மின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்திகளை (வெட்கத்துடன்)ஒன்று விடாமல் படிக்கும் சராசரித் தமிழர்களில் நானும் ஒருவன். ஒன்றிரண்டு வார இதழ்கள் வாங்கினாலும் புத்தகக் கடைகளில் முன் நிற்கும்போது எனக்கு எப்போதாவது அந்த ஆசை எழுவதுண்டு. பரபரப்பான தலைப்புகள் புத்தகக் கடையை சுற்றி தொங்கிக் கொண்டிருக்கும்போது அந்த ஆசை மறைந்துபோகும்.
வேறு ஒன்றுமில்லை.கணையாழி,உயிர்மை போன்ற இதழ்களை ஒருமுறையேனும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே. தீவிர இலக்கியவாதிகள் புரியாதபடி எழுதுபவர்கள் விரும்பும் பத்திரிக்கை அல்லவா அது. நமக்கு பிடிக்குமா? நம் ரசனைக்கு ஒத்துவருமா? கொடுத்த காசுக்கு பலன் இருக்குமா? புத்தகம் வாங்கினால் வீட்டில் உள்ளவர்களும் படிக்க முடியுமா? நமக்குப் பிடித்திருந்தாலும் நம் ஒருவருக்காக வாங்கிப் படிக்கத்தான் வேண்டுமா? என்ற நடுத்தர மனோபாவத்துடன் யோசிப்பதில் பல புத்தகங்கள் வாங்க மனம் வருவதில்லை.
வேறு ஒன்றுமில்லை.கணையாழி,உயிர்மை போன்ற இதழ்களை ஒருமுறையேனும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே. தீவிர இலக்கியவாதிகள் புரியாதபடி எழுதுபவர்கள் விரும்பும் பத்திரிக்கை அல்லவா அது. நமக்கு பிடிக்குமா? நம் ரசனைக்கு ஒத்துவருமா? கொடுத்த காசுக்கு பலன் இருக்குமா? புத்தகம் வாங்கினால் வீட்டில் உள்ளவர்களும் படிக்க முடியுமா? நமக்குப் பிடித்திருந்தாலும் நம் ஒருவருக்காக வாங்கிப் படிக்கத்தான் வேண்டுமா? என்ற நடுத்தர மனோபாவத்துடன் யோசிப்பதில் பல புத்தகங்கள் வாங்க மனம் வருவதில்லை.
ஆனால் இம்முறை கணையாழி புத்தகம் வாங்கி விட்டேன்.எப்போதோ சுஜாதாவின் கணையாழியில் கடைசி பக்கங்கள் எழுதி வந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஆனால் அவற்றை படித்ததில்லை.
இப்போதும் "கடைசி பக்கங்கள்" பகுதி இருக்கிறதா என்று முதலில் புரட்டினேன. கடைசி பக்கங்களை இப்போது இந்திரா பார்த்தசாரதி எழுதி வருகிறார். இந்திரா பாரத்தசாரதியையும் இந்திரா சௌந்தர ராஜனையும் குழப்பிக் கொள்வது வழக்கம். மேட்டிமை எழுத்தும் பாமர எழுத்தும் என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். சுவாரசியமாகவே எழுதப் பட்டிருந்தது.
நவம்பர் மாத இதழில் மொத்தம் 11 கவிதைகள் வெளியிடப் பட்டிருந்தன. ஒரு சிலவற்றை தவிர மற்றவை எளிமையாகவே இருந்தன. சில கவிதைகள்ஏற்கனவே படித்தது போல் இருந்தன. அவை ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் பேராசிரியர் திரு ஹரணி அவர்கள் எழுதியவை என்பதை அறிந்து கொண்டேன். கரந்தை ஜெயக்குமார் அவர்களின் மூலமாக ஹரணி அவர்களை அறிவேன் அவ்வப்போது அவரது வலைப் பக்கம் செல்வது உண்டு . "இறுதி நிலை நோயாளி" பறவைகள் குறைந்து வருவதைப் பற்றி பேசியது.
செம்மீன் புகழ் தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களின் சுய சரிதையில் இருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தகழியின் இளமைக் காலத்தை குறிப்பிட்டது. ஹோட்டலுக்கு பால் கறந்து கொடுத்து காசு வங்கிக் கொண்டு வருவாராம் தகழி. அந்தக் காசில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்வாராம். அதை கதை எழுதி அனுப்பவும் பேப்பர் வாங்கவும் பயன்படுத்திக் கொள்வாராம்.
குப்பன் சுப்பன் பற்றி சொல்லும் கதைகளுக்கு அவர்களுடைய வாழ்க்கைக்கே உரிய கதைப்பாணியை பின்பற்றவதுதான் நல்லது. அயல்நாட்டுப் பாணி அவசியம் இல்லை என்று தகழி தெரிவிப்பதாக சொல்கிறது கட்டுரை.
ஆ பழனி என்பவர் எழுதிய மரண தண்டனை பற்றிய கட்டுரை புதிய தகவல்களை தருகிறது.பிற்கால சோழர்கள் மரண தண்டனையை புறக்கணித்ததை கல்வெட்டுகள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் இயற்றப் பட்ட சுக்கிர நீதி என்ற நூல் கொலை தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறதாம்.திருக்குறளும் மரண தண்டனையை ஆதரிக்க வில்லை என்று ஒருவிளக்கத்தையும் தருகிறார் புலவர்.
இன்னொரு கட்டுரை பகவத் கீதை வெண்பா என்றஅரிய நூலைப்பற்றி விவரிக்கிறது. இதைத் தவிர தமிழில் பகவத் கீதை செய்யுள் வடிவில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர் நரசையா. இவ்வெண்பா நூலை எழுதிய முத்து ஐயர் என்பவராம். மசூலிப் பட்டினத்த்தில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என அறிய முடிகிறது.
இடம் பெற்ற நான்கு சிறுகதைகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றில் பயமுறுத்தும் இலக்கியத் தன்மை இல்லாததால் எளிதில் படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. "வீட்டில சும்மாதான் இருக்காளா" என்ற சிறுகதை மிடில் கிளாஸ் மன நிலையை அப்படியே பிரதிபலித்தது.
மருந்து என்ற சிறுகதை தகழி சொன்னது போல கிராமத்து மனிதர்களை அப்படியே அவர்கள் போக்கிலேயே சொல்வதாக அமைந்திருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது.
இரண்டு நூல் அறிமுகங்கள் இந்த இதழில் செய்யபட்டிருந்தது. வெங்கடேஷ் என்பவர் எழுதிய "இடைவேளை" என்ற புத்தகம் கணினித் துறையில் ஏற்பட்ட திடீர் தொய்வால் வேலை இழந்த ஒருவனைப் பற்றியது. வெங்கட் சாமிநாதன் என்பவரின் மதிப்புரை நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது உண்மை.
தற்போது பத்திரிகைகளில் தொடர்கதைகள் அவ்வளவாக இடம் பெறுவதில்லை. கணையாழியிலும் தொடர் ஏதும் இல்லை. எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் தொடர்கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை. அவற்றை படிக்கும் அளவுக்கு பொறுமை இருப்பதில்லை என்பதை பத்திரிக்கைகள் உணர்ந்தே இருக்கின்றன.
கணையாழியின் எல்லாப் பகுதிகளும் என்னைப் போன்ற சாதாரண வாசகர்கள் படிக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது. மாறுதலுக்காக அவ்வப்போது வாங்கிப் படிக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.
*******************************************************************************************
*******************************************************************************************