என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, October 19, 2013

ஒரு தந்தையின் கடிதம்

சில நேரங்களில் எதிர்பாரா இடங்களில் இருந்து சுவாரசியமாக விஷயங்கள் கிடைத்து விடுகின்றன.
ஹோட்டலில் டிஃபன் வாங்கி வர வேண்டி இருந்தது ஒரு தினசரி பத்திரிக்கை பேப்பரில் இலையை வைத்து அதில் தோசையை பார்சல் செய்து கொடுத்திருந்தனர். தோசை சாப்பிட்டுவிட்டு பேப்பரை தூக்கி எறியப் போனபோது அதில் இருந்த விஷயம் என்னை ஈர்த்தது. அது ஒரு கடிதம். ஒரு தந்தை மகனுக்கு எழுதியது. இலையை மட்டும் குப்பை தொட்டியில்போட்டு விட்டு  அதை முழுவதுமாக படித்தபின்தான் நினைவு வந்தது இன்னும் கை கழுவ வில்லை என்று.. .(முந்தைய பதிவு:தயங்காம கை கழுவுங்க!-300வது பதிவு )  காய்ந்த கைகளை கழுவிக்கொண்டேன். கழுவிய கையின் ஈரம்  உடனே காய்ந்து விட்ட போதிலும் அந்தக் கடிதத்தின் நினைவுகள் காயாததால் ஈரத்தை உங்களிடம் பரிமாறிக் கொள்கிறேன்.(கருத்தை மனதில் கொண்டு கொஞ்சம் மாற்றி அமைத்து  மானே! தேனே! சேர்த்து தந்திருக்கிறேன்)

அன்புள்ள மகனுக்கு,
அப்பா எழுதுவது
நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான காரணங்கள் மூன்று.
 1. வாழ்க்கை, வாய்ப்புகள்,துரதிர்ஷ்டம் முதலானவற்றை யாராலும் முன்கூட்டியே அறியமுடியாது.வாழ்க்கை கால அளவு எவ்வளவு என்பதும் நமக்கு தெரியாது.சில விஷயங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்திலேயே சொல்லி விடுவது நல்லது
 2. நான் உனக்கு அப்பதானே! நான் சொல்லிக் கொடுக்காமல் வேறு யார் சொல்லிக் கொடுப்பார்கள்?
 3. நான் சொல்லி இருக்கும் விஷயங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டவை. இவற்றை நீ அனுபவித்து தெரிந்து கொள்வதை விட எனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது கால,பொருள் விரயங்களை தவிர்க்கும் அல்லவா?
நான் சொல்லப் போகும் விஷயங்களை உன் மனதில் பதிய வைத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் உன் கையில்தான் இருக்கிறது.

 • எல்லோரும் உன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்க வேண்டாம். மரியாதை இன்றி நடந்து கொள்பவர்களைப் பற்றி புலம்புவதில் பயனில்லை. உண்மையில் உன்னை மரியாதையாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கும் உனது அம்மாவுக்கு மட்டுமே தவிர வேறு யாருக்கும் இல்லை  உன்னிடம் நல்லவிதத்தில் நடந்து கொள்பவர்களிடம் நீ நல்ல உறவு வைத்துக் கொள்ளவேண்டும்.அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.அதே நேரத்தில் எச்சரிக்கையும் தேவை.ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். உன்னிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவர்கள் எல்லாம்  உன்னை நேசிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
 • இந்த மனிதர்தான் வேண்டும். இந்தப் பொருள்தான் வேண்டும். இவை இல்லை என்றால் வாழ்க்கையே முழுகிப் போய்விடும் என்றெல்லாம் இந்த உலகத்தில் ஒன்றும் கிடையாது.நீ நேசிக்கும் நபரோ அல்லது பொருளோ உன்னை விட்டுப் போய்விட்டாலும் உண்மையில் எந்த பாதிப்பும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் எந்த இழப்பையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.
 • மனித வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் போன்றது. நிகழ்காலத்தில் வாழ்கையை வீணடித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை உன்னை விட்டு விலகி சென்றிருக்கும்.
 • அன்பு என்பது உண்மையில் நல்ல விஷயம்தான்.ஆனால் அது நிலையானது  அல்ல. சூழ்நிலயைப் பொறுத்து அது அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.காதல் புனிதமானது இனிமையானது,அழகானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசித் திரியாதே! இதெல்லாம் எல்லா பெற்றோரும் சொல்வதுதானே என்று நீ நினைக்கலாம். ஆனால் இவற்றால் என்றாவது நீ மனமுடைந்து போக நேரக் கூடிய சூழல் வந்தால் அந்த சோகத்தை தவிர்க்கவே இதைக் கூறுகிறேன். அதனால்தான் அவற்றை மிகைப் படுத்த வேண்டிய அவசியம்இல்லை என்றும் வலியுறுத்துகிறேன்.
 • வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களில் பலர் அதிகம் படிக்காதவர்கள்.கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்பது இதற்கு அர்த்தம் அல்ல.வாழ்க்கைக்கு முக்கியமானது கல்வி. அதே நேரத்தில் படிப்பறிவு மட்டுமே வாழ்க்கைக்கு போதாது என்பதை புரிந்து கொள் 
 • கந்தை உடுத்துபவன் பணக்காரன் ஆக முடியாதா என்ன? நிச்சயம் முடியும் ஆனால் கந்தைத் துணியுடன்தான் தனது பயணத்தை தொடங்க வேண்டும் வேறு வழியில்லை.
 • என்னை வயதான காலத்தில் நீ தாங்குவாய் என்று நான் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை.அது போலவே உன்னையும் வாழ்நாள் முழுதும் என்னால் தாங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதை நீ உணர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரையே உன்னை பராமரிக்க  முடியம். உனது உழைப்பும் முயற்சியுமே உன் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும்
 • மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறாதே. அதே நேரத்தில் மற்றவர்கள் உனக்கு கொடுத்த வாக்கை கடைபிடித்தே தீர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்வது உன்னை மட்டுமே பொறுத்த விஷயம். நீ நிச்சயம் அவ்வாறு நடந்து கொள்ள முடியும்.
 • அதிர்ஷ்டத்தை நம்பாதே இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது.அதற்கான விலையை கொடுத்துத்தான்  வேண்டும்.
 • புற  விசை ஒன்று தாக்காதவரை ஒரு பொருள் அதே நிலையில் இருக்கும். இது நியூட்டனின் விதி. வாழ்க்கையும் அப்படித்தான் ஏதோ ஒரு புற நிகழ்வு வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து விடுகிறது. அந்தப் புறநிகழ்வு நடக்கும்போது அதை பயன்படுத்திக் கொள். இல்லையெனில் சாதாரண மனிதனைப் போல பயணமோ நிலைப்போ அப்படியே இருக்கும்.
 • நான் உன்னுடன் செலவிடும் நேரம் போதுமானதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் நம் இருவருக்கும் அது மிகமுக்கியமானது. நாம் அடுத்த முறை சேர்ந்து இருப்போம் என்று சொல்ல முடியாது காரணம் வாழ்க்கை அவ்வளவு தூரம் நிலை இல்லாதது. அதை கவனத்தில் கொள்வாய் என் கண்மணி!
                                                             இப்படிக்கு 
                                                         உன் அன்பு அப்பா 

*******************************************************************************************
கொசுறு : The Pursuit of Happiness என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங் தொலைக் காட்சியில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.வேலை இன்மை காரணமாக மனைவி, மகனை தன்னிடம் விட்டுப் போன நிலையிலும் மகனை கலங்காமல் பாசத்தோடு  பார்த்துக் கொள்ளப் போராடும் இளம் தந்தையின் கதை. நான் ரசித்த படங்களில் அதுவும் ஒன்று. இளம் தந்தையாக நடித்து அசத்தியவர்  வில் ஸ்மித் என்னும் நடிகர் என்பதை இணையத்தில்தான் அறிந்தேன்.

*****************************************************************************************

இதைப் படித்து விட்டீர்களா 


47 comments:

 1. வணக்கம்
  முரளி(அண்ணா)

  கடிதம் என்றால் கடிதம் இதுதான்..... அருமை வாழ்த்துக்கள் அண்ணா தொடருகிறேன் பதிவை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. 3 காரணங்கள் உட்பட கீழ் உள்ள வரிகளும் மனதை கவர்ந்தன...

  /// ஒவ்வொரு மனிதனும் செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும்...

  உனது உழைப்பும் முயற்சியுமே உன் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும்... ///

  நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வணக்கம்
  முரளி (அண்ணா)

  புற விசை ஒன்று தாக்காதவரை ஒரு பொருள் அதே நிலையில் இருக்கும். இது நியூட்டனின் விதி.வாழ்க்கையும் அப்படித்தான் ஏதோ ஒரு புற நிகழ்வு வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து விடுகிறது. அந்தப் புற மிகழ்வு நடக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்
  ....................................................................................................................................
  கடிதத்தில் நியூட்டனின் விதி எப்படி ஒரு மனிதனின் வாழ்கை்கையை திசைதிருப்புகிறது என்பதை அழகாக சொல்லிய விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அது நான் சேர்த்தது ரூபன்

   Delete
 4. மணிமகுடம் பெற வேண்டிய பதிவு.

  ReplyDelete
 5. இது கடிதமல்ல; குறுங்காவியம்.

  ReplyDelete
 6. பெற்றோரும் சொல்வதுதானே என்று நீ நினைக்கலாம். ஆனால் இவற்றால் என்றாவது நீ மனமுடைந்து போக நேரக் கூடிய சூழல் வந்தால் அந்த சோகத்தை தவிர்க்கவே இதைக் கூறுகிறேன். ///::

  /நிஜம் இதுதான் அண்ணாச்சி நல்ல தந்தை நல்ல குரு என்பது போல

  ReplyDelete
 7. அருமையான கடிதம்...
  பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 8. கடிதத்தைப் படித்து முடித்த பிறகு எனது நினைவில் வந்த
  கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்

  எங்கே வாழ்க்கை தொடங்கும்
  அது எங்கே எவ்விதம் முடியும்
  இதுதான் பாதை இதுதான் பயணம்
  என்பது யாருக்கும் தெரியாது

  ReplyDelete
 9. பொக்கிஷம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 10. மனதை நிறைத்துவிட்ட பதிவு சகோ!..

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. உனது உழைப்பும் முயற்சியுமே உன் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும்

  பொன்னான வரிகள்..!

  ReplyDelete
 12. கண்டது கற்க பண்டிதன் ஆவான் ...தூக்கி ஏறிய வேண்டிய பேப்பரைப் படித்து .தூக்கி எறிய முடியாத அறிவுரைகளை எழுதி அசத்தி விட்டீர்களே !
  த.ம 6

  ReplyDelete
 13. “கழுவிய கையின் ஈரம் உடனே காய்ந்து விட்ட போதிலும் அந்தக் கடிதத்தின் நினைவுகள் காயாததால் ஈரத்தை உங்களிடம் பரிமாறிக் கொள்கிறேன்” - அய்யா நீங்களும் ஒரு கவிஞர் என்பதை உரைநடையிலேயே தெரிந்து கொண்டேன். அந்த ஈரம் உங்கள் மனசிலிருந்து, கடித வரிகளின்வழி எங்கள் மனசிலும் ஒட்டிக்கொண்டது. இதய ஈரம் காயாமல் இருக்கப் போராடுவதுதானே வாழ்க்கை? அரிய பதிவு. குப்பையிலும் மாணிக்கம் கிடைக்கும் என்பது உண்மைதான். நன்றி

  ReplyDelete
 14. மகனுக்கு மட்டுமல்ல ! மனித இனத்துக்கே உரிய கடிதம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 15. நல்ல அறிவுரைகளை எடுத்துச்சொல்கின்றது கடிதம்.

  ReplyDelete
 16. ஐயா இக் கடிதம் வாழ்வியல் யதார்த்தம். இதை இளம் சிறார்கள் உணர்ந்து கொண்டால், வாழ்க்கையில் வெற்றிதான். அருமையான பதிவு ஐயா. தங்களின் பதிவினை எனது கணினியில் காபி, பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டேன் ஐயா.. நன்றி ஐயா

  ReplyDelete
 17. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, ஆனா அவசியமான நேரத்துல முக்கியமான பதிவுன்னு மட்டும் நல்லா தெரியுது

  ReplyDelete
 18. தந்தை மகனுக்கு சொல்லும் அறிவுரைகள் அற்புதம்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 19. அனைத்தும் பொக்கிசமாய் பேணிக்காக்கும் அறிவுரைகள். மனதில் இருத்தி வாழ்க்கையில் கடைபிடித்தால் கிழக்கு வானம் தூரமில்லை. தொட்டு விடும் தொலைவு தான். வெற்றிப் படிகட்டில் அசராமல் ஏறமுடியும் எனும் தன்னம்பிக்கையும் ஊட்டுகிறது தந்தையின் வார்த்தைகள்.. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  ReplyDelete
 20. அருமையான கடிதம்..

  ReplyDelete
 21. அப்பா..
  இந்த ஆசானுக்கு இணை
  வேறொருவருமில்லை...
  கடிதத்தில் வாழ்வின் சாராம்சத்தை
  உணர்த்திவிட்டார்....
  ==
  பொக்கிஷக் கடிதம்...

  ReplyDelete
 22. இந்தக் காலத்தில் நேரிடையாகப் பேச மகனுக்கு நேரமில்லை. கடிதமாக எழுதினால் கொஞ்சமாவது படித்து மனதில் வாங்கிக் கொள்வார்கள். அருமையான கடிதம்.

  ReplyDelete
 23. //மனித வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் போன்றது. நிகழ்காலத்தில் வாழ்கையை வீணடித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை உன்னை விட்டு விலகி சென்றிருக்கும்.// - இந்த பொன்னான வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. இதை என் குடும்பத்திற்கு மட்டுமல்ல என்னுடன் பழகும் அனைவர்க்கும் இதை சொல்வதுண்டு! சற்றே சோம்பல் வந்து ஒட்டி கொள்ளும் போது கூட கிடைக்கும் நேரங்கள் எத்தனை மதிப்புள்ளவை என்பதை நினைத்தாலே போதும் அடுத்த நிமிடமே சோம்பல் ஓடி போய்விடும்... !

  கடிதம் முழுக்க மனதில் ஏற்று பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிகள்.... !

  //கழுவிய கையின் ஈரம் உடனே காய்ந்து விட்ட போதிலும் அந்தக் கடிதத்தின் நினைவுகள் காயாததால் ஈரத்தை உங்களிடம் பரிமாறிக் கொள்கிறேன்.// - இப்ப படிச்சவங்க மனசுல எல்லாம் இந்த கடிதம் பசை மாதிரி ஒட்டிகிடுச்சிங்க... !

  ஆஹா நான் கூட போண்டா, பஜ்ஜி மடிச்சு கொடுக்கிற பேப்பரை கூட படிக்காம போட மாட்டேன்... என்னை மாதிரியே சகோதரர் இருப்பது சந்தோஷமா இருக்கு!

  ReplyDelete
 24. ஒரு நல்ல பதிவு எழுதறதுக்கு வேண்டிய விஷயங்கள சேகரிச்சிக்கிட்டு அத எப்படி அழகா ப்ரெசன்ட் பண்றதுன்னு யோசிச்சி இந்த பொட்டல விஷயத்த கண்டுபிடிச்சிருக்கீங்க... அது கற்பனைன்னாலும் சொல்ல வந்த விசயங்கள் அனைத்துமே அருமை..... இந்த மாதிரி பைபிள்ல ஒரு தனி புத்தகமாவே எழுதியிருக்காங்க... ஒரு தந்தை மகனிடம் சொல்வதுபோல அமைந்திருக்கும். அதாவது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்தவை இன்றைய காலத்துக்கும் பொருந்தி வருவதுதான் ஆச்சரியம்!!

  ReplyDelete
  Replies
  1. கரெக்டா கண்டுபிச்சிசுடீங்க சார். நன்றி

   Delete
 25. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 26. அருமையான பதிவு. கலக்கல். பல விடயங்களை உணரக் கூடியதாக இருந்தது. அந்த ஆங்கிலப் படத்தையும் RealPlayer கொண்டு தரவிறக்கம் செய்துள்ளேன். விரைவில் பார்க்கிறேன். மீண்டும் சந்திப்போம்.

  ReplyDelete
 27. ஒரு வாழ்வியல் விளக்கமே சூப்பராக இருக்கிறதே, யாவரும் கடை பிடிக்க வேண்டிய விஷயம் இது, பகிர்வுக்கு நன்றி....!

  ReplyDelete
 28. நான் உன்னுடன் செலவிடும் நேரம் போதுமானதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் நம் இருவருக்கும் அது மிகமுக்கியமானது. நாம் அடுத்த முறை சேர்ந்து இருப்போம் என்று சொல்ல முடியாது காரணம் வாழ்க்கை அவ்வளவு தூரம் நிலை இல்லாதது. அதை கவனத்தில் கொள்வாய் என் கண்மணி!//

  நெகிழ வைத்தவரிகள்.
  கடிதம் வாழ்வியல் உண்மைகளை கூறுகிறது.

  ReplyDelete
 29. பிள்ளைகளை எப்படிதான் வளர்ப்பது என்றே தெரியவில்லை

  ReplyDelete
 30. கடிதம் எழுதக் கூட கை கழுவணுமா என்ன?

  ReplyDelete
 31. ஆழ்ந்து வாசித்தக் கடிதம் சார்

  ReplyDelete
 32. நான் ஒரு அப்பா. இப்போதெல்லாம் பிள்ளைகளுக்குக் கடிதம் எழுதும் வாய்ப்பே இல்லை. இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வாழவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உண்டு. சிறுவயதில் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் அவர்களது தந்தையே ஹீரோ. நாம் எப்படி எப்படி நடக்கிறோம் வாழ்கிறோம் என்று நாம் அறியாமலேயே அவர்கள் மனதில் பதிந்து விடுவதுண்டு. ஆக ஒரு தந்தை முன் உதாரணமாக இருந்து வாழ்ந்து காட்ட வேண்டும். நான் அவ்வப்போது என் மக்களுக்குக் கூறும் அறிவிரை There is no substitute for hard work--- Aim at the star : then at least you can reach the tree top. -The eagles fly high because they think they can. பொதுவாக வாழ்ந்து காட்டுவதே சிறந்த வழி. வாழ்த்துக்கள். .

  ReplyDelete
  Replies
  1. For me my dad is hero too

   Delete
 33. கடிதம் எழுதுவதும், ஏன் பேசுவதும் கூடக் குறைந்துவிட்ட இந்த நாளில் இந்தக் கடிதம் ரொம்பவும் சிந்திக்க வைக்கிறது, முரளிதரன். நம்மூரில் அம்மாவிற்குத்தான் எல்லா முக்கியத்துவமும். அப்பா பின்னால்தான் இருப்பார்.
  தன் அப்பாவை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைக்கும் இந்தக் கடிதம் அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொரு சொல்லையும் யோசித்து யோசித்து எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.
  மேலும் மேலும் இதுபோல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வாழ்த்துகள்!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895