என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 30 ஜனவரி, 2015

கோட்சேயின் இறுதி நாட்கள்.


இந்தப் பதிவை எழுத தொடங்கும்போது நேரம் மாலை 5.30  மணி  67 ஆண்டுகளுக்கு முன் இதே நேரத்தில் டில்லி பிர்லா மாளிகையில் கோட்சே என்ற மத வெறியனின் துப்பாக்கி  குண்டுகள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. அகிம்சையின் மனித உருவம் சரிந்தது. உலகத்துக்கு அமைதி வழியை கற்றுத் தந்த அண்ணலின் சகாப்தம் நிறைவுற்றது. குலுங்கியது இந்தியா. கலங்கிக் கண்ணீர் விட்டது உலகம்.

   ஆனால் கலங்காமல் நின்றான் கோட்சே. காந்தியை சுட்டுமுடித்ததும் தப்பிக்க முயலவில்லை. காந்தியைக் கொன்றதில் எனக்கு கொஞ்சமும் குற்ற உணர்வில்லை என்று கூசாமல் நீதி மன்றத்தில் கூறினான். மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் காரணம் காட்டி இந்துக்களுக்கு துரோகம் செய்தவர் காந்தி. பிரிவினையின் போது இந்துக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை தீர்க்க சிறிதும் முயலவில்லை மாறாக முஸ்லீம்களுக்கு எந்த துன்பமும் நேரக் கூடாது என்று பிரச்சாரம் செய்தார் காந்தி ...  என்றல்லாம் காந்தியின் மீது குற்றசாட்டுகளை சுமத்தி தன் கொடுஞ் செய்கையை நியாயப் படுத்தினான்.
    தீவிர இந்துக்கள் காந்தியின் கொள்கைகளை வெறுத்தனர். என்னதான் முஸ்லீம்களை ஆதரித்தாலும் அவர்களின் முழுமையான ஆதரவும் காந்திக்கு இருந்ததாகத் தெரியவில்லை 
   சிறப்பு நீதி மன்றம் கோட்சேவுக்கும் நாராயண் ஆப்தேவுக்கும் தூக்கு தண்டனை விதித்தது.மேல் முறையீட்டிலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது .
சிறையில்  இருந்த கோட்சேவுக்கும் காந்தியின் மகனான ராம்தாஸ் காந்திக்கும் கடித போக்குவரத்து இருந்ததாக கூறப்படுகிறது. மகாத்மாவின் கொள்கைகளை வலியுறுத்தி  ராமதாஸ் கோட்சேவுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். கோட்சேவும் தன தன வாதங்கள்  மூலம் காந்தியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
எப்படி இருப்பினும் கோட்சே மற்றும் ஆப்தேயின் தண்டனையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிகிறது. அவர் தனது கோரிக்கையில் காந்தியடிகள் ஒரு போதும் மரண தண்டனையை விரும்பியதில்லை.இருவரையும் தூக்கிலிடுவது அவரது கொள்களைகளுக்கு எதிரானது அவரது கொள்கையை இழிவு படுத்தக் கூடியது. மரண தண்டணையில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்  என்று வாதாடினார்.
அவர் படேலுக்கு எழுதிய கடித்ததில் "கோட்சேவையும் அவனது கூட்டாளிகளையும் சீர்திருத்த சிறையில் வைத்து திருத்த வேண்டும். தாங்கள் செய்தது மிகத் தவறு என்று உணர செய்ய வேண்டும் ஆர்.எஸ்.எஸ். முறையை பின்பற்றுவதன் மூலம் இந்தியாவையும் இந்து மதத்தையும் காப்பாற்றிவிட முடியாது  என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் . கோட்சேவையும் விநோபாபாவேயும் சந்திக்க செய்து மனமாற்றம் ஏற்படுமாறு செய்யவேண்டும். இதனை ஏற்க இயலாவிடில் கோட்சேயை சிறையில் சென்று பார்க்க அனுமதி தரவேண்டும் அவனது செயல் எவ்வளவு கொடுமையானது என்பதை அவனுக்கு எடுத்துக் கூறி அவரை நல்லவராக மாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும் " என்று குறிப்பிட்டிருந்தார்  கோட்சேவுக்கும் இதன் நகலை அனுப்பி இருந்தார். கோட்சே இது குறித்து 03.6.1949 அன்று ராமதாசுக்கு பதில் எழுதி இருந்தான் அதில்
"என்னால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு எவ்வளவு மனத் துன்பம் ஏற்பட்டு இருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.எங்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக வருந்துகிறேன். ஆனால் மாகாத்மா காந்தியை சுட்டதற்காக நான் எள்ளளவும் வருத்தப் படவில்லை.நாட்டின்  நலனுக்காக நான் செய்தது சரியானது. தூக்கு தண்டனையை மாற்றி குறைந்த தண்டனை விதிப்பதன் மூலம் என் மனதை மாற்றிவிட முடியாது" என்று எழுதி இருந்தான்.
கோட்சேவை சந்திக்க ராமதாஸ் காந்தி அனுமதிக்கப் படவில்லை.அவரது கோரிக்கையும் பரிசீலிக்கப் படவில்லை 
கோட்சேவும் ஆப்தேவும் அமைதியான முறையில் சிறை வாழ்க்கையை கழித்தனர். கோட்சே புத்தகங்கள் படித்தான்.கடைசி நாட்களில் சிறைசகாக்களிடம் தன் செயலுக்கு வருந்துவதாகக் கூறினான் என்று சில கைதிகள் தெரிவித்தனராம்.ஆனால் கோட்சேயின் மன உறுதியை அறிந்தவர்களால் இதனை நம்ப முடியவில்லையாம் .ஆப்தே சிறையில் இந்திய தத்துவம் குறித்த  பத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தான். அதற்கு பகவத் கீதை உட்பட பல்வேறு  நூல்களை படித்து கொண்டிருந்தான் .
   தூக்கு தண்டனை நாளும் நெருங்கியது. மரணம்  குறித்து அச்சமோ கவலையோ கிடையாது என்று கூறி வந்த கோட்சேவுக்கு தூக்கிலிடப்போகின்ற நாளன்று (15.11.1949) முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் குடும்பம் குழந்தைகள் என்று எந்த வழியிலாவது வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று முன்பு ஏங்கிய ஆப்தே இப்போது முகத்தில் எந்தவித அச்சமும் இல்லாதவனாக காணப்பட்டான். 

      தூக்கு மேடை இருந்த இடம் நோக்கி கோட்சே முதலில் நடந்து சென்றான் அவனது நடையில் தடுமாற்றம் இருந்தது. தன் தடுமாற்றத்தை மறைக்க கோஷம் எழுப்பினான் அவனது குரலில் கம்பீரம் இல்லை பின்னால் தொடர்ந்த நாராயண் ஆப்தேவுக்கோ எந்தவித தடுமாற்றமோ பயமோ கடைசி வரை இல்லை. ஒரே மேடையில் இருவரையும் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்படிருந்தது . இருவரும் காபி அருந்தினர். முகத்தில் துணி மூடப்பட்டு  கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கு மேடை முன் இருவரையும் நிறுத்தினர்.குறிப்பிட்ட நேரம் வந்ததும் மேடை சட்டென்று  இழுக்கப்பட்டது . கயிற்றில் தொங்கினர் இருவரும்.ஒரே துடிப்பில் ஆப்தேயின் உயிர் பிரிந்ததாகத் தோன்றியதாம் ஆனால் கோட்சேவின்  உடலோ 15 நிமிடங்களுக்கு துடித்து பின்பு அடங்கியது .இருவரின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது. காந்தியின் மரணம் உலகை உலுக்கியது 

    காந்தியைக் கொன்றதில் அவர்களுக்கு கிடைத்து என்ன? அவர்களது நோக்கம் நிறைவேறி  விட்டது.  .ஆனால் காந்தியின் மீதான வன்மம் அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும் கோட்சே குடும்பத்தார்க்கு எள்ளளவும் குறையவில்லை என்று கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேவை சந்தித்த பின்  தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் டொமினிக் என்பவர்.
     காந்தி நினைத்திருந்தால் அவரது மரணத்தை தவிர்த்திருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. காந்தி சுடப்பட சில நாட்களுக்கு முன்னதாக பிர்லா மாளிகைக்கருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.  அதற்குப் பின் பிர்லா மாளிகையில் உள்ளே நுழைபவர்களை சோதனை செய்தே அனுப்ப வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். காந்தியோ பிரார்த்தனைக்காக வருபவர்களை சோதனை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்தார். அது கோட்சே உள்ளே துப்பாக்கியுடன் நுழைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது .

பெர்னாட்ஷா காந்தியின் இறப்பின்போது  விடுத்த இரங்கல் செய்தி  "நல்லவராக இருப்பது அபாயகரமானது  என்று காந்தியின் மரணம் நமக்கு கூறுகிறது.காந்தியைப் பற்றி நினைத்தால் இமயமலைதான்  நினைவுக்கு வருகிறது  என்றார் . உண்மைதான் போலும் 

கோட்சேவுக்கு கோவில் கட்டப் போகிறர்கள் என்ற செய்தியை பத்திரிகைகளில் பார்த்தேன். எல்லோரையும் போல நானும் அதிர்ந்துதான் போனேன். 
பக்தர்களே! குஷ்பூக்களுக்குக் கூட கோவில் கட்டிக் கொள்ளுங்கள் . பாதகமில்லை. தயவு செய்து கோட்சேக்களுக்கு வேண்டாம் 


*********************************************************************************

புதன், 21 ஜனவரி, 2015

இந்த புத்தககக் கண்காட்சி பாத்தா சிரிப்பு வரும்



இந்த வருட புத்தகக் கண்காட்சி இன்னைக்கு  முடியப் போகுது . புத்தகக் கண்காட்சி பத்தி ஒரு பதிவு போட்டாச்சி. இன்னொன்னு என்ன போடலாம்னு யோசிச்சேன். விகடன்ல சீசன் ஜோக்ஸ் போடுவாங்க .ஆனா புக் ஃபேர் பத்தி போட்டாங்களான்னு தெரியல . அவங்க போடலன்னா என்ன? நமக்கு நகைச்சுவை உணர்வு இருக்கான்னு ரொம்ப நாளைக்கப்புறம் சோதிச்சி( நியாயமா பாத்த உங்கள சோதிச்சி பாத்தேன்னுதான் சொல்லணும்)  பாத்தேன். சிரிக்க ட்ரை பண்ணுங்க . 
பகவான்ஜி  மன்னிப்பாராக 
சிரிப்பு வந்தா சிரிங்க! . வரலைன்னாலும் சிரிங்க! 



அந்த எழுத்தாளரோட  புத்தகத்தை கேட்டுவாங்க  அவ்வளவு பேர் வந்திருக்காங்களே! அவர் ஏன் கோபப் படறார்?
அவங்க எல்லாம் பழைய புக் பேப்பர் வாங்கறவங்களாம்
*******************************************************************************************************

இவங்க யாருன்னு தெரியல இல்ல! .அப்படியே
மெயின்டைன் பண்ணுங்க  ஹிஹி
வாசகர் சார்! நீங்களே சொல்லுங்க அந்த டாக்டர் செஞ்சது நியாயமான்னு?

அப்படி என்ன சார் செஞ்சாரு?

தூக்க மாத்திரைக்கு பதிலா நாங்க எழுதின புத்தகங்கள பிரி்ஸ்க்ரிப்ஷன்ல  எழுதித்தராராம் .

*************************************************************************


ஒவ்வொரு கடை  முன்னாடியும் ஏகப்பட்ட கூட்டம் இருக்கே ஆனா யாரும் புக் வாங்கற மாதிரியே தெரியலேயே!

அவங்க வாங்க வந்தவங்க இல்லையாம்.புக் எழுதின எழுத்தாளர்களாம்

*********************************************************************************



அவர் பலவருஷமா ஒரு சஸ்பென்ஸ் நாவல் எழுதிக்கிடிருக்காராமே. அப்படி என்ன சஸ்பென்ஸ் அதுல இருக்கும்?

அந்த நாவல்  எழுதி முடிப்பாரா முடிக்க  மாட்டாராங்கறதுதன் சஸ்பென்சாம்



************************************************************

பப்ளிஷர்சார்! நான் எழுதின புத்தகத்துக்கு  ராயல்டீ கொடுக்கறேன்னு சொல்லிட்டு சிங்கள் டீ குடுக்கறீங்களே! நியாயமா

சார்! தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க! ராயல் டீக்கடையில் இருந்து                வாங்கற டீயைத்தான் நாங்கள்     ராயல்டீன்னு சொல்லுவோம்


*********************************************************************************


இதையும் படியுங்க!

சனி, 17 ஜனவரி, 2015

புத்தகக் கண்காட்சியில் பழ.கருப்பையாவின் கலக்கல் பேச்சு


    2015 புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. எப்போது போகலாம் என்று முடிவு செய்யவில்லை. கவிஞர் முத்துநிலவன் அவர்கள் 13 ந்தேதி வருவதாக தெரிவித்திருந்தார். அதனால் அன்றே போகலாம் என்று முடிவு செய்தேன். முதலில் ஒரு சுற்று சுற்றி வந்து புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு இன்னொரு நாள் வரும்போது வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.  தினந்தோறும் புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல்  குடும்பத்துடன் செல்லும்  நண்பர் கணேசன் அன்று காய்ச்சல் காரணமாக வர இயலாது என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் புத்தகக் கண்காட்சியை அடைவதற்குள் அங்கு வந்து விட்டிருந்தார். அவரது ஆர்வம் அசாதரணமானது.  வாயிலில் இருந்து கண்காட்சி நடக்கும் இருக்கும் இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.

   நுழைவுக் கட்டணம்  10 ரூபாய். எல்லா நாட்களுக்கும் சேர்த்து  50 ரூபாய் சீசன்  டிக்கட்டாம் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

   கவிஞர் முத்து நிலவன்அவர்களை அன்னம் பதிப்பக ஸ்டாலில்  சந்தித்தேன். அவரது  தற்கால கல்வி நிலையை அழுத்தமாக  ஆய்வு செய்யும் அருமையான கட்டுரைகள் அடங்கிய  "முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!"  நூலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொன்னார் . பதிவர்கள் மு.கீதா , மஹா சுந்தர் ஆகியோரிடமும் பேச முடிந்தது  மகிழ்ச்சி.
      நானும் ஒரு ரவுண்டு வந்து விட்டு ஒரு சில புத்தககங்களை வாங்கிக் கொண்டு சீக்கிரம் வீட்டுக் போய் விடலாம் என்று வெளியே வந்தேன்
வெளியே அரங்கில் பேசிக்கொண்டிருந்தார் பழ கருப்பையா.அவர் பேச்சை கேட்கும் நோக்கம் இல்லை . சுற்றி வந்த களைப்பு போக சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் புறப்படலாம் என்று காலியாக இருந்த நாற்காலியை  என் பக்கம் நகர்த்தினேன்.
   ஆர்வமின்றி இருந்த எனது கவனத்தை ஈர்த்தது பழகருப்பையாவின் பேச்சு. அவர் இப்படிப் பேசுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கலக்கு கலக்கினார் என்றுதான் சொல்லவேண்டும். (இதற்கு முன்னர் இதே போல ஜகத் ரட்சகனைப் பற்றி அபிப்ராயம் கொண்டிருந்தேன். ஒரு முறை அவரது பேச்சை கேட்க நேர்ந்தது.அவரது பேச்சாற்றல்  கண்டும் அசந்து போனேன்.)   ஏராளமான  நூல்களைப் படித்திருக்கிறார் என்பதை அவர் பேச்சு எடுத்துக் காட்டியது. கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரையும் தன பேச்சால் கட்டிப் போட்டார். நான் அறிந்தவரை அவர் பேச்சை முடிக்கும் வரை யாரும் எழுந்து போகவிலை. நானும்  பேச்சு நிறைவடைந்த பிறகே எழுந்தேன். . அருமையான எளிய தமிழில் கோர்வையாக நகைச்சுவையுடன் பேசி அவ்வப்போது கைத்தட்டல்கள் பெற்றுக் கொண்டார் 
    பழ கருப்பையா ஒரு எம். எல்.ஏ. அதிமுகவை சேர்ந்தவர் . ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்ததாக நினைவு . அவ்வளவே அவரைப் பற்றி நான் அறிந்தது .பொதுவாக அ.தி.மு.க வில் தமிழறிவும் இலக்கிய நயமும்  கொண்ட பேச்சாளர்கள் இல்லை என்றுதான் கருதி வந்தேன். அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டி இருந்தது.பைபிள் குர்ரான் மகாபாரதம் என்று சகலத்திலும் இருந்து  உதரணங்களை காட்டிப் பேசினார் . கருப்பையா 
        கடவுளின் கட்டளையை மீறி அவரால் தடை செய்யப்பட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்டதால் ஈடன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பைபிள் கதையை  வித்தியாசமான கோணத்தில் விளக்கினார்.

    இடையில் கலைஞரை தாக்கவும் தவறவில்லை. ஆனால் தனது தலைமையை  துதி பாடாதது வியப்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல நம்பவும் முடியவிலை. பல அரசியல் கட்சிகள் பல்வேறு  தீர்மானங்களை பொதுக் குழுவிலும் செயற்குழுவிலும் நிறைவேற்றுகின்றன. எல்லா தீர்மானங்களும் ஒருமனதாகவே தீர்மானிக்கப் படுகிறதே தவிர   எந்த தீர்மானமாவது விவாதித்து தீர்மானிக்கப் பட்டிருக்கிறதா என்று ஒரு தாக்கு தாக்கினார்.  தலைமைக்கு விசுவாசமாக இருக்க, எதற்கும் தலை ஆட்டுதல் நமது மரபாக இருக்கிறது.எதிர்கருத்தும் மாற்றுக் கருத்தும் கூறுதல் இங்கு அனுமதிக்கப் படுவதில்லை இது முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்று அழுத்தமாகக் கூறியது ஆச்சர்யத்தை அளித்தது  
    ஒரு கவிஞர் தனது தலைவரின்  பிறந்த நாளுக்கும் சென்று சால்வை அணிவித்து ஆசி பெறுவார் . தனது பிறந்த நாளுக்கும் அவரை சந்தித்து ஆசி பெறுவார். இது என்ன விசித்திரம் என்று வைரமுத்துவை ஒரு பிடி பிடித்தார்

 கண்டதை படித்துப் பண்டிதன் ஆக முடியது. நேரம்தான் விரயமாகும். அதனால் கண்டதைப் படிக்காதீர்கள்..தேர்ந்தெடுத்துப் படியுங்கள். காந்தி அண்ணாதுரை அம்பேத்கார் போன்ற அறிஞர்கள்  படித்த நூல்களை நானும் படித்தேன். ரஸ்கின் எழுதிய Unto this Last என்ற புத்தகம்தான் காந்தியின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவே அவரை மகாத்மாவாக மாற்றியது. 
அவர் பகவத் கீதையை மட்டும் படிக்கவில்லை.உலகில் உள்ள சிறந்த நூல்களை படித்தார். டால்ஸ்டாயின் நூல்களை படித்தார். மற்றவர்களுக்கும் காந்திக்கும்  என்ன வித்தியாசம் . அவர் என்ன சொன்னாரோ அதன்படி வாழ்ந்தார் என்பதை எடுத்துரைத்தார் பழ.கருப்பையா.

  பழங்கால அரசர்கள்  பல்வேறு பொருட்கள்,குதிரைகள்,மதுவகைகள்  இறக்குமதி செய்தார்கள், யவனத்தில் இருந்து  அழகிகள் மன்னனுக்கு தங்கக் கோப்பையில்  மதுவை அளித்தனர் என்றெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன். ஆனால் அதே சமயத்தில் அந்த நாடுகளின் அறிவை இறக்குமதி செய்யத் தவறி விட்டனர் என்று குற்றம் சாட்டினார். அதனால் பல ஆண்டுகள் பின் தங்கி விட்டோம் ஆங்கிலேயர்கள் வந்து நமக்கு பாடம் சொல்லித் தர வேண்டியதாய் இருந்தது. அவர்களிடம் இருந்து எதைப் பெறவேண்டுமோ அதனைப் பெற்றிருந்தால் நமது நாட்டின்  முன்னேற்றம் பல்லாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்கும் என்றார் 
நல்ல புத்தகங்களை, உலகை உலுக்கிய புத்தகங்களை தேடிப் பிடித்துப் படியுங்கள். அப்படி நிறையப் படிக்க முடியவில்லை என்றால் திருக்குறளாவது படியுங்கள்  என்று கேட்டுக் கொண்டார் 
 டால்ஸ்டாயின் நீதிக் கதை ஒன்றை சொல்லி பேச்சை  நிறைவு  செய்தார் அந்தக் கதை எனக்கும் பிடித்திருந்தது. இன்னொரு சமயத்தில் பகிர்கிறேன்.

   ஒவ்வொரு நாளும் பல பிரபலங்கள் பல்வேறு தலைப்புகளில்  பேச பபாசி (BAPASI)ஏற்பாடு செய்வது வழக்கம்தான் என்றாலும் ஒரு முறை கூட இருந்து கேட்டதில்லை . நூலறிவும் அனுபவமும் நிரம்பப் பெற்றவர்களின் பேச்சைக் கேட்பது கற்றுத் தெரிந்துகொள்வதைவிட பயன் தரக் கூடியது. சில நூல்களை படித்திருப்போம். அதன் சிறப்பு என்னவென்று தெரியாமலே போய்விடுவது உண்டு.அதை அறிந்தார் எடுத்துரைக்கும் போது நாம் இதை கவனிக்காமல் போனாமே என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு. கற்றலின் கேட்டல் இனிது என்று வள்ளுவன் சும்மாவா சொன்னான்?. இனி கற்றலோடு கொஞ்சம் கேட்டும் வைக்கவேண்டும் 

********************************************************************************

கொசுறு: 1. புத்தகக் கண்காட்சி வலை தளத்தில் சென்னை புத்தகக் காட்சி,2015-அரங்கு பட்டியல்/Stall List   பட்டியலை பார்த்தீர்களா? புரிந்தவர்கள் சொல்லவும் . Lay Out map ஒன்றும் உள்ளது. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டேன். ஒன்றும் புரியவில்லை கீழுள்ள இணைப்பை பார்த்துவிட்டு சொல்லுங்கள் 

  2. பிரபல பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் மலாலா  "ஆய்த எழுத்து"  கிழக்கு பதிப்பகத்தின் top 10 விற்பனையில் இடம்  பெற்றுள்ளதாக முகநூல் தகவல் தெரிவிக்கிறது . வாழ்த்துக்கள் ரஞ்சனி மேடம் 

  3. உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் மனுஷ்யபுத்திரனும் கேட்பவர்களுக்கு நூல்களில் கையெழுத்திட்டு தந்து விற்பனையை அதிகரித்துக் கொண்டிருந்தனர் .
   4. உள்ளே  10 ரூபாய் விற்ற டீ அடுத்த நாள் 12 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
  5. ஜீ டிவியினர் நீங்கள் படித்துக் கிழிக்காவிட்டாலும் பரவாயில்லை.               இந்த    தினசரி காலண்டரை யாவது கிழியுங்கள் என்று எல்லோருக்கும்      இலவசமாக  தினசரி   காலண்டரை வழங்கிக் கொண்டிருந்தனர்.

  6.புத்தகக் காட்சி நடக்கும் தினங்களில்  என்றைக்கு சென்றாலும் சென்னை பதிவர்கள் பாலகணேஷ், சிவகுமார், சீனு,கண்ணதாசன்,,புலவர் ராமானுசம் ஐயா, கவியாழி கண்ணதாசன், ஆரூர்  மூனா,இவர்களில் ஒருவரையாவது காணமுடியும். இம்முறை ஏனோ சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை

****************************************************************************



ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சாரு நிவேதிதா+தருண் தேஜ்பால்+புதிய எக்சைல்


    கடந்த திங்கள்(05.01.2015) மாலையில் அலுவலகத்திலிருந்து புறப்படும்போது  ஒரு தொலைபேசி. சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்கிறேன் வருகிறீர்களா என்றார்  கணேசன். உடன் பணியாற்றுபவர்; நூல்கள் இலக்கியம் வலைப்பதிவு என்று பேசும் ஒரே அலுவலக ந(ண்)பர். சென்னையில் எங்கு நடந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் செல்பவர்.  நிகழ்ச்சி  முடிந்து வீடு திரும்ப நெடு நேரம் ஆகி விடுகிறது என்பதால் அவர் அழைக்கும் போதெல்லாம்  தவிர்த்து விடுவேன். இம்முறை ஆர்வம் மேலோங்க இருவரும் காமராஜர் அரங்கத்தை அடைந்தோம் நிகழ்ச்சி தொடங்கப் படவில்லை.வெளியே சாருவின் பிரதான சீடர் அராத்து இங்கும் அங்கும் உலாத்திக் கொண்டிருந்தார். சாரு வெளியே நின்று கொண்டிருக்க  டீயும் சமோசாக்களும் விநியோகிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சாரு ஒரு வி.ஐ. பிக்காக காத்திருக்க அந்த நபரும் வந்து சேர அவரை வரவேற்று உள்ளே அழைத்து செல்லப்பட்டார். அழைப்பிதழ் பார்க்காததால் அவர் யாரென்று சட்டென்று அறிய முடியவில்லை. ஆனால் பார்த்த முகமாக இருந்தது. நண்பர் சொன்னதும் தெரிந்தது.அட!   தெகல்கா புகழ் தருண் தேஜ்பால். 

   அவசரமாக  டீ சமோசா சாப்பிட்டு விட்டு நாங்களும் அரங்கில் நுழைந்தோம். எஸ் ராமகிருஷ்ணன் மனுஷ்யபுத்திரன் (எழுத்தாளர் பாலகுமாரனும் வந்திருந்தார்) போன்ற பிரபலங்கள் முன் வரிசையில்  அமர்ந்திருக்க அவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு இடம் பார்த்து அமர்ந்தோம். உரைக்கும் அளவுக்கு ஏ.சி இருந்தது. நிறைய  கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அரங்கம் முழுதையும் ஒரு நோட்டம் விட்டேன். 500 பேர் இருக்கலாம். கொசுக்களுடன் சேர்ந்து 1500 ஐ தாண்டும். மேடையின் பின்னணியில் சாரு விதம் விதமான தோற்றங்களில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார். எல்.சி.டி ப்ரொஜக்டர் தயாராக இருந்தது. ஏதோ நூல் பற்றி ஏதோ காட்டப் போகிறார்கள்  என்று நினைத்தேன். 

   அராத்து தொகுப்பாளர்களாக மூவரை அழைத்தார். முதலில் வந்தவர் வெண்பா என்று நினைக்கிறேன். தொகுத்தளிக்க வந்த  வெண்பா இதோ இந்த படத்தை பாருங்கள் இதுதான் சாருவின் வாழ்க்கைமுறை என்றார். நான் ஏதோ சாருவின் இளவயது வாழ்க்கையை  பேசப்போகிறது அந்த வீடியோ  என்று நினைத்தேன். ஆனால் இரண்டு  சுஃபி பாடல் ஒளி பரப்பப்பட்டது . புரியாத மொழியில் பாடல் இருந்தாலும்  இசையும் தாளமும்  நன்றாகவே இருந்து , ஆனால் பாடலின் நீளம் அதிகமாக இருந்ததால் எப்போது முடியும் என்று காத்திருந்தேன்.  இதற்கும் சாருவுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் புரியவில்லை. இது இந்த நிகழ்ச்சிக்கு அவசியம்தானா என்று தோன்றியது   இசையும்  பயணமும்  எனக்கு மிகவும் பிடித்தமானது என்று பின்னர் தனது பேச்சின்போது குறிப்பிடுவதற்காகவே இது  காட்டப்பட்டது என்று இதன் தாத்பர்யத்தை உணர்ந்தேன்.

    தருண் தேஜ்பால், சன் டிவி விவாத மேடைநடத்தும் நெல்சன்,அமிர்தம் சூர்யா , ஆர். ராமகிருஷ்ணன்(எஸ்.ராமகிருஷ்ணன் அல்ல)  மற்றும் சாரு மட்டுமே மேடைக்கு அழைக்கப்பட்டனர். மனுஷ்ய புத்திரன் எஸ்.ராமகிருஷ்ணன் மேடையில் அமரவில்லை என்பதால் இவர்கள் புதிய எக்சைல் பற்றிப் பேசப் போவதில்லை என்பது உறுதியானது . 

  நூல் வெளியிடுமுன் அராத்து "சாரு! தருண் தேஜ்பாலை இந்த நிகழ்ச்சிக்கு எப்படி அழைத்தீர்கள்? உங்களுக்கும் அவருக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது"  என்று கேட்க, "தருண் ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்ல சிறந்த நாவல் ஆசிரியர் என்றும் குறிப்பிட்டார் சாரு தனது zero டிகிரி நாவலை ஏதோ விருதுக்கு தேஜ்பால் பரிந்துரைத்ததாகக் சொன்னார்.  தேஜ்பாலின் The Alchemy of desire ( இந்த நாவலைப் பற்றிய சுவாரசியமான குறிப்பு பதிவின் இறுதியில் உள்ள கொசுறுவில் காண்க)  நாவலை படித்துவிட்டு  அதன் தாக்கத்தில் தன்னுடைய பாணியில் எக்சைல் நாவலை விரிவாக எழுதியதாக  குறிப்பிட்டார்

    வெளிநாட்டிலிருந்து வந்த வாசகர் ஒருவருக்கு  புதிய எக்சைல் நூலை வழங்கி வெளியிட்டார் தருண் தேஜ்பால். இன்னும் சிலருக்கு இந்த நூலை வழங்க விரும்புவதாக  சாரு தெரிவிக்க  அவர்கள் மேடைக்கு அழைக்கப் பட்டனர்.

    ஒவ்வொருவராக சிறு குறிப்புடன் பேச அழைத்தார் ஸ்ட்ரைட்னிங் செய்யப்பட தலை முடி முன்னால் பின்னால் தொங்கம் சிகை அலங்காரத்துடன்   தொகுப்பாளினி "அழகான ராட்சசி". பெயரில் பாதி உண்மையாகத்தான் தெரிந்தது.. கொஞ்சம் நகைச்சுவையுடன் நன்றாகவே தொகுத்தார் அம்மணி. தருண் தேஜ்பாலுடன் மிதமான கட்டிப்பிடி வைத்தியமும் செய்து கொண்டார்.

  சன் டிவி விவாத மேடை  நிகழ்ச்சியை நடத்தும் நெல்சன் சேவியர் புதிய  எக்சலைப் பற்றி பேச வந்தார். எப்போதும் புன்னகையுடன் காணப்படும் நெல்சனைப் பார்த்தால் நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இளைஞிகளின் மனம் கவர்ந்தவராகவும் இருக்கிறார்  என்பது வெண்பாவின் கூற்றின் மூலம் தெரிய வந்தது. பொது மேடைகளில் இவர் பேசிக் கேட்டதில்லை. மனிதர் கலக்கி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். எக்சைலை ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதை அவரது  பேச்சு உணர்த்தியது. தெளிவான தடுமாற்றமில்லாத விறுவிறுப்பான  பேச்சு அனைவரையும் கட்டிப் போட்டது. நூலின் பல்வேறு பாத்திரங்களை சுட்டிக்காட்டி ஒரு ஆய்வே நடத்தி விட்டார். தான் ஏற்றுக் கொள்ளாத சிலவற்றையும் குறிப்பிட்டார். நாவலில் விரவிக் கிடக்கும் செக்சை தவிர்த்துப் பார்த்தால் எக்சைல் ஒரு அற்புதமான நாவல் என்றார் .தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்யக் கூடிய நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

   அடுத்து வந்தார் அமிர்தம் சூர்யா. கவிதை திறனாய்வு செய்வதில் வல்லவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏதோ வேற்று மொழிக் கவிதை ஒன்றை சொல்லி தொடங்கினார். பேச்சு சுமார் அரைமணிநேரம் பெய்த அடைமழையாய் நீடித்தது . சாருவின் எழுத்துகளுக்கு அவர் செய்த ஒப்பீடு அசத்தல். எஸ்.ரா, பாலகுமாரன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் எழுத்து காரில் பயணம் செய்வது போல.சாருவின் எழுத்து அரசுப் பேருந்துப் பயணம் போல . இங்கு எல்லாம் இருக்கும் நல்லவை அல்லாதவை அனைத்தும் உண்டு என்பதற்கு உதாரணம் கூறி  விளக்கியதும் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. ஆனால் வீட்டில் மனைவி குழந்தைகள் எதிரிலும் படிக்கும் அளவிற்கு ஒரு நாவலை எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் 

     பின்னர் பேசவந்தார் தருண். அவர் பேச்சை மொழி பெயர்க்க கருந்தேள் ராஜேஷை  அழைத்தார் அராத்து. ஆங்கிலத்தில் பேசியதை புரிந்து கொள்ளமுடியாத யாரும் அங்கு வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அப்படி இருக்கும்போது அதன் அவசியம்தான் என்னவோ?  என்று நினைத்துக் கொண்டிருக்குபோது, ராஜேஷ் ஒவ்வொரு வாக்கியத்தையும் மொழிபெயர்க்க பார்வையாளர்களில் இருந்து மொழி பெயர்ப்பு தவறு என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார் ஒருவர்.( பெயர் சரியாக நினைவில் இல்லை) டென்ஷன் ஆன அராத்து குறுக்கிட்டவரையே மொழி பெயர்க்க அழைத்தார். அவரது மொழி பெயர்ப்பும் சொதப்பாலாகவே முடிந்தது , பின்னர் மொழி பெயர்ப்பு இன்றி தொடர்ந்து பேசினார் தேஜ்பால். எளிய ஆங்கிலத்தில் அவர் பேசியது அனைவருக்கும் தெளிவாகவே புரிந்தது. சாருவின் சீரோ டிகிரியை படித்து தான் வியந்ததாகக்  குறிப்பிட்டார்.  நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு  கூட்டம் கூடி இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டார். டெல்லியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தினால் மிகவும் குறைவானவர்களே வருவார்கள்; அதுவும் அங்கு வழங்கப்படும் ஸ்காட்சுக்காக. இங்கு ஏதேனும் அவ்வாறு வழங்கப்படுமா என்று கேட்டு அப்ளாஸ் அள்ளிக் கொண்டார். பின்னர் அவருடைய பேச்சு பொதுவான விஷயங்களுக்கு  தாவியது. பண்டைக் காலத்தில் இருந்த இந்தியாவின் நிலை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நிலை இவற்றை ஒப்பிட்டு  ஏதோ GDP சதவீதம் எல்லாம் கூறினார். 
ஒரு வழியாக அவர் முடிக்க பேசவந்தார் சாரு. 

   ஆங்கில எழுத்தாளர்களின் நூல்கள்  பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆகின்றன.  தேஜ்பாலின் நாவல் 5 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிறது. தமிழில் 2000 ஆனால் அதிகம் . எஸ் ரா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் பரிசே வாங்கி இருப்பார்கள் என்றார். சரியான மொழிபெயர்ப்பாளர் அமைவதில்லை என்ற தனது வழக்கமான புலம்பலை இங்கும் வெளிப்படுத்தினார். அதற்கு உதாரணம் இங்கு நடந்த மொழிபெயர்ப்பையே எடுத்துக் கொள்ளுங்கள்  என்றார். நடுவே சில எழுத்தாளர்களை  தாக்கினார் . தனது எழுத்தில் ஆழம் இல்லை என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு  அவர் சொன்ன பதில் முகம் சுளிக்க வைத்தது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் கூட எளிதாக வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் 80 க்கும் மேற்பட்ட நூல்கள்  எழுதிய எனக்கு வெளிநாடு செல்ல விசா கிடைப்பதில்லை. வங்கி சேமிப்பில் போதுமான பணம் இல்லை என்பதால் என்றார். அவரது பேச்சில் ஆதங்ககத்தைவிட  பொறாமைதான் அதிகம் தெரிந்தது. எழுத்தாளர்கள்  குறிப்பாக இலக்கியவாதிகள்  தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.  
  5000 ரூபாய் தந்தால்தான் நூலில் கையெழுத்திட்டுக் கொடுப்பேன்,அது பணத்தாசையால் அல்ல எனது மருத்துவ செலவிற்கு என்றார். 
(தற்போது  தனது வலைப் பக்கத்தில் அந்த நிபந்தனையை கைவிட்டதாக   தெரிவித்துள்ளார். )
நேரம் 9 மணியை கடந்து விட்டதால் நண்பரும் நானும் புறப்பட்டு விட்டோம்.  
   புதிய எக்சைல் நூல், அரங்கத்தில் சலுகை விலையில் வழங்கப்பட்டது  . ஆனால் சலுகை விலையே மயக்கம் தரும் அளவிற்கு இருந்தது. விடுமுறை நாட்களில் வைத்திருந்தால் இன்னும் நிறையப் பேர் வந்திருக்கக் கூடும்.  
 சாரு! சாரு! என்று என்று உரிமையுடன் அழைக்கும் வாசகர் வட்டத்தைப்  பெற்றிருப்பது சாருவின் பலம். அவர்களின் உதவியுடன் நூல் வெளியீடு  சிறப்பாகவே நடந்தது என்று கூறலாம் .

***************************************************************************
கொசுறு: 
  1. The Alchemy of Desire  எழுதியதற்காக BAD SEX IN FICTION அவார்டுக்காக தேஜ்பால் பெயர்,  கடைசி 11 பேர் கொண்ட பட்டியலில் இருந்ததாம். இன்னொரு எழுத்தாளர் பரபரப்புக்கு பெயர் போன சல்மான் ருஷ்டி
  2.  Bad Sex in Fiction அவார்டு  2003 இல் வாங்கிய இந்தியர் இன்னொருவர் இருக்கிறார். அவர் ஒரு பெண் எழுத்தாளர் .அனிருத்தா பஹாய் .
  3. இந்த அனிருதா பஹாய் யார் தெரியுமா ? தருண் தேஜ்பாலுடன் சேர்ந்து டெஹல்கா இணைய தளத்தை துவக்கியவராம்
  4. இந்நிகழ்ச்சியில் அமிர்தம் சூர்யா பேசியதை கல்கி இணை ஆசிரியர் ராமகிருஷ்ணன் பேசினார் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது தினமலர் 
  5. புதிய எக்சைல் - இதில் புதிய என்பது மட்டும் எதற்கு? அதையும் நியூ என்றே போட்டிருக்கலாமே. எக்சைல் என்பதன் அர்த்தம் புரிந்தால் நியூ வின் அர்த்தம் புரியாமலா போய் விடப் போகிறது?
**********************************************************************


வியாழன், 8 ஜனவரி, 2015

Custom Domain பெற்றால் சிக்கல் வருமா?

   
    காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா அல்லது என் வேண்டுகோளை தமிழ்மணம் ஏற்றுக்கொண்டதா  என்று தெரியவில்லை.230 க்கும் மேற்பட்ட தமிழ்மணத்தில் இணைக்கப் படாத வலைப்பூக்களின் பட்டியலை வெளியிட்டிருந்தேன். உடனடியாக இவற்றை இணைக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
(பார்க்க பதிவு : மனம் வைக்குமா தமிழ்மணம்)   ஒரு வாரத்திற்கு முன்பாக தமிழ்மண இணைப்புக்காக காத்திருந்த 230க்கும் மேற்பட்ட பதிவர்களின் வலைப்பூக்களை தன் பட்டியலில் சேர்த்துக்கொண்டது. அன்றைய தினம் தமிழ் மண முகப்பு பக்கத்தில் புதியது புதியது என ஏராளமான வலைப்பூக்கள் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது . 2015  நல்ல விதத்தில் தொடங்கி இருப்பதாகக் கொள்வோம்.அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு தொடர்ந்து எழுதவும்  ஊக்கப் படுத்துவோம். தமிழ்மணத்திற்கு நன்றி 

   தமிழ்மணப் பட்டியை மட்டும் இணைத்து விட்டு பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் இருந்த அத்தனை வலைப்பூக்களையும் இனி தமிழ்மணத்தில் இணைத்து பார்வையாளர்களின் எண்ணிக்கையை சற்று உயர்த்திக் கொள்ள முடியும் .

தமிழ்மணம் பற்றிய முந்தைய  பதிவில். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வலைப்பூக்களின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருக்கிறது. அதன் காரணம்
இன்னொரு பதிவில் சொல்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
முதன் முதலில் வலைப்பூ தொடங்குபவர் பெரும்பாலும் இலவச பிளாக்கிங் சேவையைத்தான் பயன்படுத்துவார்கள். கூகிள் வோர்ட்ப்ரஸ் இச்சேவையை வழங்குகின்றன.
ஒவ்வொரு வலைதளத்திற்கும் ஒரு முகவரி உண்டு . அதற்கு டொமைன் என்று பெயர். உதாரணத்திற்கு  www.tnmurali.com. என்பது எனது வலைபூ முகவரி இதனை URL (Uniform Resource Locator) என்றும் கூறலாம்.இதில் tnmurali என்பது domain நேம் ஆகும்.
நான் வலைப்பூ தொடங்கும்போது கூகிள் வழங்கும் இலவச வசதியை பெற்றதால் எனது வலைப்பூ  முகவரி www.tnmurali.blogspot.com என்று இருந்து. இலவசமாக இருந்தால் blogspot என்ற வார்த்தை இணைந்தே இருக்கும். இதே Wordpress மூலம் வலைப்பூ தொடங்கினால்  www.ranjaninarayanan.wordpress.com  என்று இருக்கும். இதனயே வலைப்பூ முகவரி என்று  கூறலாம் ஒருவர் நமது வலைப்பூவை எளிதில் பார்வையிட பிரவுசரின் அட்ரஸ் பாரில் இதனை டைப் செய்தால் அந்த வலை தளத்திற்கு எளிதில் செல்ல  முடியும். நாம் வலைதளத்திற்கு பெயர்  வைத்திருப்போம். அந்தப் பெயரின் பின்னணியில் வலைப்பூ முகவரியே மறைந்திருக்கும். பெயரை தமிழில் வைக்கலாம். ஆனால் வலைப்பூ முகவரி தமிழில் இருக்காது. நமது  வலைப்பூவிற்குள் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு முகவரி(permalink) இருக்கும். அது தானாகவே (Automatic Permalink) உருவாக்கிக் கொள்ளும். விரும்பினால் சில நிபந்தனைகளுக்குபட்டு (custom permalink) நாமே அமைத்துக் கொள்ள முடியும்.
   இலவச ப்ளாக்  வைத்திருப்போர் தன் வலைப்பூ முகவரியை இணையம் பற்றி  அறியாதவரிடம் சொல்ல நேர்ந்தால் blogspot.com ஐ சேர்த்து சொல்லவேண்டும் இதற்கு முன்னர் நான் எனது ப்ளாக் முகவரியை www.tnmurali.blogspot.com. என்று நீளமாக சொல்லவேண்டும். blogspot என்ற வார்த்தையை நீக்கி விட்டு www.tnmurali.com எனது வலைப்பூ முகவரி  எளிமையாக இருக்கும் அல்லவா?  ஆனால்  blogspot என்ற வார்த்தை இல்லாமல் முகவரி வேண்டுமெனில் பணம் செலுத்தி முகவரி பெற வேண்டும் முன்பு blogspot வைத்திருப்போருக்கு  கூகிள் கஸ்டம் டொமைன் வழங்கி வந்தது. தற்போது வழங்குவதில்லை .ஆனால் இதற்கெனவே சில நிறுவனங்கள் உள்ளன.
போன்ற நிறுவனங்களை கூகுள் பரிந்துரை செய்கிறது. இவற்றிடமிருந்து நாம் முகவரி பெற்றுக்கொள்ளலாம். நாம் கேட்கும் முகவரி ஏற்கனவே வேறு  யாருக்கும் அளிக்கப் படாமல் இருந்திருந்தால் நமக்கு கிடைக்கும். இதற்கு ஆண்டு தோறும் ஒரு தொகை செலுத்த வேண்டி இருக்கும் . நான் Godaddy.com இல் இருந்து 600 ரூபாய் செலுத்தி முகவரி பெற்றேன். அவை ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் பின்னர் அதனை முடியும் காலத்திற்குள் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் .
இவ்வாறு Customdomain மாற்றுவதால் சில அனுகூலங்கள் உண்டு  இவை பற்றி பின்னர் எழுதுகிறேன். ஆனால் இப்படி பெயர் மாற்றியதால் தமிழ் மணத்தில்  வலைப்பூவை இணைப்பதில் சிக்கல் எழுவதுண்டு. காரணம் முன்னதாக தமிழ்மணத்தில் பழையவலைப்பூ முகவரியே பதிவாகி இருக்கும். இப்போது இணைத்தால் உங்கள் வலைப்பூ பட்டியலில் இல்லை என்று தெரிவிக்கும். சில தந்திரங்களை கையாண்டு பதிவுகளை இணைக்க வேண்டும். அல்லது நிரலில் மாற்றம் செய்யவேண்டும்.

    அதன் காரணமாக தமிழ்மணத்தில் பழைய  முகவரியை திருத்தி அமைக்க வசதி இல்லை எனவே புதிதாக வலைப்பூ தொடங்கியவர் போல வலைப்பூவை தமிழ்மணத்தில் பதிவு செய்து இணைப்பு அனுமதிக்கு காத்திருக்க வேண்டும் .இதனால் தமிழ்மண தர வரிசைப்  பட்டியலில் முன்னர் இருந்த நிலையில் இருக்க முடியாது. பின்னால் இருந்தான் மீண்டும் வர வேண்டும்.
அவ்வாறு தற்போது  கஸ்டம் டொமைன் பெற்ற சிலர் மீண்டும் தமிழ் மணத்திற்கு விண்ணப்பித்திருந்தனர் . அதனால்தான்  பட்டியலில் பழைய பதிவர்களையும் காண முடிந்தது. 
இந்த சிக்கல் மற்ற திரட்டிகளில் இல்லை . 

****************************************************
புதியவர்களுக்கு சில தகவல்கள்:(எனது அனுபவத்தின் மூலம் அறிந்தவை.

1.தமிழ்மணத்தில் சில குறி சொற்களின்(Labels) கீழ் பதிவுகள் வகைப் படுத்தப் படுகின்றன .அவை நகைச்சுவை, மொக்கை, நையாண்டி, அரசியல்,சமூகம்,அனுபவம்,நிகழ்வுகள்,புனைவுகள்,சிறுகதை ,கவிதை சினிமா,திரைப்படம்,விமர்சனம், சமையல், இவற்றில் பொருத்தமான சிலவற்றை பதிவுகளின் குறிசொற்களாக அமைத்தால் அந்தந்த தலைப்புகளின் கீழ் தமிழ்மண முகப்புகளில் அவை காட்சியளிக்கும் 

2. தமிழ்மண உறுப்பினர்கள் தமிழ்மணப்பட்டை இணைக்கப் பட்ட பதிவுகளுக்கு வாக்களிக்க முடியும் .உங்கள் பதிவுகள் ஏழு வாக்குகள் பெற்றால் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் இடம் பெறும் .

3.வாக்களித்தல், பிரபல பதிவுகளுக்கு பின்னூட்டமிடுதல், உங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் பின்னூட்டம் போன்றவை தமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னேறுவதற்கு காரணிகளாக அமையும்.

4.தமிழ்மண உறுப்பினர்கள் தமிழ்மணப் பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்த வலைப்பூவின் பதிவையும் இணைக்க முடியும்.வலைப்பூ உரிமையாளர்தான் இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

5.  தமிழ்மணம் தானாகவே பதிவுகளை திரட்டுவதாக தெரிவித்துள்ளனர் .
6.தமிழ் 10 ,இன்ட்லி போன்ற திரட்டிகளிலும் உங்கள்  பதிவுகளை இணையுங்கள் 
7. உங்களைக் கவர்ந்த பதிவுகளுக்கு கட்டாயம் கருத்திடுங்கள் வாக்கிடுங்கள் 
8. இன்னொருவர் பதிவை காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள் அப்படி விரும்பினால் எழுதியவரின் அனுமதி பெற்றபின் அவரது வலைப்பதிவு இணைப்புடன் வெளியிட்டு நன்றி தெரிவிக்கவும்.
9.ஆபாசமோ தனி நபர் தாக்குதல்களோ பதிவுகளில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வது நல்லது 
10. கருத்து வேற்றுமை உடையவர்களை  எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை .மறுப்புக் கருத்துகளிலும் நாகரிகத்தை பின்பற்றுங்கள்.
11. உங்கள் முகநூல் டுவிட்டர் நண்பர்களையும் வலைப்பதிவு எழுத தூண்டுங்கள்
12. உங்கள் பதிவுகளை முக நூல் டுவிட்டரிலும் இணையுங்கள் 

தமிழ்மணப் பட்டை வேலை செய்யாதவர்கள் தங்கள் வலைப்பூ முகவரியை  blogspot.in இல் இருந்து  blospot.com முகவரிக்கு ரீ டைரக்ட்  செய்யுங்கள். 

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

**********************************************************
தொடர்புடைய பதிவு 
 மனம் வைக்குமா தமிழ்மணம்)



  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?







  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?
  • செவ்வாய், 6 ஜனவரி, 2015

    திரைஇசையைப் புரட்டிப்போட்ட புயல் ஏ.ஆர்.ரகுமான்



    இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் 48 வது பிறந்த நாள்.  ஆஸ்கார் வாங்கியபோதும் அலட்டிக் கொள்ளாத அமைதி நாயகன். இசையில்தான்  புயல்தானே தவிர் பேச்சிலும் நடத்தையிலும் ஆழ்கடல் அமைதி. அவரைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத வேண்டும் நினைத்திருந்தேன்.எழுதியும் விட்டேன். இன்று வெளியிடலாம் என்று காத்திருந்தேன். இடையில் வல்லினம் இணைய இதழில் திரு அகிலன் என்பவர் எழுதிய ஏ.ஆர் ரகுமான் பற்றி எழுதிய பழைய  கட்டுரையைப் படித்தேன்.அதைப் படித்ததும் இசை அறிவு இல்லாதவன் நான் எழுதிய  கட்டுரை வெறும் வார்த்தைகளாகத் தெரிந்தது,  அந்த கட்டுரை வல்லினம் இணைய இதழின் அனுமதியுடன் இன்கு வெளியிடப் படுகிறது. இதழின் ஆசிரியர் நவீன் அவர்களுக்கு நன்றி 

    மார்ச் 2010 இதழில் வெளியான அந்தக் கட்டுரையை எழுதியவர்  திரு :அகிலன் 
     ( வல்லினம் இதழின் இணைப்பு : http://www.vallinam.com.my/issue15/column4.html
                                          ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

         இன்றோடு சரியாக ஒரு மாதமாக, இரண்டு இசைத்தொகுப்புகள் என்னை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மாறி மாறி ஒவ்வொரு நாளும் அவைகளைதான் கேட்கிறேன். ஒன்று இளையராஜாவின் ரமணா சரணம் சரணம் தொகுப்பின் பாடல்கள் மற்றது விண்ணைத் தாண்டி வருவாயா. விண்ணைத் தாண்டி வருவாயா, கொஞ்சம் ஸ்பெசல். காரணம் மறக்க முடியாத பழைய காதலை திரும்பவும் உயிர்தெழ செய்திருப்பதால். அந்தப் பாடல்களில் இருந்து மீள முடியாமலும் உள்ளேயே அடக்கிக் கொள்ள முடியாமலும், எனது மெல்லிய உணர்வுகளின் எல்லைவரை ஊடுருவி எனது இருப்பைக் கூட இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. காதல் அறிந்தவர்களால் மட்டும்தான் அதை உணரமுடியும். அதிலும் வைரமுத்துவில்லாமல், செயற்கை வரிகள் இல்லாமல் முதல் முறையாக தமிழில் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் மேட்பூசில்லாத உணர்வுகளை அழகாகவும் ஆழமாகவும் சொல்ல முடிந்த இசைக் கவிதை. 
    மொத்த இசைத்தொகுப்பும் காதலிக்குத் தெரியப்படுத்த விரும்பும் ஒரு செய்தி. ஒவ்வொரு பாடலும் வாழ்வின் ஒவ்வொரு தருணம். அவருடைய புகழின் இத்தனை நெருக்குதலுக்குப் பிறகும், நாம் சுவாசிக்க சுத்தமாக அவர் தந்த பிராணவாயு. பாடல்கள் எல்லாமே குளிர் தேசங்களில் கம்பளி ஆடையணிந்த அழகிய காதலி நம்மை அணைத்துக்கொள்ளும் சுகம். 

        ஏ ஆர் ரஹ்மானுக்குப் பிறகான இந்திய இசை, ஒலிவடிவமைப்பில் மிகப் பெரிய புரட்சியை இந்தியாவில் உண்டாக்கியிருக்கிறது. இல்லை யென்றால் இன்றுவரை மிக்ஸிங், மாஸ்திரிங் போன்றவை நமக்கு விளங்கியிருக்காது. அது மட்டுமல்லாமல் மிக்ஸிங், மாஸ்திரிங் கூட இசையமைப்பில் ஒரு அம்சம் என்பதை நிரூபித்து காட்டியது அவர்தான். அதாவது அது இறுதிக்கட்டவேலை என்பதையும் தாண்டி, அது ஒரு கட்டுமானமாக இசையமைப்பில் முக்கியத்துவம் பெற்றது. 

        அவருடைய இசை ஞானம், வாழ்க்கை வரலாறு, இசை தொழில் நுட்ப ஞானம் என்று எல்லோரும் எவ்வளவோ பேசியிருந்தாலும், நான் அவருடன் பழகிய நாட்களில் காலத்தால் அழியாத சில விஷயங்களை நான் கிரகித்து கொண்டிருக்கிறேன். அது இதுவரை பலரும் பேசாதது. காரணம் இது மற்றவர்கள் அறியாததாகக் கூட இருக்கலாம். அவரின் வெற்றி அவருடைய இசைஞானத்திற்கு கிடைத்த வெற்றியென்பதைக் காட்டிலும், வெற்றிக்கான சில அத்தியாவசியக் குணங்களும் கோட்பாடுகளுமாக நாம் என்றென்றும் பேணவேண்டியவைகளுக்கான வெற்றி என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒரு சேதி, இந்த உலகுக்கு, நிகழ்கால, எதிர்கால சமூகத்துக்கு. அதிலும் ஏ ஆர் ரஹ்மானின் வெற்றி, எல்லோருக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கு, வெற்றிக்கான நமது தேடலில், கனவுகளில், போராட்டங்களில் நமது வழிக்காட்டியாக சில அத்தியாவசிய விஷயங்களை சொல்லும் செய்தி. விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் இருக்கும் நமக்கு பல சமயங்களில் பிறரின் வெற்றி உண்மையான உழைப்புக்கான வெற்றியாகத் தோன்றாமல் போகலாம். 
         ஏ ஆர் ரஹ்மானின் விசயத்தில் அதுவல்ல நிஜம். அதை ஓரளவேணும் நெருக்கத்தில் பார்த்து உணர்ந்து கற்றிருக்கிறேன். என்னுடைய வழியில் அவைகளில் சிலவற்றை வழித்துணையாக ஏற்றுகொண்டிருக்கிறேன் என்பதால் அதை இங்கு பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்.
         ஏ ஆர் ரஹ்மானின் மிகப் பெரிய சாதனையாகத் தமிழ் திரையிசையில் நான் பார்ப்பது, பாடல்களில் கவித்துவம் இவரால்தான் மீட்டுவரப்பட்டது. வரிகளால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நிற்பதே கிடையாது. இசையால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நின்றுவிட முடியும். நிகழ்கால நிஜம், இளையராஜா அவர்கள். ஆனால் இசையா வரியா என்று முடிவு செய்யவே முடியாத நிலையில் அந்தப் பாடல்கள் அடையும் உன்னதம், ஏ ஆரின் பாடல்களில் மட்டும்தான் பார்க்க முடியும். அந்த அளவு அவர் தாராளமாகவும், நிபுணத்துவமுடனும், பல்நோக்குப் படைப்பாளியாகவும் செயல்பட்டிருக்கிறார். அதுவரை இத்தகைய பல்நோக்குத் தளத்தில் யாரும் செயல் பட்டதே இல்லை.
    மெட்டுக்களில் சில பகுதிகளை வரிகளுக்கேற்ப மாற்றவதும், வரிகள் சிதையா வண்ணம், மெட்டும் மாற்றப்பட முடியாத பட்சத்தில், பாடகர்களை மெனக்கெட வைத்து அந்த வரிகளை வெளிக்கொண்டுவருவதும், அவருடைய இசையை ரசித்தவர்களால் நிச்சயம் நினைவுக்கூற முடியும். அதிலும் அவருடன் பேசிய தருணங்களில் அவருடன் பணியாற்றிய சில பாடலாசிரியர்களின் போலித் தன்மைகளை முற்றிலும் வெறுத்திருக்கிறார். ஆனாலும் திரும்ப திரும்ப அவர்களுடன் பணிபுரிந்திருக்கிறார், பாடகர்களுடனும் கூட. பிற திறமைகளை எந்த மனத்தடையும் இல்லாமல் அங்கீகரித்திருப்பது, ஒரு வெற்றிக்கு தேவையானவற்றை உணர்ந்து அதை எந்த நிபந்தனைகளுமில்லாமல் ஏற்றுக்கொள்வது அவருடைய அடிப்படை இயல்பாய் இருந்திருக்கிறது. அவரிடமிருந்து அவருடைய பட்டறையில் இருந்து வெளியான இசையமைப்பாளர்கள் பலர், அதே சமயம் அவருடன் மீண்டும் வேலை செய்ய அந்த இசையமைப்பாளர்களுக்கு எந்த தயக்கமும் இன்றி வாய்ப்பளித்திருக்கிறார். 

    ஏ ஆர் ரஹ்மானை நான் முதன் முதலில் பார்த்தது 2001இல். வார்னரின் சார்பாக இந்தியாவில் நான் சந்தித்த இசையமைப்பாளர்களில் முதல் முதலில் நான் சந்தித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். ஐந்து வருடங்கள் கழித்து அவர் தொடங்கிய அவருடைய முதல் இசை நிறுவனமான கே எம் மியூஸிகின் (KM MUSIQ) முதல் வெளியீடான வரலாறு (காட்பாதர்) திரையிசையை வெளியிடும் வாய்ப்பு எனது அகி மியூஸிக் நிறுவனத்திற்கு கிடைத்தது. அவரே அழைத்து கொடுத்த வாய்ப்பு. 2001-ஆம் ஆண்டு சந்திப்பிற்குப் பிறகு அவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. எந்த மின்னஞ்சலாக இருந்தாலும் நிச்சயமாக பதில் எதிர்பார்க்கலாம். சில சமயம் ஒரே வரியில் அல்லது வார்த்தையில் இருக்கும். ஆனால் நிச்சயம் பதில் வரும். 


    உதாரணத்திற்கு, ‘எனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று, ஆகஸ்ட் 2004 இல் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மறுநாள் முபாரக் (வாழ்த்துக்கள்) என்று பதில் வந்தது. இதற்கெல்லாம் அவர் மெனக்கெடமாட்டார், ஒரு வேளை யாராவது அவருடைய வேலையாட்கள் அனுப்பலாம் என்று சந்தேகம் அவ்வப்போது வரும். நவம்பர் 2005இல் அவரை கனடாவில் சந்தித்தப் போது, முதன் முதலில் என்னைப் பார்த்ததும், ‘ஹ்ம்.. வெயிட் போட்டுடீங்க, மகன் எப்படியிருக்கான்’ என்று கேட்டார். நான் கொஞ்சம் அதிர்ச்சியில் பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்து, ‘உங்களுக்கு தானே இடையில் குழந்தை பிறந்துள்ளதாக இ மெயில் அனுப்புனீங்க’ என்றார். அதுவரை அவர்தான் அவருடைய மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புகிறாரா என்ற சந்தேகம் தீர்ந்தது மட்டுமல்ல அன்று அந்த வாழ்த்து அவரிடம் இருந்து போலி பிம்பங்களுடன் வரவில்லையென்பதும் விளங்கியது. 

    அது மட்டுமன்றி, அகி மியூசிக் தொடங்கி நான் வெளியிட்ட இளையராஜாவின் குரு ரமண கீதம், மியூசிக் ஜெர்னி, திருவாசகம் என்று எல்லா குறுந்தட்டுக்களையும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன். எனது முதல் சந்திப்பின் போது எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்து அவைகளின் வரவேற்பையும், விற்பனையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார். எந்த உள் நோக்கமும் இன்றி, போலியாக பழகத் தெரியாதவர் ஏ ஆர் ரஹ்மான் என்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதையெல்லாவற்றையும் விட இந்தியில் கொடி நாட்டியப் பிறகும் வெற்றிக்கான வேட்கையும் எல்லையற்ற கனவுகளுடனும் இன்னமும் முதல் தேர்வு மாணவன் போல் ஆர்வமும் பதைபதைப்பும் உள்ள ஒரு உழைப்பாளி. பேச்சியின் இடையே கனடா தொலைக்காட்சியில் பதின்ம வயதில் உள்ளவர்களை அவர்களுக்கு பிடித்த இசையைப் பற்றிக் கேட்டபோது, திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘இவர்களைதான் (பதின்ம வயதினர்), நமது இசை சென்றடையனும். இவர்கள்தான் இசையின் விற்பனையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பவர்கள், அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடியவர்கள்', என்று சொல்லி தீவிர யோசனையில் கொஞ்ச நேரம் மூழ்கிப் போனார். 

    நான் அவரை கனடாவில் சந்தித்த போது, ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் ரங் டீ பசந்தி (Rang De Basanti) மிக்ஸிங் வேலை, இன்னொரு ஒலிப்பதிவு கூடத்தில் மங்கல் பண்டேயின் (Mangal Pandey) இசைப் பதிவு, மற்றொரு ஒலிப் பதிவு கூடத்தில் வாஜி வாஜி சிவாஜி படப் பாடல். இத்தனையும் ஒரே சமயத்தில் அங்கு நடந்ததன் காரணம், லோர்ட் அப் தி ரிங் (Lord Of The Ring) மேடை நிகழ்ச்சியின் இசையமைப்பு வேலை அங்கு நடந்து வந்தது. இவ்வளவையும் நிபுணர்கள் கொண்டு செய்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கூடமாக மாறி மாறி கவனம் செலுத்தினார். இத்தனைக்கும் நடுவில் காபி வேண்டும் என்றால் அவரே வெளியில் வந்து, காபி இயந்திரத்தில் காபி கலக்கி குடித்தார். இந்தியாவில் இருந்து வந்த அவரது சவுண்ட் இஞ்சினியர் ஆதி, வேலையை தொடர முடியாமல் களைப்பில் உறங்கிவிட்டார். விடியக்காலை நான்கு மணியிருக்கும். அவரை பார்த்து எந்த சலனமும் இல்லாமல் திரும்பவும் ஒலிப்பதிவு கூடம் நுழைந்து வேலையை தொடங்கினார். காலை 6 மணிக்கு அவர் தங்கும் இடத்திற்கு சென்றோம், நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண அறை. சாப்பிட்டது ரொம்பவும் சாதாரண இடம். ஹலாலா (Halal) என்று மட்டுமே பார்த்தார்.

    சென்னையில் அவரை சந்தித்தபோது, ஏ எம் ஒலிப்பதிவுக் கூடத்தில் வரலாறு இசை வேலைகளில் இருந்தார், அப்போது வாலி அவருக்காக பஞ்சதன் ஒலிப்பதிவுக்கூடத்தில் காத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தனது அவன்சா காரை தானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து, சில்லென்று ஒரு காதல் படத்தின் பாடலில் தீவிரமானார். இசை வேலையைத் தவிர வேறெதுவும் பெரிதாக எதிர்பார்க்காத எளிமையான மனிதர். எளிமைதான் ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு செல்கிறது என்று எப்பொழுதும் படித்திருக்கிறோம், ஆனால் எது எளிமை என்பதை எனக்கு உணர்த்தியது நவீன யுகத்தின் இளைஞரான அவரை நான் பார்த்த நாட்கள்தான். இன்றைய இளைஞர்களுக்கு எளிமை என்பது இயலாதவனின் அல்லது இல்லாதவனின் வாழ்க்கை முறை என்ற எண்ணங்கள் உண்டு.

    அதையெல்லாம்விட ஒரே மாதத்தில் ஐந்து படங்களுக்கு இடைவெளியில்லா உழைப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. இருந்தும் அவர் படங்கள் தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் அவருடைய வேலையில் அவர் எதிர்பார்க்கும் Perfection (தமிழில் சொல்லத் தெரியவில்லை - இறுதித் தரம்). நம்முடைய ஆட்டோகிரப் என்பது நமது வேலையில் இருக்கும் தரம்தான், அதுதான் நமது உண்மையான அடையாளம் என்பதை நான் கற்றுக்கொண்டது அங்குதான். வரலாறு படப் பாடலின் இறுதி மாஸ்தரிங் வேலைக்கு மட்டும் அவர் எடுத்துக்கொண்ட நேரம் நாம் பொறுமை இழந்துவிடும் அளவு நீளமானது. போதும் என்ற நிலையில் அந்தப் பாடலின் தரம் இருந்த பொழுதுக்கூட அவர் பொறுமையாக காட்டிய கவனம் எல்லையற்றது. யாரை கேட்டாலும் நமது உயர்வுக்கு உழைப்புதான் அடிப்படைக் காரணம் என்று சொல்வார்கள், நாம் அனுபவிக்காதவரையில் அந்த உண்மையான உழைப்புக்கு அர்த்தம் தெரியப்போவதில்லை. 

    இந்தப் perfection பற்றி சொல்லும்போது ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். அவர் லண்டனில் CBS Orchestraவுடன் இணைந்து அவருடைய பாடல்களை ஆர்கெஸ்டராவில் பதிவு செய்ததை வெளியிட கேட்டபோது, எந்த தயக்கமும் வெட்கமும் இன்றி அதில் எண்ட் கிரேடிட் மற்றும் சில அரேஞ்மெண்ட் சரியா இல்லை, அகிலன். அதை வெளியீடு செய்தால் தரமிருக்காது என்று நிராகரித்தார். அதாவது அவருடைய வெளியீடு எதையும் ரசிகர்கள் வாங்கும் நிலையில் இருக்கும் போது, தரத்திற்காக அதை நிறுத்தியதோடு அல்லாமல் அதை பத்திரிக்கைகளிலும் பகிரங்கமாக சொன்னார், ‘மேற்கத்திய செவ்வியல் இசையில் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதில் நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். அதனால் அதை வெளியிடவில்லை’ என்று. இங்கு அவர் தரத்தை பற்றி மட்டும் அக்கறைபடவில்லை, கரையில்லா (இசைப்) புகழை எதிர்பார்த்தது மட்டுமல்ல. எந்த நிலையிலும் அடக்கமும், மேலும் கற்றுக்கொள்ளும் மனப்போக்கும் கொண்டிருந்தார். 

    இதையொட்டி வேறொரு சம்பவத்தை நினைவுக்கூர வேண்டும். அவருடைய கஜினி இந்தி இசை வெளியானப் பிறகு, அதன் ஒலிப்பதிவில் குறிப்பாக மாஸ்டிரிங் நிலையில் ஒரு குறைப்பாடு என்னை தொந்தரவு செய்துக்கொண்டேயிருந்தது. என்னால் பாடலின் உள் செல்ல முடியவில்லை. அதை குறை என்று கூறும் தைரியமும், அதை நிரூபிக்கும் ஞானமும் திறனும் எனக்கில்லை என்று தெரியும். ஆனால் ஒரு தேர்ந்த இசை ரசிகனாக (ஆணவமாக சொல்லவில்லை, எனக்கிருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்) இதில் நிச்சயம் குறையிருக்கிறது, அதுவே இந்தப் பாடலை நெருங்க மிகப்பெரிய மனத்தடையையும் (இல்லை செவித்தடையை என்று சொல்லலாமா?) எனக்கு ஏற்படுத்துகிறது என்பதும் எனக்குத் தெரியும். அதிலும் அது மாஸ்டிரிங் நிலையில்தான் நடந்திருக்கிறது என்றும் உணர முடிந்தது. அவரிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இதுநாள் வரை பழகிய காரணத்தால் சொல்ல வேண்டும் என்று ஓர் உந்துதல். அப்படி நான் சொல்லி அது என்னுடைய இசை ரசனையில் உள்ள குறை என்றால், அல்லது அவருடைய ஈகோவை நான் சீண்டிப்பார்ப்பது போல் இருந்தால்...? அது நட்பை முறிக்கலாம். 

    பலவாறு யோசனைக்கு பிறகு அதை அவருக்கு தெரியப்படுத்தினேன், மின்னஞ்சல் வாயிலாக. தயங்கியபடியே நான் உணர்ந்த குறைகளை சுட்டிக் காண்பித்தேன். மறுநாளே அவரிடமிருந்து பதில். “வெறுமனே பாடல்கள் நன்றாக இருக்கிறது என்ற புகழ்ச்சிகளைத் தவிர இதுபோன்ற எதிர்வினைகள் தான் எனக்கு வேண்டும். நான் மிகவும் வரவேற்கிறேன் உங்கள் கருத்தை. இப்படியான தவறுகளை எழுத தயங்க வேண்டாம்’, என்று எழுதியதோடு ‘நான், நீங்கள் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கிறேன்’ என்றும் உற்சாகம் ஊட்டினார். கஜினி படம் வரை வெற்றி அடைந்தவரின் பதில் அல்ல இது. புதிதாக இசைத்துறையில் கால் வைத்திருக்கும் ஒரு பிரபலமில்லாத நபரின் வார்த்தைகள் போல் இருந்தது. அந்த மின்னஞ்சல் என்னால் மறக்க முடியாத தடங்களை விட்டு சென்றது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தவறு இயல்பு என்ற ஆணவமின்மையும், தவறை திருத்திக்கொள்ள முன்வருவதும் சாதாரண விஷயமல்ல. அதிலும் பெரிய விஷயம் என்னைப் போன்று பிரபலமில்லாத, நிபுணத்துவம் அற்ற ஒருவனுக்கு செவி சாய்ப்பது சாதாரண ஒரு குணமல்ல. யாரையும் வயது வரம்பின்றி மதிக்கும் குணம் எல்லோரிடமும் பார்த்துவிட முடியாது. இதே போன்றதொரு அனுபவம் எனக்கு இளையராஜாவிடமும் ஏற்பட்டிருக்கிறது. காலத்தால் அழியாத புகழ் பெறும் எந்த ஒரு மனிதனும் நவீன உலகம் பல சமயங்களில் நமக்கு சொல்லித்தருவது போல் நற்குணங்களுக்கு எதிர்மறையாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். போலியானவர்கள் யாராலும் இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் போல் காலத்தால் அழியா புகழை அடைந்திடவே முடியாது. 

    இந்த தன்னியல்புகள் மட்டுமல்லாது, நிர்வாகத்திறன் நிரம்பக் கொண்டவர், ஏ ஆர் ரஹ்மான். அவரின் இன்றைய உயரத்திற்கு, அவரது உழைப்பு மட்டுமல்லாது, அவரது நிர்வாகத்திறன் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம். உழைப்பும் திறமையும் மட்டுமே வெற்றியின் வாசல்களை நெருங்க உதவாது என்பதற்கு அவர் ஒரு சான்று. அவருடைய அலுவகத்திலும், ஒலிப்பதிவு கூடத்திலும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் ஒவ்வொருவர் மேற்பார்வையில் விடப்பட்டிருக்கும். ஒலிப்பதிவு சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், இசை கலைஞர்கள் சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், பத்திரிக்கை மற்றும் வெளிநபர்கள் தொடர்புக்கு ஒருவர் என்று எல்லாவற்றுக்கும் ஒவ்வொருத்தர் இருப்பார்கள். இசை வெளியீடுகள் பற்றிப் பேச வேண்டும் என்றால் ஒருவர், சட்டம் பேச ஒருவர் என்று அது மிகப்பெரிய நிறுவனம்போல் இருக்கும். அவர்கள் எல்லோருமே அற்புதமான மனிதர்கள். அதிலும் அவரது ஆஸ்தான சவுண்ட் இஞ்சினியர் சிவக்குமார் அற்புதமான நண்பர். அவரது வெளிநாட்டு தொடர்புகளை கவனித்த கணேஷங்கர் இன்னொரு அற்புதமான மனிதர். ஆதி, கார்த்திக், நியோல் இப்படி எல்லோரையும் நான் நினைவு வைத்து குறிப்பிடும் அளவுக்கு அந்த நிர்வாகம் இளைஞர்களால் குஷியாக ஒரு குடும்பம் போல் மேற்பார்வை செய்யப்படுவதுதான். இந்திய சினிமாவில் இசையை ஒரு தனி நிறுவனமாக அவர் சாதித்துக் காட்டியிருப்பது, யாரும் இதுவரை இந்தியாவில் கற்பனை செய்ய முடியாதது. 

    சொந்த இணையத் தளம் வைத்திருக்கிறார், facebook இல் அவரே பதில் எழுதுகிறார், நன்றி சொல்கிறார், பேசுகிறார். தன்னை இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி ப்ரோமோட் செய்துக்கொள்வது என்று தெரிந்த ஒரு தேர்ந்த நிர்வாகி என்று சொல்லலாம். அதுமட்டுமன்றி, இதன் வாயிலாக இடையில்லா தொடர்பை தன் ரசிகர்களுடன் உருவாக்கியிருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் ஒரு சக நண்பனுடன் உரையாடிக்கொள்வதுப்போல அதை முன்னெடுத்திருக்கிறார். பிரபலத்தில் இருந்து கொண்டு, தன் ரசிகர்களை நெருக்கத்தில் பார்க்கும் போது, நமது குறைகள், நிறைகள் நம்மால் உணரமுடிவது மட்டுமல்லாது, நமக்கான ஒரு தனித்துவமிக்க சந்தையை இன்னும் விரிவுப்படுத்தி அதை உறுதியுடன் பேணுவது உலகத் தரம். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் அது மிக எளிதில் சாத்தியமாகக்கூடியது என்றாலும் அதை பலரும் பொருட்படுத்துவது இல்லை. 

    எனது ரசிகர்கள் தயவு செய்து கள்ளப் பதிப்புகளை வாங்காதீர்கள் என்று பொது மேடையில் (விருது நிகழ்ச்சியில்) இளையராஜாவுக்கு பிறகு பகீரங்கமாக பேசிய ஒரே இசையமைப்பாளர் இவர் என்று நிச்சயமாக சொல்லலாம் (இளையராஜா அதற்கு முன்னமே ராஜாங்கம் என்ற அவருடைய இணையத்தளத்தின் வாயிலாக அதை செய்திருக்கிறார்). வேறு இசையமைப்பாளர்கள் எவரும் இப்படி பகிரங்க அறிவிப்பை கள்ளப்பதிப்புக்கு எதிராகக் கொடுத்ததில்லை. கள்ளப்பதிப்புக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒரு கலை நிகழ்ச்சியை இலவசமாக மலேசியாவில் நடத்த நான் திட்டமிட்ட போது, இலவசமாக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார், ஏ ஆர் ரஹ்மான். (ஆனால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது வேறு விஷயம்). தன்னை மட்டும் பிரதானப் படுத்தாமல் தான் சார்ந்திருக்கும் துறைக்கும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்காகவும் எந்தப் எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல விஷயத்திற்கு உதவ முன்வருவது அவருக்கு பழகிய ஒன்று. இது ஒருவகையில் வியாபார எதிக் (ethic). தன் தொழிலின் மீது, தான் விரும்பும் ஒரு துறையின் மீதுள்ள அன்பின், மக்களின் மீது அல்லது பயனீட்டாளர்கள் மீதான அக்கறையின் காரணமாக, எந்த நிலையிலும் தன்னையும் தான் சார்ந்துள்ள தொழிலையும் அல்லது துறையும் தவறான வழிக்குக் கொண்டு சென்றுவிடக்கூடாது என்று நினைப்பவர்களால் மட்டுமே பேணப்படும் துறை சார்ந்த ஒழுக்க நெறி. அது எல்லா துறையிலும் உண்டு. இசைத்துறைக்கும் உண்டு என்று அவரிடம் நான் தெரிந்துக்கொண்டேன்.

    எவ்வளவு உழைப்பும், நிர்வாகத்திறனும் இருந்தாலும், நம்மை பிரகடனப் படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது என்பது நான் ரொம்பவும் தாமதமாக உணர்ந்தது. அது நம்மை பிரபலப்படுத்தும் முயற்சியோ அல்லது தற்பெருமை தேடிக்கொள்வதோ இல்லை. மாறாக நம்மை துடிப்புடன் செயல்படவும் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார் செய்து கொள்ளவும் உதவும் ஒரு மாபெரும் கருவி. அது பல சமயங்களில் நம்மை பற்றி மட்டுமல்லாது நமது நம்பிக்கையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு செய்தி (MESSAGE). இந்தப் பிரகடனப் படுத்துவது என்பதே பல பக்கங்கள் எழுதக்கூடிய ஒரு விஷயம், அதாவது இசைத்துறையில். அதை வேறொரு சமயம் நான் எழுதுகிறேன்.

    இதையெல்லாம் விடவும் என்னுடைய இந்த பயணத்தில் எனக்கு முக்கியமாக இருக்கும் விஷயங்களில் மூன்று அவருடைய அனுபவத்தில் இருந்து அவர் என்னிடம் இறக்கி வைத்தது. அது யாருகெல்லாம் போய் சேர்ந்ததோ தெரியாது, ஆனால் எனக்கு பல மந்திரங்களில் இவைகளும் முக்கியமானதாகிப் போனது. 

    முதலாவது...

    அவரிடமிருந்து வரலாறு (காட்பாதர்) இசை ஆல்பத்தை வாங்கிய போது, நான் இதில் வெற்றி பெற என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்றேன். அதோடு, “நான் இசைத்துறைக்கு வந்த போது, இன்றைக்கு இசை துறையென்பது மடிந்துபோன ஒன்று, நான் முட்டாள்தனமாக இதில் இறங்கியிருக்கிறேன் என்று பார்க்கிறவர்கள் பழகியவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், எனக்கே சில சமயம் சந்தேகம் வரும்படி செய்துவிடுகிறார்கள்’ என்றேன். 

    கொஞ்சம் சீரியஸானவர், ‘நான் விளம்பரங்களுக்கு இசையமைத்துகொண்டிருந்தபோது என்னையும் இப்படிதான் சொன்னார்கள். இப்படியே காணாமல் போய்விடுவேன்' என்று சிரித்திருக்கிறார்கள். நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரமுடியும் என்று பேசியிருக்கிறார்கள். இன்றைக்கு நான் எங்கிருக்கிறேன்? உண்மை, உழைப்பு, நேர்மை. இதுதான், அகிலன். இந்த மூன்றும் இருந்தால் யாருடைய வாழ்த்தும் தேவையில்லை. நாம் முன்னுக்கு வந்திடலாம். எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்றை மட்டும் கைவிட்டுடாதீங்க. இந்த உண்மை, உழைப்பு, நேர்மையை பல சமயங்களில் படித்தும், கேட்டும், சினிமாவில் பார்த்தும் இருப்பதுதான். ஆனால் தன்னுடைய வாழ்வின் கசப்பான அனுபவங்களின் ஊடாக இன்று அவர் அடைந்திருக்கும் வெற்றிக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று அவரால் இதை மட்டும்தான் சொல்ல முடிகிறதென்றால், எவ்வளவு ஆழமாகவும் உறுதியாகவும் இதை அவர் நம்ப வேண்டும் என்று அன்று நான் உணர்ந்தேன். ஆழமான, உறுதியான நம்பிக்கையின் வாயிலாக வரும் எந்த வார்த்தையும் உண்மையானதாகவும் சக்தியுள்ளதாகவும் இருக்கும்.

    இரண்டாவது...

    ஆஸ்காருக்கு முன்பு, 20/1/2009.

    ‘நான் வாழ்க்கையை போஸிட்டீவாக எடுத்துக்கொள்கிறேன். எவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு நாம் ஆளானாலும் அதன் பிறகு சர்வ நிச்சயமாய் ஒரு பெரிய நன்மை நடந்தே தீரும் என்று நம்புகிறேன்.’ மிகப்பெரிய மன உளைச்சலில் நான் இருந்த தருணம் மலேசியாவின் ஸ்டார் ஆங்கில பத்திரிக்கையில் வெளியானது இந்த பேட்டி. அவருடைய இசை ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப் பட்டதற்காக அவர் சொன்னது. 

    மூன்றாவது...

    ஆஸ்காருக்கு பின்பு 23/2/2009 

    'என் வாழ்க்கை முழுவதும் அன்பையும் வெறுப்பையும் நான் எதிர்கொண்டிருக்கிறேன். நான் அன்பை தேர்ந்தெடுத்தேன்... இங்கு இருக்கிறேன்'. ஆஸ்கார் மேடையில் சொன்னது.

    இது திட்டமிட்ட வார்த்தைகள் அல்ல, ஒத்திகைப் பார்த்து வந்ததல்ல என்பது, அவருடன் பழகியவர்களால் மட்டுமே உணர முடியும். இவைகள் அனைத்துமே உண்மையான வெற்றியின், புகழின் திறவுகோல்கள். நம் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டிகள்.

    நன்றி : வல்லினம் http://www.vallinam.com.my/issue15/column4.html

    ***********************************************************************
    தொடர்புடைய பதிவுகள்



    ************************************************************************************
    இக்கட்டுரையை எழுதிய அகிலன் அவர்களை இதுவரை நான் அறிந்ததில்லை.இசைத் தொடர்புடையவர் என்பது மட்டும் கட்டுரையில் இருந்து அறிய முடிந்தது.தேடிப் பார்த்ததில் அவரது வலைப் பக்கம் கிடைத்தது. இளையராஜா பற்றியும் பதிவுகள் எழுதி இருக்கிறார் . 

    இணைப்பு:http://meedpu.blogspot.in/




    ஞாயிறு, 4 ஜனவரி, 2015

    பழையபேப்பர்காரர் கேட்டார் ஜனவரி 4ல் அது நடக்குமா?

    சனிக்கிழமை காலையில் 11 மணிக்கு மாடிப்படியில் அமர்ந்து பேப்பர் பார்த்துக்  கொண்டிருந்தேன். வழக்கமாக வரும் பழைய பேப்பர்காரர் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
    "போனவாரம் தான் போட்டுட்டனே! இப்ப ஒண்ணும் இல்லையே!" என்றேன்
    "அது இல்லை சார் . சைக்கிள் பஞ்சராயிடிச்சு இந்த பேப்பரெல்லாம் இங்க வச்சுட்டுப் போறேன். வந்து எடுத்துக்கறேன். என்று சொல்லி விட்டுப் போனவர் உடனே திரும்பி வந்தார் .
    " சைக்கிள் கடை இன்னும் திறக்கல சார். அதுக்குள்ள இதெல்லாம் கொஞ்ச அடுக்கி வச்சுக்கறேன். டீ குடிச்சிட்டு வரலாம்னு பாத்தா டீக்கடையும் என்னவோ தொறக்கலியே என்று பேப்பரை அடுக்க ஆரம்பித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
    "சார், இன்னைக்கு பேப்பர்தானே படிக்கிறீங்க"
    அதுல என்னங்க சந்தேகம் இன்னைக்கு பேப்பர்தான்"
    சார் நாளைக்கு ஜனவரி நாலு இல்ல . ஏதோ நடக்கபோவுதாமே அதைப் பத்தி ஏதாவது போட்டிருக்கா?
    எதை சொல்றீங்க? அப்படி எதுவும் போடலீங்க
    "இல்லையே! அந்த மாமி சொன்னாங்களே! ஜனவரி நாலாந்தேதி பூமிக்கு என்னவோ ஆவப் போவுதாம் . அன்னைக்கு 5 நிமிஷத்துக்கு பூமிக்கு இசுக்குற சக்தி குறைஞ்சு போயிடுமாம். பொருளோட எடை எல்லாம் குறைஞ்சு போயிடுமாம் . மொதக்கிறமாதிரி ஆயிடுமாமே. அவங்கள் வூட்டு மாமா பாஸ் புக்கை பாத்து சொன்னாராம்."
    "என்னது பாஸ்புக்கா?"
    "அதான் சார்! கம்ப்யூடர்ல பசங்கெல்லாம் பொழுதன்னைக்கும் பாத்துகினு இருக்குதுங்களே .."
    "ஓ! ஃபேஸ் புக்கை சொல்றீங்களா. நீங்க சொன்னதை  நானும் கேள்விப்பட்டேன் வெறும் வதந்தி .அப்படியெல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. அமெரிக்காவில நாசா பேர்ல எவனோ அந்த செய்திய பரப்பி வுட்டுட்டான். ஆனா தமிழ்ல அந்த ந்யூஸ் கண்ணில படலேயே ..நாசா வில் இருந்து அதுக்கு மறுப்பு சொல்லிட்டான்.


    "அப்ப அந்த மாதிரி எது வும் நடக்காதா?"
    "ஏன் அது நடக்கனும்னு எதிர்பார்க்கறீங்களா?"

    " ஹிஹி இல்ல  சார். அந்த நேரத்தில ஒரு ரவுண்டு அடிச்சா குறைவான எடை போட்டு நிறைய பழைய பேப்பர்  பிளாஸ்டிக் இரும்பெல்லாம் வாங்கலாம். ஒரு நாள் மட்டும்தானே அப்படி இருக்கும் அடுத்த நாள் அதெல்லாம் எடை கூடிடும் இல்ல. ஒரு அமவுண்டு தேத்தலாம்னு பாத்தேன். அப்பா எல்லாம் டுபாக்கூர்தானா?
    (இதைப் பற்றிய ஒரு கேள்வி உங்களுக்கு பதிவின் இறுதியில இருக்கு.)


    "எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே வதந்தி வேகமா பரவிடும். இப்ப போன் இன்டர்நெட் இருக்கே.ஒரு செகண்டல உலகம் முழுசும் பரவிடுதே .

    ஜனவரி 4  வாகில எடை எல்லாம் குறையாது. ஆனா அன்னைக்கு முக்கியமான விசேஷம் ஒண்ணு இருக்கு
    "இன்னா சார் அது "
    "ஜனவரி 4 அன்னைக்கு மத்த நாளை விட சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் குறைவா இருக்கும். அதாவது கொஞ்சம் சூரியன் கிட்ட நெருங்கும்."

    "அது எப்படி சார்?பன்னண்டு மணிக்குக் கூட  வெயில்  ஒரைக்கலயே. இது குளிர் காலம் இல்ல. குளிர் காலத்தில சூரியன் தூரமாத்தானே  இருக்கணும் . வெயில் காலத்தில்தானே சூரியன் கிட்ட இருக்கும்."

    "அது தப்பு. சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கிற தூரத்துக்கும் வெயில் காலம் மழைக் காலம் குளிர் காலம் இதுக்கும் சம்பந்தம் இல்ல."
    " நீ சொல்றது ஒண்ணும் புரியலேயே சார்."
    "பூமி கொஞ்சம் சாஞ்சமாதிரி (23.5 டிகிரி ) தன்ன தானே சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்தி வருது . ஆதனால சூரியனோட கதிர்கள் பூமிமேல எப்போதும் செங்குத்தா விழறதில்லை . செங்குத்தா விழுந்தா வெப்பம் அதிகமா இருக்கும் சாய்வா விழுந்தா குறைவா இருக்கும்.இதான் காலங்கள் வர்றதுக்கு காரணம் "

    " நானும் எட்டாங்க்ளாஸ் வர  படிச்சவன்தான் . கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு.  நான் இன்னா கேக்கறன்னா நெருப்பு பக்கத்துல நின்னாதானே  சூடா இருக்கும் தூரமா போய் நின்னா சூடு குறையும்தானே . அதானே உண்மை. நீ என்னாடான்னா எல்லாம் ஒண்ணுனு சொல்றியே எப்படி?"

    " பயங்கரமாத்தான் கேக்கறீங்க. சரி ஒரு உதாரணம் சொல்றேன். நூறு மீட்டர் தூரத்தில  ஒரு வைக்கோல் போர் எரியுதுன்னு வச்சுக்குவோம். நீங்க சரியா 100 மீட்டர் தள்ளி நிக்கறீங்க. கொஞ்சம் சூடு தெரியுதுன்னு வச்சுக்குவோம். 3 மீட்டர் முன்னால போங்க . இப்போ உங்களுக்கு முன்ன இருந்ததை விட சூடு அதிகமா தெரியுமா?
    " அது எப்படிசார் தெரியும்  மூணு மீட்டர்னா கிட்டத்தட்ட 10  அடிதானே இருக்கும் . அதுல ஒண்ணும் வித்தியாசம் தெரியாதே! "
    இந்த நேரத்தில வெளியில் வந்த எங்க வீட்டம்மாவைப் பார்த்து " சனி ஞாயிறுல இந்த  பக்கம் போம்போது நான் பாப்பேன். சார் இந்த நேரத்தில டீ குடிச்சிகுனுதானே பேப்பர் படிப்பாரு"
    "என்ன பேப்பர்காரரே பக்கத்து இலைக்கு பாயசமா? அவருக்கு என்ன வேலை ஜாலியா உங்ககூட அரட்டை அடிச்சிகிட்டு இருக்கார்.  டீ போட்டு தொலைக்கிறேன்"
    "நீ சொல்லு சார் அம்மா எப்பவும் தமாசா பேசும் "

    நான் சிரித்துக் கொண்டே தொடர்ந்தேன்

    " மூணு மீட்டர் முன்னாடி போன வித்தியாசம் எதுவும் தெரியாதுன்னு சொன்ன இல்லையா? அதான் அதேதான் . ஜனவரி 4 ந்தேதி வாக்கில சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கிற தூரம்  கிட்டத்தட்ட 91400000 மைலு. இதுதான்  ஒரு வருஷத்தில குறஞ்ச பட்ச தூரம். அதிக பட்சமா  ஜூலை மாசம் 5 தேதி வாக்கில 94500000 மைல் தூரத்தில சூரியன் இருக்கும். 3 % மட்டும்தான் அதிகமா இருக்கு அதனால தூரத்தினால வித்தியாசம் எதுவும் உணர முடியாது.....

    பேப்பரை அடுக்கி வைக்கும் வேலை முடிந்து விட்டதால் அதற்கு மேல் பொறுமை இல்லதாதால் இடைமறித்தார்
    "சார்!. இது போறும்.நல்லா வெலாவாரியா த்தான் சொல்லி இருக்க. பேப்பர் பொறுக்கிற பசங்க நம்ம கூட தன் இருப்பானுங்க அவங்க கிட்ட பொழுதுபோகலேன்னா இத்தை எல்லாம்  சொல்வேன். கொஞ்சம் இட்டுகட்டி சொல்வனா ,பசங்க ஆன்னு பாப்பங்க.  சார் டீ இன்னும் வரலியே! ரொம்ப நேரம்ஆயிடிச்சு போல இருக்கே. 

    அதற்குள் டீ கொண்டு வர,
    "ஒனக்கும் சேத்து டீ வந்துட்ச்சி , குட்சிட்டு கேட்டை மூடிகினு போ"
    டீ டம்ப்ளரை கையில் வாங்கிக் கொண்டு சிரித்தார்
    "எதுக்கு சிரிக்கிறீங்க"
    "சார் நீங்களும் நம்ம லாங்க்வேஜ் கத்துக்குனீங்க" என்றான்

    *****************************************************************************
    உங்களுக்கு ஒரு டெஸ்ட்
    கொசுறு:ஹிஹி ஆமாம் சார். அந்த நேரத்தில ஒரு ரவுண்டு அடிச்சா குறைவான எடை போட்டு நிறைய பழைய பேப்பர்  பிளாஸ்டிக் இரும்பெல்லாம் வாங்கலாம். ஒரு நாள் மட்டும்தானே அப்படி இருக்கும் அடுத்த நாள் அதெல்லாம் எடை கூடிடும் இல்ல. 


    கேள்வி : உண்மையில் பேப்பர்காரர் சொன்னதுபோல அன்றைக்கு கொஞ்ச நேரம் ஈர்ப்பு விசை குறைந்து பொருட்கள் எடை இழக்கும் நிலை ஏற்பட்டால்   குறைவான எடையில் அதிக அளவு பேப்பரை வாங்க முடியுமா?அவர் ஆசை நிறைவேறி  இருக்குமா?

    ஒரு வேளை இதுக்கான விடை உங்களுக்கு தெரியாம இருந்து தெரிஞ்சிக்க விரும்பினா இங்க க்ளிக் செஞ்சு பாருங்க 
    விடை 

    **************************************************************************

    இந்த நிகழ்வு பற்றி அறிவியல் எழுத்தாளர்  என் ராமதுரை அவர்கள் WWW.ARIVIYAL.IN இல் விரிவாக எழுதி இருக்கிறார்

    *************************************************************
    தொடர்புடைய பதிவுகள்