என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2020

சூரரைப் போற்று-கேப்டன் கோபிநாத்

   சூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  நிறையப்பேர் படம் பார்த்திருகிறார்கள்.  அதைப் பற்றி பேசுகிறார்கள். விமர்சிக்கிறார்கள்.
      அதன் உண்மையான சூரர்  கேப்டன் ஜி ஆர் கோபிநாத்   என்பதும்  எழுதிய Simply Fly என்ற தன் அனுபவ நூலை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்பதும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
    பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி தோல்விகளை சந்தித்தாலும்   பட்ஜெட் விமானப் பயணத்திற்கு வித்திட்டவர் என்ற வகையில்  சூரரைப்போற்று  படத்தின் மூலம் கேப்டன்  கோபிநாத்  நம் மனதில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தப்படத்தை பார்த்தபின்  அவரது வானமே எல்லை என்ற கோபிநாத்தின் சுய சரிதை  நூலைப் படிக்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வத்தின் காரணமாக படிக்கத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் தமிழில் B.R மகாதேவன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு அப்துல்கலாம் அவர்கள் முன்னுரை எழுதி  இருக்கிறார்.

   சுவாரசிய எழுத்து நடை சுவாரசியமான சம்பவங்கள் என ஒரு தேர்ந்த எழுத்தாளரின்படைப்பாக அமைந்துள்ளது ”வானமே எல்லை”. தேர்தலில் தேவகவுடாவுவை பிஜேபி சார்பில் எதிர்த்து நின்று தோற்றது சுவாரசியத்தில் ஒன்று.

     கேப்டன் கோபிநாத் ஒரு அசாதரண மனிதர். அவர் முயற்சித்துப் பார்க்காததே இல்லை என்று கூறும் அளவிற்கு பல துறைகளையும் தொட்டுப்பார்த்திருக்கிறார்.  

          என்னுரை என்று கோபிநாத் எழுதியதே இந்நூலின் சுருக்கமாக அமைந்து  ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. இலக்கியத்திலும் இயற்கை மீதும் ஆர்வம் உடைய கோபிநாத் தாகூர் ,வோர்ட்ஸ் வொர்த், சோமர்செட்  போன்ற கவிஞர்கள், அறிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளது அவரது நூலறிவை வெளிக்காட்டுகிறது.தொழிலதிபர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பது அதிசயம்தான்.

   கர்நாடகத்தில் ஹேமாவதி ஆற்றங்கரையில் உள்ள சிறு கிராமமான கொரூரில் பிறந்த கோபிநாத் சிறுவயதில் இருந்தே சாகசங்கள் நிகழ்த்துவதில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.  கோபிநாத்தின் தந்தை ஒரு ஆசிரியர். அவர் ஒரு விவசாயியாகவும் இருந்தார் என்று பெருமை கொள்கிறார் கோபிநாத்.   பிராம்மணராக இருந்தபோதும் செல்வாக்கும் செல்வ செழிப்பும்  ஏதும் இல்லை என்று கூறுகிறார். படேல் மற்றும் கவுடா இனத்தவரிடம்தான் அதிகாரமும் செல்வாக்கும் இருந்தது என்கிறார் கோபிநாத்.  கோபிநாத்துக்கு. 12 வயதில் ஷைனிக் பள்ளி எனப்படும் ராணுவப் பள்ளியில் சேர்ந்தார்.  படிப்பை முடித்து 15 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் கோபிநாத் தன் வேலையை இராஜினாமா செய்து விட்டார். அவரது இராணுவ அனுபவங்களும் சுவாரசியமானவை

          ஹேமாவதி ஆற்றின் குறுக்காக  அணை கட்டுவதற்காக இவரது பூர்வீக நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக  ஒரு வறண்ட நிலம் அளிக்கப் பட்டது. இராணுவத்தில் இருந்து திரும்பிய கோபிநாத் வறண்ட புல்வெளியில் கூடாரம் அடித்துத் தங்கினார். அடுத்த பல ஆண்டுகள் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வித்தியாசமான முயற்சிகளைச் செய்தார். விவசாயத்திற்காக அவர் போராடி மின்சாரம் பெற்றது ஒரு சாதனை  விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்தாலும் போதிய வருமானம் இன்மையால் வறுமையும் கடனும் அவருடனேயே இருந்தது. குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்

 பசுக்கள் வளர்த்தார் பால் வியாபாரம் செய்தார்.  கோழிப்பண்ணை நடத்தினார். பட்டுப்பூச்சி வளர்த்தார். மோட்டார் வாகன டீலராக இருந்தார் ஹோட்டல் நடத்தினார்,பங்கு சந்தை தரகராக இருந்தார். விவசாயக் கருவிகள் விற்றார். விவசாய ஆலோசகர் வேலையையும் அவர் விட்டு வைக்கவில்லை

  கடைசியாக பல தடைகளுக்குப் பின்  ஒரு விமான நிறுவனத்தின் தலைவரானார். முதலில்  டெக்கான் ஏவியேஷன் மற்றும் ஏர் டெக்கான் நிறுவனங்களைத் தொடங்கியபோது தன்னிடம் எல்லாம் இருந்தது போல் செயல்பட்டார்.  திடீர் போட்டியாளராக முளைத்த இவரை எதிர்கொள்ள சிரமப் பட்டனர் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவரை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். நண்பர்களாலும் உறவினர்களாலும் சக ஊழியர்களாலும்கூட  இவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை

  தன்னையே தன்னால் சமாளிக்க முடியவில்லை என சுய மதிப்பீடு செய்துகொள்ளும் கேப்டன், பொறுமையற்றவர், கோபக்காரர், சிறிய தவறுகளைக்கூடப் பொறுத்துக் கொள்ளாதவர் என்ற பெயரைத்தான் பெற்றிருந்தார்.  மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாத துன்பங்களைக் கொடுத்திருக்கிறேன் என்று கவலைப்படவும் செய்கிறார்.

  இன்னும் கொஞ்சம் நல்ல  கணவராக, தந்தையாக,மகனாக,நண்பராக முதலாளியாக இருந்திருக்கலாம் என்று ஆதங்கமும் கொள்கிறார்.இந்தப் புத்தகத்தில் குறிப்பிடாத பல நண்பர்கள் இக்கட்டான சமயங்களில் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று வருத்தம் தனக்கு இருப்பதாக குறிப்பிடுகிறார். நிறைகளோடு தன் குறைகளையும் கூறத் தயங்காதது கேப்டனின் சிறப்பு.

  ராணுவத்திலிருந்து ஒய்வு பெறும்போது  வெறும்  ரூபாய் 6000 மட்டுமே செட்டில்மெண்ட் பெற்ற ஒருவர் மிகப் பெரிய மூலதனம் தேவைப்படும் விமானத் துறையில் எப்படி சாதித்தார் என்பது சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்.

  ”நீங்கள் இளைஞரா?  வித்தியாசமாக எதையாவது சாதிக்க விரும்புகிறீர்களா? கடுமையாகப் போராடுகிறீர்களா? அடிமேல் அடி விழுகிறதா? பலரால் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்களா? தடைகளை யெல்லாம் தகர்த்தெறிந்து முன்னேற முயற்சி செய்கிறீர்களா? உங்களுக்கு இந்த நூல் ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும். ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறுகிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே பின்பற்ற முயலாதீர்கள். தனி வழியை உங்களுக்காக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள் புதிய தனித்துவமான சாதனையை படைத்துக் காட்டுங்கள். மற்றவர்கள் இப்புத்தகத்தை  வெறுமனே படித்து மகிழ்ச்சி அடையுங்கள்” என்று முன்னுரையை முடிக்கிறார்

  மேலே குறிப்பிட்டவை அனைத்தும் முன்னுரையில் குறிப்பிடப்பட்டவையே. முன்னுரையே சுவாரசியமாக இருக்கிறது அல்லவா?.
சூரரைப் போற்று படம்  கேப்டன் கோபிநாத்தின் கதையாக இருந்தாலும்   சினிமாவிற்காக கற்பனை கலந்து கதை கொடுக்கப் பட்டிருக்கிறது, படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது உண்மைக் கதை என்று மெய்ப்பிக்க உதவுகிறது.

  நிஜக்கதை திரைப்படத்தைவிட சுவாரசியமாகவே இருக்கிறது என்பதும் உண்மை

----------------------------------------

முந்தைய பதிவு

குமுதத்தில் என் கதை -நியாயம்



செவ்வாய், 17 நவம்பர், 2020

குமுதத்தில் என் கதை -நியாயம்

 


   நீண்ட  நாட்களுக்குப் பிறகு குமுதம்  25.11.2020 தேதியிட்டு இதழில் என்  ஒரு  பக்கக்  கதை "நியாயங்கள்    பிரசுரமாகி உள்ளது.  அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகி இருப்பது ஆச்சர்யம்தான். இதுவரை வெளியான எனது கதைகள் அதிகபட்சம் 3 வாரங்களுக்குள் வெளியிடபட்டுள்ளது. 4 வாரங்கள் ஆகிவிட்டால் வராது என்று  தெரிந்து கொள்ளலாம்.  குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி  இதற்கு முன்பு குமுதத்தில்  ஒரு சிறுகதையும்  சில ஒரு பக்க கதைகளும் வெளியானது . மிக விரைவாக பரிசீலிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் குமுதத்திற்கு  நன்றி 

இதோ கதை 

நியாயங்கள்

                                                                                        டி.என்.முரளிதரன்

          அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிறையப்பேர் காத்துக் கொண்டிருந்தனர். நேரம் கடந்ததே தவிர பேருந்துகள் நிற்காமல் சென்றன. காத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பொறுமை இழந்து  கத்த ஆரம்பித்து விட்டார்.

       என்ன இது எந்த பஸ்ஸும் நிறுத்தாம போறான். இந்த ஸ்டாப்ல நிக்கறவன் எவனும் மனுஷனா தெரியலயா? அநியாயமா இருக்கேசும்மாவா ஏத்திக்கிட்டுப் போகப்போறான். காசு குடுத்துத்தானே போகப் போறோம்?”

    இங்க ஒயிட் போர்டு பஸ்தான் நிக்கும், மஞ்ச போர்டெல்லாம் நிக்காதுஎன்றார் இன்னொருவர்

பஸ் காலியாத்தான போகுது. நிறுத்தி ஏத்திக்கிட்டா என்ன குறைஞ்சா போயிடும்?. நாமளும் ஆஃபீஸ் போக  வேண்டாமா?. ஆஃபீஸ் நேரத்தில எல்லா பஸ்ஸும் இப்படியே வந்தா எப்படி?......”  கோபத்துடன் தொடர்ந்தார்.

        மஞ்சள் போர்டு பஸ்தான் வந்தது. ஆனாலும் நிறுத்தி ஏற்றிக் கொண்டார் டிரைவர். அவர் ரொம்ப நல்லவர்  போலிருக்கிறது. அடுத்தடுத்த எல்லா நிறுத்தத்திலும் பஸ்ஸை நிறுத்தி மக்களை ஏற்றிக் கொண்டார்.
        இது என்ன அநியாயமா இருக்கே. மஞ்ச போர்டு போட்டுட்டு எல்லா ஸ்டாப்லயும் நிறுத்தினா என்ன அர்த்தம்?. நாம நேரத்திற்கு ஆஃபீஸ் போக வேண்டாமா? காசு மட்டும் அதிகமா வாங்கறாங்க இல்ல?” என்று யாரோ சத்தம் போடும் குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.   சத்தம் போட்டவர், வேறு யாருமில்லை. பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கவில்லை என்று முன்பு பொங்கினாரே  அவரேதான்.

   -------------------
 
முந்தைய பதிவுகள்