என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 10 மே, 2015

மக்களின் முதல்வர் யார்?

                


                 அன்னையர் தின வாழ்த்துகள் 


                 'பண்'ணையே படைத்து சிறந்தால்
                          பாக்களின் முதல்வ ராவார்
                  மண்ணையே ஆள்வோர் சிலரோ
                           தேர்தலால் முதல்வ ராவார்
                  தன்னையே வருத்திப் பெற்ற
                            பிள்ளையைக் காக்கும் நல்ல
                  அன்னையே என்றும் அவரவர்
                              மக்களின் முதல் வராவார் 

தலைப்பை வேறுமாதிரியாக நினைத்து வந்தவர்கள் மன்னிக்கவும்.இது முழுக்க முழுக்க  உண்மையாக அன்னையர் தினத்துக்காக எழுதப்பட்ட கவிதைதாங்க. தொடர்ந்து அன்னையின் அருமையைப் படிங்க 


                 சொல்லவே முடியாத் துயரில்
                      சோர்ந்தே விழுந்த போதும் 
                  மெல்ல எடுத் தணைத்து
                       மழலையை  இதமாய்த் தூக்கி 
                  வெல்லக் கட்டி என்றும்
                         வேங்கையின் மகனே என்றும்
                  செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
                        சேயினைக் காப்பாள் அன்றோ?            

                   காலை  எழுந்த  உடன்
                          கடிகாரம் கடிது ஓட
                   சேலையை சரியாய்க்  கட்ட
                          சிறிதுமே நேரமும் இன்றி
                   வேலை செய்து கொண்டே
                          விரைவாய் இடையில் வந்து
                    பாலை வாயில் இட்டு
                            பக்குவமாய்  சுவைக்க வைப்பாள்        

                     சத்துணவு நமக்கே தந்து
                            சுவையுணவு  மறந்த போதும்
                     பத்தியம் பலவா றிருந்து
                              பகலிரவாய் விழித்த போதும்
                      நித்திய வாழ்க்கை தன்னில்
                              நிம்மதி இழந்த போதும்
                      சத்தியத்  தாய் தன் அன்பில்
                             சரித்திரம்  படைத்து நிற்பாள்        

                     
                       பேய்க்குணம் கொண்டே பிள்ளை
                                பெருந்துயர் தந்திட் டாலும் 
                       சேய்க்குணம் சிறிதும் இன்றி
                                சிறுமையை அளித்திட் டாலும்
                        நாய்க்குணம் மனதில் கொண்டே
                                நல்லன மறந்திட் டாலும்
                        தாய்க்குணம்  மாறா தம்மா
                                 தரணியில் உயர்ந்த தம்மா!                

                      பச்சிளம் பாலகன் தன்னை
                             அம்மா என்றழைக்கும் போதும்
                      அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
                             அறிஞனாய் ஆகும் போதும்
                      மெச்சி அவன் புகழை
                               மேலோர்கள் சொல்லும் போதும்
                       உச்சியே குளிர்ந்து போவாள்
                                உவகையில் திளைத்து நிற்பாள்        

                        விண்ணைத் தொடும் அளவு
                               வளர்ந்திட்ட தென்னை போல்
                        என்னையே எடுத்துக் கொள்
                                என்றீயும்   வாழை     போல்
                        தன்னையே நினையா நெஞ்சம்
                                தன்னலம் பாரா நெஞ்சம்
                        அன்னையின் அன்பு நெஞ்சம்
                               அவனியில் இதை எது மிஞ்சும்?       





*********************************************************************************

சனி, 2 மே, 2015

என்னடா இது! ஒண்ணும் நடக்கலையேன்னு நினச்சேன் நடந்துடுச்சி-400 வது பதிவு

பதிவை படிக்க பொறுமை இல்லாதவங்க 
 படத்தை உத்து பாத்துகிட்டே இருங்க! 
பாக்க பொறுமை இல்லாதவங்க பதிவை படியுங்க. 

400 வது பதிவு 
நேற்று பஸ் ஸ்டாண்டில் இரு கல்லூரி நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது  அதையே கொஞ்சம் கூட்டி கழிச்சி பெருக்கி வகுத்து  நானூறாவது பதிவா ஆக்கிவிட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள் 
**************************

"என்ன எதுக்குடா அவசரமா போன் பண்ணி வரவழச்ச? '

" மச்சி! இன்னைக்கு வரை என்னடா இது ஒண்ணும் நடக்கலையேன்னு நினைச்சேன். நடந்துடுச்சி "
"எதுக்குடா இந்த வடிவேலு வசனம்?  உங்கப்பா பாக்கெட் மணிய கட் பண்ணறேன்னு சொல்லிகிட்டிருந்தாருன்னு சொன்னியே. நிஜமாவே கட் பண்ணிட்டாரா? அடப்பாவி இனிமே தண்ணி, தம் அடிக்கறதுக்கு என் காசுதானா?
"அட அது இல்லடா "
"வேற ஏதடா சொல்ற ,நீ லவ் ப்ரபோஸ் பண்ண பொண்ணு செருப்பால அடிப்பேன்னு மிரட்டிகிட்டிருந்ததே. அடி வாங்கிட்டயா நீ முழிக்கறதப் பாத்தா அப்படித்தானே தெரியுது.நடந்துடுச்சு இல்ல? நல்லகாலம் நான் பக்கத்துல இல்ல. ஹஹா ஹ்ஹா

"டேய்......

"போன ரெண்டு  செமஸ்டர்ல அரியர்  இல்லாம பாஸ் ஆயிட்டேன்னு சந்தோஷப்பட்டுக் கிட்டிருந்தே . இந்த செமஸ்டர் அரியர் கன்பார்ம் ஆயிடுச்சி அதானே. அதெல்லாம் சகஜம்டா விட்டுத் தள்ளு. நம்மைப் பொறுத்தவரை எது நடக்கணுமோ அது நல்லாவே நடக்காது எது நடக்கக் கூடாதோ அதுவும் நல்லாவே நடக்கும் . அதான் நமக்கே தெரியுமே "
" டேய் டேய் "
"பேஸ் புக்ல ரொம்பநாளா மொக்க போட்டுக்கிட்டிருந்தயே  அந்த பொண்ணு உன்னை அன்பிரெண்ட் பண்ணிடுச்சு சரியா? பாவம்டா நீ அது என்ன ஸ்டேடஸ் போட்டாலும்  படிக்காம  சலிக்காம ஒரிஜினல் ஐ.டி.இலயம் ஃபேக் ஐடியிலும் லைக் போடுவியேடா.அது பத்தாம என் பாஸ்வோர்ட் வாங்கி வச்சுகிட்டு அத வேற யூஸ் பண்ணிக்கிட்டுருப்ப கவலைப் படாத  இன்னொரு பொண்ணு கிடைக்காமையா போய்டுவா" 

"நிறுத்தறியா? .

"நீ தண்ணி அடிச்சிகிட்டிருந்தப்ப உங்க பக்கத்து வீட்டு அங்கிள் பாத்துட்டார். போட்டுக்குடுத்துடுவார்னு பயந்து கிட்டிருந்தயே நிஜமாவே போட்டுக்குடுத்துட்டாரோ.  சான்சே இல்லையே. அவரும்தானே தண்ணி அடிச்சாரு. நீ போட்டுக் குடுத்துடுவியோன்னு பயந்த மாதிரிதானே போனார்!

"என்ன பேச விடப் போறயா  இல்லையா ?

"எதிர் வீட்டு எட்டாங்க்ளாஸ் பொண்ணு நீ போன்ல விடற பீட்டரை பாத்து இங்கிலீஷ்ல  லீவ் லெட்டர் எழுதிக் கொடுக்க சொல்லிடுச்சா? அதுக்குதான் சொன்னேன் போன்ல பேசும்போது வீட்டு வாசல்ல நின்னு பேசாதேன்னு சொன்னேன் . இப்ப மாட்டிக்கிட்டயா"

"கொஞ்சம் வாயை மூடறயா "

"அப்போ பர்சனல் விஷயம் இல்லையா 

" இருடா! நானே கண்டு பிடிக்கறேன் ஒரு மாசமா பி.எஸ்.என்.எல் பிராட் பேன்ட் ஒரு ப்ராப்ளம் இல்லாம வந்து ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தது இப்ப புட்டுகிச்சா . அதுக்குதான் வேற புரொவைடர் க்கு மாறுடான்னு சொன்னேன்"

"டேய் அத சொல்லலைடா "

"கலைஞர் ராமானுஜர் சீரியல் எழுதினது ஆத்திகர் ஆயிட்டாருன்னு பேசிக்கறாங்களே அதைத்தானே சொல்றே. அவரு மஞ்ச துண்டு போட்டப்பவே மாறிட்டாருன்னு சொல்றாங்களே"

நண்பன் முறைக்க அதை கண்டு கொள்ளாமல் 

"கண்டு புடிச்சுட்டேன்.வைரமுத்து ஜெயகாந்தன் கிட்ட பாராட்டுக்  கடிதம் வாங்கினாரே. அப்பவே டவுட்டா இருக்குன்னு சொன்ன. ஜெயகாந்தன் பொண்ணு அது சும்மான்னு சொல்லிட்டாங்களே .அதனால வைரமுத்து எல்லார் கிட்டயும் வாங்கி கட்டிகிட்டாரே . என்ன சரிதானே? "

"டேய் நிறுத்துடா!  நீபாட்டுக்கு பேசிகிட்டே போற.

"அதுவும் இல்லையா  என்னதாண்டா பின்னே நீயே சொல்லித் தொலை"

"ஹப்பா! இப்பயாவது என்ன சொல்ல விட்டயே! கமலஹாசனோட உத்தம வில்லன்  மே ஒண்ணாந்தேதி ரிலீஸ் ஆகுதேன்னு டிக்கெட் புக் பண்ணேன். இதுவரை ஒரு தடையும் இல்லாம ரிலீசாகப் போகுதுன்னு ஆச்சர்யப் பட்டுக் கிட்டே கிளம்பிப் போனேன் . என்னவோ பிரச்சனையாம் ரிலீசாகாதுன்னு சொல்லிட்டாங்கடா   என்னடா இது ஒண்ணும் நடக்கலியேன்னு நினச்சேன். நடந்துடுச்சிடா நடந்துடுச்சி. எங்க உத்தம வில்லனுக்கு எங்கிருந்துதான் புதுசு புதுசா வில்லனுங்க கிளம்பறாங்களோ?"

 "அடப் பாவி!  இதுக்கா என்ன வர சொன்ன?. படம் ரிலீஸ் ஆனா  எனக்கென்ன ஆகலேன்னா எனக்கென்ன?  என் சின்ன மூளைக்கு இவ்வளவோ வேலை குடுத்துட்டுனேடா..."

"  கொஞ்சம் இருடா  ஒரு வாட்ஸ் அப்ல  படம் ரிலீஸ் ஆகுதுன்னு மெசேஜ் வருது. நான் கிளம்பறேன் பை டா .....

........................................

   (சிரிப்பதற்காக  மட்டுமே! இப்பதிவு )

*******************************************************************

 எழுத ஆரம்பித்து  மூன்றரை ஆண்டுகள்  ஆகிவிட்டன. பலர் அனாயாசமாக 500பதிவுகளை கடந்திருக்கிறார்கள். நான் 100  பதிவைக் கூட தாண்ட மாட்டேன் என்று தான் நினைத்தேன். ஆனால் 400 பதிவுகள் எழுதிவிட்டது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. 
என்ன எழுதினாலும் சகித்துக் கொண்டு வருகை தந்து ஆதரவு தந்த நீங்கள்தான் இதற்கு முக்கிய காரணம். 10958 கருத்துரைகள் தந்திருக்கிறீர்களே. உங்களுக்கு நன்றி. வலையுலக நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 

                              தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டும் 
                                                        மூங்கில் காற்று 
                                                        டி.என்.முரளிதரன் 

வெள்ளி, 1 மே, 2015

பயன்படா மரங்கள் உண்டா?

 
     சமீபகாலமாக  சீமைக் கருவேல மரங்களை( வேலி காத்தான்)  முற்றிலுமாக அழித்திட வேண்டும் . அதனால் பயன் ஏதும் இல்லை  என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது மற்ற தாவரங்கள் வளர்வதற்கு தடையாக இருக்கிறது. கால்நடைகளுக்கு இதனால் பயன் இல்லை என்றெல்லாம்  வாதம் செய்யப்படுகிறது. இதற்கு மாற்றுக் கருத்தை பிரபல பதிவர் தமிழ் இளங்கோ அவர்கள் பதிவிட்டிருந்தார்.  அதைப் படிக்க 
    
  
அதேபோல  பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராமசாமி (தற்போது முக நூலில்  அசத்திக் கொண்டிருக்கிறார் ) ருவேலம் உண்மையில் கருங்காலியா...? பிரச்சாரங்களும் உண்மைகளும்....! என்ற பதிவில் விரிவான தகவல்களுடன்  மாற்றுக் கருத்தை 2012 லேயே பதிவு செய்திருக்கிறார் . சுவையான தகவலகளும் அனல் பறக்கும் வவ்வாலின் விவாதங்களும் காணப்படுகின்றன. விரும்புவோர்  மேற்கண்ட இணைப்பில் சென்று படிக்கலாம் 
     உலகில் பயன்படா மரங்கள், தாவரங்கள் என்று எதுவும் இல்லை. அது மனிதனுக்கு வேண்டுமானால் பயன்படாமல் இருக்கலாம் என்பது என் கருத்து 
  உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுமே மனிதனுக்கு பயன்படவேண்டும் என்று மனிதன் நினைக்கிறான். உலகம் மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமானது என்ற சுயநலம் கொண்டவனாக மனிதன் விளங்குகிறான். அவனுக்குப் பயன்படாது என்று நினைத்தால்   எதையும் அகற்றிவிடத் தயங்குவதில்லை  இந்த மனிதத் தன்மை  காரணமாகவே இயற்கை அழிந்து வருகிறது 
( மன்னிக்கவும்  மனிதனுக்கு மனிதன் காட்டும் இரக்கத்தை மட்டுமே மனிதத் தன்மை என்று குறிப்பிட்டுக்கொள்கிறான். மனிதனிடம் இருந்து தப்பிக்க முடியாத தாவரங்களோ , உயிரினமோ பொருட்களோ சிந்திக்கும் ஆற்றல் உடையதாக இருந்தால் என்ன நினைக்கும்?  பிறவற்றை அழிப்பதே மனிதகுணம் அதுவே மனிதனின் தன்மை என்றல்லவா நினைக்கும்? ) 

   அது போகட்டும் உண்மையில் நான் சொல்ல நினைத்தது மரங்களைப் பற்றிய ஒரு கவிதை பற்றி. ஒரு முறை எனது மகனின் பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வை வளர்க்க மாணவர்களுக்கிடையே ஒரு கவிதைப் போட்டி நடத்தினார்கள். என் மகனுக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது ஆச்சர்யம் . இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால் இதே கவிதையைத்தான் 10ம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளியில் நடந்த போட்டியில் எழுதி பரிசு பெற்றேன். ஆனா எங்க அப்பா அதை எழுதிக் கொடுக்கலை நானாத்தான் எழுதினேன் . ஹிஹிஹி  நம்புவீங்கதானே? 

இதோ அந்தக் கவிதை
      பயன்படா மரங்கள் 

              பூமிக்கு  அழகு சேர்க்கும் 
              அணிகலன் மரமேயாகும் 
              சாமிக்கும்   இடம் கொடுக்கும்  
               இயற்கையின் கொடையே ஆகும் 

              மண்ணுக்கு மழையைத் தருமே
              உலகுக்கு நிழலைத் தருமே
              கண்ணுக்கு குளிர்ச்சி தருமே
              உண்பதற்கு உணவு தருமே

              மலைகளுக்கு ஆடையாகும் 
              குயில்களுக்கு மேடையாகும்
              பறவைக்குக்  கூடு ஆகும்
              ஒரு சிலர்க்கு வீடும் ஆகும்
              
              விருந்தினர்  உணவுஉண்ண
              விரும்பியே இலைகள்கொடுக்கும்
              மருந்துகள்  பலவும் தந்து 
              மன்னுயிர் வாழச் செய்யும் 

              எரித்திட விறகைக் கொடுக்கும் 
              அரித்திடும் மண்ணைத் தடுக்கும்
              உண்ணவே கனிகள்  கொடுக்கும்
              உயிர்வளி காற்றில் சேர்க்கும்

              வெம்மையை தடுத்துக் காக்கும் 
              அசுத்தங்கள் எடுத்துக் கொள்ளும் 
              பலப்பல பொருட்கள் செய்ய 
              பணிவுடன் தன்னைக் கொடுக்கும்

              பயன்பெறும் மனிதர் மரத்தை 
              ஒருநாளும் நினைப்பதில்லை 
              சுயநல மனிதர் அவர்க்கு 
              இயற்கையின்  மன்னிப் பில்லை

              மக்கட்  பண்பில்லா மனிதர் 
              மரம்போலே ஆவாரென்று
              வான்புகழ் வள்ளுவன் ஏனோ
              வாய் தவறி சொன்னான் அன்று 

              பயன்படா மரங்கள் என்றும் 
              மண்ணிலே முளைத்ததில்லை 
              மடிந்தபின்னும் மனிதருக்குதவும் 
              மரங்களுக்கு இணையே இல்லை.

              மரங்களின்  மகிமை அறியா
              மனிதரில்  சிலபேர் தன்னை 
              பயன்படா மரங்கள் என்பேன் 
              மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.


இதுக்கா பரிசுன்னு கேக்கப் படாது . 

***********************************************************************
மேதின வாழ்த்துகள் 

 படிக்கலாம் 
இன்றாவது நினைத்துப் பார்