எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலனின் சிறுகதைகளையோ மற்ற படைப்புகளையோ அதிகம் நான் படித்ததில்லை. அவர் கவிதை எழுதி இருக்கிறாரா? அதுவும் எனக்குத் தெரியாது. தொலைக் காட்சியில் தேர்தல் நேரத்தில் அவரை பார்த்திருக்கிறேன். அவரது கட்டுரைகளை புதிய தலை முறை இதழில் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். அதோடு சரி ஆனால் அவையும் என்னை ஈர்த்ததில்லை.
சமீபத்தில் என் ஜன்னலுக்கு வெளியே என்ற தொடரை 'புதிய தலைமுறை' வார இதழில் எழுதி வருகிறார். சமூக நிகழ்வுகள் அவலங்கள் பிரச்சனைகள் பற்றி சில வாரங்களாக எழுதி வந்தாலும் சமீபத்தில் வெளியான பகுதி அவரது எழுத்தாற்றல் மீதான எனது எண்ணத்தை மாற்ற வைத்தது. பாலியல் வன்முறை மீதான சிந்தனை பற்றிய அந்தக் கட்டுரையின் முற்பகுதி என்னைக் கட்டிப் போட்டது. ஒரு கைதேர்ந்த கவிஞனின் வரிகள் போல வார்த்தைகள் வந்து விழ பல்வேறான சிந்தனைகளை என்னுள் விதைத்துச் சென்றது அந்த வரிகள். அது ஒரு கவிதையாகவும் காட்சி தந்தது. ஒரு சிறுகதையாகவும் திகழ்ந்து சிந்தை கவர்ந்தது.
இதோ அவை உங்களுக்காக
"கதவைத் திறப்பதற்காக காத்துக் கொண்டிருந்ததைப் போல என் ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்து அமர்ந்தது அந்த வண்ணத்துப் பூச்சி.மஞ்சளும் கருப்பும் கலந்த மலர் போல இருந்தது.காகிதத்தில் செய்ததைப் போன்ற சிறகுகள் கண்ணாடியைப் போலப் பொலிந்தன.
முதலில் அது நாற்காலியின் முதுகில் உட்கார்ந்து உரையாட அழைத்தது. இறக்கையை சிலுப்பிக்கொண்டு எதிர் சுவரில் தொற்றி வண்ணத்தை ஆராய்ந்தது.புத்தகங்களை பூக்கள் என்றெண்ணியதோ? அவற்றின் மீது தத்தித் தத்தி இலக்கியம் படித்தது.குழல் விளக்கில் பால் குடிக்க முயன்றது.வானொலியின் மீது அமர்ந்து இசை பயின்றது.வீட்டுக்குள் வந்த விமானம் இறங்க இடம் தேடியது போல் எல்லா இடமும் சுற்றி வந்தது.எனக்கோ அது என் மனதை போல எதனினும் வசம் கொள்ளாது எதையோ தேடித் திரிவதைப் போல் தோன்றியது.
விடிந்து விட்டது.விளையாடிக் கொண்டிருக்க நேரமில்லை என்பதால் நான் என் நடையணிகளை மாட்டிக் கொண்டு கடற்கரைக்கு புறப்பட்டேன். காத்திரு! வருகிறேன் எனச் சொல்லி கிளம்பினேன்.
இளங்காலைக் காற்று இதமாக இருந்தது என்றாலும் என் இதயத்தில் இன்னமும் வண்ணத்துப் பூச்சி படபடத்துக் கொண்டிருந்தது. வந்திருந்த விருந்தாளிக்கு வரவேற்புக் கொடுப்பதற்காக வீடு திரும்பும் வேளையில் வீதியோரம் பூத்திருந்த பெயர் தெரியாப் பூவொன்றைப் பறித்து எடுத்து வந்தேன்.
கதவின் முனகல்கூட அதன் காதில் இடி ஓசையாய் இறங்கும் என்றெண்ணி கவனமாகத் திறந்தேன். காணோம்! வீடெங்கும் தேடினேன்!. அந்த விடிகாலை விருந்தாளி விடை பெறாமலேயே புறப்பட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த சந்தோஷம் சொல்லிக் கொள்ளாமல் போவதுதான் வாழ்க்கை என்று என்னை தேற்றிக் கொள்ள முயன்றபோது சொத் என்ற சத்தம் வாசலில் விழுந்தது.
ஆம்! நாளிதழ்தான்! நாட்டு நடப்புகளை எல்லாம் வார்த்தைகளில் வடித்தெடுத்த அந்தக் காகிதக் கணையை வீசி விட்டு போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அதை எடுக்கக் குனிந்தபோது என்நெஞ்சில் ஈட்டிகள் பாய்ந்தன.
கண்ணாடிச் சிறகுகள் நொறுங்கிக் கிடக்க தண்ணீரில் சிந்திய வண்ணத்தைப் போல சிறகின் நிறங்கள் கலைந்து செய்தித் தாளுக்குக் கீழே செத்துக் கிடந்து என் வண்ணத்துப் பூச்சி. "
இதன் பின்னரும் தொடர்ந்து, 13 வயது சிறுமியை தாய்மாமனோடு சேர்ந்து 5 பேர் பாலியல் வன்முறை செய்தது பற்றியது பேசியது அந்தக் கட்டுரை. ஆனால் அவை யாவற்றையும் விளக்க மேலே படித்தவையே போதுமானதாக இருந்தது எனக்கு.
உங்களுக்கு!
******************************************************************************************
இதைப் படிச்சாச்சா?
அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்
அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்


