என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 1 ஜனவரி, 2015

இந்தியாவின் டாப் டென் கிராமங்கள்-Top Ten Villages

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். ஆனால் கிராமங்களின் நிலை உண்மையில் மெச்சத் தகுந்த அளவில் இல்லை என்பது உண்மை. கிராமங்களின் அடிப்படையான விவசாயம் நசிந்து வருகிறது. எல்லோரும் நகரத்தை நோக்கி நகர கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் சரியான முறையில் சென்றடைவதில்லை என்ற குற்றசாட்டும்  உண்டு .
   நல்ல கிராமங்கள் எப்படி இருக்கவேண்டும் ? உதாரணம் சொல்லக் கூடிய அளவுக்கு இந்தியாவில் ஏதேனும் இருகின்றனவா? அப்படியும் ஒரு சில இருக்கத்தான் செய்கின்றன என்ற செய்தி கொஞ்சம் ஆறுதல் 
அவற்றில் முதல் பத்து  இவைதான் என்று செய்திகள் சொல்லுகின்றன

1. மௌலின்னாங் . மேகாலயா மாநிலத்தில் உள்ள சிறிய மலை கிராமம் .அப்படி எதனால் இது முதல் இடத்தைப் பிடித்தது . சுத்தம் சார் சுத்தம். சுற்றிப் பார்த்தால் எங்கும் சுத்தம். மண்ணைப் பற்றித் தொட்டுத் தரலாம் முத்தம்  என்று பாட்டுப் பாடலாம் . அந்த அளவுக்கு சுத்தத்திற்கு பேர்போனது . இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலியே Cleanest Village என்ற விருதைப் பெற்றுள்ளது இந்தக் கிராமம். பிளாஸ்டிக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ குப்பைகள் சிகரட் அட்டைகள் இவற்றை எல்லாம்  பார்க்க முடியாதாம். பார்த்தவர்கள் சொல்கிறார்கள் . (நம்ம ஊர் இப்படி இருக்காதா என்று ஏங்கக் கூடாது.ஏன்னா அது நம்ம  கைலயும் இருக்கு . இவ்வளோ சுத்தம் நம்ம உடம்புக்கு ஆகாதே?) 

2.புன்சாரி: இந்த  ஊர் குஜராத் மாநிலத்தில்உள்ளது . இது  மெட்ரோ நகரங்களை வெட்கப் படவைக்கும் அளவுக்கு வசதிகள் உடைய கிராமம். எட்டே வருடத்தில் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாம். ஊர் முழுவதும் Wi-Fi வசதி செய்யப்பட்டுள்ள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் CCTV நிறுவி இருக்கிறார்கள். . மாணவர்கள் படிப்பதை பெற்றோர் பார்க்க முடியும். ஏ.சி வசதியும் உண்டு.அதுமட்டுமல்லாமல் முக்கியமான 25 பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் குடிநீர் வசதி சாலைவசதி,மின்சார வசதி எதுவும்  இல்லாமல் இருந்ததாம். இன்று கிராமம் முழுதும் தூய்மையான குடிநீர் வழகும் அளவுக்கு R.O பிளான்ட் இருக்கிறது . இன்று கழிப்பறை வசதி , சாலை வசதி என்று அத்தனை அடிப்படை வசதிகளும் தாராளமாய் உள்ளதாம். ஊர் முழுவதும் துடைத்து வைத்தாற்போல் சுத்தமோ சுத்தம் 
    தகவல்களை சொல்வதற்காக ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் அமைக்கப் பட்டிருக்கிறதாம். நலத் திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் உடனடியாக மக்களுக்கு இதன் மூலம்  தெரிவிக்கப் படுகிறது. போக்குவரத்து வசதிக்காக மினி பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கிறதாம். இத்தனைக்கும் காரணம் படேல் ஹிமான்ஷு நரேந்திரநாத் என்கிற 31 வயது இளைஞர்.  பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றபோது இவருக்கு வயது 23  இத்தனைக்கும் கூடுதல் அரசு நிதி ஏதுமில்லையாம். கிராம மக்களின் ஒத்துழைப்புடன்தான்  இது சாத்தியமாகி இருக்கிறது என்கிறார் ஹிமான்ஷு படேல் .( ஹூம் படிக்கிற நீங்க விடற பெருமூச்சு சத்தம் இங்க கேக்குதே)


3.ஹிவாரே பஜார் . மகராஷ்டிரா மாநில கிராமம் . வறண்டு போய் கிடந்த கிராமத்தை பசுஞ் சோலையாக மாற்றி  இருக்கிறார்  பொப்பட்ராவ் பாகுஜி பவார் என்ற மனிதர். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர். 70-80 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டத்தை 20- 25 அடியாக மாற்றி இருக்கிறார். இவரோட உழைப்பும் விடாமுயற்சியும் அளவிடற்கரியது 
ஒரு தன்னிறைவு அடைந்த கிராமமாக  உருவாக்கி இருக்கிறார். பிழைப்பிற்காக கிராமத்தை விட்டு வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் கிராமத்திற்கே வந்து கொண்டிருக்கிறார்களாம்.இவரது சாதனைகளைப் பற்றியும் இந்த கிராமத்தைப் பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன். விரிவாக தெரிந்து கொள்ள  இந்த இணைப்பில் சென்று படித்துப் பாருங்கள்.( இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்!

         4.தர்னாய் :உங்களால் நம்ப முடியுமா பின் தங்கிய பீகாரில் இப்படி ஒரு கிராமம் இருக்கிறது என்று.  முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரம்  மூலம் மின் தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளும் முதல் கிராமம் இதுதானாம். . 30 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் மூழ்கிக் கிடந்த கிராமம் இன்று ஒளிர்கிறது. மின் தேவைக்காக அரசை நம்பி இருக்கவில்லை. விவசாயமும் செழிக்கிறதாம்
5.சாப்பர்::இது அரியானா மாநிலத்தில் உள்ள அழகிய கிராமம்.  பெண்கள் பிறப்பு வீதம் மிகவும் குறைவாகக் கொண்ட மாநிலம் அரியானா. இந்த கிராமமும் அப்படித்தான் இருந்த்தது . பெண்கள் மீதான பிற்போக்கு எண்ணம்  கொண்ட மக்களின் மனப்பான்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் ஒரு பெண். ஆம். அவர் பெயர்  நீலம். அவர்தான் இந்தக் கிராமத்தின் தலைவர். இன்று பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு கொடுத்து கொண்டாடும் அளவுக்கு நிலை மாறியுள்ளதாம் 

6.கோக்ரிபெல்லூர்: கர்நாடக மாநில கிராமம் .இயற்கையை நேசிக்கும் கிராமம். பறவைகள் நிறைந்த கிராமம்.இங்கு அரிதான பல பறவைகள் காணப்படுகிறதாம் .எப்போதும் காதைக் குடையும்  பறவைகள் சத்தம் பயிர்களுக்கு தொல்லை  என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த ஊர் மக்கள் அவைவரும் பறவைகளை நேசிக்கிறார்கள். வேட்டையாடுவதை அறவே வெறுப்பவர்கள்.. பறவைகளுக்கு காயம் பட்டாலோ நோய்வாய்ப் பாடாலோ சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் உண்டு.

7.பால்லியா::உத்திரப் பிர்தேசத்தில் உள்ள சிறிய கிராமம். இக்கிராமத்தில்  தண்ணீர் வசதிக்காக அடிப்பம்புகளை அரசு அமைத்துக் கொடுத்துள்ளது..இதன் மூலம் கிடைக்கும் நீரில் ஆர்சனிக் நச்சுப் பொருள் கலந்திருந்ததால் தோல் வியாதிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தாங்களே களத்தில் இறங்கினார்கள். இல்லை இல்லை கிணற்றில் இறங்கினார்கள்.ஆம் தங்கள் பழைய கிணறுகள், குளங்கள் குட்டைகளை  தூர் வாரி நீரை சேமிக்க பிரச்சனை குறைந்துவிட்டது 
8.போத்தனிக்காடு: இந்தக் கேரளா கிராமத்தின் சாதனை என்ன தெரியுமா? 100 சதவீத கல்வியறிவு பெற்ற முதல் கிராமம் ஆகும். இங்கு வாழும் மக்கள் அனைவரும்  அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள்
 9.பெக்கினக்கேரி: கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த கிராமம் ஒரு வித்தியாசமானது . இந்த கிராம மக்கள் காலையில் மலம் கழிக்க கவுண்டமணி ஒரு படத்தில் சொம்பு தூக்கிக் கொண்டு போவது போல ஒரு பொது இடத்திற்கு மலம் கழிக்க செல்வது வழக்கமாம். எவ்வளோ சொல்லியும் இதனை மாற்ற முடியவில்லை. . ஒரு வினோதமான முயற்சியை மேற்கொண்டது பஞ்சாயத்து.. ஆமாம் . பஞ்சாயத்து உறுப்பினர்கள் காலையில் முன்னதாக சென்று  மலம் கழிக்க வரும் ஒவ்வொருவருக்கும் குட்மார்னிங் சொல்ல ஆரம்பித்தனர். இதனால் தர்ம சங்கடம் அடைந்து வீட்டுக்கு திரும்பினராம். இந்த செயல் பலன் அளிக்க கிராமம் இப்போது மாறிவிட்டதாம்..
10.சனி சிங்கனாப்பூர்.,. இப்படி ஒரு  கிராமத்தை எங்கும் பார்க்க முடியாது. அப்படி ஒரு அதிசய கிராமம். அப்படி என்ன அதிசயம்? மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்த கிராமத்தில்  எந்த வீட்டுக்கும் கதவுகளோ ஜன்னல்களோ இல்லை என்பதே. வீட்டுக்கு மட்டுமல்ல கடைகளுக்கும் கதவுகள் இல்லை. ஆனால்  திருட்டு நடப்பதே இல்லையாம். அதைவிட அதிசயம் இங்கு கதவு லாக் செய்யாத யூ கோ வங்கி  ஒன்றும் உள்ளதாம்..

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நினைத்தால் நிச்சயம் நல்ல மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள் அல்லவா? 2015 இல் இந்த எண்ணிக்கை உயரட்டும்

தமிழ்நாட்டில் இப்படி ஏதேனும் கிராமம் இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள் ஆறுதல் அடைவோம்.

நன்றி : இணைய தளங்கள் ,பத்திரிகைகள் .

********************************************************************************

20 கருத்துகள்:

  1. டாப் 10 கிராமங்களை அறியத் தந்தீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. புத்தாண்டின் துவக்கத்தில் ஒரு அற்புதமான
    செய்தியைப் பகிர்ந்தது மகிழ்வளிக்கிறது
    பத்தாவது கிராமத்தை மட்டும் பார்த்திருக்கிறேன்
    அனைவரும் அறியவேண்டிய தகவல் அடங்கிய
    அற்ப்த பகிர்வு,தொடர வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. so,இந்த லிஸ்ட் ல தமிழ்நாடு இல்லை:((( ஹ்ம்ம்ம். இந்த ஆண்டாவது அப்படி ஒரு கிராமம் உருவாகட்டும்.

    பதிலளிநீக்கு
  4. வியக்க வைக்கும் நாலாவது தகவல் உட்பட அனைத்தும் சிறப்பு...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அழகான கிராமங்கள்.
    இரண்டு கிராமங்கள் முன்பே அறிந்து இருக்கிறேன்.
    எல்லா மாநிலங்களிலும் இது போன்ற சுத்தம், சுகாதாரம் நிறைந்து இருக்க ஆசை தான்.
    நல்ல தகவலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் மனம்போல எண்ணிக்கை பெருகட்டும். இவ்வாறான செய்திகளைத் தேடி தாங்கள் தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஆம் நண்பரே! இத்தனை கிராமங்களைப் பற்றியும் எற்கனவே வாசித்திருந்தாலும் தங்களின் தொகுப்பு மிக மிக அருமை!

    எல்லாம் சரி, பார்த்தீர்களா..தமிழ் நாட்டில் ஒன்று கூட தேற வில்லை! ஒரு கிராமம் கூடவா இல்லை...என்ற ஆதங்கம் வராமல் இல்லை...ம்ம்ம் மணிக்கணக்கில் மின்சாரம் பறி போனால் எப்படி இப்படி வர முடியும்....ம்ம்

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல் ...மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  9. சனி சிங்கனாப்பூர் போயிருக்கிறேன்;மற்றவை பற்றுத் தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அறியாத பல தகவல்கள் அறியத்தந்தீர்கள்! மிக்க நன்றி சகோ!
    தமிழ் நாட்டிலும் இதுபோல் நிச்சயம் இருக்கும்!..
    .

    பதிலளிநீக்கு
  11. ஷிர்டி போயிருந்தபோது சிங்கனாப்பூர் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம் கிராமம் என்பதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா. டாப் 10 எந்த காரணம் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. நகர வசதி உள்ள கிராமங்கள் தேவைபற்றி அப்துல் கலாம் நிறையவே சொல்லி இருக்கிறார், தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சகோதரர் அவர்களுக்கு வணக்கம். டாப் டென்னில் தமிழக கிராமம் வருவது எப்போது?

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
    த.ம.7

    பதிலளிநீக்கு
  13. நம்ம நாட்டிலும் வரவேண்டும்.... ம்ம்ம்... வருமா....?

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.
    த. ம. 9

    பதிலளிநீக்கு
  14. டாப் டென் கிராமங்கள் பகிர்விற்கு நன்றி..தமிழ்நாட்டில் இருந்து ஒன்றும் இல்லையே.. :(

    சனி சிங்கனாப்பூர் ரொம்ப வியக்க வைக்கிறது..

    பதிலளிநீக்கு
  15. நல்ல சொய்திதான்! பரிதாபத்திற்கு உரியது தமிழ்நாடு! வேறென்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
  16. நல்ல கிராமங்கள். சுத்தம், சுகாதாரம் என்பது மக்கள் கையிலும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்கள்..... அரசாங்கத்தினை மட்டுமே நம்பாமல் தன்னை நம்பும் மனிதர்கள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. கூகுள் ப்ளஸ் முகநூலில் பகிர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895