என்னை கவனிப்பவர்கள்

சனி, 30 செப்டம்பர், 2017

ரஜினியிடம் பாடம் கற்பாரா டி.ராஜேந்தர்?


   டி.ராஜேந்தர் அவ்வப்போது பரபரப்பாக ஏதாவது பேசி தான் இருப்பதை காட்டிக் கொள்வார். அடுக்கு மொழி பேசி நம்மையும்  கொல்வார். அவரது அடுக்கு மொழியை இன்னும் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை  என்னவென்று சொல்வது.  அவரது தற்பெருமை பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்கு அலுத்துப் போய்விட்டது என்றாலும் அவர் விடுவதில்லை. தன்னை கோமாளியாக பலரும் பார்ப்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா  என்று தெரியவில்லை. உலகத்திலேயே மிகச சிறந்த திறமை சாலி  தான்தான் என்று உண்மையாகவே நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். இளையவர்களுக்கு தன் நடத்தை மூலம் வழி  காட்ட  வேண்டியவர் அவர்கள் வெறுக்கும் அளவுக்கு பெயரைக் கெடுத்துக்  கொள்ளத் தவறுவது இல்லை. 

   இவரது சமீபத்திய பரபரப்பு நடிகை தன்ஷிகாவை அழ வைத்தது. "விழித்திரு" ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகை  தன்ஷிகா( கபாலியில் ரஜினியுடன்  நடித்தவர்) மேடையில் உள்ளோர் அனைவரையும் பற்றி  பேசியவர் அவரது போதாத காலம்  டி.ராஜேந்தரைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டார். பின்னர் மைக்கைப்பிடித்த டி. ராஜேந்தர் சபை நாகரீகம் கற்றுத் தருவதாக சொல்லி தான் நாகரிகத்தை மறந்து தன்சிகாவை காய்ச்சி எடுத்து விட்டார். ரஜினி படத்தில் நடித்ததால்  என்னை மறந்து விட்டார் என்றார். தவறை உணர்ந்த தன்ஷிகா காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டும் விடாமல் வெறி பிடித்தவர் போல சாடியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியதை அறியாமல் தொடர்ந்தார். உங்கள் மேல் நான் மதிப்பு வைத்திருக்கிறேன். என்று குறுக்கிட்டு சொன்ன தன்ஷிகாவை 'உன்னுடைய  மதிப்பை கொண்டு எந்த மார்க்கெட்ல விக்கப் போறேன்' நீ சொல்லிதான் நான் வாழனும்னு அவசியம் இல்லை.' என்று மேலும் தாக்கினார்.  மீண்டும் சமாதானம் சொல்லியும்  அதை ஒப்புக்கேனும் ஏற்கவில்லை  ஓரளவுக்கு மேல் தாங்க இயலாத தன்ஷிகா அழ ஆரம்பித்து விட்டார். 
    மூத்த கலைஞர்  டி.ராஜேந்தரின் இப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரவித்துள்ளனர். ரஜினியின் மீது  பொறாமை கொண்டாற்போல் பேசிய டி.ஆர்,  ரஜினியிடம்  இருந்து பாடம் கற்க வேண்டும். 

   எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பேசினார் . அப்போது படத்தின் தயாரிப்பாளர் , இயக்குனர் சங்கர், ஏ.ஆர்.ரகுமான் , அதில் பணியாற்றிய கலைஞர்கள் ஆடியன்ஸ் உள்ளிட்ட  அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்த ஐஸ்வர்யா ராய்  ரஜினியை மறந்துவிட்டு பேச்சை முடித்து விட்டார். மேடையில் இருந்து இறங்கு முன் சட்டென்று நினைவுக்கு வதவராக மீண்டும் வந்து நன்றி கூறினார். ரஜினி அதை தவறாகக் கருதவில்லை. தன்னைத் தூற்றுபவரையும் தன் வசப் படுத்தும் பண்பு அவரிடத்தில் இருந்தது. ஜெயலலிதாவுக்காக தேர்தல் மேடைகளில் தன்னை கண்டபடி தூற்றிய மனோரமாவைக் கூப்பிட்டு தன் படத்தில் நடிக்க வைத்தார்.ஒரு வேளை அது விளம்பரத்திற்காகவே செய்திருந்தாலும் பாதகமில்லை. .
 ஐஸ்வர்யா  ராய் ரஜினியை மறந்த வீடியோ 



டி.ராஜேந்தர் தான் ஒரு வாசமில்லா பெருங்காய டப்பி என்பதை உணர்ந்தால் நல்லது.

இவரது பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டு அம்மணி சொன்னது " அஞ்சு நிமிஷம்  பேச்சை கேட்டதுக்கே இப்படி இருக்கே . பாவம்  உஷா  "