடலை எழுதி இளைஞர்களை இழுத்த வாலியின் சில பாடல்கள் அவரது பாடல்கள் என்று தெரியாமலேயே ரசிக்கப்ப் பட்டிருக்கின்றன.

எனக்கு பிடித்த வாலியின் பாடல்களில் சில 

வாழ்வே மாயம் படத்தில் இடம்பெற்ற வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்  இந்தப் பாடலில் வரும் 
 "கருவோடு  வந்தது தெருவோடு போவது
 மெய் என்று மேனியை யார் சொன்னது ": என்ற வரிகளைக் கேட்டபின் கண்ணீர் வருவதை நம்மால் தடுக்க முடியாது 

இன்னொரு  பெண்ணோடு வாழ்ந்துகொண்டு மனைவியை துன்புறுத்தும் கணவனை விட்டு விலகுதல் நியாயம் என்பதை அழகான உவமைமூலம் சொல்வதை பாருங்கள். "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்" என்ற பாடலில்
"விரல்களை தாண்டி வளர்வது கண்டு
நகங்களை கூட நறுக்குவதுண்டு"
இதிலென்ன பாவம் "என்று கேட்கும் வாலி 

"அம்மா  என்றழைக்காத உயிரில்லையே!" என்று பாசத்தை குழைத்து வார்த்தைகளாய் வடித்து உள்ளம் உருக வைத்திருப்பார் 
  
       பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார் வாலி . வைணவராக இருந்தபோதிலும் முருகன் மீது பக்தி கொண்டவராம் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்ற உள்ளம் உருகும் பாடல் வாலியிடமிருந்து பிறந்ததாம்.நேற்று  இதை தொலைக்காட்சியில் கவிஞர் பிறைசூடன் தெரிவித்தார்.

"ஸ்ரீரங்க- ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி",என்ற மகாநதி பாடலாகட்டும் தசாவதாரம் படத்தில் இடம் பெற்ற "முகுந்தா , முகுந்தா" என்ற பாடல்களாகட்டும் மனதை கொள்ளை கொள்வன என்பதை மறுக்க முடியாது 

   "காற்றில் வரும் கீதமே என் கண்ணனை நீ அறிவாயா? என்ற பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கக் கூடியது 

10000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளதாக தெரிகிறது.50 ஆண்டுகளில் 10000 பாடல்கள் என்றால் ஓராண்டுக்கு சராசரியாக 200 பாடல்கள்.அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு பாடல். அப்பப்பா! வாலியின் வேகம் வாயு வேகம்தான் .

    இப்படிப் பாடல் பல படைத்த அந்த அற்புதக் கவிஞன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரது  நல்ல பாடல்கள் நம் நெஞ்சோடு எப்போதும் இருக்கும்-இனிக்கும் 

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

======================================================================

 இந்தப் பதிவு படித்த, கேள்விப்பட்ட, தொலைக்காட்சியில் பார்த்த  செய்திகளின்  அடிப்படையில் எழுதப் பட்டது  
*********************************************************************
வாலியின் இறுதி ஊர்வலம் பற்றி கவிஞர் முத்துநிலவன் கூறுவதை பாருங்கள்   
தமிழின் மகாகவி பாரதியின் இறுதி ஊர்வலத்தில் வெறும் பதினெட்டுப் பேர்களே கலந்துகொண்டனர் என்றால், அன்றைய (11-07-1921)தகவல் தொடர்பு நிலையோடு தொடர்புடையதாகத்தான் புரிந்துகொள்கிறோம். இன்றும், தமிழக ஊடகங்களால் கொண்டாடப்பட்ட பிரபல திரைப்படக் கவிஞர் வாலிக்கும் அந்தக் கதிதான் எனும்போது, இந்த அவமானம் யாருக்கு என்னும் கேள்வி எழுகிறது.  மேலும் படிக்க 

கவிஞர் வாலியின் இறுதி நிகழ்ச்சி எழுப்பும் கேள்விகள்




23 கருத்துகள்:

  1. அவரின் வரிகளுக்கு சாவு இல்லை...

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்லியிருப்பது போல அவரது பாடல்கள் என்று தெரியாமலே பல பாடல்களை ரசித்திருப்போம். நமக்கு என்ன, எம் எஸ் வியே ஒருமுறை பேட்டியில் விஸ்தாரமாக 'அந்த நாள் ஞாபகம் வந்ததே' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, இதை எழுதி முடித்தவுடன் கண்ணதாசன் என்னைப் பார்த்துக் கண்ணடித்தார் என்றாராம். வாலி ஒரு கட்டுரையில் இதைக் குறிப்பிட்டு, 'கண்ணதாசன் எப்போது கண்ணடித்தாரோ தெரியாது, ஆனால் இந்தப் பாடல் எழுதியது அடியேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
  3. "கருவோடு வந்தது தெருவோடு போவது
    மெய் என்று மேனியை யார் சொன்னது "//அவர் இறக்கவில்லை எல்லோர் மனமும் சிறக்க இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அற்புதமான பாடல்களை கிட்டத்தட்ட மூன்று தலைமுறை மக்களுக்கும் எழுதி உள்ளார். பல பாடல்கள் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்தே விட்டன. அன்னாரின் மறைவு வேதனிக்கின்றன, இசையால் என்றென்றும் உயிர்த்திருப்பாராக நம்மோடு.

    பதிலளிநீக்கு
  5. வாலியின் மறைவிற்கு இரங்கல்கள்,அவரது படைப்புகளூக்கு என்றும் மறைவில்லை.

    பதிலளிநீக்கு
  6. அமரர் வாலி அவர்களின் சிறப்பினை
    மிக மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    அறியாதன அறிந்தேன்
    அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இப்படிப் பாடல் பல படைத்த அந்த அற்புதக் கவிஞன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரது நல்ல பாடல்கள் நம் நெஞ்சோடு எப்போதும் இருக்கும்-இனிக்கும்

    உண்மைதான் முரளி!

    பதிலளிநீக்கு
  9. வாலி எத்தனை கவிஞர்கள் வந்தாலும் சென்றாலும் அவருடைய சிம்மாசனம் என்றும் அவருக்கே உரியது யாராலும் நிரப்ப முடியாது

    பதிலளிநீக்கு
  10. பல பாடல்கள் வாலி அவர்கள் எழுதியவை என்று தெரியாமலேயே ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். உண்மைதான். இப்போது தெரியவரும்போது இன்னும் பிரமிப்பாய் உள்ளது. வாலி அவர்களைப் பற்றிய நினைவலைகள் மனம் தொட்டன. நன்றி முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  11. கவிஞர் வாலி காலமானது குறித்து நான் ஒரு கட்டுரை எழுதியபிறகு, அவர் இறுதிச்சடங்கு பற்றி அறிந்து வருந்தி எழுதிய கட்டுரையை நீங்கள் உங்கள் இணைப்பில் இட்டிருந்தீர்கள்.அதனால், உங்கள் தளத்திலிருந்து நிறைய நண்பர்கள் எனது தளத்திற்கு வந்து கட்டுரையைப் பார்த்திருக்கிறார்கள்.
    மிக்க நன்றி திரு முரளி.
    நம் இலக்கிய நட்பு தொடரட்டும்.
    வணக்கத்துடன்,
    நா.முத்துநிலவன். http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  12. உங்களின் பெரும்பாலான பதிவுகளை இன்று படிக்க நேரம் கிடைத்தது. என் பார்வையில் உங்களின் கவனிப்பு திறன் ஆச்சரியம் அளித்தது.

    பதிலளிநீக்கு
  13. Late.Thiru.Vaali is not only a lyricsist, he worked in many platforms of tamil art. His book NINAIVU NAADAAKKAL , i have read so many times and have some highlited sentences in it. Those will suit for all human beings eather believes god or not. A man with great knowledge and blessed more by GOD. Now let Rengarajan to lay on Renganathan's holy foot.

    பதிலளிநீக்கு
  14. இறுதி நிகழ்ச்சி ஏற்படுத்தும் கேள்விகள்... கொடுமை தான்.

    பதிலளிநீக்கு
  15. இறுதி நிகழ்ச்சி குறித்த கேள்விகள்... மனதை வலிக்கச் செய்கிறது...
    ஒரு கவிஞனுக்கு உரிய மரியாதை கிடைக்காமல் பயணப்பட்டிருக்கிறது தமிழ்...

    பதிலளிநீக்கு
  16. வாலி என்றும் மறைவதில்லை. இறுதி நிகழ்ச்சி ஏன் இவ்வாறு நடைபெற்றது, கொடுமை அய்யா

    பதிலளிநீக்கு
  17. "காற்றில் வரும் கீதமே என் கண்ணனை நீ அறிவாயா? என்ற பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கக் கூடியது
    எனக்கும் கூட பிடித்த பாடல். என் ரிங்-டோனாக அந்த பாடலைத்தான் வைத்துள்ளேன்.

    வழக்கம் போல் உங்கள் கட்டுரை பார்வை சிறப்பு!

    பதிலளிநீக்கு
  18. காப்பியக்

    வாலியின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த கோடான கோடித் தமிழர்களில் நானும் ஒருவன்.இந்த உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதது தாய்ப்பாசம்.அதை ஒரு பாடலில் காட்டுகிறார் வாலி ஐயா.பாடலைப் படித்துக் கண் கலங்கிவிட்டேன்.இப்படி ஒரு பாடலை இனி என்று கேட்போம்.


    பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
    அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
    விலைமீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
    கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா!
    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத் தாங்கி
    நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா!
    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?
    உன்னாலே பிறந்தேனே!!!

    பதிலளிநீக்கு
  19. These two are just a example of what a amazing lyricst he is

    He wrote this song 12 yeras ago
    http://www.youtube.com/watch?v=tptOXcm18Bc

    who can wrote a song like this is at 80 year old like this
    http://www.youtube.com/watch?v=K6A8W_SHdq8


    Vaali i love you

    பதிலளிநீக்கு
  20. Vaali was a great poet, unparalled and his verses are just creations unparalled!

    பதிலளிநீக்கு
  21. vaali was one of the greatest poets. but on several occasions he criticised jeyalalitha on public functions just to please karuna... in the presence of karuna... . he had openly opposed mgr on many occasions.... it was his nature... let us slute the great poet.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895