என்னை கவனிப்பவர்கள்

வடிவேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடிவேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 டிசம்பர், 2015

பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன?


எங்கோ போய் கொண்டிருந்த வடிவேலுவை மடக்கி விட்டனர் நிருபர்கள் 
"சார் எங்கே போறீங்க? கொஞ்சம் நில்லுங்க! 
"அடடா! இவனுங்க கிட்ட மாட்டிகிட்டமே. வாயைக் கிளறி நம்ம வாயாலேயே நமக்கு ஆப்பு வச்சுடுவாங்களே !
"எனக்கு பேச நேரம் இல்ல. நான் முக்கியமான வேலையா போய்க்கிட்டிருக்கேன். அப்புறம் வந்து பேட்டி கொடுக்கறேன் " என்று தப்பிக்க முயல, விடாமல் துரத்தி சூழ்ந்து கொண்டு "அப்படி என்ன முக்கியமான வேலை?
"சரி விட மாட்டீங்களே! நான் வெல்ல நிவாரணம் செய்யப் போறேன். என்ன போக விடுங்க/
"என்னது? வெல்ல நிவாரணமா? சார் நீங்க வெல்ல நிவாரணம்னா சொன்னீங்க?
"ஆமாம் வெல்ல நிவாரணம்தான் "
"வடிவேலு சார்! அது வெல்ல நிவாரணம் இல்ல வெள்ள நிவாரணம் .மதுரைக்காரரான உங்களுக்கு 'ள' வரவில்லையே?."

(மனதுக்குள்)ரொம்ப முக்கியம். நம்ம பேசறதுல தப்பு கண்டுபிடிக்கறதே இவனுங்களுக்கு பொழப்பா போச்சு .விடக்க கூடாது. ஸ்டெடியா நிக்கணும்

"யோவ்! உங்களுக்கு அறிவு இருக்கா?  என்ன கேள்வி கேக்கறீங்க "

இவரும் நம்மை பார்த்து அறிவு இருக்கான்னு கேக்கறாரே என்று திகைத்து நின்றனர் நிருபர்கள்.
வடிவேலு தொடர்ந்தார் "நான் தமிலன்யா. நான் சொன்னது சரிதான் வெல்ல நிவாரணம்தான். இப்ப மழை வந்துச்சு இல்லை? . நம்ம ஊர்க்காரங்க மெட்ராஸ்ல வெல்ல மண்டி வச்சிருந்தாங்க மழையில அவங்க மண்டியில இருந்த வெல்லம் எல்லாம் மழையில கரைஞ்சு போச்சா? பாவம் இப்போ நஷ்டப்பட்டு நடுத் தெருவில நிக்கறாங்களா?. 
அவங்க எனக்கு போன் போட்டு அண்ணே எங்களுக்கு வெல்ல நிவாரணம் வேணும்னு கதறனானுங்க. பாவமா இருந்துச்சா? எல்லோருக்கும் மூட்ட மூட்டயா வெல்லம் வாங்கிக் கொடுத்து திரும்பவும் வியபாரம் செய்ய உதவப் போறேன். அதைத்தான் வெல்ல நிவாரணம்னு சொன்னேன் "
"ஆஹா பிரமாதம் வடிவேலு சார்."
 நல்ல காலம் எப்படியோ சமாளிச்சிட்டோம்
"அப்ப  நான் வரட்டா"
"ஒரே ஒரு முக்கியமான கேள்வி அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போயிடுங்க.?
அடாடா ஒண்ணாம் கிளாஸ்ல   அனா ஆவன்னா வாத்தியார் கேட்டப்பவே திருதிருன்னு முழிச்சமே இவனுங்க என்ன கேக்கப் போறாங்களோ தெரியலையே.
"சரி கேளுங்க?
" சார்! இந்த பீப் சாங் பத்தி சொல்லுங்களேன் .
 (மனதுக்குள்)  நல்ல காலம். நமக்கு தெரிஞ்ச கேள்வியாத்தான் இருக்கு, 

" ஓ! அத கேக்கறீங்களா. தில்லானா மோகனாம்பாள் படத்தில பத்மினி நலம்தானான்னு டான்ஸ் ஆடிகிட்டே கேக்க,   சிவாஜி பீபீனு  ஊதி நலம்தான்னு சொல்லுவாரே அந்தப் பாட்டுதானே. அருமையான பாட்டு சார் அது . அந்த பீபீ கேக்க எவ்வளோ சொகமா இருக்கும்.அந்த மாதிரி சாங் இப்ப எங்க வருது "
"சார் நாங்க அந்த சொல்லல . சி .."
"அட! உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா! நான் சின்ன வயசுல பூச (பூவரச) இலையில பீபீ செஞ்சு ஊதி அதுல  எம்ஜிஆர் சிவாஜி பாட்டு பாடினது. நீங்க என் சின்ன வயசு ஞாபத்தை கிளறி விட்டுட்டீங்க. அந்த பிளாஷ் பேக்க சொல்றேன் கேளுங்க "
கண்ணை மூடிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். 
"எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு தடவ இப்படித்தான் பூவரச மரத்துக்கு கீழ நின்னு  பீப்பி செஞ்சு ஊதிக்கிட்டிருந்தேன். அப்போ என் செல்லம் திவ்யா அங்க வந்து எனக்கும் பீபீ வேணும்னு அடம் பிடிச்சா. நானும் என்கிட்டே இருந்த பீபீய  குடுத்தேன்.அவ சேசே இது எச்சி . எனக்கு புதுசா வேணும்னு  சொன்னா . அப்ப நான் பக்கத்தில  இருந்த  பூவரச மரத்தில ஏறி ஒரு இலைய பறிச்சு அதை அழகா சுருட்டி சுருட்டி  பீபீ செஞ்சு கொடுத்தேன். அவ அதை ஆசையா வாங்கி வாயில வச்சு ஊதி பாத்தா. பீ பீ சத்தம் வரவே இல்ல வெறும் காத்துதான் வந்தது. சீ சீ இது நல்லாவே இல்ல. வேற செஞ்சு குடுன்னு கேட்டா , நான் திரும்பவும் மரம் ஏறி இல பறிச்சு பீபீ  செஞ்சு குடுத்தேன்.  அதுவும் சரியில்லன்னு தூக்கி எறிஞ்சுட்டா. இப்படி அவ கேக்க நான் மரத்தில இருக்க எல்லா இலையும் பறிச்சு பீப்பி செஞ்சு குடுத்துப் பாத்துட்டேன். மரத்துல இருந்த அத்தனை இலையும் காலியாகிடுச்சு.   வெறும் கிளை மட்டும்தான் இருந்து.  சரி வேற மரத்தில  பூவரச மரத்தில  இருந்து பிப்பீ செஞ்சு கொடுக்கலாம்னு நினைச்சேன். சுத்து  முத்தும் பாத்தேன் ஒரு மரம் கூட இல்லை.ஊஹூம். நானும் அந்த மரம் மாதிரி நின்னேன் சார். உனக்கு பீபீ செய்யவே தெரியலன்னு என்ன கெட்ட வர்த்தையில திட்டிட்டா சார் என் திவ்யா . அது யாரும் கேட்டுடக் கூடாதேங்கறதுக்காக நான் கையில் இருந்த பீப்பியை ஊதினேன். அதை யாரோ மறஞ்சிருந்து எங்களுக்கு  தெரியாம கேட்டுட்டு உங்க கிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு.

  அதுக்குள்ள மரத்துக்கு சொந்தக்காரன் வந்துட்டான். பிப்பீ செஞ்சு கொடுத்த எனக்கு பேப்பே காட்டிட்டு போயிட்டா சார் என் திவ்யா. 
மரத்துக்கு சொந்தகாரன் கோபத்துடன் "டேய்! இந்த மரத்தோட நிழல்லதானே மாடு கட்டுவேன். நிழல் கொடுக்கற மரத்தோட இலையெல்லாம் பறிச்சி இப்படி மொட்டையாக்கிட்டயேடான்னு சொல்லி என்ன அந்த மரத்திலேயே கட்டிப்போட்டுட்டு போய்ட்டான் சார். கட்டிப்போட்டுட்டு போய்ட்டான். அப்ப கீழே இருந்த பீபீயை எடுத்து நான் ஒரு சாங் பாடினேன், அது  எங்கயோ இருந்த திவ்யாவுக்கு தெரிஞ்சிதோ இல்லையோ . உங்களுக்கு தெரிஞ்சுடுச்சே சார். இத்தனை  நாளா நான் தூக்கி வச்சுக்கிட்டிருந்த பாரத்தை இன்னக்கு இறக்கி வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி நிருபர் சார்! ரொம்ப நன்றி  என்று கண்களை திறக்க ..
நிருபர்கள் இடத்தை விட்டு எப்போதோ போய்விட்டிருந்தனர்.
ஏன் ஓடிட்டானுங்க? காரணம் தெரியாமல் விழித்தார் வடிவேலு.


*************************************************************************

குறிப்பு : மேற்கண்ட பதிவு முற்றிலும் கற்பனையே. சிரிப்பதற்காக மட்டுமே.

மேலும் சில வடிவேலு நகைச்சுவை பதிவுகளை படிக்க விருப்பமா?
என் கற்பனையில் வடிவேலு எப்படின்னு பாருங்க 


ஞாயிறு, 9 ஜூன், 2013

வடிவேலு சொன்னது உண்மையாப் போச்சு

        காணாமல் போன கிணறுகள்
  வடிவேலு ஒரு படத்தில் தான் தோண்டிய கிணற்றைக் காணோம் என்றும் கண்டுபிடித்துத் தரும்படியும்  போலீசில் புகார் செய்து நம்மை யெல்லாம் சிரிக்க வைப்பார்.
      அந்தக் காமெடியின் நோக்கம் லஞ்சம் பற்றியதாக இருந்தாலும் இந்த நகைச்சுவைக் காட்சியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிணறுகள் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வரும்.

      சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான கிணறுகள் காணாமல் போய்விட்டன. காரணம் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதால் இட நெருக்கடியை சமாளிக்க இப்போதெல்லாம் இருக்கிற கிணற்றை எல்லாம் மூடிவிட்டு அந்த இடத்தை வீணடிக்காமல் கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கிணற்றுக்கு பதிலாக ஆழ் துளைக் குழாய்கள் அமைத்து விடுகிரார்கள்.


            சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.முன்பு இங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருந்தன. விவசாயத்திற்காக மிகப் பெரிய கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சென்னையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் நடப்பதில்லை. விவசாய நிலங்களெல்லாம் ப்ளாட்டுகளாக மாறி விட்டபடியால் இந்தக் கிணறுகளும் தூர்க்கப் பட்டு வருகின்றன. அப்படி தூர்க்கப் படாத கிணறுகளை பொது  மக்கள் குப்பை கொட்டியே மூடிவிடுவார்கள். அப்படித்தான் எனக்குத் தெரிந்து எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த பல கிணறுகள்  குப்பைகளால் நிரப்பப் பட்டுவிட்டன. கிணறுகள் மட்டுமல்ல மனங்களும் குப்பைகளால்தானே நிரம்பி இருக்கிறது?
      
       அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிணறு என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சென்னையிலேயே  பிறந்து வளரும் சில குழந்தைகளுக்கு கிணறு,ராட்டினம்  பற்றி தெரியாததைக் கண்டிருக்கிறேன்.


        கிராமங்களிலும் கிணறுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.. விவசாயத்திற்கும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு நீச்சல் தெரிந்திருக்கும். சிறுவயதில் இருந்தே கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்வார்கள். நீச்சல் பழக  தரைக் கிணறு மிகவும் வசதியானது. நீர் நிறைந்த  கிணறுகளில் குதித்து விளையாடுவது ஒரு அற்புதமான பொழுது போக்கு. 
     இப்போதும்  எங்கள் வீட்டில் கிணறு இருக்கிறது.அந்தக் கிணற்றுக்குள் பலமுறை இறங்கி இருக்கிறேன். ராட்டினத்தில் வேகமாக தண்ணீர் இறைப்பது ஒரு கலை .சில சமயங்களில் கயிறு அறுந்து பக்கெட் கிணற்றுக்குள் விழுந்து விடும்.  பாதாள கொலுசின் மூலம் துழாவி பாக்கெட்டை எடுப்பது ஒரு சுகமான அனுபவம். 
  இப்போது அந்தக் கிணற்றில் மோட்டார் போடப்பட்டுவிட்டது.பழைய ராட்டினங்கள் காயலான் கடைக்கு சென்று விட்டன. கிணறு மூடி போட்டுக் கொண்டது. வாய் திறக்க முடியாத கணவனைப் போல. எப்போதாவது அந்தக் கிணற்றின் மேல் உட்கார்ந்து  கொண்டு புத்தகம் படிப்பது உண்டு.
   அப்போதெல்லாம் தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடையும் நோயாளியைப் போல கிணற்றின் நிலை இருப்பதாக எனக்கு தோன்றுவது உண்டு.
      இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா? அதைப் பற்றி அவர்கள் கவலைப் படவும் போவதில்லை. மறைந்து கொண்டிருக்கும் கிணறுகளை மியூசியத்தில் கூட வைக்க முடியாது.போட்டோக்களில்தான் பார்க்க முடியும்.  
      "ஐயா! கிணறு காணாம போச்சுயா!" வடிவேலு சொல்வது உண்மைதானே" 

காணாமல் போன கிணறு
    விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும்  வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?

****************************************************************************************************** 

சனி, 13 ஏப்ரல், 2013

வடிவேலு இப்படி செய்யலாமா?


    நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு நம் உள்ளங்களை கொள்ளை கொண்டு சிரிக்க வைத்தவர் வைகைப் புயல் வடிவேலு. திரையில் இவரது பேச்சுக்களும் உடல் அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்னையும் அறியாமல் சிரிக்க வைத்துவிடும். பெயரே தெரியாத படமாக இருக்கும் ஆனால் இவர் காமெடி மட்டுமே நினைவில் இருக்கும் படங்கள் பல உண்டு. 
 
  இவரது நகைச்சுவை அடிவாங்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதிலும் பல செய்திகள் மறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றும் . ஒரு படத்தில் ஒரு குத்து சண்டை வீரரிடம் அடி வாங்கிக் கொண்டு அவரிடம் இருந்து கோப்பையை பறித்து "அடி வாங்கினவன் நான் எனக்குதான் கோப்பை" என்று சொல்வதிலாகட்டும், வெங்கி மங்கி என்று தனக்கு பதிலாக இன்னொருவரை அழுவதற்காக வைத்துக் கொள்வதிலாகட்டும், "ஒரு திரிஷா இல்லைன்னா ஒரு திவ்யா" என்று சொல்வதிலாகட்டும் வாழ்க்கை யதார்த்தங்களை மறைமுகமாக எடுத்துக் காட்டுவதாகத்தான்  எனக்கு தோன்றியது.

  வேறு எந்த நடிகரையும் விட அன்றாட வாழ்வில் இவரது வசனங்களை பயன்படுத்தாதவர் மிகக் குறைவு, "ரொம்ப நல்லவன்டா" "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்களே!" "அவ்வ்வ்வ்வ்வ்" "எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாண்டா", "ரொம்ப நல்லவன்டா, "இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்." "பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்", "ஆரம்பிச்சிடாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க." "ஒரு ஆணியும் புடுங்க வேணாம்", "ரைட்டு". "எவ்வள நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது" இப்படி பல பிரபல நகைச்சுவை வசனங்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையில் விவேக்கின் வசனமான எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனமே பொருந்துகிறது என்று நினைக்கிறேன்.

   சமீபத்தில் ஆனந்த விகடனில் வடிவேலு வீட்டுக் கல்யாணம் பற்றி செய்தி வெளியாகி இருந்தது. சினிமா பிரபலங்கள் .அரசியல்வாதிகள், திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் உட்பட  உட்பட யாரையுமே அழைக்காமல் தன் மகளின் திருமணத்தை நடத்தி இருக்கிறார். யாரையும் அழைக்கவில்லையே தவிர எல்லோருக்கும் தகவல் சொல்லி இருக்கிறார். 

  கல்யாணத்துக்கு  வர்றதுக்கு சிரமப் பட்டுக்காதீங்க! நானே புள்ளைகளை உங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரேன் என்றும் கூறி இருக்கிறார். கட்டாயம் வருவேன் என்று அடம் பிடித்த  ராஜ்கிரண் ஆர்வி.உதயகுமார் ஆகியோரிடம் சூழ்நிலை சரியில்ல புரிஞ்சுக்கோங்கண்ணே என்று சொன்னதாகத் தெரிகிறது. வடிவேலுவின் இந்த நிலை பரிதாபமாகத்தான் இருந்தது.  எல்லோரையும் அழைத்தால் கலைஞரை அழைக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் தனக்கு மேலும் அது சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நினைத்திருப்பார் போலும்.தன்னை திடீரென்று ஓரம் கட்டிய சினிமாத் துறையினர் மீது கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கலாம். 

  இந்த திருமணத்தை தனது சூழ்நிலையை சரியாக்கிக் கொள்ள வடிவேலு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அரசியலில் நிரந்தர எதிரிகளும் யாருமில்லை. அதுபோல கலைஞர்களும் நிரந்தர பகைவர்களாக யாரையும் கருதக் கூடாது. அனைவரையும் அழைத்து நடத்தி இருந்தால் யார் உண்மையாகவும் யார் ஒப்புக்காகவும் நட்புடன் இருந்தார்கள் என்பதை வடிவேலு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.
 
  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள், இப்போது புறக்கணிப்பது என்பது வருத்தம் தரக் கூடியதுதான். இது பல பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அனுபவம்தான் என்றாலும் திரையுலகம் வடிவேலுவை ஒரேயடியாக  புறக்கணித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு சீரணிக்க முடியாததாகத்தான் இருக்கிறது. வடிவேலு உச்சத்தில் இருந்தபோதும் ஆணவத்துடன் நடந்து கொண்டதாகவோ  தெரியவில்லை. (விஜயகாந்த் விஷயத்தை தவிர. அதுவும் யாரோ உசுப்பி விட்டு ரணகளமாக்கிக் கொண்டதாகத் தான் தெரிகிறது.)

   நகைச்சுவை  நடிகர்கள் ஒருமுறை மார்க்கெட்டை இழந்து விட்டால் மீண்டும் எழுச்சி பெறுவது என்பது திரை உலகில் அதிகம்  இல்லை. ஒருவேளை நாகேஷ் போல குணசித்திர நடிகராக  வேண்டுமானால் இன்னொரு சுற்று வலம் வரலாம். ஆனால் இன்னொரு நடிகர் வடிவேலுவின் இடத்தை  நிரப்பமுடியாது. இன்னொருவர் என்ன அவரே வந்தாலும்   அதே இடத்தை  மீண்டும் அடைவது கடினம். இது திரையுலக நிதர்சனம். வடிவேலு இதற்கு விதிவிலக்காவாரா? பார்ப்போம்.

  யாருக்கு எப்படியோ? எனக்கு வடிவேலு முக்கியமானவர். எனது  ஆரம்ப பதிவுகளில் வடிவேலுவை பாத்திரமாக கற்பனை செய்து நான் எழுதிய நகைச்சுவை(?) பதிவுகள் எனக்கு  ஓரளவுக்கு பதிவுலக பார்வையாளர்களை பெற்று தந்தது. அவருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். (என் கற்பனையில் வடிவேலு)

********************************** 

கொசுறு:உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணத்தில்  மொய் வாங்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் வடிவேலு.

**********************************************************************************
ஏற்கனவே படிக்காதவர்கள் நேரம்  இருந்தால் இவற்றைப் படியுங்கள்
 



செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வடிவேலு வாங்கிய கழுதை


(மன்னிச்சுக்குங்க நண்பர்களே!  இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி! கற்பனை கழுதையை தட்டி விட்டுட்டேனா.அதன் விளைவுதான் சார். 
    ஆனா ஒண்ணு!  நாளைக்கு சீரியசான பதிவுதான்.
             சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள். 
  பீ கேர்ஃபுல்....  நான் என்னை சொன்னேன். ) 
   ********************************************** 
வடிவேலு வாங்கிய கழுதை 
 
     'என்னைப்  பார் யோகம் வரும்" னு எழுதி வச்ச கழுதை போட்டாவை வாங்கி மாட்டி தினமும் பாத்தா உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று வடிவேலுவுக்கு யாரோ சொல்ல,"அப்படியாவது யோகம் அடிக்குதா பாக்கலாம்' என்று போட்டோ வாங்க கடைக்குபுறப்பட்டார் வடிவேலு.
    கடையில் படத்தை வாங்கும்போது "அண்ணே! அண்ணே!  வாங்காதீங்க!" என்று குரல் கேட்டது .வடிவேலுவின் நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள்
.
"அடேய் இங்கயும் வந்துட்டீங்களா! நீங்க சொல்றத கேக்க மாட்டேன். நானே எதையும் டீல் பண்ணிக்குவேன். நீங்க போகலாம்!
   "அண்ணே! நாங்க சொல்றத கேக்காம  ஓட்டல்ல போய் சாப்பிட்டுதானே ஏமாந்தீங்க!"
    "அதை ஏண்டா ஞாபகப் படுத்துறீங்க' என்னதாண்டா பண்ணனும்னு சொல்றீங்க!"
    "அண்ணே கழுதை ஃபோட்டா வாங்குறதுக்கு பதிலா கழுதையே வாங்கி தினமும் பாத்தா நீங்க கோடீஸ்வரர் ஆயிடுவீங்கண்ணே!"
    "ம்ம்ம்.........நீங்க சொல்றதும் சரிதான்...சரி ஒரு கழுதையத் தான் வாங்கி பாப்போம். ஏண்டா என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே!"
       "அண்ணே!எங்கள எப்பவுமே நம்ப மாட்டேங்கறீங்களே!"
    "உங்களை எப்படிடா நம்பறது எத்தனை முறை என்னை அடிவாங்க வச்சிருப்பீங்க! ஐடியா சொல்லிட்டீங்க இல்ல நீங்க கிளம்புங்க!நான் பாத்துக்கிறேன்.ஐடியா சொன்னதுக்கு இந்தாங்க இந்த காசை வச்சு டீ குடிச்சிட்டு போங்க!" என்று சொல்லி அவர்களை துரத்திவிட்டு ஊருக்கு ஓரமாக இருக்கும் கழுதை விற்கும் கடைக்கு சென்றார்
.
     அங்கே அழகழகான கழுதைகள் விற்பனைக்கு இருந்தன.அதைப் பார்த்த வடிவேலு "ஆஹா! எவ்வளோ கழுதைங்க! நம்மளைவிட  அழகா  இருக்கே!இதைப்பாத்தா இப்பவே யோகம் வந்துடும் போல இருக்கே!

    "ஹலோ கடையில யாரு? கழுதை என்ன விலை"
   "பிச்சைக் காரங்களுக்கெல்லாம் நான்  கழுதை விக்கறதில்ல" கடைக்காரன்  சொன்னான்!

   "என்ன எகத்தாளம்! ப்ரதர் உன் ஜட்ஜ்மெண்டு ராங். இதோ பார் எவ்வளோ பணம்?" பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்துக் காட்டினார்.

    "சாரி சார்! பிச்சகாரங்க கிட்ட கூட நிறைய பணம் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேனே தவிர பாத்ததில்ல இப்பதான் பாக்குறேன். உங்களைப் பாத்ததில எனக்கும் யோகம்தான் சார்!"

   வடிவேலு டென்ஷனாகி "ஹலோ ஓவரா போய்ட்டிருக்க நீ! இந்தா பணம் அதோ அந்த முடி புசுபுசுன்னு அழகா ஸ்டைலா நின்னுக்கிட்டுருக்கே அந்த கழுதைய குடு'

  வடிவேலுவிடம் நிறைய பணம் இருப்பதை தூரமாக நின்றுகொண்டிருந்த திருட்டுத் தொழில் செய்யும்அழகான இளம்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்.'ஆஹா!இன்னைக்கு நல்ல கிராக்கி மாட்டி இருக்கு..இந்த சான்சை விடக் கூடாது." என்று நினைத்துக் கொண்டே வடிவேலுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  கழுதையை ஒரு கயிற்றில் கட்டி அதை வடிவேலு கையில் கொடுத்தான் கடைக்காரன், கழுதை பின்னால் வர கயிற்றைப் பிடித்துக்கொண்டு 'இனிமே நமக்கு வறப்போற அதிர்ஷ்டத்தை எந்த கொம்பனாலயும்  தடுத்து நிறுத்த முடியாது'  என்று நினைத்துக்கொண்டே நடந்தார். 

   இதைப்பார்த்த இளம் பெண் சத்தமில்லாமல் வந்து கழுதையின் கயிற்றை அவிழ்த்துவிட்டு தன கழுத்தில் அந்தக் கயிற்றைக் கட்டிக்கொண்டாள். இதை அறியாத வடிவேலு தொடர்ந்து நடக்க கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கழுதை கூடவே வருகிறதா என்று திருப்பிப் பார்க்க அங்கே கழுதைக்கு பதிலாக ஒரு பெண் இருப்பது வடிவேலுவுக்கு கண்டு அதிர்ச்சிஏற்பட்டது

ஐயோ! சொன்னா கேளு செல்லம்! நான் உன்ன வச்சுக்க முடியாது
  
  "என்னடா இது அதிசயம்!, ஏ பொண்ணு! கழுதைதானே வாங்கினேன், நீ எப்படி வந்த!"
  "எசமான் ! நான் இதுக்கு முன்னாடி கழுதையாத்தான் இருந்தேன்.உங்க கை பட்டதும் பொண்ணா மாறிட்டேன்."
    "அய்யய்யோ என்னம்மா  சொல்ற! ஒண்ணும் புரியலயே!"
  "ஆமாம் எசமான்! நான் மொதல்ல ஒரு பொண்ணாதான் இருந்தேன்.ஒரு சாமியார் கிட்ட காசு திருடிட்டனா? அவரு என்ன கழுதையா மாறிடுவேன்னு சாபம் கொடுத்துட்டார். "
      "ஆங்.. அப்புறம் "
     'நான் அவர்கிட்ட கெஞ்சி சாப விமோசனம் கேக்க. அவரு அழகா கறுப்பா ஒரு ராஜகுமாரன் வந்து உன்னை தொட்டதும் திரும்பவும் நீ பொண்ணா மாறிடுவேன்னு சொன்னாரு.அதே மாதிரி இப்போ மாறிட்டேன். எசமான்!, இனிமே நான் உங்களுக்குத்தான் சொந்தம் .நீங்கதான் என்ன கல்யாணம் பண்ணிக்கணும்."
   "அதெல்லாம் முடியாதுமா.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சி. நீ போய்டும்மா "
       "பரவால்ல முதலாளி எனக்கு ஆட்சேபனை இல்ல....."
       "சொன்ன கேளு செல்லம். நான் உன்ன வச்சுக்க முடியாது..."
     "அப்படின்னா நீங்க பையில வச்சிருக்கிற பணத்தை குடுங்க நான் போயிடறேன்..'
       "ஏன் என்ன இப்படி டார்ச்சர் பண்ற.  அவ்வவ்..."
      முடியாது என்று மறுக்க அந்தப் பெண் பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
    "இதோ பாரு மரியாதையா பணத்தை குடுத்துடு .....இல்லன்னா திருப்பி கழுதை ஆயிடுவ. கழுதை ஆயிடுவ.. அப்புறம் பொண்ணா வே மாறமாட்ட இது எங்க ஆத்தா மேல சத்தியம். அவ்வ்வ்வ்.  "  என்று சாபம் கொடுத்துக்கொண்டே துரத்தியும் பிடிக்க முடியவில்ல .

    " இந்தப் பொண்ணு நம்மள ஏமாத்திட்டாளே! கழுதையைப் பாத்தா அதிர்ஷ்டம்னு நினைச்சா இந்தக் கழுதைக்கு யோகம் வந்திடுச்சே.ஒருவேளை நம்ம மூஞ்சி கழுத மாதிரி இருக்குதோ.எதுக்கும் கண்ணாடியைப் பாத்து டெஸ்ட் பண்ணனும்."
  .
     வடிவேலு வீட்டுக்குள் நுழையும்போது வடிவேலுவின் மனைவி "அங்கயே நில்லுயா! நான் சேத்து வச்சிருந்த  பணத்தை எல்லாம் தூக்கிட்டு போய்ட்டயே!எங்க அது? எந்த கழுத கிட்டயா குடுத்த? உன்கூட எவ குடுத்தனம் பண்ணுவா... உன்ன போய் என் தலயில கட்டி வச்சுட்டாங்களே " என்று கண்டபடி திட்ட ...
  "ஏய் மரியாதையா பேசு. என்ன கட்டிக்க எத்தனை பொண்ணுங்க தயாரா இருக்காங்க  தெரியுமா... இப்பகூட ஒரு பொண்ணு என் பின்னாடி வந்தது. நாந்தாண்டி வேணாம்னு உனக்காக தியாகம் பண்ணிட்டு வந்தேன்...."
  "போய்யா போ அந்த கழுதைய கூட்டிட்டு வா ..நானும் பாக்கறேன்..."

மனதுக்குள்  'அந்தப் பொண்ணு கழுதன்னு இவளுக்கும் தெரிஞ்சு போச்சோ?'

  "போறன்டி இப்பவே போய் அந்தப் பொண்ணோட வந்து  உன் கொட்டத்தை அடக்கறேன்" சவால் விட்டுவிட்டு ஆவேசத்துடன் கிளம்பினார்

    வடிவேலு  அந்தப் பெண்ணைத் தேடி  மீண்டும் கழுதை வாங்கிய இடத்துக்கே வர அங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்க்க அங்கே காலையில் வாங்கிய அதே அழகான புசு புசு கழுதை நின்றிருந்தது.
   அதைப் பார்த்த வடிவேலு அதிர்ச்சியுடன்,"ஐயோ பொண்ணே! நான் குடுத்த சாபம் பலிச்ச்சிடுச்சே. நீ எங்கிட்ட பணத்த புடுங்கினதால உன்னை கழுதையா  மாற சாபம் குடுத்தனே.நிஜமாவே திரும்பவும் கழுதையா மாறிட்டயே!"

      கழுதைய தொட்டுப் பார்த்து பெண்ணாக மாறுகிறதா என்று பார்த்துக்கொண்டே,  
  "உன்னை பொண்ணா மாத்த முடியலயே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......."
   என்று  புலம்ப தூரத்தில் மறைவாக அந்த இளம்பெண் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்

*******************************************************************
சும்மா ஒரு ஜாலிக்குத்தான் .சிரிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க  



செவ்வாய், 3 ஜூலை, 2012

ஹோட்டலில் வடிவேலு


   வேலை தேடி வடிவேலு பட்ட அவஸ்தையை நீங்க படிச்சிருப்பீங்க.(படிக்காதவங்க இப்ப படிச்சி ஆறுதல் சொல்லலாம்..  
வேலை தேடும் வடிவேலு - பகுதி 1  
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை 
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 )
   அதனால நொந்து போன வடிவேலு கொஞ்ச நாள் வெளியில தல காட்டாம இருந்தார்.வீட்டுக்குள்ளயே எவ்வளவு  நாள் இருக்கிறதுன்னு எங்கயாவது போய்விட்டு  வரலாம் என்று நினைத்து மனம் போன போக்கில் ஒரு பஸ்சில் ஏறி சுற்றிக்கொண்டிருந்தார். மதிய நேரம் பசி எடுக்க ஆரம்பித்தது. எங்காவது ஹோட்டல் இருக்கிறதா என்று பார்க்க அருகே ஒரு ஹோட்டல் ஒன்று கண்ணில் பட்டது. கையில் காசு இருக்கிறதா என்று பார்த்தார். நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லரைகளும் இருந்தது. பரவாயில்ல சமாளிச்சுக்கலாம். என்று ஹோட்டல் வாசலை  அடைந்த வடிவேலுவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. வாசலில் வைத்திருந்த போர்டுதான்.

   நீங்கள் சாப்பிடுவதற்கு பில் தொகை கொடுக்க வேண்டாம். உங்கள் பேரனிடம் வாங்கிக் கொள்வோம். வருக!வருக!
  ஒரு நிமிடம் நின்று போர்டைப் பார்த்தவர் ஆச்சர்யம் அடைந்தார். வடிவேலுவால் அதை நம்ப முடியவில்லை. அங்கு வேலை செய்யும் ஒருவன் வெளியே வந்தான். அவனிடம் விசாரித்தார்.
"ஏம்பா போர்டில போட்டிருக்கறது. உண்மையா?"
"ஆமா சார், உண்மைதான் உள்ள வாங்க!" 
  "எதுக்கும்  கல்லால ஒக்காந்திருக்கறவர கேட்டுடுவோம்." என்று போக முற்பட்டபோது
"சார்  நீங்க தான் முதலாளியா?ஆமாம் சாப்பிடறதுக்கு பணம் குடுக்க வேணாம்.உங்க பேரன் கிட்ட வாங்கிக்கவோம்னு போட்டிருக்கீங்களே நம்பலாமா?"
"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க.நீங்க சாப்பிட்டதுக்கு உங்க பேரன் கிட்டதான் பிற்காலத்தில வாங்கிக்குவோம்.உள்ளே வாங்க "
   "என் பேரனை எப்படி கண்டுபிடிப்பீங்க."
  "உங்களை போட்டோ எடுத்து வச்சிக்குவோம்.அதை வச்சு உங்க பேரனை அடையாளம் கண்டுபிடிச்சிடுவோம்".
  "ஒ! டெக்னாலாஜி அவ்வளோ இம்ப்ரூவ் ஆயிடிச்சா! சார் எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க!"
  "நீங்க சாப்பிடறதுக்கு உங்ககிட்ட பணம் வாங்க மாட்டோம்.உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்" என்று சொல்ல வடிவேலு தன் செல்ஃபோனை எடுத்து அவர் சொன்னதை ரெகார்ட் செய்து கொண்டார்.
  "பாவம் இவ்வளோ அப்பாவியா இருக்காங்களே என் பேரன் கிட்ட எப்படி வாங்க முடியும்.என் பேரன் இந்த கடைக்கு வருவான்னு எப்படி சொல்ல முடியும்?"

  "சார்!உங்க மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப நல்லவராத் தெரியுது. உங்க வாரிசுகளும் அப்படித்தான் இருப்பாங்க . நீங்க பட்ட கடனை நிச்சயமா.அவங்க அடைப்பாங்க! அது மட்டுமில்ல இவங்க ஏன் இப்படி ஹோட்டல  நடத்தணும்னு நீங்க நினைக்கறது எனக்கு தெரியுது.எங்க தாத்தாவோட ஆசை இது. அவர் ஆரம்பிச்ச பழக்கமிது. அதை அதை எங்கப்பா நான் தொடர்ந்துகிட்டு இருக்கோம்."
  "வித்தியாசமா ஹோட்டலை நடத்துறீங்க.

  "அண்ணே! கொஞ்சம் நில்லுங்கன்னே,உங்க கிட்ட விஷயம் சொல்லனும்"
  வடிவேலுவின்  நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

  "அடடா!இவனுங்க எங்க வந்தானுங்க. எப்படித்தான் மூக்கில வேர்க்குதோ தெரியலயே."
   "நீங்க  ஒன்னும் சொல்ல வேணாம் என் பொழைப்ப கெடுக்கறதே உங்களோட வேலையாப் போச்சு. மரியாதையா போயிடுங்க.
   "அவங்கள உள்ள விடாத துரத்தி விடுங்க?"

    வடிவேலு உள்ள போய் உட்கார்ந்தார்.

  "சார் ஏசி யில ஒட்காருங்க " என்று அழைத்துச் சென்றனர்.

  "சரி நாமளா காசு கொடுக்கப்போறோம்." என்னப்பா இருக்கு?

  "என்ன வேணுமோ கேளுங்க சார். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம்."

  "அப்படியா! ரொம்ப சந்தோஷம். மொதல்ல நாலு இட்லி கொண்டுவா."
  "அப்புறம் சார்!"

  "சோலா பூரி ரெண்டு., கீ ரோஸ்ட், பரோட்டா, அடுத்து கொண்டுவா!
அனைத்தும்  சாப்பிட்டு முடிக்க 
  "வேற என்ன வேணும் சார்?"
  "அட அட இவங்க அன்புத் தொல்ல தாங்க முடியலையே. இந்த  ஹோட்டல்ல என்ன ஸ்பெஷல்?"
  "அடை அவியல், இடியாப்பம் குருமா ........."இன்னும் சொல்லிக்கொண்டே போக,

  "சரி! சரி! எல்லாத்திலயும் ஒரு செட் கொண்டு வா! அப்புறம் ஐஸ் கிரீம் ஜூஸ் காப்பி மறக்காம எடுத்துட்டு வா!"

அனைத்தையும் முடித்துவிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே கிளம்பினார்.
"சார், இந்தாங்க பில் 3000 ரூபா எடுங்க."
"யோவ். என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு. நான் பல தடவை கேட்டுட்டுதானே  சாப்பிட வந்தேன். நான் சாப்பிடறதுக்கு பில் கட்டத் தேவையில்லைன்னு நீங்க சொன்னத நான் ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன். என் பேரன் கிட்டதான் வாங்கிக்கணும் என்ன ஏமாத்த முடியாது."
"சார் அவசரப் படாதே  இந்த பில் நீங்க சாப்பிட்டதுக்கு இல்ல உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு."
 "என்னது எங்க தாத்தா சாப்பிட்டதுக்கா?படு பாவிங்களா அதை ஏண்டா முதல்லயே சொல்லல. இப்படி ஒரு உள்குத்து இருக்கும்னு தெரியாம போச்சே.! ஏன்யா  தெரியாமத்தான் கேக்கறேன்! அந்த காலத்திலேயேவா எங்க தத்தா 3000 ரூபாய்க்கு சாப்பிட்டார்?.எங்கிட்ட பணம் இல்லை."
  "நீயே இத்தனை ஐட்டம் தின்னயே. அந்த காலத்து ஆளு உங்க தாத்தா எவ்வளோ சாப்பிட்டிருப்பார். மோதிரம் போட்டிருக்க இல்ல அத கழட்டிக்குடு. உன் மோதிரத்த பாத்துட்டுதான் உன்ன சாப்பிட உள்ளே விட்டோம். உம் சீக்கிரம்."
   "மோதிரம் இல்லன்ன என்ன செய்வீங்க?"
  " உன்ன உங்க தாத்தா இருக்கிற இடத்துக்கே அனுப்பிடுவோம்"
 மோதிரத்தை உருவிக்கொண்டு வடிவேலுவை வெளியே தள்ளினர் 
"ஐயோ! நம்ம பசங்க அப்பவே இதைத்தான் சொல்ல வந்தாங்களோ. அதையும் கேக்காம அவங்களை துரத்திட்டேனே. சரி!சரி  உசுருக்கு சேதாரம் இல்லாம தப்பிச்சமே அது போறும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

***************************************************************************

திங்கள், 14 மே, 2012

வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை

வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 இன் தொடர்ச்சி.
  வடிவேலு வேலை கிடைப்பதற்காக இந்தப் புதிருக்குத்தான் விடை கண்டு பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார்.
         (வேலை தேடும் வடிவேலு - பகுதி 1)

உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.
Read more: http://tnmurali.blogspot.com/#ixzz1unhJ3s7l
(இந்தப் புதிருக்கு சரியான விடை சொன்னவர் ராஜா பிரதீப். அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்)

  வடிவேலு, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு விதம் விதமாக எண்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தப்போது அவருடைய நண்பர்கள் வந்தனர்.
"அண்ணே! விடை கண்டுபிச்சிட்டீங்களா?"
"ஒரு வாரமா முட்டி மோதிக்கிட்டிருகேன். கண்டுபிடிக்க முடியலையே!"
"நீங்க கண்டு பிடிக்க மாட்டேங்கன்னு எங்களுக்கு தெரியும்.?அதனால உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நித்தியானந்தா கிட்ட அருள் வாக்கு கேட்டுட்டு வரோம்"

"யாரு! ரஞ்சிதாவோட ஆட்டம் போட்டாரே அந்த சாமியாரா? அவருக்கு என்னடா தெரியும்?"

"அண்ணே! அவர சாதரணமா நினச்சிடாதீங்க.அவர் உங்களுக்காக அருள்வாக்கு சொல்லி  இருக்காரு. அந்த அருள் வாக்குல விடை இருக்கும் தேடிப்பாருன்னு அவருடைய சீடருங்க சொல்லறாங்க."

"அப்படி என்னடா சொன்னாரு!"

"அவரு கண்ண மூடிக்கிட்டு சொன்னத சொல்லறோம். 
நீ, 
நான்,
ரஞ்சிதா, 
எல்லா திசையிலும் தேடி பாருங்க,
ரெண்டு  சவரன எடை போடு
நான் சிரிக்கும்போது எண்ணி பாரு.
மீதி ஏதும் விடாதே!" 

"ஒண்ணுமே  புரியலயேடா"

  "அண்ணே இதை சொல்லிக்கிட்டே இருங்க  விடை கிடைச்சிடும். அண்ணே குளிக்கரதக் கூட மறந்துட்டு இப்படி கணக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்களே! உங்கள எப்படி பாரட்டறதுன்னே தெரியலண்ணே "

நான் நாலு நாளா குளிக்காதது உங்களுக்கு எப்படிடா  தெரியும்?

"கொஞ்சம் ஸ்மெல் ஓவரா வருதுண்ணே!  குளிச்சிட்டு வந்துடுங்க  நாங்க வெய்ட் பண்ணறோம்.
  "நீ நான் ரஞ்சிதா ........" என்று  வடிவேலு  அதை சொல்லிக்கொண்டே போன வடிவேலு திடீரென்று பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு கொண்டு கண்டு பிடிச்சிட்டேன். கண்டு பிடிச்சிட்டேன்....என்று கூவிக்கொண்டே டிரஸ் போடாதாதைக்கூட மறந்து வெளியே ஓடி வந்தார்.
"என்னன்னே ஆர்க்கிமிடிஸ் மாதிரி டிரஸ் போடாம ஓடி வறீங்க! நண்பர்கள் சொன்னபிறகு டிரஸ் போட்டுக்கொண்டு வந்தார்.
"கண்டு பிடிச்சிட்டீங்களா விடை என்ன?எப்படி கண்டு பிடிச்சீங்க!'
"அடேய்! "நீ" எத்தனை எழுத்து?

"ஒண்ணு"
" 'நான்'  எத்தனை எழுத்து?"
"ரெண்டு'
"ரஞ்சிதா?"
"நாலு"
"எல்லா திசையிலும் தேடிப்பாருன்னா? 
"ரொம்ப பெரிசா இருக்கு.எண்ணிப் பார்க்க முடியாதுன்னே."
"இதை எண்ணிப் பாக்கக் கூடாது. எல்லாதிசைன்னு சொன்னா எட்டு திசை".
"அதாவது எட்டு."
"ரெண்டு சவரன எடைபோடுன்னா"
"ரெண்டு சவரன எடை போட்டு பாத்தா 16 கிராம் இருக்கும்."
"அப்பா நான் சிரிச்சா எண்ணிப்பாருன்னு சொன்னாரே அதுக்கு என்ன அர்த்தம்?
"அவரு சிரிக்கும்போது பல்லை எண்ணினா எத்தனை இருக்கும்?
"முப்பத்து ரெண்டு. சூப்பர்ணே"
"அப்புறம் மீதி ஏதும் விடாதேன்னா. மேல சொன்ன 1, 2, 4, 8,16, 32 

 இதெல்லாம் கூட்டினா 63. மொத்தம் நூறுல மீதி இருக்கறது 37."

அதனால  ஒவ்வொரு பொட்டலத்திலயும்  1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம். அட.. அட.. என்னா அருள்வாக்கு!  "
"47 ரூபா எப்படி எடுப்பீங்க. சொல்லுங்க பாக்கலாம்.
"2  ரூபா பொட்டலம் , 8 ரூபா பொட்டலம்  , 37 ரூபா பொட்டலம்"
"ரொம்பப் பிரமாதம் ணே உங்களுக்கு வேல கிடச்ச மாதிரிதான்"
" நித்தி அப்படி இப்படி இருந்தாலும் கணக்கில கில்லாடிதான் .சரி சரி உடனே கிளம்புங்க வேற எவனாவது வந்து விடை சொல்லிடப்  போறான்"
                                                  (தொடரும்)
கிளம்பிச் சென்ற வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? அவசரப் படாதீங்க! சீக்கிரமே சொல்லிடறேன்.

வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 

********************************************************************************************** 

ஞாயிறு, 6 மே, 2012

வேலை தேடும் வடிவேலு - பகுதி 1

           (முழுக்க முழுக்க கற்பனையே ) 
  
   வடிவேலு வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். எவ்வளவு நாள்தான் சும்மா இருப்பது. ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து ஆட்கள் தேவை விளம்பரங்களை  ஆராய்ந்து கொண்டிருந்தார்.
  
  “அண்ணே! என்ன பண்ணிகிட்டிருக்கிங்க! வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா?” என்று திடீரென்று குரல் கேட்க வடிவேலுவின் நண்பர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

     “அடடா! இவனுங்க எப்ப வந்தானுங்க” என்றுநினைத்துக் கொண்டே
“நான் வேல தேடறது உங்களுக்கு எப்படிடா தெரியும்?நான் உங்கக்கிட்ட சொல்லவே இல்லையே! உங்க சங்காத்தமே வேண்டாம்னு தானே ஒதுங்கி இருக்கேன்.”

     “ஏண்ணே! இப்படி நினைக்குறீங்க! நீங்க என்ன செய்வீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? உங்க கஷ்டம் எங்க கஷ்டம் இல்லையா? உங்களுக்கு உதவி செய்யறதுக்குத் தானே நாங்க இருக்கோம்.”

     “நீங்களாடா உதவி செய்வீங்க! பின்னாடி வெடி வச்சு வேடிக்கை பாக்கறவங்களாச்சே!”

   “போங்கண்ணே! கணக்கு வழக்கு தெரிஞ்ச ஆளு ஒருத்தர் வேலைக்கு வேணும்னு கேட்டிருந்தாங்க. அப்ப உங்க ஞாபகம்தான் எங்களுக்கு வந்துச்சி.உடனே உங்க கிட்ட சொல்லனும்னு ஓடோடி வந்தா...நீங்க என்னடான்னா எங்களை இன்சல்ட் பண்ணறீங்க,
சரி வாங்கடா போலாம். அண்ணன் நம்பள நம்ப மாட்டேங்கிறார்.”

  “அடேய் கோவிச்சுக்காதீங்கடா. எனக்கும் உங்களை விட்டா யாரு இருக்கா. அடி உதை வாங்கினதுக்கு அப்புறமாவது வீட்டுக்கு தூக்கிகொண்டு வந்து சேத்துடறீங்க இல்ல.  சரி! சரி சொல்லுங்க வேலைய பத்தி ஏதோ சொல்லவந்தீங்களே.. நான் இப்ப வேளைக்கு போயே ஆகணும்டா. மரியாத நாளுக்கு நாள் தேஞ்சிக்கிட்டே வருது.!

  “அண்ணே, அந்தக் கம்பனி பணம் அதிகமா நடமாடற இடமாம். நல்லா வேல செய்யற நம்பிக்கையானவாங்களா இருக்கணுமாம்....”

  “பேங்க்கா இருக்குமோ. அதுக்கு நிறைய படிச்சி இருக்கனுமேடா. நான் பண விஷயத்தில கில்லாடிதான். ஆனா என்கிட்டே மூணாவது படிச்ச சர்டிபிகேட்  கூட இல்லையேடா!
 “அதெல்லாம் எங்களுக்கு  தெரியாதன்னே. சூப்பரா டிரெஸ் பண்ணிக்கிட்டு வாங்கண்ணே போகலாம். அங்கே உங்களுக்கு இன்டெர் வியு வைப்பாங்க அதுல கரக்டா பதில் சொல்லிட்டா உங்கள வேலைக்கு எடுத்துக்குவாங்க ”

  வடிவேலுவை நண்பர்கள் இன்டெர்வியுக்கு அழைத்துச் சென்றனர். அவரைப்போலவே இன்டெர்வியுக்கு நிறையப் பேர் வந்திருந்தனர்.
நண்பர்கள் வெளியே இருக்க தனக்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்துடன் உள்ளே போனார் வடிவேலு.

இன்டெர்வியூசெய்பவர்,"உன்ன பாத்தா வடிவேலு மாதிரி இருக்கே, இந்த வேலைக்கு  வேலைக்கு உன் பேஸ் ஒ.கே. ஆனா டிரஸ் நல்லாவே இல்லையே.”

   அவரைப்பார்த்த வடிவேலு, "சார்! நான்  உங்கள  எங்கயோ பாத்திருக்கேனே!”
“டி.வி. இல பாத்திருக்கலாம். நான் இந்தக் கம்பனியோட எம்.டி. உனக்கு பான் கார்டு இருக்கா?பேங்க் அக்கவுன்ட் இருக்கா.”

   பான் கார்டுன்னா என்னான்னு தெரியா விட்டாலும் இருக்கு என்று தலை ஆட்ட, 
  "இந்தக் கம்பனி சாதாரண கம்பனை இல்ல. சரவணா ஸ்டோர், தங்கமாளிகை,போதிஸ்,ஜெயச்சந்திரன், இவங்கெல்லாம் நான் இல்லேன்னா வியாபாரம் செய்ய  முடியாது.  இவங்களுக்கு தேவையான முக்கியமானதை நான்தான் சப்ளை பண்றேன். சென்னையில எங்களுக்கு நிறைய கிளை இருக்கு. புதுசா பிராஞ்ச் ஓபன் பண்ணப்போறோம். இங்க வேல கிடைக்கனும்னா கணக்கு அறிவு ரொம்ப முக்கியம். கணக்கு உனக்கு வருமா?”

    “அய்யா கணக்கில நான் புலி.”

    “அப்ப சரி.  நான் ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கு சரியான பதில் சொல்லிட்டா உனக்கு வேல குடுக்கறோம். வேலையில சேந்துட்டா டெய்லி பேட்டா,லீவு, யூனிபார்ம் இப்படி நிறைய சலுகை கிடைக்கும். ஆனா இந்தவேலையில பொறுமை ரொம்ப ரொம்ப  முக்கியம். கஸ்டமர் தான் நம்ம கடவுள்.”

   “உங்க கிட்ட வேல செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும். நீங்க கேளுங்க அய்யா. எப்படியாவது கஷ்டப்பட்டு பதில் சொல்லிடறேன்.

   “சரி கேட்டுக்கோ. உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம்.. எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.

  உதாரணத்துக்கு 51 ரூபா குடுக்கனும்னா 30 ,20,1  இன்னு மூணு பொட்டலமா குடுக்கலாம். ஏழு பொட்டலங்களிலும் சேத்து மொத்த காசு நூறு ரூபாங்கறதை நினைவுல வச்சிக்கணும்’

   “சார்! தலைய சுத்துது இதுக்கு பதில் இப்பவ சொல்லனுமா?”

   ஒரு வாரம் கழிச்சி கூட சொல்லலாம். ஆனா வேல தேடி வர்றவங்க யாராவது மொதல்ல சொல்லிட்டா வேலய அவங்களுக்கு குடுத்திடுவோம். இப்ப நீங்க போகலாம்.

 “ஓ.கே. சார், ட்ரை பண்ணி பாக்கறேன்.”

வடிவேலு சிந்தனையுடன் வெளியே வருகிறார்.
வடிவேலு விடை கண்டு பிடித்தாரா? அவருக்கு  வேலை கிடைத்ததா?
முடிஞ்சா நீங்க அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க. 
                                                             (தொடரும்) 
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை 
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 

************************************************************************************************

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வடிவேலு சொன்ன கருத்து


   வடிவேலுவைத் தேடி அவரது நண்பர்கள் வருகிறார்கள்.அவர்களைக் கண்டதும் வடிவேலு முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
       
 “டேய்! அண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு.(Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்?) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க!
             “அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கன்னே! எங்களுக்கு உங்களை விட்டா யாருன்னே இருக்காங்க!
          “சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே  சரி! சரி! மன்னிச்சிட்டேன். போய்ட்டு வாங்க!
   “என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க! நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யனும்னு கிளம்பி போய்ட்டிருக்கோம்.   
     அப்படி என்னடா பண்ணப்போறீங்க! நல்துன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே?
      போங்கண்ணே கிண்டல் பண்ணாதீங்க! நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.
       நீங்களே குடிகாரப் பசங்களாச்சே! நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா
      அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.
      நான் எதுக்குடா?
       எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க! எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம் இருக்கு!
        நீங்க சொல்றது சரிதாண்டா! சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி பாப்போம்.
         வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம்.
       அண்ணே! அதோ பாருங்கண்ணே! ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க!
       அடேய்! என்னடா  பண்ணற
       தெரியல? குடிச்சிக்கிட்டுருக்கேன்?
    “ஏன்டா? நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே! நியாயமா? உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா?

 “அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்?

      இப்படி சொன்ன எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு
       நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.?
       அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா!,
          இந்தாங்கன்னே!

நண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.
        
   வடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, அண்ணன் இப்ப என்ன செய்யறன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா? அடேய்  குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடுபோட்டுட்டயா? இப்ப என்ன  நடக்குதுன்னு பாரு.
          
 “அடடே! பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே? அண்ணே! நீங்க கடவுள்னே! உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை  யாரும் எடுத்து சொன்னதில்லே! எவ்வளோ பெரிய விஷயத்தை இவ்வளோ எளிமையா சொல்லீட்டேங்க! உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”

 “ நில்லுடா... இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டான்.  பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்?

ஆமாண்ணே! நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு ஒன்னுமே புரியலயே?

மடப் பசங்களா சாராயத்தில விழுந்த  பூச்சி துடி துடிச்சி செத்து போச்சு இல்ல? அந்த மாதிரி குடிச்சா  நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம்? இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க! அய்யாவோட அறிவை?

பிரமாதம்ணே! உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.

ரெண்டு நாள்  கழிச்சி வாங்க! நாம அந்த பய எப்படி இருக்கான்னு பாத்துட்டு வரலாம்.

 இரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

அண்ணே! முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க! உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.

சரி சரி வீட்ல யாரு இருக்கா பாரு?

அவனோட பொண்டாட்டி தொடப்ப கட்டயோட  வருது?

என்னம்மா? உன் புருஷன் எப்படி இருக்கான்?
ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப நிறைய குடிக்கிறாறு? ஆமாம், நீங்க யாரு?

உன் புருஷன் சொல்லலையா? ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத  காமிச்சி புத்தி சொன்னவன் நான்தான். சொல்லுங்கடா  தங்கச்சிகிட்ட.?

ஓ! அந்த ஆள் நீதானா? வாய்யா! உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா  குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, என்  வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன்.  சாராயம் குடிச்சா  வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்து போகும்னு நீதான்  சொன்னயாமே? அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு  வேற காமிச்சயாமே? கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா! உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு.... 

வேணாம்மா...... நான் சொன்னது வேற அவன் புரிஞ்சிக்கிட்டது வேற? டேய் சொல்லுங்கடா? ............... ஓடிட்டீங்களா?  என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க? நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே!
*************************************************************
இதையும் படிச்சுப் பாருங்க!
பூக்களைத் தேடி! 
புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்! 
புதிர்!உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க! 

திங்கள், 28 நவம்பர், 2011

காணாமல் போகும் கிணறுகள்


       வடிவேலு ஒரு படத்தில் தான் தோண்டிய கிணற்றைக் காணோம் என்றும் கண்டுபிடித்துத் தரும்படியும்  போலீசில் புகார் செய்து நம்மை யெல்லாம் சிரிக்க வைப்பார்.
      அந்தக் காமெடியின் நோக்கம் லஞ்சம் பற்றியதாக இருந்தாலும் இந்த நகைச்சுவைக் காட்சியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிணறுகள் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வரும்.

      சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான கிணறுகள் காணாமல் போய்விட்டன. காரணம் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதால் இட நெருக்கடியை சமாளிக்க இப்போதெல்லாம் இருக்கிற கிணற்றை எல்லாம் மூடிவிட்டு அந்த இடத்தை வீணடிக்காமல் கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கிணற்றுக்கு பதிலாக ஆழ் துளைக் குழாய்கள் அமைத்து விடுகிரார்கள்.

      
      சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.முன்பு இங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருந்தன. விவசாயத்திற்காக மிகப் பெரிய கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சென்னையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் நடப்பதில்லை. விவசாய நிலங்களெல்லாம் ப்ளாட்டுகளாக மாறி விட்டபடியால் இந்தக் கிணறுகளும் தூர்க்கப் பட்டு வருகின்றன. அப்படி தூர்க்கப் படாத கிணறுகளை பொது  மக்கள் குப்பை கொட்டியே மூடிவிடுவார்கள். அப்படித்தான் எனக்குத் தெரிந்து கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த பல கிணறுகள்  குப்பைகளால் நிரப்பப் பட்டுவிட்டன.
      
       அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிணறு என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சென்னையிலேயே  பிறந்து வளரும் சில குழந்தைகளுக்கு கிணறு,ராட்டினம்  பற்றி தெரியாததைக் கண்டிருக்கிறேன்.

      
       கிராமங்களிலும் கிணறுகளின் எதிர்காலம் கேள்விக்குறியே. விவசாயத்திற்கும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு நீச்சல் தெரிந்திருக்கும். சிறுவயதில் இருந்தே கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்வார்கள். நீச்சல் பழக  தரைக் கிணறு மிகவும் வசதியானது. நீர் நிறைந்த  கிணறுகளில் குதித்து விளையாடுவது ஒரு அற்புதமான பொழுது போக்கு.
      இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா? அதைப் பற்றி அவர்கள் கவலைப் படவும் போவதில்லை. மறைந்து கொண்டிருக்கும் கிணறுகளை மியூசியத்தில் கூட வைக்க முடியாது.போட்டோக்களில்தான் பார்க்க முடியும்.  
      "ஐயா! கிணறு காணாம போச்சுயா!" வடிவேலு சொல்வது உண்மைதானே"

                    (காணாமல் போன கிணற்றில் ஒன்று)
    விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும்  வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?
************************************************************************************************************** 

இதையும் படியுங்க!