என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இவரைத் தெரியுமா?



இவரைப் பற்றி தெரியுமா? இவரது பெயர் செ.சண்முகம்
 
  இன்றைய தினம்  இவரைப்பற்றி சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இன்று தேசிய அறிவியல் தினம். சரியாக  84 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில்தான் (28.02.1928) சர்.சி.வி. ராமன் நோபெல் பரிசைப் பெற்றுத் தந்த ராமன் விளைவைக் கண்டறிந்தார். இதனைப் போற்றும் விதமாகவே இந்நாள் தேசிய அறிவியல் தினமாக நாடெங்கிலும் கொண்டாடப் படுகிறது.   .  

 ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு துறையில் ஆர்வம இருக்கும். இளமையில் சண்முகம் அவர்கள்  அறிவியல் பாடத்தின்மீது அடங்காத ஆர்வம் உடையவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரான இவர் வேதியலில்  பட்டம் பெற்றார்.
        
      பின்னர்  வேதியலில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தார்.  பட்டம் பெறுவதற்கு முன்பாகவே வங்கியில் வேலை கிடைத்ததால் படிப்பதை விட்டுவிட்டு பணியில் சேர்ந்தார். ஆனாலும் அவருக்கு அறிவியல் மீது கொண்ட தாகம் தணியவில்லை. அவரது நெஞ்சம் முழுவதும் அறிவியல் நீக்கமற நிறைந்திருந்தது. அந்த ஆர்வத்திற்கு காரணம் பள்ளியில் தனக்கு  அறிவியல் கற்பித்த ஆசிரியர்தான் என்பதை இன்றைக்கும் நினைவு கூர்ந்துகொண்டிருப்பது இவரது குரு பக்தியைக் காட்டுகிறது.

        வங்கிப்பணி நேரம் போக மீதி நேரத்தை அறிவியல் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக அறிவியல் தொடர்புடைய பணிகளைச்  செய்து வந்தார்.
          
 பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த அறிவியல் தொடர்பான உரை நிகழ்த்துவது,அறிவியல் சோதனைகள் செய்து காண்பிப்பது, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துவது, அறிவியல் பாடப் புத்தகங்கள் தயாரிக்க ஆலோசனை வழங்குவது என்று தன்னை அறிவியலோடு மகிழ்ச்சியுடன் பிணைத்துக் கொண்டது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம்தான். அறிவுக்கண் என்ற அறிவியல் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
          
   அறிவியல் முதுகலைப் பட்டத்தை பாதியிலயே விட்டுவிட்டு மனக்குறை இவருக்கு இருந்துவந்தது. அதையும் முடிக்கவேண்டும் என்று உறுதி கொண்டு 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தொலை தூரக் கல்வியில் சேர்ந்து அதனையும் வெற்றிகரமாக முடித்து சாதித்தார். இந்த சேர்க்கைக்கான நேர்காணலின்போது வங்கிப்பணி செய்பவர்  வேதியியல் முதுகலை படிக்க விண்ணப்பித்தற்கு காரணம் முழுக்க முழுக்க அறிவியல் தான் என்று சொன்னபோது அவர்கள்  நம்பவில்லையாம்.
         
      இதோடு இவரது முயற்சி முடிந்து விடவில்லை. தற்போது அண்ணா  பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு மாணவராக சேர்ந்திருக்கிறார்
            
      அறிவியல் இவரை காந்தமாய் இழுக்க, யாரும் நம்ப முடியாத ஒரு காரியத்தை செய்தார். ஆம்! தனது வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றார். அறிவியல்-வங்கி என்ற இரட்டை படகு சவாரி செல்ல விரும்பவில்லை என்றும் அதனால் அறிவியலே தனக்கு ஏற்றது என்று முடிவு செய்வதாக தெரிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தற்போது முழு நேர அறிவியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் கருத்துக்கள் புரியம் வண்ணம் கையில் கிடைக்கும்  எளிய பொருட்களைக் கொண்டு சோதனை செய்து காட்டி விளக்குவது இவரது சிறப்பு. இவரது செயல் விளக்கத்தை பார்க்கும் மாணவன் சொல்லப்படும் அறிவியல் தத்துவத்தை ஒருபோதும் மறக்க மாட்டான்.

      கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் இவர் மிகவும் பரிச்சயமானவர். இவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே பேரு வரவேற்பு உண்டு. எல்லா அறிவியல் ஆசிரியர்களும் இவரது செயல் முறைகளை பின்பற்றினால் பல விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்.
            .

      பொருளாதார நெருக்கடி காரணமாக தனக்கு பிடித்த  துறையில் வேலை செய்ய இயலாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. மாறி வரும் சூழ்நிலையில் அவரவர் விருப்பத்திற்கேற்ப துறையில் சாதனைகள் படைக்க நல்ல வாய்ப்புகளை இந்த சமூகமும் அரசாங்கமும் ஏற்படுத்தித் தர வேண்டும்  என்பதே எனது விருப்பம்.

 இவர் விரும்பியதை செய்ய இளமையில்  தக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இவரும் ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாக பரிமளித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் அதையும் ஒரு குறையாகக் கருதாமல்  துடிப்புடன்  அறிவியல் பணி ஆற்றி வரும்   செ சண்முகம் அவர்களை நாமும் மனமார பாராட்டுவோம்.
 அன்னாரின் மின்னஞ்சல்: c.shanmugham@gmail.com
கைபேசி எண்: 9444626750

 இதைப் படிப்பவர்கள் தவறாமல் கருத்திடவும்.
************************************************************************************** 

இதையும்  படியுங்க!
காணாமல் போகும் கிணறுகள்

      

       


வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்!

இது சூப்பர் ஹிட் தானே? ஒத்துக்கறீங்களா?

என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது. சில பதிவர்கள் எல்லாம் அதிக ஹிட் கொடுத்த வாசகர்களுக்கு நன்றின்னு அதுக்கு ஒரு பதிவு போட்டு பெருமையா பீத்தீக்கிறாங்க. ஒவ்வொரு பதிவுக்கும் நான் வாங்கிற ஹிட் மாதிரி அவங்க யாராலையும் வாங்க முடியாது.

       என்னடா  என்னமோ உளறிக்கிட்டு இருக்கானேன்னு பாக்கறீங்களா?. உண்மையைத்தான் சொல்றேன். பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா? அது எப்படித்தெரியும்?. எங்க வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும்!. நான் என்ன சொல்றன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்.
    
 பதிவு போடும்போதெல்லாம் என் மனைவிகிட்ட வாங்கற ஹிட்டதான் சொல்றேன். யாருமே படிக்காததுக்கு யாருக்காக பதிவு போடறீங்கன்னு சொல்லி ஆரம்பிக்கும் போதே தலையில நறுக்குன்னு முதல் ஹிட். காலங்காத்தால பால் வாங்கிட்டு வராம கம்ப்யூட்டர்ல உக்காந்துக்கிட்டு இருக்கறதுக்காக ஓர் ஹிட். கூப்பிட்டு எவளோ நேரம் ஆச்சு இன்னுமா எழுந்திருக்கலன்னு  ஒரு ஹிட். வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்கன்னு சொல்லி ஒரு ஹிட்.

 என்னமோ பெரிசா பதிவு போடறேன்னு   நேரத்த வேஸ்ட் பண்ணீங்களே  அந்தப் பதிவு என்னனு எங்கிட்ட காமிச்சீங்களான்னு  கரண்டியாலயே நச்சுன்னு ஒரு ஹிட். கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னா எனக்கு டைம் இல்லேன்னு சொல்லிட்டு மொக்க பதிவ போட்டு அத எத்தனை பேரு பாத்தாங்கன்னு நிமிஷத்துக்கு ஒரு தடவை பாக்கறதுக்கு மட்டும் நேரம் இருக்கான்னு கேட்டு ஒரு ஹிட்.   இந்த மாசம் கரண்ட் பில் அதிகமா வந்ததுக்கு காரணம் உங்க பதிவுதான்னு கோவமா ஒரு ஹிட்.  இன்னைக்கு உங்க பதிவ ஒருத்தர் கூட  பாக்கல   போலிருக்குன்னு சந்தோஷமா ஒரு ஹிட்

       இப்படி ப.மு. , ப.போ , ப.பி, (பதிக்கு முன், பதிவின் போது , பதிவுக்கு பின்) அதிகமா ஹிட் வாங்கின பதிவர் வேற யாராவது இருந்தா சொல்லுங்க.

       இனிமேலாவது புரிஞ்சிக்கோங்க . நாந்தான் இனிமே தமிழ் பதிவுலகின்  ப(தி)வர் ஸ்டார்

 அப்புறம் தமிழ்மணம், அலெக்சா இவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நான் வாங்கின இந்த ஹிட்டை எல்லாம் சேத்து கணக்கில எடுத்துக்கிட்டு ரேங்க் போடனும்ன்னு கேட்டுக்கிறேன். அப்படி என் கோரிக்கைய நீங்க கேக்கலேன்னா இன்னும் பல பதிவுகளை போடுவேன்னு சொல்லி எச்சரிக்கிறேன்.
*************************************************************
இதையும் படியுங்க!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வடிவேலு சொன்ன கருத்து


   வடிவேலுவைத் தேடி அவரது நண்பர்கள் வருகிறார்கள்.அவர்களைக் கண்டதும் வடிவேலு முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
       
 “டேய்! அண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு.(Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்?) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க!
             “அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கன்னே! எங்களுக்கு உங்களை விட்டா யாருன்னே இருக்காங்க!
          “சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே  சரி! சரி! மன்னிச்சிட்டேன். போய்ட்டு வாங்க!
   “என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க! நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யனும்னு கிளம்பி போய்ட்டிருக்கோம்.   
     அப்படி என்னடா பண்ணப்போறீங்க! நல்துன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே?
      போங்கண்ணே கிண்டல் பண்ணாதீங்க! நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.
       நீங்களே குடிகாரப் பசங்களாச்சே! நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா
      அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.
      நான் எதுக்குடா?
       எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க! எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம் இருக்கு!
        நீங்க சொல்றது சரிதாண்டா! சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி பாப்போம்.
         வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம்.
       அண்ணே! அதோ பாருங்கண்ணே! ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க!
       அடேய்! என்னடா  பண்ணற
       தெரியல? குடிச்சிக்கிட்டுருக்கேன்?
    “ஏன்டா? நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே! நியாயமா? உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா?

 “அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்?

      இப்படி சொன்ன எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு
       நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.?
       அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா!,
          இந்தாங்கன்னே!

நண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.
        
   வடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, அண்ணன் இப்ப என்ன செய்யறன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா? அடேய்  குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடுபோட்டுட்டயா? இப்ப என்ன  நடக்குதுன்னு பாரு.
          
 “அடடே! பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே? அண்ணே! நீங்க கடவுள்னே! உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை  யாரும் எடுத்து சொன்னதில்லே! எவ்வளோ பெரிய விஷயத்தை இவ்வளோ எளிமையா சொல்லீட்டேங்க! உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”

 “ நில்லுடா... இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டான்.  பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்?

ஆமாண்ணே! நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு ஒன்னுமே புரியலயே?

மடப் பசங்களா சாராயத்தில விழுந்த  பூச்சி துடி துடிச்சி செத்து போச்சு இல்ல? அந்த மாதிரி குடிச்சா  நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம்? இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க! அய்யாவோட அறிவை?

பிரமாதம்ணே! உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.

ரெண்டு நாள்  கழிச்சி வாங்க! நாம அந்த பய எப்படி இருக்கான்னு பாத்துட்டு வரலாம்.

 இரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

அண்ணே! முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க! உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.

சரி சரி வீட்ல யாரு இருக்கா பாரு?

அவனோட பொண்டாட்டி தொடப்ப கட்டயோட  வருது?

என்னம்மா? உன் புருஷன் எப்படி இருக்கான்?
ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப நிறைய குடிக்கிறாறு? ஆமாம், நீங்க யாரு?

உன் புருஷன் சொல்லலையா? ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத  காமிச்சி புத்தி சொன்னவன் நான்தான். சொல்லுங்கடா  தங்கச்சிகிட்ட.?

ஓ! அந்த ஆள் நீதானா? வாய்யா! உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா  குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, என்  வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன்.  சாராயம் குடிச்சா  வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்து போகும்னு நீதான்  சொன்னயாமே? அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு  வேற காமிச்சயாமே? கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா! உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு.... 

வேணாம்மா...... நான் சொன்னது வேற அவன் புரிஞ்சிக்கிட்டது வேற? டேய் சொல்லுங்கடா? ............... ஓடிட்டீங்களா?  என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க? நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே!
*************************************************************
இதையும் படிச்சுப் பாருங்க!
பூக்களைத் தேடி! 
புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்! 
புதிர்!உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க! 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

பூக்களைத் தேடி....

காதலைத் தேடி அலையும் கல்லூரி மாணவனின் கவிதை? 

காதலெனும் மந்திரத்தை உதடுகளும் உச்சரிக்க 
காதல் செய் என்று உள்மனமோ நச்சரிக்க 
காதலுக்கு பகை உண்டென்று நண்பர்களும் எச்சரிக்க 
காதலெனும் தோட்டத்தில் நான் நுழைந்தேன் பூப்பறிக்க!

வண்ண வண்ண பூக்களெல்லாம் எதிர் வந்தோர் கையில் 
மொட்டுகூட இல்லை நான் எடுத்து வந்த பையில்
அழகான பூக்களெல்லாம் அடர்ந்த முள்வேலிக்குள் 
மீதமுள்ள பூவெல்லாம்  பறித்து விட்டார் காலைக்குள்!


பூ ஒன்றும் காணாமல் நான் வாடினேன் 
நம்பிக்கை இழக்காமல் நான் தேடினேன் 
எனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும் 
பறிக்கநான் வருவேனென்று எனக்காகக் காத்திருக்கும்!.

*************************************************************
இதையும் படிச்சி பாருங்க!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

வாங்க!கொஞ்ச நேரம் சிரிக்கலாம்!


‘தலைவரை<br /> அமாவசை<br /> அன்னிக்கு<br /> கைது<br /> பண்ணீட்டாங்கலாமே





தலைவரை அமாவாசை  அன்னிக்கு கைது பண்ணீட்டாங்களாமே?

ஆமாம்! நிலா அபகரிப்பு
வழக்கு போட்டிருக்காங்களாம்.









சங்கீத  வித்வானை
எம்.பி ஆக்கினது

தப்பா  போச்சு?

ஏன்?

லோக்சபாவில கச்சேரி பண்ண சான்ஸ் கேட்டு நச்சரிக்கிறாராம்



ஹலோ! டார்லிங் நம்ம காதல் உங்கங்கப்பாவுக்கு தெரிஞ்சுபோச்சுங்கிறதுக்காகவா
இவ்வளவு
கவலைப்படற?

எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது? அவர் எப்படியாவது உங்களுக்கு என்ன கல்யாணம்
பண்ணி வச்சுடுவார்.









' உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'.

சமையல் காரரே நீங்கதானே!



என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்ல. வேணும்னா வந்து செக் பண்ணிக்க சொல்லுங்கன்னு  தலைவர் சவால் விடராரே?

கறுப்புப் பணம் கறுப்பு கலர்ல
இருக்கும்னு நினைச்சிக்கிட்டு
இருக்காரு.










"அந்த நிருபர் கிட்ட அமைச்சர்
என்ன கேக்கறார்?."


"அவர் இப்ப அமைச்சரா
இருக்காரா இல்லயான்னு
தெரிஞ்சிக்கிறார்."




************************************************************************************************************************************
 இதையும் படியுங்க
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?

                  தம்பி!  ஏனிந்தக்
                  கொலைவெறி?

                  நல்லதைத் தானே
                  விதைத்தார்கள்?
                  உன் நெஞ்சில்
                  ஏன்
                  நஞ்சு விளைந்தது?.

                  ஆசிரியர் மாணவனை
                  தண்டித்தது
                  அந்தக் காலம்.
                  மாணவர்கள்
                  ஆசிரியருக்கு தண்டனை
                  தருவதுதான்
                  இன்னும் கேவலம்!

                  உன்னை
                  திருத்த முனைந்தவரை
                  தீர்த்துக்கட்டிவிட்டாயே.!

                  ஆயிரம் முறை
                  மெக்கா போய் வந்தாலும்
                  அகலாது
                  உன்பாவம்!

                  ஆயுள் முழுதும்
                  கங்கையில் மூழ்கிக்
                  கிடந்தாலும் 
                  கரையுமா
                  உனது பாவம்?

                  எந்த
                  திருச்சபையிலாவது
                  உனக்கு
                  பாவ மன்னிப்பு
                  வழங்கப்படுமா?

                  இளமையில் கல்
                  என்றுதானே சொன்னார்கள்!
                  இளமையில் கொல்
                  என்றா கூறினார்கள்?

                  புத்தியோடு
                  வரவேண்டிய நீ
                  கத்தியோடு
                  வந்தாயே?

                  மாணவர்கள்
                  ஆயுதங்களோடு வந்தால்
                  ஆசிரியர்கள்
                  கவசங்களோடுதான்
                  கல்விச்சாலை  வரவேண்டுமா?

                  படிக்க விருப்பம்
                  இல்லையா?
                  பல கலைத்தொழில்கள்
                  கைகொடுக்குமே?
                  நீ ஏன் கொலைத்தொழில்
                  புரிந்தாய்?

                  திட்டியதற்காக
                  கொல்வதென்றால்
                  இந்த உலகில்
                  இன்னும் மிச்சம்
                  இருக்கப்போவது யார்?

                  ஆயிரம் அற நூல்களும்,
                  நீதி நூல்களும்
                  இருந்தென்ன?

                  உன் அகத்தில்
                  அறம் வளர்க்க
                  முடியவில்லையே?

                  நீ உன்
                  ஆசிரிய தெய்வத்தை
                  மட்டுமா கொன்றாய்?

                  உன்னைப்போன்ற 
                  மாணவர்களின் மீது
                  வைத்த நம்பிக்கையையும் 
                  சேர்த்தே அல்லவா 
                  கொன்றுவிட்டாய்!

                  போதும்!
                  இதுவே
                  கடைசியாக இருக்கட்டும்!
                  இது போன்ற
                  சம்பவங்களுக்கு
                  இனியாவது
                  முடிவு பிறக்கட்டும்!
*********************************************************************************************
இதையும் படிக்க 

வியாழன், 9 பிப்ரவரி, 2012

காணாமல் போனது காதல்


முதல் காதல் 
முழுமையானதல்ல!
மனதோடு 
மணமும் முறிந்துபோனது.

அடுத்த காதல் 
ஆழமானது போல்
தோன்றியது!
ஈகோ நுழைந்தது!
காணாமல் போனது 
காதல்!

முறிந்ததை 
இணைக்கவா?
தொலைந்ததைத் தேடவா?

இன்னொரு 
காதலுக்கு 
காத்திருக்கவா?


****************** 

இதையும் படியுங்க!




 

புதன், 8 பிப்ரவரி, 2012

இவங்க இப்படி! நீங்க எப்படி?

   இந்தப் படங்களோட தலைப்பு PRIORTIES. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கு   முக்கியத்துவம் தருவார்கள். இந்தப் படங்களில் உள்ளவர்கள் எதற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்று பாருங்கள். நகைச் சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விஷயம் மாதிரியும் இருக்கிறது.








படங்கள பாத்தா என்ன தோணுது. உங்க கருத்தை சொல்லுங்க!
நன்றி:http://www.spoon-feed.com/in-life-everything-is-a-question-of-priorities/
****************************************************************************************************************
  இதையும் படியுங்க!

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்


**********************************************************************************************************************
     
     நீங்கள் மரபுக் கவிதை எழுத முயற்சிப்பவரா? நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை சரிபார்க்க உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு மென்பொருள். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது. கீழ்க்கண்ட முகவரியில் இருந்து இதனை பதிவிறக்கிக்கொள்ளலாம்.
      
    இதனை பதிவிறக்கி நமது கணினியில் பதிந்து நமது கவிதைகளை இனைய இணைப்பு இல்லாத நிலையிலும் சோதித்துப் பார்க்கலாம். அல்லது நேரடியாக http://www.virtualvinodh.com/avalokita  என்ற முகவரிக்குச் சென்று உங்கள் கவிதைகளை உள்ளிட்டு அறிந்து கொண்டு தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்ளலாம்.
       10 ம் வகுப்பு படிக்கும்பொழுது திருக்குறளைப் சீர் பிரித்து அலகிட்டு வாய்ப்பாடு எழுதச் சொல்வார்கள். தேர்வில் கட்டாயம் கேட்கப்படும் கேள்வி இது. நான் ஆர்வத்துடன் இதைப் படிப்பேன். திருக்குறள் மட்டுமல்லாது பல்வேறு வெண்பாக்களை சீர் பிரித்து அலகிட்டுப் பார்த்திருக்கிறேன். அப்போது வெண்பா எழுதவும் முயற்சி செய்திருக்கிறேன். வெண்பாவின் கடினமான விதிகளை பின்பற்றி ஒரு வெண்பா எழுதுவது சவாலான செயல். வெண்பாவில் பலவகை உண்டு. அவை பற்றி முழுமையாக எனக்குத் தெரியாது என்றபோதும், எனக்குத்  தெரிந்த வெண்பா இலக்கணத்தை பயன் படுத்தி சில வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை யாரிடமும் கொடுத்து சரி பார்த்தது இல்லை. 
     சமீபத்தில் அவலோகிதம்  மென்பொருளைப் பற்றி அறிந்து கொண்டேன்.
      
          இதோ எனது வெண்பா 

எக்காலும் நல்லரிசி எண்ணையும் நாமுண்போம்
வைக்கோலும் வீண்தவிடும் பிண்ணாக்கும் தந்தோம்
தமக்களிக்கும்  வெற்றுணவை உண்ணும் பசுவோ
நமக்களிக்கும் சத்துள்ள பால்.

 பொருள்: சத்தான அரிசி, எண்ணை போன்றவற்றை நாம் எடுத்துக்கொள்வோம். இவை  எடுத்ததும் மீதியுள்ள சத்தற்ற வைக்கோல்,தவிடு, பிண்ணாக்கு போன்றவற்றைத்தான் பசு மாட்டிற்குத் தருவோம். சத்தில்லாத உணவை உண்கின்ற பசுவோ மிக சத்தான பாலை நமக்குத் தருகிறது. இந்த வெண்பா மனிதனின் சுய நலத்தையும், பசுமாட்டின் கொடைத் தன்மையும் விளக்குகிறது
          இந்தக் கவிதைக்காக நான் பரிசும் பெற்றிருக்கிறேன்.
இதனை சரி பார்ப்போமா?

படி 1.
என்ற முகவரிக்குச் செல்லவும்
படி 2  
 அதில் வெண்பாவை உள்ளிட வேண்டும். 

படி 3
'ஆராய்க' என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.

படி 4
தளை  டேப்பை  க்ளிக் செய்தால் நமது செய்யுளில் என்னென்ன தளைகள் வந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம். வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வரவேண்டும்.
         


படி 5
அடுத்து 'அடி' டேப்பைக்  க்ளிக் செய்யவேண்டும் 

படி 6 
பாடலில் உள்ள மோனை  விவரங்களை அறிந்துகொள்ள 'மோனை'
டேபைக் க்ளிக் செய்ய வேண்டும்.


இப்படி நீங்கள் எழதிய வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா,கலிப்பா வகைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வெண்பாவின் பொதுவான இலக்கணங்கள்  
1 .கடைசி அடி மூன்று சீராகவும், ஏனைய அடிகள் நான்கு சீராகவும் இருக்கவேண்டும்.
2 . கடைசி சீர் நாள் ,மலர் ,காசு ,பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.
3. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே இருக்கவேண்டும்.
4. எதுகை மோனை அமைய வேண்டும்.
 இன்னும் ...

போதும்! போதும்! புதுக் கவிதை இருக்கும்போது இவ்வளவு கஷ்டப்பட்டு மரபுக் கவிதை எழுதனுமா?    அப்படின்னு சிலபேர் கேக்கறது காதுல விழுது.
எழுதிப் பாத்தாத்தான் அதனோட சுகம் தெரியும்.
நன்றி: அவலோகிதம் 
மேலும் விவரங்கள் அறிய http://www.virtualvinodh.com/avalokita
என்ற வலை தளத்திற்கு செல்லவும்.
***************************************************************************************************************
இதையும் படியுங்க!ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள் 
 செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு! பகுதி 2