என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

என்னை கவுத்துட்டயே சரோ! வித்தியாசமான காதல் கடிதம்


பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. காதலர் தினத்துக்காக எழுதிய இன்னொரு பதிவு முற்றுப் பெறவில்லை என்பதால் பழைய பதிவு ஒன்றை மீள் பதிவாக வெளியிடுவதற்கு மன்னிக்கவும். 2013 இல் திடம் கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் பங்கு பெற்று ஆறுதல் பரிசு பெற்ற இக் கடிதத்தை மீள் பதிவாக வெளியிடுகிறேன். இக் கடிதம் புதிய தலை முறையிலும் வெளியானது . 
(எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கடிதம் மூலம் காதலை சொல்லி விடுவார்கள். குப்பத்தில் வாழும் குமாரை போன்ற நினைத்ததை எழுதத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் காதல் வராதா என்ன? வந்தால் மனதில் உள்ளதை தன் மனம்  கவர்ந்தவர்களுக்கு எப்படி சொல்வார்கள்?   இப்படி சொல்வார்களோ! சென்னை பாஷை  புரியாதவர்கள் கோனார் தமிழ் உரை வாங்கிப் படிக்கவும்  )

என்னை கவுத்து போட்ட சரோஜாவுக்கு,

   அது இன்னமோ தெர்ல சரோ, கொஞ்ச நாளா  உன்னை பாக்கறப்பல்லாம் ஒரு மாரியா கிறு கிறுன்னு ஏறுது. ஆய்ரம் கொசு என்ன மொச்சுக்கினு இருந்தாலும் அடிச்சு போட்ட மாதிரி தூங்குவனா. இப்பெல்லாம் இன்னாடான்னா உன் நெனப்புதான் கொசுவா மொச்சுகிநு என்ன தூங்க வுடாம பண்ணுது. இது என்னாத்துக்கு?.. எப்போ? இப்படி ஆச்சுன்னு ஒண்ணும் புர்ல 

  இதை  எப்டியாவது உன்கிட்ட சொல்லனும்னு பாக்கறேன். தொண்டை வர்ல வந்து பேச்சு முட்டிக்கினு நிக்குது. எழுதி குடுக்கலாம்னா எனுக்கு அவ்வளவா எழுத வராது. அப்பறம்தான் ஒரு ஐடியா வந்திச்சு . பர்மா பஜார்ல 500 ரூபாக்கு ஒரு செல் போனை வங்கனேன்.அதுல பேசறத அப்படியே பதிவு பண்ணலாம்னு சொன்னாங்களா. அங்க நின்னுக்கிட்ருந்த சீனு ன்னு ஒரு தம்பி கிட்ட எப்பிடி ரிக்கார்ட் பண்றதுன்னு கத்துகிட்டனா? அப்புறம் ஊட்டுக்கு வந்து என் மனச புட்டு புட்டு இதுல சொல்லி இருக்கறன். இத்தக் கேட்டுட்டு நீ சொல்றதுலதான் என் வாய்க்கையே இருக்கு. சரோ என் மனசை கவுத்த நீ வாய்க்கைய கவுத்துடாத!

  நீயும் நானும் ஒண்ணாப்புல இருந்து அஞ்சாப்பு வர ஒண்ணாதான கார்பரேசன் இஸ்கூல்ல  படிச்சோம். ஒரு நாள் குச்சி ஐஸ் வாங்கி சப்பிக்கிட்டிருந்தயா. நான் அதை புடுங்கினு ஓடிட்டனா? நீ உங்கம்மா கிட்ட சொல்ல, உங்கம்மா எங்கப்பாகிட்ட சொல்ல எங்கப்பா என்னை குச்சி எடுத்து வெலாச வந்தப்ப நீதானே "பாவம், வுட்டுடுன்னு சொன்ன. அப்ப வந்த இதுவா இருக்குமோ?. அப்புறம் ஒருநாளு கணக்கு டீச்சர் கணக்கு ஓம் ஒர்க் கேட்டப்ப நீ ஒன் நோட்ட குடுத்து என்ன அடி வாங்காம காப்பாத்தினியே அப்பத்துலேர்ந்து இருக்குமோ?எனக்கு ஒண்ணும் புரியல

   எத்தினியோ எலக்சன் வந்து போயும் இன்னும் அய்க்கா இருக்கிற நம்ம குப்பத்துல அயகா இருக்கிற ஒரே பொண்ணு நீதான. இஸ்கூல்ல படிச்சப்ப கூட இவ்ளோ அயகா நீ இல்லையே. இப்போ எப்படி வந்துச்சு. கருப்பா  இருந்தாலும் கலக்கலா இருக்கறய!. புச்சா புடிச்சிகினு வந்த மீனு வலயிலே துள்ளுமே அந்த மாதிரி கண்ணு, அப்புறம் கோன் ஐஸ் மாரி ஒரு கிளிஞ்சல் இருக்குமே! அத கவுத்து வச்ச மாதிரி மூக்கு, கடல்பஞ்சு மாதிரி உன் கன்னம். தூரமா கருப்பா தெரியற கடல் மாதிரி ஒன் முடி, வெள்ளை உப்பை கோத்து வைச்சது மாதிரி பல்லு. இதெல்லாம் பாத்தா மனசு பேஜாராவாதா நீயே சொல்லு. அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு!உன் பல்லு  இவ்ளோ வெள்ளையா கிதே. அது எப்பிடி? உங்கப்பன் பேஸ்டு கூட வாங்கித்தரமாட்டானே. கஞ்சனாச்சே! சரி, சரி, கோச்சுக்காதே! மாமனாரை இனிமே மருவாத இல்லாம பேசமாட்டேன். அப்புறம்.. அது இன்னா கண்ணுக்கே தெரியாத மாதிரி ரெண்டு புருவத்துக்கு நடுவுல இத்துனூண்டு பொட்டு வச்சிக்கினுகிற? அயகாத்தான் இருக்குது இருந்தாலும் கொஞ்சம் பெரிசா வச்சாத்தான் இன்னாவாம். ஒன் ஒதடு மட்டும் லேசா ரோஸா இருக்குதே எப்டி? லிப்டிக் பூசறியா. இனிமே பூசாதே அது நல்லது இல்லையாம். அப்புறம் கல்யாணத்துக்கபுறம்  எனக்கு கஷ்டமா பூடும்.

    அஞ்சு மொழம் பூவு அடி எடுத்து வச்சு வந்த மாதிரி ஒரு நாளு ரேஷன் கடைக்கி அரிசி வாங்க வந்தயே, அரிசிப் பையை தூக்கி இடுப்பில வெக்க  நான்கூட ஒதவி செஞ்சேன். அப்ப உங்கை என்மேல பட்டுச்சி தெரியுமா?  வெண்ணெ  பட்டா எப்படி இருக்கும் அப்படி இருந்துச்சி எனக்கு.
    அப்புறம்  உன்மேல எனக்கு ஒரு இதுன்னு என்கூட சுத்திகினி இருப்பானுங்களே அந்த பசங்களுக்கு தெரிஞ்சிபோச்சா!..என்னாடா உன் ஆளு சரோஜானு பழய பேர் வச்சுக்குனு கீதுன்னு வெறுப்பபேத்துனானுங்க! எனக்கு வந்துச்சே கோவம். கழுத்தாமுட்லயே ஒன்னு உட்டு, "சரோஜாலதான் ரோஜா இருக்குடா பேமானிங்களா" ன்னு கத்துனனா? பசங்க மெர்சல் ஆயிட்டானுங்க. 

   அந்த  சோமாரிங்களுக்கு என்னா தெரியும் உன்ன பத்தி. அந்த பசங்க செவப்பு தோல் வச்சிகினு எல்லாம் தெரியற மாரி காட்டிக்கினு சுத்திக்கினுகிற பணக்கார பொண்ணுங்களுக்கு நூல் வுட்டுக்கினு இருக்கானுங்க. எவனோ இளவரசனாமே ரயில்ல  உழுந்து செத்தானாமே! அந்த மாதிரி இந்த பசங்க எந்த பஸ்சு கீய வுய போறானுங்களோ. வேணாண்டான்னா கேக்க மாட்றானுங்க.  நீ வேணாம்னு சொல்லு; இந்த பசங்க சாவாசத்த கூட இப்பவே  உட்டுடறேன். நீ சொன்னா கூவத்துல கூட குச்சிடுவன் தெர்யுமா?

     இன்னாடா இவன் இப்படி சொல்றானேன்னு நெனக்காத. காலையில ரோட்டுல கடைபோட்டு  இட்லி விக்கிற உங்கம்மாகூட,  இட்லி விக்க போவாத.  அரை நிக்கர் போட்டுக்கினு கள்ளுப்பானை கணக்கா தொப்பை வச்சுகினு தெனோம் ஒடம்பு இளைக்க ஓடிக்கினு கிறானுங்களே அவனுங்கல்லாம் உன்ன ஒரு மாதிரியா பாத்துகினு போறானுங்க. பொண்டாட்டி தொல்லை தாங்காம பீச்சுக்கு வர ஒண்ணு ரெண்டு பெருசுங்க கூட உன்ன பாத்து ஜொள்ளு வுட்டுக்குனு போவுது. சொல்லிட்டேன் சாக்கிரதை.

     அப்பறம்  எவ்வளோ நாள்தான் இப்படியே சுத்திகினி இருக்கறது? உன்ன பாத்துத் தான் செட்டில் ஆவனும்னு எனக்கு ஆசயே வந்துச்சு. நம்பு சரோ! இப்பெல்லாம் நான் தண்ணி அடிக்கிறதில்ல. எல்லோர் கிட்டயும் மருவாதியாத்தான் பேசறேன். ரெண்டு நாளைக்கு  முன்னாடி பழைய ஒண்ணாப்பு டீச்சரைப் பாத்தனா.. தூக்கி கட்டின லுங்கிய எறக்கி விட்டு வணக்கம் சொன்னேன்னா பாத்துக்கயேன். 

     உனக்கு சோறாக்க  தெரியாதாமே! உங்கம்மா எங்கம்மா  கிட்ட கொற பட்டுக்கிச்சாம். பரவாயில்ல சரோ! நான் நல்லா சோறாக்குவேன். அதான் எங்கமாவுக்கு ஒடம்பு சரியில்ல இல்ல. எங்கப்பாதான சோறாக்கி போடுவாரு. நானும் கத்துக்கினேன். நான் மீன் கொழம்பு வச்சா இந்த குப்பமே மணக்கும்; நாலு நாளிக்கு வச்சிருந்து சாப்பிடலாம்னு எங்கம்மா சொல்லும். அப்புறம் நான் மீன் கொயம்பு வக்கும் போதெல்லாம் அஞ்சலை இல்லை? அதான் எங்க பக்கத்து வூட்ல கிதே அதான், மோப்பம் புச்சிகினு வந்து எனக்கு கொஞ்சம் குடுன்னு கேட்டு பல்ல இளிச்சுகினு  நிக்கும். அதுவும் அது மூஞ்சும் அத்த பாத்தாலே எனக்கு புடிக்கல.

    நீ  என்ன  கட்டிக்கினன்னு வச்சுக்கோயேன், நான் உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன். நான் தெனமும் சம்பாரிச்சி கொண்டு வந்து உன்கிட்ட குடுத்துடுவேன். நீ வூட்டயும் கொயந்தங்களையும் பாத்துகினயன்னா போதும். நம்ம புள்ளைங்களை நல்ல படிக்க வச்சு எஞ்சினியராவும் டாக்டராவும் ஆக்கணும்.இன்னா சொல்ற?

   நாந்தான் பொலம்பிகினு கிறேன். நீ இன்னும் கண்டுக்காத மாரிதான் போய்க்கினு கீற. இந்த செல்போனை உன்கிட்ட எப்படியாவது குடுத்து அனுப்பறேன். இதை கேட்டுட்டு எனக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லிடு. அப்பால எப்படியோ என்னவோ நடக்கறது நடக்கட்டும்.

                                                                               இப்பிடிக்கு 
                                           உன்னைபாத்து கொயம்பி போய் கெடக்கும் 
                                                                                   குமாரு


=====================================================================
இந்தக் கடிதம் பிறந்த கதையை தெரிந்து கொள்ள வேண்டுமா கீழே க்ளிக் பண்ணுங்க 

  இந்தக் கடிதம் கடிதம் பிறந்த கதை