என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2

   
நான் நினைத்தது போலவே போதுமான அளவு வரவேற்பு கிடைத்த பதிவாக "எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?" அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும் நான் குறிப்பிட்டிருந்த எக்சல் சிக்கலுக்கு காரணத்தை சொல்லி விட்டனர். பாலாஜி, பொன்சந்தர் இருவரும் ஆர்வம் காரணமாக அதை எப்படி சரி செய்வது என்பதையும் சொல்லிவிட்டனர். அனைவருக்கும் நன்றி. உஷா அன்பரசு சொன்னது போல Excel பற்றி தேடுபவர்களுக்கு இதுபோன்றவை பயனளிக்கக் கூடும். அப்படி முந்தைய பதிவுகள் அவ்வப்போது சிலரால் தேடிப் பயன் பெறுவதை  அறிய முடிந்தது .

  இது மிக எளிமையானது பலரும் அறிந்தது என்பதில் ஐயமில்லை. கூடுதலாக ஒரே ஒரு விஷயத்தை சொல்லவே  இந்தப் பதிவை எழுதினேன். அதற்கு முன்னர் விடை தவறாக வருவதற்கான காரணத்தை  பார்க்கலாம்

படம் 1

எக்சல் தவறு செய்யாது என்பது உண்மை.எக்சல் கணக்கீடுகள் செய்யும்போது  மறைந்துள்ள தசம இலக்கங்களையும் சேர்த்துக் கொள்கிறது.இது அதன் இயல்பு நிலையில் அமைந்துள்ளது. கணக்கிடுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் செல்களில் முழுமையக்கப் பட்டதை எடுத்துக் கொள்ளாமல் தசம இலக்கங்களையும் சேர்த்துக் கூட்டி பின் கூடுதலை முழுமையாக்குகிறது. 

மேலுள்ள உதாரணத்தில் DA மற்றும் Total காலத்தில் உள்ள செல்களின் தசம இலக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.செல்லில் எத்தனை தசம இலக்கங்கள் தெரிய வேண்டும் என நாம் முடிவு செய்துகொள்ளலாம்.

படம் 2

சிவப்பு வட்டமிடப்பட்ட பட்டனைக் கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட செல்களில் உள்ள எண்களின் தசம இலக்கங்களின் எண்ணிக்கையை கூட்டவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம்.இடப்புறம் உள்ளது தசம இலக்கங்களை அதிகமாக்கும். வலப்புறம் உள்ளவை குறைத்துக் காட்டும். அந்த செல்களில் உள்ள எண் பார்முலா மூலம் கணக்கிடப் பட்டிருந்தால் கணக்கீடுகளில் அடிபடையில் தசம இலக்கங்கள் அமையும். மேலுள்ள எடுத்துக்காட்டில் இரண்டு தசம் இடங்கள் திருத்தமாக DA மற்றும் Total காலங்கள் அமைந்துள்ளது.  படம் 1 இல் தசம இலக்கங்கள் காட்டப் படாமல் மறைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் சேர்த்துக் கூடுதல் கணக்கிட்டுள்ளது EXCEL. 14232.40 ஐ முழுமையாக்கும்போது 0.40 விடப்பட்டு கணித வழக்கப் படி 14232 ஆக மாற்றப் படுகிறது.அதே போல கீழ் செல்லில் .10 ஐ விடுத்து 20666 ஆக முழுமைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டும் கூட்டப்டும் D4 செல்லில் முந்தைய செல்களின் தசம இலக்கங்களான .40 மற்றும் .10 கூட்டப்பட்டு .50 ஆக எடுத்துக் கொள்ளபடுகிறது. .50 அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால் அது 1 ஆக எடுத்துக் கொண்டு ஒன்றுத்தான இலக்கத்துடன் சேர்க்கப் பட்டுவிடுகிறது.  இதனால் 34898.50 என்பது 34899 ஆக கணக்கிடப்படுகிறது. 

இதை எப்படி சரி செய்வது. பின்னூட்டத்தில் சொன்னது போல round function ஐ பயன்படுத்துவது ஒருமுறை. பெரும்பாலும் நடைமுறைக் கணக்குகளில் சதவீதம் கணக்கிடப்படும்போதும்வகுத்தல் கணக்கீடுகளின்போதும் தசம பின்னம்தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அவ்வாறு செய்யும்போது  முழு எண்களாக்க increase decimal, decrease decimal பட்டனை பயன்படுத்தாமல் round function உபயோகப் படுத்தலாம். C2 செல்லில் உள்ள எண்ணுக்கு  DA கணக்கிட D2 செல்லில்  =ROUND(C2*91%,0) , என்ற forumula வை உள்ளீடு செய்யவேண்டும். இப்போதும் 14232 தான் காட்சி அளிக்கும் ஆனால் தசம இலக்கங்கள் மறைந்து இருக்காது. அதை drag செய்து அடுத்துள்ளதையும் சதவீதம் கண்டு ரவுண்டு செய்து விடும்.

இன்னொரு  முறை :

Round function ஐ பயன்படுத்தாமல் செய்ய ஏதேனும் வழி உள்ளதா என்று ஆராய்ந்ததில் உண்டு என்று சொன்னது எச்சல் . அது என்ன? set precision as displayed என்று ஒரு Option உள்ளது. மறைந்துள்ள தசம எண்களை கணக்கில் கொள்ளாமல் சாதரணமாக  செல்லில் கண்களுக்கு தெரியும்  எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கீடு செய்யும் . இதனால் நாம் கண்ட இந்தப் பிழை ஏற்படாது.

இந்தப் படத்தில் பாருங்கள் முதல் படத்தில் உள்ள அதே தரவுகளைத்தான் பயன்படுத்தி இருக்கிறேன். round Function ஐ பயன்படுத்தவில்லை ஆனால் விடை சரியாக வருவதை காணலாம்

 இது எப்படி? எக்சல்லின் இடது ஓரத்தில் ஆபீஸ் பட்டனை கிளிக் செய்யவும்.கீழ்கண்ட வாறு கிடைக்கும் மெனுவில் Options ஐ கிளிக்கவும்.

பின்னர் கிடைக்கும் டயலாக் பாக்சில் Advanced ஐ தேர்ந்தெடுத்து பிறகு வலது புறத்தில் set precision as displayed என்பதற்கு முன் உள்ள செக் பாக்சை டிக் செய்யவும். தன்னியல்பாக இவை டிக் செய்யப்பட்டிருக்காது

தேவை இல்லை என நினைத்தால் டிக் மார்க்கை  நீக்கி விடலாம். பழைய நிலைக்கு வந்து விடும். 

இதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை இன்னொரு நேரத்தில் சொல்கிறேன்.

எக்சல் எனும் பிரம்மாண்டத்தில் அதிகம் பயன்படுத்தப் படாத பயனுள்ள வசதிகள் இருப்பதை நினைத்து  ஆச்சரியம் ஏற்படுகிறது. எக்சல் பயன்பாட்டில் நான் Expert அல்ல. ஆனால் நான் என் அனுபவத்தின் மூலம் பெற்ற பயனை, எளிமையாக இருந்தாலும் தெரியாத யாருக்கேனும் பயன்படும் என்ற நோக்கத்திலும்  நான் எழுதியதில் தவறுகள் இருப்பின் அறிந்தவர்கள் சுட்டிக் காட்டும்போது அதையும் திருத்திக் கொள்ள முடியம் என்பதாலும் எழுதப் பட்டதே இந்தப் பதிவு.

நான் பாசாயிட்டனா?

குறிப்பு: மேற்கண்டவை அனைத்தும் EXCEL 2007 ஐ அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது 

******************************************************************

படித்து விட்டீர்களா
எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? 

EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 

  கற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut

வியாழன், 26 டிசம்பர், 2013

எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?


கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள்.
கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும்  அலுவலகப் பயன்பாடான Microsoft Office Excel, Word பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வருவதுண்டு.
எக்சல்லை புதிதாக பயன்படுத்துவோருக்கு இந்தப் பதிவு உதவக் கூடும். வழக்கமாக என் வலைப பக்கம் வருபவர்களுக்கு இவை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடமிருந்து வரவேற்பு இருக்காது என்றாலும்  இது போன்ற பதிவுகளை புதியவர்கள் பலர் படிப்பதை அறிய முடிகிறது.
நான் முறையாக இவற்றை கற்கவில்லை எனினும் பயன்படுத்தும்போது அறிந்தவற்றை என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இது சம்பந்தமான மாதிரிக் கோப்புகளையும் டவுன் லோட் செய்யும் வகையில் உருவாக்கி இணைத்திருக்கிறேன். இவற்றை 2000 க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளதோடு  தினந்தோறும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவை தந்த  தைரியத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவையும் பகிர்கிறேன். அறிந்தவர்கள் பொறுத்தருள்க. 
 
பள்ளிகள் அலுவலகங்களில் பல்வேறு கணக்கீடுகளுக்கு எக்சல்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முன்பெல்லாம் கால்குலேட்டரில் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு போட்ட கணக்கீடுகளை எக்சல் எளிதில் செய்து விடுகிறது. அலுவலகங்களில் வோர்டில் எளிதாக வேலை செய்வார்கள். ஆனால் எக்சல் என்றதும் தயக்கம் காட்டுவார்கள். அதில் உள்ள கட்டங்கள் அவர்களை பயமுறுத்தி விடும்.  எக்சல் மூலம் எளிதில் செய்யவேண்டிய வற்றை வோர்டில் டேபிள் போட்டு டைப் அடித்துக் கொண்டிருப்பார்கள். பல DTP சென்டர்களிலும் எக்சலில் பிரிண்ட் எடுப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் அதிக பணம் வாங்குவார்கள்.

எனக்குத் தெரிந்தடைப்பிஸ்ட் ஒருவர் வோர்டில் விரைவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்.ஆனால் எக்சல் என்றால் ஒதுங்கி விடுவார். தலைமை அலுவலகத்திலிருந்து தகவல்கள் கேட்கும்போது பல சமயங்களில் எக்சல் படிவத்தில்தான் அனுப்ப வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது மட்டுமே வேண்டா வெறுப்பாக எக்சல் பயன்படுத்துவார் .
அப்படி  ஒருமுறை வேலை செய்ய நேரும்போது கணக்கீடுகளை அதிலேயே பார்முலா மூலம் செய்யாமல் கால்குலேட்டர் மூலம் செய்து அதை எடுத்து உள்ளீடு செய்து கொண்டிருந்தார். ஈசியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட்டு செய்கிறீர்கள்? எக்சல் உருவாக்கப் பட்டதன் நோக்கமே வீணாகிறதே என்றேன். எக்சல்ல சில சமயம் தப்பாகி விடுகிறது என்பார். 
அந்த மாதிரி ஆக வாய்ப்பில்லையே என்றேன்.
நான் காண்பிக்கிறேன் பாருங்க என்றார். அவர் காண்பித்தது கீழே.


DAகாலத்தின் கூடுதலும் (=sum(D2:D3 பயன்படுத்தப் பட்டுள்ளது) Total காலத்தின் கூடுதலும் (=sum(E2:E3) பயன்படுத்தப் பட்டுள்ளது) தவறாக உள்ளதே பாருங்கள் என்றார். இதை Formula பயன் படுத்தி போடப்பட்டதுதானே ஏன் தவறாக உள்ளது என்றார். அதனால் நான் இதை நம்புவதில்லை. சாதரணமாக டோட்டல் போட்டால் சரியாக வந்துவிடுகிறது ஆனால் சதவீதம் போன்றவற்றை பயன்படுத்திய பின் கூடுதல் செய்யும்போது சில சமயங்களில் சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் வருகிறதே என்றார் . 



    DA கணக்கிட PAY இல இருந்து 91% சதவீத அறிய  அதனோடு =C2*91% என்ற பார்முலா பயன்படுத்தப் பட்டுள்ளது . இரண்டாவது நபருக்கான DA வும் அவ்வாறே கணக்கிடப் பட்டுள்ளது. 
DA கண்டறிய FORMULA பயன் படுத்தாமல் தனியாக கணக்கிட்டு 14232, மற்றும் 20666 ஐ உள்ளீடு செய்தால் விடை சரியாக வருவதை காணலாம். 
இது ஏன்? எக்ஸல் ஏன் தவறாக கணக்கிடுகிறது. உண்மையில் அது தவறுதானா? சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அறிந்தால் சொல்லலாம்.  
ஒரு வேளை,  தெரியாதவர்கள் இருப்பின்  சனிக்கிழமை  வரை காத்திருக்கவும்.
அடுத்த பகுதி படிக்க
Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2

குறிப்பு ; தொழில் நுட்பப் பதிவர்கள், மற்றும் திண்டுக்கல் தனபாலன், வவ்வால் போன்றவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.(பதில் சொல்ல மட்டும்தான். கருத்து சொல்ல அல்ல)


*****************************************************************************************
  படித்து விட்டீர்களா

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா 
காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut


                     **********************************************

வெள்ளி, 20 டிசம்பர், 2013

ஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா?-வைரமுத்து


கவிப்பேரரசு வைரமுத்து (Vairamuthu) தன் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மூலமாக நம் நெஞ்சங்களைக் கவர்ந்தவர். திரைப் பாடலுக்கு புதிய பரிமாணம் தந்தவர். புதுக் கவிதைகளையும் பிரபலப் படுத்தியவர். ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை நூல் வைகறை மேகங்கள் முழுவதும் மரபுக் கவிதைகளால் ஆனது. அருமையான சொல்லாட்சியும் பொருளழகும் கொண்ட கவிதைகளாக அவை அமைந்திருப்பதைக் காணலாம். இந்நூலுக்கு கண்ணதாசன் அணிந்துரை எழுதியுள்ளார்
        இதில் குண்டூசி என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகும். ஒரு சாதாரண  குண்டூசியைப் பார்த்த வைரமுத்துவின கவிச்சிறகு எப்படி பறக்கிறது பாருங்கள்? இதோ அந்தக் கவிதை .  அறுசீர் விருத்தத்தில் எழுதப் பட்ட இந்தக் கவிதையை மடக்கி எழுதினால் புதுக்கவிதையாகவும் கொள்ள முடியும் . 
 
குண்டூசி
       என்னைப்போல் இளைத்துப் போனாய்
           இணைப்புக்குத் தேவை யானாய்
       திண்ணைப் போர் புரிந்துகொண்டே
           சேல்களை ஆட்டும் பெண்ணின்
       கண்ணைப் போல் கூர்மையான
           கழுத்திலாத் தொப்பிக்காரன்
       மின்னல்போல் மறைந்து துன்பம்
           விளைக்கும் நீ இரும்புக் குச்சி


       குண்டூசி என்ற பேரைக் 
            கொடுத்தது சரியா? காமம்  
       கொண்டாடும் நடிகை வீட்டை         
            கண்ணகி இல்லம் என்று
       சொன்னாலும் சொலலாம் ஆனால்
            சுருங்கிய ஊசி உன்னை
       குண்டூசி என்றே இங்கே
            கூறுதல் தவறே? ஆமாம்!



       கருப்பாணி பெற்ற பிள்ளை
            காகிதக் களத்துக் கத்தி
       ஒருசிலர் பல் வீட்டிற்கே
             ஒட்டடை போக்கும் குச்சி
       செருப்பாணி போல தைத்துச்
             சிறுதாளை எல்லாம் ஒன்றாய்
       உருவாக்கும் உன்னை தூய
             ஒற்றுமைச் சின்னம் என்பேன்


        விடையிலாக் கேள்வியாக்கி
              விலையிலாச்  சரக்காய் என்னைப்
        படைத்தவன் பாவி; உன்னைப்
               படைத்தவன் ஞானி; இங்கே
        உடையினை அணிந்துகொண்ட
               உயிர்ப்பிண மனிதர்க் கென்றும்
        எடையிலே குறைந்து போனாய்
               இயல்பிலே உயர்ந்து போனாய்


        வெறுப்பினால் உன்னை தூர
               வீசுவார் ஆமாம்! அந்தக்
        கிறுக்கற்குத் தேடும் போது
             கிடைக்காமல் ஆட வைப்பாய்!
        உறுதியாய் உரைப்பேன் இங்கே
              உனக்குள தன் மானத்தில்
        அறுபதில்  ஒரு பங்கேனும்      
                ஆமிந்த  மனிதர்க் கில்லை 

**********************************************************

சனி, 14 டிசம்பர், 2013

பாவம் மாணவர்கள்-தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம்


    தினமலர் ஒவ்வோர் ஆண்டும் 10ம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதிக்காலை 4.00 மணிமுதலே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் காத்திருந்தார்களாம். என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த  நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்பெற ஆலோசனை வழங்குவது மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது.
அப்படி என்னதான் நடக்கிறது இந்த நிகழ்ச்சியில?.ஏன் மாணவர்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.?

     தன் பிள்ளைகளை அதிக மதிப்பெண் பெற வைக்க பெற்றோர்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். எந்த இலவசத்தையும் விட்டுவிடக் கூடாது அது அறிவுரையாக இருந்தாலும் பரவாயில்லை பெற்றுத் தர சிறிதும் தயங்காதவர்கள் பெற்றோர்.

இதில் ஏதேனும் பயன் உள்ளதா?
    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ப்ளூ பிரிண்ட் எனப்படும் கேள்வித்தாள் அமைப்பு இலவசமாக கொடுக்கப் படுகிறது. ஏதேனும் கைடுகள், புத்தகங்கள் இலவசமாக கொடுப்பார்கள்.விளம்பரதார்களின் இலவசங்களும் உண்டு. ப்ளூ பிரிண்ட் என்பது ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எப்படி கேள்விகள் கேட்கப்படும் அதற்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற விவரங்கள் அடங்கியது.
 முன்பு வினாத்தாள் ப்ளூ  பிரிண்ட் என்ற வார்த்தையை பி.எட் படித்தவர்களும் ஆசிரியர்களும்தான்  தான் அறிவார்கள்.முன்பெல்லாம் ப்ளூ பிரிண்ட் பற்றி ஆசிரியர்கள் ஏதுவும் சொல்ல மாட்டார்கள். இப்போதோ மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது.(உண்மையில் அப்படி தெரிய வேண்டிய அவசியம் இல்லை) 
  இதற்கு மேலாக ஆலோசனைகள் என்ற பெயரில் சில பிரபலங்கள் அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். பாவம் மாணவர்கள் ஒரு நாள் முழுக்க கேட்டுத் தான் ஆகவேண்டும். ஆசிரியர்கள் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுதும் முறையை விளக்குவார்கள். எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும் என்பதை விவரிப்பார்கள். இதெல்லாம் பயனுள்ளதுதான் என்றாலும் இவை எல்லாம்  தினந்தோறும் பள்ளிகளில் சொல்லப் படுவதுதான் .

  இந்த  நிகழ்ச்சில் ரமேஷ் பிரபா கொடுத்த அறிவுரை என்ன தெரியுமா? கேட்டால் மெய் சிலிர்த்துப் போவீர்கள்."தேர்வு அறையில் வேடிக்கை பார்த்து நேரத்தை செலவிட வேண்டாம்." என்று சொன்னது வேடிக்கையாக இருந்தது
தேர்வின்போது வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிக்க எந்த மாணவன் விரும்புவான்?
எந்தக் கேள்விக்கும் விடை தெரியாதவர்கள் ஒரு வேளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.தெரியாதவர்கள் என்னதான் செய்வது? வெளியே விடமாட்டார்களே!

பொதுவாக அனைவராலும் வழங்கப்படும் அறிவுரைகள்
  1. . டி.வி.பார்க்காதீர்கள் (பெற்றோர்களுக்கு வழங்கும் அறிவுரை டிவியை மூட்டை கட்டி எடுத்து வைத்து விடுங்கள்)
  2. விளையாட்டை  நினைத்துக் கூட பார்க்காதீர்கள். இரண்டு ஆண்டுகள் கஷ்டப் பட்டால் வாழ்க்கை முழுதும் கஷ்டப் படவேண்டாம் 
  3. உங்கள்  வாழ்க்கையே இதில்தான் அடங்கி இருக்கிறது.
  4.  படித்ததை திரும்பத் திரும்பத் எழுதிப் பாருங்கள் 
  5. முந்தைய ஆண்டு  வினத்தாள்களை எழுதிப் பழகுங்கள்
  இப்படி பல அறிவுரைகள். உண்மையில் இந்த அறிவுரைகள் ஏற்கனவே ஆசிரியர்கள் பெற்றோர்கள் நண்பர்களால் நாள்தோறும் பத்தாம் வகுப்பு , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவதுதான். இதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தி மாணவர்களை வதைப்பது சரிதானா என்பதை சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பள்ளியிலேயே 8 மணிநேரம் உட்கார வைத்து கதற கதற பாடம் நடத்திவிட்டு பள்ளி  நேரத்திற்குப் பிறகு சிறப்பு வகுப்புகளிலும் கொடுமைப்படுத்துவதோடு .நைட் ஸ்டடியும் செய்ய வைக்கும் கொடுமைகளுக்கு இடையில் ஞாயிறு ஒரு நாளிலும் இது போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பிள்ளைகளை அழைத்து சென்று  காலையில் இருந்து காத்துக் கிடக்கும் பெற்றோர்களை என்ன செய்வது?

    9 ம் வகுப்பு வந்து விட்டால் போதும், நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் போன்ற விசேஷங்களுக்குக்கூட குழந்தைகளை அழைத்துச்  செல்வதை தவிர்த்துவிடுவார்கள் . ஏன் குழந்தைகளை அழைத்து வருவதில்லை என்று உறவினர் கேட்டால் ."அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் ஆச்சே படிக்கிறான்." உறவினரும் "அப்படியா? நல்லது படிக்கட்டும்." என்பார்கள் (பையனோ பெற்றோர் இல்லாததால் சந்தோஷமா கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பான்) இதை சாக்காக வைத்துக் கொண்டுபெற்றோரும் உடனே கிளம்பி விடுவார்கள். வாழ்க்கை இந்த இரண்டு ஆண்டுகளில்தான் முடிவுசெய்யப்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்வதை என்னவென்று சொல்வது?
  பள்ளியிலோ அதைவிட மோசம். ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும் படித்தது எல்லாம் வீணாய்ப்போனது போல பெற்றோரை காக்க வைத்து நிற்க வைத்து மிரட்டுவார்கள் 

பெற்றோர் ஆசிரியர் கழகம் என்று ஒன்று இருக்கிறது.
இந்தப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பணி வினாவங்கி வெளியிடுவதுதான்.(வேறு பணிகள் இதற்கு உண்டு) அதற்கான விடைகளுடன் வெளியிடப்படும் இதை வாங்கிப் படித்து பயிற்சி செய்தால் போதுமானது. இதில் இருந்துதான் கேள்விகள் கேட்கப் படுகின்றன.ஒவ்வொரு மாணவனும் இந்த புத்தங்கங்களை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இது மட்டுமின்றிCOME BOOK என்று அழைக்கப்படும் புத்தகமும் அனைவராலும் வாங்கப் படுகிறது. COME என்பது Classsification of questions, Objective type questions, Model question papers, Evaluation Scheme என்பவற்றின் முதல் எழுத்துக்களை கொண்டு உருவக்கப் பட்டது. எந்த ஸ்டெப்புக்கு எவ்வளவு மதிப்பெண் என்று இதில் விவரிக்கப் பட்டிருக்கும். இதைத் தாண்டி கேள்வித்தாளில் வேறு கேள்விகள் இடம் பெறுவதில்லை. எழுத்துக்கள் எண்கள் கூட மாறுவதில்லை ஒரு கேள்விக்கு முழுதும் பதில் தெரியாவிட்டால் கூட இரண்டு மூன்று படிகளை எழுதி பாதிக்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று விடமுடியும். . பல பள்ளிகளில் இரண்டு ஆண்டு பயிற்சிகள் மூலம் இவற்றை திணித்து விடுகிறார்கள். அரசு பள்ளிகளும் இப்போது இதே நடைமுறைகளை  பின்பற்றத் தொடங்கி விட்டன.
    மாணவர்களை  சிந்திக்க விடாமல் செய்வதில் இந்த வினா வங்கிகளுக்கு முக்கிய இடம். உண்டு. முன்பெல்லாம் கணிதத்தில் ஒரு கணக்கை போட்டுக் காட்டிவிட்டு மற்ற கணக்குகளை வீட்டுப் பாடமாக போடச் சொல்வார்கள். இப்போது ஆசிரியர்கள் அனைத்து கணக்குகளையும் போட்டுக் காட்டிவிட்டு அடுத்த நாள் அதில் டெஸ்ட் வைத்து விடுகிறார்கள். மாணவன் மனப்பாடம் செய்து எழுதி விடுகிறார்கள். கணக்கு பாடம்கூட மனப்பாடம் செய்து எழுதி 100 மதிப்பெண் பெற்றுவிடுவதை காண முடிகிறது. எந்தக் கணக்குக்கு என்ன விடை வரும் என்பதை மாணவர்கள் மனப்பாடமாக சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
   பிழைப்பே பெரும்பாடாக  அன்றாடங்காய்ச்சிகளாக அவதிப்படும் மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பை கவனிக்கவோ அக்கறை செலுத்தவோ முடிவதில்லை. மேல்தட்டு மக்களுக்கோ பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட  நடுத்தர மக்களோ தன் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் இல்லையென்றால் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று மூளை சலவை செய்து குழந்தைகளை வளர்க்கிறார்கள். 

  9ம் வகுப்பு வந்து விட்டால் போதும், அந்த மாணவன் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பள்ளிக்கும் வீட்டுக்கும் மட்டுமே சென்று வர  அனுமதிக்கப் பட்ட  கைதிதான் . கூடவே பெற்றோரும் சேர்ந்து கஷ்டப் பட தயாராக இருகிறார்கள். உறவினரின் நல்லது கெட்டது அனைத்தையும் ஒதுக்கிவிடுவார்கள். இப்படி எல்லாம் செய்து மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரி என்று தான் விரும்பும் கல்லூரியில் சேர்த்து விட்டால் பரவாயில்லை. மதிப்பெண் சற்று குறைந்து விட்டாலும் பெற்றோர் அளவிட முடியாக் கவலை அடைகிறார்கள். 
60 சதவீத மதிப்பெண் பெற்றால் கூட  பர்ஸ்ட் கிளாஸ் என்று பெருமைப்பட்டுக் கொண்ட நிலை மாறி இன்று 60 சதம் பெரும் மாணவன் சராசரிக்கும் குறைவானவனாக கருதப்படுகிறான்.

    பள்ளியில் படிப்பது போதாது என்று   கோச்சிங் சென்டருக்கு வேறு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள்.அதுவும் ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் தனித்தனியாக வேறு வேறு இடங்களுக்கும் அனுப்புவதும் உண்டு. பல கோச்சிங் சென்டர்கள் இதனால் ஏராளமாக பணம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன.
   பெற்றோரின் மதிப்பெண் மனநிலையை பத்திரிக்கைகள் வியாபாராமாக்கி விடுவதில் முனைப்பு காட்டுகின்றன. தினந்தோறும் மாதிரி வினா விடைகளை வெளியிடுகின்றன. தொலைக் காட்சிகளும் தங்கள் பங்குக்கு ஆசிரியரை வைத்து கேள்விகளை விளக்கிக் கொண்டிருக்கும்
  இந்த வினாவிடை விளக்கங்கள் சிடிக்களாகவும் டிவிடிக்களாகவும் மாற்றப்பட்டு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது 

    மதிப்பெண் பெறுவது மட்டும்தான் தான் ஜெயித்துக் காட்டுவதாக நினைப்பதா? அதிக மதிப்பெண் பெறாதவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்களா? இதனால் சராசரி மதிப்பெண் பெறுபவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறோம் என்பதை உணர்கிறோம? இந்த மனநிலையை ஏற்படுத்துவது சரிதானா? இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. விடைதான் இன்னும் கிடைக்கவில்லை.


******************************************************************************************************
கொசுறு : இப்படி எல்லாம் கஷ்டப் பட்டு படித்து மாநில அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களின் பேட்டி பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் இடம் பெறும். எதிர் காலத்தில் என்னவாக ஆவீர்கள் என்று கேட்டால் மருத்துவராகி சேவை செய்வேன். கலக்டராகி தொண்டுசெய்வேன் என்று ஒவ்வொரு வருடமும் யாராவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை யாரவது சேவை செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இது வரை கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும் 

**********************************************************************************
இதையும்  படிச்சி பாருங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! l

சனி, 7 டிசம்பர், 2013

கம்பனை காக்க வைத்த கவிஞன்

 எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-8
    தூத்துக்குடிக்கு அருகில் மீளவிட்டான் என்று வித்தியாசமான பெயரில் ஒரு ஊர் இருக்கிறதாம்.அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது என்பதில் ஒரு சுவாரசியம் உண்டு.
   கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேறு ஏதோ ஊருக்கு செல்லும்போது இந்த ஊரில் தங்கினாராம்.விடியற்காலையில் அருகே இருந்த தோப்பில் ஏற்றம் இறைத்து பயிர்களுக்குநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் ஒரு விவசாயி. தமிழகத்தில் ஏற்றம் இறைக்கும்போது பாட்டும் வழக்கம் உண்டல்லவா?
    அப்படி அந்த உழவன் பாட்டு பாடிக் கொண்டே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான் அவன் பாடிய பாட்டு கவிச் சக்கரவர்த்தி காதில் வந்து விழுந்தது . தன்னை மிஞ்சிய கவிஞன் இல்லை என்று இறுமாந்திருந்த கம்பர், அப்படி என்னதான் பாடி விடப் போகிறான் இந்த படிப்பறிவில்லாத ஏழை விவசாயி என்று ஏளனத்துடன் பாட்டை கேட்க ஆரம்பித்தார்

"மூங்கில்  இலை மேலே" 
 என்று உச்ச ஸ்தாயியில் தொடங்கினான் ஒரு பாடலை. சாவதானமாக அந்த வரிகளை பாடினானான். விதம் விதமாக ஆலாபனைகள வேறு சேர்த்துக் கொண்டான் .
"அட! நன்றாகப் பாடுகிறானே" என்று வியப்படைந்தார் கம்பர்

"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே"  
என்று  தொடர்ந்து பாட
"ஆஹா! காலையில் இலை மேலே படர்ந்திருக்கும் பணித்துளி கண்டு அழகாக வரிகளை அமைத்து விட்டானே!. நமக்குக் கூட காலைக் காட்சியை பார்க்கும்போது இப்படி தோன்றியதில்லையே அடுத்த வரி என்னவாக இருக்கும்" ஆவல் பற்றிக் கொண்டது கம்பரை.
 மீண்டும் மீண்டும் பலமுறை அதையே பாடி இடையில்  சால் கணக்கின் எண்ணிக்கையையும் அதே ராகத்தில் பாடினான்.
கம்பர், அடுத்த வரி என்ன பாடப் போகிறான் என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும்  முதலில் இருந்து  "மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே......."  என்று பாட
"திரும்பவும் முதலில் இருந்தா?சீக்கிரம் அடுத்த வரியை  பாடுப்பா" என்றார் மனதிற்குள்
"தூங்கு  பனிநீரை"  என்று மூன்றாவது அடியை எடுத்தான். 
உற்சாகமானார் கம்பர்  
அதற்குள் போதுமான நீர் பாய்ந்து விட்டது என்று உதவிக்கு வந்தவன் உரக்கக் கூற பாட்டை அப்படியே நிறுத்தி விட்டு ஏற்றத்திலிருந்து  இறங்கி வீட்டுக்குப் புறப்பட ஆரம்பித்து விட்டான் அந்த விவசாயி.. கம்பருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
"அட! என்ன இவன் ஆவலை தூண்டிவிட்டு பாட்டை நிறுத்தி விட்டானே! நம்மை விட பெரிய கவியாய் இருப்பான் போலிருக்கிறதே !
அடுத்த வரி என்னாவாக இருக்கும்? பலவாறு சிந்தித்தும் பொருத்தமான  வரி கிடைக்கவில்லை.தான் அறிந்தவற்றை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தார். இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. அதை தெரிந்து கொள்ளாமல் அவர் மனம் சமாதானம் அடைவதாக  இல்லை. ஒரு பாமரன் தன்னை புலம்பவைத்துவிட்டானே என்று நொந்து கொண்டார் கம்பர்.அந்தக் குடியானவனை தேடி சென்று கேட்கலாமா என்றும் நினைத்தார். அதற்கு அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தன் பயணத்தையும் ஒத்திவைத்துவிட்டு அடுத்த நாள் காலைவரை காத்திருந்து பாடலை அறிந்து கொள்ள  முடிவு செய்தார்.
இரவு  முழுவதும் அவருக்கு உறக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார். விடிந்ததும் அந்த இடத்திற்கு வந்தார். நேற்று ஏற்றம் இறைத்தவனே வந்திருந்தான். நிம்மதி அடைந்தார் கம்பர்.

"இன்னும் சிறிது நேரத்தில் பாடத் தொடங்கினால் அடுத்த வரிகள் என்ன என்று தெரிந்துவிடும்'
 . திடீரென்று ஐயம் வந்து விட்டது கம்பருக்கு  வேறு பாட்டு பாடி விட்டால் என்ன செய்வது 
"ஸ்ரீராமா! அவன் அதே பாட்டையே பாட்டையே பாடவேண்டும்" ,வேண்டிக்கொண்டார் கம்பர்.
கம்பரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அதே பாட்டையே பாடத் தொடங்கினான். 
"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே" என்று ஆரம்பிக்க 
"அது தெரியுமப்பா. அடுத்த வரியும் தெரியும் "தூங்கு பனி நீரை" சீக்கிரம் பாடு" பொறுமை இழந்த கம்பர் தன்னை மறந்து சற்று உரக்கவே சொன்னார் 
"தூங்கு பனி நீரை
வாங்கு கதிரோனே!" 
என்று பாட கம்பர் துள்ளிக் குதித்தார் ,

"என்ன அழகு!மூங்கில் இலையை, பனித்துளி சூரியனோடு   பொருத்திக் காட்டியதுதான்  எவ்வளவு நயம்! எவ்வளவு சிந்தித்தும் நமக்கு இது தோன்றவில்லையே! " என்று எண்ணி வெட்கம் அடைந்தார் கம்பர் .

அதற்கு மேல் தான் செல்ல நினைத்த இடத்திற்கு போக அவருக்கு மனம் வரவில்லை.பயணத்தை மேற்கொண்டு தொடராமல் தனது ஊருக்கு மீள திரும்பி விட்டாராம். 
அதனால்தான் அந்த இடத்திற்கு மீளவிட்டான் என்று பெயர் வந்ததாம்!
கம்பனையே காக்க  வைத்து விட்டான் மீளவிட்டான்  கிராம விவசாயி.
 
********************************************************************************************
 பதிவரும் நண்பருமான ரூபன் தீபாவளியை முன்னிட்டு ஒரு கவிதைப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். அந்த உற்சாகம் தொடர பொங்கலுக்கு ஒரு கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். இம்முறை அரும்புகள் மலரட்டும் வலைப்பூ எழுதும் பாண்டியனும் ரூபனுடன் இணைந்துள்ளார். போட்டி வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள் 
போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்.
2013-11-26_181950

2013-12-02_013918

கட்டுரைப் போட்டி நடத்தும் ரூபன்& பாண்டியன் இவர்கள்தான்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்… தணியாத தாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகிறது… உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்… போட்டியில் கலந்து கொள்ளும்  போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பதிவாக பகிர்ந்துள்ளோம்…

குறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும்

 

1 ரூபனின் வலைத்தளத்திலும் (https://2008rupan.wordpress.com)

2திண்டுக்கல் தனபாலன் (அண்ணா)(http://dindiguldhanabalan.blogspot.com/)  

ஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்

மீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….

குறிப்பு : கட்டுரைக்கு உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…
********************************************************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?  
 எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க! எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை
 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க! 

 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை 6 இதுவல்லவா வெற்றி!
நீங்கள் ஏழையா?பணக்காரரா?

***************************************************************************************

செவ்வாய், 3 டிசம்பர், 2013

மாற்றுத் திறனாளிகள் பால் அக்கறை கொண்டவரா நீங்கள்?

இன்று(03.12.2013) உலக மாற்று திறனாளிகள் தினம். இந்த தினம் கொண்டாடப்படும் நோக்கம் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களின் உரிமைகள் மற்றும் நலனை மேம்படுத்துவதும் அரசியல் சமுதாய பொருளாதார கலாசாரத்தின் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவர்களுக்குள்ளே மறைந்திருக்கும் திறனை வெளிக்கொணர்ந்து நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.

 ஊனமுற்றவர்கள் என்று சொல்லாமல் மாற்றுத் திறனாளிகள் என்று பெயர் மாற்றம் செய்தது பாராட்டத் தக்கது. Disabled என்பதை differently abled என்று முதன்முதலில் உரைத்த புண்ணியவான் யாரோ? அவர் வாழ்க. இப்பெயர் பலருக்கு பொருந்தவும் செய்கிறது. பல சமயங்களில் அவர்கள் செயல் திறன் பிரமிக்க வைக்கிறது.சாதாரண மனிதர்கள் செய்வதைப் போலவே விரைவாகவும் பிழையின்றியும் செய்வது நம்மை ஆச்சர்யப் படுத்தும்.  ( இது போன்ற   + ve செய்திகளை பத்திரிகைகளிலும் வலைப பக்கங்களிலும்(எங்கள் ப்ளாக்) காண முடிகிறது.

  ஆனால் நம்மை சுற்றிலும் தினந்தோறும் பல மாற்றுத் திறனாளிகளை கடந்துதான் போகிறோம். அவர்களை கிண்டலாகவும் கேலியாகவும் பார்த்த சமூகத்தில் இன்று மாற்றம் மாற்றம் ஏறபட்டுள்ளது. ஆனாலும் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாட்டை காமெடி ஆக்குகின்றன. மாற்றுத் திறனாளிகளாக பிறந்தது சாபம் என்ற எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது குடும்பத்தாரின் கடமை மட்டுமல்ல.சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமையும் கூட. 

    அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக  பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் பகல் நேர மையங்கள் இவர்களுக்காக செயல் படுகின்றன. இங்கே இவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. இங்கு வர இயலாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று பயிற்சியும் உதவியும் செய்யப் படுகிறது. சென்னையில் இது சிறப்பாகவே இயங்குகிறது. முன்பெல்லாம் மாற்றுத் திறனாளிகளை சாதாரண பள்ளிகளில் சேர்க்க தயங்குவார்கள். ஆனால் இப்போது சேர்க்கை மறுக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது . இயலாமையின் சதவீதம் குறைவாக உள்ளவர்களுக்கு   ஒருங்கிணைந்த கல்வியையே அரசு வலியுறுத்துகிறது. எல்லோரும் படிக்கும் பள்ளியிலேயே அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காவே சாய்வுப் பாதை (ramp) அமைப்பது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி இன்னும் விரிவாக இன்னொரு பதிவில் எழுத நினைத்திருக்கிறேன்.

   இப்பதிவின் நோக்கம் ஒரு தேசிய  நிறுவனம் இவர்களுக்காக இயங்கி வருகிறது என்பதே. சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் என்று ஒன்று இருப்பது  சிலருக்கே தெரிந்திருக்கும். இந்த அமைச்சகத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது . கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் இந்நிறுவனம் அமைந்திருக்கிறது.

அது என்ன ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் ?(Multiple disabilities)
 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊனங்கள் ஒருவருக்கே இருப்பதே ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் என்று அழைக்கப் படுகிறது.
உதாரணம் கண்பார்வைஇன்மையோடு இணைந்த காது கேளாமை,மூளை முடக்கு வாதம்,ஆட்டிசம்,மன வளர்ச்சி குன்றுதளோடு இணைந்த காது கேளாமை, காது கேளாமையோடு இணைந்த மூளை முடக்குவாதம் போன்றவை .

       மேற்கண்ட குறைபாடுகளால் எவரேனும் பாதிக்கப் பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு மருத்துவம் மற்றும் சேவைகள் னைத்தும் இந்த மத்திய அரசு நிறுவனத்தில் வழங்கப்  படுகிறது. இந்த சேவைகளை அறியாத பலர் இருக்கக் கூடும்.  

    வறுமை  மற்றும் அறியாமையில் வாடும் ஏழை மக்கள் இது போன்று பிறந்த தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இது நமது  தலை விதி என்று பொறுத்துக் கொண்டு எந்த மருத்துவமும் செய்யாமல் வைத்திருக்கும் நிலையையும் பார்க்கமுடியும். ஊனமுற்றோருக்கான சலுகைகள் கிடைக்க உதவும் அடையாள அட்டைகள் கூட பெற முயற்சிப்பதிலை (ஆனால் குறைபாடு மிகக் குறைவாக உடைய ஒரு சிலர் அடையாள அட்டை வைத்தது சலுகைகள் அனுபவிப்பதும் உண்டு)
அப்படி யாரேனும் இருந்தால் இந்நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்  என்று இந்நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிறுவனம் என்னென்ன செய்கிறது ?
இங்கு  செயல்படும் துறைகள்
  • மறு வாழ்வு மருத்துவம் 
  • மறுவாழ்வு உளவியல் 
  • ஊனமுற்றோருக்கான தொழிற்பயிசி 
  • பேசுதல், கேட்டல்,மற்றும் தொடர்புக்கான பயிற்சி 
  • சிறப்பு கல்வி 
  • இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்வழி மருத்துவம் 
  • செயற்கை உறுப்புகள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல் 
  • உணர்வு உறுப்புகள் குறைபாட்டிற்கான ஒருங்கிணைப்பு பயிற்சி 
  • சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு  பயிற்சி 
  • கண்பார்வையோடு இணைந்த காது கேளாமை 
  • 0-3 ஆரம்ப கால பயிற்சி
இதனோடு  இன்னும் பல சேவைகளை வழங்கி வருவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
சில பட்ட படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளும் இங்குபயிற்றுவிக்கப் படுகின்றன.
  • M.Phil (Clinical Psychology)
  • PG Diploma in Developmental Therapy-Multiple Disabilities 
  • PG Diploma in Early Intervention
  • B.Ed Special Education  (Multiple Disabilities )
  • D.Ed Special Education(Deafblind, Cerebral Palsy&Autism Spectrum Disorder 
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் அரசு சாரா நிறுவனங்களையும் ஊக்குவித்து அவர்களின் சேவையைப் பாராட்டி விருதுகளும் அளிக்கப் படுகிறது
 இந்நிறுவனத்தின் வேலை நாட்கள் : திங்கள் முதல் வெள்ளிவரை 
 வேலை நேரம் : காலை 9.30 மணிமுதல் மாலை  5.30 வரை 

பேருந்து விவரம் :         
பிராட்வே-கோவளம்           19G, PP19,19E
அடையார்-மாமல்லபுரம்       588
வேளச்சேரி  -மாமல்லபுரம்    589
கோயம்பேடு -கோவளம்       PP49
தி.நகர்-மாமல்லபுரம்           599
வேளச்சேரி-கோவளம்         M19V
தாம்பரம் - கோவளம்          517

பேருந்து  நிறுத்தம்: முட்டுக்காடு ஊனமுற்றோர் ஆபீஸ் பஸ் ஸ்டாப்  

நிறுவன  வலைப பக்கம்  http://www.niepmd.tn.nic.in
தொலைபேசி  எண்கள்- 044-2742113, 27472046 , 27472389

பணம் படைத்தோருக்கு சேவை செய்ய சிறப்பு பள்ளிகள் உள்ளன. ஆனால் ஏழை மக்களுக்கு? 
இப்பதிவைப் படிக்கும் நீங்கள், தேவைப்படுவோருக்கு இவ்விவரத்தை சொல்லுங்கள் .
இதனால் தினையளவு பயன் கிடைத்தாலும் பனையளவு மகிழ்வேன்.

மாற்றுத்  திறனாளிகளை மதிப்போம்! அவர்களும் வகையாய் வாழ வழிகள்  செய்வோம். 
நன்றி

********************************************************************************************

.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

நீயா?நானா?மனைவியுடன் வெளிப்படையாக பேசலாமா?

  நீ...........ண்ட நாட்களாயிற்று நீயா நானா பற்றி எழுதி. நீயா நானா சமீப காலங்களில் சுவாரசியம் குறைந்து வருவதை அறிய முடிகிறது. பேசப்படும் தலைப்புகள் ஏற்கனவே பேசிய தலைப்புகளோடு ஒத்து இருப்பதும் ஒரு காரணம். ஒரே நிகழ்ச்சி நீண்ட நாட்களாக நடந்து வந்தால் என்னதான் சுவாரசியமாக கொண்டு சென்றாலும் சலிப்பு ஏற்படவே செய்யும். சூப்பர் சிங்கர், நிகழ்ச்சியும் அதுபோலவே .
  குறிப்பிட்ட நிலையக் கலைஞர்கள் போல சில சிறப்பு விருந்தினர்களே மீண்டும் மீண்டும் கலந்து கொள்வது போரடிக்கத்தான் செய்கிறது. தலைப்பை வைத்தே இன்று யார் சிறப்புவிருந்தினராக இருப்பார்கள் என்பதை ஓரளவிற்கு ஊகித்து விட முடிகிறது. அவர்கள் என்ன கருத்து சொல்வார்கள் என்பதும் ஊகிக்கக் கூடியதே!

    கடந்த ஞாயிறன்று நீயா நானாவில் கணவன்/மனைவி அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது பற்றிய விவாதம் நடைபெற்றது. எல்லாவற்றையும் மறைக்காமல் கணவன் மனைவி இடமும் மனைவி கணவனிமும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும் மறைக்கக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் பேசியதில் இரண்டு பக்கமும் சில நியாயங்கள் இருக்கத் தான் செய்தன.

    சாலையில் சென்ற அழகான பெண்/ ஆணைப் பார்த்ததையும் ரசித்ததையும் நாங்கள் பகிர்ந்து கொள்வோம். அப்படி பகிர்ந்து கொள்வதுதான் நேர்மை என்று ஒரு சாரர் சொன்னதை உண்மையில் அவர்களே மனமறிந்து ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக் குறியே! கணவன்  சொல்வதை பெண்கள் வேண்டுமானால் அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மனைவி தான் ஒரு ஆணை ரசித்தேன் என்று சொல்வதை கணவன் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது என்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே.

    சிலர்  மனைவிடம் தனது பொருளாதார நிலையை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என தெரிவித்தனர் . தான் வாங்கும் சம்பளத்தைக் கூட சொல்வது கூட அவசியமில்லை என்று கூறினர். காரணமாக பலரும் சொன்னது தன் தாய் தந்தையருக்கு,அண்ணன் தம்பிக்கு, நண்பருக்கு பண உதவி செய்வதை மனைவி தடுத்துவிடுவார் என்பதே அது. ஆனால் அவற்றை சொன்னால் நாங்கள் தடுக்கவா  போகிறோம் என்பது எதிர் தரப்பினர் வாதம் (உண்மையாகவா?) சிந்தித்துப் பார்த்தால்  இப்படி சொல்வதற்கு காரணம் தன் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையே! மனைவி சொன்னால் அதைக்கேட்டு நாம் உதவும் எண்ணத்தை மாற்றிக் கொள்வோமோ என்ற நம்பிக்கை இன்மையே இப்படி யோசிக்க வைக்கிறது.

  குடும்பத்தின்  நிதி நிலையை கணவன் மட்டுமே கையாள்வது என்பது ஏன் சரியல்ல என்பதை ஒருபெண் அழகாக சொல்லி விட்டார். தன் கணவர் தன் சம்பளம் பற்றியோ வங்கிக் கணக்கு பற்றியோ ATM பாஸ்வோர்ட் போன்றவை தெரியாததல் ஏற்பட்ட இன்னலை விவரித்தார். கணவனுக்கு  தீடீர் விபத்து நேர்ந்தபோது கணவன் சுய நினைவின்றி மருத்துவமனையில் கிடக்க, செலவுக்கு பணம் இன்றி அவதிப் பட்டதை விவரித்தார். தன உறவினர் நண்பர்களின் உதவியோடு சமாளித்து விட்டாலும் கணவன் சுயநினைவுக்கு வந்த பின் வங்கியில் பணம் எடுத்து பிரச்சனையை தீர்த்ததை குறிப்பிட்டார

   உண்மையில் ஆண்களுக்கு  இது ஒரு பாடம். கணவன்  தான் இல்லாத நேரத்தில் எதிர்பாராமல் குடும்பத்திற்கு ஏற்படும் பணத் தேவையை சமாளிக்க இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு இன்றி நடந்து கொள்ளவேண்டியது அவசியம்தான். மனைவி வங்கிக்கு இது வரை செல்லாதவராகவோ, ATM போன்றவற்றை பயன்படுத்த தெரியாதவராகவோ (எதுக்குங்க வம்பு பெண்கள் ATM பக்கம் போகாமல் இருப்பதே நல்லதுன்னு சொல்லறீங்களா?) இருந்தாலும், ஏன்? அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாதவராக இருந்தாலும் இவற்றை கட்டாயம் சொல்லிவைக்கவேண்டும் என்பதை நிகழ்ச்சி பார்த்த அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
(ஒரு சின்ன சர்வே படிவம் இந்த பதிவோட இறுதியில கொடுத்திருக்கேன். கட்டாயம் அதுல கலந்துக்கோங்க)

  ஆண்கள்  மட்டுமல்ல  வேலைக்கு செல்லும் பெண்கள் சிலரும்  தன் வரவு செலவு முழுவதையும் கணவனிடம் சொல்வதில்லை. அது பற்றி நிகழ்ச்சியில் பேசப்படவில்லை.  அரசு பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் ECS முறை ஏழு எட்டு ஆண்டுகளாகத்தான் நடைமுறையில் உள்ளது. இம்முறை அறிமுகப் படுத்தப் பட்டதை பணிபுரியும் பெண்கள் நிறையப் பேர் விரும்பவில்லை. காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. சிலர் கணவனுக்கு தெரியாமல் பிறந்த வீட்டிற்கு உதவுவது தனக்கு புடவை நகை போன்றவற்றை வாங்கிக் கொள்வது ( புடவை, நகை புதுசா பழசான்ன பெரும்பாலான கணவன்மார்களுக்கு கண்டுபிடிக்க தெரியாதாம்! ) தம்பி தங்கைகளுக்கு அம்மாவுக்கு உதவுவது  வழக்கம். ECS நடைமுறைப் படுத்தப்பட்டபின்  வங்கிக் கணக்கில் ஏற்றப்படும் பணத்தை விருப்பப்படி கையாள முடிவதில்லை. ஏனனில் ATM அட்டை எப்போதும் கணவன் வசம் இருப்பதே! முன்பெல்லாம் DA நிலுவை, சரண்டர், பி.எஃப் கடன் தொகை போன்ற கூடுதல் வரவை வீட்டில் சொல்லாமல் தவிர்க்க முடியும். இப்போது அம்மாதிரி செய்ய முடிவதில்லை என்று ஒருசிலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

   வேலைக்கு  போகும் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெண்களும் கணவனுக்கு தெரியாமல் சீட்டு கட்டுவது,பொருட்கள் வாங்குவது என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு குடும்பத் தேவையை நிறைவேற்றுவதற்காகவே இருக்கும்.

   அலுவலக ஆண் பெண் நட்பு பற்றி பகிர்ந்து கொள்வது பற்றியும் பேசப்பட்டது. அலுவலகத்தில் இரு பாலரும் சகஜமாக பேசிக் கொள்வதும் கிண்டலடிப்பதும் சகஜம்தான் என்றாலும் அதை அப்படியே வீட்டில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதை ஐ.டி யில் பணிபுரியும் சொன்னது குறிப்பிடத்தக்கது. தனது பாசோ அல்லது சக ஆண் நண்பரோ தன்னை,அழகை உடையை புகழ்ந்து சொன்னதை அப்படியே கணவனிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் அனேக ஆண்களுக்கு இருக்காது. அதை  பொருட்படுத்தமாட்டோம் என்று சொல்பவர்களும் மேடைக்காக சொல்வார்களே தவிர உள்மனதின் வெளிப்பாடு அல்ல அது. இது பெண்களுக்கும் பொருந்தும். அதனால் எவற்றை சொல்ல வேண்டுமோ அவற்றை சொன்னால் போதும் என்பது அப்பெண்ணின் கருத்தாக இருந்தது.
    உதாரணத்திற்கு  அந்தப் பெண்மணியும் அவர் மகளும் ஒவ்வொரு நீயா நானா நிகழ்ச்சியிலும் கோபிநாத்தின் உடையைப் பற்றி பேசுவார்களாம்.அது தன்கணவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றார்.

      வெளிப்படையாக எதையும் பேசுவேன் என்று சொல்லும் ஆண்கள் கூட, தன் மேலதிகாரி தன்னை அவமானப் படுத்தியதையோ, தான் எப்படியோ ஏமாந்ததையோ,செய்த தவறையோ சொல்ல ஈகோ இடம் கொடுக்குமா என்பது கேள்விக் குறியே!

     கிரஷ் என்று சொல்லக் கூடிய அறியா வயது ஈர்ப்பை பகிர்ந்து கொள்வது ஜாலியானது. என்றனர் ஆனால் அது தேவையற்ற பிரச்சனையைக் கொடுக்கும் என்றனர் எதிர் தரப்பினர். அதுவும் உண்மைதான்.

    இறுதியாக திருமனத்திற்கு முந்தைய காதலை சொன்னதில் பிரச்சனை வந்தது என்றார் மனைவியுடன்  வெளிப்படையாக பேசவேண்டும் என்ற தரப்பில் பேசிய ஒருவர். அதனால் தன் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று நா தழுதழுக்க  சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். அவரது இரண்டாவது மனைவி எதிர் அணியில்  அமர்ந்திருந்தார், அவர் இதை சொல்வதற்கு முன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது பற்றி தன்னிடம் அவர் மனைவி ஒருபோதும் கேட்டதில்லை என்றார். லேசான புன்னகையுடன் தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் முகத்தில் ஆயிரம் பாவங்கள் தோன்றி மறைந்தது  போல் இருந்தது 

  கடந்த கால  காதலை மறைக்காமல் சொன்னால், மனைவியும் அதுபோல் தன்னுடைய அனுபவங்களை சொல்லக் கூடும். அது என் மனதை பாதிக்கும் அதனால் நான் அவற்றை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. அந்த அளவுக்கு நான் தாராள மனப்பான்மை கொண்டவன் இல்லை என்று ஒருவர் சொன்னது ஆண்மனதின் யதார்த்த  நிலையை பிரதிபலித்தது.
வெளிப்படையாக பேசுவது நல்லது என்று பேசிய ஒருவரே தன் மனைவிக்கு இந்த நடிகரை பிடிக்கும் என்று சொல்வது எனக்கு பிடிக்காது என்று உண்மையை உடைத்தார்

     மறைக்கக்  கூடாது என்று சொன்ன பலரும் குறிப்பிட்டது பின்னர் அது வேறு யார் மூலமாவது கணவன்/மனைவிக்கு தெரிய வருவதைவிட முன்னரே சொல்லி விடுவது நல்லது என்று கூறினர் ஒருவகையில் அது சரியென்றாலும் இயல்பான பொசசிவ்நெஸ் அதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதை கணிக்க முடியாது

   சிறப்பு விருந்தினர் ஒருவரான அபிலாஷ் சொன்ன கருத்துக்கள் என்னைப் பொருத்தவரை ஏற்புடையதாகவே இருந்தன. கணவன் மனைவி இடையே ஒருமெல்லிய ரகசிய தன்மை இருப்பது வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றார். அதற்காக எதையும் வெளிப்படையாக பேசக் கூடாது என்ற அர்த்தமல்ல. வெளிப்படையாக பேசுவது,மறைப்பது இரண்டுக்கும் இடைப்பட்ட பாதையில் பயணிப்பது நல்லது என்றார். 

    ஆனால் பொருளாதார விஷயத்தை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.அது பல சிக்கல்களை தவிர்க்கும்.

    எத்தனையோ  ஆண்டுகளாக ஆணாதிக்க சமுதாய சூழலில் வளர்ந்த நாம், சமீப காலமாக கல்வி பொருளாதார சூழல், தொழில்நுட்பம் போன்றவை காரணமாக  சம உரிமை பற்றி அறிவு பூர்வமாக ஏற்றுக் கொண்டாலும் பெண்கள் வெளிப்படையாக பேசுவதையும் செயல்படுவதையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்பதை நிகழ்ச்சி உணர்த்தியது. 

****************************************************************************************
வந்ததுதான் வந்தீங்க! இந்தக்  கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போங்க

புதன், 27 நவம்பர், 2013

கணையாழி படிக்க முடியுமா?


   மின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்திகளை (வெட்கத்துடன்)ஒன்று விடாமல் படிக்கும் சராசரித் தமிழர்களில் நானும் ஒருவன். ஒன்றிரண்டு வார இதழ்கள் வாங்கினாலும்  புத்தகக் கடைகளில் முன் நிற்கும்போது எனக்கு  எப்போதாவது அந்த ஆசை எழுவதுண்டு. பரபரப்பான தலைப்புகள் புத்தகக் கடையை சுற்றி தொங்கிக் கொண்டிருக்கும்போது அந்த ஆசை மறைந்துபோகும். 

   வேறு ஒன்றுமில்லை.கணையாழி,உயிர்மை போன்ற இதழ்களை ஒருமுறையேனும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே. தீவிர இலக்கியவாதிகள் புரியாதபடி எழுதுபவர்கள் விரும்பும் பத்திரிக்கை அல்லவா அது. நமக்கு பிடிக்குமா? நம் ரசனைக்கு ஒத்துவருமா? கொடுத்த காசுக்கு பலன் இருக்குமா? புத்தகம் வாங்கினால் வீட்டில் உள்ளவர்களும் படிக்க முடியுமா? நமக்குப் பிடித்திருந்தாலும் நம் ஒருவருக்காக வாங்கிப் படிக்கத்தான் வேண்டுமா? என்ற நடுத்தர மனோபாவத்துடன் யோசிப்பதில் பல புத்தகங்கள் வாங்க மனம் வருவதில்லை.

  ஆனால் இம்முறை கணையாழி புத்தகம் வாங்கி விட்டேன்.எப்போதோ சுஜாதாவின் கணையாழியில் கடைசி பக்கங்கள் எழுதி வந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஆனால் அவற்றை படித்ததில்லை.
     இப்போதும் "கடைசி பக்கங்கள்" பகுதி இருக்கிறதா என்று முதலில் புரட்டினேன. கடைசி பக்கங்களை இப்போது இந்திரா பார்த்தசாரதி எழுதி வருகிறார். இந்திரா பாரத்தசாரதியையும்  இந்திரா சௌந்தர ராஜனையும் குழப்பிக் கொள்வது வழக்கம். மேட்டிமை எழுத்தும் பாமர எழுத்தும் என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். சுவாரசியமாகவே எழுதப் பட்டிருந்தது.
   நவம்பர்  மாத இதழில் மொத்தம் 11 கவிதைகள் வெளியிடப் பட்டிருந்தன. ஒரு சிலவற்றை தவிர மற்றவை எளிமையாகவே இருந்தன. சில கவிதைகள்ஏற்கனவே படித்தது போல் இருந்தன. அவை  ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் பேராசிரியர் திரு ஹரணி அவர்கள் எழுதியவை  என்பதை அறிந்து கொண்டேன். கரந்தை ஜெயக்குமார் அவர்களின் மூலமாக ஹரணி அவர்களை அறிவேன் அவ்வப்போது அவரது வலைப் பக்கம் செல்வது உண்டு . "இறுதி நிலை நோயாளி" பறவைகள் குறைந்து வருவதைப் பற்றி பேசியது.

   செம்மீன் புகழ் தகழி சிவசங்கரன்  பிள்ளை அவர்களின் சுய சரிதையில் இருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தகழியின் இளமைக் காலத்தை குறிப்பிட்டது. ஹோட்டலுக்கு பால் கறந்து கொடுத்து காசு வங்கிக் கொண்டு வருவாராம் தகழி. அந்தக் காசில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்வாராம். அதை கதை எழுதி அனுப்பவும் பேப்பர் வாங்கவும் பயன்படுத்திக் கொள்வாராம். 

         குப்பன்  சுப்பன் பற்றி சொல்லும் கதைகளுக்கு அவர்களுடைய வாழ்க்கைக்கே உரிய கதைப்பாணியை பின்பற்றவதுதான் நல்லது. அயல்நாட்டுப் பாணி அவசியம் இல்லை என்று தகழி தெரிவிப்பதாக சொல்கிறது கட்டுரை.
ஆ பழனி என்பவர் எழுதிய மரண தண்டனை பற்றிய கட்டுரை புதிய தகவல்களை தருகிறது.பிற்கால சோழர்கள் மரண தண்டனையை புறக்கணித்ததை கல்வெட்டுகள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் இயற்றப் பட்ட சுக்கிர நீதி என்ற நூல் கொலை தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறதாம்.திருக்குறளும் மரண தண்டனையை ஆதரிக்க வில்லை என்று ஒருவிளக்கத்தையும் தருகிறார் புலவர்.
இன்னொரு கட்டுரை பகவத் கீதை வெண்பா என்றஅரிய நூலைப்பற்றி விவரிக்கிறது. இதைத் தவிர  தமிழில் பகவத் கீதை செய்யுள் வடிவில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர் நரசையா. இவ்வெண்பா நூலை  எழுதிய முத்து ஐயர் என்பவராம்.  மசூலிப் பட்டினத்த்தில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என அறிய முடிகிறது. 

   இடம் பெற்ற நான்கு சிறுகதைகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றில் பயமுறுத்தும் இலக்கியத் தன்மை இல்லாததால் எளிதில் படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. "வீட்டில சும்மாதான் இருக்காளா" என்ற சிறுகதை  மிடில் கிளாஸ் மன நிலையை அப்படியே பிரதிபலித்தது. 
மருந்து என்ற சிறுகதை தகழி சொன்னது போல கிராமத்து மனிதர்களை அப்படியே அவர்கள் போக்கிலேயே சொல்வதாக  அமைந்திருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது.

   இரண்டு நூல் அறிமுகங்கள் இந்த இதழில் செய்யபட்டிருந்தது. வெங்கடேஷ் என்பவர் எழுதிய "இடைவேளை" என்ற புத்தகம் கணினித் துறையில் ஏற்பட்ட திடீர் தொய்வால் வேலை இழந்த ஒருவனைப் பற்றியது. வெங்கட் சாமிநாதன் என்பவரின்  மதிப்புரை நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது உண்மை.

   தற்போது பத்திரிகைகளில் தொடர்கதைகள் அவ்வளவாக இடம் பெறுவதில்லை. கணையாழியிலும் தொடர் ஏதும் இல்லை. எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் தொடர்கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை. அவற்றை படிக்கும் அளவுக்கு பொறுமை இருப்பதில்லை என்பதை பத்திரிக்கைகள் உணர்ந்தே இருக்கின்றன. 

     கணையாழியின் எல்லாப் பகுதிகளும் என்னைப் போன்ற சாதாரண வாசகர்கள் படிக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது.  மாறுதலுக்காக அவ்வப்போது வாங்கிப் படிக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். 

******************************************************************************************* 


வியாழன், 21 நவம்பர், 2013

வைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்

     அமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" என்ற பாடலை கேட்டிருப்பீர்கள்.  பரத்வாஜின் இசையும் வைரமுத்துவின் வார்த்தைகளும்  எஸ்.பி.பி யின் குரலும் நம்மை சில நிமிடங்களுக்கு கட்டிப்போடும். அந்தப் பாடல் உண்மையில் திரைப்படத்திற்காக எழுதப் பட்ட பாடல் அல்ல. வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை என்ற கவிதை தொகுப்பில்" கேள் மனமே கேள்" தலைப்பில்  வெளியான கவிதையே மெட்டுக்கேற்ற சில மாற்றங்களுடன் பாடலாய் வெளிவந்தது. அதன் ஒரிஜினலை படித்திருக்கிறீர்களா ? இக்கவிதை தொகுப்பில் அருமையான கவிதைகள் பல உள்ளன.
    பூதம் ஒன்று நேரில் வந்து  என்னென்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இப்படிக் கேட்பேன் என்று சொல்கிறார் வைரமுத்து. இதோ அந்த கவிதை வரிகள் .எண்சீர் விருத்தத்தில் அமைந்துள்ள கவிதை அது.மரபுக் கைவிதை எழுதும் திறமை உள்ளவர்கள் திரைப்படப் பாடல் எளிதில் எழுதமுடியும் என்பதற்கு கவிப்பேரரசு ஒரு உதாரணம். மரபுக் கவிதையும் கிட்டத்தட்ட மெட்டுக்கு பாட்டு எழுதுவது போல்தானே!

              சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
                 சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
              ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
                 ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
              சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
                  சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
              யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
                   உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்


              கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
                  கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
              பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
                  பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
              வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
                  விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
              மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
                   மின்சாரம் போகாத இரவு கேட்பேன்


              தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
                   தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
              விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
                  விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
              மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
                   மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
              பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
                   போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்


              கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
                   குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
              மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
                   மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
              வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
                   வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
              பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
                   பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்


              அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
                   அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
              உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
                   உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
              முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
                    மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
              பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
                    பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்


               முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
                   முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
               எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
                    இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
               தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
                    தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
               இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
                    இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்


               வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
                   வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
               தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
                    தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
               மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
                   மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
               ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
                    ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்



 


***********

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்

     சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப்  போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர்ந்து கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்து ரசிகர்களின் உதடுகள் சச்சின் சச்சின்என்று ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. சச்சின் கோஷம் மைதான வான் வெளியில் நிறைந்திருந்தது. கிரிக்கட் கடவுள் சச்சின் அவதார நோக்கத்தை முடித்துக்கொண்டு கிளம்புவதை பார்க்க பரவசப் பட்டுக் கொண்டிருந்தனர் கிரிக்கெட் பக்தர்கள். அவரை வழியனுப்ப வந்த வி.ஐ.பி.களின் கூட்டம் ரசிகர்களின் கூட்டத்திற்கு இணையாகத் தான் இருந்தது. ஐந்து நாள் நடைபெற வேண்டிய ஆட்டம் மூன்றாவது நாளின் பாதியிலேயே  முடிந்துவிட்டதே என்று ஏங்கியவர்கள் அதிகம்.. சச்சின் சதம் அடிக்காமல் போனாலும் சதத்தை நெருங்கியது ஆறுதலாகவே கொண்டனர். விதம் விதமான பதாகைகள் சச்சின் மீதான அபிமானத்தை பறை சாற்றின. பல நாடுகளை சேர்ந்த முன்னாள் இந்நாள் விளையாட்டு வீரர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து சச்சினை புகழ் மழையில் நனைத்தனர். உலகின் வேறு எந்த விளையாட்டு வீரருக்கும் இப்படி ஒரு பிரிவுபசார விழா நடந்திருக்காது. இனி நடக்கவும் வாய்ப்பில்லை. உலகெங்கும் இருக்கும் புகழ் பெற்ற வீரர்கள் கூட  நாம் இந்தியாவில் பிறந்திருக்கக் கூடாதா ஏன்ற ஏக்கத்தை ஒரு சில நிமிடங்களுக்காவது  ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரிவுபசாரம்.இவ்வளவு பேரின் அன்பும் ஆதரவும் இவருக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது. பலரும் பல விதமாக பட்டியலிட்டுக் காட்டிவிட்டனர். அவரது பெருமைகளை சாதனைகளை. அமைதி அர்ப்பணிப்பு உணர்வு,அளவான(குறைந்த) பேச்சு, திறமை,உழைப்பு, மீண்டெழும் வல்லமை என அவர் வெற்றிக்காரணிகளின் பட்டியலின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். 

     இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றள்ளது என்பதைக் கூட யாரும் பொருட் படுத்தவில்லை.அனைவரின் கண்களும் அவரது அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தன. பரிசளிப்புவிழாவின் இறுதியில் உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார் சச்சின். அவர் அநேகமாக அதிக நேரம் பேசியது இதுவாகத் தான் இருக்கும்.  "22 யார்டுகளுக்கு இடையிலான எனது கிரிகெட்ட் பயணம் இன்றோடு முடிந்ததை  என்னால் நம்ப முடியவில்லை" என்று உணர்ச்சிப் பெருக்கோடு தொடங்கிய சச்சின், தந்தை தனக்கு கொடுத்த சுதந்திரம்,அன்னையின் கவனம்,தமையனின் தியாகம் , குழந்தைகளின் ஒத்துழைப்பு,நண்பர்கள், பயிற்சியாளர்கள், உறவினர்கள்,சக வீரர்கள், என்று ஒருவரையும் விடாமால் குறிப்பிட்டு நன்றி கூறியது கூட்டத்தினரை நெகிழ வைத்தது. தான் பூச்சியம் அடித்தாலும் சென்சுரி அடித்தாலும் இதுநாள் வரை  ரசிகர்கள் காட்டிய அன்பும் ஆதரவும், சச்சின்! சச்சின்! என்று நீங்கள்(ரசிகர்கள்)  அழைக்கும் குரல்  என் கடைசி மூச்சு வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தன் நன்றிகளை நெகிழ்ச்சியோடு கூறி முடித்தார்.  மைதானத்தின் மையத்திற்கு சென்று மண்ணை தொட்டு வணங்கினார். கூட்டம் ஆர்பரித்தது. வீரர்கள் அவரை தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தனர். இனி சச்சினை மைதானங்களில் காண முடியாது என்றாலும் ரசிகர்களின் மனதில் அவர் என்றும் ஆட்சி செய்வார் என்பதில் ஐயமில்லை.

    சச்சின் விடை  பெற்ற சிறிது நேரத்தில் அந்த செய்தி வெளியானது. ஆம். சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது . விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா வழங்கப் படுவது இல்லை. சமீபத்தில்தான்  பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டு வீர்களுக்கும் வழங்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்ப்பட்டது. கடந்த ஆண்டே சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.அப்போது ஹாக்கி வீரர் தியான் சந்துக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் யாருக்கும் பாரத ரத்னா வழங்கப் படவில்லை. அண்ணா அசாரே போன்றவர்கள் கூட சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க ஆதரவு தெரிவித்தனர். இப்போது பாரதரத்னா சச்சின் மற்றும் விஞ்ஞானி சி.என்.ராவ் இருவருக்கும் வழங்கப் பட உள்ளது. சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குவதில் அரசியல் உள்ளது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் சச்சினுக்கு எதிரான கருத்தை கூற யாருக்கும் துணிவில்லை. முன்னால் கேப்டன் கங்குலி(பாவம்) மட்டும் விசுவநாதன் ஆனந்துக்கும் பாரத ரத்னா வழங்கவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

   உயரிய விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு இப்போது தர வேண்டியதில்லை என்றே நானும் நினைத்தேன். அப்படி மிக உயர்ந்த  தியாகம் நாட்டுக்காக செய்தாரா? என்ற சிந்தனையும் ஏற்பட்டது..மேலும் தற்போது எம்பியாக உள்ள சச்சின் பிற்காலத்தில் அமைச்சராகலாம்.  பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் கொடுக்கப்பட்ட விருதுக்கு மதிப்பு இருக்குமா? . அதனால் பாரத ரத்னா விருது ஒருவருக்கு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு அல்லது இறந்தபின் விருது வழங்குவதே சிறந்தது என்பதும் என் எண்ணமாக இருந்தது, கடந்த ஆண்டே இது பற்றிய பதிவு ஒன்றை எழுதினேன். நாட்டுக்காகவும் மக்களுக்குக்காகவும் சேவை செய்தவர்களுக்குத்தான் இந்த விருது வழங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன்.ஆனால் இலக்கியம்,கலை,அறிவியல் கண்டுபிடிப்புகள் இவற்றிற்கு வழங்கலாம் என்றுவிதிகள் இடமளிக்கின்றன. இப்போது விளையாட்டும் சேர்க்கப் பட்டிருக்கிறது. அவசரப் பட்டு சச்சினுக்கு வழங்கப் பட்டதாக தோன்றினாலும்  அதற்குரியவராக இன்னும் மெருகேற்றிக் கொள்ளும் வல்லமை சச்சினுக்கு உண்டென்பதால் மனமார வாழ்த்துவோம்.சச்சினைப் பொருத்தவரை பல  விருதுகளில் இதுவும் ஒன்று.

நன்றாக கவனித்தால்  விருது முற்றிலும்  பெருமைக்குரியதா என்ற ஐயமும் ஏற்படும். அரசியல் கலந்திருப்பதும் அதற்கு காரணம் இந்தியக் குடியரசின்  முன்னுரிமை வரிசையில் இந்த விருது பெற்றோர்  ஏழாவது இடத்தை பெறுகிறார்கள் 


பாரத ரத்னா சில சுவாரசியங்கள்
  1.  பாரத ரத்னா விருதுடன் பரிசுத் தொகை ஏதும் வழங்கப் படமாட்டாது 
  2.  வேறு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது 
  3. முதன்முதலில் விருது தொடங்கப் பட்டபோது(1954)  இறந்தவர்களுக்கு விருது வழங்க பரிசீலிக்கப் படவில்லை. பின்னரே இறந்தோர்க்கும் விருது வழங்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப் பட்டது 
  4. காந்தியடிகளுக்கு இந்த விருது வழங்கப் படவில்லை.  (அவருக்கு கொடுப்பதால் என்ன லாபம் என்கிறீர்களா?)
  5. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு இவ்விருது வழங்கப் பட்டு யாரோ ஒரு பிரகஸ்பதி தொடுத்த வழக்காலும் சட்ட சிக்கல் காரணமாகவும்  பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
  6. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஜூலை 1977 இல இருந்து ஜனவரி 1980 வரை இவ்விருது தற்காலிகமாக நீக்கப் பட்டது 
  7. இவ்விருதை பெறுபவர்கள் சட்டப்படி இவ்விருதை தன் பெயரின் முன்பாகவோ பின்பாகவோ சேர்க்கக் கூடாது .(உதாரணத்திற்கு பாரத ரத்னா சச்சின் என்று போட்டுக் கொள்ளக் கூடாது) தன் சுய விவரத்தில் வேண்டுமானால் விருது பெற்றதை குறிப்பிடலாம்.
  8. இந்தியாவின் முதல்  கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு(அவர் அமைச்காராக இருந்த காலத்தில்) பாரத ரத்னா விருது வழங்க அரசு முன் வந்தபோது மறுத்து விட்டார். அவரது இறப்புக்குப் பின் விருது வழங்கப் பட்டது

ஓய்வுக்குப் பின்  திறமை இருந்தும் வசதி இல்லாத கிரிக்கெட் அல்லாத பிற ஆட்டக்காரர்கள், தடகள வீரர்களை கண்டறிந்து இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவ சச்சின் வேண்டும், அதுதான் அவர்மீது அன்பு கொண்டுள்ள, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு செய்யும் கைமாறாக அமையும்.

***************************************************************************************************

கொசுறு:  பாவம் சி என்  ஆர் .ராவ்;  சூரியன் முன் வந்த நட்சத்திரம் போல் ஆனார். பிறிதொரு நேரத்தில் இந்த விருது வழங்கப் பட்டிருந்தால் இவர் பக்கமும் கொஞ்சம் கவனம் திரும்பி இருக்கும்.

*********************************************************************************************
சச்சின்  பற்றி கடந்த ஆண்டு எழுதியது 
சச்சினுக்கு ஒரு கடிதம்.