என்னை கவனிப்பவர்கள்

புதன், 18 மே, 2016

சென்னையில் வாக்குப் பதிவு குறைவு யார் காரணம்?

   
  பரபரப்பாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிவுகளைப் பற்றி பல்வேறு கணிப்புகள்.எவை உண்மையாகப் போகிறது என்பதை அறியக் காத்திருக்க வேண்டும். கூட்டணிகள்,குழப்பங்கள் கோமாளித் தனங்கள் அறிக்கைகள்,சவால்கள்,அனைத்தும் ஒய்ந்திருக்கின்றன. நாற்காலிக்கான யுத்தத்தின் வெற்றியை யாருக்கோ கொடுத்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கி விட்டனர் மக்கள்.
         இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு சதவீதம்  74.26%
சென்னையில். மிகக் குறைவாக 60.99 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.பிரபல பதிவர் மதுரைத் தமிழனின் ஆதங்கப் பதிவைப் படித்திருப்பீர்கள்.மேட்டுக் குடி மக்களும் மத்திய தர மக்களும் கணிசமாக வாழும் தலை நகர் சென்னையில் வாக்குப் பதிவு குறைவாக் இருப்பது உண்மையில் கவனிக்கப் படவேண்டிய ஒன்று.
 
    எப்போதுமே தேர்தலில் அடித்தட்டு மக்களின் பங்கே அதிகம் என்பது நிதர்சனம். ஒரு அரசாங்கத்தை நிர்ணயிக்கக்  கூடிய மாபெரும்  சக்தியாக அவர்கள் விளங்குகிறார்கள். இலவசங்களோ ஓட்டுக்கு  பணமோ தரவில்லை என்றாலும் வாக்களிப்பில் அவர்கள் பங்கேற்பு முன்னிற்கும். அவர்களை சுற்றியே அரசியல் சக்கரம் சுழல்கிறது. கல்வியறிவு குறைவாக இருந்தாலும் ஓட்டின் முக்கியத்துவம் பற்றி  அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இங்கே வாக்களிக்க வராதவர்கள்தான்  பணத்துக்கு ஒட்டு போடுவோரை சாடுகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை வீட்டில் இருந்தபடியே குறை கூறிக் கொண்டிருப்பார்களே தவிர தன பங்களிப்பை அளிக்க முன்வருவதில்லை

    சென்னை என்பது பல ஊர்களில் இருந்து வந்தோரின் ஊராகும். இங்கு உள்ள பெரும்பாலோருக்கு சொந்த ஊர் என்று ஏதோ ஊர் இருக்கும்.சென்னையையே சொந்த ஊராக கொண்டுள்ளோர் மிகக் குறைவு.சென்னைக்கு  குடியேறியவர்கள்  இங்கும் வாக்காளர் பட்டியலில் தன் பெயரை சேர்த்துவிடுவார்கள். சொந்த ஊரிலும் அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். 
       தேர்தலுக்கு முன்னதாக இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் நிறைய பேர் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்று விட்டனர். அவர்கள் வாக்கு இங்கு பதிவாகாமல் போயிற்று. தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேறு நாளை தேர்ந்தெடுத்ருக்க வேண்டும். தேர்தல் நாளுக்கு அடுத்த நாள் விடுமுறை நாளாக இருப்பின் வாக்களிப்பு சதவீதம் நிச்சயம் சிறிதளவாவது கூடும் . சென்னையில் நீண்ட காலம் வசிப்போரும் தொடர் விடுமுறையை சாக்கிட்டு வெள்ளியன்றே பெங்களூர் போன்ற நகரங்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர்.
     சென்னையிலேயே பல்வேறு சூழல் காரணமாக ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு வீடு மாறியவர்கள் பலர் உள்ளனர், இவர்களில் சிலர் இங்கு வாக்களர் பெயர் பட்டியலில்  சேர்த்திருபார்கள்/. சேர்க்காதவர்களில் ஆண்கள் பழைய  வசிப்பிடம் சென்று வாக்கு செலுத்தாவர்கள். பெண்கள் அது போல செல்ல ஆர்வம் காட்டுவதில்லை..

 வெவ்வேறு இடத்திற்கு மாறிச் சென்றாலும்முன்னர் இருந்த இடத்தில் பெயர் நீக்கம் செய்யக் கோருவோர் மிகக் குறைவானவரே. அப்படிக் கோரினாலும் பெயர் நீக்கம் செய்வது  ஊழியர்களின் பணிச் சுமையின் காரணமாக (தேர்தல் ஆணையத்திர்கேண்டு தனி பணியாளர்கள் இல்லை வருவாய்த் துறையினரும் ஆசிரியர்களுமே கூடுதலாக இப்பணியை செய்ய வேண்டி இருக்கிறது ) விடுபட்டுப் போகிறது. இறந்தவர்களின் பெயர்களும்  முறையாக நீக்கப் படுவதில்லை. ஒவ்வொரு முறையும் வீடு வீடாக சென்று பட்டியலை சரிபார்ப்பது. நடைமுறையில் மிகக் கடினமானதாகும். ஆனாலும் தேர்தல் ஆணையம் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையாவது  ,சேர்த்தல் நீக்கம், தொடர்பான முகாம்களை நடத்துகிறது. இது போன்ற முகாம்களில் சேர்த்தல் மட்டுமே நடைபெறுகிறதே தவிர நீக்கத்திற்கு யாரும் விண்ணப்பிப்பது இல்லை..
     பெயர் நீக்கம் செய்யாமல் இருப்பது கள்ள ஓட்டுகள் போடுவதற்கு வழி வகுக்கும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருப்பதால் கள்ள ஓட்டுகள் போடுவது குறைந்து விட்டது. இது கூட வாக்குப் பதிவு வீதம் குறைய சிறு காரணி. இதே பழைய முறையாக இருந்தால் வாக்குப் பதிவின் கடைசி நேரத்தில் ஓட்டுப் போடாதவர்களின் பெயர்களை பூத்தில் உள்ள ஏஜெண்டுகள் சொல்லி அனுப்ப கட்சிக்காரர்கள் ஆட்களை தயார் செய்து அனுப்புவார்கள். இதில் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் தங்களுக்குள் சமரசம் செய்து கொள்வார்கள்.பூத் ஏஜெண்டுகள்.  இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை.

  பொதுவாக மத்தியதர மற்றும் முற்பட்ட இனத்தவர் வாக்குப் பதிவில் சற்றும் ஆர்வம் காட்டுவதில்லை.  சென்னையில் இவர்களின் ஒட்டு கணிசமான அளவு இருக்கிறது. எனது நண்பர் ஒருவர் மூன்றுநாள் விடுமுறைக்கு குடும்பத்துடன்  வேறு மாநிலத்திற்கு டூர் சென்று விட்டார்.ஓட்டு போட இருக்க மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலில் இருந்து தெரிந்து கொண்டது இதுதான். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை என்ற எண்ணம் அவர்களிடத்தில் மேலோங்கி உள்ளது . அரசால் நமக்கு நன்மை  இல்லை என்று உணர்கிறார்கள். கல்வி கல்வி சார்ந்தவை மட்டுமே நமக்கு கதி என்று நினைக்கிறார்கள் எந்தக் கட்சியினரும் இவர்களை கண்டுகொள்வது இல்லை.. இவர்கள் ஓட்டால் எந்த பயனும் இல்லை. என்று கருதுவதே காரணம் . இந்த மனநிலையை  மாற்ற வேண்டியது அரசு,சமூகம், மற்றும் அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும்.
  மேட்டுக் குடியினரோ வாக்களிக்க பாமர மக்களோடு மக்களாக சென்று வாக்களிக்க விரும்புவதில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது இவர்களுக்கு அலர்ஜி. சினிமா நடிகர்கள்,நடிகையர்கள் விளம்பரத்திற்காக வாக்களிக்க வருகிறார்கள்.

   மதுரைத்  தமிழன் பதிவில்  பார்த்த வீடியோவில்   ஆர்.ஜே.  பாலாஜி கேட்ட  கேள்விகளுக்கு இளைஞர்கள் சொன்ன பதில்களை கேட்டபோது வேதனையாக இருந்தது. இதே போல தொலைக் காட்சியிலும் 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன் முதன் முதலாக ஒட்டு போட இருக்கும் இளைஞர்களிடம் கட்சிகள் அரசியல் தலைவர்கள் தொகுதிகள் பற்றிய கேள்விகள் கேட்டார் ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை. அதற்கான பதில் தெரியாததில் ஒரு சிறிய குற்ற உணர்வு கூட இல்லாமல் இருந்ததைக் கண்டு கோபம் கூட ஏற்பட்டது.  நடைபெறப் போவது சட்ட மன்றத் தேர்தல் என்ற  குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் இவர்கள் டாக்டர்களாகவும் பொறியாளர்களாகவும் வந்து சாதிக்கப் போவது என்ன?
 8ஆம் வகுப்பு படித்த வார்டு உறுப்பினருக்கு தெரிந்த அரசியல் அறிவு கூட எம்.பி பு.எஸ் ,படிபவர்க்ளுக்கும் எம்.பி.ஏ   படிப்பவர்களுக்கும்    இல்லாமல் இருப்பதற்கு யார்பொறுப்பு?. நம் கல்வி முறையும் பெற்றோரும் அரசும் சமூகமும்தான்  இதற்கு பொறுப்பேற்க வேண்டும்
     . 
    இவர்களெல்லாம் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கே. ஏனெனில் வாக்காளர். அடையாள அட்டை பாஸ்போர்ட் பெறுவதற்கு, உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு அடையாள ஆவணமாக  ஏற்றுக் கொள்ளப் படுகிறது ,. இவற்றிற்கெல்லாம் வாக்களர் அடையாள அட்டை வேண்டாம் என்றால் வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்க்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

   பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படாதது இதற்கு முக்கியக் காரணம் என்று கூறலாம்.பொறியியல் மருத்துவம், எந்த படிப்பானாலும் சமூகம்  சார்ந்த பொது அறிவுப் பாடம் கட்டாயம் ஆக்கப் படவேண்டும்.தேர்ச்சிக்கு அதனையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

தேர்தல் ஆணையம், அரசு, பொதுமக்கள்,அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த மாற்றங்கள் நடைபெறும்.வாக்கு சதவீதமும்  கூடும் 

**************************************************

முந்தைய  பதிவுகள்



21 கருத்துகள்:

  1. கடந்த முறை வந்த வெள்ளம் ,வாக்களிக்கும் எண்ணத்தை மாற்றி இருக்கக்கூடும் !

    பதிலளிநீக்கு
  2. படித்தவர்களும் பெரிய பணியில் இருப்பவர்களும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே அரசியல் பேசுவார்கள் அதுவும் இந்திய அரசியல் உள்ளூர் அரசியல் பற்றிக் கவலைப் படுவதுஇல்லை. மழையும் ஒரு காரணமோ

    பதிலளிநீக்கு
  3. நடு நிலையான அலசல்தான்
    ஆயினும் சதவீதம் மிகக் குறைவு என்பது
    சென்னை வாசிகள் வாக்களிப்பதில்
    அவ்வளவு அக்கறை காட்டவில்லை
    எனவே படுகிறது

    அதுவும் மழை வந்து ஞாபகமூட்டியும்.

    பதிலளிநீக்கு
  4. பொதுவாக நகரவாசிகள் இவைபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுங்கிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆதங்கம் சரிதான்! தேர்தல் ஆணையமும் அதற்கென சில பணியாளர்களை நியமித்து முறையாக சேர்த்தல் நீக்கல் செய்ய முயற்சிக்க வேண்டும். இணைய வசதி இருப்பதால் இது இப்போது சாத்தியமே! நீங்கள் சொல்வது போல எங்கள் கிராமத்தில் படிக்காத மக்கள் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 90 சதவீத வாக்குகள் எங்கள் ஊரில் பதிவானது. யார் வந்தாலும் நமக்கு பலனில்லை என்று சொல்வது அலட்சியப் போக்கு. நாம் பயன்படுத்தும் பல சேவைகள் அரசாங்கத்தால் கிடைக்கிறது. மின்சாரம், குடிநீர் சாலை இதெல்லாம் அரசு இல்லாமல் வந்துவிடுமா? இதை மேல்தட்டு மக்கள் யோசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து அரசு துறைகளை இணைதாலே போதும்.
    உதாரணமாக

    இறப்பை ப்திவு செய்யும் போதே வாக்காளர் அட்டையும் நீக்கப்படவேண்டும். இதற்கு பதிவுத் துறையின் அந்தப் பகுதியை ஒருங்கிணைதாலே போதும். இதேபோல் பட்டா மாற்ற, விலாசம் மாற்ற.....
    இவைகளை மாற்ற போராடுவதற்கு பயந்தே பலரும் செய்வய்தில்லை.
    இந்த நடைமுறை தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது
    விஜயன்

    பதிலளிநீக்கு
  7. எல்லா வார இறுதி நாட்களைப்போலும் அன்றும் ஒரு விடுமுறை நாள் என்று கருதிவிட்டார்கள் போல...

    பதிலளிநீக்கு
  8. சரியானபடி அலசி இருக்கின்றீர்கள் நண்பரே...
    த.ம. 2

    பதிலளிநீக்கு
  9. நல்லதோர் அலசல்....

    அரசியல் பற்றி நிறைய பேசும் சிலர் ஓட்டுப் போட வருவதில்லை என்பதும் நிஜம்.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்திருக்கிறது.. வேதனை...

    பதிலளிநீக்கு
  11. நன்றாக சொன்னீர்கள் .
    தேர்தல் ஆணையம், அரசு, பொதுமக்கள்,அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று நீங்கள் சொல்வது உண்மை.
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பலருக்கு ஓட்டு உரிமை என்றால் என்ன என்று தெரியாததும் வேதனையே!

    பதிலளிநீக்கு
  13. மேட்டுக் குடியினரோ வாக்களிக்க பாமர மக்களோடு மக்களாக சென்று வாக்களிக்க விரும்புவதில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது இவர்களுக்கு அலர்ஜி. கூடவே..எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை என்ற எண்ணம்..இவைகள்தான் காரணம்...என்று நிணைக்கிறேன்..


    பதிலளிநீக்கு
  14. மேட்டுக் குடியினரோ வாக்களிக்க பாமர மக்களோடு மக்களாக சென்று வாக்களிக்க விரும்புவதில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது இவர்களுக்கு அலர்ஜி. கூடவே..எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை என்ற எண்ணம்..இவைகள்தான் காரணம்...என்று நிணைக்கிறேன்..


    பதிலளிநீக்கு
  15. சமூக அறிவியல் முக்கியம் தான்
    அருமையான கருத்துப் பகிர்வு
    நானும் வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. நல்ல அலசல். வாக்களிக்கும் முறை மாற்றப்படலாம். அவரவர் அலுவலகம் மூலமாக வாக்களிக்கச் செய்யலாம். விடுமுறை தேவையில்லை. அன்றைய தினத்தில் அலுவலகம் வந்து வாக்களித்திருந்தால்தான் அன்றைய மாத சம்பளம்! தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகம் வர முடியாதவர்களுக்கு அன்றைய ஒருதினச் சம்பளம் மட்டும் கட்.

    அந்தந்த பஞ்சாயத்துகள் மூலம் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பெறலாம்.

    வெளிநாட்டில் இருப்போர் அங்கிருந்தபடியே அல்லது தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படவேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் ஆணை. ஆனால் பல நிறுவனங்கள் அதனை கடை பிடிப்பதில்லை. குறைந்த பட்சம் அரை நாள் அனுமதியாவது வழங்க வேண்டும்

      நீக்கு
  17. மீள் பதிவு.நிலை மாற காத்திருக்க வேண்டிய நிதர்சனத்தை உணர்த்தியது.

    பதிலளிநீக்கு
  18. இளைஞர்களிடம் கட்சிகள் அரசியல் தலைவர்கள் தொகுதிகள் பற்றிய கேள்விகள் கேட்டார் ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை. அதற்கான பதில் தெரியாததில் ஒரு சிறிய குற்ற உணர்வு கூட இல்லாமல் இருந்ததைக் கண்டு கோபம் கூட ஏற்பட்டது. நடைபெறப் போவது சட்ட மன்றத் தேர்தல் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் இவர்கள் டாக்டர்களாகவும் பொறியாளர்களாகவும் வந்து சாதிக்கப் போவது என்ன? முக்கியக் காரணம் பெற்றோர்கள்.

    பதிலளிநீக்கு
  19. என்றைக்கும் இந்தப்பதிவு பொருந்தும் போல...

    !!!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895