என்னை கவனிப்பவர்கள்

புதன், 31 டிசம்பர், 2014

2014 இன் சூப்பர் ஹிட் பதிவர் யார் தெரியுமா?

இது சூப்பர் ஹிட் தானே? ஒத்துக்கறீங்களா?
   வாங்க! வாங்க! 2014 ன் சூப்பர் ஹிட் பதிவர், அதாவது அதிக ஹிட் வாங்கின பதிவர் யாருன்னு தெரிஞ்சுக்க வந்துருக்கீங்க. அப்படித்தானே? சொன்னா சிரிக்கப் படாது. ஆனா சொன்னா சிரிக்காம இருக்க முடியாது. சரி பரவாயில்ல. சிரிச்சிட்டு போங்க. 2014சிரிப்புல முடிஞ்சி  2015 சிரிப்புல தொடங்கட்டுமே. ஹலோ! நீங்க சொல்லுங்க சிரிக்கணுமா வேணாமான்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்னு சொல்றது எனக்கு கேக்குது. சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க அந்த சூப்பர் ஹிட் பதிவர் ஹிஹிஹிஹிஹி ......நான்தாங்கோ? 
  ஏங்க! பதிவு எதுக்கு எழுதறோம்? நிறையப் பேர் படிக்கணும். நிறைய ஹிட் கிடைக்கணும்னுதானே?. நானும் அதுக்குதாங்க எழுதறேன். என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை. இருக்காதா பின்ன? அந்த ஆசை இப்படி நிறைவேறும்னு நான் நினைக்கவே இல்லைங்க.
 சில பதிவர்கள் எல்லாம் அதிக ஹிட் கொடுத்த வாசகர்களுக்கு நன்றின்னு அதுக்கு ஒரு பதிவு போட்டு பெருமையா பீத்தீக்கிறாங்க. ஒவ்வொரு பதிவுக்கும் நான் வாங்கிற ஹிட் மாதிரி அவங்க யாராலையும் வாங்க முடியாதுன்னு அடிச்சி சொல்ல முடியும். இல்ல இல்ல அடிவாங்கி சொல்லமுடியும் 
   என்னடா  என்னமோ உளறிக்கிட்டு இருக்கானேன்னு பாக்கறீங்களா?. உண்மையைத்தான் சொல்றேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா? அது எப்படித்தெரியும்?. எங்க வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும்!. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்.
     பதிவு போடறதுக்கு கம்ப்யூட்டரை ஆன் பண்ணுவேன். அப்பவே ஹிட் ஆரம்பம் ஆயிடும்னா பாத்துக்கோங்களேன். எங்க வீட்டு அம்மணிகிட்ட வாங்கற ஹிட்டதான் சொல்றேன். யாருமே படிக்காததுக்கு யாருக்காக பதிவு போடறீங்கன்னு சொல்லி, ஆரம்பிக்கும் போதே தலையில நறுக்குன்னு முதல் ஹிட். காலங்காத்தால 4 மணிக்கு எழுந்து லைட்ட போட்டுக்கிட்டு எங்க தூக்கத்தை கெடுத்துக்கிட்டு, பால் வாங்கிட்டு வராம கம்ப்யூட்டர்ல உக்காந்துக்கிட்டு இருக்கறது நியாயமான்னு கேட்டு ஓர் ஹிட். கூப்பிட்டு எவளோ நேரம் ஆச்சு? இன்னுமா எழுந்திருக்கலன்னு கேட்டு  ஒரு ஹிட்? வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஒட்டரை அடிக்கச் சொன்னத மறந்துட்டு எட்டரை மணிவரை டைப் அடிச்சிக்கிட்டு இருந்ததால அதுக்கு ஒரு சூப்பர் ஹிட்.  ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்க! ஹீட்டர் போட்டு அரைமணிநேரம் ஆச்சுன்னு சொல்லி இன்னொரு  ஹிட்.
 என்னமோ பெரிசா பதிவு போடறேன்னு   நேரத்த வேஸ்ட் பண்ணீங்களே  அந்தப் பதிவு என்னனு எங்கிட்ட காமிச்சீங்களான்னு  கரண்டியாலயே நச்சுன்னு ஒரு ஹிட். கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னா எனக்கு டைம் இல்லேன்னு சொல்லிட்டு மொக்க பதிவ போட்டு அத எத்தனை பேரு பாத்தாங்கன்னு நிமிஷத்துக்கு ஒரு தடவை பாக்கறதுக்கு மட்டும் நேரம் இருக்கான்னு கேட்டு ஒரு ஹிட். 
  இந்த மாசம் கரண்ட் பில் அதிகமா வந்ததுக்கு காரணம் உங்க பதிவு வெறிதான்னு   வெறித்தனமா  ஒரு ஹிட்.  இன்னைக்கு உங்க பதிவ ஒருத்தர் கூட  பாக்கல   போலிருக்குன்னு சந்தோஷமா ஒரு ஹிட்
 இப்படி ப.மு. , ப.போ , ப.பி, (பதிக்கு முன், பதிவின் போது , பதிவுக்கு பின்) அதிகமா ஹிட் வாங்கின பதிவர் வேற யாராவது இருந்தா சொல்லுங்க.

இப்போ சொல்லுங்க நான்தானே 2014 இன் சூப்பர் ஹிட் பதிவர்?

கொசுறு:1 அப்புறம் தமிழ்மணம், அலெக்சா,தமிழ் 10  இவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நான் வாங்கின இந்த ஹிட்டை எல்லாம் சேத்து கணக்கில எடுத்துக்கிட்டு ரேங்க் போடனும்ன்னு கேட்டுக்கிறேன். அப்படி என் கோரிக்கைய நீங்க கேக்கலேன்னா பதிவு எழுதறதை நிறுத்திடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க. 

கொசுறு:2. இப்பெல்லாம் வெளிய போகும்போது தலையில கேப் போட்டுக்கிட்டுதாங்க போக வேண்டி இருக்கு. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். பதிவு எழுதறதால வாங்கின ஹிட்டு அதாங்க குட்டு வெளிபட்டுடும் இல்ல.



***********************************************************************************
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 





*******

திங்கள், 29 டிசம்பர், 2014

மனம் வைக்குமா தமிழ்மணம்?

  
  
    தமிழ் வலைப் பூக்களில் தற்போது தொய்வு காணப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த பலர் இந்த ஆண்டு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வலைப்பூக்கள் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை . சிலர் முகநூல் ட்விட்டர் கூகிள் + க்கு சென்று விட்டனர் . ஆனாலும் புதிதாக பலரும் எழுத வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
     நான் கவனித்தவரை நிறையப் பதிவர்களின்  அதிக பட்சமாக மூன்று ஆண்டுகள் வரைதான்  தொடர்ந்து  தீவிரமாக எழுதி இருக்கிறார்கள். பின்னர் வேகம் குறையத் தொடங்கியுள்ளதை காண முடிகிறது. காரணம் முதன் முதல் எழுத வாய்ப்பு கிடைக்குபோது சிறுவயதில் இருந்து மனதில் பதிந்துவந்த எண்ணங்களும்  அனுபவங்களும் தொடர்ந்து எழுத எதையாவது கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களது ஆகச் சிறந்த படைப்புகளை மூன்றாண்டுகளுக்குள் கொடுத்துவிடுகிறார்கள். பின்னர் ஒரு வறட்சி நிலவுகிறது. இப்படி எழுதி என்ன சாதித்தோம்  என்ற எண்ணம் ஏற்படுகிறது. சக பதிவரின் பாராட்டுகளும் ஊக்கமும் ஆரம்பத்தில் கொடுத்த மகிழ்ச்சி இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப்பின்  எந்தப் பரவசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இது வலைப் பூ மட்டுமல்ல முகநூல் ட்விட்டர் எல்லாவற்றுக்குமே பொருந்தும். 
    தினம் ஒரு பதிவு எழுதி  நீண்ட காலம் தமிழ் மண தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த  வீடு திரும்பல் மோகன் குமார் இப்போது  வலைப்பக்கம் எப்போதாவதுதான் வருகிறார் கடந்த ஆண்டு முகநூலில் மூழ்கிக் கிடந்த பலரை இப்போது காணவில்லை. ஆனால்   அதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த சலிப்பையும் வெறுமைமையும் கடந்தவர்கள் அவர்கள். 'அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன்' ,'அட்ராசக்கை சிபி.செந்தில் குமார்','பழனி கந்தசாமி'  போன்றவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவர்கள் அனைவரும் அசாதாரணமானவர்கள். என் கணிப்பின்படி புதிதாக வருபவரின் படைப்புக் காலம் மூன்று ஆண்டுகள்.ஒவ்வொருவரும் தான் இயங்கிய காலத்தை மட்டுமே பொற்காலம் என்று வர்ணிப்பது வழக்கம்.
     பதிவு திசைமாறிப் போய்க்கொண்டிருக்கிறது. நான் சொல்லவந்தது புதிதாக எழுத வருபவர்களை தமிழ்மண திரட்டியில் இணைப்பது   பற்றி. புதியவர் பழையவர் யாராக இருந்தாலும் ஒருவருடைய படைப்பை அடுத்தவர் அறிய வைப்பதில் திரட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன . நான் எழுத வந்தபோது ஏராளமான திரட்டிகள் இருந்தன. பதிவர்களைப் போலவே மூன்று ஆண்டுகளில் பல திரட்டிகள் காணாமல்  போயின. அவற்றில் தாக்குப் பிடித்து நின்றது  தமிழ்மணம்,தமிழ் 10,இன்ட்லி போன்ற ஒரு சில மட்டுமே.
   திரட்டிகள் இல்லாவிட்டால் நமது பதிவுகளை யாருமே படிக்க மாட்டார்களா? நமது பதிவுகளை திரட்டி அளிப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை? திரட்டிகளும் ஒரு ஒரு வலைத்தளமே.எவ்வவளவு பேர் வந்து பார்க்கிறார்களோ அவ்வளுக்கவ்வளவு விளம்பரம் கிடைக்கும். ஒரு வேளை வணிக நோக்கம் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் பார்க்கவேண்டும்-அல்லது பயன்படுத்தவேண்டும் என்பதே இணையதளம் நடத்துவோரின் விருப்பமாக இருக்கும்.
  திரட்டிகள் அளிக்கும் வசதிகளை பொறுத்தே அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமையும். பிரபலமாக உள்ளவர்களுக்கு திரட்டிகளின் உதவி தேவை இல்லை. வாசகர்கள் தேடி வந்து படிப்பார்கள்.எஸ் ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,சாரு போன்றோர் இதற்கு உதாரணம். முதலில் திரட்டிகளின்  உதவியால்  வாசகர்பெற்று பின்னர் சிறிது காலத்திற்குப்பின் பின் அந்த நிலையைத் தாண்டி திரட்டிகள் உதவி இன்றியே வாசகர்கள் வரும் நிலையை அடைந்தோரும் உண்டு.  கேபிள்சங்கர், அட்ராசக்க உள்ளிட்டோர் அடங்கிய பட்டியல் சிறியது.
   ஆனால் புதிதாக எழுதத் தொடங்குவோர்க்கு மிகவும் உதவிகரமாக இருப்பது திரட்டிகளே. இந்த வகையில் அதிக வலைப் பதிவர்களை கவர்ந்ததாக தமிழ் மணம், இன்ட்லி , தமிழ் 10 விளங்குகின்றன. குறிப்பாக தமிழ் மணத்தின் வசதிகள் அதிக வாசகர்களை வலைப்பக்கம் ஈர்ப்பதற்கு உதவுகின்றன. (என்னென்ன வசதிகள் என்பதை அறிய படிக்க
    மற்ற திரட்டிகளில் இணைப்பது மிகவும் எளிமையானது.உடனே அனுமதி கிடைத்து விடும். ஆனால் தமிழ்மணத்தில் தற்போது எளிதில் ஒப்புதல் கிடைப்பதில்லை. பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
சமீபத்தில் தமிழ் மணத்தில் உள்ள குறைகளை மூத்த பதிவர்கள்  பழனி கந்தசாமிம் தருமி போன்றோர் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் வேண்டுகோளின்படி விளம்பரங்கள் மற்றும்  ஆபாசப் பதிவுகளை நீக்கியது தமிழ்மணம். தமிழ் மணத்தில் பல தானியங்கி செயல்பாடுகள் உள்ளன. ஆனால் பதிவுகளின் தரம் பற்றி அவை அறியாது. மேனுவலாகத்தான் அவற்றை சரி செய்ய வேண்டி இருக்கிறது. தானியங்கியாக செயல்பட்டாலும் மனித கண்காணிப்பு நிச்சயம் அவசியம். 
   பிற திரட்டிகளைப் போல தமிழ்மணத்தில் எளிதில்  உறுப்பினராகி விடமுடியும். ஆனால்  நமது வலைப்பூவை பட்டியலில் சேர்க்க  அனுமதி கிடைத்தபின்பே நமது பதிவுகளை இணைக்க முடியும். முன்பெல்லாம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் இந்த அனுமதி கிடைத்து வந்தது. தற்போது ஏதோ சிக்கல் காரணமாக மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட கடந்த ஆறுமாதங்களாக ஒருவலைப்பூவும் சேர்க்கப் படவில்லை. எவ்வளவு காத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? 20? 30? 50? 100?
இல்லை! இல்லை! அதையும் தாண்டி 237 பேர் தமிழ் மண பட்டியலில் இணைவதற்காக காத்திருக்கிறார்கள்.
அந்த பட்டியல் இதோ


(வலதுபுறத்தில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி முழுப் பட்டியலையும் பார்க்கலாம்)

20.07. 2014 இல் இருந்து புதிதாக எந்த வலைப்பூவும் தமிழ் மணத்தில் இணைக்கப் படவில்லை.கடந்த முறையும் இதே போல பல மாத காத்திருப்பிற்குப் பின்னேதான் வலைப்பூக்கள் சேர்க்கப்பட்டன. ஏனிந்த தொய்வு  என்பதற்கான ரியான காரணம் தெரியவில்லை. முன்பு சராசரியாக ஒரு நாளைக்கு 200 பதிவுகள் இணைக்கப்பட்டன. தற்போது தமிழ்மணத்தில் வெளியாகும் இடுகைகள்  90 ஆக குறைந்துள்ளது . 

இந்த தொய்வை ஈடுகட்ட   உடனடியாக இவர்களை  தமிழ்மண விதிகளின்படி தகுதி இருப்பின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் .  தருமி அவர்கள் கூறியுள்ள படி ஒருவேளை இவற்றை கவனிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தேவை எனில்  நிபந்தனைகளின் அடிப்படையில் யாரையேனும்  பயன்படுத்த முயற்சிக்கலாம். தருமி அவர்கள் கூறியது போல திண்டுக்கல் தனபாலன் இதற்கு பொருத்தமானவர் என்று கருதுகிறேன்.அவர் கணினி நுட்பங்கள் அறிந்தவர் மட்டுமல்லாது சேவை மனப்பான்மையும் உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே.
எனது பதிவுகள பலரையும் சென்றைடய உதவியது தமிழ்மணம். இப்போதும் எனது வலைபூவிற்கு வருகை தருபவர்களில்  பெரும்பாலோர் தமிழ் மணம் மூலம் வருபவர்களே  அதேபோல் பற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். தமிழ் வலைபதிவர்களை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கையை தமிழ்மணம் உடனடியாக செய்யும் என்று நம்புகிறேன்.

**********************************************************************

கொசுறு: 1 இந்தப் பட்டியலில் ஒரு சிலர் ஏற்கனவே அதே தலைப்பில் நடத்தி வருகிறார்களே அவர்கள் எதற்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் 
கொசுறு 2:
தமிழ்மணம் கவனத்திற்கு மீண்டும் ஆபாச விளம்பரம் தலைகாட்டத் துவங்கியுள்ளது


***************************************************************************
தொடர்புடைய பிற பதிவுகள் 

  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?


  • வெள்ளி, 26 டிசம்பர், 2014

    பிரபல பதிவர் ஜோதிஜியின் "தொழிற்சாலைக் குறிப்புகள்"-ஒரு பார்வை


         பிரபல பதிவர் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள்"-ஒரு பார்வை

           தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே. ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த  துறையை சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் தனி முத்திரை பதித்தவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள்.  2013ஆம் ஆண்டு  வெளிவந்து வெற்றி பெற்ற "டாலர் நகரம்" என்ற புத்தகத்தின் வாயிலாக  திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி "ஈழம் -வந்தார்கள் வென்றார்கள்" "வெள்ளை அடிமைகள்"  "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" போன்ற மின்நூல்களின் மூலமாக இணையத்தில்செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்த நூல்கள் 50000 முறைக்கு மேல் பதிவிறக்கம்  செயப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது 
    சமீபத்தில் வலைத்தமிழ் இணைய இதழுக்கு "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள் "என்ற தொடரை இருபது வாரங்களாக எழுதி  வந்தார். ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை விரிவாக   சொன்ன  இதுபோன்ற ஒரு நூலை இதுவரை படித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற்சார்ந்தவற்றை எந்தக் கல்லூரியிலும் கற்றுத் தரமுடியாத நுணுக்கங்களை   சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்தளித்துள்ளார். இத்தொடரை வாசித்தவர்களிடம்  இருந்துவந்துள்ள விமர்சனங்களை வைத்தே இத் தொடரின் கருத்தாழத்தை அறிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே ஒரு படைப்பின் சிறப்பு. அந்த வகையில் இத் தொடர் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை 

       ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன . அதன் ரிஷிமூலம் என்ன என்பதை  இத் தொடர் எடுத்துரைக்கிறது.ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி  நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளை கடந்து, கற்களை உடைத்து  சமவெளிகளில் சஞ்சரித்து  பின்னர் கடலை அடைகிறது. அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும் ஆடையாக  உருப்பெற்று  அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை, நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.

       இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி  

       அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  நேர்மையையும் வெளிப்படுத்துகிறது. முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  அவற்றை தொடர்வதை சில இடங்களில் சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார். 

          இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாது  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில் 
        இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள் ,சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .

        ஆயத்த ஆடைத் தொழிலில் ,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா என ஆச்சர்யப் பட வைக்கிறது  ஜோதிஜியின் எழுத்துக்கள்  

        அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியது தவறாமல் கிடைக்கவேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தயங்காத  மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

          பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன? என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .
       
          இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூல நான் அறிந்து  கொண்ட ஒன்று  தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை. ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை என்ற உண்மையை ஓங்கி உரைக்கிறது இத் தொடர். திறமையான ஒருவர் வெளியே போனாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

          காலத்திகேற்ப இத் தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி..விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறைக்கு ஒரு குட்டு வைக்கிறார் ஜோதிஜி  இடை இடையே சமுதாய  நிலையை கூறவும் தவறவில்லை..

          ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறார். திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்த்துகளில்  புலப்படுகிறது  

       இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களை உளவியல் ரீதியாக விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கறேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை

          திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

          இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள்  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன்.

         ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையிலேயே அமையும் வகையில் ஒரு தாக்கத்தை இத் தொடர் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை 

    இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள்,வெற்றி தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்   ஜோடி. குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன்.

       ஒரு பயனுள்ள தொடரை வெளியிட்ட வலைத் தமிழ் இணைய தளத்திற்கும்  படைத்தளித்த ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 

    டி.என்.முரளிதரன்மூங்கில் காற்று 
    www.tnmurali.com

    தொடரை முழுமையாக வலைத்தமிழ் இணைய தளத்தில் படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள் 




      

    புதன், 24 டிசம்பர், 2014

    வைரமுத்து பயன்படுத்திய வார்த்தை சரியா?




    நேற்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கவிதையை வெளியிட்டிருந்தேன். ( படிக்க நேற்றைய பதிவு      எய்ட்ஸ் பற்றி வைரமுத்து)
    அவை வெண்பா வடிவத்தில் அமைந்திருந்தன. மிக சிறப்பாக எழுதப் பட்டிருந்தது

     இவ்வெண்பாக்கள் ஒன்றில்  ஒரு வார்த்தையை வித்தியாசமாக உணர்ந்தேன் என்று குறிப்பிடேன்.ஆனால் மற்ற எவரும் அதனை குறிப்பிடவில்லை என்பதால்  எனது புரிதலில்தான் தவறு உள்ளது என்றே இப்போது எண்ணுகிறேன். இருந்தாலும் எனது என்ன ஓட்டத்தையும் சொல்லி விடுகிறேன்
    அந்த வெண்பா இதுதான்

                          தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
                          வேகையிலும்   விட்டு விலகாதே-ஆகையினால்
                          விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
                          கற்பனையை வீட்டுக்குள் காட்டு

    விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தைதான் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியது.

          விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை Sales women என்றே என்னால் சட்டென்று பொருள் கொள்ள முடிந்தது. ஆனால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை பாலியல் தொழில் செய்யும்  பெண் என கவிஞர் பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து.  Sales girls எல்லாம் Call girls அல்ல

           இந்தக் கவிதையில் முதலில் இருந்தே காசுக்காக காம சுகம் தரும் பெண்களைப் பற்றி பேசுவதால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தை பாலியல் தொழில் செய்யும் பெண்ணையே குறிப்பதாக மனது ஏற்றுக் கொண்டு விடுவதால் அந்த வார்த்தை யாருக்கும் தவறாக தோன்றவில்லை என நினைக்கிறேன்.
         
           எனக்கென்னவோ விற்பனைப் பெண்டிர் என்றதும் சரவணா ஸ்டோர், போதீஸ் போன்றவற்றில் கால்கடுக்க நின்றுகொண்டு கேட்டதை எடுத்துக் கொடுக்கும் பெண்களும், வாசல் கதவை தட்டி ரெண்டு  வாங்கினா ஒண்ணு ப்ரீ விளம்பர ஆஃபர் சார் வாங்கிக்கோங்க   என்று கெஞ்சும்  பெண்களுமே கண்முன் வந்து போனார்கள்.
    உங்கள் கருத்து  என்ன?

                ****************************************************

    தொடர்புடைய பிற பதிவுகள் 

    ****************************************************

    செவ்வாய், 23 டிசம்பர், 2014

    எய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை


    சமீபத்தில்  வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக்  கொடுக்க  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் ஊக்கம் கொடுக்க பல புதுக் கவிஞர்கள் வெண்பா பாட முயற்சித்தனர்.  ஏற்கனவே, பிரான்சு வாழ் கவிஞர் பாரதிதாசன், புலவர் ராமானுசம் ஐயா அவர்கள், அருணா செல்வம், கவிஞர் சிவகுமாரன் போன்றோர் அழகான வெண்பாக்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். 
    இன்றுவரை பெரும்பாலான கவிஞர்களுக்கு வெண்பா பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. எனக்கும் வெண்பாமீது விருப்பம் உண்டு. வெண்பாக்களை ரசித்துப் படிப்பேன். பலவித கட்டுப்பாடுகள் இருந்தாலும் நல்ல வெண்பாவின் ஈற்றடி ஒரு பஞ்ச் டயலாக் போல அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
    சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'பெய் எனப்  பெய்யும் மழை' என்ற கவிதைத் தொகுப்பை படித்தேன். அதில்எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி வெண்பா வடிவத்தில்  அற்புதமாக எழுதி இருந்தார்.
    அவற்றில் ஒரு சில 

                         போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
                         பாதை வழுவிய பாலுறவில் காதைக்
                         கழுவாத ஊசி, கழிவுரத் தத்தில்
                         நுழையும் உயிர்க் கொல்லி நோய்

                         இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
                         எடைகாட்டி  இன்பம் இழைப்பாள்-மடையா
                         கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
                         விலைமகள் ஆசை விடு

                         கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
                         புண்ணுக்குள் சென்று புலன் கொல்லும் -கண்ணா
                         முறையோடு சேராத மோகம் பிறந்தால்
                          உறையோடு போர் செய்தே உய்

                          கரைமீறி சேர்ந்தாடும் காமக் கலப்பில்
                          உறைமீறி நோய் சேர்வதுண்டே -உறைநம்பிக்
                          கம்மாக் கரையோ கடற்கரையோ  தேடாமல்
                          சும்மா இருத்தல் சுகம்

                          தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
                          வேகையிலும்   விட்டு விலகாதே-ஆகையினால்
                          விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
                          கற்பனையை வீட்டுக்குள் காட்டு

                          கலவிக்குப் போய்வந்த காமத்து நோயை
                          தலைவிக்கும் ஈவான் தலைவன் -கலங்காதே
                          காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய் தந்தால்
                          கோவலனைக் கூசாமல் கொல்

                          ஓரின சேர்க்கை உறவாலே மானுடத்தில்
                          பேரின சேர்க்கையே பிய்ந்துவிடும்-பாரில்
                          இயற்கை உறவென்னும் இன்பம் இருக்க
                          செயற்கை உறவென்ன சீ!

                          தேன் குடிக்கப் போன திருவிடத்தில்  உன்னுடைய
                          ஊன் குடிக்க ஓட்டும் உயிர்க் கொல்லி-ஆண்மகனே
                          உல்லாச நோய் சிறிய ஒட்டையிலும் உட்புகுமே
                          சல்லாப வாசல்களை சாத்து

                           பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளை
                           கண்ணைக் கெடுக்கும் கலைகளை-இன்றே
                           எரியூட்ட வேண்டும் இளஞர்கள் வாழ
                           அறிவூட்ட வேண்டும் அறி

                           துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
                           இணையாக வேறுமருந் தில்லை  மனைவிஎன்னும்
                           மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
                           மானுடத்தை வாழ்விப்போம் வா!


     படித்து விட்டீர்களா? ஒரு கேள்வி?
    இவற்றில் ஒரு வெண்பாவில் உள்ள ஒரு வரி சற்று உறுத்தலாகவும்   உள்ளதாகஎனக்குப் படுகிறது. அதை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். உங்களுக்கும் அப்படித் தோன்றியதா? தெரிவிக்கலாம்

    *********************************************************

    அந்த வார்த்தை எது என அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்க

    புதன், 17 டிசம்பர், 2014

    சிறகுகள் தேவை இல்லை


                                                 சிறகுகள் தேவை இல்லை
                                                 வரம்கொடுக்க வந்த  தேவதையிடம்
                                                 சொன்னேன்.
                                                 அதிசயத்துடன் பார்த்தது
                                                 "வரம் மறுப்பது அறிவீனம்
                                                  முட்டாளே!
                                                  சிறகுகளின் பலம் அறியாய்
                                                  மறுக்காமல் அணிந்து கொள்
                                                  அனைவரையும்
                                                  அண்ணாந்து பார்க்க வை
                                                  ஆகாயத்தை அள
                                                  இரைச்சல் எழுப்பு
                                                  ஈரக் காற்று அனுபவி
                                                  உரசிப் பார் மலைகளை
                                                  ஊர்களை நோக்கு
                                                  எண்ணிலா ஆசை கொள்
                                                  ஏக்கம் தீர்த்துக் கொள்
                                                  ஐவிரல் அடங்க மறு
                                                  ஒலி பரப்பு
                                                  ஓங்கி உலகள ...."

                                                   சபலப் படுத்தாதே!
                                                   சிறகுகள் வேண்டாம்
                                                   சிக்கனமாய் கூறுகிறேன்
                                                   பறப்பதில் எனக்கு ஆசை இல்லை
                                                   சிறகுகள் என்னை  சிந்திக்க விடாது

                                                   வானில் திரிந்தாலும்
                                                   இரை தேட பூமியில்
                                                   இறங்கித்தானே ஆக வேண்டும்
                                                   களைப்பாற பூமி மரங்கள் தானே
                                                   கை கொடுக்கும்?
                                                   புழுதி ஆயினும்
                                                   எனக்கு மண்தான் பிடிக்கும்
                                                   மண்ணுக்கும்  என்னை பிடிக்கும்
                                                   என் மண்ணின்
                                                   ஒவ்வொரு அங்குலத்திலும்
                                                   கால்தடம் காண்பேன்
                                                   அவை தடங்களல்ல
                                                   எனது அடையாளங்கள் ;
                                                   எதிர்கால ஆவணங்கள்
                                                   
                                                    இன்னமும் ஒன்று சொல்வேன்
                                                    மண்ணில் இருந்து விழுந்தால்
                                                    மீண்டுஎழுந்து
                                                    பின்புற மண் தட்டி
                                                    மறுபடியும்  நடப்பேன்
                                                     விண்ணில் இருந்து விழுந்தால்.....

                                                     சிறகுகள் தேவையில்லை
                                                     சீக்கிரம் போய் விடு தேவதையே!
                                                     வேலை இருக்கிறது

    *********************





    ஞாயிறு, 14 டிசம்பர், 2014

    லிங்கா-ஒரு வித்தியாசமான விமர்சனம்


    இவ்விமர்சனத்தை கூர்ந்து படியுங்கள் . இது ஒரு வித்தியாசமான விமர்சனம் . என்ன வித்தியசம்னு கடைசியில தெரிஞ்சுக்கோங்க.

                                         இணைய வெளியிலும் லிங்கா  லிங்கா
                                         அச்சு இதழிலும் லிங்கா லிங்கா
                                         தொலைக் காட்சியிலும் லிங்கா லிங்கா
                                         வலைப்பதி வனைத்திலும் லிங்கா லிங்கா
                                         லிங்கா காய்ச்சல் பரவிக் கிடப்பதால்
                                         இங்கே நானும் காய்ச்சலில் வீழ்ந்தேன்.
                                         கமர்சியல் உச்சம் தொட்ட லிங்கா 
                                         விமர்சனம் எழுதிட நானும் விழைந்தேன்  

                                        ரஜினியை மட்டும் நம்பும் படம்தான்
                                        ரசனை என்பது அதற்கப் புறம்தான்
                                        தலைவா! தலைவா! குரல்கள் ஓங்க
                                        ஒலித்திடும் விசில்களால்  அரங்கம் அதிர
                                        ரஜினி தோன்றும்  காட்சிகள் எல்லாம்
                                        ரசிகர் பலர்க்கும் கொண்டாட் டம்தான்
                                        முதுமை முகத்தில்  தெரிந்தும்  லிங்கா
                                        பொதுவாய் கண்கள் உணர்வது 'யங்'காய்

                                        சொந்த செலவில் அணையைக் கட்டியும்
                                        நொந்து போக  வைத்தனர் சதியால்
                                       ஆண்டுகள் பலவும் கடந்து போயின
                                        மீண்டும் அணையை காப்பாற் றிடவே
                                        பேரன் ரஜினியை அனுஷ்கா மூலம்
                                        பேரிடர் தீர்க்க அழைப்பது கதையாம்
                                        கலெக்டராய் வந்து கலக்கும்  ரஜினி
                                        கலங்கவும் வைப்பது கதையில் நன்று
                                        இளைய ரஜினி நண்பர் களுடனே
                                         வளைய வருவது கலகல கலகல

                                         ரத்தின வேலுவின் காமிரா காட்சிகள்
                                        முத்திரை பதிக்குது சித்திரை நிலவாய்
                                         உண்மை அணையைப் பார்ப்பது போலே
                                         கண்முன் அணையை  நிறுத்திய தருமை
                                         கட்டிய கலைஞனை கவிதையில் வாழ்த்தலாம்
                                         கெட்டியாய் பிடித்து கைகளை குலுக்கலாம்
                                         
                                        ஆறே  மாத அவகா சத்தில்
                                        ஊரே போற்றும் படைப்பை அளிப்பது
                                        யாரால் முடியும்;முடித்தார் ஒருவர்
                                        வேறு யார்? கே.எஸ்.ரவிகுமார் அவரே
                                        நிறைகள் மட்டும் நெஞ்சில் நிற்பினும் 
                                        குறைகள் பலவும் கூறிட முடியும் 

                                        புதையல் போல ரஜினி கிடைத்தும்
                                        அதனை தவற விட்டு விட்டனரோ
                                        புதுமை ஏதும் இல்லை என்றாலும்
                                        பதுமை போல அனுஷ்கா , சோனா(க்ஷி)
                                        வந்து போயினர் கிளு கிளுப் பாக
                                        சிந்தை முழுதும் ஜிலு ஜிலுப்பாக 

                                       முன்கதை மிதமாய் செல்லும் ரயில்போல்
                                       பின்கதை கொஞ்சம் பரவா யில்லை
                                        நகைச்சுவைக் காக சந்தானம் இருந்தும்
                                       பகைச்சுவை கொஞ்சம் பஞ்சம் மென்பதால்
                                       சுறுசுறுப் புடனே ரஜினி நடித்தும்
                                       பரபரப் பின்றி  படம் செல்கிறதோ?
                                       ஆஸ்கார்  ரகுமான் இசையமைத் திருக்கிறார்
                                       பாஸ்மார்க் மட்டுமே வாங்கி இருக்கிறார்
                                        நண்பா பாடல் பாலுவின் குரலில்
                                       தெம்பு  குறைவாய் இருக்கிறதென்பேன்
                                        படமிது சூப்பர் என்றே கொள்வோம்
                                       அடுத்தது இதைவிடசுமாராய்  இருந்தால்


    *****************************************

    பாஸ்! என்ன வித்தியாசம்னு  கண்டு பிடிச்சீங்களா?  

    ஒண்ணு  இது கவிதை(?)  நடையில இருக்கு 
    இன்னொண்ணு  ரசிகர்கள் கோவிச்சுக்கலைன்னா சொல்றேன் 
    நான் இன்னும் படம் பாக்கல பாஸ் !  ஹிஹிஹிஹி 
    யாரும் அடிக்க வந்துடாதீங்க . ஒரு  வாரம் நான் எஸ்கேப் 

    நன்றி : தொலைகாட்சி,வார இதழ்கள்,, நாளிதழ்கள் ,இணைய இதழ்கள்,வலைப்பூக்கள்

    *****************************************************************


    கொசுறு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவிதையில் ஒரு படத்தின் விமர்சனத்தை எழுதி இருந்தேன்.பொழுது போகலன்னா படிச்சு பாருங்க

    வியாழன், 11 டிசம்பர், 2014

    நதிகள் இணைப்புக்கு முதல் குரல் கொடுத்தவன்

             
                                (இன்று பாரதியின் பிறந்த நாள்) 

     நான் +2  படிக்கும்போது பள்ளி இலக்கிய மன்றத்தில்  பாரதியின் பிறந்த நாள் விழா கொண்டாடினார்கள். அப்போது பாரதி பற்றி ஒரு கவிதைப் போட்டி வைக்கப் பட்டது. மாலையில் விழா. காலையில் பத்து மணிக்கு வகுப்புகளுக்கு போட்டியில் கலந்து கொள்பவர்கள் உடனே வர வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. குருட்டு தைரியத்தில் நானும் கலந்து கொண்டேன். பாரதி பற்றி எழுத வேண்டும் இரண்டுமணி நேரம் அவகாசம் வழங்கப் பட்டது. கண்ணதாசனின் காலக் கணிதம் என்ற ஒரு கவிதை எனக்கு முழுதுமாக மனப்பாடம். அந்த சந்தத்தை கொண்டு ஏதோ மனதில் தோன்றியதை எழுதிக் கொடுத்தேன். முதல் பரிசு ஒரு மாணவிக்கு. எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.  எனக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
    இதோ அந்த கவிதை. இதனை நான் பதிவெழுத தொடங்கியபோது வெளியிட்டிருந்தாலும் அப்போது அதனை படித்தவர் மிகக் குறைவு என்பதால் மீண்டும் அந்தக் கவிதை(?) உங்கள் முன் (இப்ப  மட்டும் நிறையப் பேர் படிப்பாங்களான்னு கேக்கக் கூடாது!)


                 எட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்
              ஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்

              தோன்றிற்  புகழொடு தோன்றிய தமிழ்மகன்
              சான்றோர் பலரும் போற்றிய கலைமகன்

              முறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்
              நறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்

              தெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்
              நெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்

              பெண்மை பெரிதெனப்  போற்றிச் சொன்னவன்
              உண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்

              தீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்
              நாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்

              காக்கை குருவிகள் நம்மினம் என்றவன்
              கழுதையைக் கூட கட்டி அணைத்தவன்

              சாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்
              வேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்

              தேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்
              ஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்

              கற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்
              அற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்

              சிறுமை கண்டு சீறியும்  எழுந்தவன்
              வறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்

              கண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்
              கண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்

                பாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்
              பதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்

              நதிநீர்  இணைக்க முதல் குரல் கொடுத்தவன்
              அதிக முள்ளதை  பங்கிடப் பகர்ந்தவன்

              இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
              இறந்த பின்னும் நிலையாய்  நிற்பவன்  

    ********************

    புதன், 10 டிசம்பர், 2014

    அது உன்கவலை எனக்கென்ன?

    எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை 
    ....டி.என்.முரளிதரன்

          அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி,  பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

        பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை  வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் மனைவியிடம் சொல்லிக்  கொண்டிருந்தான், "இனி நம் வீட்டில் எலித் தொல்லை இருக்காது. இன்று இரவு ஒரு மசால் வடையை உள்ளே வைத்து எலிப்பொறியை மூலையில் வைத்துவிடு. எலி மாட்டிக்கொண்டுவிடும்"

      தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய எலி வெளியே ஓடிவந்து அங்கிருந்த கோழியிடம் "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

       அதைகேட்ட  கோழி, "ஏ, எலியே! அது உன் கவலை.எனக்கென்ன? எலிப்பொறியில் நானா மாட்டிக் கொள்ளப் போகிறேன்?." என்று அலட்சியத்துடன் சொன்னது.

      வருத்தமடைந்த எலி அருகில் இருந்த வாத்தைப் பார்த்து,"இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" என்று எச்சரித்தது.

       "முட்டாள் எலியே! என்னிடம் ஏன் இதைச் சொல்கிறாய்? அது உன் கவலை எனக்கென்ன?என்னால் உனக்கு உதவ முடியாது, போ!போ!" துரத்தியது வாத்து.

       வேதனையுடன் ஆட்டிடம் சென்று சொன்னது "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை"

       "ஓ! எலியே! உன் நிலை பரிதாபமாகத்தான்  உள்ளது. இருந்தாலுன் அது உன் கவலை. எதற்கும் நீ எச்சரிக்கையாக இரு. மசால் வடை வாசனைக்கு மயங்கி விடாதே!"என்று ஏளனத்துடன் சொல்லி விட்டு தழையைத் தின்ன ஆரம்பித்தது.
        வீட்டு வாசலில் நாய் வாலாட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தது.நாயாவது நம் கவலையை உணர்கிறதா என்று  ," நாயாரே! எச்சரிக்கை! எச்சரிக்கை! எலிப்பொறி ஒன்று புதிதாக வந்துள்ளது தெரியுமா"  என்று எலி நாயிடம் கேட்டது 
    "தெரியும்.அதனால் எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. என்னால் இந்த வீட்டுக் காரனுக்கும் கஷ்டமில்லை. மீதி உணவை எனக்குப் போடுகிறான். அதுவே எனக்கு போதும்  நான் அவனிடம் நன்றியுடன் இருப்பேன். வீட்டைக் காப்பேன். உனக்காக நன் கவலைப் பாட முடியாது.நீ போய் உன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தேடு என்றது 

        என்ன  செய்வது என்று புரியாமல் நின்ற எலி அங்கிருந்த பன்றியைப் பார்த்து, "பன்றியே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" எனக் கூவியது.

        "எலியே! எலிப்பொறியால் என்னை என்ன செய்ய இயலும்.?அதனால் எனக்கு கவலையில்லை.  நான் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். என் உதவியை எதிர்பார்பப்பது வீண்?உன் பிரச்சனையை நீதான் தீர்த்துக் கொள்ளவேண்டும்" என்று சொல்லிவிட்டது பன்றி.

        கடைசியாக பசுவிடம் வந்த எலி, "ஓ! பசுவே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

      "உன்னை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உன்னால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களைப் போல் அவர்களுக்கு நீ உதவியா செய்கிறாய்? அவர்கள் சேர்த்து வைத்ததை எல்லாம் தின்று விடுகிறாய். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறாய். உன்னை அவர்கள் கொல்ல  நினைப்பது நியாம்தானே! உன் தலைவிதி அவ்வளவுதான்!" என்று கிண்டலடித்து சிரித்தது பசு.

       யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் இரவு தூங்காமல் எச்சரிக்கையுடன் விழித்திருந்தது எலி.
          
       நடு இரவில் திடீரென்று  எலிப்பொறி "டப்" என்று  ஒரு  சத்தம் கேட்டது. எலி பொறியில் மாட்டிக்கொண்டிருக்கும் என்று நினைத்து வீட்டுக்காரனின் மனைவி எலிப்பொறியை எடுக்க சென்றாள். அதில் ஒரு நச்சுப் பாம்பின் வால் பொறியில் மாட்டிகொண்டது. அதை அறியாமல் பொறியைத் தொட, பாம்பு தீண்டிவிட்டது. வீட்டுக்காரனின் மனைவி அலற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வீட்டுக்காரன். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.
      
      கோழி சூப் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்றுவிடும் என்று யாரோ சொல்ல, அதைகேட்ட வீட்டுக்காரன் தான் வளர்த்த கோழியைக் கொன்றான் சூப் வைத்து சாப்பிட. ஆனாலும் மனைவியின் நிலையில் முன்னேற்றம் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள்,நண்பர்கள்  என்று தினந்தோறும் ஒரு பெருங்கூட்டம் அவனது மனைவியைப் பார்க்க வந்து கொண்டிருந்தது .
       வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக வாத்துகளைக் கொன்றான். அதுவும் போதாமல் ஆட்டையும் இறைச்சிக்காக கொன்றுவிட்டான். தூக்கி எறிந்த ஆட்டின் எலும்புத் துண்டுகளை கடித்து தின்ற  நாயின் தொண்டையில் எலும்பு சிக்கிக் கொண்டு விக்கி விக்கி இறந்து போய்விட்டது. மனைவியின் சிகிச்சைக்கு செலவு அதிகமாகிக் கொண்டே போனது .  பன்றியை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டான்.

      எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனாள். ஈமச் சடங்கிற்கும் அதன் பின் நிகழ்வுகளுக்கும்  பணம் இல்லாதால் வேறு வழியின்றி தான் வளர்த்த மாட்டை மாட்டிறைச்சி வியாபாரியிடம் அடிமாடாக விற்றுவிட்டான்.

        இவை  அனைத்தையும்  வீட்டுக்குள்ளிருந்து   வேதனையுடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்த எலி "நான் மட்டும்தான் ஆபத்தில் இருக்கிறேன் என்று நினைத்து எனது எச்சரிக்கையை இவர்கள் அலட்சியப் படுத்தினார்களே! எனக்கு வந்த ஆபத்து இவர்களை அல்லவா பலி கொண்டுவிட்டது." என்று சொல்லி அழுதது.

    "பிறர்  ஆபத்தில்  இருக்கும்போது துன்பம் அவர்களுக்குத்தானே! அதனால் நமக்கென்ன என்று சுயநலத்துடன் இருக்கிறோம். அத்துன்பம் ஏதேனும் ஒருவகையில் நம்மைத் தாக்கும்போதுதான் உண்மையை உணர்கிறோம்."
    எலி  எனக்கு சொன்ன பாடமிது. இல்லை! இல்லை  எலி  எனக்கு சொன்ன வேதமிது.

    டி.என்.முரளிதரன்

    **********************************************************************************************************************************