என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

(இளைய+பாரதி) ராஜாக்களின் சண்டைகள்

சிரிக்கறத பாத்து நம்பிட்டீங்களா? இதெல்லாம் சும்ம்ம்ம்மா.......!
அன்பை  மறந்த ராஜாக்களே!
    ராஜ்ஜியங்களுக்காக ராஜாக்கள் சண்டையிட்டதை கேள்விப் பட்டிருக்கிறோம். இழந்த ராஜ்ஜியங்களை மீட்கவும் சண்டை இடலாம்.  நீங்கள் போடும் சண்டை எந்த வகை? கோலோச்சிய காலங்களில் கூடிக் குலவியதை மறந்துவிட்டு ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பத்திரிகைகள் அவரவர் பங்குக்கு தூண்டிவிட சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவதை நீங்கள் அறிவீர்களா? முந்தைய  தலைமுறையின் மேதைகள் என்று  அடையாளம் காட்டப்படும் நீங்கள்  உங்களை  அதிகம் அறியாத இன்றைய தலைமுறையினர் ஏளனத்தோடு பார்ப்பது தெரியுமா?  இவ்வளவுதானா உங்கள் மேதாவிகள் என்று கேட்கும்போது பாரதிராஜா ரசிகனும் இளையராஜா ரசிகனும் பதில் சொல்லமுடியாமல் தவிப்பது உங்களுக்கு  புரியுமா? வயதாகி விட்டாலே வாய்க்கு வந்தபடி பேசவேண்டும் என்று சட்டம் உள்ளதா? ஆணவமும் அகங்காரமும் கலைஞர்களுக்கு முதல் எதிரி என்பது உங்களுக்கு  தெரியாதா? உங்கள் ரசிகர்கள் என்று சொல்வதற்கு வெட்கப் படவேண்டிய சூழ் நிலையை உருவாக்கி விடாதீர்கள்! இவ்வளவு வேற்றுமையை வைத்துக்  கொண்டு எப்படி பணியாற்றினீர்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அப்போது சாதிக்க வேண்டும் என்ற வெறி; சண்டை போட நேரமில்லை. இப்போது சாதித்தாகி விட்டது. சரக்கு தீர்ந்துவிட்டது. சண்டை தொடங்கி விட்டது;  கருத்து வேற்றுமைகள் விசுவரூபமாகிவிட்டன என்று எடுத்துக் கொள்ள்ளலாமா?

   இளையராஜா சார்!  நீங்கள் பாரதிராஜா பேசியதை குற்றமாக எடுத்துக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் என்றைக்காவது மேடை நாகரீகத்துடன் பேசி இருக்கிறீர்களா? தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். கெளதம் மேனன் நிகழ்ச்சியில் உங்களைப் பார்த்த மகிழ்ச்சியிலும் உங்கள் பாடல்களை கேட்கப் போகிறோம் என்ற உற்சாகத்திலும் விசில் அடித்தபோது, ரசிகர்களை பார்த்து விசில் அடிக்காதீர்கள் நான்வெளியே போய் விடுவேன் என்று மிரட்டியது எந்த வகையில் நியாயம் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் பாரதிராஜாவின் பேச்சை புண் படுத்தியதாக கூறி இருக்கிறீர்களே! நீங்கள் ரசிகர்களை அவமதிப்பது சரியா? 
   ஒரு மேடையில் பாரதிராஜா, நீங்கள் அவர்கள் ஊருக்கு வந்து, திருவிழாவில் வாசித்தபோது கை குலுக்கியதை குறிப்பிட்டார். நீங்களோ அது நினைவில்லை என்று முகத்தில் அடித்தார் போல் கூறினீர்கள். உங்கள் பேச்சுக்கள் பல நேரங்களில் தலைக்கனத்தின்  வெளிப்பாடாக அமைந்து விடுகிறது என்பதை நீங்கள் உணர்வீர்களா? உதாரணத்திற்கு ஹிந்துஸ்தானி இசையின் சிறப்பு அம்சம் என்ன  என்ற கேள்விக்கு ஸ்ருதியை விட்டு விலகாமல் பிசகாமல் இசைக்க அதிலே லயித்துப் போய் பாடும் தன்மைதான் ஹிந்துஸ்தானி இசையின் சிறப்பு என்று கூறியதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அதோடு கர்நாடக இசையில் உள்ள அளவு கடந்த ராகங்களும் தாளங்களில் உள்ள விரிவான அம்சமும் அதிலும் கொண்டு வரலாம் என்பது அவர்களுக்கு தெரியாது என்று கூறியது உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தொனியில் பேசுவது போல் அல்லவா உள்ளது.

   அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் அழைக்க விரும்பியதாகவும். உங்கள் பிடிவாதத்தின் காரணமாக அவரை அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வைரமுத்துவின் மீது ஏன் அவ்வளவு காழ்ப்புணர்ச்சி?. முகத்தில விழிக்கக் கூடாத அளவுக்கு அப்படி அவர் என்னதான் தவறு செய்தார் என்று இது நாள் வரை தெரியவில்லை. உங்களுக்குப் பின்னால் உங்களிடத்தை ஏ.ஆர்.ரகுமான் பிடித்துவிட்டார்.ஏன்? ஒரு படி அதிக உயரத்திலும் இருக்கிறார்.  ஆனால் வைரமுத்துவின் இடத்தை நிரப்ப இன்றுவரை அவருக்கு இணையானவர் வரவில்லை. என்பது உங்களுக்குத் தெரியாமல் போய் இருக்க வாய்ப்பில்லை. அவரை அவமதிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சியா? இசைஞானியாகத்தான் உங்களை நினைத்திருக்கிறோம். நீங்கள் வசைஞானியாய் மாறிவிடாதீர்கள். உங்களை ஒருமையில் பேசியதும் நீங்கள் தலைக்கனம் பிடித்தவர் என்ற ரீதியில் பேசியதும் தவறு என்றாலும், அதற்கு காரணமும் நீங்கள் தானே! 
   நட்புக்கு  இலக்கணமாய் இல்லாவிட்டாலும் பகைமைக்கு முன்னுதாரணமாக மாறிவிடாதீர்கள். திருவாசகம் இசையால் மனங்களை உருக வைத்த நீங்கள் வசை வாசகங்களால்  கருக வைக்காதீர்கள் (வசையிலும் இசை உண்டு என்று தத்துவம் பேசிவிடாதீர்கள்)



  பாரதிராஜாசார்! உங்களுக்கும் எங்கள் எண்ணங்களை தெரிவிக்கவேண்டும். எப்போதுமே உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் நல்லது என்றா நினைக்கிறீர்கள். ஒருவர் விரும்பாதபோது அவரைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படையாக சொல்வது ஏற்புடையதல்ல. என்னதான் நெருங்கியவர்களாக இருந்தாலும் ஒருமையில் பேசுவது உங்களுக்கு அழகல்ல. வைரமுத்துவோடு இளையராஜாவை சேர்த்துவைக்க முயன்றீர்கள். இன்று நீங்களே பிரிந்து நிற்கிறீர்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி. இப்போதெல்லாம் கலைஞர்கள் ரெண்டு பட்டால் பத்திரிகைகளுக்கும் ஊருக்கும் கொண்டாட்டம் என்பது நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்?. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு  முன் என்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நான் நிர்வாணமாவன் என்றெல்லாம் பேசுவதை தவிர்க்கவும். பண்பைக் கற்றுகொடுக்க முடியாவிட்டாலும் பகைமையை கற்றுக் கொடுக்காதீர்கள். 


   நல்ல படைப்புகளைத் தரும் கலைஞர்கள் நற்பண்புகள் உடையவர்களாக இருப்பார்கள் என்று நம்பும் அப்பாவித் தமிழர்களின் நம்பிக்கையில் சிறிதளவாவது உண்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உண்மையாக  புன்னகைத்துப் பாருங்கள்; உலகமே அழகாகத் தெரியும்.

                                                                   அன்புடன் 
                                           கலையோடு கலைஞனையும் நேசிக்கும்  தமிழர்கள் 

 ***************************************************************************************
 நேரம் இருந்தா இதையும் படிச்சிப் பாருங்க!
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்- குறைகள் 
இளையராஜா செய்தது சரியா? 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மாலனிடமிருந்து இப்படி எதிர் பார்க்கவில்லை!

   எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலனின்  சிறுகதைகளையோ மற்ற படைப்புகளையோ  அதிகம்   நான் படித்ததில்லை. அவர் கவிதை எழுதி இருக்கிறாரா? அதுவும் எனக்குத் தெரியாது. தொலைக் காட்சியில் தேர்தல் நேரத்தில் அவரை பார்த்திருக்கிறேன். அவரது கட்டுரைகளை புதிய தலை முறை இதழில் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். அதோடு சரி ஆனால் அவையும் என்னை ஈர்த்ததில்லை. 

  சமீபத்தில் என் ஜன்னலுக்கு வெளியே என்ற தொடரை 'புதிய தலைமுறை' வார இதழில்  எழுதி வருகிறார். சமூக நிகழ்வுகள் அவலங்கள் பிரச்சனைகள் பற்றி சில வாரங்களாக எழுதி வந்தாலும் சமீபத்தில் வெளியான பகுதி அவரது எழுத்தாற்றல் மீதான எனது எண்ணத்தை மாற்ற வைத்தது. பாலியல் வன்முறை மீதான சிந்தனை பற்றிய அந்தக் கட்டுரையின் முற்பகுதி  என்னைக் கட்டிப் போட்டது. ஒரு கைதேர்ந்த கவிஞனின் வரிகள் போல வார்த்தைகள் வந்து விழ பல்வேறான சிந்தனைகளை என்னுள் விதைத்துச் சென்றது அந்த வரிகள். அது ஒரு   கவிதையாகவும் காட்சி தந்தது. ஒரு சிறுகதையாகவும் திகழ்ந்து சிந்தை கவர்ந்தது.


இதோ அவை உங்களுக்காக 

  "கதவைத் திறப்பதற்காக காத்துக் கொண்டிருந்ததைப் போல என் ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்து அமர்ந்தது அந்த வண்ணத்துப் பூச்சி.மஞ்சளும் கருப்பும் கலந்த மலர் போல இருந்தது.காகிதத்தில் செய்ததைப் போன்ற சிறகுகள் கண்ணாடியைப் போலப் பொலிந்தன. 

  முதலில் அது நாற்காலியின் முதுகில் உட்கார்ந்து உரையாட அழைத்தது. இறக்கையை சிலுப்பிக்கொண்டு எதிர்  சுவரில் தொற்றி வண்ணத்தை ஆராய்ந்தது.புத்தகங்களை பூக்கள் என்றெண்ணியதோ? அவற்றின் மீது தத்தித் தத்தி இலக்கியம் படித்தது.குழல் விளக்கில் பால் குடிக்க முயன்றது.வானொலியின் மீது அமர்ந்து இசை பயின்றது.வீட்டுக்குள் வந்த விமானம் இறங்க இடம் தேடியது போல் எல்லா இடமும் சுற்றி வந்தது.எனக்கோ அது என் மனதை போல எதனினும்  வசம் கொள்ளாது எதையோ தேடித் திரிவதைப் போல் தோன்றியது.

   விடிந்து விட்டது.விளையாடிக் கொண்டிருக்க நேரமில்லை என்பதால் நான் என் நடையணிகளை மாட்டிக் கொண்டு கடற்கரைக்கு புறப்பட்டேன். காத்திரு! வருகிறேன் எனச் சொல்லி கிளம்பினேன். 

    இளங்காலைக் காற்று இதமாக இருந்தது என்றாலும் என் இதயத்தில் இன்னமும் வண்ணத்துப் பூச்சி படபடத்துக் கொண்டிருந்தது. வந்திருந்த விருந்தாளிக்கு வரவேற்புக் கொடுப்பதற்காக வீடு திரும்பும் வேளையில் வீதியோரம் பூத்திருந்த பெயர் தெரியாப் பூவொன்றைப் பறித்து எடுத்து வந்தேன்.

  கதவின் முனகல்கூட அதன் காதில் இடி ஓசையாய் இறங்கும் என்றெண்ணி கவனமாகத் திறந்தேன். காணோம்! வீடெங்கும் தேடினேன்!. அந்த விடிகாலை விருந்தாளி விடை பெறாமலேயே புறப்பட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த சந்தோஷம் சொல்லிக் கொள்ளாமல்  போவதுதான் வாழ்க்கை என்று என்னை தேற்றிக் கொள்ள முயன்றபோது சொத் என்ற சத்தம் வாசலில் விழுந்தது.

  ஆம்! நாளிதழ்தான்! நாட்டு நடப்புகளை எல்லாம் வார்த்தைகளில் வடித்தெடுத்த அந்தக் காகிதக் கணையை  வீசி விட்டு போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அதை எடுக்கக் குனிந்தபோது என்நெஞ்சில் ஈட்டிகள் பாய்ந்தன. 

   கண்ணாடிச் சிறகுகள் நொறுங்கிக் கிடக்க தண்ணீரில் சிந்திய வண்ணத்தைப் போல சிறகின் நிறங்கள் கலைந்து செய்தித் தாளுக்குக் கீழே செத்துக் கிடந்து என் வண்ணத்துப் பூச்சி. "

     இதன்  பின்னரும் தொடர்ந்து, 13 வயது சிறுமியை தாய்மாமனோடு சேர்ந்து 5 பேர் பாலியல் வன்முறை செய்தது பற்றியது பேசியது அந்தக் கட்டுரை. ஆனால் அவை யாவற்றையும் விளக்க மேலே படித்தவையே போதுமானதாக இருந்தது எனக்கு.
உங்களுக்கு!


******************************************************************************************
 

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்

  நேற்று  வாங்கிச் சென்ற பேப்பரை படித்து விட்டு திரும்பக் கொடுப்பதற்காக வந்திருந்தார் புஷ்பா மாமி. வழக்கம்போல் நான் மாட்டிக்கொண்டேன். மாமி தொடங்கினார்.
   "இது என்னடா அக்கிரமமா இருக்கு.இந்தப் பரிதாபமா இறந்து போன பொண்ணு வினோதினி மேல ஆசிட் ஊத்தின நெடி போறதுக்குள்ள இன்னொரு பொண்ணுமேல அநியாயமா ஆசிட் ஊத்திட்டான் இன்னொரு பாவி. இதைப் படிச்சியா?"

  "ஆமாம் மாமி! நானும் படிச்சேன். சென்னை ஆதம்பாக்கத்தில விஜயபாஸ்கர்,ப்ரௌசிங் சென்டர்ல பழக்கம் ஏற்பட்ட வித்யாங்கற பொண்ணுகிட்ட தன்னோட லவ்வ சொல்லி இருக்கானாம். பெத்தவங்க சம்மதம் வேணும்னு வித்யா சொல்ல , வித்யாவோட அம்மாகிட்ட பேசி இருக்கான். அவங்களும் சம்மதிச்சிருக்காங்க.ஆனா விஜய பாஸ்கரோட அம்மாவோ அதுக்கு ஒத்துக்கலை.தங்கையோட கல்யாணம் முடிஞ்சதுக்குப்புறம்தான் இதைப் பத்தி யோசிக்கணும்னு சொல்லவே விஜயபாஸ்கர் மன வருத்தப்பட்டு வித்யாவை சந்திக்க பிரவுசிங் சென்டருக்குப் போய் இருக்கான். அவனை வெளிய போகச் சொன்ன வித்யாமேல கோவப்பட்டு கையில ரெடியா கொண்டு வந்த ஆசிட்ட, மேல ஊத்திட்டானாம்! சரியா மாமி?

  "நான் என்ன க்விஸ் ப்ரோக்ராமா நடத்தறேன். அதான் பேப்பர்ல போட்டிருக்கானே! ஆசிட் முதல்ல முகத்தில படாம முதுகுலதான் பட்டிருக்கு. அதோட விட்டானா? பாவி!,  வலியால துடிச்சிட்டுக்கிட்டு இருந்த வித்யாவை பாத்து கொஞ்சம் கூட இரக்கம்  இல்லாம, முகத்தில் ஆசிட் படாதது தெரிந்ததும், கீழே கொட்டியிருந்த ஆசிட்டில் வித்யா முகத்தை வைத்து தேச்சிருக்கான். அந்தக் கட்டையில போறவன்! அக்கம் பக்கத்தில இருக்கவங்க கூச்சல் கேட்டு ஓடிவந்து ஆஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க.20 நாளா ஆஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிக்கிடிருக்கு அந்த பொண்ணு!

  "ஆமாம் மாமி! கேக்கறதுக்கே சங்கடமா இருக்கு."

  "சம்மதம் சொல்லியும் இப்படி பண்ணிட்டானே அந்த மகாபாதகன்.
வேலூர்லயும் ஒரு பையன் இப்படித்தான் பத்தாம் கிளாஸ் படிக்கிற பொண்ணு மேல ஆசிட் ஊத்திட்டானாம். நல்ல வேளை அந்த பொண்ணு மேல ஆசிட் படாம தப்பிச்சிட்டாளாம்......

  "இந்தப்  பசங்களுக்கெல்லாம் ஏன் இப்படி புத்தி போறது?.எதனால சைக்கோவா திரியாரானுங்க?  .  எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தறதுதானே உண்மையான லவ்வு. ஒரு வயசு குழந்தையா இருந்தாலும் 60 வயசு பாட்டியா இருந்தாலும் ரோட்டில, ஏன் வீட்டில கூட இருக்க முடியாது போல இருக்கே! இந்த மாதிரி அக்கிரமம் பணறவங்களயும் வக்கிர புத்திக்காரங்களயும் தெருவில நடமாட விடக் கூடாது. நாளுக்கு நாள் இந்த மாதிரி சம்பவம் நடக்கிறது அதிக மாகிட்டே போகுது.கவர்ன்மென்ட் ஏதாவது நடவடிக்கை எடுக்கணுமோ இல்லையோ? என்னமோ மஞ்சதண்ணி ஊத்தி விளையாடற  மாதிரி ஆசிட்டை வீசறாளே! கூடிய சீக்கிரம் புல்லட் ப்ரூப் சட்டை மாதிரி ஆசிட் ப்ரூஃப் டிரஸ்சும், முகமூடியும் போட்டுக்கிட்டுதான் நடமாடனும் போல இருக்கே. பேசாமா மிக்சி க்ரைண்டருக்கு பதிலா அதை இலவசமா கொடுக்கலாம்........."

புஷ்பா  மாமி கிட்டத் தட்ட அரை மணிநேரம் புலம்பிவிட்டுத்தான்  போனார்.

  இப்படி பலரையும் வருத்தத்தில்  ஆழ்த்தி வருகிறது இந்த சம்பவங்கள். ஆணினத்திற்கே அவமானம் தரக் கூடிய செய்கை என்றுதான் கூறவேண்டும். அரசாங்கம் குற்றம் செய்தவரை தண்டிக்கலாம். ஆனால் குற்றத்தின் பாதிப்புகளில் இருந்து மீள்வது எளிதல்ல!  அரசை மட்டும் குறை கூறிப்பயனில்லை .பெற்றோர்களும் கொஞ்சம் கவனமா இருக்கவேண்டும் .பள்ளி கல்லூரி படிக்கின்ற வயதில் பையனோ பெண்ணோ இருந்தால்    குறிப்பாக பெண்ணாக  இருந்தால் அவங்களோட படிப்பு விஷயம் மட்டும் பேசாமல் இது போன்ற  விஷயத்தையும் பேசவேண்டும். அதுவும் கொஞ்சம் ஆண் பெண் பேதம் பார்க்காமல் சகஜமா பேசும் பெண்கள்  மிகவும்  எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதை காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்க, திடீரென்று  அது இல்லையென்று தெரியும்போது  சேரக் கூடாத நண்பர்கள் கூட சேர்ந்து இது மாதிரி தவறுகளை செய்துவிடுகிறார்கள்
பெண்களை பெற்றவர்கள் மட்டுமல்ல  ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களிடம் இதைப் பற்றி பேசவேண்டும். தவறான நட்பு ஏதேனும் இருக்கிறதா?  எங்கே போகிறார்கள்? திடீர் மாற்றங்கள் ஏதாவது தெரிகிறதா! என்பதை கவனிப்பது அவசியமானது. அவர்களுடைய நெருங்கிய நண்பர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய  சம்பவங்களில் தவறு  ஏதும் செய்யாவிட்டாலும் பக்கத்தில போய் நிற்பவனும்  மாட்டிக் கொள்கிற  அபாயம் உண்டு. என்பதை  நேரடியாகவும்  மறைமுகமாகவும் சொல்லத் தயங்கக் கூடாது.

  காதலித்துக் கொண்டிருக்கும் பெண்களே! நீங்கள் காதலர் தினத்தை உங்கள் காதல் துணையோடு கொண்டாடி இருப்பீர்கள். அவன் அடி மட்டத்தில் இருப்பவனாயினும் சரி, ஐ.டி யில் பணிபுரிபவனாயினும் சரி எதற்கும் உங்கள் காதலனை அவனறியாமல் "அமிலச் சோதனை" (a rigorous and conclusive test to establish worth or value) செய்து விடுங்கள்.

*****************************************************************************************************************
அமிலம்  வீசும் அரக்கர்களுக்கு இந்த தண்டனையும் தரலாம்.படித்துப் பாருங்கள்
அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?

:

புதன், 20 பிப்ரவரி, 2013

விவாதம் விரும்பும் பதிவர்கள்

  ஒன்றரை ஆண்டுகளாகத்தான்  தமிழ்ப் பதிவுலகில் எழுதி வருகிறேன். மற்றவர்களுடைய பதிவுகளையும் படித்து வருகிறேன்.சமூகப் பிரச்சனைகள், சினிமா, இலக்கியம்,கவிதை, நகைச்சுவை, அரசியல், அறிவியல், அனுபவம் என்று பல்வேறு பிரிவுகளில் அற்புதமாக எழுதி வருகிறார்கள் பதிவர்கள். சில பதிவுகள் சில நேரங்களில் தெரிந்தும் தெரியாமலும் விவாதத்திற்கு உரியவையாய் அமைந்துவிடுகிறது . பின்னூட்டங்களில் இவை காராசாரமாக விவாதிக்கப் படுகின்றன. ஆணித்தரமாகவும் ஆதாரங்களுடனும் தங்கள் கருத்தை எடுத்து வைத்து விவாதிப்பதில் சிலர் வல்லவர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் பலரும் அறிந்தவர்கள்  'வவ்வால்-தலைகீழ் விகிதங்கள்', 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' வருண்,  'சமரசம் உலாவும் இடமே! சார்வாகன்'., ஜெயதேவ் தாஸ். இவர்களைத்  தவிர இன்னும் பலரும் உண்டு. இருப்பினும் இந்த நால்வர் பற்றி எனது கருத்துக்கள்

  வலைசரங்களில் இவர்கள் அதிகமாக குறிப்பிடப்பட்டு அவ்வளவாக பார்த்ததில்லை.(ஒரு வேளை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.) இவர்கள், எவ்வளவு பிரபல பதிவர்களாக இருந்தாலும்  அவர்களுடைய  பதிவுகளில் உள்ள குறைகளை தயவு தாட்சயன்மின்றி சுட்டிக் காட்டக் கூடியவர்களாகவும் தங்கள் மனதுக்குப் பட்டதை தயங்காமல் உரைக்கக் கூடியவர்களாகவும் இருப்பது காரணமாக இருக்கலாம். இவர்களது பின்னூட்டங்கள் சுவாரசியமாகவும் பல்வேறு விஷயங்களையும் வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.

 இவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை அபார வாதத் திறமை. மூவர் மட்டும் நாத்திகர்கள் என்று அறிய முடிகிறது. ஜெயதேவதாஸ் மட்டுமே ஆத்திகர். நிறையப் பேருக்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயம் இவர்கள் நிறைய விஷயங்களில்  ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு உடையவர்களாக இருப்பதுதான். பிராம்மண எதிர்ப்பு நால்வருக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது.
 
1.வவ்வால்-தலைகீழ் விகிதங்கள் : 2006 முதல் எழுதிவரும் வலைப் பதிவர் இரண்டு ஆண்டுகளில் 100 பதிவு எழுதிய இவர் அடுத்த 3 ஆண்டுகளில் 35 மட்டுமே. 2012 இல்தான் அதிக பட்சமாக 91 பதிவுகள் எழுதி இருக்கிறார். இவர் நக்கீரன் போல தனக்கு தவறு என்று பட்டால் குற்றம் குற்றமே என்று குட்டத் தயாராக இருப்பவர்.இவரது ப்ரஃபைல் பார்த்தபோது இவர் எந்த ப்ளாக்கையும் ஃபாலோ செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வேலை Follow privately என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். விவாதத்திற்குரிய பதிவுகளை அறிந்து அல்லது ஒரு பதிவிற்குள்  ஏதேனும் ஒரு வரியில் காணப்படும்  நுணுக்கமாக பொருளை எடுத்து தன் கருத்தை ஆணித் தரமாக தெரிவிப்பார். மறுப்பு கூறுவது மிகக் கடினமாக இருக்கும்.பெரும்பாலான பதிவர்கள் இவர் தங்களது வலைப் பக்கம் வருவதை விரும்புவதில்லை. புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிறார். சமீபத்திய தொழில் நுட்பங்களை நாளதுவரைப் படுத்திக் கொள்கிறார்.பல துறைகளில் ஈடுபாடு உடையவராக இருக்கிறார். உரமான்யம் பற்றி இவர் எழுதிய பதிவு அசத்தல் ரகம். இது போன்ற வேறு பதிவு என் கண்களில் இதுவரை பட்டதில்லை.

  இவரது கற்றது தமிழ் போன்ற பதிவுகள் எனக்குப் பிடிக்கும். யார் என்ன கூறினாலும், கடுமையாகக் கடிந்து கொண்டாலும் அதை மறந்து விட்டு தன் விமர்சனப் பணியை தொடர்வது இவரது சிறப்பு. எனக்குத் தெரிந்து வலைசர அறிமுகத்தில் திருப்பூர் ஜோதிஜி மட்டுமே இவரைக் குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளாக பதிவுலகில் சலிப்பின்றி தொடர்ந்து எழுதிவருவது ஆச்சர்யப்பட வைக்கிறது.

2. வருண் ரிலாக்ஸ் ப்ளீஸ்: நீண்ட நாட்களாக எழுதி வருபவர்.2008 இல்தொடங்கி கிட்டத் தட்ட 950 க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதி உள்ளார். விவாதங்கள் என்றால் இவருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஒவ்வொரு பிரச்சனையும் வேறு கோணங்களில் பார்ப்பவர். ப்ளாக் Contributors என்று  இவர் பெயரோடு கயல் விழி என்று குறிப்பிட்டிருந்தாலும் இருவரும் ஒருவரே என்றுதான் நினைக்கிறேன். இவரது கதைகளில் செக்ஸ் கொஞ்சம் தூக்கலாக காணமுடிகிறது.. பிராய்டின் உளவியல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.மனித மனத்தை பகுப்பாய்வு செய்வது தனக்கு பிடிக்கும் என்று தனது ப்ரோஃபைலில் சொல்கிறார். இவரும் வவ்வாலைப் போலவே எந்த எந்த வலைப்பூக்களை பின்தொடர்கிறார் என்பதை அறிய முடியவில்லை.

சமரசம் உலாவும் இடமே! சார்வாகன்:  இந்த நால்வரில் முதலில் எனக்கு அறிமுகம் ஆனவர் ஆற்றலரசு என்கிற சார்வாகன்தான். இவர் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவில்லை. இருநூறு பதிவுகள் எழுதி இருந்தாலும் இவரது பெரும்பாலான பதிவுகள் பரிணாமம் சார்ந்தவையாக உள்ளன. மதசார்பு பதிவுகளை கண்டால் போதும் இவருக்கு குஷி  பிறந்துவிடும். விவாதத்தில் இறங்கி வாதங்களை அடுக்க ஆரம்பித்து விடுவார்.பல்வேறு வீடியோக்களை தன் வாதத்திற்கு துணை சேர்த்துக்கொள்ள களைகட்டும் பின்னூட்டங்கள். பல எதிரிகளை சம்பாதித்திருப்பார் என்று நினைக்கிறன்.  இவர் அறிவியல், கணிதத்தில் அபார ஞானம் உடையவராகத் தெரிகிறது. சிக்கலான கணித அறிவியல் வழிமுறைகளை எளிய தமிழில் விளக்குவதில் அதிக ஆர்வம் உடையவர். பல்வேறு உலக விஷயங்களை இவர் அலசினாலும் எனக்குப் பிடித்தது இவரது கணிதப் பதிவுகள்தான். இவர் பின் தொடரும் வலைத்தளங்கள் பற்றியும் தகவல்கள் இல்லை.

ஜெயதேவ்தாஸ்: விவாதங்களில் துணிந்து இறங்கும் ஒரே ஆத்திகப் பதிவர். 2012 ஆகஸ்டில் இருந்து எழுதி வரும் இவர் நூறு பதிவுகளை எழுதி விட்டார். சைவ உணவின் தீவிர ஆதரவாளர். அதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் ஆச்சர்யப் படுத்துகின்றன.ஆத்திகப் பதிவுகளை வித்தியாசமான கோணத்தில் எழுதுகிறார். நாத்திகர்களுக்கும் போலி ஆன்மிக வாதிகளுக்கும் ஆப்பு வைத்தலில் ஆர்வம் உடையவர் என்று தெரிவித்திருக்கிறார். அனைத்து சாமியார்களையும் தாக்கு தாக்கு என்று தாக்குகிறார். அறிவியலிலும் ஆர்வம் உடையவராக இருக்கிறார். மாப்பிள  என்றும் பாகவதர் அழைக்கப்படும் இவர் தன் பாணியில் பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை. திறமையான நாத்திகப்  பதிவர்களுக்கு எதிராக சளைக்காமல் வாதாடுவதால் இவருக்கு நிறையப் பதிவர்களின் ஆதரவு கிடைக்கிறது. குறுகிய காலத்தில் தமிழ்மணத்தின் முதல் இருபது இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். இவரது நிலவின் மறுபக்கத்தை நாம் காணமுடியாது  என்ற பதிவு எனக்கு பிடிக்கும் தெளிவான விளக்கங்களுடனும் படங்களுடனும் எழுதி இருப்பார் ( இந்தக் கருத்தை நான் எழுத நினைத்திருந்தேன்)
 இதுபோல விவாதங்கள் மூலம் பதிவுகளை சுவாரசியமாக ஆக்கும் இன்னும் சிலரும் உண்டு. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

    விவாதங்கள், அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விவாதங்கள் ஒருவருடைய கருத்தை மாற்ற உதவி இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.
  எப்படி  இருப்பினும் இவர்களுடைய விவாதங்கள் சுவையானவை என்பதை மறுக்க முடியாது. வரையறை மீறாமல் விவாதங்கள் தொடரட்டும்! ரசிப்போம்!.

******************************************************************************************

 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்

  விஜய் டிவியில் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிறைவுற்று இப்போது சூப்பர் சிங்கர் 4 தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலில் இருந்த சுவாரசியம் இருக்குமா என்று போகப் போகத்தான் தெரியும்.. இரண்டாவது கட்டத் தேர்வில் பலர் விரைவாக நிரகரிக்கப்பட்டனர்.சென்ற சீசனில் கலந்து கொண்டவர்கள் சொல்லி வைத்தாற்போல் உடனே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சிலர் நன்றாகப் பாடியதாக எனக்குத் தோன்றியது ஆனாலும் நிராகரிக்கப் பட்டனர்.  புஷ்பவனம் குப்புசாமி, மஹதி சௌம்யா, டி.எல்.மகராஜன் போன்றவர்களோடு பழைய சூப்பர் சிங்கர்களும்  நடுவர்களாக இருந்தனர். இதில் புஷ்பவனம் குப்புசாமி ஸ்ரேஷ்டைகளை குறைத்துக் கொண்டால் நல்லது.
  ஆர்வக் கோளாறு காரணமாக பாத்ரூம் பாடகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் விளம்பர வியாபார உத்தி இருப்பதாகவே படுகிறது. கலந்துகொண்டு பாடியவர்களில் பலரும் பாடலைப் பாடும்போது கட்டாயம் கையை காலை முகத்தை அசைத்து பாடவேண்டுவது கட்டாயம் போல் பாடினர்.அப்போதுதான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? 

   அதற்கு காரணம் முந்தைய சீசன்களில் இது போல் உடலசைவுகளுடன் பாடுபவர்களை மனோ போன்ற  நடுவர்கள் ஊக்கப் படுத்தியதுதான் காரணாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சற்றும் பொருத்தமில்லை என்று தெரிந்தும். முந்தைய சீசன்களில் இது குறைவாகவே இருந்தது.  பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதை கலந்துகொள்பவர்கள் உணர்ந்தால் நல்லது. இவர்களை ஆட வைப்பது இவர்களின் ஆடைகளை தேர்ந்தெடுப்பது  போன்றவற்றை விஜய்டிவி தான் முடிவு செய்கிறது போலும். கடந்த சூப்பர் சிங்கர் ஜுனியரில் சில எபிசோடுகளில் கவர்ச்சியாகத் தோன்றும் வகையில் (குட்டைப் பாவாடை) அணிந்து கொண்டு கூட சிறுமிகளை பாடவைத்தனர். அது எனக்கு சற்று நெருடலாக தெரிந்தது. பெற்றோர்களும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது ஆச்சர்யமே. இந்த முறை அதை எல்லாம் தவிர்ப்பார்களா என்று பார்ப்போம்.
 அது போகட்டும்! நான் சொல்ல வந்தது சூப்பர் சிங்கரின் ஏற்படுத்திய  சில விளைவுகள். முன்பெல்லாம் சினிமா பாடலதானே என்ற ஒரு அலட்சியம் இருந்தது. அதனுள் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதை நான்  அதிகமாக அறிந்து வைத்திருக்க வில்லை. இந்கழ்ச்சியைப் பார்த்தபிறகுதான் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை நடுவர்கள் சொல்லும்போது புரிந்து கொள்ள முடிந்தது. சுருதி தாளம் பாவம், சங்கதிகள் பற்றி பல விஷயங்களை ஓரளவிற்கு அறிவதற்கு இந்நிகழ்ச்சி உதவியாக இருந்தது என்று சொல்லலாம். மேலும்  இசைக் கருவிகளோடும் இணைந்து பாடுதல் பிற பாடகர்களுடன் சேர்ந்து பாடும்போது பின்பற்றவேண்டிய நடை முறைகள் இவையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பல பாடல்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள், பாடல்களின் ராகங்கள்,பல்வேறு இசை வடிவங்கள் இவற்றை அறிந்து கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி உதவி புரிந்தது. 

   மேலும் பல பாடகர்களின் அனுபவங்கள் பாடல் உருவான நிகழ்வுகள்  சுவையைத் தந்தது. என்னைப் போன்றவர்கள்  ரசிக்கத் தவறிய பிரபலமாகாத நல்ல பாடல்களையும் அறிய முடிந்தது.சில பாடல்கள் இந்நிகழ்ச்சியின் மூலமாகவே இன்னும்  புகழ் பெற்றது. வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்று ஒருவர் இருக்கிறார் என்பது எனக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தெரிய வந்தது. சும்மா இருக்கிற பல பாடகர்களுக்கு நடுவராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். 
   இப்படி பல நல்ல விளைவுகள் இருந்தாலும் இதன் மூலம் பெற்ற துளி  இசை அறிவு நமக்கு நிறைய தெரிந்துவிட்டது போல பிரமையும் ஏற்படுத்தி உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகம் செல்வது வழக்கம். கண்தெரியாத, நடக்க முடியாத,வயதான, மாற்றுத் திறனாளிகள் பலர் பல விதமான பாடல்களைப் பாடுவார்கள்.பயணிகளும் தங்கள் விருப்பப் பட்டதை அவர்களுக்கு அளிப்பார்கள். முன்பெல்லாம் இவர்கள் பாடுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கும். சினிமாவில் பாடுவதுபோலவே அப்படியே பாடுகிறார்களே என்று தோன்றும். அவர்கள் பாடுவதில் உள்ள குறைகள் கொஞ்சம் கூட தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பாடல்களை ரசிக்க முடியவில்லை. நாம் ஏதோ இசையைக் கரைத்துக் குடித்தவர்போலவும் ஸ்ருதி விலகியும்,தவறான மெட்டிலும் தாளத்திலும் பாடுவதை  கேட்டு சகித்துக் கொள்ள முடியாமல்  ஏன் இப்படிப் பாடலை கொலை செய்கிறார்கள் என்றும் பாடாமல் இருந்தால் காசு கொடுக்கலாம் என்றும் தோன்றி இருக்கிறது. ஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான  அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள்? பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே! மாற்றிக் கொள்வேன்.
 
   எப்படி இருப்பினும் பாகுபாடின்றி சாதாரண நிலையில் உள்ள திறமையான பாடகர்களுக்கும்  வாய்ப்பு வழங்கி உண்மையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இந்த  சீசனில் பங்குபெறும் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.

*************************************************************************************
முந்தைய  பதிவுகள்
இது சாதாரண காதல் இல்லீங்க!
இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை

வியாழன், 14 பிப்ரவரி, 2013

இது சாதாரண காதல் இல்லீங்க!


நம்ம இளைஞன் ஒருத்தனுக்கு காதலிக்க நேரம் நேரம் நிறைய இருக்குதுங்க,ஆனா காதலிக்கருதுக்குத்தான் ஆள் கிடைக்கலேங்க.போன காதலர் தினத்துக்கே ஒரு கவிதை எழுதி வச்சி காத்துக் கிட்டிருந்தான்  பாவம் யாரும் கண்டுக்கலைங்க.ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத  அந்த இளைஞன் அதே கவிதைய வச்சு இந்த வருடமும் திரும்பவும் ட்ரை பண்றாருங்க!   அவனுடைய காதல் கடிதத்தை படிச்சிட்டு தெய்வீகக் காதலை நீங்களாவது புரிஞ்சுகோங்க ப்ளீஸ்.
இதோ அந்தக் கடிதம் 

               அன்பே! 
                விடியும் வரையில் விழித்திருந்தே நான்
                கவிதை ஒன்று உனக்கென வரைந்தேன்
                உன்முகம் கண்ட நாள் முதலாய்
                உணவும் எனக்கு இறங்க வில்லை
                இமையும் ஏனோ உறங்க வில்லை
                கயல்விழி கொண்டு எனைநீ பார்த்தால்
                கனவில் மிதப்பேன்; காற்றில் பறப்பேன்;
                காலையும் மாலையும் உனையே நினைப்பேன்.
                மற்றவை அனைத்தும் இனிமேல் மறப்பேன்!
                நீயே பிரம்மன் செதுக்கிய சிற்பம்
                தமனா ஹன்சிகா   உன்முன் அற்பம்
                புதுநிலவின் கவர்ச்சியதை  முகமே வெல்லும் 
                பூந்தளிரின் மென்மையை உன் மேனியும் சொல்லும்
                செவ்வாழை பூப்போலே விளங்கும் விரல்கள்
                மாதுளையின் முத்தெனவே மின்னும் பற்கள்
                புது ரோஜா நிறமுந்தன் இதழில்
                பூவாசம் மணக்கும்உன் கார் குழலில்
                இளமானின் அழகு உந்தன் கண்ணில்
                ரகுமானின் இசை உந்தன் குரலில்
                அழகிய கன்னம் ஆரஞ்சு வண்ணம்
                பழகிடத் துடிக்குதடி எந்தன் எண்ணம்
                அள்ளிப் பருகிடவே ஆசை பெருகுதடி
                தள்ளி நிற்காதே மனம் தவித்து உருகுதடி
                உறங்கும் போதும் உந்தன் நினைவு
                விழிக்கும் போதும் உந்தன் கனவு
                இரும்பாய் இருந்தேன் காந்தமாய் கவர்ந்தாய்
                கரும்பாய் இன்று நெஞ்சில் இனித்தாய்
                துரும்பாய்  எனைநீ எண்ணி விடாதே             
                திரும்பாமல் நீயும் சென்று  விடாதே
                உனக்கென காத்துக் கிடந்தேன் வீதியில்
                படிப்பைக் கூட விட்டேன் பாதியில்
                நீஎனைக் கேட்டால் எதையும் தருவேன்
                உயிரைக் கூட உடனே தருவேன்.
                உனக்கென ஏங்குது எந்தன் இதயம்
                உன் நெஞ்சில் வருமோ காதல் உதயம்
                இன்றே இதைநீ படித்து விடு
                சம்மதம் என்றே சொல்லி விடு


                                        இப்படிக்கு
                            உன்னை உயிருக்குயிராய் காதலிக்கும்
                                    ?????????????????????
                பின்குறிப்பு;
               விருப்பம் இன்றேல் கிழித்துவிடாதே
               குப்பை தொட்டியில் எறிந்துவிடாதே
               மீண்டும் இதைநீ மடித்து விடு
               உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு


**************************************************************************************** 

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை


  தலைவனுக்காக  தீக்குளிக்கவும் தயார் என்று தொண்டர்கள் சிலர் சொல்வதுண்டு சிலர் அவ்வாறே செய்யத் துணிவதும் உண்டு. ஆனால் தங்கள் விசுவாசத்தை நிருபிப்பதற்காக கொதிக்கும் எண்ணையில் தங்கள் கையை விட்டவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? அந்தச் செய்தியைப் படித்தது நான் அதிர்ந்துதான் போனேன்.

 குஜராத்  மாநிலத்தில் சபர்கந்த் மாவட்டத்தில் உள்ள தேரியா என்ற கிராமத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடை பெற்றுள்ளது.
காரணம்  என்ன?
  கிராம உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று  வாக்கு எண்ணிக்கை அப்போதுதான் முடிந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் தினேஷ் பரமர் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மேல்ஜி பரமர் என்பவரிடம் தோற்றுப் போனார். தன் இன மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள் என்று  அதிருப்தியும் கோபமும் அடைந்தார் 

 அவரை சமாதானப் படுத்த அவரது இன மக்கள் சிலர்   தினேஷுக்குத்தான் வாக்களித்தோம் என்றும் கூறி உள்ளனர். மேலும்  20க்கும் மேற்பட்டவர்கள் பேர் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முன்வந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு தங்கள் கையை சுட்டுக் கொண்டு கடுமையான காயங்களுடன் துடித்தனர்.  உண்மையில் தினேஷ் பரமருக்கு  ஓட்டுப் போட்டிருந்ததாலும் உண்மையைச் சொன்னதால்  கொதிக்கும் எண்ணையால் அவர்கள் கைக்கு பாதிப்பு வராது என்றும் பொய் சொன்னால்தான் கை வெந்து போகும் என்றும்  நம்பிய மூடத்தனமே இதற்கு காரணமாம்  
  இதை தட்டிக் கேட்கவோ தடுக்கவோ யாரும் முன் வராததும் மனிதாபிமானத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு வேடிக்கை பாரத்து கொண்டிருந்ததும்  வெட்கித் தலைகுனிய வேண்டிய  விஷயமே! 

  அவ்வூர் கோவிலின் முன்னே இக்கொடுமை நடைபெற்றுள்ளது. இந்த மூடநம்பிக்கை ஆழமாக இம்மக்களிடையே வேரூன்றி உள்ளதாம் தினேஷ் பரமரையும் இதற்கு தூண்டு கோலாக இருந்த அம்ருத் பரமர் என்பவரையும்   கைது செய்திருக்கிறது போலீஸ்.

கைது செய்த போலிசை பாராட்டி இருக்கிறார் நரேந்திர மோடி. தினேஷ் பரமரோ அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர்களைப் போன்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக் கூடாது.

  அந்த  மக்கள் மீது பரிதாபத்தைவிட கோபம்தான் அதிகமாக வந்தது. அப்படி என்ன இவர்களுக்காக சாதித்து விட்டார் அந்த பாழாய்ப் போன தினேஷ் பரமர் என்று தெரியவில்லை. இது போன்று நடைபெறுவது இப்பகுதிகளில் சகஜமாம்.  "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்." என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்தது. 
  இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதரணமாக நடக்கிறது என்கின்றனர். ஒரு வயதான கிழவியையும் அவரது மகளையும் திருட்டுக் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க இதேபோல் கொதிக்கும் எண்ணையில் கைவிடச் சொன்ன நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம். இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் இது போன்று நடைபெறுவது வேதனைக்குரியது.
 .
 குஜராத் அபாரமான வளர்ச்சி கண்டுள்ளதாக  பத்திரிகைகளும் ஊடகங்களும் தெரிவிக்கின்றன. எத்தனை  தொழில் வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் வந்தால் என்ன? அடிமை எண்ணம் மாறாமல் வாழும் மக்களின் பரிதாப நிலையை என்னென்பது.

 அறிவியல் தொழில் நுட்பங்கள்   மக்களின் அறியாமையைப் போக்கவில்லை என்றால் அது எப்படி உண்மையான வளர்ச்சி ஆகும்.?

 இது ஒரு உதாரணம்தான் இப்படி இன்னும் எத்தனை மக்கள் நம் நாட்டில் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்களோ? சுயநல அரசியல்வாதிகள் மட்டுமல்லாது அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. அரசாங்கம் பொதுநல அமைப்புகள், மூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து  செயல் பட்டால் மட்டுமே  இத்தகைய முட்டாள் தனங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

மனதை திடப் படுத்திகொண்டு கையை சுட்டுக் கொண்டவர்களை இந்த செய்தித் தொலைக் காட்சிக் காணொளியில் பாருங்கள்



********************************************************************************
 இதை படித்து விட்டீர்களா?
ஜனவரி,பிப்ரவரி,வருமானவரி!

வியாழன், 7 பிப்ரவரி, 2013

எப்படி இருந்த மதுரை!-வைரமுத்து


  சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகர் மீது எனக்கு ஒரு பிரமிப்பும் ஈர்ப்பும் உண்டு ஒரே ஒருமுறைதான் மதுரைக்கு சென்றிருக்கிறேன். அதுவும் கோவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். கலை நகரமான மதுரை என்றாலே கொலை நகரம் என்ற தோற்றத்தை உருவாக்கியதில் நமது சினிமாக்களுக்கு பெரும் பங்கு உண்டு. இருந்தாலும் அது உண்மையோ என்ற எண்ணத்தை    சமீபத்தில் நடந்த கொலை நிகழ்வு ஏற்படுத்தி விட்டது.
இந்த சூழலில் வைரமுத்துவின் மதுரை என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. மனதை மயக்கும் கவிதை இது.உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

                               மதுரை  

                  பாண்டியன் குதிரைக் குளம்படியும்-தூள்
                     பறக்கும் இளைஞர் சிலம்படியும்-மதி 
                  தோண்டிய புலவர் சொல்லடியும்-இனம் 
                     தோகைமார்தம் மெல்லடியும் 

                  மயங்கி ஒலித்த மாமதுரை -இது 
                     மாலையில் மல்லிகைப் பூமதுரை 

                  நீண்டு கிடக்கும் வீதிகளும்-வான் 
                     நிமிர்ந்து முட்டும் கோபுரமும் 
                  ஆண்ட  பரம்பரை சின்னங்களும்-தமிழ்
                     அழுந்தப் பதித்த சுவடுகளும் 

                  காணக்  கிடைக்கும் பழமதுரை-தன்
                      கட்டுக் கோப்பால் இள மதுரை !

                  மல்லிகை மௌவல் அரவிந்தம்- வாய்
                      மலரும் கழுநீர் சுரபுன்னை 
                  குல்லை வகுளம் குருக்கத்தி-இவை 
                      கொள்ளை அடித்த வையை நதி 

                  நாளும் ஓடிய நதி மதுரை-நீர் 
                     நாட்டியமாடிய பதிமதுரை

                  தென்னவன் நீதி பிழைத்ததனால்-அது 
                     தெரிந்து மரணம் அழைத்ததனால் 
                  கண்ணகி திருகி எறிந்ததனால்-அவள் 
                     கந்தக முலையில் எரிந்ததினால் 

                  நீதிக்  கஞ்சிய தொன்மதுரை -இன்று 
                    ஜாதிக் கஞ்சும் தென்மதுரை 

                  தமிழைக் குடித்த கடலோடு-நான் 
                     தழுவேன் என்றே சபதமிட்டு
                  அமிர்தம் பரப்பும் வையை நதி -நீர் 
                     ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 

                  மானம் எழுதிய மாமதுரை-இது 
                     மரபுகள் மாறா வேல் மதுரை 

                  மதுரை  தாமரைப் பூவென்றும் -அதன் 
                     மலர்ந்த இதழே தெருவென்றும் 
                  இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை 
                     எம்குடி மக்கள் திரளென்றும்-பரி

                   பாடல் பாடிய பால் மதுரை-வட
                     மதுரா புரியினும் மேல்மதுரை

                   மீசை  வளர்த்த பாண்டியரும்-பின் 
                     களப்பிறர் பல்லவர் சோழர்களும்-மண் 
                   ஆசை வளர்த்த அந்நியரும்-அந்த 
                      அந்நியரில் சில கண்ணியரும்

                   ஆட்சிபுரிந்த தென்மதுரை-மீ 
                        னாட்சியினால்  இது பெண்மதுரை 

                    மண்ணைத் திருட வந்தவரை- தம்
                        வயிற்றுப் பசிக்கு வந்தவரை-செம்
                    பொன்னைத் திருட வந்தவரை-ஊர் 
                        பொசுக்கிப் போக வந்தவரை-தன்

                    சேயாய்  மாற்றிய தாய்மதுரை-அவர்
                         தாயாய் வணங்கிய தூயமதுரை 

                    அரபுநாட்டுச் சுண்ணாம்பில்-கரும்பு 
                        அரைத்துப் பிழிந்த சாறூற்றி
                    மரபுக் கவிதைபடைத்தல் போல் -ஒரு 
                        மண்டபம் திருமலை கட்டியதால் 

                    கண்கள்  மயங்கும் கலைமதுரை-இது 
                       கவிதைத் தமிழின் தலை மதுரை 

                    வையைக் கரையின் சோலைகளும்-அங்கு 
                       வரிக்குயில் பாடிய பாடல்களும் 
                    மெய்யைச் சொல்லிய புலவர்களும்-தம் 
                       மேனி கருத்த மறவர்களும் 

                    மிச்சமிருக்கும்  தொன்மதுரை-தமிழ் 
                        மெச்சி முடிக்கும் தென் மதுரை 

                    போட்டி வளர்க்கும் மன்றங்களும்-எழும் 
                        பூசைமணிகளின் ஓசைகளும்-இசை 
                    நீட்டி முழங்கும் பேச்சொலியும்-நெஞ்சை 
                        நிறுத்திப் போகும் வளையொலியும்

                    தொடர்ந்து கேட்கும் எழில் மதுரை-கண் 
                         தூங்காதிருக்கும் தொழில்மதுரை 

                    ஆலைகள் தொழில்கள் புதுக்காமல்-வெறும் 
                        அரசியல் திரைப்படம் பெருக்கியதில் 
                     வேலைகள்  இல்லாத் திருக்கூட்டம் -தினம் 
                          வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 

                     பட்டக்  கத்திகள் சூழ்மதுரை-இன்று 
                          பட்டப் பகலில் பாழ்மதுரை 

                     நெஞ்சு வறண்டு போனதனால் -வையை 
                         நேர்கோடாக ஆனதனால் 
                      பஞ்சம் பிழைக்க வந்தோர்-நதியைப் 
                          பட்டாப் போட்டுக் கொண்டதனால் 

                      முகத்தை இழந்த முதுமதுரை-பழைய 
                            மூச்சில் வாழும் பதிமதுரை

***********************************************************************************************************************

 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஜனவரி,பிப்ரவரி,வருமானவரி!


   மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பிடிக்காத மூன்று மாதங்கள் ஜனவரி,பிப்ரவரி மார்ச். காரணம் வரு மான வரிதான். ஜனவரியில் இருந்தே வரிப் பிடித்தங்கள் தொடங்கிவிடும். ஜனவரியில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படும்.  பிப்ரவரியில் வருமானவரி பிடித்தம் செய்துவிடுவார்கள்.
   ஒவ்வொரு மாதக் கடைசி நாளில் ஊதியம் கிடைத்துவிடும். மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் முதல் வாரத்தில்தான் கிடைக்கும்.
   ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இடையே ஜனவரியிலேயே பரபரப்பு ஆரம்பித்துவிடும். கணக்கிட்டுப் படிவங்களின் விலை கன ஜோராக நடக்கும். வருமானம்,சேமிப்பு, வரி இவற்றை கணக்கிட்டு ஐயோ! வரி இவ்வளவு கட்டவேண்டியிருக்குமே என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருப்பர்கள். வரி கட்டாமல் இருக்க அல்லது குறைக்க என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்ய துவங்குவார்கள். இதற்கெனவே பல வழிகாட்டிகள் ஆலோசகர்கள் இருப்பார்கள்.
     இதற்குக்காரணம் வருமான வரி கணக்கிடுவதில் எளிய நடை முறைகள் பின்பற்றுவதில்லை என்பதே.

    கருவூலம் சாதரணமாக  மார்ச்31 வரை உள்ள காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களைப் பொருத்தவரை பிப்ரவரி மாத ஊதிய பட்டியல்கள் சமர்ப்பிக்கப் படும்போதே வருமானவரி கணக்கீட்டுப் படிவத்தையும் இணைத்தே அனுப்பவேண்டும். வரி கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பித்தல் வேறு. வருமானவரி தாக்கல் செய்வது வேறு. வருமான வரி நேரடியாக வருமான வரித்துறையினரிடம் செய்ய வேண்டும். மார்ச் மாதத்திற்குப் பிறகு தாக்கல் செய்தால் போதுமானது. இவை துறை சார்ந்தது இது தவிர வரி செலுத்தவேண்டியது இருந்தால் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டும் அல்லது வங்கியில் வரியை செலுத்தி அதன் பற்றுச் சீட்டை இணைக்கவேண்டும்.இல்லையெனில்  ஊதியம் வழங்கப்பட மாட்டாது. பிப்ரவரி 20 இருபது தேதிக்குள் பட்டியல்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்கப் பட வேண்டும். 20 இப்பணிகள் முடிய வேண்டுமெனில்  10 ஆம்தேதிக்குள் இந்த விவரங்களை ஊழியர்கள் தர வேண்டும். 
   இது ஒருபுறம் இருக்க வரி கணக்கிடுவதில் ஏராளமான சிக்கல்கள். ஊதியத்தில் கட்டாயமாக பிடித்தம் செய்யப்படும் சேமநல நிதி உட்பட அதிக பட்ச சேமிப்பு ஊர் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு மட்டுமே வரிக் கழிவுகள் கிடைக்கும். முதல் இரண்டு லட்சத்திற்கு வரி ஏதுமில்லை . இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை 10 % சதவீதம் வரி செலுத்தவேண்டும்.மீதித் தொகைக்கு 5 லட்சம் ரூபாய் வரை 10 சதவித வரி செலுத்த வேண்டும். இந்த வரியுடன் கல்வி வரி 3  சதவீதம் சேர்த்துக்கொள்ளவேண்டும். 
   மொத்த ஆண்டு வருமானம் கணக்கிடும்போது. வருமானவரி வேண்டிய மொத்த வருமானத்தை வாடகை வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவுதான் வாடகை செலுத்தினாலும்  அதிகபட்சமாக அவர்கள் பெரும் வீட்டு வாடகைப்படிதொகையை மட்டுமே கழித்துக்  கொள்ள முடியும். எவ்வளவு உயர் பதவியில்  இருந்தாலும் அதிக பட்ச வீட்டு வாடகை படி  மாதத்திற்கு 3200 மட்டுமே.

    சேமிப்பிற்கு ஒரு லட்சம்தான் அதிக பட்சம் என்றாலும் அதையும் சேமிக்காமல் கடைசி நேரத்தில் பிப்ரவரி மாதத்தில் LIC,NSC என்று வரி சேமிப்பு திட்டங்களைத் தேடுவார்கள். அதில் திடீரென்று அதிக பணம் போடவேண்டி இருக்கும்.அதற்கு மனம் வராமல் குறுக்கு வழிகளில் இறங்குவோரும் உண்டு.

    அலுவலக கிளார்க்கை சரிக்கட்டி  சில வரவினங்களை காட்டாமல் மறைப்பது, செய்யாத மருத்துவ செலவுகளுக்கு மருத்துவரின் சான்று வாங்குவது போன்றவையும் நடைபெறும். மருத்துவ செலவிற்கான வர்கவரிக் கழிவைப் பொருத்தவரை குறிப்பிட்ட வியாதிகளின் சிகிச்சைக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். இதற்கான சான்றை உரிய படிவத்தில் தருபவர் சிவில் சர்ஜன் நிலையில் உள்ள மருத்துவ அதிகாரி. ஆனால் இந்த வியாதிகள் எல்லாம் யாருக்கும் வரக்கூடாத வியாதிகளே! முன்பெல்லாம் இவற்றைத் வாங்கித் தருவதற்கென்றே சிலர் உண்டு, இதையெல்லாம் செய்தாலும் கருவூலத்தில் எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள். அவர்களையும் சரிக்கட்டவேண்டும்.

     இத்தனையும் தாண்டி சம்பளம் வாங்குவதற்குள் ஒரு வழி ஆகிவிடும். ஒரு சிலருக்கு பிப்ரவரி மாதத்தில்  ஊதியத்தின் பெரும்பகுதியை வரியாக செலுத்தும் சூழ்நிலையும் வருவதுண்டு. அப்போது ஒரு முடிவு எடுப்பார்கள் அடுத்த ஆண்டு முன்னரே எல்லா வற்றையும் தாயார் செய்துவிட வேண்டும் என்று. ஆனால் அது அத்தோடு மறந்து போகும். 

    மார்ச் மாதத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும். மார்ச் 31 க்குள் அவர்களது டார்கெட்டை அடைவதற்கு அரசு ஊழியர்களை குறி வைப்பார்கள்.அவர்களும் அடுத்த ஆண்டு வருமான வரிகணக்குக்கு உதவுமே என்று  சேமிப்பார்கள். உண்மையில் மார்ச்சில் செலுத்தப்படும் இன்சூரன்ஸ் தொகை அடுத்த நிதிஆண்டு வருமான வரிக் கணக்கில் சேர்க்க முடியாது. ஏனெனில் அந்த சேமிப்பு முந்தைய  நிதி ஆண்டுக்கே எடுத்துக்கொள்ள முடியும். அரசு பணியில் இருப்பவர்களோ பிப்ரவரியிலேயே கணக்கை சமர்ப்பித்து விடுவதால் மார்ச் சேமிப்பினால் பயன் பெறுவது கடினம். இது தெரியாமல் சிலர் அவஸ்தைப் படுவார்கள். ஒரு வேளை இந்த ஆண்டே அதன் பலனை பெற வேண்டுமெனில் வருமான வரித் துறைக்கு உரிய படிவத்தில் சமர்ப்பித்து அந்தத் தொகையை பெறமுடியும் என்றாலும் அது சற்று சிக்கலானது.

   (தமிழக) அரசுப் பணியாளர்களை பொருத்தவரை வருமான வரி பெற இவ்வளவு சிக்கலான நடை முறைகள் தேவையா என்பதே எனது கேள்வி. அவரவர் ஊதியத்திகேற்ப குறிப்பிட்ட சதவீதத்தை கட்டாயமாக வரிப் பிடித்தம் செய்துவிடவேண்டும்.தொழில் வரி அவ்வாறுதான் பிடித்தம் செய்யப் படுகிறது. இதில் வழங்கப்படும் சலுகைகளே முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றன.  ஆயிரம் ரூபாய் வரிசெலுத்தாமல் இருப்பதற்கு 10000 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும்.

 சேமிப்பு நல்லதென்றாலும் தேவையை நிராகரித்து சேமிப்பு கட்டாயமாக்கப்படும்போது  சில நேரங்களில் சிலருக்கு சங்கடங்களை உருவாக்கிறது. கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் வரி ஒழுங்காகச் செலுத்துவதில்லையே நம்மிடம் மட்டும் காட்டாயம் வரி வசூலித்து விடுகிறார்களே என்று ஒரு சிலர் நினைத்தாலும் நேரடியாக எளிமையாக வரிப் பிடித்தம் முறையை பின்பற்றுவதை பெரும்பாலோர் வரவேற்கவே செய்வார்கள் என்றே நம்புகிறேன்.

          *********************************************

கொசுறு;
Income tax slab for fy 2012-13
The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2012-13 and 
 assessment year (AY) 2013-14 are mentioned below:
New Income tax slab for fy 2012-13 / ay 2013-14

S. No.
Income Range
Tax percentage
1
Up to Rs 2,00,000
No tax / exempt
2
2,00,001 to 5,00,000
10%
3
5,00,001 to 10,00,000
20%
4
Above 10,00,000
30%

 
      ********************************************************************************************

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விவேக்கை பழி வாங்காத போக்குவரத்து போலீசார் .

(சி.எம்.மை எனக்கு தெரியும்........அவங்களுக்குத்தான் என்னைத் தெரியாது)
  எத்தனை படங்களில் போக்குவரத்துக் காவலர்களை கலாய்த்து இருப்பார் விவேக்? ட்ராஃபிக் கான்ஸ்டபிளை அழைத்துக் கொண்டு அவர் போட்டுக் காட்டிய   ஏழரையை யார் மறக்க முடியும்.ஒரு படத்தில் லீவ் லெட்டரை வேகமாகச் சொல்ல ஆங்கிலம் பேசுவதாக நினைத்து பயந்து அவரை அனுப்பி வைப்பார்கள் போலீஸ்காரர்கள். இப்படி விதம் விதமாக  தன் படங்களில் ட்ராஃபிக் போலீசாரை கிண்டல் செய்திருப்பார்  விவேக் 

  இரண்டு தினங்களுக்கு முன்பு  கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களை வழி மறித்து ஸ்டிக்கர்களை கிழித்ததோடு 100 ரூபாய் அபராதமும் விதித்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு காரை மடக்கி ஸ்டிக்கரை கிழிக்க வற்புறுத்தியபோது காரில் இருந்து வெளியே வந்தார் விவேக். நான் கருப்பு நிற ஸ்டிக்கர் ஓட்ட அனுமதி வாங்கிக் கொள்கிறேன்.இப்போது அபராதம் கட்டி விடுகிறேன்.ஸ்டிக்கரை கிழிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அபராதம் 100 ரூபாய் மட்டும்(அவ்வளவுதானா) வாங்கிக் கொண்டு விட்டு விட்டனர். திரைப்படங்களில் தங்களை கேலி செய்பவர் என்று தெரிந்தும் பெருந்தன்மையுடன் விட்டுவிட்டனரா அல்லது சி.எம்மை எனக்கு தெரியும் என்று சொலி இருப்பாரோ  ஆனா அவங்களுக்குத்தான் எனக்கு தெரியாது சொல்வதற்குள் விட்டுவிட்டார்களோ. அவர்களால் என்ன செய்ய முடியம் எங்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று தடையா வாங்க முடியும். 

    இது போன்று மாட்டிகொண்டவர்கள் பலர் உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து பேசவைத்தும்,  போலீஸ் வாகனத்தில் கேமரா சோதனைகளை படம் பிடித்துக் கொண்டிருந்ததால் யார் பேச்சையும் கேட்கவில்லை போலீசார். ஸ்டிக்கரை கிழித்து அபராதம் வசூலித்து விட்டனர். அபராதம் என்னவோ  நூறு ரூபாய்தான். அதைக் கட்டக்கூட மனசு இல்லை கார் வைத்திருக்கும் ஏழைகளுக்கு.

    சன் ஃபில்ம் ஒட்டப்பட்ட வாகனங்களில் உள்ளே நடப்பது வெளியே தெரிவதில்லை. இதனால் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஸ்டிக்கர் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி பெறவும் வாய்ப்பு இருக்கிறது போலும். இது எந்த விதத்தில் நியாயம் என்று  தெரியவில்லை. யாராக இருந்தால் என்ன? சன் ஃபில்ம் ஓட்டக் கூடாது என்றால் அது அனைவருக்கும் பொருந்த வேண்டும். இதில் விலக்கு அளிப்பது சரியல்ல என்பதே என் கருத்து.

   ட்ராஃபிக் போலீசாருடன் எனக்கும் ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது.அதை இன்னொரு பதிவில் கூறுகிறேன்.

************************************************************************************
இதைப்  படித்து விட்டீர்களா?