என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.மூன்று தலைமுறை முட்டாள்கள் போதும் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Monday, June 20, 2016

முத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி?

விளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை  பார்த்துவிட்டு பார்க்கலாம் என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நினைத்த படம் முத்தின கத்திரிக்கா.. இது வரை சுந்தர் சி. நடித்த படமோ இயக்கிய படமோ அரங்கில் சென்று பார்த்தது இல்லை. நங்கநல்லூர் வெற்றிவேல்  தியேட்டரில் படம் வெளியிப்பட்டிருந்தது . . விடுமுறை நாள் என்பதால் முந்தைய  தினமே புக் செய்து விடலாம் என்று பார்த்தால் புக்கிங் அனுமதிக்கவில்லை. அன்றன்றுதான் முன்பதிவு செய்ய வேண்டும் போல இருக்கிறது. பால்கனி டிக்கட் மட்டுமே ஆன் லைனில் . அதுவும் நிறைய சீட்டுகள் காலியாகவே இருந்தன. பெரிய அளவில் கூட்டமில்லை  என்றாலும் அரங்கில் பாதி நிரம்பி இருக்கலாம்.

      நான் படிக்கும்  காலத்தில் வெற்றிவேல்  தியேட்டர்  ரங்கா என்ற பெயரில் இருந்தது. மடிபாக்கத்தில் இருந்து நங்கநல்லூரில் உள்ள பள்ளிக்கு செல்லும்போது (நடந்து ) வழியில் சினிமா போஸ்டர்களை பார்த்து ரசித்துக் கொண்டு செல்வதுண்டு.வெள்ளிக் கிழமை அன்று படம் மாற்றுவார்கள் என்ன படம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.பெரும்பாலும் பழைய படங்கள் அல்லது வெளியாகி பல நாட்களான படங்களே வரும். டிக்கட் விலை இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.. எப்போதாவதுதான் படம் பார்க்க அனுமதி கிடைக்கும். எந்தப் படமாக இருந்தாலும் கூட்டம் இருக்கும். அப்போதெல்லாம் புதுப் படங்களை பார்த்ததே இல்லை. இப்போதோ பார்க்க நினைப்பதற்குள் படம் தியேட்டரை விட்டு பறந்து விடுகிறது.
படத்தின் விமர்சனத்தை எதிர்பார்த்தால் என்னென்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள். கடுகளவு கதையுள்ள படத்தை வைத்து எப்படி விமர்சனம் எழுத்வது ? இருந்தாலும்  கடுகை வைத்துத்தானே தாளித்து விடுகிறேன்.
இந்தப் படமும் ஏதோ ஒரு மலையாளப் படத்தின் ரீ மேக்காம் . இது சுந்தர் .சி இயக்கிய படம் அல்ல அவர் நடித்த படம்.
முத்தின கத்திரிக்கா . முதிர் கண்ணனின் கதை . வடிவேலு ஒரு படத்தில் வயதாகியும்  கல்யாணமாகாமல் அவதிப்படுவார். யார் யாருக்கோ கல்யாணம் ஆகும். உனக்கெல்லாம்  எப்படிடா கல்யாணம் என்பார் வடிவேலு, நான் என்ன சந்தையில விலை போகாம இருக்கறதுக்கு முத்தின கத்திரிக்காயா என்பார். அதன்  நீட்சியாகத்தான் இப்படத்தை பார்க்க முடிந்தது ஏற்கனவே  ரசித்தது விட்டதால் இதில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

  தொடக்கத்தில்  நீண்ட நேரம் பின்னணயில் முத்து பாண்டியின் (சுந்தர் சி ) இளமைப் பருவத்தை பாலசந்தர், விசு காலத்து பாணியில் விவரித்தது ஆவி வரவைத்து விட்டது. (கொட்டாவிய சொன்னேன் பாஸ்) அரசியலில் இருந்து ஒன்றும் சாதிக்காமல் வீணாய்ப் போனவர்கள் முத்துப் பாண்டியின் தந்தையும் தாத்தாவும். அதனால் முத்துப் பாண்டியும் அப்படி ஆகி விடக் கூடாதே என்று கவலைப்படுகிறார் அவரது தாய் சுமித்ரா .  ஆனாலும் எதிர்பாராவிதமாக ஒரு சூழல்அரசியலில் ஆர்வத்தை உண்டாக்கி விடுகிறது.  40 வயது கடந்தும் கல்யாணம் ஆகாமல் இருப்பது ஒரு பக்கம். ஊர் பேர் தெரியாத கட்சி ஒன்றை ஆரம்பித்து தகிடு தத்தங்கள் செய்து எம்.எல்ஏ ஆவதோடு சைடில் இன்னொரு தில்லு முல்லு செய்து  பூனம் பஜ்வாவை கை பிடிப்பது கதை. முத்தின  கத்திரிக்காயாய் சுந்தர் சி நடிப்பில் குறை இல்லை. 
   திருமணம் ஆகாத ஒருவனின் நிலையை  முழுவதுமாக எடுத்துக் கொண்டு கதையை நகர்த்தி இருக்கலாம், அதிலும்நகைச்சுவைக்கு வாய்ப்பு உள்ளது. அல்லது அரசியலை வைத்தே முழு  நகைச்சுவைக் கதையையும் கொண்டு சென்றிருக்கலாம். இரண்டும் இல்லாமல் ரெண்டும் கெட்டான் ஆகி விட்டது கதை. ஏன் இவ்வளவு நாள்திருமணம்  ஆகவில்லை என்பதற்கு  சரியான காரணம் இல்லை .
   அண்ணன் தம்பியாக இருந்தாலும்  இரண்டு வெவ்வேறு கட்சிகளில் உள்ள சிங்கம் புலி , விடி,வி கணேஷ் இருவரும்  படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறார்கள்.இவர்கள் செய்யும் அரசியல் கல்லாட்டாகள் செம. எதிர் கட்சியாக இருந்தாலும் அவனுக்கும் கமிஷன் தர சொல்வதும் ஒருவருக்கொருவர் கவிழ்த்துக் கொள்வதும் கூட்டு சேர்வதும்  நிகழ்  அரசியலை நினைவு படுத்துகிறது. இவர்கள் இருவருக்கும் இது பெயர் சொல்லும் படம் என்பதில் ஐயமில்லை
    தேர்தல் பிரச்சாரம்,வாக்கு எண்ணிக்கை ஒரே மாதிரி காட்சிகள்  போரடிக்க வைக்கின்றன. சீக்கிரம் படம் முடிந்து விட்டாலும் நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வும் சோர்வும் ஏற்பட்டது உண்மை
   தான்விரும்பும்  பூனம்வுபஜவாவை பெண்கேட்க செல்லும் சுந்தர் சிக்கு அவர் தன்னுடம் படித்த நண்பனின் பெண் என்று தெரிய வருவது நகைச்சுவை கலாட்டா என்றாலும் , பெண்ணும் அம்மாவும்  தான் பள்ளியில் படித்தபோது சைட் அடித்த பெண்தான் என்று கதை அமைத்தது என்னாதான் ரசனையோ? பெண்ணின் தாயாக வரும் நடிகை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று நினைக்கும்போது சொன்னார்கள் ஜெமினி படத்தில் நடித்த கிரண் என்று.  என்னதான் நகைச்சுவை என்றாலும் தன் வயதை ஒத்த நண்பனின் பெண்ணை மனம் முடிக்க துடிப்பது  ரசிக்கும்படி இல்லை.. உங்க ஆளை விட்டு கொடுக்க மாட்டியே என்று அம்மாவிடம் பூனம் சொல்வதும்  கிரண் சுந்தர் சி  சம்பந்தப் பட்ட  ஒரு காட்சியும் மட்டமான  ரசனையின் வெளிப்பாடாகத்தான். உள்ளது   
 நண்பனாக  வரும் சதீஷ் அடிக்கும் சின்ன சின்ன கம்மெண்டுகள் ரசிக்க வைக்கின்றன.. இருந்தாலும் வடிவேலு விவேக் சந்தானம் போல் இன்னமும் திறமையை  மேம்படுத்துக் கொள்ளவேண்டும். சுந்தர் சி. வடிவேல் , சுந்தர் சி.-விவேக் போல  சுந்தர்ச சி யுடன்  சந்தானம் சூரி, சதீஷ் இவர்கள் பொருந்தவில்லை.
    தன் மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்வதை தானாகவே தவிர்த்திருந்தால் ஒரு பரிதாபத்தை பெற்றிருக்க முடியும். இது போன்ற படங்களில் நகைச்சுவையுடன் மெல்லிய சோகத்தை வைப்பது ரசிகர்களைக் கவரும். இயக்குனர் இன்னும் கொஞ்சம் திரைக் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பாடல்கள் குறிப்பிடும்படி இல்லை. ஒளிப்பதிவு டல்லாகவே இருந்தது. ஒரு வேளை தியேட்டர் அமைப்பு காரணமாக இருக்கலாம்.நகைச்சுவைப் படம் என்றாலும்  தியேட்டரில் கலகலப்பு இருந்ததாகத் தெரியவில்லை.
பூனம் பஜ்வா தனக்கு தரப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார்  இப்படி ஒரு பாத்திரத்தை சிந்தர் சி ஏற்றது அதிசயம்தான் . காமெடி படம் என்று சொன்னாலும் தியேட்டரில் விசில் சத்தமோ கை தட்டலோ கேட்கவில்லை.
ஒரு வேளை அன்று திரைப்படம் பார்க்க வந்திருந்தோர் என்னைப் போல நரசிம்மராவ் மன்மோகன் சிங் வகையறாக்களோ என்னவோ?

*******************************************************************