சாதனைகள் பல புரிந்தவர் சச்சின்.இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்.பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்.அவர் ஓய்வெடுக்க வேண்டிய. தருணம் வந்து விட்டது என்பதை அவரது ஆட்டம் உணர்த்துகிறது. அதை உணர்ந்து கொண்டு புகழின் உச்சியில் இருக்கும்போதே ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்பது என் போன்ற ரசிகர்களின் விருப்பம். அதன் விளைவாக எழுந்ததே இந்தக் கவிதை
சச்சினுக்கு ஒரு வேண்டு கோள்!
விலகி விடு
சச்சின்!
அன்பு சச்சின்!
வாழ்த்தும் வாய்கள்
வசை பாடுமுன் வழிவிடு!
கடவுள் என்று போற்றுபவர்கள்
கண்டபடி தூற்றுவதற்குள்
சத்தமின்றி விலகி விடு
பதாகை காட்டுபவர்
பாதுகைகளையும்
காட்டத் தாயாராகுமுன்
பதுங்கிவிடு!
பூக்களை தூவுபவர்கள்
கற்களை எறிவதற்குள்
கழன்றுகொள்!
வாய்ப்பு கொடுத்ததற்காக
நாட்டுக்கு
நன்றி சொல்லிவிட்டு
நகர்ந்து கொள்!
யாரும் அடைய முடியாத
உயரத்தில் இருக்கிறாய்
தடுமாறி விழுவதற்குள்
தானாக இறங்கிவிடு!
நீ
ஆடிச் சாதித்து விட்டாய்!
பிறரையும்
சாதனை செய்ய விடு!
அதில் சந்தோஷப்படு!
உண்மையில் நீ
விளையாட்டை
விரும்புகிறாயா?
ஒரு சச்சின் போதாது
ஓராயிரம் சச்சின்கள்
உருவாக நீ கொஞ்சம்
உழைத்துப் பார்
உனது சாதனைகளின்போது
ஏற்பட்ட சந்தோஷத்தை விட
இது உயர்ந்தது
என்பதை உணர்வாய்!
மக்கள் பிரதிநிதியாய் மட்டும்
சிக்கல் இன்றி செயல்படு!
இளைஞர் களுக்கு
ஊக்கம் கொடு!
எள்ளி நகையாடுமுன்
நல்லதோர் முடிவெடு!
இப்படிக்கு
உன்
நன்மையை நாடும் ரசிகர்கள்
******************************************************************
******************************************************************