என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஐசக் நியூட்டன்-விஞ்ஞானியா? அரசியல்வாதியா?


      தலைப்பை பார்த்ததும் இது என்ன பைத்தியக்காரத் தனமான கேள்வி என்று கேட்பீர்கள். இதை முழுதும் படித்து விட்டு அப்புறம் சொல்லுங்கள் .
எட்டாம் வகுப்பில்  இருந்து கல்லூரி வரை நம்மை டார்ச்சர் செய்த விஞ்ஞானி யார் என்று கேட்டால் அவர் நியூட்டன் ஆகத்தான் இருக்கும்.
 ஆப்பிள் மரத்தில் இருந்து விழுந்தாலும் விழுந்தது . எடுத்து தின்று விட்டு போகாமல் ஏன் விழுந்தது எதற்கு விழுந்தது என்று தன்னைத் தானே கேட்டு(இந்தக் கதையே புருடாவாம்) புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்று நம் வாத்தியார்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கும்போது "நீங்களா இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க" ஒரு கேள்விய கேட்டு "எடுத்துகிட்டு ஓடி இருப்பீங்கன்னு"  சொல்லி  சிரித்து (இவர் மட்டும் என்ன பண்ணி இருப்பாராம்? ) நம்மை முட்டாளாக்கியது எல்லாம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். நியூட்டன் அவர்பாட்டுக்கு    முதல் விதி இரண்டாவது விதி மூன்றாவது விதி என்று ஏதோதோ சொல்லிவிட்டு போய் விட்டார் நாமோ தலைவிதியே என்று அவற்றைப்  படித்துவிட்டு  ஏறக்கட்டியபின்  இப்போது எதற்கு அவரைப் பற்றி என்றுதானே  கேட்கிறீர்கள். அவர் நமக்குத்தான் புரியாத விதிகள் எல்லாம் சொல்லி தொல்லை கொடுத்தார் என்றால் அவர் வாழ்ந்த காலத்தில் சக விஞ்ஞானிகளையும் விட்டு வைக்க வில்லையாம் .

  மனிதர் விஞ்ஞானியாய் இருந்தாலும், நம்மூர் அரசியல் வாதிகளை மிஞ்சும் அளவுக்கு பாலிடிக்ஸ் செய்வதில் கில்லாடியாக இருந்திருக்கிறார் . ஆரம்பத்தில அமைதியாக இருந்தாலும் போகப் போக சுப்ரமணிய சுவாமி ரேஞ்சுக்கு  தனக்கு வேண்டாதவர்களுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைக்கும் அளவுக்கு  போய் விட்டாராம்.

      லண்டன் ராயல் சொசைடியின்  தலைவராக கிட்டத்தட்ட 24 வருடங்கள் முடிசூடா மன்னராக  இருந்திருக்கிறார். வேறு யாரும் இவ்வளவு நாள் அந்தப் பதவியில் இருந்ததில்லை. அவ்வளவு நாள் நீடிக்க வேண்டுமெனில் அறிவு மட்டும் போதுமானது அல்ல. அரசியல் வாதிகளுக்கே உரித்தான தந்திரங்களும் சூழ்ச்சிகளும் அவசியமல்லவா. அத்தனையும் கரைத்துக் குடித்தவராக இருந்தார்  சர் ஐசக் நியூட்டன் .   அவர் அறிவியல் உலகத்தை ஒரு கலக்கு கலக்கிய  Principia Mathematica என்ற நூலை  எழுதியவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் . அறிவாளிகள் எப்போது மற்ற அறிவாளிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?. சண்டையும் சச்சரவும் அரசியவாதிகளுக்ககும் இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல. அறிவியல் அறிஞர்களுக்கும்கூட  சொந்தம்தான். 

   ராயல் சொசைடியில் ஒரு வானியல் அறிஞர் இருந்தார் அவர் பெயர் ஜான் ப்ளாம்ஸ்டீட்(John Flamsteed,).   இவர் நட்சத்திரம் கோள்கள் இவற்றைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். முதலில் இருவரும் அண்ணாமலை   ரஜினி, சரத்பாபு போல நண்பர்களாகத்தான் இருந்தனர். இந்தா எடுத்துக்கோ என்று நியூட்டன் கேட்கும்போதெல்லாம் அவரது அறிவியல் கொள்கைகளை நிரூபிக்க  தேவைப்படுகின்ற  தரவுகளை எல்லாம் கொடுத்துக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில நியூட்டனோட டார்ச்சர் அதிக மாகி விட்டது. நீ சேகரிச்சு வச்சிருக்கிற எல்லா தகவல்களையும் என்கிட்டே குடுனுன்னு நச்சரிக்க ஆராம்பித்திருக்கிறார். ப்ளாம்ஸ்ஸ்டீட் என்னுடைய தகவல்கள் முழுமையானது அல்ல இன்னும் சில உறுதிப்படுத்தபட வேண்டும் அதனால் தர முடியாது என்றார். 

      அதே ராயல் சொசைடி யில் இன்னொரு வானியல் அறிஞர் இருந்தார். அவர்தான் எட்மண்ட் ஹாலி (இவர் ஒரு வால் நட்சத்திரத்தை கண்டறிந்தார்.அதனால் அதற்கு ஹாலி வால் நட்சத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டது).ஹாலிக்கும் ப்ளாம்ஸ் ஸ்டீடுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட லடாய் . எதிரிக்கு எதிரி நண்பன்தானே. ஹாலியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ப்ளாம்ஸ் ஸ்டீடுக்கு நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார் .ப்ளாம்ஸ் ஸ்டீட் உடைய  ஆராய்ச்சி தகவல்களை கிரீன்விச் வானியல் மையத்தில் சீல் வைத்து வைக்கப் பட்டிருந்தன.

      ராயல் சொசைட்டி தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி வானியல் மையத்தின்  நிர்வாகத்துக்குள்  தன்னை எப்படியோ நுழைத்துக் கொண்டு ப்ளாம்ஸ்ஸ்டீடின் தகவல்களை வெளியிட நெருக்குதல் கொடுத்தார். ஹாலியும் நியூட்டனும் சேர்ந்து  அரசியல் ஆட்டம் ஆடி அவசரமாக திருத்தம் செய்யப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப் படாத  ப்ளாம்ஸ் ஸ்டீடின் வானியல் தரவுகளை அவசர அவசரமாக வெளியிட முயற்சி செய்தனர். திருட்டு வி.சி.டி வெளியிடுகிற மாதிர் அவர் எழுதினதை அவருக்கே தெரியாம Pirated Notes ஐ வெளிட்டனர் . டென் மார்க்கின் இளவரசர் ஜார்ஜ் "அறிவாளிகள் நல்லது தானே செய்வாங்கன்னு நம்பி நூலை வெளியிட ஆகும் செலவை ஏற்றுக்கொண்டு வெளியிடப் பட்டும் விட்டது. தகவல் அறிந்த ப்ளாம்ஸ் ஸ்டீட் துடித்துப்  போய் அவசர அவசரமாக நீதிமன்றம் சென்று  நூல் வெளியீட்டுக்கு தடை வாங்கினார். இருந்தும் தடைக்கு முன்னதாகவே 400பிரதிகள் வெளியிடப் பட்டுவிட 300 ஐக் கைப்பற்றி விட்டார். என்றாலும் 100  என்ன ஆயிற்றோ தெரியவில்லை .

   இந்த போட்டியில் அப்போதைக்கு ப்ளாம்ஸ் ஸ்டீட் வெற்றி பெற்றுவிட்டாலும் பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் நியூட்டன். பின்னாளில் வெளியான தனது நூலில் ப்ளாம்ஸ் ஸ்டீடின் தரவுகளை பயன்படுத்தி இருந்தாலும் அதை திட்டமிட்டு மறைத்து விட்டு தனது  நூலை வெளியிட்டு பழி தீர்த்துக் கொண்டார்

      நியூட்டனிடம் படாதபாடு பட்ட ப்ளாம்ஸ் ஸ்டீட் 1719 இல்  இறந்து விட்டார் . என்றாலும் அவர் இறக்கும் வரை அவரது விண்மீன்கள் பற்றிய ஆய்வகள் பற்றிய குறிப்புகள வெளியிட முடியவில்லை. பின்னர் 1725 இல்   Historia Coelestis Britannica என்ற நூல் அவருடைய மனைவி மார்கரெட்டால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 3000 விண்மீன்களைப் பற்றிய துல்லியமான அவரது குறிப்புகள் அதுவரை வேறு எந்த வானியல் அறிஞராலும் கண்டறியப்படாதவை .

  இப்போது சொல்லுங்கள் பதிவின் தலைப்பு  பொருத்தமானதுதானே

      டேவிட் கிளார்க்  ஸ்டீபன் (தந்தை மகன்) கிளார்க் என்ற இருவரும்  இணைந்து எழுதிய Newton's Tyranny என்ற தங்களது புத்தகத்தில் ப்ளாம்ஸ் ஸ்டீட்டை நியூட்டன் படுத்திய  பாட்டை விளக்குகிறார்கள் .  கோபம், வஞ்சகம்,சூழ்ச்சி, பொறாமை,குணம் கொண்டவராக நியூட்டன் சித்தரிக்கப் படுகிறார்.
       நியூட்டன்தான் இறக்கும்(இருக்கும்) வரை பல ஜால்ராக்களுடன் செல்வாக்குடையவராக இருந்திருக்கிறார்.
      அற்புத விஞ்ஞானியான நியூட்டனின் இந்த குணாதிசியங்கள்  நமக்கு சற்று அதிர்ச்சி ஏற்படுத்தக்  கூடியவை .  ப்ளாம்ஸ் ஸ்டீட் மட்டுமல்ல இன்னும் பலருடன் நான்தான் முந்தி என்ற ரீதியில் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
       அவர்களில் காட்ஃப்ரைட் வில்ஹெம் லெபனைஸ்   என்ற  புகழ் பெற்ற கணித மேதையுடன் ஏற்பட்ட அறிவுச் சண்டை  சட்டையை பிடித்துக் கொள்ளாத குறையாக இருந்தது. சண்டையில் நியூட்டன் ஜெயித்து விட்டார்.  என்றாலும்  லெபனைஸ் மீதான வன்மம் அவருக்கு சிறிதும் குறையவில்லை . சிறிது காலத்திற்கு லெபனைஸ்  இறந்தபோது  நியூட்டன் சொன்னது  என்ன தெரியுமா? தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

     தெரிந்து  கொள்ள  தயவு செய்து அடுத்த பதிவு வரை காத்திருக்க முடியுமா?
 அப்படி எதற்குத்தான் இரண்டு பேரும் குடுமிப் பிடி சண்டை போட்டார்கள்? சுவாரசியமான அந்த மோதலை இதே பதிவில் விவரிக்கலாம் என்றுதான் நினைத்தேன் இந்தப் பதிவு ஏற்கனவே நீளமாகி விட்டதால்  அடுத்த பதிவில் தொடர்கிறேன்
(தொடரும்) 

அடுத்த பகுதியை படிக்க 

********************************************************************************
படித்து விட்டீர்களா?

30 கருத்துகள்:

  1. நியூட்டன் பற்றி அறியாத தகவல்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. நியூட்டன் பற்றி விடயங்கள் என்னைப்போன்ற ஒண்ணுந் தெரியாதவர்களுக்கு புதியதே...
    தமிழ் மணம் 1
    அருந்ததியை பார்க்க வாருங்கள். நண்பா,,,,

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ ராம் ஜி அவர்களின் பாஸிடிவ் செய்திகள் போல் ,நெகடிவ் செய்திகளாய் நீங்கள் சொல்வதுவும் ரசிக்க வைக்கிறது :)
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியூட்டன் விஞ்ஞானிகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவர். சமீபத்தில் அவரது இன்னொரு முகத்தை ஸ்டீபன் ஹாகிங் புத்தகத்தில் அறிந்தபோது என்மனதில் இருந்து சரிந்து விழுந்தார்.
      உணல் அறிவியலை மாற்றிய அந்த விஞ்ஞானி
      கலக அறிவியல் செய்திருப்பது உண்மையில் வருத்தம் அளிக்கிஇது அவர் லெபனைஸ் என்ன சொன்னார் என்பதை அறிந்தால் நீங்களும் அதை ஏற்றுக் கொள்வீர்கள்

      நீக்கு
    2. இது தான் என் கொள்கையும்.

      நீக்கு
    3. negative இருந்தால்தானே +ve இன் அருமை தெரியும்//

      ஆம்! என்ன அறிவு இருந்தாலும் முதலில் மனிதனாக மனித நேயத்துடன் இருப்பதுவே முக்கியம்.....இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள முடிகின்றது. நாம் இது போன்ற அறிவாளிகளிடம், நாம் எப்படி இருக்கக் கூடாது என்று. குழந்தைகளிடம் சொல்லுவது எனவே அவர்களின் நல்லதை எடுத்துக் கொண்டு நெகடிவ் சைடை அப்புறப்படுத்தி, அதிலிருக்கும் பாடங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, னீ என்ன பல சாதனைகள் செய்தாலும் நல்ல மனிதனாக இரு முதலில் என்று....

      துளசிதரன்,.......கீதா

      நீக்கு
  4. சர்வ சாதாரண மனிதராக இருந்திருக்கிறாரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இருக்கிறது அதைப் படித்தால் அவர் மீதான மரியாதை நிச்சயம் குறையும்

      நீக்கு
  5. ஹா...ஹா...ஹா.... பகவான்ஜி!

    நியூட்டனின் மறுபக்கம்! "எனக்கு இன்னொரு பக்கம் இருக்கு... பார்க்காதே... பார்த்தா.... நோந்துடுவே.." என்கிறாரோ நியூட்டன்!

    பதிலளிநீக்கு
  6. Researchers will be involved in lot of politics. In all the national institutions of India has these kind of researcher cum politicians are very common

    பதிலளிநீக்கு
  7. அறிவியலாளர்களைப் பற்றிய அரிய செய்தியினை அறிந்தேன். அறிவுச்சண்டையைக் காணக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் நமக்கும் ஒரு பாடமாக இருக்கிறது.சாதித்தவர்களின் மறுபக்கம் குறித்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் எந்த தலைவராக இருப்பினும் பதிவிடுங்கள் ஆவலாக உள்ளேன் நன்றி..........

    பதிலளிநீக்கு
  9. நியூட்டன் பற்றி தெரியாத தகவல்கள் நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  10. நியூட்டன் பற்றிய புதிய தகவல்கள்
    ஆனால் ந்ம்மூர் அரசியவாதிகள் பலர் விஞ்ஞானிகள்தான்!சர்காரியா சொன்னார் இவர்கள் சயிண்டிஃபிக் ஆக ஊழல் புரிவதாக!

    பதிலளிநீக்கு
  11. நியூட்டன் போன்றே தாமஸ் ஆல்வா எடிசனும் டெஸ்லா என்ற அதி அற்புத விஞ்ஞான மேதையை ஓட ஓட விரட்டியவர்தான். இன்றைக்கு எடிசனின் டிசி மின்சாரத்தைவிட டெஸ்லா பரிந்துரைத்த ஏ சி மின்சாரமே உலகத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nikola Tesla மிகச் சிறந்த அறிவியல் மற்றும் மின் பொறியியல் வல்லுநர். அவர் கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் அவருடைய காலத்திற்கு அப்பாற்பட்டவை. எடிசனால் ஏமாற்றப்பட்ட பின்னர் அவருடைய கண்டுபிடிப்புகள் வெளிவந்த வேகம் அபாரமானது..

      நீக்கு
  12. காற்று கூட நுழையாத இடத்திலும் நுழையும் அதிசய கிருமிதானே (அரசியல்).
    அது அறிவியலாரின் ஆய்வகத்துக்குள் நுழைந்ததில் என்ன ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    முரளி அண்ணா
    தகவல் பிரமிக்கவைக்கிறது அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல. த.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. அறிவாளிகள் எப்போது மற்ற அறிவாளிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?. சண்டையும் சச்சரவும் அரசியவாதிகளுக்ககும் இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல. அறிவியல் அறிஞர்களுக்கும்கூட சொந்தம்தான்.// உண்மையே! அறிவு ஜீவிகளின் ஈகோ மோதல்களும், ஒருவருக்கொருவர் இப்படிச் செய்வதும் பரவலாக உள்ளதுதான். இந்த அறிவு சற்று மிகையாகும் போது எசகு பிசகாக மூளை வேலை செய்வது எக்சென்ட்ரிக் என்று சொல்லுவார்களே அது போன்றும், பொறாமையாலும், ஈகோவினாலும் தான் தான் சிறந்தவர் என்று மேலோங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பதும் நடக்குமாம்.....அறிவு இப்படி இருந்து என்ன பயன்.....தொடர்கின்றோம் காத்திருக்கின்றோம் அடுத்த பதிவிற்கு...

    பதிலளிநீக்கு
  15. அண்ணா
    எடிசன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார் என ஏற்கனவே கேள்விபட்டிருக்கிறேன்.நம்ம விஞ்ஞானிகள் இதில் பாதிக்கப்பட்டதாகவும் கேள்விபட்டிருக்கிறேன். இது ரொம்ப கொடுமையா தான் இருக்கு. வெற்றியாளர்களின் இன்னொரு பக்கத்தை தெரிந்துகொள்வது மிகமிக அவசியம். ரொம்ப சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. நியூட்டனின் இன்னொரு முகம்... அப்பா!

    மேலே தெரிந்து கொள்ள அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  17. அறிவு மட்டும் போதுமானது அல்ல. அரசியல் வாதிகளுக்கே உரித்தான தந்திரங்களும் சூழ்ச்சிகளும் அவசியமல்லவா. ...
    இது வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை சொல்லாமற் சொல்லுகிறது.
    அருமைப் பதிவு. அறிவோம் அதிகம்
    நன்றி சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  18. Integral Calculus என்கின்ற தொகை நுண் கணிதம் பிரிவை கண்டுபிடித்தது யார் என்பது தொடர்பாக Newton மற்றும் Lebnitz-க்கு இடையே நடந்த வாய்க்கால் தகராறும் அதில் Royal Society - யின் தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி Newton செய்த கோல்மால் உலகுக்கு அந்த அளவுக்கு தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை இரண்டாவது பகுதியில் எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தால் வாசிக்கவும்

      நீக்கு
  19. "On the Shoulders of Giants" படித்த பின்னர், எனக்கும் Newton -நின் மறுபக்கம் தெரிய வந்தது... நாம் தேவையில்லாமல் யாருக்கும் புனிதர் பட்டம் கொடுக்க வேண்டாம் என்பதையும் எல்லாரும் "நல்லது கெட்டது" சரி விகிதத்தில் கலந்த "மனிதர்கள்" என்பதையும் உணர வைத்த நூல் அது....

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895