என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 28 நவம்பர், 2011

காணாமல் போகும் கிணறுகள்


       வடிவேலு ஒரு படத்தில் தான் தோண்டிய கிணற்றைக் காணோம் என்றும் கண்டுபிடித்துத் தரும்படியும்  போலீசில் புகார் செய்து நம்மை யெல்லாம் சிரிக்க வைப்பார்.
      அந்தக் காமெடியின் நோக்கம் லஞ்சம் பற்றியதாக இருந்தாலும் இந்த நகைச்சுவைக் காட்சியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிணறுகள் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வரும்.

      சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான கிணறுகள் காணாமல் போய்விட்டன. காரணம் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதால் இட நெருக்கடியை சமாளிக்க இப்போதெல்லாம் இருக்கிற கிணற்றை எல்லாம் மூடிவிட்டு அந்த இடத்தை வீணடிக்காமல் கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கிணற்றுக்கு பதிலாக ஆழ் துளைக் குழாய்கள் அமைத்து விடுகிரார்கள்.

      
      சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.முன்பு இங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருந்தன. விவசாயத்திற்காக மிகப் பெரிய கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சென்னையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் நடப்பதில்லை. விவசாய நிலங்களெல்லாம் ப்ளாட்டுகளாக மாறி விட்டபடியால் இந்தக் கிணறுகளும் தூர்க்கப் பட்டு வருகின்றன. அப்படி தூர்க்கப் படாத கிணறுகளை பொது  மக்கள் குப்பை கொட்டியே மூடிவிடுவார்கள். அப்படித்தான் எனக்குத் தெரிந்து கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த பல கிணறுகள்  குப்பைகளால் நிரப்பப் பட்டுவிட்டன.
      
       அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிணறு என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சென்னையிலேயே  பிறந்து வளரும் சில குழந்தைகளுக்கு கிணறு,ராட்டினம்  பற்றி தெரியாததைக் கண்டிருக்கிறேன்.

      
       கிராமங்களிலும் கிணறுகளின் எதிர்காலம் கேள்விக்குறியே. விவசாயத்திற்கும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு நீச்சல் தெரிந்திருக்கும். சிறுவயதில் இருந்தே கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்வார்கள். நீச்சல் பழக  தரைக் கிணறு மிகவும் வசதியானது. நீர் நிறைந்த  கிணறுகளில் குதித்து விளையாடுவது ஒரு அற்புதமான பொழுது போக்கு.
      இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா? அதைப் பற்றி அவர்கள் கவலைப் படவும் போவதில்லை. மறைந்து கொண்டிருக்கும் கிணறுகளை மியூசியத்தில் கூட வைக்க முடியாது.போட்டோக்களில்தான் பார்க்க முடியும்.  
      "ஐயா! கிணறு காணாம போச்சுயா!" வடிவேலு சொல்வது உண்மைதானே"

                    (காணாமல் போன கிணற்றில் ஒன்று)
    விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும்  வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?
************************************************************************************************************** 

இதையும் படியுங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895