என்னதான் கோப்பெரும் சோழன் பிசிராந்தையார் போல முகம்பாரா நட்பை பதிவர்களுக்கிடையே தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நேரில் பார்த்து பேசி மகிழ்வது போல் ஆகுமா? அதனால் பதிவர் சந்திப்பு அவசியம் என்பது நாள் சொல்லித்தானா தெரிய வேண்டும்? அத்தகைய வாய்ப்பை வழங்குகிறது, தமிழ் வலைப்பதிவர் திருவிழா. 01.09.2013 அன்று சென்னை வடபழனி திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் கோலாகலமாக நடக்க இருக்கும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிறப்பாக எழுதி பதிவுலகைக் கலக்கி கொண்டிருக்கும் பதிவர்கள் பலரைக் காணப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தான் செய்கிறது. நான் பதிவெழுதத் தொடங்கி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் கடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் அறிந்த மற்றும் அறிந்திராத பல பதிவர்களை நேரில் காண அற்புத வாய்ப்பாக அமைந்தது. அதே போல இந்த சந்திப்பும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றே நம்புகிறேன். கருத்துகளில் எண்ண ஓட்டங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அனவைரும் தமிழ்ப் பதிவர் என்ற நிலையில் ஒன்றுபடுவதே இத் திருவிழாவின் முக்கிய நோக்கம் எனலாம்.
இது போன்ற விழாவை நடத்துவது என்பது எளிதல்ல. ஆரூர் மூனா செந்தில், மதுமதி, சீனு,அரசன், ஜெயக்குமார் போன்றவர்கள் நேரம் காலம் கருதாது, விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள். புலவர் இராமானுசம் ஐயா அவர்கள் தக்க ஆலோசனைகளை வழங்குவதோடு, இந்தப் பதிவர் சந்திப்பை ஏதோ கூடினோம் பேசினோம் மகிழ்ந்தோம், கலைந்தோம் என்றில்லாமல், ஒரு நல்ல முறையான பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்பதை அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கிறார். அதற்கான காலம் கைகூடி வருவதாகவே தெரிகிறது.
இந்த விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று பதிவர்கள் நூல் வெளியிடுவது. பெரும்பாலும் பதிவர்கள் நூல் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பதிவிடுவதில்லை. தம் பதிவுகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பின்னர் சில திருத்தங்கள் செய்தோ செய்யாமலோ அதை புத்தகமாக்குகிறார்கள். பதிவர்களுக்கெல்லாம கிடைக்கக் கூடிய நன்மை என்னவெனில் பதிவெழுதும்போதே பின்னூட்டங்களில் அதற்கு கிடைக்கும் விமர்சனம் மற்றும் வரவேற்பே, பதிவுகள் நூல் வடிவம் பெற தூண்டு கோலாக அமையும்.. மேலும் தவறுகளையும் கவனிக்கப்படாத கருத்துப் பிழைகளையும் புத்தக ஆக்கத்திற்கு முன்னர சரி செய்து விடமுடியும். வலையில் பதிவாக வெளியிடப்படாத கருத்தை கொண்டதாக நூல் இருந்தாலும் முன்னரே வலையுலகில் பரிச்சயமாகி இருப்பது நூலாசிரியருக்கும் நூலுக்கும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் முன்னிலைப் பதிவரான நண்பர் வீடுதிரும்பல் மோகன் குமாரின் வெற்றிக் கோடு புத்தகம் வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவற்றில் முதல் 10 அத்தியாயங்கள் மட்டுமே வலையில் விளைந்தவை. இன்னும் சில அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டு வெளியிடப்படவுள்ளதாக மோகன் குமார் தெரிவித்திருக்கிறார். இதன் முதல் பகுதியை மட்டும் வலையில் பின்னோக்கி சென்று படித்தேன். சிறப்பாகவும் சுவாரசியமாகவும் தொடங்கி இருக்கிறார்.
பொழுது போக்கு அம்சங்கள், நல்ல தகவல்கள்,பயணக் கட்டுரைகள், பேட்டிகள் இவற்றோடு மேலும் பத்திரிகைக்குரிய பல அம்சங்களுடன் அமைந்துள்ள இவரது "வீடு திரும்பல்" ஏராளமானவர்களை கவர்ந்தது போலவே முதல் நூல் வெற்றிக் கோடு நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். வாழ்த்துக்கள்!
கடந்த பதிவர் சந்திப்பின் போதுதான் சேட்டைக்காரன் அவர்களை முதன் முறையாக பார்த்தேன். அவரது வலைப் பக்கத்தையும் நான் அறிந்ததில்லை. தனது சுய அறிமுகத்தின்போது நான் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வருகிறேன். என்றார். அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்க பின் சொன்னார். ஆம் நான் கவிதைகள் எழுதுவதில்லை. கவிதை என்று எதையும் எழுதாமலிருப்பதே தொண்டல்லவா என்று பஞ்ச் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. பின்னர்தான் தெரிந்தது அவர் சிறந்த நகைச்சுவை பதிவர் என்பது. அவரது "மொட்டைத் தலையும் முழங்காலும்" என்ற நூலும் விழாவின்போது வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.
வாழ்த்துக்கள்!
பதிவர் சங்கவி அவர்களின் "இதழில் எழுதிய கவிதைகள்" என்ற நூலும் வெளிவர உள்ளதற்கு பாராட்டுக்கள். சமீபகாலமாகத்தான் அவரது வலைப்பக்கம் செல்கிறேன். சிறப்பாக எழுதுகிறார். வாழ்த்துக்கள்
எனக்கு புதியவரான யாமிதாஷா என்பவரின் "அவன் ஆண் தேவதை" என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட நூலும் வெளியிடத் தயாராக உள்ளது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
இனிவரும் காலங்களில் பதிப்புலகம் தமிழ்ப்பதிவுலகையும் உற்றுநோக்கி நல்ல படைப்புகளை புத்தகமாக வெளியிடும் என்றும் நம்பலாம்.
அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில் இன்னும் பல பதிவர்களின் புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்
(அப்புறம் நம் தமிழ்ப்பதிவர்கள் எதைக் கண்டும் அஞ்சாதவர்கள் என்பதால் சில பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வேறு வெளிக்காட்டப்போகிறார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள் துணையுடன் வரவும். ஹிஹிஹி )
********************************************************************************
அனைவரும் வருக! வருக!
அனைவரும் வருக! வருக!