என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, July 18, 2015

இசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.


    உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உணவை ஊட்டினார் என்ற செய்தியைப் எனது பெட்டிக் கடைப் பதிவில் பகிர்ந்திருந்தேன். அதற்குள்  எம்.எஸ். வியின் மரணச் செய்தி  வரும் என்று எதிர்  பார்க்கவில்லை.

"ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்
அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்"

என்று எம். எஸ். வி யின் பாடல் உண்டு. ஆம் காலதேவன் கணக்கை முடித்தான்.

   எம்.ஜி.ஆர்.  என்.டி.ஆர், .  டி.எம்.எஸ்,எஸ்.பி.பி என்று மூன்று எழுத்து சுருக்கம் வைத்திருப்பவர்களுக்கு   சிறப்புகள் பல உண்டு. இவர்களெல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அந்த வரிசையில் எம்.எஸ்.வி யையும் சொல்லலாம்.
   எம். எ.ஸ். வி பற்றி எழுதும் அளவுக்கு இசை அறிவு பெறாதவன் நான். ஆனால் ஒன்று மட்டும் சொல்ள முடியும். எந்த இசை   சாதாரண மக்களையும்  ஈர்க்கிறதோ அந்த இசையே சிறந்த இசை. எம். எஸ். வியின் இசை அப்படிப் பட்டது. ஆனால் அவரது இசை   பாமரர்களை  மட்டுமல்ல மேதைகளையும் ஆச்சர்யப் படவைத்தது.
     பழைய பாடல்கள் என்றாலே எம்.எஸ். வி இசை யாகத் தான் இருக்கும் என்று நம்புவன் நான்.இந்த மேதையின் ஹார்மோனியத்தில் பிறந்த மெட்டுக்கள் இன்னமும் நம் காதோரம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இவரது கைவிரலில் இருந்து விளைந்து கவிதை ஆடை அணிந்து நம் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம். பொதுவாக பெரும்பாலான  இசை அமைப்பாளர்களின் குரல்வளம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இவரது குரலும் அதற்கு விதி விலக்காக அமையவில்லை  என்றாலும் அவரது குரலில் ஒருகவர்ச்சி உண்டு. ஆனால் அவர் பாடிய  பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்றைப் பெற்றிருக்கின்றன.

 பல்வேறு தரப்பினர் எம்.எஸ்.வி க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர் . இளையராஜா தனது இரங்கல் செய்தியில்

 "எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களை யெல்லாம் கொண்டுவந்தார். அதை ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்" 
என்று குறிப்பிட்டிருந்தார் .


 அவர் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை .மெல்லிசையைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி.வி யின் தாக்கம் இல்லாமல் இசை அமைப்பது கடினம் என்று பல இசை அமைப்பாளர்களும் கூறி இருப்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தன் இசை  பாடல் வரிகளுக்கும் கதைக்கும் துணைபுரியும் விதத்தில்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது மேதைமை வெளிப்படவேண்டும் என்று அவர் விரும்பியதில்லை
     எம்.எஸ். வி. யின் காலத்தில் பெரும்பாலும் இது எம்.ஜிஆர் பாடல்; இது சிவாஜி பாடல்; இது கண்ணதாசன் பாடல் , இது டி.எம்.எஸ்  என்று பாடல்கள் அடையாளம் காணப்படும். ஆனால்  இவர்களுடையை பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம்  எஸ்.வியாகத்தான் இருப்பார். இவர் இசை அமைத்த பாடல்களின் பெருமை நடிகர்,பாடகர், பாடலாசிரியர் எல்லோருக்கும் பரவலாக போய்ச்  சேர்ந்தது. ஆனால் எம். எஸ்.வி அதை பொருட்படுத்தியதும் இல்லை;  வெளிப்படுத்தியதும் இல்லை. தற்போது  பெரும்பாலும் பாடல்களுக்குரிய பெருமை அனைத்தும் இசை அமைப்பாளர்களுக்கே கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கது .

 இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல  பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்  எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர  தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்?
  இந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,

     வைரமுத்து இரங்கல் செய்தியில் சொன்னார், "இனிமேல் இவருக்கு பத்ம விருது ஏதும் வழங்கி அவரை இழிவு படுத்தாதீர்கள். முடிந்தால் பாரத ரத்னா விருது வழங்குங்கள் என்றார்" 
   இந்நாள் முதல்வர் முதல் முன்னாள் முதல்வர்கள் வரை பலரிடம் பணியாற்றி இருந்தும் அதனை இவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை . யாரும் இவருக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர முனையவில்லை. டி.எம்.எஸ்.கூட தன்னுடைய பாடல்களால்  எம்.ஜிஆர், சிவாஜி  பெருமை பெற்றார்கள். ஆனால் யாரும் எனக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியை படித்திருக்கிறேன். ஆனால் எம். எஸ். வி ஒரு போதும் அப்படி சொன்னதாகத் தெரியவில்லை.

    எம்.எஸ். வி யின் இசையமைத்த படங்களில் அவரது பெயர் டைட்டிலில் காட்டப்படும்போது தொடர்ந்து  இசை   உதவி ஜோசப் கிருஷ்ணா என்ற பெயர் காட்டப் படுவதைப் பார்த்திருக்கலாம் . அதிக  தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில்  தரமான பாடல்களை பதிவாக்கித் தந்தவர் எம்.எஸ்.வி.  மெட்டு என்பது இசை அமைப்பாரால் உருவாக்கப்பாட்டலும் அது பாடலாக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை. இசைக் கோர்வைகளை பொருத்தமாக அமைத்து  தனித்தனியாக  பாடப்படும் பல்லவி சரணங்களை தாள லயம் கெடாமல்  இணைப்பது அப்போதைய தொழில் நுட்பத்துக்கு சவாலான செயல். இவற்றில் துணை புரிந்த தனது இசைக் குழுவில் உள்ளவரின் பெயரையும் கூட போடுமாறு   பணித்த பெருந்தன்மை எம்.எஸ்.விக்கே உரித்தானது.
  பொதுவாக வயதான கலைஞர்கள் தற்போதைய நிலையை குறை கூறுவது வழக்கம். இப்போதெல்லாம் என்ன இசை அமைக்கிறார்கள். ஒரே  சத்தம் பாடல் வரிகள் புரியவில்லை.  என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் எம். எஸ். வி  தன் காலத்தக்கு  பிந்தைய இசை அமைப்பாளர்களையும் மனமார பாராட்டவே செய்தார்  மற்ற இசை அமைப்பாளர்களையும்  மதித்தார்

     இப்படி எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த எம்.எஸ். வி என்ற இசைப் பறவை நம்மை விட்டு பிரிந்து பறந்து சென்றுவிட்டது. ஆனால் அது விட்டு சென்ற இசை பேச்சிலும்  மூச்சிலும் எப்போதும் கலந்திருக்கும் . எக்காலத்தும் நிலைத்திருக்கும்

**************************
கொசுறு 
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? 
ஒரு பாடல் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்தானா என்பதை அறிந்து கொள்ள நான் சில அம்சங்களை கவனிப்பேன்.நிறையப் பாடல்களில் சரணத்தின் கடைசி வரி இரண்டு  தடவை பாடப்படுவதைக் காணலாம்'. இரண்டாவது முறை சற்று மெதுவாக பாடப்படும் வரிகள் சரணத்தின் கருத்தை இன்னொரு தடவை மனதில் பதிய வைத்து நம் மனதை அள்ளிச் செல்லும். இந்த உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும்.

உதாரணமாக
தரை மேல் பிறக்க வைத்தான், அதிசய ராகம்,  போன்ற பாடல்கள்   புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே உள்ளிட்ட  தனிப்பாடல்களின் சரணங்களிலும்  இந்த முத்திரையைக் காணலாம்.ஆனால் அது எந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அங்குதான்  இதனைப் பயன்படுத்தி  இருப்பார்.

பாடகர்களாக விரும்புவர்களுக்கும் இசை அமைப்பாளராக விரும்புவர்களுக்கும் இவரது  இசை ஒரு பாடம்.  


                                    ***********************************


34 comments:

 1. எம்எஸ்வி பற்றிய தங்களின் வெளிப்படையான, மனதிற்குப் பட்ட விஷயங்களை அழகிய முறையில் விவரித்திருக்கிறீர்கள்.
  \\"எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து.\\ என்ற இளையராஜாவின் கருத்தையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். எனக்கென்னமோ இளையராஜா இந்தக் கருத்தைத் தாம் இருக்கும் திரையுலகம் பற்றியதாக இல்லாமல் இணையம் பற்றிச் சொல்லியிருப்பதாகவே கருதுகிறேன்.(அவர் இணையத்தைப் படிக்கிறாரா என்பது தெரியவில்லை. வேண்டுமானால் என்ன நடக்கிறது, என்ன எழுதப்படுகிறது என்பதையெல்லாம் பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கலாம்)
  'இனிமேல் இவருக்கு பத்ம விருது வழங்காதீர்கள்' என்ற வைரமுத்துவின் பேச்சும் ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் இறந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்லை என்பது வைரமுத்துவுக்குத் தெரியாதா என்ன?
  எம்எஸ்வியைப் பற்றிய உங்களுடைய பல்வேறு கருத்துக்கள் ஏற்புடையனவே.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா, என் மனதில் பட்டவற்றை எழுதி இருக்கிறேன்.
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
 2. அறியாத நல்ல தகவல்களை
  உள்ளடக்கிய அருமையான அஞ்சலிப் பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நான் பிறந்த காலத்தில் இருந்து அவரின் இசையோடுதான் வளர்ந்துள்ளேன் ,அவரின் கைவிரலில் பிறந்த இசை, எப்போதும் என் மனதில் நடனமாடிக் கொண்டேதான் இருக்கிறது !

  ReplyDelete
 4. அருமையான அலசல் இலங்கை வானொலியில் எம் எஸ். வியின் இசைப்பாக்கள் என்றும் முதலிடம்!

  ReplyDelete
 5. நல்லதொரு பதிவு. அவர் மறைந்து விட்டார் என்று யாருமே நினைக்க முடியாத அளவுக்கு அவர் இசை நம்மோடு என்றும் கலந்திருக்கும்.

  ReplyDelete
 6. ரொம்ப நுணுக்கமான கவனிப்பு தான் அண்ணா! சரியான நினைவேந்தல்!
  சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் தான் இவர் போன்றவர்களின் இயல்பு தெரிகிறது இல்லையா அண்ணா! அதிலும் இவரது குழந்தைத்தமான சிரிப்பு கண்ணைவிட்டு மறையவே இல்லை:(

  ReplyDelete
 7. எதையும் எதிர்ப்பார்க்காது தனது இசையை மட்டும் நெய்தவர்... அதனால் இந்த உச்சம் இவ்வுலகம் உள்ளவரை இசைக்கும்...

  ReplyDelete
 8. நண்பரே,

  எம் எஸ் வி பற்றிய எந்தப் பதிவையும் நான் விடுவதில்லை. அதிலும் இவர் காற்றில் கலந்துவிட்ட இந்த சமயத்தில் அவர் பற்றி நிறையவே இணையத்தில் வருகிறது. நாம் அவர் இருந்த போதே இதைச் செய்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

  நீங்கள் எம் எஸ் வி இசையை கண்டுகொள்ளும் யுக்தி புதிது. எனக்கு அப்படியல்ல. கேட்கும் போதே தெரிந்துவிடும். வி குமார் இசையோடுதான் சிறு குழப்பம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வி,குமார் இசையில் எம். எஸ்.வி.யின் தாக்கம் அதிகம்

   Delete
  2. ஆம் நண்பர் காரிகன்...வி குமார் இசையோடுதான் எங்களுக்கும் குழப்பம் ஏற்படும்....காதோடுதான் நான் பாடுவேன், பாடல் எம் எஸ் வி என்று நினைத்துக் கொண்டிருக்க பின்னர்தான் தெரிந்தது அது வி குமார் என்று....அவரும் நல்ல ஆனால் அவ்வளவாக அறியப்படாத இசையமைப்பாளர்தான்...

   Delete
 9. நண்பரே,

  இன்னொரு செய்தி,

  சிலர் இசை என் ஆன்மாவில் சுவாசத்தில் ரத்தத்தில் இருக்கிறது. அதை அப்படியே தருகிறேன் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஆனால் இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாத ஒரு அப்பாவி என்றால் அது எம் எஸ் வி தான். இசை என்பதன் மனித உருவம் என்று கூட சொல்லலாம்.

  ReplyDelete
 10. என்னையும் முனுமுனுக்க வைத்தவராயிற்றே....த.ம .6

  ReplyDelete
 11. மெல்லிசை மன்னருக்கு
  உலக இசையே உற்சவம் நடத்தி சிறப்பிக்க வேண்டும்!
  இனிய நினைவூட்டல்! நன்றி நண்பரே!
  த ம7
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 12. இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்?
  இந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,// உண்மைதான். நல்லதொரு பதிவு நண்பரே!

  ஆனால் இனி அவருக்கு எந்த விருதும் வழங்கப்பட வேண்டியதில்லை. அது அவருக்கு இழைக்கும் அவமானமே...வைரமுத்து சொல்லி இருப்பது ஹஹஹ அபத்தமாக இருக்கின்றதே. பாரதரத்னா?

  இறுதியில் நீங்கல் சொல்லி இருப்பது போல் அவரது இசை நம்முடன் கலந்து காலமெல்லாம் நிலைத்திருக்கும்....


  ReplyDelete
 13. மெல்லிசை மன்னருக்கு நல்லதோர் அஞ்சலி. அவர் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்......

  ReplyDelete
 14. ராஜா தொடங்கி ரஹ்மான் வரை கோலோச்சினாலும் தமிழ் திரையிசையை எம்.எஸ்.விக்கு முன், எம்.எஸ்.விக்கு பின் என்று மட்டுமே பிரித்து ஆராய முடியும் !

  அந்த மேதையின் மூச்சு இனி பிரபஞ்சம் முழுவதிலும் மெலிசையாய் பரவும்.

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 15. அவருக்கு என்று ஒரு திறமை இருந்தது அந்த திறமையில் மூலம் நமக்கு ரசிக்க நல்ல இசைகிடைத்தது வயதான காலத்தில் சூப்பர் சிங்கரில் வந்து குழந்தைகளை பாராட்டி தட்டி கொடுத்த அவரால் தன் இளம் வயதில் தட்டி கொடுக்கும் போது முதுகை தடவிபார்த்து அதன் பின் தான் பாராட்டுவார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மதுரைத் தமிழன் இது ஒரு உண்மையில்லாத செய்தி. மேலும் இந்த முதுகை தடவிப் பார்த்து பாராட்டுவது பிராமணர்களுக்கு எதிராக பொதுவாக சொல்லப்படும் ஒரு தகவல். இயக்குனர் நடிகர் விசு குறித்து கூட இதையே சொல்வார்கள். ஜீவா என்ற படத்தில் இதை காட்சியாகவே வைத்திருப்பார்கள். ஆனால் எம் எஸ் வி அப்படியானவர் என்று நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. பிராமண வெறுப்பு என்ற அளவில் புனையப்பட்ட இந்தத் தகவலை நீங்கள் சற்று ஆராய்ந்து பின்னர் எழுதியிருக்கலாம்.

   Delete
  2. எம்.எஸ்.வி எந்த இனத்தை சேர்ந்தவர் என்று யோசித்ததில்லை. இப்போது தேடியதில் எம்.எஸ்.வியின் தாத்தா நாயர் இனத்தை சேர்ந்தவர் என்று விக்கி பீடியா கூறுகிறது.நாயர் இனம் பிராம்மண இனத்தை சேர்ந்ததில்லை என்று நினைக்கிறேன்..காரிகன் சொல்வது போல இது இட்டுக் கட்டிய கதையாகத்தான் தோன்றுகிறது

   Delete
  3. இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதிர்ச்சி.

   Delete
 16. அவரது பாடலை அடையாளம் கண்டுகொள்ள தாங்கள் பயன்படுத்திய உத்தி அருமை. வித்தியாசமான பதிவு. நல்ல புகழஞ்சலி.

  ReplyDelete
 17. மனம் நிறையச் செய்யும் அஞ்சலி. நன்றி.

  ReplyDelete
 18. எம்எஸ்வியின் இசையை அடையாளம் காட்ட நிறைய இருக்கின்றன.

  ReplyDelete
 19. தங்களுக்கானப் பார்வையில் எம் எஸ வி தகவல்கள் சிறப்பு. அவரது இசையை தனியாக அடையாளம் கண்டு பிடிக்கும் விதமும் சிறப்பு.

  ReplyDelete
 20. உற்று நோக்கி அநேக விடயங்கள் கொடுதுள்ளீர்கள் இவை நான் அறியாதவை ஆனால் அவர் பாடல்கள் பல என் மனதை கொள்ளை கொண்டவை தான். அதிலும் புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே மிகவும் பிடித்த பாடல். சிறப்பான தகவல். அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 21. வணக்கம்
  முரளி அண்ணா

  msv பற்றி அறியாத விடயங்களை வெகு சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு அவர் மறைந்தாதாக இருந்தாலும் அவரின் தடயங்கள் மறையாது நன்றி.. த.ம 13
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 22. நூணக்கமான ஆய்வு முரளி ! வாழ்த்துகள்!

  ReplyDelete
 23. அவரது இசை ஒரு பாடம்தான்.அருமை முரளி

  ReplyDelete
 24. இறுதிக்காலம் வரை ஓர் உற்சாக மனிதராக பிறரை தூற்றாதவராக வாழ்ந்து காட்டியுள்ளார் மெல்லிசை மன்னர். அவரின் இசை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும்! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 25. அவர் இசை அமைத்த பாடல்களில் என்றும் வாழ்வார்.
  அருமையான அஞ்சலி.

  ReplyDelete
 26. நெஞ்சை விட்டு அகலாத
  எம்.எஸ்.வி நினைவலைகள்
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  ReplyDelete
 27. நிறைவான பயணம் அவருடையது
  உடல்தான் கரைந்திருக்கிறது
  இசை ஜீவித்திருக்கும்
  தம +

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895