என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, May 14, 2014

வாயை மூடிப் பேசவும்

   எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிடிக்கு போக நினைத்ததுண்டு. அனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.   நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பார்க்க முடிவு செய்து வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஐ மேக்ஸில் 7 வது ஸ்க்ரீனில் முன்பதிவு செய்தேன். தாமதமாக செய்ததால் இரண்டாவது வரிசையில் அமர்ந்து பார்க்க வேண்டியதாயிற்று. அது ஒரு வித்தியாச அனுபவம்தான்

   முன்னதாக பார்க்கிங் கட்டணம் அதிகம் என்று கேள்விப் பட்டதால் பயணத்திற்கு பேருந்தையே தேர்ந்தெடுத்தேன். குருநானக் கல்லூரி நிறுத்தத்தில் இருந்து ஓரிரு நிமிட நடை தூரத்தில் பீனிக்ஸ் அமைந்திருந்தது

   ஆடம்பர மால்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் கூட்டம் சாரிசாரியாக  குருநானக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பீனிக்சை நோக்கி பீடு  நடை போட்டுக் கொண்டிருந்தது.  கட்டணம்பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல்  நீண்ட வரிசையில் நான்கு சக்கர வாகனங்கள் காத்திருந்தன. 

   சோதனைக்குப்  பிறகு உள்ளே நுழைந்துபின்  பார்க்க இருக்கும் படத்தின் பெயரைப் போலவே வாயை மூடி பேசாமல் சும்மா கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் அங்குலத்திலும் ஆடம்பரம் நிறைந்திருந்தது. வாங்கும் விலையிலோ, நம்ம பர்ஸ் தாங்கும் விலையிலோ பொருட்கள் இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாக கடைகளைக் கடந்து தேடிப் பிடித்து அரங்கிற்குள் நுழைய விளம்பரங்கள் தொடங்கி இருந்தது.

   இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்ததால் பாதி திரையை மட்டுமே  சரியாக பார்க்க முடிந்தது.  அழகான உருவங்கள் கூட பூதாகாரமாக தோன்றி பயமுறுத்தியது . சிறிய அரங்கமாக இருந்ததால் திரையின் அளவும் சற்று சிறியதாக இருந்தால் நலம் எனத் தோன்றியது. படம் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் இடைவேளைக்குப் பின் பெரும்பாலான சீட்டுகள் காலியாகி விட்டன.
 
   பனிமலை என்ற கிராமத்தில் திடீரென்று பேச்சை இழக்க வைக்கும் வினோத நோய் பரவுகிறது. மருந்து கண்டுபிடிக்கும் வரை நோய் பரவாமல் இருக்க யாரும் பேசக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள்.
பின்னர் தடுப்பூசி கண்டுபிடிக்கப் படுகிறது.இதனால் உயிருக்கு  ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம். பாதிக்கப் பட்டவர்கள் குணமடைந்தாலும்  பேச இயலாமல் போகவும் கொஞ்சம் வாய்ப்பு உள்ளது என்ற வினோத கற்பனையில் கதைக்களம் கட்டப்பட்டிருக்கிறது.

   பேசினால் எந்தப் பிரச்சனையும் தீர்த்துவிட முடியும் என்று நம்பும் நாயகன் மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மான் தமிழில் முதல் படமாம். கல்லூரிக் கன்னியர்களை ஈர்க்கும் அளவுக்கு வசீகரனாகத் தான் தெரிகிறார். உடைந்த பொருள்களை ஒட்டவைக்கும் க்ளூ வை விற்கும் விற்பனைப் பிரதிநிதிதான் துல்ஹர். Mr. Fix it.  என்ற க்ளூ வை தன் பேச்சுத் திறமையால் விற்றுவிடும் திறமைசாலி. தன் பேச்சால் உடைந்த மனங்களையும் ஓட்ட வைக்கிறார். அவரது பேச்சுத் திறமையை நிரூபிக்க இன்னும் அழுத்தமான காட்சிகளை வைத்து இருக்கலாம்.

   துள்ளல் நஸ்ரியாவை இந்தப் படத்தில் காணவில்லை. டாக்டரான நஸ்ரியா தந்தையின் இரண்டாம் மனைவியை ஏற்றுக் கொள்ளாமலும், நிச்சயிக்கப் பட்டவன் தன் மீது செலுத்தும் டாமினேஷேனை விரும்பாமலும்   மென்சோகத்தை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருவது நஸ்ரியா ரசிகர்களுக்கு ஏமாற்றமே. நாயகனின் அணுகுமுறையைக் கண்டு மனதைப் பறிகொடுப்பதை பல படங்களில் பார்த்தாகிவிட்டது. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு பெண்ணின் மனதை மாற்றி, காதலிக்கும் வேலையை இன்னும் எத்தனை படங்களில்தான் நம்ம ஹீரோக்கள் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. 

   படத்தின் இயக்குனர் அவ்வப்போது செய்தி வாசிப்பவராக வந்து ஊடகங்கள், அரசியல்வாதிகள், மக்கள், நடிகர்கள் என அனைவரையும் நையாண்டி  செய்வது  சூப்பர். அவர் செய்தி வாசிக்கும்போது கீழே எழுத்துப் பிழைகளுடன் செய்தி ஓடியது . உண்மையாகவே எழுத்துப் பிழையா அல்லது இயக்குனரின் கைவரிசையா என்று தெரியவில்லை

    ரோஜா புகழ் மதுபாலா எழுத்தாற்றல் உள்ளவர். அவர் கணவர் அதை புரிந்து கொள்ளவில்லை.  மதுபாலாவோ  குறைவாக மதிப்பெண் பெறும் தன் மகனை புரிந்து கொள்ளவில்லை.படிப்பில் வீக்கான பையனைப் பற்றிய கவலைப்படும் மதுபாலாவிடம் அவனது  ஓவியத் திறமையை நாயகன் உணரவைப்பது ஆறுதல் 

  துல்ஹரின் நண்பராக வரும் அர்ஜுன் பப்ளிமாஸ் முகத்தை வைத்துக்  பேச நினைப்பது  ஒன்றும் தன்னையும் அறியாமல் பேசுவது ஒன்றுமாக  கலக்குகிறார்.

   பேசாமல் பேரைக் கெடுத்துக் கொள்வது , பேசிப் பேரைக் கெடுத்துக் கொள்வது இரண்டுக்கும் நிஜ அரசியலில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. பாண்டியராஜன் உண்மையில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் அமர்க்களப் படுத்துகிறார். சுகாதார அமைச்சராக  வரும் அவர் ஏதோதோ பேசி(உளறி) தானே மாட்டிக்கொள்வதும் அதிலிருந்து தப்பிக்க தனக்கும் குரல்போய்விட்டது என்று நடிப்பதும் சுவாரசியம். பாண்டியராஜன் தான் வரும் எல்லாக் காட்சிகளிலும் சிரிக்க வைப்பதற்கு அவரது தி.மு. வும் கை கொடுக்கிறது. கண் கொடுக்கிறது.
 
   மகன் காதல் கல்யாணம் செய்து கொண்டான் என்பதற்காக அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்வது பொருத்தமானதாகத் தெரியாவிட்டாலும் வினு சக்கரவர்த்தியின் நடிப்பு கச்சிதம். வினுசக்கரவர்த்தி  கடைசியில் மனம் மாறினாலும், பேரன் முகத்தைப் பார்த்து மாறுவது போல் அல்லாமல் கதாநாயகனின் பேச்சின் மூலம் மாறுவதுபோல் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    விஜய் டிவி ப்ராடக்டான ரோபோ சங்கருக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமையக் கூடும். இப்படத்தில் குடிகார சங்கத்தின் தலைவராக வந்து சிரிக்க வைக்கிறார். நல்ல திறமை படைத்தவர் ரோபோ. மிமிக்ரியை மட்டும் நம்பாமல் இன்னும் கிரியேட்டிவாக செயல் பட்டால் பெரிய  ரவுண்டு வர  வாய்ப்பு உள்ளது, நியூக்ளியர் ஸ்டாராக வரும் ஜான் விஜய் தன் முக பாவங்களால் சிரிக்க வைக்கிறார். சில நேரங்களில் பேசாமல் இருந்தாலே தானாக பிரச்சனை சரியாகி விடும். இப்படித்தான் குடிகார சங்கத்திற்கும் நியூக்ளியர் ஸ்டார் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை தீர்வதாகக் காட்டுவது ரசிக்க வைக்கிறது.

    அனாதை இல்லத்தில் வளர்ந்த நாயகன் அதை விட்டு வெளியேறிய பின்னும் அதற்கு உதவுகிறான். "உன் உதவி எல்லாருக்கும் தேவைன்னு ஏன் நினச்சிக்கிட்டு இருக்க" என்று  கேட்கும் அனாதை இல்லத் தலைவியின் கேள்வி பளிச். அனாதை இல்லத்திற்கு வேடந்தாங்கல் என்று பெயர் வைத்தது சாலப் பொருத்தம்.

   இடைவெளிக்குப் பிறகு அரை மணி நேரத்திற்கும் மேல் வசனம் ஏதுமின்றி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது புதுமையல்ல என்றாலும்   அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டதில்  இயக்குனரின் சாமர்த்தியம் தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும் பேச்சு தொடர்பாகவே அமைத்தற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

   குத்துப் பாட்டு இல்லை. முகம் சுளிக்கவைக்கும்  காட்சிகள் இல்லை. குடிகாரர்கள்  இருந்தாலும் குடிக்கும் காட்சி இல்லை. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைந்ததில் திருப்தியே. 

**********************************************************************************34 comments:

 1. விரைவில் பார்த்த்துவிடலாம்! நல்ல விடயம் பகிர்வு நன்றி !

  ReplyDelete
 2. பார்த்துவிடும் எண்ணம் உள்ளது
  விரிவான அருமையான விமர்சனம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. திரைப்படத்தோடு சேர்ந்து திரை அரங்கையும் விமர்சித்துள்ளது சுவாரஸ்யம்.

  ReplyDelete
 4. தங்களின் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது ஐயா
  அவசியம் பார்க்கின்றேன்
  நன்றி

  ReplyDelete
 5. இதுவரைக்கும் போகவில்லை, சனி ஞாயிறுகளில் மட்டுமே நேரம் கிடைக்கிறது என்றாலும் அன்றைக்கு மட்டும் வண்டி பார்க்கிங்க்கு ஸ்பெஷல் கட்டணமாமே! உங்களை மாதிரி பஸ்ஸில் போனால்தான் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் கேள்விப் பட்டேன், அதனால்தான் டூ வீலரில் செல்லவில்லை

   Delete
 6. ரோபோ சங்கர் அவர்களை பயன்படுத்த சரியான நபர் தேவை தான்...

  பார்க்க வேண்டும்... நன்றி...

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா
  குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று ஒரு ப்டம் அமைவதே படத்தின் சிறப்பு. தங்கள் விமர்சனம் படித்த பின்பு ஒரு பார்க்கலாம் என்றே எண்ணுகிறேன். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

  ReplyDelete
  Replies
  1. ஆம் பாண்டியன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த படம்

   Delete
 8. பகிர்வுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 9. சார் நான் படம் பார்த்துட்டேன் சுவாரஸ்யமாக இருந்தது அதிலும் பாண்டியராஜன் ரோபோ சங்கர் பெர்பார்மன்ஸ் பிடிச்சிருந்தது. கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி தங்கள் பகிர்வுக்கு

  ReplyDelete
 10. நீங்களும் திரை விமர்சனம் பதிவு போட்டாச்சா!?

  ReplyDelete
 11. நீங்களுமா முரளி.? படம் பார்த்து விமரிசனம் எழுதுவது?

  ReplyDelete
  Replies
  1. விமர்சனத்திற்காக படம் பார்க்கவில்லை ஐயா!, படம் படம் பார்த்ததால் விமர்சனம் எழுதினேன் . திரைப்படம் செல்வது மிக அரிதுதான்

   Delete
 12. தியேட்டரில் திரைப்படம் பார்க்கும் அளவிற்கு உங்களுக்கு நேரமும் பொறுமையும் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு டிக்கட் 150 ரூபாய். வாங்கியபின் பாதியில் வர மனம் இல்லை. படம் நன்றாகவும் இருந்தது

   Delete
 13. இத்தனை ரூபாய் கொடுத்ததற்குப் படமாவது ரசிக்கும்படி அமைந்ததே. நீங்கள் விவரித்திருக்கும் விதம் பட ஆசையைத் தூண்டுகிறது. வித்தியாசமகப் படம் எடுத்திருப்பவரைப் பாராட்டவேண்டும். பகிர்வுக்கு மிக நன்றி.

  ReplyDelete
 14. சிறந்த திறனாய்வுப் பார்வை

  ReplyDelete
 15. நல்ல பகிர்வு.

  திருச்சியில் தெனாலிராமன் பார்த்த போது கிடைத்த அனுபவங்களை எனது பக்கத்திலும் எழுதினேன். அது போல நீங்களும்....

  பொதுவாக படங்கள் பார்க்க முடிவதில்லை.

  ReplyDelete
 16. படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் போல தோன்றுகின்றதே! இங்கு வந்தால் பார்க்க வேண்டும்...பார்க்கலாம்...

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 17. நானும் காண முயற்சிக்கிறேன்.
  Killergee
  www.Killergee.blogspot.com

  ReplyDelete
 18. வெறும் திரை விமர்சனமாக இல்லாமல் ஒரு சிறிய பயணக் கட்டுரை மாதிரி இருந்தது உங்கள் பதிவு...

  கடும் பயணத்தின் பின்னர் (உட்கார்ந்துகொண்டே) ஒரு நல்ல திரையரங்கில் படம் பார்த்தது மீளாக்கம் செய்திருக்கும் என்றே கருதுகிறேன்..

  ReplyDelete
 19. நல்ல படங்கள் அரிதாக வரும் நிலையில், இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது. நன்றி. வலைத்தள நுட்பங்களைப் பற்றி புதுக்கோட்டையில் கணினிப் பயிற்சி வகுப்பில் (18.5.2014) தாங்களும், திரு திண்டுக்கல் தனபால் அவர்களும் விளக்கம் அளித்தபோது பல புதியனவற்றை அறியமுடிந்தது.

  ReplyDelete
 20. பார்க்கும் எண்ணம் வலுப்பெற்றுவிட்டது. தங்கள் விமர்சனம் ஆவலைத் தூண்டுகின்றது

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895