என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மன்னன் என்ன சொன்னான்? பாலகுமாரன் கவிதை.




குதிரை வளர்ப்பீர் கவிதையின் தொடர்ச்சி 
முன் பகுதியை படிக்.இதோ 
குதிரை வளர்ப்பீர்!-பாலகுமரன் கவிதைகள்-பகுதி 7 
(முன் பகுதியைப் படித்தால் இப்பகுதி இன்னும் சுவைக்கும்)
   முன் பகுதியின்   சுருக்கத்தை பார்த்துவிட்டு தொடர்வோம். மன்னன் ஒருவன் நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் குதிரை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டான். இதை மறுப்பவர்கள் தேசத்தின் எதிரிகள்.மீறுபவர்கள் வெளியேற்றப் படுவர் என்று பறை அறிவித்தான். 

   மக்கள் புலம்ப ஆரம்பித்தனர். இவன் என்ன குதிரை வெறியனாக இருக்கிறானே.குதிரை வளர்ப்பது எளிதா என்ன? என்று பேச ஆரம்பித்தனர்.
    பார்ப்பனர்கள்  மன்னனிடம் சென்று தங்கள் இனத்திற்கு குதிரை வளர்ப்பது ஒவ்வாது என்றுரைத்தனர். மன்னும் ஏற்றுக்கொண்டு விலக்களித்தான்

   பின்னர் வணிகர்களும் கொல்லர்களும் சென்று தங்கள் வாழ்க்கைக்கு குதிரைகள் உதவாது என்று விவரித்து விளக்களிக்குமாறு கேட்டனர் மன்னனும் சம்மதித்தான்.

   விவசாயம் பிற  தொழில் செய்வோரும் குதிரை வளர்ப்பை கைவிடுமாறு மன்னனிடம் கோரினர். மன்னனும் நீங்கள் செல்லுங்கள் படை வீரர்கள் குதிரை வளர்ப்பார்கள் என்றான். படை வீரர்களோ குதிரைகள் வேண்டாம் அதற்குப் பதிலாக யானை வளர்க்க ஆணை இடுங்கள் . என்று அவர்கள் பங்குக்கு கருத்தை உரைத்தனர்.

    யோசித்த மன்னன் அடுத்த நாள் அனைவரும் சபையில் கூட ஆணை பிறப்பித்தான். திரண்டு  வந்திருந்த அனைவரின் முன்னிலையில் மன்னன் உரத்த குரலில்  பேச ஆரம்பித்தான்.

   பாலகுமாரனின் இரும்புக் குதிரைகளில் விஸ்வநாதன் சொல்வதாக அமைக்கப் பட்டுள்ள இந்தக்  கவிதை பல்வேறு சிந்தனைகளை தூண்டியது.
   குதிரையை  மனித வாழ்க்கையோடு தொடர்பு படுத்தும் இக்கவிதை  உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.

இதோ அவனது பேச்சை பாலகுமாரனின் கவிதையாகக் காண்போம்
            
     கல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி 
      கைவழியே மொழிவளரும் காலம் தோன்றி 
     கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில் 
     ஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான் 
     வீட்டிற்கொரு குதிரை வளர்க்க வேண்டும் 
 ......................................................................................................
........................................................................................................
.......................................................................................................
.......................................................................................................
     பேரரசன்  யோசித்தான் கவலை சூழ 
     கையசைத்தான் மற்றவர்கள் கலைந்துபோக 
     மறுநாளேசபை கூட்டி எழுந்து நின்று 
     பெருமன்னன்  குரல் செருமிப் பேசலானான்

     குதிரை என்று சொன்னது விளங்கா மக்காள் 
     புரவியதன் மகிமையதைத் தெரியா சனமே 
     வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று 
     நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர் 
     குதிரையதை சபை நடுவே நிறுத்திப் பாரும் 
     உடல் முழுதும் கை தடவி உணர்ந்துபாரும்
     எவ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு 
     எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு 
     கண்மூடி நின்றாலும் காதுகள் கேட்கும் 
     காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும்
     உடல் வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
     குதிரை குணம் கொண்டோர் உயர்ந்தோர் ஆவார்.
 
     போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல 
     மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல
     பெருவாழ்க்கை தன்னை நோக்கி காலம் போகும் 
     தன்மையினை போர்ன்றேன் வேறொன்றில்லை 
     புரியாத மக்காள் என் மந்தை ஆடே
     உமக்கிங்கே  அரசனாக வெட்கம் கொண்டேன்.
     வெறும் பதரை கோல்பிடித்து காப்போர் உண்டோ?
     உணர்வில்லா மக்களுக்கு அரசன் கேடா?
     ஒரு  காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
     குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும் 
     குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
     விரல் நுனியால் விசையறிந்து வேகம் காட்டும்
     உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
     ஊர் விட்டு ஊர் போக கருவியாகி 
     விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும் 
     குதிரையே  முன்னின்று நடத்தும் கண்டீர்!
 
     பல்வேறு  ரூபத்தில் மனிதர் முன்னே 
     குதிரைஎனும் பெருவுணர்வே கைகொடுக்கும் 
     கால்நடையில் ஆடுகளே செல்வம் என்ற 
     மக்களிடம் மன்னனென  இருத்தல் வேண்டாம் 
     பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து 
     குதிரையிது வீணையிலே வேதம் பேசும் 
     காலத்தை  என்னுள்ளே இன்றே கண்டேன்.
     போய்வருவேன் என்மக்காள்  விடை கொடுப்பீர் 
     உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான் 
     பெருமன்னன் வாள்  வீசி தலை  துணித்தான் 
     கவியென்னும்  குதிரையதன் ஆட்சியின்று 
     கண் திறக்கத்துவங்கி விட்ட நேரம் கண்டோம்
 
     தலை துணித்த பெருமன்னன் வருவான் மீண்டும் 
     முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு 
     குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர் 
     குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார் 
     கவியென்ற குதிரை தன்  ஆட்சி துவங்கும் 
     மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும் 
     யாகங்கள் பூஜைகள் பூர்த்தி செய்யா
     சிநேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும் 
     குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும் 
     குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும் 
     குதிரைகள் ஞானத்தை  என்னுள் கண்டேன் 
     கலி என்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன். 

                  ************************ 
குதிரைக்  கவிதைகளின் கடைசிக் கவிதை விரைவில்
                      **************
உங்கள் கருத்தறிய ஆவல்!
       
இதையும்  படியுங்க!

************************* 


 

புதன், 29 ஆகஸ்ட், 2012

சிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது


சிந்தித்தவை .

  சிறிய அளவில் எளிமையாக நடத்தப் பட இருந்த பதிவர் சந்திப்பு பிரம்மாண்டமாக 26.08.2012 அன்று  நடந்தேறியதை பற்றி பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. டிஸ்கவரி பேலசில் முளைத்த சிந்தனை உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைப்பட வேண்டும் என்பதே அனைவரும் ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்டவர் புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள். ஈரோடு கோயம்பத்தூர் என்று பதிவுகள் சந்திப்புகள் நடந்தாலும் தலைமை இடமான சென்னையில் பெரிய அளவில் பதிவர் சந்திப்பு நடைபெற்றதில்லை என்று கூறப்பட்டது. அந்தக் குறையை போக்கும் வண்ணம் தமிழ்ப் பதிவுலகமே திரண்டு வருகை தர வைக்க  என்னவெல்லாம் செய்யலாம் என்று இரவும் பகலும் சிந்தித்து திட்டமிட்டனர். விழா நடத்துவதற்கு தேவையான நிதி இடவசதி இன்னும் எழக்கூடிய பல்வேறு சிக்கல்கள் இவற்றையும் கருத்தில் கொண்டு புலவர்  ராமானுஜம் அவர்களின் ஆலோசனையோடு தூரிகையின் தூறல் மதுமதி, பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார்,வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ் ,மெட்ராஸ் பவன்  சிவகுமார்,அஞ்சா நெஞ்சன் உள்ளிட்ட பலரும்  தங்கள் சொந்தப் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு விழாப் பணியில் ஈடுபட்டனர்..அனைவரும் சென்னையில் நடத்தினாலும் மற்ற தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள பதிவர்கள், பழைய புகழ் பெற்ற பதிவர்கள் எந்த விதத்திலும் வருத்தமடைந்து விடக் கூடாது என்ற சிந்தனையுடனே செயல் பட்டனர்.அதில் வெற்றியும் கண்டனர் 

   அமைப்பு ரீதியாக செயல் படுவதில் என்ன நன்மை?எந்த நோக்கத்திற்காக?

   தனிப்பட்ட ஒருவருக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் புதிய பதிவர்களை உருவாக்காலாம்.அவர்களுக்கு வழி காட்டலாம். இயன்ற சமுதாய நற்பணிகளை செய்யலாம்.ஒருவர் தனியாக செய்வதை விட அனைவரும் சேர்ந்து செய்தால் சற்று பெரிய அளவில் செய்ய முடியும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி எழுதுவதை தவிர்த்து நமக்கு நாமே வரையறை செய்து கொள்ள முடியும்.தமிழ் மென்பொருள்கள் குறிப்பாக எழுத்துருக்கள்  தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.இதன் மூலம் கூகுள் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களையும் நம்மை கவனிக்க வைக்க முடியும்.நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நம்மாலான பணிகளை ஒன்று சேர்ந்து செய்ய முடியும். பத்திரிகைகள் பதிவுலகை கவனித்து வருவது குறிப்பிடத்த தக்கது. பல எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர இயலும்.ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த முடியும்.தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

சந்தித்தவை 

       ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. பதிவர்களின் எழுத்துக்களை மட்டுமே பார்த்த நான் அவற்றை எழுதியவர்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எல்லோருக்கும் அவரவர் பெயர் வலைப் பதிவின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டையை கொடுத்து அசத்தினர். ஒரு சிலர் சட்டையில் மாட்டி இருந்த அடையாள அட்டையை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர். தனக்கு பரிச்சியமான வலைப்பதிவாக இருந்தால் அறிமுகப் படுத்திகொண்டு பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும்படி இருந்தது.  சிலரை புகைப் படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் வித்தியாசம் இருந்தது. திண்டுக்கல் தனபாலன் நேரிலும் புகைப் படத்திலும் ஒரே மாதிரியாக அழகாக இருந்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணிசாரைப் பார்த்து என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். முரளிதரன்னு இன்னொருத்தரும் இருக்காரே என்றார். அது நான்தான் என்று சொல்ல,வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன்  என்றார்.

   வசந்த மண்டபம் மகேந்திரன்,மூத்த பதிவர் நடன சபாபதி அவர்கள் , வலைச்சரம் சீனா அவர்கள் , சிபி செந்தில்குமார்  மற்றும் பலரையும் முதன் முதலாக  சந்தித்து பேசியது மகழ்ச்சி அளித்தது. +2 மாணவன் போல இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்தான் ஃ பிலாசபி பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன்.அவர் பலபேரால் அறியப்பட்டிருந்தார். கடற்கரை விஜயனும் கல்லூரி மாணவர் போலவே இருந்தார். ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் பதிவர் ஸ்டார்  அந்தஸ்துடன்  வலம்  வந்தனர்.

   தமிழ்வாசி பிரகாஷ் பேரைக் கேள்விப் பட்டிருந்த நான் அவர் நடுத்த வயதுடையவராக இருப்பார் என்று நினைத்தேன்.அவர் இளைஞராக வந்து நின்றார். டீன் வயது முதல் டி வயதுகள்  வரை பலதரப்பட்டவர்  பதிவர்களாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. பெண் பதிவர்கள்  பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. 

  மூத்த பதிவர்கள் இந்த வயதில் கணினியைக் கையாண்டு இளைஞர்களுக்கு இணையாக பதிவுகள் மூலம் நிரூபித்திருப்பது உண்மையிலேயே பாரட்டப் படவேண்டிய ஒன்றுதான். சந்தித்தவை எல்லாம் சந்தோஷத்தையே தந்தது.

தித்தித்தவை   ;

1. இனிமையான வரவேற்பு  மகிழ்ச்சி அளித்தது 
2. பதிவர்  அறிமுகம் பாந்தமாய் இருந்தது 
3.  சுவையான மதிய உணவு  நெஞ்சில் நின்றது
4. சுரேகாவின் தொகுப்பு  சொக்க வைப்பதாக இருந்தது 
5. பட்டுக்கோட்டை பிரபாகரின் பேச்சு பிரமாதமாக இருந்தது
6. சரியான நேரத்தில் தேநீர்,மற்றும் காபி, நினைத்துப் பார்க்க வைத்தது 
7. மாலை போண்டோ ருசித்தது 
8. தென்றல் சசிகலாவின் நூல் வெளியீடு இதமாய் இருந்தது 
9. கவியரங்கம் , குறிப்பாக மருத்துவர் மயிலனின்  கவிதை, லதானந்த்   அவர்களின் நகம்  பற்றிய கவிதை கைதட்ட  வைத்தது.
10 மக்கள் சந்தையின் போட்டி அறிவிப்பு மனதைக் கவர்ந்தது.

   மொத்தத்தில் அடுத்த பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது . 

  இந்த விழாவிற்காக பாடுப்பட்ட பதிவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அத்தனை பேருக்கும் தமிழ்ப் பதிவுலகம் சார்பில் பலமாக நன்றிகள்  உரைப்போம்.
   
                                *****************
இதைப் படித்தீர்களா?


திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பதிவர் சந்திப்பால் ஏமாற்றம்


என்னோட ரசிகர்கள்தான் சார்! நம்புங்க! (புகைப்படம்  அனுப்பியவர் திரு மோகன்குமார்)
    பின்ன என்ன சார்! நீங்களே நியாயத்தை சொல்லுங்க. நான் 20 ந் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவரா இருக்கேன். இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான்!
   நானும் முதல் அதிர்ச்சி செய்திய வெளிட்டப்ப  அதை ஹிட்டாக்கினீங்க. அப்புறம்  நான் கழுதை ன்னு (அதுதான் ஏற்கனேவே தெரியுமேன்னு சொன்னீங்க) ஒருபதிவைப் போட்டேன். சரின்னு சொல்லி நீங்களும் அந்தக் கழுதைய, சாரி! கவிதைய போனாப் போகட்டும் ரொம்ப நல்ல கழுதை ன்னு பாராட்டினீங்க.அதையும் நான் உண்மைன்னு நினச்சு வடிவேலு வாங்கிய கழுதைன்னு இன்னொரு பதிவைப் போட்டேன்.அதையும் நீங்க ஹிட் ஆக்கினீங்க 
  
  வாருங்கள்!வரலாற்றில் இடம் பெறலாம்!.   ன்னு பதிவப் போட்டு கூப்பிட்டேன். நீங்களும் மொத்தமா கிளம்ப ஆரம்பிச்சீங்க. அதுக்கப்புறம் சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள் பதிவை எழுதினேன். சுஜாதா ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாலும் நிறையப் பேர் அதை படிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆவலுடன் அந்தரங்கம்னு அடுத்த பதிவை வெளியிட அதையும் ஆவலாத்தான் பாத்தீங்க!
    அப்புறம் முன்னணிப் பதிவர்களின் அலக்சா  தர வரிசை பின்னிலை ஏன்?அப்படின்னு பதிவைப் பாத்துட்டு இவனுக்கு ஏன் இந்த தொழில் நுட்ப பதிவு ஆசைன்னு கேட்டாலும், சரி பரவாயில்ல;  ஏதோ சுமாரா இருக்குன்னு ஒத்துக்கிட்டீங்க.

 அதுக்குள்ள 26 தேதி வந்துடுச்சா.பதிவர் திருவிழாவுக்கு போகணும்னு காலையில சீக்கிரம் எழுந்து ஒரு பதிவ போடலாமேன்னு மேகம் எனக்கொரு கவிதை தரும்  கவிதையைப் போட்டுட்டு (வித்தியாசமா பண்ணறேன்னு நினச்சி கட்டம் கட்டி கவிதை போட்டேன்) கிளம்பிட்டேன். சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா ஏமாந்திட்டேன் சார்! ஏமாந்துட்டேன்.
 
   நீ எல்லாம் எதுக்குடா கவிதை எழுதறன்னு கேக்காம கேட்டுட்டாங்க சார்!

  சரி இவ்வளவு நாள் எப்படி சகிச்சிட்டாங்கன்னு ஆராய்ச்சி பண்ணப்பதான் தெரிஞ்சுது என்பதிவைப்  பாக்கறவங்கல்லாம்  பதிவர் திருவிழாவுக்கு வந்துட்டங்கன்னு. அத்தனை பேரும் அங்க வந்துட்டதால (என்னா கூட்டம்! பார்க்க படம்) என்  கவிதைய படிக்கறதுக்கு ஆளில்லாம போச்சு சார். இதுவும் பத்தாதுன்னு இணையத்துலநேரடி ஒளிபாப்பு வேற. எப்படி என் பதிவு பக்கம் வருவாங்க! அதுவும் இல்லாம அங்க கவியரங்கத்தில கவிதை வேற வாசிச்சிட்டனா  இனிமே நம்ம பக்கம் வருவாங்களான்னு சந்தேகமாயிடுச்சி  சார்!

   இப்ப சொல்லுங்க எனக்கு நேத்து (26.08.2012) ஏமாற்றம் ஏற்பட்டதுக்கு  காரணம் இந்தப் பதிவர் திருவிழாதான் சார்! 

  ஆனா ஒண்னு சார்! இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க. இன்னொரு முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரி பிரம்மாண்ட திருவிழா வரும்போது பதிவு எதுவும் போடக் கூடாது. குறிப்பா கவிதையை போட்டு ஏமாறக் கூடாதுன்னு.

என்ன சார்! நான் சொல்றது சரிதானே!

********************************************************

  நன்றி!
  கடந்த ஒரு வாரமாக தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக பதிவுகளை இடும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. எட்டு பதிவுகள் மட்டுமே இட முடிந்தது. கடந்த ஒரு வாரமாக இதுவரை இல்லாத அளவிற்கு என் வலைப்பக்கத்திற்கு மூன்று மடங்கு அதிக பார்வையாளர்கள் வந்ததற்கு முக்கிய காரணம் தமிழ்மணமே.இந்த அங்கீகாரத்தை  நல்கிய தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இவ்வாய்ப்பை பெருவதற்கு   முக்கியக்  காரணமாக இருந்தவர்    திரு கோவி.கண்ணன் அவர்கள். முன்பின் தெரியாத என்னை  அவர் தமிழ்மணத்திற்கு பரிந்துரை செய்ததால்தான் இந்த அரிய  வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பதிவுகளை படித்து கருத்தளித்து  வாக்கிட்டு,ஆலோசனை வழங்கியவர்களுக்கும்  பிற பார்வையாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
   இந்த ஒரு வாரம் என் பதிவுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வாரம். 

மீண்டும் சந்திப்போம்.

*****************************************



ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மேகம் எனக்கொரு கவிதை தரும்

மேகங்கள்
மேகங்கள்
வெண்ணிலவு காயவைத்த
கைக்குட்டைகள்


மேகங்கள்
மழை நூல்
நூற்கும்
பஞ்சுகள்

மேகங்கள்
விண்கடலில்
மிதக்கும்
வெண்படகுகள்



மேகங்கள்
இடி இசையை
உருவாக்கும்
இசைக்கருவிகள்


மேகங்கள்
மின்னல்
உற்பத்தி செய்யும்
மின்னாலைகள்



மேகங்கள்
கருணையின்
உருவகங்கள்
மேகங்கள்
வெய்யிலை தடுக்கும்
வெண்கொற்றக்
குடைகள்

மேகங்கள்
காற்றின் திசையில்
பறக்கும்
நூலில்லா காற்றாடிகள்

மேகங்கள்
பூமிப் பந்தின்
பறக்கும்
போர்வைகள்


மேகங்கள்
நினைத்த
உருவமாய்
காட்சி அளிக்கும்
அற்புதங்கள்

மேகங்கள்
கன்னியரின்
கவர்ச்சி மிகு
கார் குழல்கள் 

 
மேகங்கள்
காதலுக்கு
தூது செல்லும்
வெண் புறாக்கள்

மேகங்கள்
மழைத் துளியை
சுமந்து செல்லும்
விமானங்கள்
   

 மேகங்கள்
 மலைச் சிகரங்களை
 முட்டிபார்க்கும்
வெண்பட்டுப்
பறவைகள்
            மேகங்கள்
   இயற்கை வரைந்த 
கருப்பு வெள்ளை 
ஓவியங்கள் 

மேகங்கள்
காலம் காலமாய்
கவிஞர்களின்
கற்பனைக்கு
தீனிபோடும் 
 கருப்பொருள்கள்

வாழ்க மேகங்கள்!
வளர்க மேகங்கள்!


































































































































































இதைப் படிச்சாச்சா?
                            
வடிவேலு வாங்கிய கழுதை



.நான் கழுதை 


முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்? 

  ********************
உங்கள் கருத்துக்களை தவறாது தயங்காது  சொல்வீர்!