என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?


நான் கணினி முறையாகக் கற்றவனோ தொழில் நுட்பம் தெரிந்தவனோ அல்ல. நான் கற்றுக் கொண்டவற்றை ,பயன்படுத்தியவற்றை ஒரு கற்போர் நிலையில் இருந்து என்னைப்  போன்று இருப்பவர்களுக்கு உதவக் கூடும் என்றே இதை பகிர்கிறேன்.(கொஞ்சம் கற்பனை கலந்து)
ஏற்கனவே கீழுள்ள இரண்டு பதிவுகளுக்கும் கிடைத்த வரவேற்பே இந்த பதிவு எழுத காரணமாக அமைந்தது
காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற
இவ்விரண்டு பதிவுகளில் மாதிரியாக நான் உருவாக்கி இணைத்த Excel கோப்புகளை தினமும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்
 நண்பர் சொன்னார். "முரளி! நீதான் என்னை காப்பாத்தணும்.உன்னை  நம்பி சவால் விட்டிருக்கிறேன்..'" என்றார்.
"என்ன சவால் ஒன்னும் புரியலையே! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே" நண்பரை கேட்டேன்.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆபீஸ்ல ஒரு பெரிய ஒரு தகவலை தொகுத்து ஸ்டேட்ஆபிசுக்கு அனுப்பனும். அது என்னோடபொறுப்பு. எங்க ஆபீஸ்ல ரமேஷ்னு ஒருத்தர்தான் கம்ப்யூட்டர்ல இந்த வேலை எல்லாம் செய்வார். எக்சல்ல ஒர்க் பண்றதுக்கு அவருக்கு மட்டும்தான்  தெரியும். வோர்ட்ல பக்கம் பக்கமா அடிக்கறவங்க இருக்காங்க அவங்க எல்லாம் எக்சல்னு சொன்னாலே பயந்து ஓடறாங்க. இவரை நம்பி இருக்கறதாலே ரொம்ப அலட்டிக்குவார். தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு அலட்சியம் வேற. ஆனா அவரால ரெண்டுநாளா நாளா இந்த வேலையை முடிக்க முடியல.  நான் கூப்பிட்டு திட்டிட்டேன். அவரோ இது சாதரண வேலை   இல்ல. இதை யாராலையும் சீக்கிரமா முடிக்க முடியாது.நான் வேண்ணா சாலஞ் பண்ணறேன்னு சொன்னார். எனக்கு உன் ஞாபகம் வந்தது. நானும் சவால் விட்டேன். நான் பண்ணி காமிக்கிறேன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு சனிக்கிழமைதானே! ஆபீசுக்கு வந்துடு"
"என்ன சார் இப்படி பண்ணீட்டிங்க. என்ன வேலைன்னே தெரியலையே. நானும் எனக்கு தெரிஞ்சத வச்சு  சும்மா வெட்டி பில்ட் அப் குடுத்துக்குட்டிருக்கேன்"
"அதெல்லாம் தெரியாது. உன்னால முடியும் வா! பாத்துக்கலாம்"
நம்மள  சிக்கல்ல மாட்டி விட்டுட்டாரே.இதை செய்யலைன்னா நம்ம இமேஜ டேமேஜ் ஆகிடுமே" என்று நினைத்த வாறே போனேன்.
சனிக்கிழமை என்ற போதும் அனைவரும் வந்திருந்தனர். ஏதோ அவசர வேலை போல.
என்னை வரவேற்ற நண்பர் கம்ப்யூட்டர் ஆசாமியிடம் அழைத்துப் போனார்.
"ரமேஷ் இவர்கிட்ட சொல்லு."
ரமேஷ் என்னைப் பார்த்த ரமேஷ் இரு இகழ்ச்சிப் புன்னகை புரிந்தார்.
"நீங்க சாப்ட்வேர் தெரிஞ்சவரா? என்றார்
"இல்லை."
"ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் பண்ணி இருக்கீங்களா?
"இல்லை"
" பிராக்டிகல தெரிஞ்சிவச்சுருப்பீங்க போல இருக்கு" என்னால் இதை நிச்சயமாக செய்ய முடியாது என்ற முடிவுக்க வந்தவர் போல் தோன்றியது.
 "என்ன சார் பண்ணனும் "
கணினியில் ஒரு எக்சல் கோப்பை திறந்து காண்பித்தார்
" இதுல 5000க்கும் மேல  அட்ரசஸ் இருக்கு. ஆனா ஒவ்வொண்ணும் தனித்தனி காலத்தில இருக்கு.பேர் ஒரு செல்லுல இருக்கு. வீட்டு நம்பர் பக்கத்து செல்லுல இருக்கு. தெருபேர், ஊர்,மாவட்டம், மாநிலம் பின் கோடுன்னு அடுத்தடுத்த செல்லுல இருக்கு. இது எல்லாம் ஒரே செல்லில் கொண்டு வரணுமாம். எப்படி முடியும? மெர்ஜ் செல் போட்டு செய்ய முடியாது அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். மெர்ஜ் பண்ணா லெஃப்ட் செல்லில இருக்கிற கன்டென்ட் மட்டும்தான் இருக்கும்.ஒவ்வொரு செல்லிலும் இருக்கிற டெக்ஸ்டை காப்பி செய்து முதல் செல்லில் பேஸ்ட் பண்றதுதான் வழி. அதைத்தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். கிட்டத் தட்ட ஏழு எட்டு செல்லில் இருக்கராதை இணைக்கனுமே! 5000 த்துக்கும் மேல இருக்கிறதை எப்படி ஒரே நாளில் செய்வது. நீங்க என்னவோ செஞ்சுடுவீங்களாமே. உங்க நண்பர் சவால் விட்டிருக்கார். எங்க செஞ்சு காட்டுங்க  பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு கணினியை விட்டு எழுந்து எனக்கு இடம் கொடுத்தார் 
என்னடா இது வம்பாகி விட்டதே என்று நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் இது போன்று செய்ததில்லை என்பதால் உடனே தீர்வு கிடைக்கவில்லை. முயற்சித்துக் கொண்டிருந்தேன்
நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன். நீங்க ட்ரை பண்ணிக்கிட்டிருங்க என்று சொல்லி விட்டு வெளியே போனார் ரமேஷ்.
நண்பரோ எப்படியாவது வழி கண்டுபிடிங்க என்றார். 
நிச்சயம் எக்செல்லில் இதற்கு வழி இருக்கும் என்றே தோன்றியது.(அப்போது நான் இணையம் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை)
சிறிது நேர முயற்சிக்குப் பிறகு பலன் கிடைத்தது. 
இரண்டு வழிகள் கிடைத்தன. ஒன்று Concatenate என்ற Function ஐ பயன் படுத்துவது. இன்னொன்று வெறும் "&" பயன்படுத்துவது


மேற்கண்ட படத்தை பாருங்கள் A2 செல்லில் Raja என்ற பெயர் உள்ளது B2 இல் வீட்டு எண்ணும் அடுத்தடுத்து தெருவின் பெயர் ,இடம் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களும் உள்ளன. இவற்றை இணைக்க கடைசி விவரத்தில் (H2) பக்கத்து செல்லில் கிளிக் செய்து
 = குறியீட்டை டைப் செய்து பின்னர் இணைக்கவேண்டிய முதல் செல்லை கிளிக் செய்யவேண்டும்பின்னர் & குறியீட்டை டைப் செய்து அடுத்த  செல்லை கிளிக் செய்ய வேண்டும்ஒவ்வொரு சேலை கிளிக் செய்யுமுன் & டைப் செய்ய வேண்டும்
அந்த FORUMLA இப்படி இருக்கும்
=A2&B2&C2&D2&E2&F2&G2 இப்படி  FORMULA  BAR இல் காட்சியளிக்கும்
இப்போது H2செல்லில் இந்த Formula வை டைப் செய்தால் இந்த செல்களில் உள்ளவை இணைக்கப் பட்டு ஒரே செல்லில் முகவரி காட்சி அளிக்கும். முகவரி விவரங்களுக்கு இடையில் ஒரு கமா குறியீடு அமைய வேண்டும்னில் FORMULA இப்படி  இருக்க வேண்டும்
 =A2&","&B2&","&C2&","&D2&","&E2&","&F2&","&G2
 அமைய வேண்டுமெனில் ஆனால் இதில் ஒரு குறைபாடு உண்டு பெயர் வீடு எண்,தெருவின் பெயர் போன்றவை ஒவ்வொரு வரியாக அமையாமல் தொடர்ந்து அமையும்.  இவை தனித்தனியான அமைய.Char(10) என்றFunction( அதாவது ஒரு செல்லுக்குள் புது வரிகளை அமைக்க) ஐ பயன் படுத்த வேண்டும்.(சாதரணமாக அடுத்தடுத்த வரிகளில் text அமைய வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து Alt+Enter விசையை பயன் படுத்துவது வழக்கம்)

=A2&","&CHAR(10)&B2&","&","&C2&","&CHAR(10)&D2&","&CHAR(10)&E2&","&CHAR(10)&F2&","&CHAR(10)&G2 
 என்ற பார்முலாவை உள்ளீடு செய்தால் முகவரி அழகாக படத்தில் உள்ளது போல் கிடைக்கும். இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகவரி இணைக்கப்பட்ட செல்கள் Wrap text Format இல் அமைய வேண்டும்.
அதற்கு  ரிப்பனில் Home Tab இல் Wrap Text பட்டனை பயன் படுத்தலாம் அல்லது
 செல்லை வலது கிளிக் செய்து Format Cell தேர்ந்தெடுத்து Alignment Tab இல் Wrap text செக் பாக்சில் டிக் செய்யவேண்டும் .


 ஒரு முறை பார்முலா அமைத்து விட்டால் மற்ற விவரங்களுக்கு ட்ராக் செய்து விடலாம்.
Concatenate பயன் படுத்தி  எப்படி text ஐ இணைப்பது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம் (இப்போதைக்கு இல்லை)
இந்த முறையை பயன் படுத்தி  விவரங்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்தேன். நண்பர் மகிழ்ச்சி அடைந்து  அதற்குள் வெளியே சென்றிருந்த ரமேஷ் திரும்பி வந்தார்.
அவரால் நம்ப முடியவில்லை. நண்பர் ரமேஷைப் பார்த்து நான் சவாலில் ஜெயிச்சிட்டேன். என்றார்.
ரமேஷின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. என்றாலும் நன்றி சொன்னார் ஏதாவது தவறு கண்ணில் படுகிறதா என்று பார்த்தார். கடைசியாக இணைக்கப்பட்ட முகவரிகள் அனைத்தையும் செலேக்ட் செய்து வேறு ஒரு ஷீட்டில் காபி செய்தார். அங்கே பேஸ்ட் செய்ய #REF! என்று பிழை அறிவிப்பு  இருந்தது.
சரியா  வரலையே சார். என்றார்.
நான் சொன்னேன் ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும்  செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும்.  என்றேன். அவ்வாறே செய்ய சிக்கல் தீர்ந்தது. சவாலில் வென்ற நண்பர் அனைவருக்கும் S.K.C வாங்கி கொடுத்தார்.
இதற்கான மாதிரி Excel பைலை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்
அல்லது  கீழே உள்ள படத்தில் Down Arrow வை கிளிக் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.



****************************************************************

குறிப்பு: இது மாணவர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணிகளுக்கு எப்போதேனும் பயன்பட வாய்ப்பு உண்டு


1.காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
2.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற..


**************************************************************************************


வெள்ளி, 25 அக்டோபர், 2013

கவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு?

    
  சமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது மரியாதை உண்டு. வசீகரா பாடல் மூலம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர். மன்னிப்பாயா பாடலால்  இளம் உள்ளங்களை உருக்கியவர் தாமரை. ஆண்களே திரைப் படப் பாடலாசிரியராக பரிமளிக்க  முடியும் என்ற மரபை உடைத்தவர். 

   பொறியியல் பட்டதாரியான தாமரை கோயம்பத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர் . ஆர்வம் உந்தித் தள்ள தன் பார்த்த பணியை விட்டு விட்டு  கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் பயணத்தை தொடர்ந்தார். இவருடைய படைப்புகள் இயக்குனர் சீமானை ஈர்த்தன. வாய்ப்பும் அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் தாமரை.

   பின்னர்   தமிழர் தேசிய இயக்க பொது செயலாளராக இருந்த
தோழர் தியாகுவோடு மணவாழ்க்கையில் இணைந்தார் தாமரை. இருவருக்கும் பழைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாத நிலையில் புது வாழ்வு வாழத் தொடங்கியதாகத் தெரிகிறது. 

   தியாகு நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர். கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டவர். மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தனது சிறை அனுபவங்களை தொடராக ஜூனியர் விகடனில் எழுதி வந்தார்.அது பெரும் வரவேற்பு பெற்றதாக அறிய முடிகிறது. தியாகு சிறையில் இருந்தபோது காரல் மார்க்சின் டாஸ் கேபிடல் என்ற புகழ் பெற்ற நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 

   சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கடந்த ஆண்டே இவர்கள் இருவரைப் பற்றியும் பரபரப்பான செய்திகள் வெளிவந்ததை அறிந்திருக்கலாம். தியாகு தமிழ் தேசிய இயக்கத்திலிருந்து நீக்கப் பட்டார். தியாகுவின் லீலைகள் என்று விமர்சனத்துக்குரிய வீடியோக்களும் யூ ட்யூபில் உலா வந்தன.

   இலங்கையில் நடைபெற இருக்கின்ற காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் தியாகு. பதினைந்து நாட்கள் நீடித்த பின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில்தான் தாமரையின் முக நூல் பக்கத்தில் படத்தில் உள்ள status வெளியாகி உள்ளது.

.............. இந்தத் துன்பமான காலகட்டத்தில் தன்னோடு துணை நிற்கும்படி மேற்கண்ட பதிவில் கூறப பட்டுள்ளது.  தன் உள்ளத்தை மன வருத்தத் தோடு பதிவு செய்திருப்பதற்கு தியாகுவிற்கும் இவருக்கும் உள்ள பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றது காரணம் என்று கூறப்படுகிறது. தியாகு உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பத்திரிகைகளை பார்த்துத்தான் தெரிந்து கொண்டாராம்  தாமரை

   தன்னை தவிர்த்து வந்த தியாகுவிடம் அனைவரின் முன்னிலையில் நியாயம் கேட்க உண்ணாவிரத நிறைவு நாளன்று அங்கு சென்றதாக தமிழக அரசியல் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

   இதன்  பின்னர் வெளியானதுதன் தாமரையின் முகநூல் ஸ்டேடஸ்.செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் என்ற முறையில் தாமரையின் நிலை கவலைக் குரியதுதான். தைரியமும் மன உறுதியும் கொண்ட பெண்ணான தாமரை இதை எதிர் கொள்ள முடியாமல் உடைந்து போய் முக நூலில் நிலையை பதிவு செய்தது சற்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.  பிரபல கவிஞர் அதுவும் பெண் ஆயிற்றே வழக்கம்போல் முகம் காணா முக நூல் நட்புக் கூட்டம் கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு துணையாக நாங்கள் நிற்கிறோம் என்ற தொனியில் கம்மெண்டுகளை அள்ளி வீசினர். எந்த வகையில் துணை நிற்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  சொந்த சோகங்களை பதிவு செய்து அதற்கு ஒரு அரசியல் வாதியைப் போலஆதரவு தேடுவது எதற்காக என்பது புரியவில்லை. காவல் நிலையம் நீதி மன்றம் அல்லது நேரடி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியுமே!

   தமிழுக்காகவும் தமிழ் சமுதாயத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக கூறும் ( சமுதாயத்திற்காக என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஒரு வேலை நான் அறியாமல் கூட இருக்கலாம்). என் மொழிப் பற்றும் இனப் பற்றும தான் என் அவல நிலைக்குக் காரணம் என்றும் கூறுகிறார். இது அவர்களது சொந்தப் பிரச்சனை. பிரச்சனைகள் தீர்ந்து  நல்லபடியாக வாழ பிரார்த்திக்கிறேன்.

       என்னை பொறுத்தவரை பெண்களோ ஆண்களோ தங்கள் குடும்ப விவகாரங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து ஆறுதல் தேடுவது சில சிக்கல்கள் உருவாக காரணமாக அமையக் கூடும்.   முகநூல் பயன் படுத்துபவர்கள் தங்கள் வீட்டில் நடந்த சிறு பிரச்சனையைக் கூட எல்லாரும் அறியும் வண்ணம் வெளியிட்டால் அந்த சூழலை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவிகளை, நல்லவர் போல் நடித்து ஏமாற்றும்  சமூக  வலை தளங்களில் வலம் கயவர்களுக்கு வாய்ப்பாக அமையும் அல்லவா?

    நல்ல  விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்

********************************************************************************************
முந்தைய பதிவுகள் 
*********************************************************************************************



புதன், 23 அக்டோபர், 2013

புஷ்பாமாமியின் புலம்பல்கள்!ஜாக்கிரதைடா!ஜாக்கிரதை!

'விஸ்வநாதா! நான் சொல்றதை மனசுல வச்சுக்கோ. ஜாக்கிரதையா நடந்துக்கோ பேப்பர்ல வர்ற நியூஸ் எல்லாம் பாத்தா பயமா இருக்கு. போன் பண்ணு. ....."
புஷ்பா  மாமியின் குரல் வீட்டுக்குள் இருப்போரையும் வெளியே எட்டிப் பார்க்க வைத்தது.
மாமி தன உறவினர் யாரையோ ஏற்றிவிட எங்கள் பகுதியின் மெயின் ரோடில் ஆட்டோவிற்காக காத்திருந்தது தெரிந்தது. ஒரு ஆட்டோ வந்தது. மீட்டர் போடுவியா என்று கேட்டார்.
அவன் "முடியாது"  என்றான்
விடாப்பிடியாக"ஆட்டோல கட்டாயம் மீட்டர் போடனும்னு கவர்ன்மென்ட் சொல்லுதே! நீ ஏன் மீட்டர் போட மாட்டேன்னு சொல்ற"
"எங்களுக்கு கட்டுப்படியாகாது.அதுக்கப்புறம் ரெண்டு முறை பெட்ரோல் விலை ஏறிடிச்சு. அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?"
'அதெல்லாம் எனக்கு தெரியாதுமீட்டர் போடறதா இருந்தா வா!இல்லன்னா போய்க்கிட்டே இரு." என்றார் மாமி
அவன் போய் விட்டான்.
கூட இருந்த இளைஞன் விஸ்வநாதன் "சித்தி பரவாயில்ல நான் போய்க்கறேன். நீங்க போங்க!" என்றான்
மாமி விடவில்லை காத்திருந்து மீட்டர் போடும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்தார்.
"முரளி, இப்போ ஆட்டோல ஏத்தி விட்டேனே அவன் என் அண்ணன் பையன் விஸ்வநாதன். புதுசா ஹையர் செகண்டரி ஸ்கூல்ல வாத்தியாரா சேரப் போறான். அதனாலதான் அவனுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்தேன்."

"அப்படியா மாமி! ரொம்ப சந்தோஷம்" என்று எப்போதும் போல் ஒரிரு வார்த்தைகளில் ரியாக்ஷன் கொடுத்தேன். மாமி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார்.
:"இந்த காலத்தில வாத்தியார் வேல செய்யறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. .பேப்பர்ல படிச்சிருப்ப யே போன வரம் தூத்துக்குடியில இரு இன்ஜினியரிங் காலேஜ் ப்ரின்சிபாலை  மூணு ஸ்டூடண்ட்ஸ் சேர்ந்து கொலை பண்ணிட்டாளாமே! காலம் எப்படி இருக்கு பாத்தியா! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பையன் டீச்சரை கொலை பண்ணான். இப்போ கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம பிரின்சிபாலை கொன்னுட்டான்களே. எப்படி வந்தது இந்த கொலை வெறி " அதுக்குதான் விஸ்வநாதன் கிட்ட சொல்ல்கிட்டிருந்தேன்." நீ பாடம் சொல்லிக் கொடுக்கப் போறது +2 பசங்க. அதுவும் கோ-எஜுகேஷன் .பசங்களை யாரையும் கண்டிக்காதே. அடிச்சி கிடிச்சு வச்சுடாதே.அதுவும் குறிப்பா பொம்பளை பசங்க கிட்ட எப்பவுமே டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு படிக்காட்டி போறாங்க அதுக்காக கண்டிக்காதே. திட்டாதே ன்னு"
" ஆமாம் மாமி. அடிக்கிறது மட்டும் இல்ல மன ரீதியா  பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாலும் தப்புதான்."

"திட்டினாலோ அடிச்சாலோ தற்கொலை செஞ்சுக்கற பசங்க ஒரு  பக்கம் இருக்கு. ஆனா  கொலை செய்யற அளவுக்குப் எப்படி போனாங்கன்னு தெரியல. காலேஜை விட்டு சஸ்பென்ட் செஞ்சதை அவமானமா நினைச்ச இந்த பசங்க இப்போ கொலைகாரங்க பட்டத்தோடதானே காலமெல்லாம் இருக்கணும்?"

"காலேஜ் பஸ்சில கேர்ள்சை கிண்டல் பண்ணதால இவங்களை சஸ்பென்ட் பண்ணிட்டாரு.பேரன்ட்சயும் கூப்பிட்டு அவமானப் படுத்தி இருக்காரு."
"அதுக்காக கொலபண்றது  சரியா?.திட்டமிட்டே பண்ணி இருக்காளே! இதுக்கு கடுமையான தண்டனை கொடுத்துத் தான் ஆகணும் முன்னெல்லாம் பிள்ளைங்களை ஸ்கூல்ல சேக்கும்போது கண்ணு ரெண்டு மட்டும் விட்டுடுங்க. மத்தபடி நீங்க அடிச்சி உதைச்சாவது பையனை படிக்க வையுங்கன்னு வாத்தியார்கிட்ட பெத்தவங்க சொல்லிட்டு போவாங்க. இப்ப அந்த மாதிரி எதிர்பாக்க முடியாதுதான். இருந்தாலும் கத்துக் கொடுக்கிற குருவை  கொலை பண்ற அளவுக்கு போய்ட்டாளே! இதுதான் கவலையா இருக்கு. பையன் இஞ்சினியரா ஆவான்னு கனவு கண்டுகிட்டு இருந்த பெத்தவங்களை நினைச்சி பாத்திருந்தா இந்த தப்ப செஞ்சிருப்பான்களா? அந்த பிரின்சிபாலும் கண்டிப்புங்கற பேர்ல பசங்களை ரொம்ப மோசமா நடத்துவாரான்றதை நானும் பத்திரிகையில படிச்சேன். படிக்கிற பசங்களை தன்னோட பிள்ளைங்க மாதிரி நடத்தனும்னு அவருக்கு ஏன் தெரியாம போச்சு? "

"இதெல்லாம் இப்ப இருக்கறவங்களுக்கு ஒரு பாடம் மாமி".  

"நிறைய காலேஜுல சில  அநியாயம் நடக்கத்தான் செய்யுது.ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் வாங்கறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அபராதம் போடறது. பசங்களை மெரட்டறதுன்னு. எல்லாரும் எப்போதும் ஒரே மன நிலையில இருக்கமாட்டாங்க. ஆசிரியர்களின் (ஏன் பெற்றோரோர்களின்) வார்த்தைகளோ செயல்களோ  .தற்கொலை செய்து கொள்ளவோ செஞ்சுக்கவோ , தவறான செயல்கள் செய்யவோ தூண்டறதா  இருக்கக் கூடாது. குழந்தைகளையும் புரிஞ்சிக்க முடியல. பெரியவங்களையும் புரிஞ்சிக்க முடியல..."
"சரியா சொன்னீங்க. ஸ்கூலை பொறுத்தவரை டீச்சர் கையில பிரம்பு பிரம்பு வச்சுக்கறது குற்றம். மாணவர்களை அடிச்சா அவர்களே கம்பளையின்ட் பண்றதுக்கு போன் நம்பர் கூட கொடுத்திருக்காங்க. இதையும் மீறி  ஏதாவது  நடந்து கிட்டுதான் இருக்கு."

" என்னமோ போ! பேப்பரை படிக்கறதுக்கே பயமா இருக்கு. அரசியல் விளையாட்டு, படிப்பு, சமூகம்னு ஏதுவா இருந்தாலும் முக்காவாசி மோசமான நியூசாத்தான் இருக்கு. இந்தக் கொலை செய்தி வந்த பேப்பர்ல அதே பக்கத்தில இதே மாதிரி ஏராளமான மோசமான செய்திதான் அந்த பேப்பரை கொடுத்தனுப்பறேன் பார்......."

மாமியின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருக்கும்போது  எனக்கு வந்த அலைபேசி அழைப்பு அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது. புஷ்பா மாமி அவருக்கு பட்டதை சொல்லி விட்டுப் போய் விட்டார்.

 இது தொடர்பாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்
பின்னர் அவர் கொடுத்தனுப்பிய 11.10.2013 தினமலர் 11ம் பக்கத்தை பார்த்தேன்.
அந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சில செய்திகளின் தலைப்புகள் 


  1. இன்ஜினியரிங் கல்லூரி முத்ஜல்வர்வெட்டிக் கொலை; மாணவர்கள் வெறித்தனம்
  2. நகராட்சி கூட்டத்தில் நாற்காலி வீச்சு. வருகை பதிவேடு கிழிப்பு 
  3. பெண் பலாத்காரம் மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு
  4. கொலையில் முடிந்த தகாத உறவு 10 ம் வகுப்பு மாணவன் சிக்கினான் 
  5. மகளை கற்பழித்த காமுகனுக்கு 14 ஆண்டு ஜெயில் 
  6. ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி.
  7.  கந்து வட்டிக்காரர் கொலை மிரட்டல் 
  8. இரு ரயில் இன்ஜின்கள் மோதிய விபத்து தடம் புரண்ட இஞ்சினால் தண்டவாளமும் சேதம் 
  9. காதல்  விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை 
  10.  
     இந்த சூழ்நிலையில வாராவாரம் பாசிடிவ் செய்திகளை தேடி வெளியிட்டு வரும் எங்கள் ப்ளாக்  ஸ்ரீராமுக்கு அவார்டுக்கு பரிந்துரைக்கிறேன்.
    **********************************************************************************
    பள்ளி   மாணவன் ஆசிரியையை கொன்றபோது எழுதியது
    தம்பி!  ஏனிந்தக் கொலைவெறி  
    *************************************************************
    புஷ்பா  மாமியின் முந்தைய புலம்பல்களை கேட்க ஆவலா?
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்  
    புஷ்பா மாமியின் ஆவேசம்!
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு? 
    அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்  
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்  
    புஷ்பா மாமியின் எச்சரிக்கை  
    ***********************************************************************************
    படித்து  விட்டீர்களா?
    ஒரு தந்தையின் கடிதம்

    சனி, 19 அக்டோபர், 2013

    ஒரு தந்தையின் கடிதம்





    சில நேரங்களில் எதிர்பாரா இடங்களில் இருந்து சுவாரசியமாக விஷயங்கள் கிடைத்து விடுகின்றன.
    ஹோட்டலில் டிஃபன் வாங்கி வர வேண்டி இருந்தது ஒரு தினசரி பத்திரிக்கை பேப்பரில் இலையை வைத்து அதில் தோசையை பார்சல் செய்து கொடுத்திருந்தனர். தோசை சாப்பிட்டுவிட்டு பேப்பரை தூக்கி எறியப் போனபோது அதில் இருந்த விஷயம் என்னை ஈர்த்தது. அது ஒரு கடிதம். ஒரு தந்தை மகனுக்கு எழுதியது. இலையை மட்டும் குப்பை தொட்டியில்போட்டு விட்டு  அதை முழுவதுமாக படித்தபின்தான் நினைவு வந்தது இன்னும் கை கழுவ வில்லை என்று.. .(முந்தைய பதிவு:தயங்காம கை கழுவுங்க!-300வது பதிவு )  காய்ந்த கைகளை கழுவிக்கொண்டேன். கழுவிய கையின் ஈரம்  உடனே காய்ந்து விட்ட போதிலும் அந்தக் கடிதத்தின் நினைவுகள் காயாததால் ஈரத்தை உங்களிடம் பரிமாறிக் கொள்கிறேன்.(கருத்தை மனதில் கொண்டு கொஞ்சம் மாற்றி அமைத்து  மானே! தேனே! சேர்த்து தந்திருக்கிறேன்)

    அன்புள்ள மகனுக்கு,
    அப்பா எழுதுவது
    நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான காரணங்கள் மூன்று.
    1. வாழ்க்கை, வாய்ப்புகள்,துரதிர்ஷ்டம் முதலானவற்றை யாராலும் முன்கூட்டியே அறியமுடியாது.வாழ்க்கை கால அளவு எவ்வளவு என்பதும் நமக்கு தெரியாது.சில விஷயங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்திலேயே சொல்லி விடுவது நல்லது
    2. நான் உனக்கு அப்பதானே! நான் சொல்லிக் கொடுக்காமல் வேறு யார் சொல்லிக் கொடுப்பார்கள்?
    3. நான் சொல்லி இருக்கும் விஷயங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டவை. இவற்றை நீ அனுபவித்து தெரிந்து கொள்வதை விட எனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது கால,பொருள் விரயங்களை தவிர்க்கும் அல்லவா?
    நான் சொல்லப் போகும் விஷயங்களை உன் மனதில் பதிய வைத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் உன் கையில்தான் இருக்கிறது.

    • எல்லோரும் உன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்க வேண்டாம். மரியாதை இன்றி நடந்து கொள்பவர்களைப் பற்றி புலம்புவதில் பயனில்லை. உண்மையில் உன்னை மரியாதையாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கும் உனது அம்மாவுக்கு மட்டுமே தவிர வேறு யாருக்கும் இல்லை  உன்னிடம் நல்லவிதத்தில் நடந்து கொள்பவர்களிடம் நீ நல்ல உறவு வைத்துக் கொள்ளவேண்டும்.அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.அதே நேரத்தில் எச்சரிக்கையும் தேவை.ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். உன்னிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவர்கள் எல்லாம்  உன்னை நேசிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
    • இந்த மனிதர்தான் வேண்டும். இந்தப் பொருள்தான் வேண்டும். இவை இல்லை என்றால் வாழ்க்கையே முழுகிப் போய்விடும் என்றெல்லாம் இந்த உலகத்தில் ஒன்றும் கிடையாது.நீ நேசிக்கும் நபரோ அல்லது பொருளோ உன்னை விட்டுப் போய்விட்டாலும் உண்மையில் எந்த பாதிப்பும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் எந்த இழப்பையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.
    • மனித வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் போன்றது. நிகழ்காலத்தில் வாழ்கையை வீணடித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை உன்னை விட்டு விலகி சென்றிருக்கும்.
    • அன்பு என்பது உண்மையில் நல்ல விஷயம்தான்.ஆனால் அது நிலையானது  அல்ல. சூழ்நிலயைப் பொறுத்து அது அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.காதல் புனிதமானது இனிமையானது,அழகானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசித் திரியாதே! இதெல்லாம் எல்லா பெற்றோரும் சொல்வதுதானே என்று நீ நினைக்கலாம். ஆனால் இவற்றால் என்றாவது நீ மனமுடைந்து போக நேரக் கூடிய சூழல் வந்தால் அந்த சோகத்தை தவிர்க்கவே இதைக் கூறுகிறேன். அதனால்தான் அவற்றை மிகைப் படுத்த வேண்டிய அவசியம்இல்லை என்றும் வலியுறுத்துகிறேன்.
    • வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களில் பலர் அதிகம் படிக்காதவர்கள்.கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்பது இதற்கு அர்த்தம் அல்ல.வாழ்க்கைக்கு முக்கியமானது கல்வி. அதே நேரத்தில் படிப்பறிவு மட்டுமே வாழ்க்கைக்கு போதாது என்பதை புரிந்து கொள் 
    • கந்தை உடுத்துபவன் பணக்காரன் ஆக முடியாதா என்ன? நிச்சயம் முடியும் ஆனால் கந்தைத் துணியுடன்தான் தனது பயணத்தை தொடங்க வேண்டும் வேறு வழியில்லை.
    • என்னை வயதான காலத்தில் நீ தாங்குவாய் என்று நான் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை.அது போலவே உன்னையும் வாழ்நாள் முழுதும் என்னால் தாங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதை நீ உணர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரையே உன்னை பராமரிக்க  முடியம். உனது உழைப்பும் முயற்சியுமே உன் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும்
    • மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறாதே. அதே நேரத்தில் மற்றவர்கள் உனக்கு கொடுத்த வாக்கை கடைபிடித்தே தீர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்வது உன்னை மட்டுமே பொறுத்த விஷயம். நீ நிச்சயம் அவ்வாறு நடந்து கொள்ள முடியும்.
    • அதிர்ஷ்டத்தை நம்பாதே இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது.அதற்கான விலையை கொடுத்துத்தான்  வேண்டும்.
    • புற  விசை ஒன்று தாக்காதவரை ஒரு பொருள் அதே நிலையில் இருக்கும். இது நியூட்டனின் விதி. வாழ்க்கையும் அப்படித்தான் ஏதோ ஒரு புற நிகழ்வு வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து விடுகிறது. அந்தப் புறநிகழ்வு நடக்கும்போது அதை பயன்படுத்திக் கொள். இல்லையெனில் சாதாரண மனிதனைப் போல பயணமோ நிலைப்போ அப்படியே இருக்கும்.
    • நான் உன்னுடன் செலவிடும் நேரம் போதுமானதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் நம் இருவருக்கும் அது மிகமுக்கியமானது. நாம் அடுத்த முறை சேர்ந்து இருப்போம் என்று சொல்ல முடியாது காரணம் வாழ்க்கை அவ்வளவு தூரம் நிலை இல்லாதது. அதை கவனத்தில் கொள்வாய் என் கண்மணி!
                                                                 இப்படிக்கு 
                                                             உன் அன்பு அப்பா 

    *******************************************************************************************
    கொசுறு : The Pursuit of Happiness என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங் தொலைக் காட்சியில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.வேலை இன்மை காரணமாக மனைவி, மகனை தன்னிடம் விட்டுப் போன நிலையிலும் மகனை கலங்காமல் பாசத்தோடு  பார்த்துக் கொள்ளப் போராடும் இளம் தந்தையின் கதை. நான் ரசித்த படங்களில் அதுவும் ஒன்று. இளம் தந்தையாக நடித்து அசத்தியவர்  வில் ஸ்மித் என்னும் நடிகர் என்பதை இணையத்தில்தான் அறிந்தேன்.

    *****************************************************************************************

    இதைப் படித்து விட்டீர்களா 


    செவ்வாய், 15 அக்டோபர், 2013

    தயங்காம கை கழுவுங்க!-300வது பதிவு



     300 வது பதிவு
        இன்று( 15.10.2013)  உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எதற்கு கொண்டாட வேண்டும்? கை கழுவுவது  அவ்வளவு முக்கியமா?
    உலகில் 2 மில்லியன் குழந்தைகள் டயரியா போன்ற  வயிற்றுப் போக்கு மற்றும் நுரையீரல் தொற்றுக்களால் இறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. முறையாக சோப்பை பயன்படுத்தி கைகள் கழுவுவதன் மூலம் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். இதன் முக்கியத்துவம் உணரப் பட்டதால் PPPHW (PUBLIC-PRIVATE PARTNERSHIP FOR HAND WASHING என்ற அமைப்பு 2008 முதல் ஒரு இயக்கமாக மாறி கைகழுவதன் முக்கியத்துவத்தை பல்வேறு வகைகளில் மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு உருவாக்க  முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றே உலக கைகழுவும் தினம் கொண்டாடுதல். 

    இந்த அமைப்பில், உலக வங்கி, யூனிசெப்,(United Nations International Children Emergency fund) மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல் படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று கை கழுவும் தினம் கொண்டாட முடிவு செய்யப் பட்டது
    முக்கியமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தை உணர்த்துவதை இவை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய நாளில் பள்ளிகளில் மதிய உணவு உண்பதற்கு மாணவர்கள் மாணவர்கள் ஆசிரியர் முன்னிலையில் சோப்பு போட்டு கைகழுவும் திருநாளாக கொண்டாடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் கைகளை எவ்வாறு முறையாக சோப்பை பயன்படுத்தி கைகழுவ பயிற்சிகளும் அளிக்கப் படுகின்றன. சுகாதாரமற்ற சூழலில் வாழும் அடித்தட்டு  மக்கள் இதனை உணர்ந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் நோய்க்கு ஆட்படாமல் தடுக்கவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த நல்ல பழக்கத்தை உருவாக்குதன் மூலம் எதிகால சமுதாயத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பப் படுகிறது.

        உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவை எடுத்து உண்பதற்கு  கைகளே பயன்படுத்தப் படுகின்றன. சரியாகக் கழுவப் படாத கைகள் கிருமிகளின் தாயகமாக விளங்குகிறது. வயிற்றுப் போக்கு டைபாயிட் காலரா போன்ற தொற்றுக்களுக்கு ஆதாரமாக விளங்குவது மனித மலம். ஒரு கிராம் மனித மலத்தில் சுமார்  1கோடி வைரஸ்களும்,10 லட்சம் பாக்ட்டீரியாக்களும் வாசம் செய்து கொண்டிருக்குமாம். இவை பல்வேறு விதங்களில் மலத்திலிருந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவினாலும் எப்படியோ கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு  உண்ணும்போதோ விரல்களை வாயில் வைக்கும் போதோ ஜாலியாக உடலுக்குள் நுழைந்து தன வேலையை காட்டத் தொடங்குகிறது. அசுத்தமான தண்ணீர் வழியாகவும், ஈக்கள் மூலமாகவும் இந்த நுண்ணுயிரிகள்   பரவும் என்றாலும். என்றாலும் குறிப்பிடத் தக்க அளவு கைகளுடன்தான் இந்தக் கிருமிகள் கைகோர்த்துக் கொள்கின்றன

    எப்போதெல்லாம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்?
    1. மலம் கழித்த பின்பு 
    2. சாப்பிடுவதற்கு முன் 
    3. சமைப்பதற்கு முன் 
    4. உணவுப் பொருட்களை தொடுவதற்கு முன் 
    5. உணவு பரிமாறுவதற்கு முன் 
    6. குழந்தைகள் மலம் கழித்த பின்அதை சுத்தம் செய்த பின் 
    7. வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் 
    8. கழிப்பறைகளை  சுத்தம் செய்தபின் 
    9. மருத்துவமனை சென்று வந்த பின்
    10. அசுத்தமான இடங்களில் கை வைத்த பின் 
    எப்படிக்  கழுவ வேண்டும் ?
    வெறும் நீரால் நீண்ட நேரம் கை கழுவினாலும் கையில் உள்ள நுண்கிருமிகள் கையை விட்டு செல்வதில்லை. விடாப் பிடியாக கண்ணுக்குத்தெரியாமல் ஒட்டிக கொண்டிருப்பவற்றை அகற்ற  சோப்பை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கைகளை கழுவ வேண்டும்  நகங்கள் அழுக்கை சேமிக்கும் கிடங்காதலால் அதை அவ்வபோது வெட்டிவிட வேண்டும்.நகங்கள் இருந்தால் சோப்பு போடும் போது  அங்கேயே கிருமிகளும் அழுக்கும் தங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு
    • கைகளை  நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பு அல்லது சோப்பு கரைசலை தடவ வேண்டும் 
    • உள்ளங்கைகளை நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்
    • விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்க வேண்டும்
    • வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையிலும், இடது கை விரல் நுனிகளை வலது உள்ளங்கையிலும் வைத்து தேய்க்கவேண்டும் 
    • கைகளில்  சோப்பு நுரை குறைந்தது 30 வினாடிகளாவது இருக்க வேண்டும் . 
    • பின்னர் கைகளை சோப்பு நுரை போகும் வரை சுத்தமாக கழுவ வேண்டும்                 
    • குழந்தைகள் என்றால் முழங்கை வரையிலும் , பெரியவர்கள் என்றால் மணிக்கட்டு வரையிலும் நன்கு கழுவ வேண்டும்        
    • விலை உயர்ந்த சோப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண சோப்பே போதுமானது.
    இதோ இந்தப் படத்தில் உள்ளது போல் சோப்பு போட்டு கைகளை கழுவுவது சரியான முறையாகும்.
      ஆசிரியர்கள் மட்டுமல்ல .பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமாக கை கழுவும் பழக்கத்தைகற்றுத் தர வேண்டும். அவர்களிடம் சொல்வதை விட நாம் தேவைப்படும் சமயங்களில் கை கழுவும் பழக்கம் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கும் தானாகவே வந்து விடும்.
    ****************************************************************************************

    300 பதிவுகளை சகித்துக் கொண்டு  ஊக்கமும் ஆதரவும் தந்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த  நன்றி

    ****************************************************************************************

    திங்கள், 14 அக்டோபர், 2013

    பெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்னும்

    பெட்டிக்கடை 4
    ஊஞ்சல்  புதிருக்கான விடை
    கடந்த பெட்டிக் கடையில் ஊஞ்சல் ஆடுவது பற்றி ஒரு புதிரைக் குறிப்பிட்டிருந்தேன். (புதிரை  படிக்க இங்கு கிளிக் செய்க )அதன் விடையை வவ்வால் சரியாக சொல்லி விட்டார். அதற்கான விளக்கங்களும் விரிவாக அவரே கருத்தில் சொல்லி விட்டதால் இப்போது அதை விளக்கப் போவதில்லை
      விடை . தாத்தா பாட்டி, அம்மா அப்பா, குழந்தைகள் மூன்று பேருமே எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றே.
    இது தனி ஊசல் பாடம்,சுவாரசியமாக சொல்லிக் கொடுப்பதற்காக நான் உருவாக்கிய புதிர். ஊசல்(ஊஞ்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்) மெதுவாக ஆடினாலும் சரி வேகமாக ஆடினாலும் சரி அலைவுநேரம் மாறாது. ஊசலின் நீளம் மாறினால் மட்டுமே அலைவு நேரம் மாறும்.
    இது பற்றி சுவாரசியமான விஷயம் உண்டு .
         இந்த  உண்மையை கண்டறிந்தவர் கலீலியோ. ஒரு சர்ச்சுக்கு சென்றிருந்தபோது தற்செயலாக சர்ச்சில் சங்கிலியில் கட்டி தொங்க விடப்பட்ட விளக்கு காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை  கவனித்தார்.அதை உற்று நோக்கிய கலீலியோ, அது காற்றின் வேகத்திற்கேற்ப எப்படி ஆடினாலும் ஒரு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரே அளவாக இருந்தது.  கூடுதல் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது  கடிகாரம் கண்டுபிடிக்கப் படவில்லை.  பின் எப்படி இந்த உண்மையைக் கண்டறிந்தார். விளக்கின் அலைவை தன் நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டார்.  இந்த உண்மை அறியப்பட்ட  காலம் கி.பி. 1642.
         இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? பெண்டுலம் கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு இதுதான் அடிப்படையாக அமைந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிகாரம் தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்தார் கலீலியோ . ஆனால் முடியவில்லை.  இதை அடிப்படையாக வைத்து  டச்சு நாட்டு அறிஞர்  ஹைஜென்ஸ் என்ற விஞ்ஞானிதான் வெற்றிகரமாக முதல் கடிகாரத்தை உருவாக்கினார். தனி ஊசல் பாடம் நடத்தும்போது பெரும்பாலான ஆசிரியர்கள் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே! அலைவு நேரம் கண்டுபிடிக்கும் சோதனை எதற்காகப் பயன்பட்டது என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அந்த ஆசிரியரின் பெயரை சொல்லுங்கள் பாராட்டு விழா நடத்தி விடலாம்.
    இன்னும் விளக்கமாக எழுதினால் பயந்து  ஓடி (ஒட்டி) விடுவார்கள் என்பதால்  இதன் தொடர்ச்சியை தற்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்.

    ***************************************************************************************************
    சச்சின் ஒய்வு
    ஒரு வழியாக சச்சின் தனது ஓய்வை அறிவித்து விட்டார். எவ்வளவுதான் புகழும் பணமும் சம்பாதித்தாலும், திறமை குறைந்து போனதை அறிந்த பின்னும் விலக மனமின்றி துரத்தும் வரை விடாப் பிடியாக இருப்பது இந்திய வீர்கள் மட்டுமே. சச்சின் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை. அதிக அளவில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்ததே ஒரு சாதனைதான். என்ன? கொஞ்சம் முன்னரே ஒய்வு அறிவித்திருக்கலாம்!

        ஓய்வை அறிவித்து விட்டதால் விமர்சித்தவர்கள் கூட கொஞ்ச நாளைக்கு அவருடைய தலையில் தூக்கி வைத்துக் கொண்டு  கொண்டாடுவார்கள். ஓய்வுக்குப் பின் ஒரு எம்பியாக கிரிக்கெட் மட்டுமல்லாது மற்றவிளையாட்டுகளையும் வளர்ப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்றே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. செய்வாரா அல்லது எம்பி சலுகைகளை அனுபவித்துக் கொண்டு மௌனமாகவே இருந்து விட்டுப் போய்விடுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

    சச்சின்  தொடர்பான பிற பதிவுகள்
    சதத்தில் சதம்! சச்சினுக்கு ஒரு வாழ்த்துப்பா!
    சச்சினுக்கு ஒரு கடிதம்.
    **********************************************************************************************
    ஈஞ்சம்பாக்கம் சீரடி  சாய்பாபா கோவில்

    நீலாங்கரையை தாண்டி ஈன்ஜம்பாகாத்தில்  உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு மாதம் ஒருமுறை போவது வழக்கம். கிழக்கு கடற்கரை சாலையில்  பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைதியான சூழலில் கோவில் அமைந்திருக்கிறது. கொஞ்சம் பெரிய பரப்பளவில் அழகான மரங்களும் செடிகளும் நிறைந்த சோலைக்குள் கோவில் கட்டப் பட்டிருக்கிறது. மாலை 6 மணிக்கு சென்றால் வெளியில் பறந்து திரிந்து கூடு சேரும் கீச்சு கீச்சு என்று பறவைகளின் ஒலியும், வங்கக் கடலின் அலை ஓசையும் நமது செவிகளுக்குள் நுழைந்து ஒரு ஆனந்தத்தை தரும். வட மாநில மக்கள் பலரை இங்கு காண முடிகிறது. விடுமுறை நாட்களில் சில திரை உலக பிரபலங்களும்  இங்கு வருவதுண்டு. கோயிலை ஒருமுறை சுற்றி காலாற நடந்து வந்தால்  மனம் லேசாகத்தான் ஆகிறது.
    வெளியே  வந்தால் கோயிலை ஒட்டி சிறிது நடந்தால் கடற்கரை. சிது நேரம் செலவழித்து வங்கக் கடலின் அழகை ரசித்து திரும்பலாம்.

     பக்கத்து காம்பவுண்ட் ராதிகாவின் ராடன் ஹவுஸ்

    ********************************************************************************************
    ரூபனின்  கவிதைப் போட்டி
    தீபாவளியை ஒட்டி பதிவர் ரூபன் ஒரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தார்.


    போட்டிக்கான தலைப்பு
    1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
    2. ஒளி காட்டும் வழி
    3. நாம் சிரித்தால் தீபாவளி
      போட்டிக்கு கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 31.10.2013 என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.
    மேலும் விவரங்களுக்கு  
    இந்த  இணைப்பிற்கு சென்று பார்க்கவும். எத்தனை கவிதைகள் இதுவரை வந்திருக்கிறது என்று தெரியவில்லை.கவிஞர்களே உங்கள் படைப்புகளை விரைந்து அனுப்புங்கள். 
    திடங்கொண்டு போராடு சீனுவைத் தொடர்ந்து தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஏராளமான பரிசுகளை அறிவித்து கவிதைப்  போட்டியினை நடத்தும் தம்பி ரூபனுக்கு, கவிஞர்களே உங்கள் அழகான படைப்புகளை அனுப்பி ஆதரவு வழங்குங்கள். 
    நான் ரூபன்!,இது வரை எத்தனை பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.

    ********************************************************************************************
    ஒரு பஞ்ச் கவிதை 

                 தற்கொலைக்கு  முயற்சிக்காதே!
                 ஏற்கனவே  நீ 
                 இறந்திருக்கலாம்!

    ஞாயிறு, 13 அக்டோபர், 2013

    சொல்லுங்கண்ணே!சொல்லுங்க! இதை எழுதியது யார்?

              

    நிறையக்  கவிதை படிப்பவரா நீங்கள்? இந்தக் கவிதை எழுதியது யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?


    திண்ணையை இடித்து தெருவாக்கு 

          உட்கார் நண்பா நலந்தானா?-நீ 
          ஒதுங்கி வாழ்வது சரிதானா?
          சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன் 
          சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?

          புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி 
          புலம்ப வேண்டாம்-நெல்கூட
          புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது 
          பூமியின் பசியைப் போக்க வில்லை?

          கடலின் நான் ஒரு துளிஎன்று
          நீகரைந்து போவதில் பயனென்ன?
          கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
          காட்டு; உந்தன் தலைதூக்கு 

          வந்தது யாருக்கும் தெரியாது- நீ
          வாழ்ந்ததை உலகம் அறியாது
          சந்ததிகூட மறந்துவிடும் -உன் 
          சரித்திரம் யாருக்கு நினைவு வரும்?

          உணவு ஆடை வீடென்று -உன் 
          உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
          மனைவி  மக்கள் வீடென்று -உன் 
          மனதின் எல்லையை சுருக்காதே 

          திண்ணைதானா உன்தேசம்-உன் 
          தெருவொன் றேவா உன் உலகம் 
          திண்ணையை இடித்து தெருவாக்கு -உன் 
          தெருவை மேலும் விரிவாக்கு 

          எத்தனை உயரம் இமய மலை -அதில் 
          இன்னொரு சிகரம் உனது தலை
          எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ 
          இவர்களை விஞ்சிட என்ன தடை?

          பூமிப் பந்து என்ன விலை -உன் 
          புகழைத் தந்து வாங்கும் விலை;
          நாமிப்  பொழுதே புறப்படுவோம்-வா 
          நல்லதை எண்ணிச் செயல்படுவோம் 

    *******************************************************
    இக் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை அறிய கீழே கிளிக் செய்யுங்கள். அவரது இன்னொரு கவிதையையும் படியுங்கள் 

                     விடை

    ********************************************************* 

    வியாழன், 10 அக்டோபர், 2013

    தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?

     இது புதியவர்களுக்கு
    ஒரு பதிவு நிறையப் பேரை சென்றடைவதற்கு திரட்டிகள் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே! இதில் தமிழ்மணம் தமிழ் 10 இன்டலி முதலியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. திரட்டிகளின் உதவியின்றி அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட வலைப் பதிவுகள் மிக சொற்பமே. திரட்டிகளில் இணைக்கப் படவில்லை என்றாலும் எழுத்துலகப் பிரபலங்களான எஸ்.ராமகிருஷ்ணன்,சாரு நிவேதிதா, ஜெய மோகன் போன்றவர்களின் பதிவுகள் அதிக விமர்சனங்களுக்கு உள்ளானாலும் நிறையப் பேரால் படிக்கப் பெற்றுவிடுகின்றன. 

      தமிழ்மணம் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் பலருக்கு பதிவுகளை கொண்டு சேர்ப்பதில் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது என்பது உண்மையே!அதற்கு முக்கிய காரணம் அது பதிவை எளிமையான முறையில் திரட்டுவதே!
       திரட்டுவதோடு மட்டுமல்லாமல் பதிவுகளின் இணைப்பை முகப்பு பக்கத்தில் பல வகைகளில் காட்டுவதும் ஒரு காரணம். பதிவு இணைக்கப் பட்டவுடன் பின்னர் ஏழு ஒட்டு பெற்றால்( இரண்டு நாட்களுக்குள்) அதை தெரிவிக்கும். அது மட்டுமின்றி குறிப்பிட்ட  lable களுக்கு கீழும் பதிவுகள் அடுத்தடுத்து அதே லேபிளில் வரும் வரை காட்சியளிக்கிறது. நாம் இடும் குறி சொற்கள்(lable) தமிழ் மணம் வகைப் படுத்தும், அரசியல் சமூகம், நிகழ்வுகள் நகைச்சுவை, நையாண்டி,சினிமா,விமர்சனம்,புனைவுகள், கவிதை.சிறுகதை சமையல் குறிப்பு, என்ற பிரிவுகளில் அமைந்தால்  அவற்றின் கீழ் பதிவுகள் இடம் பெறும் மேலும் பதிவிற்கு ஒரு மறுமொழி(பின்னூட்டம்,கருத்து) கிடைத்தாலும் அந்தப் பதிவின் தகவலும் ஒருபுறம் காண முடிகிறது. இதோடு ஒரு நாளில் அதிகமாகப் பார்க்கப்பட்ட முப்பது இடுகைகள், ஒரு வாரத்தில் பார்க்கப்பட்டவை, என்று பல்வேறு வகைகளில் ஒரு பதிவரின் பதிவுகள் கண்ணில் படுவதால் தலைப்பு ஈர்க்கும் பட்சத்தில் வாசகர் வருகை தருகின்றனர். இது மட்டுமல்லாது தமிழ் மணம் மகுடம் என்று இரண்டு நாட்களில் அதிக வாக்குகள் பெற்றபதிவும் வெளியிடப் படுகிறது. (இது தொடர்பாக சர்ச்சைகளும் உண்டு .)
    அது மட்டுமல்லாமல் ஒரு தரவரிசைப் பட்டியலை(இதில் பின்பற்றப் படும் முறை கிரிக்கெட்டின்  டக் வொர்த் லூயிஸ் முறை போல புரியாததாகவே இருக்கிறது )  வெளியிட்டு ஒரு சுவாரஸ்யத்தையும் போட்டியையும் ஏற்படுத்துகிறது. என்னதான் ஓட்டைப் பற்றி கவலைப் படமாட்டேன். தர வரிசையை பற்றி கவலைப் படமாட்டேன் என்று சொல்லும் பிரபலங்களும் தமிழ்மணத்தில் இணைக்கத் தவறுவது இல்லை. சில பதிவர்கள்(வளரந்தபின்) பதிவுக்கு  ஓட்டளிப்பதையும் கருத்திடுவதையும்  கௌரவக் குறைவாகக் கருதுகிறார்கள். இங்கு கருத்திடுபவர்களும் வாக்களிப்பவர்களும் பெரும்பாலும் சக பதிவர்கள் என்பதால் பரஸ்பர அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பானதே! நீண்ட நாட்களாக எழுதி வரும் பதிவர்கள் சிலருக்கு பதிவுக்கு வாக்களிப்பது என்பதை அறியதவர்களாகக் கூட இருக்கிறார்கள் சிலர்  ஆர்வம்காட்டுவதும் இல்லை. 

      நமது  பதிவுகளுக்கு தமிழ்மண வாக்குப் பட்டை மூலம் வாக்களிப்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள நாம் விரும்பலாம். அது முடியுமா என்றால் முடியும். ஆனால் அவர்களின் மெயில் Id அல்லது பயனர் பெயர் தான் அறிந்து கொள்ள முடியும். என்றாலும் சில நேரங்களில் அவர்களுடைய பெயருக்கும் மெயில் ஐடிக்கும் தொடர்பு இருக்காது. இருந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
    தமிழ்மணத்தை பொறுத்தவரை ஒரு பதிவுக்கு ஒருவர் ஆதரவாகவோ அல்லது  எதிராகவோ வாக்களிக்க முடியும்.  சர்ச்சைக்குரிய அரசியல்,மத சார்பான, சமூக,சினிமா பதிவுகளுக்கு எதிர் வாக்குகள் இடப் படுவது உண்டு.
    ஏழு பேர் உங்கள் பதிவுக்கு வாக்களித்துவிட்டால்அப்பதிவு முகப்புப் பக்கத்தில்வாசகர் பரிந்துரையில் பகுதியில் இடம்பெறும்
    இதோ கீழுள்ளபடத்தை கவனியுங்கள்.


    உயர்த்தப்பட்ட கட்டை விரல் படத்தை கிளிக்  செய்தால் அந்தப் பதிவிற்கு வாக்களிக்கத்தவர்களின் ஈமெயில் முகவரி அல்லது தமிழ்மணத்தில் அவர்களின் பயனர் பெயர் இருப்பதை காணலாம். மேலுள்ள பதிவில் கவியாழி கண்ணதாசன் 7 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
    இதோ அவருக்கு வாக்களித்தவர்கள்

    ஏழு வாக்குகள் பெற்றால் மட்டுமே இவ்வாறு பார்க்க முடியும்

    இதை விட குறைவாக இருந்தால் எப்படிப் பார்ப்பது? அதற்கும் வழி உண்டு. தமிழ் மணம் ஒவ்வொரு பதிவிற்கும்( இணைக்கும்போது) ஒரு ID எண் வழங்குகிறது.அந்த அடையாள எண்ணை அறிய தமிழ்மண உங்கள் பதிவின் ஓட்டுப பட்டையின் மீது மௌஸை வைத்தால் ஸ்டார்ட் பட்டனுக்கு மேலே இடது கீழ்ப்புறத்தில் கேழ்க்கண்டவாறு காட்சி அளிக்கும். மௌஸை எடுத்தால் மறைந்து விடும்.இதில் கடைசியில் உள்ளதே பதிவுக்கு தமிழ் மணத்தால் வழங்கப்பட்ட  அடையாள எண்ணாகும்.இணைப்புப் பட்டையைக் கிளிக் செய்தலும் அட்ராஸ் பாரில் அடையாள எண்ணைக் காணமுடியும்
    இந்த அடையாள எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 
    http://tamilmanam.net/who_voted.php?id= 
    என்ற முகவரியை அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து கொண்டு =  பக்கத்தில் பதிவின் அடையாள எண்ணை டைப் செய்து  எண்டர் விசை கொடுத்தால் ஒட்டளித்தவர்களை அறியலாம்.
    யாருடைய பதிவாக இருந்தாலும் இந்த விவரங்களை பார்க்கமுடியும்.

    இதே போல தமிழ் 10 லும் நாம் இணைத்துள்ள வோட்டுப் பட்டை மூலம் உள் சென்று நமக்கு யார் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை  அறிய முடியும். தமிழ் 10 இல் பதிவுகளை இணைப்பவர்கள் கட்டாயம் குறைந்தது ஏதேனும் 3 பதிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும். இதில் காத்திருப்புப் பட்டியலில் இருந்து பதிவுகள் வெளியாவதற்கு குறைந்தது 11 வாக்குகள் பெற வேண்டும்.


    இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து உங்கள் வலைப் பக்கத்திற்கு வரும் நண்பர் பதிவுக்கு வாக்களிக்க வில்லையே என்று வருத்தப் பட வேண்டாம். அனைவரும் பொறுமையாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அவர் நமது பதிவுக்கு ஒட்டு போடவில்லையே நாம் அவரது பதிவுக்கு ஒட்டுபோடக்கூடாது என்று நினைக்கவும் வேண்டாம்.திரட்டிகளில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஒரு சிலருக்கு திரட்டிகளில்  இணைக்க மட்டும்தான் அறிந்திருப்பார்கள்.  நாமும் மற்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பது தெரியாதவர்களும் உண்டு. 

    என்னதான் இவையெல்லாம் ஒரு பதிவை ஹிட்டாக்க உதவும் என்றாலும் தொடர்ந்து வாசகர் வருகை தர  பதிவுகள் தரமாக இருக்க வேண்டியது அவசியம்.

    *************************************************************************
    கொசுறு: சிலரது   வலைப்பூக்களில் தமிழ்மண ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்வதில்லை. பெரும்பாலும் blogspot.in ஐ blogspot.com ஆக மாற்றும் நிரலை இணைத்தால்ஓட்டுப் பட்டை வேலை செய்யத் தொடங்கும். 
    அதற்கான வழி முறைகளை  நானும் எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவு அலெக்சா தர வரிசையில் பின்னிலை ஏன்?

    பொன்மலர் அவர்களின் பதிவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
    http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html 
    பிரபல  தொழில் நுட்பப் பதிவர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள். 
    விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள். நானும் உதவ தயாராக இருக்கிறேன். 
    திண்டுக்கல்  தனபாலனும் பலருக்கும் ப்ளாகர் தொழில் நுட்ப சிக்கல்களை தீர்க்க உதவி இருக்கிறார். அவரையும் தொடர்பு கொள்ளலாம்.

    *******************************************************************************

    ஞாயிறு, 6 அக்டோபர், 2013

    ராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால்

        
        இரண்டு  நாட்களுக்கு முன்னர் எதிர்பாரா விதமாக ராஜா ராணி படம் பார்க்க நேரிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தேன். ஒரு தியேட்டரில் 6 மணிக் காட்சி ஹவுஸ் புல் ஆக, சற்று தூரத்தில் உள்ள திரை அரங்கில் டிக்கட் எளிதாக கிடைத்தது.
    இவ்வளவு நாள் கழித்து விமர்சனம் எழுதலாமா வேண்டாமா யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளோ பேர் எழுதுகிறார்கள் நாம் எழுதினால் சகித்துக் கொள்ள மாட்டார்களா என்ன?
        விஜய்  டிவியில் படத்தை பற்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் படம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குனர் அட்லியை பார்த்தேன். அம்மா உணவகத்தில் அருகில் அமர்ந்து இட்லி சாப்பிடும் சாதாரண இளைஞனைப் போல் காணப்பட்ட அட்லியா இந்த படத்தை இயக்கினார் என்று சற்று ஆச்சர்யம் ஏற்படுத்தத்தான் செய்தது. சத்யராஜ் ஆர்யா, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களை கையாளக் கூடிய திறமை அவருக்கு இருக்கும் என்று நம்பிய ஏ.ஆர் முருகதாசை அட்லி ஏமாற்றவில்லை.
       காதலில் வெற்றிபெற முடியாமல் போன ஆர்யா- நயன்தாரா வேண்டா வெறுப்புடன் திருமணம் செய்து கொண்டு,  கடைசியில் மனம் மாறி புது வாழ்க்கை தொடங்குவதே படத்தின் கதை.  இளமை சற்று மிஸ் ஆனதாகத் தோன்றினாலும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்து விடுகிறார்  நயன்.. பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்த வேலையயை சிறப்பாகவே செய்திருக்கிறார் நயன் தாராவின் நட்பான அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ். நயன்தாராவின் இன்னோசண்ட் காதலன் பாத்திரத்திற்கு  ஜெய் எப்போதும் போல் பொருத்தம்.. 
    சர்ச்சில் நயன் தாரா ஆர்யா திருமண நிகழ்ச்சியுடன்படம் துவங்குகிறது. தொடக்கம் அந்த ஏழு நாட்கள் படத்தை நினைவு படுத்துகிறது. போகப் போக சிறிது மாற்றத்துடன் மௌன ராகம் கதையாக மாறி விடுகிறது.
        விருப்பமில்லாத் திருமணம் என்றாலும் திருமணம் முடிந்த பின் உண்மையை இருவரும் பகிர்ந்து கொள்ளாமல் ஒருவரை  ஒருவர் வெறுப்பேற்றிக் கொள்வது ஏன் என்று தெரியவில்லை. அடுத்த முடிவு எடுக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பதாக அமைத்திருக்கலாம். தொடக்கத்தில் பல இடங்களில் நயன்தாராவின் விருப்பமின்மை தான் முதன்மைப் படுத்தப் படுகிறது.
     அப்பாவி இளைஞன் ஜெய்யை  என்னமாய்க் கலாய்க்கிறது நயன்தாராஅண்ட் கோ. ஒவ்வொன்றுக்கும் ஜெய் பயந்து நடுங்குவது சுவாரசியம். இளைய கன்னிகைகள் தோழியரை மச்சி மச்சி, மச்சி என்று அழைப்பது புதிதாக இருக்கிறது. நடைமுறையில் இருக்கிறதா அட்லி?
        புத்தாண்டு அன்று பீர் பாட்டிலுடன் நயன்தாராவை பார்த்திருந்த ஜெய் பின்னர் "ஏங்க!ரொம்ப பீர் குடிக்காதீங்க தொப்பை விழுந்திடும்."என்று சொல்லி விட்டு ஓடும்போது நயன்தாரா கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனில் காதல் எட்டிப் பார்ப்பது கவிதை.

       திருமணம் செய்துகொள்ள ரிஜிஸ்தர் ஆபீசுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல்போனதற்கு அழுத்தமான காரணம் இல்லை .அட்லி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
       ஆர்யா நஸ்ரியா காதலில் இந்த அளவுக்கு ஆழமும் அழுத்தம் இல்லை என்ற போதிலும் நஸ்ரியாவின் இளமைத் துள்ளல் ஈர்க்கத்தான் செய்கிறது. (பதிவர் கோவை ஆவி நஸ்ரியாவின் ரசிகராக இருப்பதன் ரகசியம் புரிந்தது)

        நண்பர்களுடன்  தண்ணி அடிக்கும் காட்சிகளும், தந்தை மகன் சேர்ந்து தண்ணி அடிக்கும் காட்சிகளும் தமிழ் படங்களில் பழைய TREND ஆகி விட்டதால்  புதுமையாக யோசித்து  அப்பாவுக்கு மகள் பீர் வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்துவதுபோல் காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர். அடுத்த படத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேறி தானும் தண்ணி அடித்துக்கொண்டு தாய்க்கும் வாங்கிக் கொடுக்கும் புதுமையை படைப்பாரோ?அப்பா மகள் உறவு அவ்வளவு பிரெண்ட்லியாக இருக்கிறதாம்! ஆஹா! என்னே கற்பனை! 

       ஜெய் உயிருடன் இருப்பதாகக் காட்டிய இயக்குனர் நஸ்ரியாவை மட்டும் பிழைக்க விடாமல் செய்து விட்டாரே!

        சந்தானத்தின் காமெடி படத்திற்கு பலம்தான் என்றாலும் எப்போதும் இரட்டைஅர்த்த வசனங்களையே அதிகமாகப் பேசுகிறார். சந்தானம் என்றால்  நண்பர்களுடன் தண்ணி அடிக்கும் காட்சி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பது விதி போலும்.விதம் விதமாக பெற்றோரை இழிவாகப் பேசுவது போல் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல.  குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தரவயதினர் முதியவர்கள்,பெண்கள் விரும்பும் நகைச்சுவை நடிகராக வடிவேலு இருந்தார். சந்தானம் இளைஞர்களை மட்டுமே கவர்பவராக இறக்கிறார். ஆர்யாவிடம், "குடித்து விட்டு காதலியின் வீட்டு முன்னால் போய் பிரச்சனை செய்" என்று ஐடியா கொடுத்து  இளைஞர்களை கெடுப்பதில் தன் பங்கை சரிவர செய்திருக்கிறார் சந்தானம். 

        தியேட்டரில் படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் இளவட்டங்கள் என்பதால் அவர் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
       ஒளிப்பதிவு,காட்சி அமைப்புகள், ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. குறிப்பாக கண்ணாடியின் முன்னால் நிற்கும் ஆர்யா நயன்தாரா இருவரும் அவர்கள் மனம் செய்ய  நினைப்பதை கண்ணாடி பிம்பங்களாக காட்டி இருப்பது வித்தியாசம்.  பாடல்கள் மனதை கவரவில்லை. இசையில் ஜி.வி பிரகாஷ் ஏமாற்றமே அளிக்கிறார். 
    படத்தை நயன்தாராவின் நடிப்பே படத்தை தூக்கி நிறுத்துகிறது.
    எப்படி இருந்தால் என்ன ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.

    முதல்  படம் வெற்றிப் படம் என்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் ஏதும் இருக்காது அட்லிக்கு. 
      கதை இப்படி அமைத்திருந்தால்
    ஆர்யா-நயன்தாரா  இருவருக்குமே  திருமணத்தில் சம்மதம் இல்லை என்றாலும்.அனைவரும்(ஆடியன்ஸ் உட்பட) நம்பும்படி மகிழ்ச்சியோடு வாழ்வதாக  நடிக்கிறார்கள். ஏதோ ஓரிடத்தில் அவர்கள் நடிப்பு அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது. மற்றவர்களுக்கு சந்தேகம் எழ பின்னர் உண்மை தெரிகிறது   மெல்ல மெல்ல மனம் மாறுகிறார்கள்.

    *******************************************************************************************



    புதன், 2 அக்டோபர், 2013

    தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

    இங்கிலாந்தில் லங்காஷயரில் தொழிலாளர்களை சந்திக்கும் மகாத்மா
    இன்று காந்தி ஜெயந்தி. தெரிந்த செய்திகளும் தெரியாத தகவல்களுமாய் இன்றைய தினம் இணையம் மகாத்மாவை கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் நேர்மையாக நடப்பவரை "இவர் பெரிய காந்தி" என்று கிண்டல் செய்யும்  நிலை இன்னும் மாறவில்லை. காந்தியைப் பற்றி குழந்தைகளுக்கு சரியாக கற்பிக்கப் படுவதிலை. ஏனென்றால் அவரைப் பற்றிய சரியான புரிதல் நமக்கே இல்லை. உலகமே போற்றும் காந்தியை கிண்டலடிப்பதும் இழிவாகப் பேசுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுதான் அறிவுஜீவித் தனம் என்று நினைக்கும் கூட்டமும் உண்டு.
    காந்தி  எப்படிப்பட்ட  தலைவர் என்பதை அறிந்து கொள்ள உதவும்   ஒரு வரலாற்று சம்பவத்தை பகிர்ந்து  கொள்ள விரும்புகிறேன்.

    நமது நாட்டில் விளையும் பருத்தியை நம்மிடம் இருந்து கொள்முதல் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு போய் நெசவு செய்து அந்த ஜவுளிகளை நம்மிடையே விற்பனை செய்து வந்தனர் ஆங்கிலேயர்கள். அதாவது நமது மூலப்பொருளைக் கொண்டு தங்கள் நாட்டுத் தொழிலை வளர்த்து அந்தத் தொழிலுக்கான சந்தையாக நமது நாட்டையே பயன்படுத்தி தங்களது வியாபாரத்தை பெருக்கிக் கொண்டனர்.
        இதைக் கண்டித்த காந்திஜி அந்நியத் துணி புறக்கணிப்பு இயக்கத்தை தீவிரமாக நடத்தினார்  அவரது அறைகூவலின்படி காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து ஆங்கிலேயர்களின் வியாபாரப் பொருட்களை குறிப்பாக ஜவுளிப் பொருட்களை புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தை பொதுக் கூட்டங்களில் விளக்கினார்கள். கூட்டம் நடைபெறும்போது காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகப் போய் பொது மக்களிடம் உள்ள வெளி நாட்டுத் துணிகளை வாங்கி வருவார்கள்.அனைத்து துணிகளும் பொதுக் கூட்ட மேடைக்கு முன்பாகக் கொட்டப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்படும். இது அனைவரும் அறிந்ததே! படித்திருப்போம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.சொல்லக் கேட்டிருப்போம். ஏதோ ஒப்புக்காக நடந்தது அல்ல இந்தப் போராட்டம்
    மிகத் தீவிரமாக அந்நியத் துணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
         ஒவ்வோர் ஊரிலும் தொண்டர்கள் வீடுவீடாக சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இதனால் பொதுமக்களில் பலர் அந்நியத் துணிகளை வாங்குவதில்லை என முடிவெடுத்தனர். இது முதல் கட்டம். அடுத்த படியாக துணிக் கடைகளுக்குச் சென்று அந்நியத் துணிகளை விற்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்தனர். இதற்கும் பலன் கிடைத்தது.
      மூன்றாவது கட்டம் சத்தியாக்ராகத்தின் உச்சகட்டம் அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன் தொண்டர்கள் திரண்டு நிற்பார்கள். அங்கே ஜவுளி எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் கை கூப்ப்பியவாறு பிரச்சாரம் செய்வார்கள். இவர்களது வேண்டுகோளுக்கு  அவர்கள் செவி சாய்க்காவிட்டால் அவர்களது காலில் விழுந்து கெஞ்சுவார்கள். அதையும் மீறி உள்ளே செல்ல முற்பட்டால் கடையின் படிகளில் வரிசையா படுத்து விடுவார்கள். அவர்களைத் தாண்டி அல்லது மிதித்துத்தான் கடைக்குள் நுழைய முடியும் மங்கல நிகச்சிகளுக்காக ஜவுளி எடுக்க வருபவர்கள் இப்படி அபசகுனமா இருக்கிறதே என்று வீடு திரும்பிவிடுவார்கள்.
    தொடர்ந்து நடந்த இந்த போராட்டத்தின் விளைவாக  இந்தியாவில் ஆங்கிலேயத் துணி மோகம் குறைய ஆரம்பித்து விட்டது மட்டுமல்ல ஆங்கிலேய ஜவுளி வியாபாரம் படுத்து விட்டது.
      அதனால் இந்தப் போராட்டத்தின் தாக்கம் இங்கிலாந்தில் பூதாகாரமாக இருந்தது. அங்கு உற்பத்தியான துணிகள் வியாபாரம் ஆகாமல் தேங்கிப் போக ஆரம்பித்தன. இதனால் இங்கிலாந்து முழுவதும் குறிப்பாக லங்காஷயரில் ஏராளமான ஜவுளி மில்கள் மூடப்பட்டன. இதன் விலையாக சுமார் பல்லாயிரம் பேருக்கு வேலை போனது
    மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சாமானிய இந்தியன் கொடுத்த அடி இது.. ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் இது.
    ஆனால்  காந்திஜியின் அடுத்த கட்ட நடவடிக்கையோ உலகம்முழுவதும் அரசியல் பாடமும் பொருளாதாரமும் போதிப்பதாய்  அமைந்தது.

       வட்ட மேசை மாநாட்டுக்காக இங்கிலாந்து சென்ற காந்தி, லங்காஷயருக்கு சென்று வேலை இழந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்
    "உங்களில் சில லட்சம் பேருக்குத்தான் வேலை போனது. ஆனால் உங்கள் வியாபரத்தினால் எங்கள் நாட்டில் பலகோடி பேருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. உங்கள் தரப்பு நியாயம் பெரிதா எங்கள் தரப்பு நியாயம் பெரிதா என்று யோசித்துப் பாருங்கள் .நான் உங்களுக்கு எதிராகப்போராடவில்லை. என் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுகிறேன்......" 
    இந்த மனிதரின் தலைமையில்தான் ,போராட்டத்தின் விளைவாகத்தான் அங்கு அத்தனை பேருக்கு வேலை பறிபோனது. அவர்களை நேரில்சந்தித்து "ஐயா! எங்களை அநியாமாக சுரண்டித்தான் இத்தனை நாட்களாக நீங்கள் பிழைப்பு நடத்தி வந்தீர்கள்" என்று சொல்ல எவ்வளவு நெஞ்சுரம் வேண்டும்?
    இங்கிலாந்து பத்தரிக்கைகள் காந்திஜியின் லங்காகஷயர் விஜயம் பற்றி உயர்வாக எழுதின. (எதிர்மறைக் கருத்துக்களும் வெளியிடப்பட்டன) 
    இப்படியும் ஒரு தலைவன் இருப்பானா? இந்த ஆள் மனிதன்தானா என்றெல்லாம் பலரும் போற்றியதாக லண்டன டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதாம்.
    ஒரு போராட்டத்தை வழி நடத்தும் தலைவன் எப்படி நடந்து  கொள்ளவேண்டும்? . அவனது பொருளாதாரக் கண்ணோட்டம் சமுதாயக் கண்ணோட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் அன்றோ?
    இன்றும்  இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காந்தியின் வழியே சிறந்த வழிகளில் ஒன்றாகக் கொள்ளலாம் அல்லவா?


    ********************************************************************************************************
    தொடபுடைய  பதிவு .
    காந்தி தேசத் தந்தை இல்லையா?