என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, September 8, 2013

பதிவர் திருவிழா- குறை ஒன்றுமில்லை-சீனுவின் (அநியாய?)நேர்மை

    கடந்த பதிவர் சந்திப்பில் எதிர் பார்ப்புகள் அதிகம் இல்லாததால் குறைகளை ஒதுக்கி விட்டு மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்தோம். இம்முறை எதிர்பார்ப்பின் அளவு கூடி இருந்தது.  அதனாலேயே விழா சிறப்பாக நடந்து முடிந்த போதும்  அதைப் பற்றிய விவாதங்களும் விளக்கங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
        நானும்  ஒரு எதிர் பார்ப்போடுதுதான் பதிவர் சந்திப்பை மகிழ்ச்சியோடு எதிர் நோக்கி இருந்தேன். என் எதிர்பார்ப்பு தி.கொ.போ.சீனுவின் (அநியாய?)  நேர்மையால் ஏமாற்றத்திற்கு உள்ளானது. அது என்ன என்பதை கடைசியில் சொல்கிறேன்.
அதற்கு  முன்னர் விழா பற்றிய சுருக்க மான பார்வை
   நான் சென்னயில் இருந்தாலும் விழாவிற்கு 11.30 மணி அளவில்தான் வந்து சேர்ந்தேன்.  எனது  அண்ணனின் புது மனை புகுவிழாவில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு வர இயலவில்லை. முந்தைய தினமே கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளரான முத்துநிலவன் அவர்கள் (வலைப் பதிவும் எழுதி வருகிறார்) விழாவிற்கு வரலாமா என்று தொலை பேசியில் கேட்டார். தாராளமாக வரலாம் என்று கூறினேன். சொன்னபடியே எனக்கு முன்பே அரங்கத்திற்குள் அமர்ந்திருந்தார். 
   வரவேற்பில் 117 வது நபராக பதிவு செய்து கொண்டேன். அங்கே நின்று கொண்டிருந்த சேட்டைக்காரன் என்னை பெயர் சொல்லி அழைத்து விசாரித்தது ஆச்சர்யமாக இருந்தது. பதிவர் அறிமுகம் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில் வந்ததால் நிறையப் பதிவர்களை அறிந்து கொள்ள முடியவில்லை. விரைவில் அழைக்கப்பட என்னை சுருக்கமாக அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
அப்படியே கொஞ்சம் வலம் வர  தளிர் சுரேஷ் வந்து அறிமுகப் படுத்திக் கொண்டார். ஒவ்வொருவரும் எதிர்ப்பட்டவர்களின் முகத்தை பார்ப்பதற்கு முன் அவர்கள் அணிந்திருந்த பேட்ஜைப்பார்த்து பெயர்  மற்றும் வலைத்தளம் அறிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தனர்.  குடந்தையூர் சரவணன் என்னை அடையாளம் கண்டு பேசிக்கொண்டிருந்தார்.. அதற்குள் பாமரன் அவர்கள் உரை ஆற்றத் தொடங்கினார். சுவாரசியமாக பல தகவல்களை கூறினார். அவரது பேச்சு ரசிக்கும்படி அமைந்திருந்தது. 
உணவு இடைவேளையின் போது ரமணி சார், திண்டுக்கல் தனபாலன் மற்றும் சில பதிவர்களோடு கொஞ்சம் உரையாடியது மனதுக்கு நிறைவாக இருந்தது  தொழில் நுட்பப் பதிவர்களான அப்துல் பாசித்,பிரபு கிருஷ்ணா இருவரையும் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வப்போது தொலை பேசியில் தொடர்பு கொள்ளும் கடற்கரை  விஜயனை இம்முறையும் சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. இரவின் புன்னகை வெற்றிவேல் தன்னை  அறிமுகப் படுத்திக்  கொண்டார். சில பதிவர்கள் எனது குறிப்பிட்ட பதிவுகளை சுட்டிக்காட்டி பாராட்டியது மகிழ்ச்சியைத் தந்தது.
   சீனியர் பதிவர்கள் சிலர் தங்கள் குழுக்களுடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். .புதியவர்களைப் பார்த்து கொஞ்சம் புன்னகையாவது செய்திருக்கலாம். 
 ஆனால் வெளியே வந்த பாமரன் அவர்கள், எதிர் பட்ட அனைவரிடத்தும் தானாகவே ஓரிரு வார்த்தைகள் பேசத் தவறவில்லை. என்னிடமும் எனது பணி பற்றி கேட்டு தெரிந்து  கொண்டார்.  ராஜி, எழில்,  அகிலா, இன்னும் சிலரோடு பரஸ்பர விசாரிப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 
  மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டே பதிவர்கள் அளவளாவிக் கொண்டிருந்தனர். வெஜிடேரியன் என்பதால் நான் தயிர் சாதம் மட்டும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஜோதிஜி  எனது பேட்ஜைப் பார்த்து அடையாளம்  கண்டு "முரளிதரன்!, உங்களை மூத்தபதிவராக அல்லவா கற்பனை செய்திருந்தேன்? நான் நினைத்ததற்கு மாறாக இருக்கிறதே  என்றார்".  

  கோவை ஆவி, மயிலன் , தமிழ்வாசி பிரகாஷ், ரஹீம் கசாலி, வெங்கட் நாகராஜ், இவர்களை நலம் விசாரித்தேன். 
   அதற்குள் பல்துறை வித்தகி ரஞ்சனி நாராயணன் அவர்கள் என்னை விசாரித்ததாக  செய்தி வர அவர் இருக்குமிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன்.
  "குமார் சரோஜா காதல் ஓகே. ஆயிடுச்சா என்று கேட்டார்- கடிதம் வித்தியாசமாக இருந்தது" என்று பாராட்டினார். காதல் கடிதப் போட்டிக்கு நடுவராக இருந்தவர் அல்லவா? மகிழ்ச்சியின் அளவு இன்னும் சற்றுக் கூடியது.

     அரங்கம் பற்றி சிலர் குறை தெரிவித்தை நேரிலும் பதிவுகளிலும் அறிய முடிந்தது.அரங்கம்  புழுக்கமாக இருந்ததே தவிர மனது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.  சென்னையில் குறிப்பிட்டநாளில், பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் அரங்கம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. 
  முன்னதாக முதல் நிலை ஆலோசனைக் கூட்டத்தில்  அரங்கம் தேட  என்னிடமும் கண்ணதாசனிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது. நானும் கவியாழியும் சென்னை எழும்பூர் பகுதியில், செஞ்சிலுவை சங்க அரங்கம், உலக பலகலைக் கழக அரங்கம் இன்னும் வேறு சில திருமண மண்டபங்களையும் விசாரித்தோம். செப்டம்பர் 1 தேதியன்று காலியாக எந்த அரங்கமும் கிடைக்கவில்லை. வாய்ப்புள்ள இடங்களில் ஏராளமான நிபந்தனை விதித்தார்கள். எங்கள் அலுவலக பணிகளுக்கிடையில் அரங்கம் தேடும் பணியை சரியாக செய்ய இயலவில்லை.  இப்படிப் பட்ட சூழலில் குறுகிய காலத்தில் இப்படி ஒரு அரங்கத்தை தேடிக் கண்டறிந்த விழாக் குழுவினரை   பாராட்டுவதில் எனக்கு சிறிதும் தயக்கம்  இல்லை.  

     சிறப்பான  உணவு ஏற்பாட்டை தெளிவாக திட்டமிட்டு செவ்வனே செய்த ஆரூர் மூனா செந்தில் மேடைப் பக்கம் தலை காட்டவே இல்லை. ஆ,மூ. செந்தில், மதுமதி,சீனு,ஸ்கூல் பையன் ,அரசன், செல்வின், சிவகுமார்,பட்டிக்காட்டான்  உள்ளிட்ட பலரின் உழைப்பும் ஆர்வமும் அசாதாரணமானது. மதிய உணவுக்குப் பின் பதிவர்களின் தனித்திறன் நிகழ்ச்சிகளில், இரண்டு கவிதை வாசிக்கப்பட்டது. தனித்திறனில் கவிதையை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிந்திருந்தால் இன்னும் சிலர் கவிதை வாசித்திருப்பார்கள். 

    இன்னொரு நல்ல விஷயம் பதிவர்களை நகைச்சுவை என்ற பெயரில் கலாய்த்து நடிக்கப் பட இருந்த நாடகம் கைவிடப் பட்டதே.  கலாய்க்கப் படுபவர் என்னதான் அதை பொருட்படுத்தாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வேன் என்று சொன்னாலும் உள்ளூர வருத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. தனிப்பட்ட பதிவில் கிண்டலடிப்பது வேறு; ஒரு பொது நிகழ்வில் அவ்வாறு செய்வது நல்லதல்ல. அதை தெரிந்தோ தெரியாமலோ தவிர்த்ததற்கு நன்றிகள் 
மயிலனின் கவிதை வழக்கம்போல் அமைந்திருந்தது. மதுமதியின் குறும்படம் அனைவரையும் கவர்ந்தது என்பது சந்தேகம் இல்லை. இது போன்ற குறும்படம் எடுக்கையில் அந்தத் துறையின் தற்போதைய செயல்பாடுகளை கவனத்தில் கொள்வது நல்லது. (இது பற்றி இன்னொரு பதிவில் எஎழுத விருப்பம்)

   அடுத்து கவிஞர் முத்துநிலவன் குறும்படம் பற்றி ஸ்லாகித்துவிட்டு சுருக்கமாக உரையாற்றி அமர்ந்தார். பின்னர் கண்மணி குணசேகரன் அவர்கள் பேசியது தொடக்கத்தில் சுவாரசியமாக இருந்தாலும் நீண்ட நேரம் பேசியதால் பதிவர்களின் பொறுமை சோதனைக்கு உள்ளானது.
அதனால் நூல் வெளியீட்டிற்கு தாமதமானது. நூல் வாழ்த்துரை வழங்கியவர்கள் எழுதியவரை வாழ்த்தினார்களே தவிர, நூலில் உள்ள சிறந்தவற்றை எடுத்துக்காட்ட தவறி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. விழாக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கி நன்றி கூறியபின் தேசிய கீதம் பாட விழா இனிதே நிறைவுற்றது.  
 சிறிய சௌகிரியங்களை ஒதுக்கிவிட்டு தாராளமாகச் சொல்லலாம் குறை ஒன்றுமில்லை

சீனுவின்  நேர்மைக்கு வருவோம். 
தி.கொ.போ சீனு ஒரு காதல் கடிதம் போட்டி நடத்தியது அனைவருக்கும் தெரிந்ததே! அந்தப் போட்டியில் நானும் ஆறுதல் பரிசு பெற்றேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். பரிசாக புத்தகங்களை வழங்க முடிவு செய்திருந்தார்  சீனு. தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் வண்ணம் பரிசுக் கூப்பன்களை பதிவர் திருவிழாவின் போது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். நானும் மேடையில் அறிவித்து பரிசுக் கூப்பனை தருவார் என்று அல்ப ஆசையுடன் காத்திருந்தேன். விழா நிறைவடையும் வரை அதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. ரஞ்சனி நாராயணன் அவர்கள் பரிசளிப்பு பற்றி என்னிடம் கேட்டார். சீனுவைத்தான் கேட்க வேண்டும் என்றேன். சீனு பிசியாக இருந்தார். 
விழா  நிறைவடைந்த பின் புறப்படும் நேரத்தில் சீனு பரிசுக் கூப்பனை வந்திருந்த நடுவர்களில் ஒருவரான ரஞ்சனி நாராயணன் மூலம்  எனக்கும் பரிசுபெற்ற இன்னொரு பதிவரின் சார்பாக சதீஷ் செல்லதுரைக்கும் வழங்கினார். 
நான் சீனுவிடம் "இந்தப் பரிசை மேடையிலேயே அனைவரின் முன்னிலையில் நடுவர்களை வைத்து வழங்கி இருக்கலாமே! எங்களுக்கும் மகிழ்ச்சியாகவும் ஒரு அங்கீகாரம் கிடைத்தற்போல்  இருந்திருக்குமே!" என்று அல்பத் தனத்தை வெளிப்படுத்தி விட்டேன்.

"இது பொது விழா.  தனிப்பட்ட முறையில் நான் வைத்த போட்டிக்கான பரிசுகளை வழங்குவது முறையல்ல" என்றார். 

சொந்தப் பணத்தை செலவு செய்து போட்டி வைத்து பரிசு வழங்கியதோடு  அடுத்த போட்டியை இன்னொரு பதிவர் அறிவிக்க காரணமாய் இருந்த சீனுவின் விளம்பரத்தை விரும்பாத அடக்கத்தை என்னென்பது?  தன்னை கொஞ்சமாவது முன்னிலைப் படுத்திக் கொள்ள வாய்ப்பிருந்தும் தவிர்த்த சீனுவின் நேர்மையைக் கண்டு வியந்துதான் போனேன்.  மேலும் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதற்கு வெட்கப்பட்டேன். 

மூர்த்தி சிறிது என்றாலும் சீனுவின் கீர்த்தி பெரிதுதான். வாழ்த்துக்கள் 

**********************************************************************************
ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டும், விழாவின் முந்தைய தினத்திலிருந்து முடியும் வரை பொறுப்பாற்றியும் விழா சிறப்புற உழைத்த அனைத்து நண்பர்களுக்கும், ஒரு அமைப்பாக செயல்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் புலவர் ஐயா அவர்களுக்கும்  ஒரு இனிய நிகழ்வை ஏற்படுத்தித் தந்ததற்காக  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்  கொள்கிறேன்.
  


27 comments:

 1. //சீனுவின் (அநியாய?)நேர்மை//

  பவர் ஸ்டாருக்கு அடுத்ததா சீனு பெயர டைட்டில போட்டாலே ஹிட்ஸ் வருகிறதாமே???

  //மூர்த்தி சிறிது என்றாலும் சீனுவின் கீர்த்தி பெரிதுதான்//

  யார பார்த்து சிறிசுனிங்க?? சச்சின் சிறிசு, சூர்யா சிறிசு ஏன் மார்க் சக்கர்பேக் கூட சிறிசு தான்..

  //தி.கொ.போ.//

  TKP கட்சிக்கு பெயர் ரெடி

  #என்னை பொறுத்த வரை ஐ மிஸ் அ லொட் தான்.. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவர் சந்திப்பின் போது TKP யின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி ஹாரிக்கு அறிவிக்கப் படும்.
   கட்டாயம் வருக!

   Delete
 2. ஹா ஹா ஹா நன்றி முரளி சார்.. ஆனால் உங்கள் ஆதங்கம் மிகச் சரி, பரிசு பெற்ற பதிவர்கள் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச ஆசை இது தானே.. உங்கள் ஆசை மிக நியாயம்.. இது குறித்து விழா குழுவினருக்கு நானே ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று உள்ளேன்...

  ஆனால் நான் பயந்தது வேறு ஒரு விசயத்திற்கு.. ஒருவேளை மேடையை சில நிமிடங்களுக்கு நாம் எடுத்துக் கொண்டிருந்தால் விமர்சனம் செய்த நண்பரின் பதிவில் இவ்விசயமும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும்.. இவற்றை எனது தனியொரு பதிவில் எழுத இருந்தேன், நீங்கள் கேட்டதால் இங்கும் சொல்கிறேன்...

  மேலும் அந்த நண்பர் பதிவில் நான் அளித்த பின்னூட்டம்

  நான் என் வலையில் காதல் கடிதபோட்டி நடத்தினேன், அதற்கான பரிசுகளை மேடையில் வழங்குமாறு பலரும் என்னை வற்புறுத்தினர், ச்ச மேடையில் வழங்காமல் போய்விட்டோமோ என்று கூட ஒரு கட்டத்தில் வருத்தப்பட்டேன், நல்லவேளை நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை நீங்கள் நிருபித்து விட்டீர்கள், என் நிலைபாட்டில் இருந்த குழப்பம் விலகியது. மிக்க நன்றி

  ReplyDelete
 3. அப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு.
  குழப்பம் தேவை இல்லை. சீனு. நானாக இருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேன் என்று தோன்றுகிறது.. பாதகம் ஏதுமில்லை. பரிசளித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 4. அடுத்த பதிவர் சந்திப்பை இந்தப்பக்கம் நடத்தலாமா என்று ஆலோசிக்க வேண்டுகிறேன். பதிவர்திருவிழாப் பற்றிய உங்களின் விரிவான கட்டுரை கூடச் சுருக்கமாகத்தான் தெரிகிறது. அவ்வளவு எழுத எழுத மிஞ்சிக்கிடக்கும்படியான பரிமாற்றங்கள்... பகிர்வுக்கு நன்றி முரளி. என்படத்தை வெளியிட்டதற்குத் தனிப்பட்ட நன்றியும் வணக்கமும். நான் விழாவுக்கு வரக்காரணமாக இருந்தமைக்கு மேலும் நன்றியன்.

  ReplyDelete
 5. //சிறிய அசௌகிரியங்களை ஒதுக்கிவிட்டு தாராளமாகச் சொல்லலாம் குறை ஒன்றுமில்லை//

  வந்திருந்த அனைவருமே அசௌகர்யத்தை பொறுத்துக் கொண்டார்களே தவிர குறை ஒன்றும் சொல்லவில்லை...

  @சீனு நல்ல விளக்கம்...

  ReplyDelete
 6. மிகச் சரியாக சந்திப்பு நிகழ்வு குறித்து
  பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. பதிவர் சந்திப்பிற்கு வந்தும் உங்களை சந்திக்க இயலாதது வருத்தமே அண்ணா...

  ReplyDelete
 8. மூர்த்தி சிறிது என்றாலும் சீனுவின் கீர்த்தி பெரிது தான்....

  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. பெண்களுக்கே உண்டான தயக்கத்தின் காரணமாவே உஙககிட்ட வந்து பேசலை. மத்தபடி வேற ஒன்றுமில்ல.

  ReplyDelete
 10. வணக்கம்
  முரளி (அண்ணா)

  நான் என்னதான் சொல்வேன் ஏன் என்றால் நான் வரவில்லை...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. ***"இந்தப் பரிசை மேடையிலேயே அனைவரின் முன்னிலையில் நடுவர்களை வைத்து வழங்கி இருக்கலாமே! எங்களுக்கும் மகிழ்ச்சியாகவும் ஒரு அங்கீகாரம் கிடைத்தற்போல் இருந்திருக்குமே!" என்று அல்பத் தனத்தை வெளிப்படுத்தி விட்டேன்.

  "இது பொது விழா. தனிப்பட்ட முறையில் நான் வைத்த போட்டிக்கான பரிசுகளை வழங்குவது முறையல்ல" என்றார்.***

  Everything sounds good but did Seeni gave an impression that he would deliver the prizes during "pathivar meeting"?

  //தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் வண்ணம் பரிசுக் கூப்பன்களை பதிவர் திருவிழாவின் போது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.//

  I have no idea about the political scenario there. So, not much to comment on that issue. But I feel sorry that whatever you anticipated did not happen :(

  ReplyDelete
  Replies
  1. சீனு சரியாகவே அறிவித்திருந்தார். நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேன்.பதிவர் திருவிழாவின்போது பரிசுக் கூப்பனைப் பயன்படுத்தி புத்தகம் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னாரே தவிர மேடையில் தரப் போவதாக சொல்லவில்லை.

   Delete
 12. நன்றாக எழுதியுள்ளீர்கள் சார் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

  ReplyDelete
 13. If something +ve happened for the participants, it is good1!!

  ReplyDelete
 14. நிகழ்ந்தவற்றை சுவாரஸ்யமாக, அழகாக சொல்லியிருக்கிறீர்கள் முரளி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. நீங்கள் சொலவது உண்மைதான்.
  சீனு நல்லவன்
  நாகரீகம் தெரிந்தவன்
  நாளும் அறிந்தவன்
  நையாண்டி மிக்கவன்
  நல்லோரை மதிப்பவன்
  நகைசுவையானவன்
  நாளெல்லாம் சிரிப்பவன்
  நம்பிக்கையானவன்
  நண்பர்கள் விரும்புபவன்

  ReplyDelete
 16. விமர்சனங்களும் நல்லதே.சீனு இப்போ பிரபலம் ஆகிவிட்டார் பாத்தீங்களா?

  ReplyDelete
 17. பதிவர் திருவிழா குறித்து அருமையாக எழுதியுள்ளீர்கள் ஐயா
  திரு சீனு அவர்களின் செயல் அறிந்து நானும் வியந்ததான் போனேன் ஐயா நன்றி

  ReplyDelete
 18. பதிவர் சந்திப்பு நிகழ்வுகளை தெளிவாக தெரிந்துகொள்ள முடிந்தது.

  ReplyDelete
 19. பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி முரளிதரன். நீண்ட நேரம் பேச இயலவில்லை.....

  ReplyDelete
 20. பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க முடியவில்லை ! அடுத்த முறை கண்டிப்பாக சந்திக்கிறேன் ! நன்றி !

  ReplyDelete
 21. பதிவர் சந்திப்பில் உங்களை அடையாளம் கண்டு பேசிய நிமிடங்கள் மகிழ்ச்சி அளித்தது.

  ReplyDelete
 22. ரத்தினச் சுருக்கமாக நடந்தவற்றைக் கண்முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றி அய்யா. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அய்யா. இது போன்ற விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்கு விழாக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 23. சந்திப்பு குறித்த தங்கள் பகிர்வு அருமை..

  தங்களை சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895