அன்புள்ள ரகுமான்!.
90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் நீங்கள் . நீங்கள் இருவருமே அமைதிக்குப் பெயர் போனவர்கள் அதுவும் உங்கள் முகம் பேரமைதி கொண்டதாய்த் தெரியும். அளக்கப் பட்ட வார்த்தைகள்தான் உங்கள் உதட்டைக் கடந்திருக்கின்றன. அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட உங்கள் நாவில் இருந்து வந்ததில்லை.
எனக்குத் தெரிந்து நீங்கள் மனம் திறந்து பேசியதாக நினைவு இல்லை. ஆனால் சமீபத்தில் நீங்கள் சொன்னதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் உங்களுக்கு எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், ஹிந்தி சினிமாக்களில் பணியாற்றும் வாய்ப்புகளை அந்தக்குழு தடுத்து வருவதாகவும் நீங்கள் சொன்னதாக, அறியப்படும் செய்திதான் அது. ஒரு வேளை அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படும் ஆரம்ப நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?. உங்களை உச்சியில் வைத்து அழகு பார்த்ததும் பாலிவுட்தான். உங்களை உலகறியச் செய்ததும் பாலிவுட்தான். அவர்களும் உங்களைத் தென்னவராகப் பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராகத்தான் உங்களைக் கண்டனர். நீங்களும் வடவராகவே மாறிப் போனீர்கள். இன்றுவரை நீங்கள்தான் இந்தியத் திரைஇசை உலகின் நம்பர் 1 என்று கூகுளின் பக்கங்கள் காட்டுகின்றன. உங்கள் வருத்தமும் ஆதங்கமும் உங்கள் தகுதிக்கு சரியானதுதானா?
சின்னச் சின்ன ஆசையில் தொடங்கி இன்றுவரை எத்தனை எத்தனை பாடல்கள்! உற்சாகம், ஆரவாரம், அமைதி, காதல், சோகம், வீரம், பக்தி என உணர்வுக் குவியல்கள் இசைக் கலவையாக உங்கள் வாத்தியங்களில் இருந்து புறப்பட்டு எங்கள் செவிகளை நிறைத்தன
’என்மேல் விழுந்த மழைத்துளியே’ போன்ற அமைதியான பாடலாகட்டும், ’முக்காபலா’ போன்ற ஆர்ப்பாட்டமான பாடலாகட்டும், ’ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே’ என்ற மனதை வருடும் பாடலாகட்டும், உயிரே! உயிரே! என்று உருகிய பாடலாகட்டும் நேற்றைய சிங்கப் பெண்ணே வரை உங்கள் இசையால் மயங்கிக் கிடக்கிறவர்கள் பல பேர்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்! முதல் அடி எடுத்த வைத்த நாளில் இருந்து நீங்கள் பணிபுரிந்தது எல்லாமே மணி ரத்தினங்களோடும் சங்கர்களோடும்தான்.
அப்போதெல்லாம் தினமணியில் வாராவாரம் அதிகம் விற்பனையாகும் கேசட்டுகளின் பெயர்ப் பட்டியல் இடம் பெறும். அதில் உங்களுக்குத்தான் முதல் இடம். 17 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த தீவிர பக்தர்களைக் கொண்ட இசைஞானி இளையராஜாவைத் தாண்டி இடம் பிடித்தீர்கள். இந்தியிலும் உங்கள் வெற்றிக் கொடி பறந்தது. வசீகரமான இளமைத் துள்ளல் இசையின் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டீர்கள். ஒரு வருடத்திற்கு இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் அத்தனை பாடல்களும் ஹிட் அடித்தன. உங்கள் நூதனமான இசை வடிவங்கள் மனதை வருடின. ஆனால் நானறிந்தவரை சாதரண தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தீர்கள். இன்றுவரையிலும் அப்படித்தான் இருக்கிறீர்கள்
ஏற்கனவே முன்னனி நடிகர்களும் இயக்குநர்களும் உங்கள் இசைக்காகக் காத்திருந்தார்கள். தொடர்ந்து இளையராஜாவோடு கூட்டணி வைத்தவர்கள் உங்கள் பக்கம் தாவினார்கள். பாரதிராஜாவே உங்களிடம் வந்து சேர்ந்தார். ஆனால் என்னைப் புறக்கணிக்க சதிநடக்கிறது என்று இளையராஜா கூறவில்லை. உங்கள் கூட்டணி எப்போதுமே பிரம்மாண்டக் கூட்டணியாக இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால் கூட உங்கள் பாடல்கள் வெற்றி பெற்றன. விதம்விதமான ஒலியிசைகள் முலம் இன்பத் தேன் வந்து பாய்ந்தது எங்கள் காதுகளில்.
உங்கள் வந்தே மாதரம் ஆல்பம் ஒலிக்காத இடம் உண்டா?. இன்றும் பள்ளி ஆண்டு விழாக்களில் தாய்மண்ணே வணக்கம். ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது?. இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்?
சிலபடங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவீர்கள் என்றுதான் உங்களைப்பற்றிய சிலர் ஆரூடம் கூறினார்கள். இளையராஜாவிற்குப் பிறகு யாரும் நீண்ட காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அதனை தவிடு பொடியாக்கி 25 ஆண்டுகளுக்கு மேல் உச்சத்தில் இருந்தீர்கள். இருக்கிறீர்கள். தெற்கில் மட்டுமல்லாது வடக்கிலும் ஆட்சி புரிந்தீர்கள். நாடுகள் கடந்தது உங்கள் இசை. ஹாலிவுட்டிலும் தடம் பதித்து, உலகமே அண்ணாந்து பார்த்த ஆஸ்கார் விருதும் பெற்று, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப் படுத்தினீர்கள். ஆஸ்கார் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றே கூறியபோது பெருமிதம் கொள்ளாத தமிழர்கள் இல்லை. அந்த மேடையில் நீங்கள் விருது பெற்ற போது நாங்கள் பெற்றதாகவே .குதூகலித்தோம்; கொண்டாடினோம்.
தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு. திரை இசை மேதைகள் இங்கு போல் வேறேங்கும் இல்லை. எம்.எஸ்.வி இளையராஜா, நீங்கள். மூவரும் திரை இசை மும்மூர்த்திகளாக விளங்கி பெருமை சேர்த்தீர்கள்.
வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக அதிகம் இசை அமைத்து தரம் குறைத்துக் கொள்ளாமல் குறைவாக இசைத்தாலும் நிறைவாக நின்றீர்கள். ஆனால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தாலும் சம்பாதிக்க முடியாத செல்வம் உங்களை அடைந்தது. இசை அறிவு மட்டுமல்ல. முந்தைய தலைமுறை கலைஞர்களுக்கு அதிகம் இல்லாத தொழில்நுட்ப அறிவு, காப்புரிமை மேலாண்மை, இயல்பாகவே உங்களிடம் இருந்தது. அதைவிட அதிகம் பேசிப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத புத்திசாலித்தனமும் உங்களிடம் இருந்தது அமைதி உங்களுக்கு வாய்த்த பலமான ஆயுதம் . இப்போது அமைதி கலைந்திருப்பது எங்களுக்கு அதிசயம்தான்.
இளையராஜாவுக்குப் பின் இசையில் என்ன செய்து விடமுடியும் என்று இருந்த நிலையில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தி எங்களை உங்கள் பக்கம் ஈர்த்தீர்கள். எம்.எஸ்.வி.,இளையராஜா போல ஒரு ட்ரெண்ட் செட்டராகத் திகழ்ந்தீர்கள். உங்கள் கால்ஷீட் கிடைக்காதவர்கள் உங்கள் பாணியிலேயே இசை அமைக்கும் இசை அமைப்பாளர்களைத் தேடிப் போனார்கள்.
நீங்கள் வந்தபின் ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தினீர்கள். இசையில் உதவிய கலைஞர்களின் பெயர்களையும் கேசட் அட்டையிலும் சிடியிலும் பதித்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தீர்கள். உங்கள் இசையில் ஒரு பாடல் பாடுவதற்கு முன்னனிப் பாடகர்களே தவம் கிடந்தார்கள். உங்கள் இசைக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று பாடலாசிரியர்கள் ஏங்கினார்கள். சில இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நீங்கள் எட்டாக் கனியாக விளங்கினீர்கள். அத்தனையும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது
வயதானவர்களுக்கு தாங்கள் ஒதுக்கப் படுகிறோம் என்று தோன்றுவது உண்டு. அதே போன்ற மனநிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
எத்தனையோ திறமை இருந்தும் கண்டு கொள்ளப் படாமல் வாய்ப்புக் கிடைக்காமல் அங்கீகாரமும் கிடைக்காமல் போனவர்கள் பலருண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகம் அடையாளம் கண்டது. இந்தித் திரையுலகும் கொண்டாடியது. ஹாலிவுட்டும் அரவணைத்தது.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது , ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்திலும் மாற்றம் நடந்து கொண்டிருக்கும். அதுவும் கலை ரசனையில் நடக்கும் மாற்றம் வேகமானது ஒன்றுபோய் இன்னொன்று இடம் பிடிக்கும். அதுவும் சில காலத்திற்கே. அப்படிப்பட்ட மாற்றங்களை விரும்பியதால்தான் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய இடம் கிடைத்தது. காலத்திற்கேற்ப நவீனப் படுத்திக் கொள்ளும் திறமை உங்களுக்கு இருந்ததால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குப் பிடிக்க முடிந்தது. அதுவே மிகப் பெரிய சாதனை. அதனை இனி வேறு யாராலும் நெருங்க முடியாது. ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனை மாற்றம் அதிவேகமானது. ரசனையின் வாழ்நாள் மிகக் குறுகியது. தயவு தாட்சயணமின்றி தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.
தேசியவிருதுகள் உங்களைப் போல் பெற்றவர் யாருமில்லை. விதம் விதமான விருதுகள் உங்களுக்குப் பெருமை சேர்த்தன; பெருமை அடைந்தன.
இத்தனை பெருமைகளைக் கொண்ட நீங்கள் இந்தியில் எனக்கு வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப் படுகிறது, சதி செய்யப்படுகிறது என்று வருந்தி இருப்பதும் இந்தித் திரை உலகம் உங்களைப் புறக்கணிப்பதாக புகார் கூறுவதும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழில் கூட உங்களுக்கு வாய்ப்பு அதிகம் இல்லை. காரணம், நிச்சயம் புறக்கணிப்பாக இருக்க முடியாது.. ஆனால் இன்னமும் சாதாரண தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு எட்டாத உயரத்தில்தான் இருக்கிறீர்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை. நீங்கள் தமிழ்ப் பாடகர்களுக்கு வாய்ப்பளித்ததைடை விட வடக்கத்திய தமிழ் தெரியாத பாடகர்களையே அதிகம் ஆதரித்தீர்கள். உங்களுக்காக அவர்களையும் கொண்டாடினோம். நீங்கள் இந்திக்கே அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள். ஆனால் அப்போதும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பதாகக் நாங்கள் கருதவில்லை.
நீங்கள் பல பாடகர்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். அதுபோல தயாரிப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளிப்பதாக கருதிக் கொள்ளுங்கள். . இவ்வளவு சாதனைக்குப் பின் இன்னமும் வாய்ப்பு இல்லை என்று புலம்புவது எங்கள் அபிமான ரகுமானுக்கு அழகல்ல. உங்கள் சாதனைகள் காலம் கடந்து நிற்பவை. உச்சம் தொட்ட இளையராஜா உங்கள் வருகைக்குப் பின் தளர்ந்து போகவில்லை. இன்னமும் இசை அமைத்துக் கொண்டு ரசிகர் நெஞ்சங்களில் வீற்றிருக்கிறார்.உங்களாலும் அதுபோல் முடியும்.
தனிக்குடித்தனம் போய் அவ்வப்போது தாய் வீடு வந்து போன பிள்ளை போலத்தான் இருந்தீர்கள். இங்கேயும் திறமையான இளம் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்த பட்ஜெட் உங்கள் சம்பளத்துக்குக் காணாது. உங்கள் இரும்புக்கோட்டையை தளர்த்தி உங்கள் இசையை அவர்களுக்கும் கொடுங்கள்.
இந்தியை விட்டுத் தள்ளுங்கள். அவர்களை நீங்கள் புறக்கணியுங்கள். தமிழர்கள் என்றுமே உங்களைக் கொண்டாடு்வார்கள். எங்கள் இசைச் சிங்கம் ஏ.ஆர் ரகுமானாக எப்போதும் கம்பீரமாக இசைகர்ஜனை புரியுங்கள்
அன்புடன்
உங்கள் ரசிகர்களில் ஒருவன்.
------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
உங்கள் ரசிகர்களில் ஒருவன்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கொசுறு: 1
ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அதில் ரஹ்மான் ஆவரேஜ் மியூசிக் கம்போசர் என்று ஜோக்காக சொவதுபோல ரகுமானிடமே சரியா என்று கேட்பார். (இதற்கு சல்மானுக்கு கடும் கண்டனங்களை இந்தி ரசிகர்கள் பதிவு செய்தனர்) ரகுமான் எப்போதும் அமைதிப் புன்னகைபுரிவார்
மேலும் அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான் கான் எப்போது எனது படங்களுக்கு இசையமைப்பாளர் என்று கேட்பார். ஆனால் ரகுமான் அப்போது அமைதியாக இருப்பார். சல்மான்கான் கைகுலுக்க முயற்சிக்கும்போது ரகுமான் கையை சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் பதிலடி கொடுப்பார். பின்னர் செய்தியாளர் ஒருவர் சல்மான் கான் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளிக்கும் ஏ.ஆர்.ரகுமான், “அவர் எனக்கு விருப்பமான படங்களை நடிக்க வேண்டும்“ என்று சிரித்து கொண்டே கூறுவார்.
ARR is unaffordable’
....... former Stardust editor-turned-filmmaker Ramkamal Mukherjee, who has made award-winning films like Cakewalk and Season’s Greetings, says that the claim that Oscar winners are being kept out are far from reality.
“The fact is it’s tough for filmmakers to afford Rahman. As a filmmaker, I would love to collaborate with Rahman, but will he work within the budget that our film can afford? Unfortunately, none of the music companies is paying producers for the songs.
The days are gone when the rights of movie songs would fetch lakhs and crores. But now music companies ask us to give it away as a complimentary deal against a marketing spend, which is not even clearly shared with the producers.
-----------------------------------------------------------------------------------------------------------------------------