என்னை கவனிப்பவர்கள்

குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 மார்ச், 2016

என் மனைவியை திருத்த முடியுமா?


   மகளிர் தின வாழ்த்துக்கள்

                  (இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்)

   நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும்  பெரியவர் ஒருவரைத் சந்தித்து தன் மனைவியைப் பற்றி சொல்லி ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் கணவர் ஒருவர்.
   "அய்யா! என் மனைவி கிராமத்திலிருந்து வந்தவர். நகரத்திற்கு வந்தும் அதற்கேற்ப தன்னை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. என் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை. நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. முதல்வர் யார்? பிரதம மந்திரி யார் என்று கூட தெரியாது. அரசியல் பற்றி இம்மியும் தெரியாது. இலக்கியங்கள் கவிதைகள் பற்றி தெரியாது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கிடையாது. நாளிதழ்கள் கூட வாசிப்பதில்லை. அனைவரும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய சினிமா நடிக நடிகையரின் பெயர்களும் தெரியாது. என் நண்பர்களின் மனைவிகள்  அரசியல், கணினி, விளையாட்டு, பங்கு வர்த்தகம்,கலைகள், இலக்கியங்கள், கவிதைகள், என்று வெளுத்துக்கட்டுகிறார்கள். இவளுக்கோ செல்போனை முழுமையாகப்   பயன்படுத்தத் தெரியாது. போன் வந்தால் எடுத்துப் பேசவும், எப்போதாவது அவசர தேவை எனில் எனக்கு போன் செய்யவும் மட்டுமே தெரியும். ஃபேஸ்புக் வாட்ஸ் அப், டுவிட்டர் எதுவும் தெரியாது. எவ்வளவுதான்  சொன்னாலும் இவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படவில்லை. அவற்றை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதில்லை. இவளை எப்படித் திருத்துவது என்று நீங்கள்தான் ஐயா ஆலோசனை கூறவேண்டும்."

அவரை உற்றுப் பார்த்த பெரியவர் கேட்டார் "தம்பி நீங்கள் நகரத்திலேயே பிறந்து வளரந்தவரா?"
"இல்லை. நானும் கிராமத்தில் இருந்துதான் வந்தேன். ஆனால் நகரத்திற்கேற்ப என்னை மேம்படுத்திக் கொண்டேன்"

 "நல்லது உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்" பெரியவர் கேட்டார்.
    "நான்,என் மனைவி, ஒரு குழந்தை, மூன்று பேர் இருக்கிறோம்."
   " நாளை உங்கள் மனைவியை இங்கு அழைத்து வாருங்கள். அறிவுரை கூறுகிறேன் " 

     பெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.
    மனைவியின் இடுப்பில் குழந்தையும், கையில் ஒருபை. அந்தப் பையில் ஏதோ சில பொருட்கள் இருந்தன. மூவரும் பெரியவரை வணங்கினர். கணவனை சற்று நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டார். பின்னர் பெண்மணியை வெளியே அனுப்பிவிட்டு கணவனை அழைத்தார்.
     "ஐயா,என் மனைவிக்கு அறிவுரை சொன்னீர்களா? கணவன் கேட்டான்.
     பெரியவர் "கொஞ்சம் பொறுங்கள்.அதற்கு முன் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
 இங்கு வரும்போது என்ன கொண்டு வந்தீர்கள்"
"எனக்கு ஒன்றும் தேவை இல்லை என்பதால் நான் ஒன்றும் கொண்டுவரவில்லை ஐயா!,  என்மனைவிதான் ஏதோ பை ஒன்றை கொண்டு வந்திருக்கிறாள் "
 "உன் மனைவி கொண்டு வந்த பையில் என்னவெல்லாம் இருக்கிறது? .உனக்குத் தெரியுமா?
     "எனக்குத் தெரியாது. என் மனைவிக்குத்தான் தெரியும்"
    "உன் குழந்தைக்கு எப்போது உணவு கொடுக்கவேண்டும், எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் தெரியுமா?
     "தெரியாது,அது அவளுக்குத்தான் தெரியும்"
  "என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றாவது தெரியும்?
     "எனக்குத் தெரியாது. அதுவும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.?
   "திடீரென்று உன் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
   "நிச்சயமாகத் தெரியாது. அதெல்லாம் பெண்களுக்குத் தானே தெரியும்."
      "குழந்தை அழுதால் உன்னால் அழுகையை நிறுத்த முடியுமா?
   "முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவளிடம் இருக்கும் வரை குழந்தை அழுவதில்லை."

        "குழந்தை  எப்போது  உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெரியுமா?

      "அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.

      பெரியவர்  புன்னகையுடன் "உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா?"

       கணவன் விழிக்க,

      பெரியவர் சொன்னார் "இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா! பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள நான் அருமையான ஆலோசனைகளைக்  கூறுகிறேன்."

       கணவன் தலை குனிந்தான் 
வேறென்ன செய்ய முடியும்?


-----------------------------------------------------------

புதன், 10 டிசம்பர், 2014

அது உன்கவலை எனக்கென்ன?

எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை 
....டி.என்.முரளிதரன்

      அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி,  பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

    பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை  வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் மனைவியிடம் சொல்லிக்  கொண்டிருந்தான், "இனி நம் வீட்டில் எலித் தொல்லை இருக்காது. இன்று இரவு ஒரு மசால் வடையை உள்ளே வைத்து எலிப்பொறியை மூலையில் வைத்துவிடு. எலி மாட்டிக்கொண்டுவிடும்"

  தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய எலி வெளியே ஓடிவந்து அங்கிருந்த கோழியிடம் "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

   அதைகேட்ட  கோழி, "ஏ, எலியே! அது உன் கவலை.எனக்கென்ன? எலிப்பொறியில் நானா மாட்டிக் கொள்ளப் போகிறேன்?." என்று அலட்சியத்துடன் சொன்னது.

  வருத்தமடைந்த எலி அருகில் இருந்த வாத்தைப் பார்த்து,"இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" என்று எச்சரித்தது.

   "முட்டாள் எலியே! என்னிடம் ஏன் இதைச் சொல்கிறாய்? அது உன் கவலை எனக்கென்ன?என்னால் உனக்கு உதவ முடியாது, போ!போ!" துரத்தியது வாத்து.

   வேதனையுடன் ஆட்டிடம் சென்று சொன்னது "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை"

   "ஓ! எலியே! உன் நிலை பரிதாபமாகத்தான்  உள்ளது. இருந்தாலுன் அது உன் கவலை. எதற்கும் நீ எச்சரிக்கையாக இரு. மசால் வடை வாசனைக்கு மயங்கி விடாதே!"என்று ஏளனத்துடன் சொல்லி விட்டு தழையைத் தின்ன ஆரம்பித்தது.
    வீட்டு வாசலில் நாய் வாலாட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தது.நாயாவது நம் கவலையை உணர்கிறதா என்று  ," நாயாரே! எச்சரிக்கை! எச்சரிக்கை! எலிப்பொறி ஒன்று புதிதாக வந்துள்ளது தெரியுமா"  என்று எலி நாயிடம் கேட்டது 
"தெரியும்.அதனால் எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. என்னால் இந்த வீட்டுக் காரனுக்கும் கஷ்டமில்லை. மீதி உணவை எனக்குப் போடுகிறான். அதுவே எனக்கு போதும்  நான் அவனிடம் நன்றியுடன் இருப்பேன். வீட்டைக் காப்பேன். உனக்காக நன் கவலைப் பாட முடியாது.நீ போய் உன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தேடு என்றது 

    என்ன  செய்வது என்று புரியாமல் நின்ற எலி அங்கிருந்த பன்றியைப் பார்த்து, "பன்றியே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" எனக் கூவியது.

    "எலியே! எலிப்பொறியால் என்னை என்ன செய்ய இயலும்.?அதனால் எனக்கு கவலையில்லை.  நான் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். என் உதவியை எதிர்பார்பப்பது வீண்?உன் பிரச்சனையை நீதான் தீர்த்துக் கொள்ளவேண்டும்" என்று சொல்லிவிட்டது பன்றி.

    கடைசியாக பசுவிடம் வந்த எலி, "ஓ! பசுவே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

  "உன்னை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உன்னால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களைப் போல் அவர்களுக்கு நீ உதவியா செய்கிறாய்? அவர்கள் சேர்த்து வைத்ததை எல்லாம் தின்று விடுகிறாய். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறாய். உன்னை அவர்கள் கொல்ல  நினைப்பது நியாம்தானே! உன் தலைவிதி அவ்வளவுதான்!" என்று கிண்டலடித்து சிரித்தது பசு.

   யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் இரவு தூங்காமல் எச்சரிக்கையுடன் விழித்திருந்தது எலி.
      
   நடு இரவில் திடீரென்று  எலிப்பொறி "டப்" என்று  ஒரு  சத்தம் கேட்டது. எலி பொறியில் மாட்டிக்கொண்டிருக்கும் என்று நினைத்து வீட்டுக்காரனின் மனைவி எலிப்பொறியை எடுக்க சென்றாள். அதில் ஒரு நச்சுப் பாம்பின் வால் பொறியில் மாட்டிகொண்டது. அதை அறியாமல் பொறியைத் தொட, பாம்பு தீண்டிவிட்டது. வீட்டுக்காரனின் மனைவி அலற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வீட்டுக்காரன். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.
  
  கோழி சூப் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்றுவிடும் என்று யாரோ சொல்ல, அதைகேட்ட வீட்டுக்காரன் தான் வளர்த்த கோழியைக் கொன்றான் சூப் வைத்து சாப்பிட. ஆனாலும் மனைவியின் நிலையில் முன்னேற்றம் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள்,நண்பர்கள்  என்று தினந்தோறும் ஒரு பெருங்கூட்டம் அவனது மனைவியைப் பார்க்க வந்து கொண்டிருந்தது .
   வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக வாத்துகளைக் கொன்றான். அதுவும் போதாமல் ஆட்டையும் இறைச்சிக்காக கொன்றுவிட்டான். தூக்கி எறிந்த ஆட்டின் எலும்புத் துண்டுகளை கடித்து தின்ற  நாயின் தொண்டையில் எலும்பு சிக்கிக் கொண்டு விக்கி விக்கி இறந்து போய்விட்டது. மனைவியின் சிகிச்சைக்கு செலவு அதிகமாகிக் கொண்டே போனது .  பன்றியை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டான்.

  எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனாள். ஈமச் சடங்கிற்கும் அதன் பின் நிகழ்வுகளுக்கும்  பணம் இல்லாதால் வேறு வழியின்றி தான் வளர்த்த மாட்டை மாட்டிறைச்சி வியாபாரியிடம் அடிமாடாக விற்றுவிட்டான்.

    இவை  அனைத்தையும்  வீட்டுக்குள்ளிருந்து   வேதனையுடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்த எலி "நான் மட்டும்தான் ஆபத்தில் இருக்கிறேன் என்று நினைத்து எனது எச்சரிக்கையை இவர்கள் அலட்சியப் படுத்தினார்களே! எனக்கு வந்த ஆபத்து இவர்களை அல்லவா பலி கொண்டுவிட்டது." என்று சொல்லி அழுதது.

"பிறர்  ஆபத்தில்  இருக்கும்போது துன்பம் அவர்களுக்குத்தானே! அதனால் நமக்கென்ன என்று சுயநலத்துடன் இருக்கிறோம். அத்துன்பம் ஏதேனும் ஒருவகையில் நம்மைத் தாக்கும்போதுதான் உண்மையை உணர்கிறோம்."
எலி  எனக்கு சொன்ன பாடமிது. இல்லை! இல்லை  எலி  எனக்கு சொன்ன வேதமிது.

டி.என்.முரளிதரன்

**********************************************************************************************************************************

புதன், 1 அக்டோபர், 2014

பாவம் செய்தவர்கள்

     
    அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மின்சார ரயிலில்  கூட்டமில்லை. இருக்கைகள் காலியாகவே இருந்தன. வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"  என் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது. 

    கணவன் மனைவி , ஒரு சிறுவன், ஒருபெண் குழந்தை (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம்)  கொண்ட சிறு குடும்பம் என் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.தனக்கு ஜன்னலோர இடம் வேண்டுமென்று அடம் பிடித்து அமர்ந்த சிறுவன் அதன் பயனை அனுபவிக்காமல் செல்போனில் கேம் விளையாட ஆரம்பித்து விட்டான்.அந்தப் பெண் குழந்தையோ  நிறைய இடம் இருந்தும் தந்தையின் மடிமேல் அமர்ந்தது . அதன் துறுதுறு பார்வையும் சுறுசுறு  செயல்களும், கலகல மொழிகளும் அந்தப் பெட்டியில் இருந்த சொற்ப பேர்களையும் ஈர்த்தது. புத்தகக் கவிதையில் இருந்து அந்தக் குழந்தைக் கவிதையின் பக்கம் என் கவனம் திரும்பியது.

   தன்னையும் தன கணவனையும் சற்று  நேரம் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து அந்தப் பெண் கேட்டாள் "என்னடி! இப்படி லூசு மாதிரி  பாத்துகிட்டே இருக்கே! '

"உன்னை விட அப்பா அழகா இருக்கார்மா" என்று அதிர்வெடியை சிரித்துக்கொண்டே வீசியது அந்த பிஞ்சுக் குழந்தை"

    பொது இடத்தில் இப்படி சொல்லிவிட்டாளே என்று முகம் முழுவதும் கோபம் லேசாகப் பரவ கணவனைப் பார்த்தாள் அந்த மங்கை.  கொஞ்சம் பெருமிதம் அடைந்தாலும் மனைவியின் மன ஓட்டத்தை அறிந்த கணவன் தன சுட்டு விரலை குழந்தையின் வாய் மீது வைத்து மூடினான். அம்மாவின் கோபம் உணர்ந்த குழந்தை, தாவி சென்று அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு சமாதனப் படுத்த முனைந்து . கோபம் கரைந்து போனதை அறிந்து துணிவு கொண்ட குழந்தை அம்மாவின் கன்னத்தை கிள்ளியது . தடுத்தும் கேளாமல் நெற்றியில் வைத்திருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டது. என்ன நினைத்ததோ அதை எடுத்து மூக்கில் வைத்துப் பார்த்து "எப்படி இருக்கு" என்று தலையை ஆட்டி ஆட்டி கேட்டது.

"இது எதுக்குடி? நீ  பெரிய பொண்ணா வளர்ந்ததும் உனக்கு மூக்கு குத்திடலாம்"

"ஐயய்யோ!  வேணாம், மூக்கு குத்தினா வலிக்கும். நான் குத்திக்க மாட்டேன். ஸ்டிக்கர்தான் வச்சுக்குவேன். அப்பா! அம்மாகிட்ட சொல்லு  என்று செல்லமாய் சிணுங்க,

"சரிடா கண்ணு" என்ற கணவனைப்பார்த்து "இப்படியே செல்லம் கொடுத்தா உருப்பட்டா மாதிரிதான்" என்று மனைவியின் முகமொழி கூறுவதுபோல் தோன்றியது 

    அதற்குள் செல்போன் ஒலிக்க தந்தையின் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து ஆன் செய்து தந்தையின்  காதில் வைத்தாள் .பேசி முடிக்கும் வரை அப்படியே வைத்திருந்தாள். பின் மொபைலை நோண்டி கேமராவை கண்டறிந்து விதம் விதமாக செல்பி எடுத்தாள். அதில் தான் அம்மா அப்பா அண்ணனுடன்  இருக்கும் படத்தை மீண்டும் மீண்டும் காட்டி மகிழ்ந்தாள். 

"டேய்!  இங்க பார்டா"  என்று குட்டித் தங்கை அழைப்பதை  கண்டு கொள்ளாமல் இன்னும் செல்போனில் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தான் சிறுவன் .

நான் லேசான பொறாமையுடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் 

"சே! பெண்குழந்தை இல்லாதவர்கள், பாவம் செய்தவர்கள்" 

**********************************************************************************

ஆச்சர்யக் கொசுறு : குழந்தை மம்மி டாடி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை 


************************************************

எச்சரிக்கை: 

   பல்வேறு காரணங்களால் நான் வலைப் பதிவு எழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இக் காலக்கட்டத்தில் பதிவுலகம் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைத்ததால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும்  எழுத வந்துவிட்டேன். என்ன செய்வது? சகித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. ஹிஹிஹி 


சனி, 7 டிசம்பர், 2013

கம்பனை காக்க வைத்த கவிஞன்

 எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-8
    தூத்துக்குடிக்கு அருகில் மீளவிட்டான் என்று வித்தியாசமான பெயரில் ஒரு ஊர் இருக்கிறதாம்.அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது என்பதில் ஒரு சுவாரசியம் உண்டு.
   கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேறு ஏதோ ஊருக்கு செல்லும்போது இந்த ஊரில் தங்கினாராம்.விடியற்காலையில் அருகே இருந்த தோப்பில் ஏற்றம் இறைத்து பயிர்களுக்குநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் ஒரு விவசாயி. தமிழகத்தில் ஏற்றம் இறைக்கும்போது பாட்டும் வழக்கம் உண்டல்லவா?
    அப்படி அந்த உழவன் பாட்டு பாடிக் கொண்டே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான் அவன் பாடிய பாட்டு கவிச் சக்கரவர்த்தி காதில் வந்து விழுந்தது . தன்னை மிஞ்சிய கவிஞன் இல்லை என்று இறுமாந்திருந்த கம்பர், அப்படி என்னதான் பாடி விடப் போகிறான் இந்த படிப்பறிவில்லாத ஏழை விவசாயி என்று ஏளனத்துடன் பாட்டை கேட்க ஆரம்பித்தார்

"மூங்கில்  இலை மேலே" 
 என்று உச்ச ஸ்தாயியில் தொடங்கினான் ஒரு பாடலை. சாவதானமாக அந்த வரிகளை பாடினானான். விதம் விதமாக ஆலாபனைகள வேறு சேர்த்துக் கொண்டான் .
"அட! நன்றாகப் பாடுகிறானே" என்று வியப்படைந்தார் கம்பர்

"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே"  
என்று  தொடர்ந்து பாட
"ஆஹா! காலையில் இலை மேலே படர்ந்திருக்கும் பணித்துளி கண்டு அழகாக வரிகளை அமைத்து விட்டானே!. நமக்குக் கூட காலைக் காட்சியை பார்க்கும்போது இப்படி தோன்றியதில்லையே அடுத்த வரி என்னவாக இருக்கும்" ஆவல் பற்றிக் கொண்டது கம்பரை.
 மீண்டும் மீண்டும் பலமுறை அதையே பாடி இடையில்  சால் கணக்கின் எண்ணிக்கையையும் அதே ராகத்தில் பாடினான்.
கம்பர், அடுத்த வரி என்ன பாடப் போகிறான் என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும்  முதலில் இருந்து  "மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே......."  என்று பாட
"திரும்பவும் முதலில் இருந்தா?சீக்கிரம் அடுத்த வரியை  பாடுப்பா" என்றார் மனதிற்குள்
"தூங்கு  பனிநீரை"  என்று மூன்றாவது அடியை எடுத்தான். 
உற்சாகமானார் கம்பர்  
அதற்குள் போதுமான நீர் பாய்ந்து விட்டது என்று உதவிக்கு வந்தவன் உரக்கக் கூற பாட்டை அப்படியே நிறுத்தி விட்டு ஏற்றத்திலிருந்து  இறங்கி வீட்டுக்குப் புறப்பட ஆரம்பித்து விட்டான் அந்த விவசாயி.. கம்பருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
"அட! என்ன இவன் ஆவலை தூண்டிவிட்டு பாட்டை நிறுத்தி விட்டானே! நம்மை விட பெரிய கவியாய் இருப்பான் போலிருக்கிறதே !
அடுத்த வரி என்னாவாக இருக்கும்? பலவாறு சிந்தித்தும் பொருத்தமான  வரி கிடைக்கவில்லை.தான் அறிந்தவற்றை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தார். இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. அதை தெரிந்து கொள்ளாமல் அவர் மனம் சமாதானம் அடைவதாக  இல்லை. ஒரு பாமரன் தன்னை புலம்பவைத்துவிட்டானே என்று நொந்து கொண்டார் கம்பர்.அந்தக் குடியானவனை தேடி சென்று கேட்கலாமா என்றும் நினைத்தார். அதற்கு அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தன் பயணத்தையும் ஒத்திவைத்துவிட்டு அடுத்த நாள் காலைவரை காத்திருந்து பாடலை அறிந்து கொள்ள  முடிவு செய்தார்.
இரவு  முழுவதும் அவருக்கு உறக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார். விடிந்ததும் அந்த இடத்திற்கு வந்தார். நேற்று ஏற்றம் இறைத்தவனே வந்திருந்தான். நிம்மதி அடைந்தார் கம்பர்.

"இன்னும் சிறிது நேரத்தில் பாடத் தொடங்கினால் அடுத்த வரிகள் என்ன என்று தெரிந்துவிடும்'
 . திடீரென்று ஐயம் வந்து விட்டது கம்பருக்கு  வேறு பாட்டு பாடி விட்டால் என்ன செய்வது 
"ஸ்ரீராமா! அவன் அதே பாட்டையே பாட்டையே பாடவேண்டும்" ,வேண்டிக்கொண்டார் கம்பர்.
கம்பரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அதே பாட்டையே பாடத் தொடங்கினான். 
"மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே" என்று ஆரம்பிக்க 
"அது தெரியுமப்பா. அடுத்த வரியும் தெரியும் "தூங்கு பனி நீரை" சீக்கிரம் பாடு" பொறுமை இழந்த கம்பர் தன்னை மறந்து சற்று உரக்கவே சொன்னார் 
"தூங்கு பனி நீரை
வாங்கு கதிரோனே!" 
என்று பாட கம்பர் துள்ளிக் குதித்தார் ,

"என்ன அழகு!மூங்கில் இலையை, பனித்துளி சூரியனோடு   பொருத்திக் காட்டியதுதான்  எவ்வளவு நயம்! எவ்வளவு சிந்தித்தும் நமக்கு இது தோன்றவில்லையே! " என்று எண்ணி வெட்கம் அடைந்தார் கம்பர் .

அதற்கு மேல் தான் செல்ல நினைத்த இடத்திற்கு போக அவருக்கு மனம் வரவில்லை.பயணத்தை மேற்கொண்டு தொடராமல் தனது ஊருக்கு மீள திரும்பி விட்டாராம். 
அதனால்தான் அந்த இடத்திற்கு மீளவிட்டான் என்று பெயர் வந்ததாம்!
கம்பனையே காக்க  வைத்து விட்டான் மீளவிட்டான்  கிராம விவசாயி.
 
********************************************************************************************
 பதிவரும் நண்பருமான ரூபன் தீபாவளியை முன்னிட்டு ஒரு கவிதைப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். அந்த உற்சாகம் தொடர பொங்கலுக்கு ஒரு கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். இம்முறை அரும்புகள் மலரட்டும் வலைப்பூ எழுதும் பாண்டியனும் ரூபனுடன் இணைந்துள்ளார். போட்டி வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள் 
போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்.
2013-11-26_181950

2013-12-02_013918

கட்டுரைப் போட்டி நடத்தும் ரூபன்& பாண்டியன் இவர்கள்தான்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்… தணியாத தாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகிறது… உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்… போட்டியில் கலந்து கொள்ளும்  போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பதிவாக பகிர்ந்துள்ளோம்…

குறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும்

 

1 ரூபனின் வலைத்தளத்திலும் (https://2008rupan.wordpress.com)

2திண்டுக்கல் தனபாலன் (அண்ணா)(http://dindiguldhanabalan.blogspot.com/)  

ஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்

மீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….

குறிப்பு : கட்டுரைக்கு உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…
********************************************************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?  
 எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க! எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை
 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க! 

 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை 6 இதுவல்லவா வெற்றி!
நீங்கள் ஏழையா?பணக்காரரா?

***************************************************************************************

வெள்ளி, 8 நவம்பர், 2013

நீங்கள் ஏழையா?பணக்காரரா?

எ.பா.ப.கு.க- 7
                யார் ஏழைகள்? 
       அவர் ஒரு பெரிய பணக்காரர். தன் ஒரே மகனை செல்லமாக வளர்த்து வந்தார். அவன் கேட்காததையும் வாங்கித் தருவது அவரது பழக்கம். தான் அவனை எவ்வளவு சிறப்பாக வளர்க்கிறோம் என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டுமென்று விரும்பினார். நாம் பணக்காரர்கள். நமக்கு உள்ள வசதிகள் பலருக்கு இல்லை என்பதை மகன் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஏழை கிராம மக்கள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிய வேண்டும். அப்போதுதான் அவன் எவ்வளவுஅதிர்ஷ்டம் செய்தவன் தெரிந்து கொள்வான் 

  எப்படி ஒரு வளமான வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருக்கிறது என்பதை புரிய வைக்க முனைந்தார். அவனை ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்றார். அந்த கிராமத்தில் இருந்த ஓர் ஏழைக் குடியானவன் வீட்டில் சில நாட்கள் தங்க ஏற்பாடு செய்து, ஒரு வாரம் அவர்களோடு பழகி அவர்கள் அன்றாட வாழ்க்கையை கவனித்து வருமாறு பணித்துவிட்டு சென்றார்.

அந்த சிறுவனும் அவர்களுடன் தங்கி அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றும், அவர்களோடு உண்டும் உறங்கியும் வந்தான். சிறிது நாட்களுக்குப் பின் தந்தை மீண்டும் வந்து மகனை அழைத்து சென்றார்.


திரும்பும் வழியில் மகனைப் பார்த்து அப்பா கேட்டார், "இந்த அனுபவம் எப்படி இருந்தது?"

”மிகவும் நன்றாக இருந்தது அப்பா?” என்றான் மகன்

“ஏழைகள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை கவனித்தாயா? பணக்காரர்களாகிய நம்முடைய வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுப் பாரத்தாயா? நீ கவனித்த விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்" என்றார் தந்தை

மகன் சொல்ல ஆரம்பித்தான்
 "அப்பா நம்மிடம் ஒரே ஒரு நாய்தான் இருக்கிறது. அவர்களிடமோ நான்கைந்து நாய்கள் இருக்கிறது,

விடியற்காலையில் நாம் அலாரம் வைத்து எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கோ சேவல் கூவுவது அலாரமாக இருக்கிறது

நமக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக் கூட யார் என்று தெரியாது. அவர்களுக்கோ ஊரில் உள்ள அனைவரையும் தெரிந்திருக்கிறது.

நம் வீட்டு நீச்சல் குளம் சின்னதாக இருக்கிறது. அவர்களுடைய ஆறு ரொம்ப பெரிதாக இருக்கிறது. அது எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது என்று கூட தெரியவில்லை.

நம் வீட்டு தோட்டத்தில் வெளி நாட்டு விளக்குகளை வைத்து அலங்கரித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் வயலில் நட்சத்திரங்கள் மின்னுகிறது.

நமக்கு பணிவிடை செய்வதற்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களோ மற்றவர்களுக்கு பணிவிடை செய்கிறார்கள்.

நாம் கடையில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குகிறோம். அவர்களோ தங்கள் உணவுப் பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள்.

இங்கு காசு கொடுத்தால்தான் நாம் சொல்வதை கேட்கிறார்கள். அங்கு ஆடு மாடுகள் கூட அவர்கள் பேச்சைக் கேட்கின்றன

ஏ.சி இல்லாவிட்டால் நம்மால் தூங்க முடியவில்லை. அவர்கள் மின்சாரம் இல்லாவிட்டால் கூட நிம்மதியாக தூங்குகிறார்கள்.

இங்கு முன்னரே அறிந்தவராக இருந்தாலும் முகம் கொடுத்து பேச மறுக்கிறோம். அங்கோ முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் பல நாள் பழகியவர்கள் போல் பேசுகிறார்கள்.

நாம் சும்மா இருப்பதுபோல் தோன்று கிறது. அவர்களோ எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.............”

என்று சொல்லிக் கொண்டே போக தந்தை வாயடைத்து நின்றார்.

மேலும் அவன் தந்தையைப் பார்த்து, "அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்" என்றான்

"என்ன! சொல் மகனே!" -தந்தை 

  முகத்தில் ஐயம் நீங்காமல் அந்த சிறுவன் கேட்டான், "உண்மையில் நாம் பணக்காரர்கள்தானா?

              ******************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?   எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
 
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! 

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை

 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க!

சனி, 28 செப்டம்பர், 2013

இதுவல்லவா வெற்றி!

   
 எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள்
இதோ இன்னும் சில  நிமிடங்களில் அந்த   ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதோ ஒன்பது பேர் போட்டியில் கலந்து கொள்ள  தொடக்கக் கோட்டுக்கருகே  தயாராக இருக்கின்றனர். கலந்து கொள்பவர்களின் முகத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி தெரிகிறது. போட்டி தொடங்குவதற்கான விசில் ஒலிக்கப்பட உடனே ஓட ஆரம்பிக்கின்றனர். பார்ப்போர் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். உற்சாக வார்த்தைகளை உரக்கக் கூவுகின்றனர். ஒருவரை ஒருவர் முந்த முயல்கின்றனர். அடடா! என்ன இது? ஓடிக்கொண்டிருந்த ஒருவன் கீழே விழுந்து விட்டானே! ஐயோ! அவனால் எழுந்திருக்க முடியவில்லையே! ரத்தம் வேறு வருவது போல் தெரிகிறதே! அவன் அழ ஆரம்பித்து விட்டானே! அவனது அழுகுரல் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனரே! முன்னால் ஓடிக்கொண்டிருந்த மற்ற எட்டுபேரும்   அந்த அழுகுரல் கேட்டு நின்று திரும்பிப் பார்க்கிறார்கள். தங்களில் ஒருவன் கீழே விழுந்து அழுதுகொண்டிருப்பதைப் கண்டு   அவர்கள் முகத்தில் அதிர்ச்சி தொற்றிக் கொள்ள அவனை நோக்கி ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பிக்கின்றனர். விழுந்த சிறுவன் எழுந்திருக்க முயறசி செய்கிறான். பாவம்! முடியவில்லையே!  அவனருகில் வந்து விட்டாள் போட்டியில் கலந்து கொண்ட அந்தப் பெண்.

என்ன நடக்கப் போகிறது அங்கே! பார்வையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த சிறுவனின் கண்களில் கண்ணீர்  பெருகிக் கொண்டிருக்க அவனை தோளின் மீது கையைப் போட்டு  லேசாக அணைத்து தூக்கி நிறுத்துகிறார். ஆஹா! அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆறுதல்  கூறுகிறாரே. என்ன ஆச்சர்யம் மற்றவர்களும் அவனருகே வந்து அன்புடன் விசாரிக்கின்றனரே! ஒன்றும் புரியாமல் பார்வையாளர்கள் அந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    என்ன இது கண்முன்னே ஒரு  அதிசயம் நடந்து கொண்டிருக்கிறதே! அந்த எட்டு பேரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்தப் பையனையும் சேர்த்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பிக்கின்றனர். இதோ ஓன்பது பேரும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டை தொடுகின்றன்றார்களே! அவர்களை விட்டுவிட்டு பார்வையாளர்களைப் பார்க்கிறேன்.  யாருக்கு பரிசு கிடைக்கப் போகிறது? ஆவலுடன் எட்டிப் பார்க்கின்றனர் அவர்கள்.  ஒன்பது பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறார்கள் . தங்க மெடல்கள் வழங்குகிறார்கள்.. அத்தனை பேர் விழிகளிலும் கண்ணீர். எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அத்தனை பேரின் கண்ணீர்த்துளிகளிலும் அந்தக் காட்சி எதிரொளித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 இதில் பரவசப்படவோ  கண்ணீர் விடவோ என்ன இருக்கிறது என்கிறீர்களா? அவசர்ப்பாடாதீர்கள்.கொஞ்சம் இருங்கள் 
   நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த வர்ணனை  சியோட்டில் நடந்த ஊனமுற்றோர்களுக்கான  ஓட்டப் பந்தயம் பற்றியது.
  இப்போது சொல்லுங்கள் என்கண்ணில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணீர் உங்கள் கண்களிலும் வழிந்து கொண்டிருக்கிறதா? மனிதம் போற்றுபவர் அல்லவா நீங்கள்? கட்டாயம் கண்ணீர் வரத்தான் செய்யும்.

************************

குறிப்பு: எப்போதோ படித்த செய்தியை வைத்து இந்த பதிவை புனைந்திருக்கிறேன்.முந்தைய  அறிவியல் பதிவுகளை படித்து அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.



*********************************************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?

எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-

எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க!

வியாழன், 20 ஜூன், 2013

யாரோ உங்களை பாக்கறாங்க!

 

எட்டிப்  பார்த்து படித்த குட்டிக் கதை
                   யாரோ  பார்க்கிறார்கள்
.
  பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரியவர்  பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார், பேருந்து இன்னும் வரவில்லை. லேட்டாகப் போனால் முதலாளி திருப்பி அனுப்பி விடுவாரோ என்கிற கவலை அவர் முகத்தில் தெரிகிறது. கையைப் பிசைந்துகொண்டு கடிகாரத்தையும். சாலையையும் மாறி மாறி பார்த்த்துக்கொண்டிருக்கிறார். ஓர் வழியாக பேருந்து வந்து அதில் அவசரமாக ஏறுகிறார். உட்கார இடமும் கிடைத்துவிட்டது. இப்போது அவரது சிந்தனை தனது அவசர பணத் தேவையை எப்படி சமாளிப்பது என்பதில் இறங்கியது. முதலாளியைக் கேட்டால் கொடுப்பாரோ மாட்டாரோ தெரியவில்லை.
         கல்லூரியில்  படிக்கும் மகள் கேட்ட புத்தகங்கள் வாங்க வேண்டும். மனைவி சொன்ன மளிகைப் பொருட்கள்  வாங்க வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தனது இயலாமையை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார் .அவருக்கு அவர் மேலேயே கோபம் வந்தது.

       அப்போது ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக தன் பாக்கெட்டிலிருந்து சில்லறை எடுக்கிறார். சில்லறை எடுக்கும்போது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று கிழே விழுகிறது.  அதை அவர் கவனிக்கவில்லை. பெரியவரின் காலடியில் அது நகர்ந்து வந்துவிடுகிறது. பெரியவர் அதை எடுத்து கொடுக்க நினைக்கும்போது காசை தவற விட்டவர் முன்னால் சென்றுவிடுகிறார். இப்போது பெரியவர் மனதில் சிறிது சலனம் ஏற்படுகிறது. யாரும்தான்  பார்க்கவில்லையே! அந்தப் பணத்தை நாம் எடுத்துக்கொண்டால் என்ன? நாமாகத் திருடினால் தானே தப்பு. தானாகக் கிடைப்பதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அப்படியே ஏமாற்றுவதாக இருந்தாலும், எவ்வளோ பேர் எப்படி எல்லாமோ ஏமாற்றுகிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். இது பெரிய தவறு ஒன்றுமில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு அதை எடுக்கலாம் என்று கீழே குனியும் முன் சுற்றுமுற்றும் பார்க்கிறார். அப்போதுதான் கவனித்தார். சிறிது தூரத்தில் வெள்ளை சட்டையும் கூலிங் க்ளாசும் அணிந்த  ஒருவர் இவரையே பார்த்துக்கொண்டிருந்தார். லேசாக புன்னகைக்கவும் செய்தார். பணம் விழுந்ததை அவரும் பார்த்திருப்பாரோ?
       பெரியவருக்கு சிறிது நடுக்கம் ஏற்ப்பட்டது. தான் பணத்தை எடுக்க முற்பட்டதை பார்த்துவிட்டாரோ?. சரி சிறிது நேரம் பார்க்கலாம். ஒருவேளை அவர் இறங்கிவிட்டால் அப்போது எடுத்துக்கொள்ளலாம் என்று கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது போல் தோன்றியது. முன்பின் பழக்கமில்லாத அந்த வெள்ளை சட்டைக்காரர் மேல் கோபமாக வந்தது.
      
       வெள்ளை சட்டைக்காரருக்கு பக்கத்தில் இருந்தவர் இறங்கினாரே தவிர,அவர் இறங்கவில்லை. அவரது இடத்தில் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய போலீஸ் காரர் அமர்ந்தார். போலீஸ் காரர் உட்கார்ந்ததும் அவரது பக்கத்தில் இருந்த வெள்ளை சட்டைக்காரர் அவரிடம் என்பக்கமாகப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பணம் விழுந்ததைப் பற்றியும் தன்னைப் பற்றியும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ? பெரியவருக்கு பயம் வந்து விட்டது. அவருடைய பிரச்சனைகள் எல்லாம் மறந்து விட்டன. போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டால் அவமானமாகப் போய்விடுமே என்று நினைத்தவர், சுற்றுமுற்றும் பார்த்தார். பணத்தை தொலைத்தவர் அது தொலைத்தது தெரியாமலே தூரத்தில் நின்று கொண்டிருந்தார். நல்லவேளை! அவர் இறங்கவில்லை  நினைத்த பெரியவர் சட்டென்று அந்தப் பணத்தை கையில் எடுத்து பணத்தை தவற விட்டவரை அழைத்து, இந்தப் பணம் உங்களடையதுதானா பாருங்கள் என்று அவரிடம் கொடுத்தார்.
       அவர் தன் சட்டைப்பயில் கைவிட்டுப் பார்த்து அது அங்கு இல்லாதது கண்டுஅதிர்ச்சி அடைந்து  ஆமாம் சார், என்னோடதுதான்! டிக்கெட் எடுக்கும்போது விழுந்துடிச்சி போல இருக்கு. ரொம்ப நன்றி சார் என்ற சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டதோடு "உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதாலதான் இன்னும் மழை பெய்யுது " என்று உணர்ச்சி வசப்பட்டார் 

      இப்போதுதான் பெரியவருக்கு திருப்தியாக இருந்தது. பெரியவர் வெள்ளை சட்டைக்காரரைப் பார்க்க அவர்  புன்னகையுடன்,"அந்த பணத்தை எடுத்திருந்தா இந்த திருப்தி கிடச்சிருக்குமா?" என்று கேட்பது போல் தோன்றியது.

      அடுத்த நிறுத்தம் வந்தது. அந்த வெள்ளை சட்டைக்காரர் மெதுவாக  எழுந்தார். போலீஸ்காரர் அவரிடம் பக்கத்தில் இருந்த ஸ்டிக்கை எடுத்துக் கொடுக்க அவர்  தடுமாறிக்கொண்டு இறங்குகிறார்.
      "அட! என்ன இது! அந்த கூலிங் க்ளாஸ் அணிந்த வெள்ளை சட்டைக்காரர் கண் தெரியாதவரா? இவரைப் பார்த்துதான் இவ்வளவு  நேரம் பயந்தேனா?
       இந்த உண்மை தெரிந்திருந்தால் நான் பணத்தை எடுத்து விட்டிருப்பேனே? நல்ல காலம்! என்னைக்  தவறு செய்யாமல் தடுத்த அவர் கண் தெரியாதவர் அல்ல. என் கண் திறந்த கடவுள்.
      இப்பொழுது அவர் மனதில் சொல்ல முடியாத திருப்தி நிலவியது.

      'யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வுதான் நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல; நல்லது செய்யவும் அதுதானே தூண்டுகிறது. அந்த யாரோ சமுதாயமாகவும் இருக்கலாம் கடவுளாகவும் இருக்கலாம்.'
 *******************************************************************************************************

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அதிகம் பேர் விரும்பிய கதை "காபி மாதிரிதான் வாழ்க்கை"

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3
காபி மாதிரிதான் வாழ்க்கை
     30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இக் கதையை யூ ட்யூபில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதை எழுதியவர் யார் என்று தெரியாது. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்
   தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.  வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.
  திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற  சாதாரண கோப்பைகள் வரை  பல வகைகள் இருந்தன. 
 
  அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு  நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற  வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும்  அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்

  இப்போது பேராசிரியர் பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான்  மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை  காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

  அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.
வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி  பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும்  வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.
  மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை. 
"எளிமையாய் வாழுங்கள்!
கருணையுடன் பேசுங்கள் 
எல்லோரையும் நேசியுங்கள்! 
வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்" என்றார் பேராசிரியர் 
உண்மைதானே!

இதோ இந்தக் கதையின் ஆங்கில வீடியோ

 

****************************************************************************************************************
 இதைப் படிச்சாச்சா?

****************************************************************************************************


ஞாயிறு, 20 மே, 2012

அது உன் கவலை! எனக்கென்ன?


 அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி,  பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான். .மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

    பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை  வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் மனைவியிடம் சொல்லிக்  கொண்டிருந்தான், "இனி நம் வீட்டில் எலித் தொல்லை இருக்காது. இன்று இரவு ஒரு மசால் வடையை உள்ளே வைத்து எலிப்பொறியை மூலையில் வைத்துவிடு. எலி மாட்டிக்கொண்டுவிடும்"

  தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய எலி வெளியே ஓடிவந்து அங்கிருந்த கோழியிடம் "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

   அதைகேட்ட  கோழி, "ஏ, எலியே! அது உன் கவலை.எனக்கென்ன? எலிப்பொறியில் நானா மாட்டப் போகிறேன்?." என்று அலட்சியத்துடன் சொன்னது.

  வருத்தமடைந்த எலி அருகில் இருந்த வாத்தைப் பார்த்து,"இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" என்று எச்சரித்தது.

   "முட்டாள் எலியே! என்னிடம் ஏன் இதைச் சொல்கிறாய்?என்னால் உனக்கு உதவ முடியாது, போ!போ!" துரத்தியது வாத்து.

   வேதனையுடன் ஆட்டிடம் சென்று சொன்னது "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை"

   "ஓ! எலியே! உன் நிலை பரிதாபமாகத்தான்  உள்ளது. எதற்கும் நீ எச்சரிக்கையாக இரு. மசால் வடை வாசனைக்கு மயங்கி விடாதே!"
என்று ஏளனத்துடன் சொல்லி விட்டு தழையைத் தின்ன ஆரம்பித்தது.

    என்ன  செய்வது என்று புரியாமல் நின்ற எலி பன்றியைப் பார்த்து, "பன்றியே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" எனக் கூவியது.

    "எலியே! எலிப்பொறியால் என்னை என்ன செய்ய இயலும்.? அதனால் எனக்கு கவலையில்லை. நான் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். என் உதவியை எதிர்பார்பப்பது வீண்?" என்று சொல்லிவிட்டது பன்றி.

    கடைசியாக பசுவிடம் வந்த எலி, "ஓ! பசுவே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

  "உன்னை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உன்னால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களைப் போல் அவர்களுக்கு நீ உதவியா செய்கிறாய்? அவர்கள் சேர்த்து வைத்ததை எல்லாம் தின்று விடுகிறாய். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறாய். உன்னை அவர்கள் கொல்ல  நினைப்பது நியாம்தானே! உன் தலைவிதி அவ்வளவுதான்!" என்று கிண்டலடித்து சிரித்தது பசு.

   யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் இரவு தூங்காமல் எச்சரிக்கையுடன் விழித்திருந்தது எலி.
      
   நடு இரவில் திடீரென்று  எலிப்பொறி மூடிக் கொள்ளும் சத்தம் கேட்டது. எலி மாட்டிக்கொண்டிருக்கும் என்று நினைத்து வீட்டுக்காரனின் மனைவி எலிப்பொறியை எடுக்க சென்றாள் அதில் ஒரு நச்சுப் பாம்பின் வால் பொறியில் மாட்டிகொண்டது. அதை அறியாமல் பொறியைத் தொட, பாம்பு தீண்டிவிட்டது. வீட்டுக்காரனின் மனைவி அலற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வீட்டுக்காரன். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.
  
  கோழி சூப் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்றுவிடும் என்று யாரோ சொல்ல, அதைகேட்ட வீட்டுக்காரன் தான் வளர்த்த கோழியைக் கொன்றான் சூப் வைத்து சாப்பிட. ஆனாலும் மனைவியின் நிலையில் முன்னேற்றம் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள்,நண்பர்கள்  என்று தினந்தோறும் ஒரு பெருங்கூட்டம் அவனது மனைவியைப் பார்க்க வந்து கொண்டிருந்தது .
   வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக வாத்துகளைக் கொன்றான். அதுவும் போதாமல் ஆட்டையும் இறைச்சிக்காக கொன்றுவிட்டான். மனைவியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பன்றியை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டான்.

  எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனாள். ஈமச் சடங்கிற்கும் அதன் பின் நிகழ்வுகளுக்கும்  பணம் இல்லாதால் தான் வளர்த்த மாட்டை மாட்டிறைச்சி வியாபாரியிடம் அடிமாடாக விற்றுவிட்டான்.

    இவை  அனைத்தையும்  வீட்டுக்குள்ளிருந்து   வேதனையுடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்த எலி "நான் மட்டும்தான் ஆபத்தில் இருக்கிறேன் என்று நினைத்து எனது எச்சரிக்கையை இவர்கள் அலட்சியப் படுத்தினார்களே! எனக்கு வந்த ஆபத்து இவர்களை அல்லவா பலி கொண்டுவிட்டது." என்று சொல்லி அழுதது.

"பிறர்  ஆபத்தில்  இருக்கும்போது துன்பம் அவர்களுக்குத்தானே! அதனால் நமக்கென்ன என்று சுயநலத்துடன் இருக்கிறோம். அத்துன்பம் ஏதேனும் ஒருவகையில் நம்மைத் தாக்கும்போதுதான் உண்மையை உணர்கிறோம்."
எலி  எனக்கு சொன்ன பாடமிது. இல்லை! இல்லை  எலி  எனக்கு சொன்ன வேதமிது.

பிடித்திருந்தால்  கருத்தளிப்பீர்! வாக்களிப்பீர்!

***********************************************************************************************
இதையும் படியுங்க!


  

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்

   ஆல்பர்ட ஐன்ஸ்டீன் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி யாகக் கருதப்படுவர். மிகச் சிறந்த அறிவாளி என்று உலகத்தாரால் ஒப்புக்கொள்ளப் பட்டவர்.அவரது E=mc2.  என்ற ஆற்றல்,நிறை, ஒளி இவற்றிகிடையே உள்ள தொடர்பை விளக்கும் ஃபார்முலா அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. அவர் நோபல் பரிசு வாங்கியதும் எல்லோருக்கும் தெரிந்துதான் .(இது பற்றி இதுக்குமேல எனக்கு  ஒன்னும் தெரியாது).
நான் சொல்லப்போவது ஐன்ஸ்டீன் பற்றிய ஒரு சம்பவம். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். (இது உண்மைதானா அப்படின்னு ஆராய்ச்சி பண்ணக் கூடாது.)

  ஐன்ஸ்டீன் தன்னுடைய புவிசார்புக் கொள்கையை வெளியிட்டதும், அதை அப்போது பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால் எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.. அதனால் அவர் ஊர் ஊராகச் சென்று பல்வேறு அறிஞர்களுக்கு மத்தியில் பல்கலைக் கழகங்களில் சென்று விளக்க உரை ஆற்றுவது வழக்கம். அப்போது அவர்கள் கேட்கும்  சந்தேகங்களுக்கும் தெளிவாக விடை அளிப்பார்.
  ஒருமுறை ஒரு  பல்கலைக் கழகத்திற்கு உரையாற்றுவதற்காக செல்ல வேண்டி இருந்தது. ஏராளமான விளக்கக் குறிப்புகளுடன் காரில் ஏறினார் ஐன்ஸ்டீன்.
  காரை இயக்கிய ஓட்டுனர் இதைப் பார்த்து சிரித்தார். "எதற்கு சிரிக்கிறாய்" என்று கேட்டார் ஐன்ஸ்டீன். "ஐயா, ஒவ்வொரு நாளும் பல இடங்களுக்கு சென்று இதைப் பற்றியே சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். நீங்கள் என்னென்ன பேசுவீர்கள் என்று எனக்கே நன்றாகத் தெரியும்." ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார். "உனக்கு இந்த அறிவியல் தத்துவம்  புரிகிறதா?" என்று கேட்டார். "எனக்கு அது புரியாது. ஆனால்  நீங்கள் என்ன பேசுவீர்களோ அவை எனக்கு ஒரு வரி கூட விடாமல் மனப்பாடமாகத் தெரியும்" என்றார். 

  வியப்படைந்த ஐன்ஸ்டீன் எங்கே சொல் பார்க்கலாம் என்று கேட்க  ஓட்டுனர் காரை ஒட்டிக்கொண்டே ஐன்ஸ்டீனின் உரையை பேசிக்காட்டினார் ஓட்டுனர். நிறையப் பேர் வழக்கமாக கேட்கும் சில சந்தேகங்களைக் கேட்க அதற்கும் ஓட்டுனர் ஐன்ஸ்டீன் போலவே விளக்கம் அளித்தார்.
   இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் ஒரு குறும்பு செய்ய நினைத்தார்.

  ஒட்டுனரைப் பார்த்து, "இப்போது நான் உரையாற்றச் செல்லும் பலகலைக் கழகத்தில் உள்ளவர்கள் இதுவரை  யாரும் என்னைப் பார்த்ததில்லை. அதனால்  எனக்கு பதிலாக நீ உரையாற்று. உனது ஓட்டுனராக நான் வருகிறேன்". என்றார்.
      ஓட்டுனர் ஐன்ஸ்டீனின் ஆடைகளை அணிந்து கொள்ள, ஐன்ஸ்டீன் ஒட்டுனாராக மாற, பேச வேண்டிய அரங்கிற்குள் நுழைந்தனர். இருவருக்கும் பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐன்ஸ்டீனாகச் சென்ற ஓட்டுனர் மேடையில் அமர ஒட்டுனராகச் சென்ற ஐன்ஸ்டீன் முன் வரிசையில் உட்கார  வைக்கப்பட்டார்.(வி.ஐ.பி. இன் ஓட்டுனர் ஆயிற்றே)

      ஓட்டுனர் சொற்பொழிவைத் தொடங்கினார். ஐன்ஸ்டீன் போலவே ஏற்ற இறக்கத்துடன் தடுமாற்றமின்றி மிகக் கடினமான அந்த அறிவியல் கருத்தை அற்புதமாக விளக்கினார்.  கூட்டம் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தது.  உரை முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி பாராட்டு தெரிவித்தனர். ஐன்ஸ்டீனும் ஒட்டுனருடைய  திறமையைக் கண்டு கைகள் தட்டி பாராட்டினார்.
     பின்னர் அரங்கில் உள்ள அறிஞர்களும் மாணவர்களும் தங்கள் ஐயங்களை கேட்க ஆரம்பித்தனர். இவை வழக்கமாக எல்லா இடங்களிலும் கேட்கப் படுவதால் எல்லோருடைய சந்தேகங்களுக்கும் சாமார்த்தியமாக விடை அளித்தார்  ஓட்டுனர்.
         திடீரென்று மாணவன் ஒருவன் எதிர்பாரா விதமாக  இதுவரை யாரும் கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டான்.
     இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்லப் போகிறாய்? என்று சொல்வது போல் குறும்பு சிரிப்புடன் ஓட்டுனரை நோக்கினார் ஐன்ஸ்டீன்.
     எதிர்பாராத இந்தக் கேள்வியால் சில வினாடிகள் தடுமாறிய ஓட்டுனர், தன்னைப் பார்த்து கிண்டலாகச்  சிரித்துக்கொண்டிருந்த ஐன்ஸ்டீனைப் பார்த்தார்.
 பிறகு சட்டென்று, கேள்வி கேட்ட அந்த மாணவனைப் பார்த்து, “ தம்பி! இந்த எளிதான விஷயம் உனக்குப் புரியாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. உனது ஐயத்தை தீர்க்க நான் தேவை இல்லை. இதோ எதிரில் அமர்ந்திருக்கும் எனது ஒட்டுனரே போதும். ஓட்டுனரே! வந்து  இந்த கேள்விக்கு விடை சொல்லுங்கள் என்று  ஐன்ஸ்டீனை அழைத்தார்.
      
  இதை எதிர்பாராத ஐன்ஸ்டீன் என்னைவிட நீதான் புத்திசாலி என்று மனதுக்குள் ஓட்டுனரின் சமயோசித புத்தியைப் பாராட்டிக்கொண்டே  விளக்கம் சொல்ல எழுந்தார்.
************************************************************