என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 26 ஜூன், 2015

குலுங்கி அழுது கேட்கிறேன்-"என்னை ஏன் கைவிட்டீர்?"

      
இந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி 
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"ஒரு கைலியின் டைரிக் குறிப்பு
     இளைய தலைமுறையினரே! இது நியாயம்தானா?  இப்போதெல்லாம் நீங்கள் யாரும் என்னை சட்டைசெய்வதில்லையே ( நீ கைலி ஆயிற்றே உன்னை எப்படி சட்டை செய்ய முடியும் என்று பகடி பேச வேண்டாம்)  நடுத்தர வயதினர் மட்டும்தான் எனக்கு தங்கள் இடையில் இடை ஒதுக்கீடு மன்னிக்கவும் இட ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.. அரை டிராயர் காலம் முடிந்தபின் என் ஆட்சி தொடங்கியது பழங்கதை. இப்போதோ நீங்கள் அரை டிராயரும் முக்கால் டிராயரும் பயன்படுத்த முடிவுசெய்துவிட்டீர்களே. வேட்டி கட்டுமுன் என்னை முதலில்  கட்டித்தானே பழகி இருந்தீர்கள்.. ஆடையாகத்தான்  எனக்கு அவ்வளவாக பெரிய மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் என்னை ஒதுக்காமல் இருந்தீர்கள். ஆனால்  சமீப காலங்களில் நான் உங்களால் தீண்டப் படாதவனாகி விட்டேன்.
      திரைப்படத்தில் கூட ரவுடிகளுக்கு என்னை அணிவித்து பயமுறுத்தினீர்கள். ஆனால்இப்போதெல்லாம் திரையில் வரும் ரவுடிகள்  கூட பெர்முடாஸ் அணிந்து அதன் மேலே லுங்கியை சும்மாதானே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் .ஷாருகான் கூட லுங்கி டான்ஸ் ஆடினாலும் டான்ஸ் பிரபலமாச்சே தவிர  லுங்கி பிரபலமாகவில்லையே! 
        என்னால் எவ்வளோ நன்மை அடைந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? என்னை எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பீர்கள். உடலின் ஒரு பாதியை மறைக்கும் ஆடையாக மட்டுமாக இருந்தேன்?. போர்வை இல்லாவிட்டாலும் நடு இரவில் தூங்கும்போது அப்படியே போர்த்திக் கொண்டு உறங்குவதற்கும் அல்லவா உதவினேன் ..வேட்டி கட்டியவர்களுக்கு சிலநேரங்களில்  வேட்டி அவிழுந்து விடும் அபாயம் உண்டு. ஆனால் என்றாவது திடீரென அவிழ்ந்து அவதிக்குள்ளாக்கி இருக்கேறேனா? வேட்டி போல என்மீது படிந்த அழுக்கை காட்டிக் கொடுத்திருக்கிறேனா . வேட்டியில் சட்டென்று வழித்து எடுத்து முகம் துடைக்க முடியுமா?   அம்மாவின் சேலையைப் போல எனக்கும் குழந்தைகளுக்கு தூளியாகும் வாய்ப்பை நீங்கள்தானே அளித்தீர்கள்.  எந்த இடத்தில் கிழித்திருந்தாலும் கிழிசலை காட்டாமல் மறைத்துக கொள்ளும் வசதி என்னைத் தவிர வேறு எந்த உடையில் உண்டு?  அப்படியே முழுவதும் கிழிந்து போனாலும் என்னை நீங்கள் விடவில்லையே! தலையணை உறையாக்கி தைத்துப் போட்டதை ஏன் மறந்து விட்டீர்கள்?. சமையலறையின் கைப்பிடித் துணியாகவும் அல்லவா நான் இருந்திருக்கிறேன். மிச்சம் மீதியை உங்கள் இருசக்கர வாகனங்களை துடைக்க நீங்கள் எடுத்துப் பயன்படுத்தியது இல்லையா? உண்மையை சொல்லுங்கள். உங்கள் வீட்டு மிதியடியாகவும் வாழ்ந்த பின்தானே  என்னை வழி அனுப்பி வைத்தீர்கள்?  இப்போது உங்களுக்கு  என்ன ஆயிற்று. என் மீது ஏனிந்தக் கோபம்.  
ஆண்களுக்கு மட்டுமா நான் ? அரிதாக சில இடங்களில் பெண்களும் என்னை அணிந்திருக்கிறார்களே.
         எனக்கு வில்லனாய் வந்து வாய்த்த பெர்முடாஸில் அப்படி என்னதான் இருக்கிறது? கோகோகோலா வந்ததும் கோலி சோடாவை மறந்ததுபோல ஆகி விட்டது என் நிலை.  லுங்கி கட்டினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கும் பெரிசுகள் கூட இப்போது பெர்முடாஸில் அலைகிறார்களே. பாத்ரூம் போவதற்கும், என்னை அணிந்தால்தானே வசதியாக இருக்கும். எந்த விதத்தில் நான் குறைந்து போனேன்?
     வேட்டியை பிரபலமாக்க வேட்டி  திருவிழா நடத்தினாரே சகாயம்  ஐ.ஏ.எஸ். அவர் கூட நான் இருப்பதை மறந்து விட்டாரே! இல்லாவிட்டால் லுங்கித் திருவிழாவும் சேர்ந்தே அல்லவா நடத்தி இருப்பார். வேட்டிக்கு அட்டகாசமாக விளம்பரம் கொடுக்கும் நம்ம பிரபலங்கள் என்றாவாது கைலிக்கு   விளம்பரம் தர முன் வந்திருக்கிறார்களா? பொங்கலுக்கு இலவச வேட்டி வழங்குவது போல் இலவச   கைலி  வழங்கினால் எத்தனை கைத்தறி நெசவாளர்கள் வாழ்த்துவார்கள்.
        கோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும்  வீட்டுக்குள்ளாவது இருந்தேனே! என்ற நிறைவுடன்தான் இருந்தேன். ஆனால் இப்போது அது கூட இல்லையே! 

      முன்பெல்லாம் பிளாட்பாரத்தில் கடைவிரித்து குறைந்த விலையில் லுங்கி விற்றுக் கொண்டிருப்பார்கள் இப்போது அவர்களும் பெர்முடாசுக்கு மாறி விட்டார்கள். வேட்டிக்காக குரல் கொடுத்த முகநூல்,ட்விட்டர் புரட்சியாளர்கள் எனக்கும் கொஞ்சம் குரல் கொடுப்பார்களா?
       இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் ,பர்மா போன்ற பக்கத்து நாடுகளிலும் என்னை அணிந்துமகிழ்ந்தார்கள்.என்னை சிலர் முஸ்லீம்களின் ஆடை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  . நம்முடைய கால நிலைக்கு நானே பொருத்தமானவன். ஆனால் ஏனோ பலரும் என்னை அநாகரீகமானவர்களின் உடையாகக் கருதி  கோவில்கள் ஹோட்டல்கள் கிளப்புகள் என்று பல இடங்களிலும் அனுமதி மறுக்கிறார்கள். வேட்டி கட்டிய நீதிபதியையே திருப்பி அனுப்பியவர்கள் ஆயிற்றே நம்மவர்கள். கைலி அவர்களுக்கு கேலிப் பொருளாகி விட்டதோ? இறுக்கமான மேலை தேசத்து உடைகளுக்கு அடிமையாகி விட்டவர்களிடம் உருக்கமாக பேசி என்ன பயன்?

     பங்களாதேஷில்  பரிதரா என்ற இடத்தில் லுங்கி அணிந்து கொண்டு வர தடைவிதித்தார்கள் .அதை எதிர்த்து போராட்டமே நடத்தப் பட்டது. உயர் நீதி மன்றம் தலையிட வேண்டிய நிலைக்கு போய் விட்டது, இப்படி படிப்படியாக எனக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வெற்றியும் கண்டு விட்டீர்களே.!இதானல் நீங்கள் அடைந்த பயன்தான் என்ன?
     நான் ஏழைகளின்  ஆடைதான். என்றாலும்   நடுத்தரவர்க்கமும் என்னுடன் நட்பு பாராட்டியது.ஆனால் இப்போது?
கட்டம் போட்டு காட்சி அளித்த  என்னை திட்டம் போட்டு ஒதுக்கி விட்டீர்களே!
கவனிப்பு குறைந்து கிடக்கும் நான் (கு)லுங்கி, அழுது கேட்கிறேன்"என்னை ஏன் கைவிட்டீர்?"


************************************************


நேரம் கிடைக்கும்போது இதையும் படித்துப் பாருங்கள் 


செவ்வாய், 23 ஜூன், 2015

நீயா? நானா? மதுரை எபிசோடு-வைரமுத்து கவிதை

     

     முன்பெல்லாம்   நீயா நானா நிகழ்ச்சியை பார்க்காமல் தவற விட்டால் யூ ட்யூபில் பார்த்துக கொள்ளலாம். வேண்டுமென்றால் டவுன்லோட் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது நீயா நானா யூ ட்யூபில் கிடைப்பதில்லை. ஹாட்ஸ்டார் மூலமாகத்தான் பார்க்க முடிகிறது. அதுவும் டவுன்லோட் செய்ய முடிவதில்லை.பழைய எபிசோடுகளும் யூ ட்யூபில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

        கடந்த  வார நீயா நானாவில் மதுரை நகரம் பற்றி மதுரை வாசிகள் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்க்கவில்லை. பார்த்தவரை  அந்நகரத்தின் மீதான ஈர்ப்பு, 'நான் மதுரைக்காரன்' என்ற  பெருமை ஒவ்வொருவருடைய பேச்சிலும் தெரிந்தது.
    2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கம் வளர்த்த  பழைய நகரமான  மதுரை இன்னமும் அதன் பொலிவை இழக்காவிட்டாலும் பெருமளவுக்கு வளரவில்லை என்பது சிலரின் ஆதங்கமாக இருந்தது.. நகரம் என்று சொல்லிக்கொண்டாலும் மதுரை கிராமத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது என்பது அதன் பெருமை என்றாலும் அதுவே குறைபாடும் ஆகும் என ஒரு சிலர் தெரிவித்தனர்.
       திரைப்படத்துறையில் மதுரைக்காரர்களின் ஆதிக்கம் செலுத்தி பெருமை சேர்த்தாலும் அதே சினிமாதான்  .மதுரை என்றாலே வீச்சரிவாள் ரவுடிகள் என்ற ஒரு பிம்பத்தையும் மதுரையைப் பற்றி அறியாதவர்களுக்கு ஏறபடுத்தியது
   நான் முழுமையாக் பார்க்கதாதால் விரிவாக எழுத முடியவில்லை.
ஆனால் என்ன? கவிப் பேரரசு வைரமுத்து தனது  கவிதையில் மதுரையை அழகாக நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.அந்தக் கவிதையை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீகள் என்றாலும் இன்னொரு முறை படித்தாலும் நிச்சயம் அலுக்காது .

இதோ உங்களுக்காக வைரமுத்து படைத்த மதுரை . 

                                                               மதுரை 

                             பாண்டியன் குதிரைக் குளம்படியும்-தூள்
                                   பறக்கும் இளைஞர் சிலம்படியும்-மதி 
                            தோண்டிய புலவர் சொல்லடியும்-இனம் 
                                    தோகைமார்தம் மெல்லடியும் 

                              மயங்கி ஒலித்த மாமதுரை -இது 
                              மாலையில் மல்லிகைப் பூமதுரை 

                             நீண்டு கிடக்கும் வீதிகளும்-வான் 
                                   நிமிர்ந்து முட்டும் கோபுரமும் 
                             ஆண்ட  பரம்பரை சின்னங்களும்-தமிழ்
                                  அழுந்தப் பதித்த சுவடுகளும் 

                             காணக்  கிடைக்கும் பழமதுரை-தன்
                             கட்டுக் கோப்பால் இள மதுரை !

                             மல்லிகை மௌவல் அரவிந்தம்- வாய்
                                 மலரும் கழுநீர் சுரபுன்னை 
                             குல்லை வகுளம் குருக்கத்தி-இவை 
                                 கொள்ளை அடித்த வையை நதி 

                              நாளும் ஓடிய நதி மதுரை-நீர் 
                              நாட்டியமாடிய பதிமதுரை

                             தென்னவன் நீதி பிழைத்ததனால்-அது 
                                  தெரிந்து மரணம் அழைத்ததனால் 
                              கண்ணகி திருகி எறிந்ததனால்-அவள் 
                                  கந்தக முலையில் எரிந்ததினால் 

                             நீதிக்  கஞ்சிய தொன்மதுரை -இன்று 
                             ஜாதிக் கஞ்சும் தென்மதுரை 

                             தமிழைக் குடித்த கடலோடு-நான் 
                                 தழுவேன் என்றே சபதமிட்டு
                             அமிர்தம் பரப்பும் வையை நதி -நீர் 
                                 ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 

                             மானம் எழுதிய மாமதுரை-இது 
                             மரபுகள் மாறா வேல் மதுரை 

                             மதுரை  தாமரைப் பூவென்றும் -அதன் 
                                 மலர்ந்த இதழே தெருவென்றும் 
                            இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை 
                                 எம்குடி மக்கள் திரளென்றும்-பரி

                             பாடல் பாடிய பால் மதுரை-வட
                             மதுரா புரியினும் மேல்மதுரை

                            மீசை  வளர்த்த பாண்டியரும்-பின் 
                                களப்பிறர் பல்லவர் சோழர்களும்-மண் 
                           ஆசை வளர்த்த அந்நியரும்-அந்த 
                               அந்நியரில் சில கண்ணியரும்

                            ஆட்சிபுரிந்த தென்மதுரை-மீ 
                            னாட்சியினால்  இது பெண்மதுரை 

                             மண்ணைத் திருட வந்தவரை- தம்
                               வயிற்றுப் பசிக்கு வந்தவரை-செம்
                            பொன்னைத் திருட வந்தவரை-ஊர் 
                               பொசுக்கிப் போக வந்தவரை-தன்

                             சேயாய்  மாற்றிய தாய்மதுரை-அவர்
                              தாயாய் வணங்கிய தூயமதுரை 

                            அரபுநாட்டுச் சுண்ணாம்பில்-கரும்பு 
                               அரைத்துப் பிழிந்த சாறூற்றி
                            மரபுக் கவிதைபடைத்தல் போல் -ஒரு 
                                மண்டபம் திருமலை கட்டியதால் 

                            கண்கள்  மயங்கும் கலைமதுரை-இது 
                             கவிதைத் தமிழின் தலை மதுரை 

                            வையைக் கரையின் சோலைகளும்-அங்கு 
                                 வரிக்குயில் பாடிய பாடல்களும் 
                            மெய்யைச் சொல்லிய புலவர்களும்-தம் 
                                 மேனி கருத்த மறவர்களும் 

                            மிச்சமிருக்கும்  தொன்மதுரை-தமிழ் 
                                 மெச்சி முடிக்கும் தென் மதுரை 

                           போட்டி வளர்க்கும் மன்றங்களும்-எழும் 
                                பூசைமணிகளின் ஓசைகளும்-இசை 
                           நீட்டி முழங்கும் பேச்சொலியும்-நெஞ்சை 
                                நிறுத்திப் போகும் வளையொலியும்

                            தொடர்ந்து கேட்கும் எழில் மதுரை-கண் 
                              தூங்காதிருக்கும் தொழில்மதுரை 

                            ஆலைகள் தொழில்கள் புதுக்காமல்-வெறும் 
                                  அரசியல் திரைப்படம் பெருக்கியதில் 
                             வேலைகள்  இல்லாத் திருக்கூட்டம் -தினம் 
                                   வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 

                              பட்டாக்  கத்திகள் சூழ்மதுரை-இன்று 
                              பட்டப் பகலில் பாழ்மதுரை 

                              நெஞ்சு வறண்டு போனதனால் -வையை 
                                  நேர்கோடாக ஆனதனால் 
                              பஞ்சம் பிழைக்க வந்தோர்-நதியைப் 
                                  பட்டாப் போட்டுக் கொண்டதனால் 

                             முகத்தை இழந்த முதுமதுரை-பழைய 
                                    மூச்சில் வாழும் பதிமதுரை



அவர் கருத்து சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் 


**************************

கொசுறு:மதுரை என்றதுமே எனக்கு நினைவுக்கு வந்தது கடந்த  ஆண்டில் நடந்த அற்புதமான பதிவர் சந்திப்புதான். திரை உலகம் மட்டுமல்ல வலை உலகிலும் மதுரைப் பதிவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 



வியாழன், 18 ஜூன், 2015

ஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம் மாட்டிக் கொண்ட நண்பன்

பல ஆண்டுகளாக பல பதிவர்களின் பதிவுகளை அறிமுகபடுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு உதவிய வலைச்சரத்தில் திடீர் தொய்வு ஏற்பட்டது.அப்போது பிரபல பதிவர் தமிழ் இளங்கோ அவர்கள் பல ஆலோசனைகள் கூறினார். அவற்றில் ஒன்று வலைச்சர  ஆசிரியர் கிடைக்காதபோது முன்னர் வெளியிட்ட சிலவற்றை மீள் பதிவு செய்யலாம் என்பது. அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சமீப காலமாக வலைப்பதிவுகள் எழுத முடியல. அதனால் எப்போதாவது சில பதிவுகளை ( முன்னர் அதிகம் கண்டுகொள்ளப் படாத பதிவுகளை ) மீள் பதிவு செய்ய உத்தேசித்ததன் விளைவே இந்தப் பதிவு.
ஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம்  மாட்டிக் கொண்ட நண்பன் 
(எப்படி மாட்டிக்கிட்டான்னு பதிவின் கடைசியில பாருங்க !)
  கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு ஆச்சர்யம் என்னவெனில் இன்றும் பள்ளிச் சிறுவர்கள் விரும்பும் விஞ்ஞானியாக இருப்பது ஆல்பார்ட்  ஐன்ஸ்டீன்.
முக நூல் பக்கங்களில் அடிக்கடி இவரது படங்களை காணமுடிகிறது. நிறையப் பேருடைய ப்ரொஃபைல் படங்களாக இருக்கிறார். இத்தனைக்கும் இவருடைய விஞ்ஞானக் கருத்துக்கள் கல்லூரிகளில்தான் பாடப் பொருளாக உள்ளது. புரிந்து கொள்வதற்கும் கடினமானது 

   இவரைப் போன்றவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் கதைகளாகக் கூறப் படுகின்றன. இவை உண்மையாக நடந்திருக்காது  என்றாலும் அவை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
இதோ அதுபோல் ஒன்று.

  ஐன்ஸ்டீன் ஒரு முறை ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்து கொண்டிருந்தாலும் அவரது சிந்தனை வேறெங்கோ அறிவியல் கருத்தை அடைய பயணம் செய்துகொண்டிருந்தது. சூழ்நிலை மறந்து சிந்தனை வயப் பட்டிருந்த அவரை ரயில் டிக்கெட் பரிசோதகர் அவருடைய பயணச் சீட்டைக் காட்டும்படி கேட்டு அவரது சிந்தனையைக் கலைத்தார்.

   ஐன்ஸ்டீன் டிக்கட்டைக் எடுப்பதற்காக பாக்கெட்டில் கைவிட்டார். அங்கு அதைக் காணவில்லை.வைத்த இடம் நினைவுக்கு வராமல் விழித்தார் அந்த விஞ்ஞானி.

   டிக்கெட் பரிசோதகருக்கு அவரை எங்கோயோ பார்த்த நினைவு வந்தது.பின்னர் கண்டு பிடித்து விட்டார் அவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்று.

   "ஐயா, நீங்கள் யாரென்று தெரிந்து கொண்டேன். நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம். நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். டிக்கெட்டைத்  தேட வேண்டாம். பரவாயில்லை." என்று சொல்லிவிட்டு அடுத்தபெட்டிக்கு சென்றுவிட்டார்.

   நீண்ட நேரம் கழித்து மீண்டும்  வந்தார்  பரிசோதகர், அங்கே, ஐன்ஸ்டீன் தன் பையில் உள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு ஆடைகள், புத்தகங்கள்  என்று என்று அலசி டிக்கெட்டை  இன்னமும் தேடிக் கொண்டிருந்தார்.

  அதைப் பார்த்த டிக்கட் பரிசோதகர் "ஐயா, நான்தான் சொன்னேனே டிக்கட் தேவை இல்லை என்று. நாடறிந்த விஞ்ஞானியை நாங்கள் நம்பாமலிருப்போமா? தயவு செய்து தேடவேண்டாம்" என்றார்.
  ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்களுக்காகத் தேடவில்லை.நான் எங்கு போக வேண்டும் என்பதை நான் மறந்து விட்டேன். டிக்கட்டைப் பார்த்துத்தான் அந்த இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதனால்தான் தேடுகிறேன்" என்றார்

  மேலும் "என் மனைவி டிக்கட்டை பையில் பத்திரமாக வைத்ததாகத் தானே சொன்னார்? கிடைக்கவில்லையே!." என்று தேடலைத் தொடர்ந்தார்.

  சிரித்த  டிக்கெட்பரிசோதகர் "கவலைப் படாதீர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மனைவிக்கு  போன் செய்து தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
  அடுத்த ஸ்டேஷன் வந்ததும் டிக்கட் பரிசோதகர் ஐன்ஸ்டீனை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்று உங்கள் மனைவிக்கு போன் செய்து கேளுங்கள் என்றார்.

    தயங்கினார் ஐன்ஸ்டீன்.

    "ஏன் தயங்குகிறீர்கள். மிஸ்டர் ஐன்ஸ்டீன்!. மனைவி திட்டுவார் என்று பயமா?" என்றார் டிக்கட் பரிசோதகர் கிண்டலாக!
   ஐன்ஸ்டீன்  பரிதாபமாக "மனைவியின் தொலைபேசி எண்ணை மறந்துவிட்டேன்"என்றார் 

                            ************************
    பக்கத்து வீட்டில் ஒருக்கும் எனது நண்பன் கையில் சாரி காதில் செல்போன் வைத்துகொண்டு பேசிக்கொண்டே பதட்டமாக வெளியே வேகமாக வெளியே ஓடிவந்தான். அப்போது அவனைப் பார்த்த நான் "என்னடா இவ்வளவு வேகமாக வெளிய வர்றியே" என்றேன் 
  
நண்பன் சோகத்துடன் விவரித்தான் 
"சாயந்திரம்  டூ வீலருக்கு பெட்ரோல் போடறதுக்கு வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பினேன் எங்க வீட்டம்மாவும் நானும் வரேன். என்ன கோவில்ல விட்டுட்டு உங்க வேலைய  முடிச்சிக்கிட்டு வரும்போது திருப்பி என்ன கூப்பிட்டுக்கிட்டு வந்துடுங்க  என்று சொல்ல, நானும் கோவில்ல விட்டுட்டு பெட்ரோல் போட போயிட்டேன்.வேற சில வேலைகள் இருந்தது அதையும் முடிச்சிகிட்டு  திரும்பி அதே வழியா வந்தேன்."
"இதுல என்னடா பிரச்சனை"  

   "இங்கதாங்க என்னோட வினை ஆரம்பமாயிடுச்சு.ஏதோ ஞாபகத்தில கோவில் வாசல்ல எனக்காகாக் காத்துக் கிட்டிருந்த வீட்டம்மாவை கவனிக்காம நான் பாட்டுக்கும் தாண்டி போயிட்டேன். கிட்டத்தட்ட வீட்டுக்கிட்ட போனதும் ஞாபகம் வந்தது. திரும்பி போனதும் கோவில்ல இன்னொரு அம்மனா (பத்ரகாளியா?) நின்னுக்கிட்டிருந்த மனைவியை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு வந்தேன்.
  அப்புறம் எப்படி வாங்கிக் கட்டிக் கட்டிகிட்டிருப்பேன்றதை உனக்கு தெரியாதா என்ன?
   அதோட சும்மா இருந்திருக்கலாம்தானே! சமாதானப் படுத்தறதுக்காகவும் மறதி பெரிய அறிவாளிகளுக்குக் கூட மறதி இருந்ததுன்னு சொல்றதுக்காவும்   இந்த ஐன்ஸ்டீன் கதைய சொன்னேன். அவ்வளவுதான்.

   பொங்கி எழுந்த ஹோம் மினிஸ்டர், "ஐன்ஸ்டீன் அறிவாளி, விஞ்ஞானி, மேதை  அவர் மறந்தார்னா அதுல நியாயம்  இருக்கு. அவர் எவ்வளோ விஷயங்களை கண்டுபுடிச்சி இருக்கார். நீங்க என்ன கண்டுபுடிச்சீங்க! காணாமப் போன கம்மல் திருகாணியக் கூட கண்டுபிடிக்கலயே. ஆனா எத்தனை தொலச்சிரிக்கீங்க! எத்தனை ஹெல்மெட் எத்தனை செல்போன்?. யாரை யாரோட கம்பேர் பண்றதுன்னு  விவஸ்தை இல்லையா?........" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க. நல்லகாலம் அந்த நேரத்தில வழக்கமா மிஸ்டு கால் குடுக்கிற  ஒரு மகராசன் கால் பண்ண அது மிஸ்டு கால்  ஆறதுக்குள்ள பட்டனை அழுத்தி "ஹலோ'...........ஹலோ" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடிவந்துக்கிட்டிருக்கேன்" என்றான் பரிதாபமாக .


**************


கற்றுக்கொண்ட நீதி:

தெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.
வீட்டில யாரு கிட்டயும் சொல்லக்கூடாது. குறிப்பா மனைவி  கிட்ட சொல்லக்கூடாது. ஹி..ஹி,,ஹி,,ஹி,,ஹி 
                          *********************
குறிப்பு: இந்தக் கதையில் ஐன்ஸ்டீன் மனைவி விவகாரம் மட்டும் என்னோட கற்பனை.

********************************************************************
இன்னொரு ஐன்ஸ்டீன் கதை :நேரம்  இருந்தா இதையும் படியுங்க!
என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்



திங்கள், 15 ஜூன், 2015

'திரி'க்குறள்,'சிரி'க்குறள்

                        


நம்ம இஷ்டத்துக்கு திரிச்சி எழுதினா திரிக்குறள்தானே. பதிவு எழுதி ரொம்ப நாளாச்சா? அதான் 
இதை படிச்சி நொந்து நூடூல்ஸ் ஆனா நான் பொறுப்பு இல்ல. நூடூல்சே நொந்து போய் இருக்கே அதுக்கு என்ன பண்றதுன்னு கேக்கப் படாது 


                          1.  முகநூல் நட்பது நட்பன்று-உண்மை
                                 முகமறிய நட்பது நட்பு


                         2.   இருந்தாலும் லைக்கு  இறந்தாலும் லைக்கு                                                       பொருந்தா  முகநூல் விதி

                         3.   யாகவா ராயினும் செல்காக்க  காவாக்கால்
                               போகுமே செல்போன் தொலைந்து

                          4.  அண்டர்வேர்  போட மறந்தாலும் போகாதே
                               ஆண்ட்ராய்டு போனை  மறந்து

                           5.  குல்பி விரும்பும் குழந்தைக்கும் ஏறியதே
                                செல்ஃபி   மோகம்  தலைக்கு

                            6.  கண்பேசி  கைபேசு    முன்பேதான் போயிற்றே
                                 கைபேசிக் காதல் கரைந்து

                            7.  முகநூல் பழசாச்சு டுவிட்டர் போராச்சு
                                  வகையாய் வாட்சப்பில் மூழ்கு

                            8.  காதணியாய் மாறியதே கைபேசி - சாலையில்
                                   வேதனையாய் போச்சே  விபத்து

                            9.  செல்பேசி இல்லானை  செல்லாத  காசாக்கும்
                                    பொல்லாக் கருவி அது

                            10. அடுத்த அறையில் அகமுடையாள்; அன்போ(டு)
                                     அழைத்துப்  பேசினேன் செல்


*************************************************

தொடர்புடைய பதிவுகள்