சமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் விளம்பரத்திற்காக மீண்டும் காதலையும் சாதியையும் கையில் எடுத்துக் கொண்டது 31.03.2013 அன்று நடந்த நீயா நானா? இம்முறை சிறப்பு விருந்தினர்களாக சேரன், பாலாஜி சக்திவேல் பிரகாஷ் ராஜ், ராதா மோகன், வைரமுத்துவின் மகன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவம் படத்தின் ஆடியோ ரிலீசும் இந்நிகழ்ச்சியிலேயே சற்று வித்தியாசமான முறையில் செய்யப்பட்டது, விளம்பரம்தான் என்றாலும் நோக்கம் நல்லதாக இருந்தது. இறுதிவரை நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் மனம் கனத்துப் போகாமல் இருக்க முடியாது.
வெறிகொண்ட முரட்டு வில்லனாக, அரிவாள்,துப்பாக்கி,கம்பு தூக்கி ஆக்ரோஷத்துடன் நடித்து சேர்த்த பணத்தை தோனி,அபியும் நானும், இப்போது கௌரவம் என்று உணர்வுகளை மையமாகக் கொண்டு சமூக சிந்தனையுடன் படங்களை தாயாரிக்கும் பிரகாஷ் ராஜுக்கு ஒரு சல்யூட் செய்யலாம். இந்நிகழ்ச்சி அவரின் இமேஜை உயர்த்தவே செய்தது.
கிராமங்களின் அழகிய முகத்தையே ரசித்துக் கொண்டிருந்த நாம் அதன் கோரமான சாதி முகத்தை, நிகழ்ச்சி மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியபோது நாம் இப்படிப்படிப்பட்ட சமூகச் சூழலில்தான் இன்னும் இருக்கிறோமே என்று வெட்கப் படவும் வைத்தது. வேதனைப் படவும் வைத்தது. இதில் பங்கேற்றவர்கள் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது.
இப்படியாவது காதலிக்கத்தான் வேண்டுமா?என்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியவில்ல. பெண்கள் சாதிவெறி குறைவானவர்கள் என்று இதுவரை எண்ணி இருந்தேன். ஒரு பெண் தன் காதலுக்கு எதிராக அம்மாவும், சித்தியும் செய்த கொடுமைகளை சொன்னபோது என் எண்ணம் பொய்யாகிப் போனது
இதோ இந்த படத்தில் பார்க்கும் இந்த இளம் பெண்ணுக்குத்தான் எத்தனை சோதனைகள். காதலித்தவன் தலித் என்பதால் காதல் மறுக்கப்பட, பொருட்படுத்தாது உறுதியோடு கைபிடித்தாள். அச்சுறுத்தல்கள் தொடர சென்னை வந்தனர் பிழைத்துக் கொள்ள. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகமாக, சமாளிக்க முடியாமல் மீண்டும் சொந்த ஊருக்கே போவது என்ற தவறான முடிவை எடுக்க, அங்கே காத்திருந்த சாதி வெறியரால் பறிக்கப் பட்டது கணவனின் உயிர். அந்தப் பெண் கூலி வேலை கூட செய்ய முடியாமல் ஒதுக்கி வைக்கப் பட்டதை விவரித்தபோது அந்தப் பெண்ணின் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதற்கும் மேலாக பிள்ளையின் உயிரையும் எடுத்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். ஏனென்றால் அந்த சிறு பிள்ளை தலித்தின் வாரிசாம்! என்று அந்தப் பெண் சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த சமூகத்தின் மீதான கோபமும், இயலாமையும் நம்மையும் சேர்த்து உலுக்கியது. அல்லல் பட்டு ஆற்றாது அழுத அந்தப் பெண்ணின் கண்ணீர் இன்றே சுட்டுவிடக் கூடாதா அந்தக் கொடியவர்களை என்று தோன்றியது.
இன்னொரு பெண்ணோ காதலித்து திருமணம் புரிந்த பின் தன்னை விட்டுச் சென்றபின் பிறந்த வீட்டிற்கும் செல்ல முடியாமல் குழந்தையுடன் தனியாகக் போராடிக் கொண்டு சமூக அங்கீகாரத்திற்காக கணவனுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பதை சொன்னது நெஞ்சை உருக்கியது.
இதுதான் இப்படி என்றால் பார்வைத்திறன் மிகக் குறைவாக உள்ள பெண் தன்னைப் போலவே பார்வை அற்ற வேறு ஜாதிப் பையனை காதலிக்க அதற்கும் பயங்கர எதிர்ப்பாம்.என்ன கொடுமை இது! பெற்றோர்களால் அந்தப் பெண்ணுக்கு அதே ஜாதியில் நல்ல துணையை தேடிக் கொடுக்க முடியுமா? ஆனால் உறுதியோடு திருமணம் செய்து கொண்டவர்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர்,.பார்வையற்ற அந்தப் பெண்ணை ஏமாற்றி மீண்டும் மனம் மாற்ற முயற்சி செய்துள்ளனர். அனால் அது முடியவில்லை.பார்வை இழந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உபயோகமாக இந்த சமுதாயம் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவர்களாக தேர்ந்துடுத்துகொண்ட வாழ்க்கைக்காவது உபத்திரவம் செய்யாமல் இருக்கக் கூடாதா. உண்மையில் இந்த சமுதாயம்தான் பார்வை இழந்து காட்சி அளிக்கிறது.
இவர்களை பார்வைத் திறன் குறைந்த ஜோடிகளை வைத்துத்தான் கௌரவம் படத்தின் பாடல்களை வெளியிட்டார் பிரகாஷ்ராஜ். நெகிழ்ச்சியாக இருந்தது.
இயக்குனர் ராதா மோகன் சொன்ன விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில ஊர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். மேல் ஜாதியினர் மட்டும்தான் ஆண் நாய் வளர்க்கலாம். கீழ் ஜாதியினரின் ஆண் நாய் மேல் ஜாதியனரின் பெண் நாயோடு சேர்ந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாம்.அது இன்றும் நடைமுறையில் உள்ளது என்றபோது பார்த்த அத்தனை பேருமே அதிர்ந்துதான் போயிருப்பர்.
இயக்குனர் சேரன் பகிர்ந்த பல விஷயங்கள் அவர் மீது மேலும் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. சாதி மாறி காதலித்து திருமணம் புரிந்து கொண்ட ஒரு ஜோடியை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன ஜாதி சொல்லி இருக்கிறீர்கள் என்று கேட்டார். கணவனின் ஜாதியை குறிப்பிட்டதாக சொன்னார். சாதியை மீறி மணம் செய்து கொண்ட நீங்கள் சாதியை குறிப்பிடாமல் இருந்திருக்கலாமே. என்றார். அதற்கு அவர்கள் கட்டாயம் ஜாதியை குறிப்பிட வேண்டும் என்று பள்ளியில் சொன்னதாக தெரிவித்தார்.
எனக்கு தெரிந்து பள்ளிகளில் சாதிகள் குறிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. குறிப்பிடாவிட்டால் Forward Community யாக கருதப் படுவார்கள் அவ்வளவே! அரசின் சலுகைகள் வேண்டும் என்பவர் சாதியை குறிப்பிட வேண்டும்.
சேரன் தன் வாரிசுகளுக்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடாமல் சேர்த்திருப்பதாக தெரிவித்தது புதிய செய்தியாக இருந்தது. அவ்வாறே பிரகாஷ்ராஜும் செய்துள்ளார். கமல் ஏற்கனேவே இதை பின்பற்றி இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்ததுதான். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனங்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் அதே இனத்தை சேர்ந்த பிறருமஜாதி குறிப்பிடாமல்
எனக்குப் பிடித்த சேரனின் சில படங்களில் ஒன்று பாண்டவர் பூமி. அந்தப் படத்தில் வேற்று சாதி பையனுடன் ஓடிப் போகும் தங்கையின் தலையை அண்ணன் வெட்டி வீசும் காட்சிக்கு கிடைத்த கைதட்டலையும் வரவேற்பையும் கண்டு இந்த அளவிற்கா சாதிவெறி இருக்கும் அதிர்ந்து போனாராம் சேரன். அந்தக் காட்சி வைத்தது தவறோ என்று வருத்தப் பட்டார். அவர் முகத்தில் தெரிந்த வருத்தம் உண்மையானதுதான் என்று தோன்றியது.
சினிமாத் துறையில் சாதி இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று சேரனும், இருக்கிறது என்று பிரகாஷ்ராஜும் பதிலளித்தனர். பிராகாஷ்ராஜுக்கும் ஏதோ சொந்த அனுபவம் இது தொடர்பாக இருப்பதாக தோன்றியது.
இன்னொருவர் சொன்னது இந்திய அரசியல் சட்டம் சாதியை மறுக்கவில்லை சாதிகளுக்குள் பாகுபாடு காட்டக் கூடாது என்றுதான் கூறுகிறது என்றார். அவரே சொன்னது சாதிகள் கி,மு. விலேயே இருந்தாலும் தீண்டாமை கி.பி. 500 இல்தான் ஏற்பட்டது என்கிறார். அது சரியா என்று ஆய்வாளர்கள்தான். சொல்ல வேண்டும்
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி சாதிகள் எனக்குப் பிடிக்கும் என்றார். அவரது திருமணமும் காதல் திருமணம்தான். தன் காதலியின் சாதி பெற்றோர்கள் கேட்கும் வரை தெரிந்து கொள்ளவில்லை என்று கூறியது நம்ப முடியவில்லை. ஒருவேளை தன் தாயும் தந்தையும்(வைரமுத்து-பொன்மணி வைரமுத்து) சாதி மாறி திருமணம் செய்து கொண்டிருந்தால் இத்தனை பாடல்கள் கிடைத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார் மதன் கார்க்கி. அவர் சாதி மாற்றுத் திருமணத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது தெளிவுபடவில்லை.
உயர்ந்த சாதியினராக கருதப்பட்ட பிராம்மண சமுதாயத்திலும் சாதி மாற்றுத் காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தீண்டாமை போன்றவற்றில் நம்பிக்கை உடைய இவ்வினத்தில் கூட கலப்பு திருமணத்தை ஆதரிப்பதில்லையே தவிர கௌரவக் கொலைகள் அளவுக்கு செல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் சில காலங்களுக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்தும் விடுகின்றனர்.
சினிமா கலைஞர்கள் சமூக அக்கறைகளை சினிமாவில் மட்டும்தான் காட்டுவார்கள்
என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் உண்மையாகவே அத்தகைய சிந்தனைகள்
கொண்டவர்கள் ஒருசிலர் இருக்கின்றனர் என்ற தோற்றத்தை நீயா நானா ஏற்படுத்தியது. அது
உண்மையாகவே இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
பல தன்னார்வ அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் தீவிரமாக இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். கல்வி அறிவும் பொருளாதார முன்னேற்றமுமே இத்தைகைய கொடுமைகளை குறைக்க வழி வகுக்கும் என்று நம்புகிறேன். அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கட்டும்.சமுதாய உறுப்பினர்களாகிய நாம் அதற்கு உறுதுணையாக இருப்போம்.
************************************************************************************