என்னை கவனிப்பவர்கள்

சனி, 27 அக்டோபர், 2012

ஏ.ஆர்.ரகுமானும் சூப்பர் சிங்கர் ஃபைனல்சும்.

    ஒரு வழியாக சூப்பர் சிங்கர் பைனல்ஸ் முடிந்துவிட்டது.பைனலின் சிறப்பு அம்சம் எங்கும் அதிகம் தலையைக் காண்பிக்காத இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் வருகைதான். அவர் அரங்கில் நுழைந்ததும் அரங்கமே ஆர்ப்பரித்தது. கடவுளைக் கண்ட பக்தர்களைப் போல அனைவரும் எழுந்து நின்றனர். பிரபல பாடகர்கள் மனோ,சித்ரா,உன்னிகிருஷ்ணன், உட்பட அனைவருமே  ஒரு பரவச நிலையில் காணப்பட்டது போல் என் கண்களுக்கு தெரிந்தது. அவரோ அமைதியாக பாதிப் புன்னகையுடன் காட்சி அளித்தார். சாந்தமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் இவருள்தான் இசைபுயல் அடித்துக் கொண்டே இருப்பது ஆச்சர்யம்தான். இந்திய இளைஞர்களையும் சிறுவர்களையும் தனது இசைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அவர் முகத்தில்தான் எத்தனை அமைதி!

   அவரது இசையில் ஒரு பாடல் பாடினால்கூட  போதும் என்று பிரபலப் பாடகர்களே தவம் கிடக்கும்  இந்த சூழ் நிலையில் அவர்  முன்னிலையில் பாடக் கிடைத்த வாய்ப்பை ஐந்து பைனலிஸ்ட்களில் ஒருவர் கூட சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.ஒலி அமைப்பு சரியில்லையா அல்லது பாடியது  சரி இல்லையா. என்று தெரியவில்லை.அவர்கள் பாடிய பாட்டு நம்மையே ஈர்க்கவில்லை.ரகுமானை ஈர்த்திருக்குமா என்பது சந்தேகம்தான்.அவர்கள் பாடிய போது ரகுமானின் சிந்தனை வேறு எங்கோ இருந்தது போல்தான் காணப்பட்டது. முடிந்ததும் ஏதோ ஒப்புக்கு கை தட்டியதுபோல் தோன்றியது. கருத்து கேட்டபோது  One Word Answer போல சொன்னார். அவர் என்ன சொன்னார் என்பதும் சரியாகப் புரியவில்லை.சுகன்யாவுக்கு மட்டும் மேலும் இரண்டொரு வார்த்தை சேர்த்து சொன்னார்.

  ஃபைனல் என்று சொன்னாலும் அன்று பாடுவதை வைத்து முடிவுகள் அமையப் போவதில்லை என்ற சூழ்நிலையில் வெறும் முடிவுகளை அறிவிக்கும் விழாவாக மட்டும் வைத்திருக்கலாம்.நம்முடைய பொறுமையும் சோதிக்கப்படாமல் இருந்திருக்கும்.

  லைவ் என்று சொன்னாலும் முடிந்த நிகழ்ச்சி ஒலி பரப்பப் பட்டதாக கேபிள் சங்கர் ட்விட்டரில் கூறி இருக்கிறார். இதோ அந்த ட்வீட் 


(கவனிச்சீங்களா? கேபிள்சங்கர் தன்பேர் கூட  அய்யர் ன்னு சேத்து வச்சிருக்கிறார்! கிண்டலா!சீரியசா! )
 

  நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டு நள்ளிரவைத்தாண்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.முதலில் ஐந்தில் கடைசி இரண்டு இடம் பெற்ற பெயரை அறிவித்தபோது அந்த இருவரில் சுகன்யாவும் இருந்தது மேடையில் இருந்தவர்களுக்கே லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாழினியின் முகத்தில்கூட அந்த அதிர்ச்சி வெளிப்பட்டது.கீழே இருக்கிற புகைப்படத்தில் பாருங்கள் யாழினி அதிர்ச்சி அடைவது சுகன்யாவுக்காக.போட்டியில் உள்ள அந்தக் சிறுமியால் கூட சுகன்யாவின் வெளியேற்றம் நம்பமுடியவில்லை.  

              (யாழினியின் அதிர்ச்சி சுகன்யா,கெளதமுக்காக)

  மூன்றாது இடம் யாழினிக்கு, இரண்டாவது இடம் பிரகதிக்கு  எதிர்பார்த்த மாதிரியே எதிர்பாரா முடிவாக ஆஜித் வெற்றி பெற்றார்.(வெற்றி பெற வைக்கப் பட்டாரோ?) சுகன்யா பிரகதி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

எது எப்படியோ வெற்றி பெற்ற ஆஜித்துக்கு வாழ்த்துக்கள்.

                  (சிரிக்கிறது ரகுமான்தான் நம்புங்க!)

  ஒரு  வழியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிவு பெற்றது. அடுத்து சூப்பர் சிங்கர் சீனியர் 4 வேறு வரப்போகிறதாம்.கொஞ்சமாவது இடைவெளி இருந்தால்தான் நிகழ்ச்சி வெற்றி பெறும். இல்லையேல் சலிப்பைத் தான் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.

**************************************************************************************




வியாழன், 25 அக்டோபர், 2012

ஜெயா டிவியின் புதுமை +விஜய் டிவி வித்தியாசம்


    சரஸ்வதி பூஜை ஆய்த பூஜையை முன்னிட்டு இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தொடர்ந்து முழுமையாக பார்க்கக் கூடிய அளவுக்கு நிகழ்ச்சிகள் வெகு   சுவாரசியமாக அமையவில்லை என்ற போதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ஜெயா டிவியின் பட்டிமன்றம்.வழக்கமாக ஞான சம்பந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.ஆனால் இம்முறை வித்தியாசமாக இலங்கை ஜெயராஜ் என்பவரின் தலைமையில் நடைபெற்றது. பட்டிமன்றத் தலைப்பு "கொடுப்பதில் இன்பமா? பெறுவதில் இன்பமா?"இதுவரை இவரை பார்த்ததில்லை.இவரது பேச்சைக் கேட்டதில்லை.நல்ல கம்பீரமான குரலில் அழகு தமிழில் அவரது பேச்சு ஈர்த்தது. நிறைந்த தமிழறிவு உடையவர் என்பது அவரது பேச்சில் தெரிய வருகிறது.ஈழத் தமிழின் சாயலின்றி தமிழகத் தமழில் பேசியது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

  முதலில் கொடுப்பதில் இன்பம் என்று பேசியபோது  ராமலிங்கம் அவர்கள் சொன்ன கம்பராமாயண பாடல் விளக்கம் அருமையாக இருந்தது.

  எல்லோரும் இறைவனுக்கு பலவற்றை கொடுக்க விரும்புகிறோம்.ஆனால் அவரிடம் இல்லாத எதை கொடுக்க முடியும் என்று சிந்திக்கிறார். இறைவனிடம் இல்லாதது என்ன இருக்கிறது.அப்படி இல்லாதது நம்மிடம் எப்படி இருக்க முடியும்.? இல்லாத ஒன்றைக் கொடுப்பதுதானே இன்பம் என்று சிந்தித்து தன்னிடம் இறைவனிடம் இல்லாத ஒன்று தன்னிடம் நிறைய இருப்பதை அறிந்து கொண்டார். அதுதான் அறியாமை அதை ஒன்றைத்தான் இறைவனுக்கு தர முடியும் என்று சொல்வதாக அமைந்த பாடலை எடுத்துக் காட்டியது சிறப்பாக இருந்தது. கம்பரின் சாமர்த்தியம் கண்டு ஆச்சர்யம் ஏற்பட்டது.(அந்தப் பாடலை நினைவில் வைத்திருக்க முடியில்லை)

இன்னொன்று அடுத்த நாள் பட்டிமன்றத்தில் த.பாண்டியன் பட்டிமன்ற நடுவராக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

                        ***************************************
  விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் பெரிதாக எதுவும் கவரவில்லை என்ற போதும் சில நாட்களாக சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி பற்றிய விளம்பரம் உண்மையாகவே நன்றாக இருந்தது.
    கெளதம்,அஜித்,சுகன்யா,பிரகதி, யாழினி ஆகிய இறுதிப் போட்டியாளர்கள் எப்படி ஆவலுடன் ஃபைனலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுவாரசியத்துடன் சொல்வது சூப்பர். குறிப்பாக அஜித் டிவியில லைவா காட்டறாங்கலாமே? நேரா பாக்கறதுக்கு கூட்டம் வருமா என்று அம்மாவிடம் கேட்பதும்,பிரகதி நான் ஜெயிக்கணும்,தோத்தாலும் தப்பில்ல இல்ல! என்று சொல்வதும் ஒரு குறும்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.விஜய் டிவியின் விளம்பர யுக்தியைப் பாராட்டலாம்.

 விஜய் டிவி பார்வையாளர்களைக் கவர இன்னொரு யுக்தியையும் கடை பிடிக்கிறது.நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆரம்பிப்பதுதான் அது.

   அப்படித்தான் ஆரம்பித்தது தோனி படம்.இந்தப் படம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி, இணையத்தில் அலசப்பட்டு விட்டாலும் படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை.புதுவிதமான கதைக் களங்களை தைரியமாக எடுப்பதற்காக பிரகாஷ் ராஜை பாராட்டலாம்.படம் முழுவதும் அவரே தன் பிரமாதமான நடிப்பால் ஆக்ரமித்துக் கொள்கிறார்.மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக பிரமாதப் படுத்துகிறார். இவரை முழுமையாக ஒரு இயக்குனரும் பயன் படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

  நடுத்தரக் குடும்பங்களில் படிப்புதான் முக்கியம்.அதுதான் உண்மையான சொத்து. நமக்கு அதைத் தவிர வேறு வழியில்ல என்று பிறந்த போதிலிருந்து குழந்தைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள்.அது முழுமையாக சரி என்று சொல்ல முடியாவிட்டாலும்,அதிக பட்ச மதிப்பெண்கள் குறைந்த பட்ச எதிர்காலத்தில் பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கும் என்று நம்புகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு தேவைப் படுவது மினிமம் கேரண்டி.

  இன்னொரு விஷயத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மாணவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை படிக்க வைக்க வேண்டும் என்பது. பெரும்பாலான மாணவர்கள் படிப்பைவிட விளையாட்டில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.அது இயல்பும் கூட. ஆனால் விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள் அனைவரும் அதில் திறமை உடைவர்களாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. விளையாட்டைப் பொருத்தவரை அதில் மிகச் சிறந்தவர்களால்தான் பாதுகாப்பான வாழ்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

   விளையாட்டுத் துறையில் புகழ் பெற அதிக கஷ்டப் படவேண்டும். ஆனால் படிப்பில் ஓரளவுக்கு சராசரியாக இருந்தாலும் எப்படியோ பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே படிப்பிற்கு முக்கியத்துவம் தரக் காரணமாக அமைகிறது. 

   கல்விச் செல்வம்தான் மிக உயர்ந்தது கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை  என்ற மனப்பான்மை சற்றுக் குறைந்தாலும் நல்லதுதான். பல்வேறு விஷயங்களை சிந்திக்க வைத்த படம் தோனி என்பதில் ஐயமில்லை.

                              ***********************
சன் டிவியின் பட்டிமன்றம் சாலமன் பாப்பையா, தலைமையில் பாரதி பாஸ்கர், ராஜா போன்றவர்களின் வாதத்தில் வழக்கம்போல் கிச்சு கிச்சு மூட்டுவதாக அமைந்தது.சிறப்பாகக் கூற ஒன்றுமில்லை.

****************

இதையும் படியுங்கள் 


செவ்வாய், 23 அக்டோபர், 2012

தமிழ்மணத்தில் ஓராண்டு


(அடடா! நம்ம நேரம் பாருங்க இன்னைக்கு தமிழ்மணம் வேலை செய்யல.)
 (அனைவருக்கும் சரஸ்வதி பூஜை ஆய்த பூஜை நல வாழ்த்துகள்)
 
  இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.ஆம் தமிழ்மணத்துடன்   இணைந்து ஓராண்டு இன்றுடன்(23.10.2012) நிறைவடைந்துள்ளது. தமிழ்மணம்  மூலமாக இவ்வளவு பேர் பதிவுகளைப் பார்ப்பார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. தமிழ்மணம்  தர வரிசையில் நூறுக்குள்  வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஓராண்டுக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று எனது தமிழ்மண தரவரிசை 12. உண்மையிலேயே அதற்குத் தகுதி உடையவன்தானா என்ற ஐயம் இருந்தாலும் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.. ஓராண்டு பதிவுலக அனுபவங்கள் ஏராளம். முன்னணிப் பதிவர்கள் முதல் புதியவர்கள் வரை பல்வேறு பதிவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பலரை பதிவர் சந்திப்பின் போது பார்த்திருந்தாலும் இன்னும் சிலரது நட்பு மாய நட்பாக(Virtual Friendship) இருப்பினும்  நேய நட்பாகவே தொடர்கிறது.

   பத்திரிகையில் எழுதுபவர்களை விட பதிவுலகில் எழுதுபவர்களுக்கு கஷ்டங்கள் அதிகம். உண்மையில் சரக்கு அதிகம் இருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு பதிவுகளாவது எழுதினால்தான் நினைவில் வைத்துக் கொள்ளப் படுவார்கள்.அடுத்த பதிவு என்ன போடலாம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டு எதையும் அழகான பதிவாக்கும் திறன் ஒரு சிலருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.அது அவர்களை வெற்றிப் பதிவாளர்களாக வலம் வரச்  செய்து கொண்டிருக்கிறது. (நமக்கு அந்த திறமை வரமாட்டேங்குது)

   பிழைப்புக்காக பல்வேறு  தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் சமூகம்  கலை இலக்கியம் அரசியல் இன்னும் பலவற்றைப் பற்றிய நமது எண்ணங்களையும் அனுபவங்களையும் படைப்புகளையும் பகிர்ந்து கொள்வது நமக்கு ஒரு வடிகாலாகவும்  மற்றவர்களுடைய அனுபவங்களும் அறிவும் நமக்கு பயன் தக்கதாக அமைந்திருப்பதும் பதிவுலகின் சிறப்பு. 
   இத்தனைக்கும் மேலாக தமிழ்ப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவு அளித்து இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் தமிழ்மணத்திற்கு நன்றி.தமிழ்மணம் மூலமாக வருகை தந்ததோடு வாக்கும் அளித்து உற்சாகமூட்டிய அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

 முதன்  முதலில் நான் தமிழ்மணத்தில் இணைத்த பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சிலர் மட்டும்தான் அதைப் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வெற்றிக்கு  வழி

முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாகக் கொள்


நம்பிக்கைச் செடியை
நட்டு வை


உழைப்பு என்ற
நீரை ஊற்று


நாணயம் என்ற
நல்லுரம் இடு


உறுதி என்ற
வேலி போடு


எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று


பொறுமையாய்
காவல் இரு


பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!


ஆம்!
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில் 
************* 



ஞாயிறு, 21 அக்டோபர், 2012

14.10.2012 TET kEY ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்


14.10.2012 ஆசிரியர் தகுதித் தேர்வு நடை பெற்றது.அதற்கான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு எழுதியவர் தங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.வெளியிட்டுள்ள விடைகளில் ஆட்சேபனை இருப்பின் தேர்வு வாரியத்திற்கு எழுத்து பூர்வமாக ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கவும்
The initial answer keys for Paper – I and Paper II of Tamilnadu Teacher Eligibility Test held on 14.10.2012 is published. The candidates can making representation either by post (or) in person to Teachers Recruitment Board about any key answers published. The representation will be accepted upto 26.10.2012 5:30 p.m. The minority languages key will be uploaded on Monday (22.10.2012) afternoon.
கீழ்க்கண்ட இணைப்புகளில் கிளிக் செய்து விடைகளை காணலாம் அல்லது இதே பக்கத்தில் பாட வாரியாக  தனித்தனியாக விடைகளை சரிபார்க்கலாம்.








சனி, 20 அக்டோபர், 2012

வள்ளுவர் மன்னிப்பாரா?


   திருக்குறள் பலரைப் போலவே என்னையும் கவர்ந்த நூல். அதன் சுருக்கமான வடிவம், குறள்  வெண்பாவின் ஓசை நயம் எனக்குப் பிடித்தமான ஒன்று.அந்தப் பாதிப்பின் விளைவாக அவ்வப்போது குறள்  வடிவில் எதையாவது கிறுக்குவது உண்டு. அப்படிக் கிறுக்கியதில் ஒன்று இதோ.(வள்ளுவரும் புலவர்களும் மன்னிப்பாராக)


                  கணினி யுகக் காதல் குறள்

           1. மின்னஞ்சல் விரைவென்று சொல்லிடு வாருந்தன்
             கண்ணஞ்சல் காணா  தவர்

           2. வன்பொருளாம்  வஞ்சியர் இதயம் அதைஇயக்க
             மென்பொருள் தேவை அறி

           3. முகநூலில் காட்டிவிடு  முகமே! எழுதுவேன்
             அகநூலில் ஆயிரம் பா

           4. ரயில் அனுப்ப முடியாது தூதாய்  
             மெயிலனுப்பி வைப்பேன் படி

           5. பதிவெழுதி வைத்தேன் உன்நினைவை  பாட்டாய்
             எதுவெழுதி  என்ன பயன்.

           6. என்பெயரை உள்ளிட்டேன் ஆனாலும் என்கணினி
             உன்பெயரை  காட்டுதே ஏன்?

           7. மடிக்கணினி போலே அமர்ந்திடுவாய் என்மேல்
             இயக்கிடுவேன் இஷ்டம்போல் இனி

           8. கண்ணோட்டம் சொல்லுமாம் காதல்; முதலில் 
              பின்னூட்டம்  இட்டுவை இன்று.

           9.. மின்வெட்டு வாட்டியதை நான்மறந்தேன் எப்போதோ 
              கண்வெட்டு காட்டியதால் நீ 

          10 கைபேசி துணையோடு காத்திருந்தேன் மாலைவரை
              மெய்பேச ஏன்மறந்தாய் சொல்


 (சீர் தளை ன்னு இலக்கணம்லாம் பாக்காதீங்க பாஸ். படிச்சிட்டு மறந்துடுங்க!)

 




புதன், 17 அக்டோபர், 2012

மனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.

  
 கரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு கதா பாத்திரம் ராமநாதன். இந்தப் பாத்திரத்தின் வாயிலாக பாலகுமாரன் மூன்று  கவிதைகள் படைத்திருக்கிறார். மூன்றுமே முதலைகள் பற்றியவை.முதலையின் குணங்களை கவனித்து மனித வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி எழுதப் பட்டவை. நன்கு கவனித்தால் கதைக்கும் கவிதைக்கும்  உள்ள தொடர்பை அறியலாம்.இரும்புக் குதிரைகளில் குதிரைகளை கவியாராய்ச்சி செய்த பால குமாரன் இந்தக் கவிதைகளில் முதலைகளைப் பற்றி சுவாரசியமான தகவல்களை தெரிவிக்கிறார்.

  வாயைத் திறந்து வைத்திருக்கும் முதலையின் வாய்க்குள் பறவைகள் நுழைந்து அதன் பல்லிடுக்கில் மாட்டி துன்பம் தந்து  கொண்டிருக்கும் மாமிச மிச்சங்களை கொத்தித் தின்னும். முதலையோ சட்டென்று வாயைமூடி பறவைகளை கொன்று தின்பதில்லை. தனக்கு உதவிய பறவைக்கு துன்பம் விளைவிப்பதில்லை 
இதை அழகாக வெளிப்படுத்தும் பாலகுமாரன் கவிதை

  முதலை கவிதைகள் 1.

                    கரையோரம்  முகவாய் வைத்து 
                    கதவுபோல் வாயைப் பிளந்து 
                    பல்லிடுக்கில் அழுகிப் போகும் 
                    மாமிச எச்சம் கொத்த 
                    பறவைக்குக் காத்திருக்கும்
                    முதலைகள் சோகத்தோடு;
                    பறவையும் மாமிசம் தானே?
                    பட்டுப்போல்  வாசனைதானே ?
                    முதலைகள் தர்மம் மாறா 
                    ஞானிகள் எந்த நாளும் 
                    வஞ்சனை இல்லாப் பிறவி
                    மனிதருள் மாமிச எச்சம் 
                    குப்பையாய்க் கிடந்தபோதும்
                    ஒரு நாளும் வாயைத் திறவார்
                    உள்ளதை வெளியே சொல்லார் 
                    சுத்தத்தை விரும்பும் உயிர்கள் 
                    தர்மத்தைக் கட்டிக் காக்கும் 
                    மனிதரைத் தவிர இங்கே 
                    அத்தனை பிறப்பும் சுத்தம் 

                                               (தொடரும்) 
*****************************************************************************************


  இதைப் படித்தீர்களா?
பாலகுமாரனின் கவிதைகள்!l
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை
                         ***********************
 

திங்கள், 15 அக்டோபர், 2012

இட்லியும் தோசையும்- சன் டிவி செய்த ஆராய்ச்சி


    தினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவில்  பயணம் செய்யும்போதுதான் தெரியும்.
   சன் டிவி காலை சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் இட்லி தோசை பற்றிய ஒப்பீடு அருமையான கவிதை போல ஒளி பரப்பப் பட்டது. அலுவலகம் கிளம்பும் நேரத்தில் சன் டிவியில் எதேச்சையாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நான் அதில் ஈர்க்கப்பட்டு முழுவதுமாக பத்து நிமிடம் தாமதமாக கிளம்பினேன். இட்லி தோசை பின்னணியில் காட்சியாக தெரிய வசீகரக் குரலில் (குரல் பரிச்சயமானது என்றாலும் குரல்  கொடுத்தவர் பெயர் தெரியவில்லை. ) இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஏற்ற இறக்கத்துடன் சொன்னதைக் கேட்டதும் சுவையான இட்லி தோசை சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இதோ நான் ரசித்ததை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்கிறேன்.

இட்லியும்  தோசையும் 
   இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொருமொருப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது.பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

   இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

   மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும்.இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொருமொருப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

   இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

   இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

  குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
  குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

   குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

  இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

சன் டிவியில் காலையில் ஒளி பரப்பப்படும் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியான சப்த நிமிடங்கள் என்ற அந்த  நிகழ்ச்சியின் வீடியோ


************************************************************************************


வியாழன், 11 அக்டோபர், 2012

ஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை

 (என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க!)
  கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு ஆச்சர்யம் என்னவெனில் இன்றும் பள்ளிச் சிறுவர்கள் விரும்பும் விஞ்ஞானியாக இருப்பது ஆல்பார்ட்  ஐன்ஸ்டீன்.
முக நூல் பக்கங்களில் அடிக்கடி இவரது படங்களை காணமுடிகிறது. நிறையப் பேருடைய ப்ரொஃபைல் படங்களாக இருக்கிறார். இத்தனைக்கும் இவருடைய விஞ்ஞானக் கருத்துக்கள் கல்லூரிகளில்தான் பாடப் பொருளாக உள்ளது. 

   இவரைப் போன்றவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் கதைகளாகக் கூறப் படுகின்றன. இவை உண்மையாக நடந்திருக்குமா என்பது ஐயம் என்றாலும் அவை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
இதோ அதுபோல் ஒன்று.

  ஐன்ஸ்டீன் ஒரு முறை ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்து கொண்டிருந்தாலும் அவரது சிந்தனை வேறெங்கோ அறிவியல் கருத்தை அடைய பயணம் செய்துகொண்டிருந்தது.சூழ் நிலை மறந்து சிந்தனை வயப் பட்டிருந்த அவரை ரயில் டிக்கெட் பரிசோதகர் அவருடைய பயணச் சீட்டைக் காட்டும்படி கேட்டு அவரது சிந்தனையைக் கலைத்தார்.

   ஐன்ஸ்டீன் டிக்கட்டைக் எடுப்பதற்காக பாக்கெட்டில் கைவிட்டார். அங்கு அதைக் காணவில்லை.வைத்த இடம் நினைவுக்கு வராமல் விழித்தார் அந்த விஞ்ஞானி.

   டிக்கெட் பரிசோதகருக்கு அவரை எங்கோயோ பார்த்த நினைவு வந்தது.பின்னர் கண்டு பிடித்து விட்டார் அவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்று.

   "ஐயா, நீங்கள் யாரென்று தெரிந்து கொண்டேன். நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம். நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். டிக்கெட்டைத்  தேட வேண்டாம். பரவாயில்லை." என்று சொல்லிவிட்டு அடுத்தபெட்டிக்கு சென்றுவிட்டார்.

   நீண்ட நேரம் கழித்து மீண்டும்  வந்தார்  பரிசோதகர், அங்கே, ஐன்ஸ்டீன் தன் பையில் உள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு ஆடைகள், புத்தகங்கள்  என்று என்று அலசி டிக்கெட்டை  இன்னமும் தேடிக் கொண்டிருந்தார்.

  அதைப் பார்த்த டிக்கட் பரிசோதகர் "ஐயா, நான்தான் சொன்னேனே டிக்கட் தேவை இல்லை என்று. நாடறிந்த விஞ்ஞானியை நாங்கள் நம்பாமலிருப்போமா? தயவு செய்து தேடவேண்டாம்" என்றார்.
  ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்களுக்காகத் தேடவில்லை.நான் எங்கு போக வேண்டும் என்பதை நான் மறந்து விட்டேன். டிக்கட்டைப் பார்த்துத்தான் அந்த இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதனால்தான் தேடுகிறேன்" என்றார்

  மேலும் "என் மனைவி டிக்கட்டை பையில் பத்திரமாக வைத்ததாகத் தானே சொன்னார்? கிடைக்கவில்லையே!." என்று தேடலைத் தொடர்ந்தார்.

  சிரித்த  டிக்கெட்பரிசோதகர் "கவலைப் படாதீர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மனைவிக்கு  போன் செய்து தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
  அடுத்த ஸ்டேஷன் வந்ததும் டிக்கட் பரிசோதகர் ஐன்ஸ்டீனை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்று உங்கள் மனைவிக்கு போன் செய்து கேளுங்கள் என்றார்.

    தயங்கினார் ஐன்ஸ்டீன்.

    "ஏன் தயங்குகிறீர்கள். மிஸ்டர் ஐன்ஸ்டீன்!. மனைவி திட்டுவார் என்று பயமா?" என்றார் டிக்கட் பரிசோதகர் கிண்டலாக!
   ஐன்ஸ்டீன்  பரிதாபமாக "மனைவியின் தொலைபேசி எண்ணை மறந்துவிட்டேன்"என்றார் 

                            ************************
  இந்த கதையைத்தான் என் மனைவிகிட்ட சொன்னேன். அதனால என்ன  வினை நடந்தது? எப்ப நடந்ததுன்னு  கேக்கறீங்களா?
ஒரு நாள் டூ வீலருக்கு பெட்ரோல் போடறதுக்கு வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பினேன் எங்க வீட்டம்மாவும் நானும் வரேன். என்ன கோவில்ல விட்டுட்டு உங்க வேலைய  முடிச்சிக்கிட்டு வரும்போது திருப்பி என்ன கூப்பிட்டுக்கிட்டு வந்துடுங்க  என்று சொல்ல, நானும் கோவில்ல விட்டுட்டு பெட்ரோல் போட போயிட்டேன்.வேற சில வேலைகள் இருந்தது அதையும் முடிச்சிகிட்டு  திரும்பி அதே வழியா வந்தேன்.

   இங்கதாங்க என்னோட வினை ஆரம்பமாயிடுச்சு.ஏதோ ஞாபகத்தில கோவில் வாசல்ல எனக்காகாக் காத்துக் கிட்டிருந்த வீட்டம்மாவை கவனிக்காம நான் பாட்டுக்கும் தாண்டி போயிட்டேன். கிட்டத்தட்ட வீட்டுக்கிட்ட போனதும் ஞாபகம் வந்தது. திரும்பி போனதும் கோவில்ல இன்னொரு அம்மனா (பத்ரகாளியா?) நின்னுக்கிட்டிருந்த மனைவியை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு வந்தேன்.
  அப்புறம் எப்படி வாங்கிக் கட்டிக் கட்டிகிட்டிருப்பேன்றதை உங்க கற்பனைக்கு விட்டுடறேன்.
   அதோட சும்மா இருந்திருக்கலாம்தானே! சமாதானப் படுத்தறதுக்காக இந்த ஐன்ஸ்டீன் கதைய சொன்னேன். அவ்வளவுதான்.

   பொங்கி எழுந்த ஹோம் மினிஸ்டர், "ஐன்ஸ்டீன் அறிவாளி, விஞ்ஞானி, மேதை  அவர் மறந்தார் னா அதுல நியாயம்  இருக்கு. அவர் எவ்வளோ விஷயங்களை கண்டுபுடிச்சி இருக்கார். நீங்க என்ன கண்டுபுடிச்சீங்க! காணாமப் போன கம்மல் திருகாணியக் கூட கண்டுபிடிக்கலயே. ஆனா எத்தனை தொலச்சிரிக்கீங்க! எத்தனை ஹெல்மெட் எத்தனை செல்போன்?. யாரை யாரோட கம்பேர் பண்றதுன்னு  விவஸ்தை இல்லையா?........" என்று தொடர அந்த நேரத்தில வழக்கமா மிஸ்டு கால் குடுக்கிற  ஒரு மகராசன் கால் பண்ண அது மிஸ்டு கால்  ஆறதுக்குள்ள பட்டனை அழுத்தி "ஹலோ'...........ஹலோ" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினேன்.
**************

கற்றுக்கொண்ட நீதி:

தெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.
வீட்டில யாரு கிட்டயும் சொல்லக்கூடாது. குறிப்பா வீட்டம்மா கிட்ட சொல்லக்கூடாது. ஹி..ஹி,,ஹி,,ஹி,,ஹி 
                          *********************
குறிப்பு: இந்தக் கதையில் ஐன்ஸ்டீன் மனைவி விவகாரம் மட்டும் என்னோட கற்பனை.

********************************************************************
இன்னொரு ஐன்ஸ்டீன் கதை :நேரம்  இருந்தா இதையும் படியுங்க!
என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்




செவ்வாய், 9 அக்டோபர், 2012

GROUP-IV RESULTS குரூப் 4 தேர்வு முடிவுகள்


07.07.2012 அன்று நடைபெற்றதமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய GROUP-IV தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
10 லட்சத்துக்கும் மேற்பட்டவர் இத் தேர்வை எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகளை இங்கே எளிதில் காணலாம் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பதால் தேர்வாணைய இணைய தளம் எளிதில் திறக்க முடியாது.அந்த முடிவுகளை அதில் உள்ளபடியே இங்கு வெளியிடப் பட்டிருக்கிறது.தேர்வு எழுதிய உங்கள் நண்பர்களுக்கு தேர்வு முடிவுகளை பார்க்க உதவுங்கள்.தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அப்லோட் செய்யவேண்டும்.17.10.2012 கடைசி நாள்  
இணையதள முகவரி 
http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf
அம்புக் குறியை க்ளிக் செய்து அடுத்தடுத்த பக்கங்களை  காணலாம்.
உள்ளே உள்ள ஸ்லைட் பாரை  நகர்த்தி  தேவையானதை பார்க்கலாம்.
அல்லது உள்ளே முடிவுகள் தெரியும் பகுதியில் க்ளிக் செய்து மௌஸ்  ரோல்லரை உருட்டியும் அனைத்து முடிவுகளையும் காணலாம்.
(கீழே உள்ளவற்றை பார்க்க முடிகிறதா?பார்வையிட முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)









********************************************************************************

சனி, 6 அக்டோபர், 2012

இளையராஜா செய்தது சரியா?

    தமிழ்த் திரை இசை ரசிகர்களின் மனதில் ராஜ சிம்மாசனம் போட்டு இன்றும் அமர்ந்திருப்பவர்; மௌனத்தையும் இசையாக மொழி பெயர்த்தவர்; முதன் முதலில் தமிழ் திரை இசைக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர்;   வேறு யார்? அது இளையராஜாதான். அவர் வாசகர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு குமுதத்தில் பதிலளிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

   அவருடைய கால கட்டத்தில் இளையராஜா ஒரு புதிராகவே இருந்தார். யாரிடமும் இணக்கம்  காட்டாது இருந்தார்.பலபேர் அவரிடமிருந்து விலகுவதற்கு இது காரணமானது. முதலில் வைரமுத்துவை விட்டுப் பிரிந்தபோது ரசிகர்கள் வருந்தினாலும் வைரமுத்துவைப் பிடித்தவர்கள் கூட இளையராஜாவின் பக்கமே இருந்தனர். எனினெனில் அவருடைய இசையின் ஆளுமை அப்படிப்பட்டது.
   பாரதிராஜா,மணிரத்தினம் என்ற புகழ் பெற்ற இயக்குனர்கள் ராஜாவை தவிர்த்த போது இசை ரசிகர்கள் மனதிற்குள் வருத்தமடைந்தனர்.இவர் ஏன் எல்லோரிடமும் கருத்து வேற்றுமையை வளர்த்துக் கொள்கிறார் என்ற எண்ணம் தோன்றினாலும் ராஜாவை விட்டுக்  கொடுக்க யாருக்கும் மனம் வரவில்லை. யாருக்காகவும் அவர் பணிந்து போனதில்லை.போலி புகழ்ச்சி வார்த்தைகளை பேசுவதில்லை. புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சாதாரணமானவர்களாக  இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்திய பிடிவாதம் அவர்கள் ராஜாவிடமிருந்து விலக காரணமாக இருந்திருக்கலாம். எந்த விதமான ஐயங்களுக்கும் ஊகங்களுக்கும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்த இளைய ராஜா இப்போது மனம் திறந்து பேச ஆரம்பித்திருப்பது குமுதம் இளையராஜா பதில்கள் மூலம் தெரிய வருகிறது.
   10.10.2012 இதழ் குமுதத்தில்  ஒரு வாசகர் புதுப்புது அர்த்தங்கள் படத்திற்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு நீங்கள் ஏன் இசை அமைக்கவில்லை? என்று கேட்டிருந்தார்.
   இப்படத்திற்கான ரீரெக்கார்டிங் நடை பெற வேண்டிய நேரத்தில் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருந்ததால் இளையராஜா சிவா படத்திற்காக மும்பை சென்று விட்டாராம்.அந்த நேரத்தில் கவிதாலயா நிர்வாகிகள் படம் ரிலீசாக நாள் நிர்ணயித்து விட்டதால் நீங்கள் பாம்பேயில் இருந்து வர முடியாது என்பதால் ரீகார்டிங்குக்கு ட்ராக் எடுத்து போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லலி இருக்கிறார்கள்.அதில் இளையராஜாவிற்கு வருத்தம் ஏற்பட்டு "உங்களுக்கு டைட்டிலில் இளையராஜா என்ற பெயர்தான் தேவை என் இசை உங்களுக்கு தேவை இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது.என்னோட பெயரை வியாபாரத்திற்கு பயன்படுத்தப் போறீங்க.இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல.நீங்க பண்ணறத பண்ணிக்கோங்க" என்று சொல்லிவிட்டார்
    இதன் காரணமாக ரஜினியின் படம்  ஒன்றை கவிதாலயா எடுத்தபோது ரஜினியே நேரில் வந்து கேட்டும் இளைய ராஜா இசை அமைக்க மறுத்ததையும்  சொல்லி இருக்கிறார் இளையராஜா.
    இளையராஜாவின் வருத்தம் என்னவெனில் பாலச்சந்தர் தன்னிடம் நேரில் பேசி இருக்கலாம். அல்லது நேரில் வந்த ரஜினி நிலையை எடுத்து சொல்லி பாலசந்தரை பேசச் சொல்லி இருக்கலாம் என்பதே. இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம்.
  இளையராஜா சொல்வது ஓரளவிற்கு உண்மையாகவே படுகிறது. பாலசந்தர் எப்போதுமே ஒரு திறமையான வியாபாரி பிறருடைய புகழை பயன் படுத்தி பணம் பண்ணுவதில் வல்லவர்.ரஜினியை கூட பெரும்பாலும் தான் தயாரிக்கும் படங்களுக்குத்தான்  பயன்படுத்திக் கொண்டாரே தவிர தன் இயக்கத்தில் பயன் படுத்தவில்லை. ரஜினி தன்னுடைய படங்களுக்கு ஏற்றவர்  இல்லை என்ற எண்ணம் அவருக்கு  இருப்பதாகவே படுகிறது. ஆனால் ரஜினி அதை பெரிது படுத்தவில்லை. அவர் எடுக்கும் படங்களில் நடித்துக் கொடுத்தார். அதுவரை எம்.எஸ்.வி யை மட்டும் பயன் படுத்தி வந்த பாலச்சந்தர் புகழின் உச்சியில் இருந்த இளையராஜாவை சிந்து பைரவி படத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். இந்த வெற்றிக் கூட்டணி சிறிது காலம் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரஜினியைப் போலல்லாமல் இளையயராஜா பாலச்சந்தருடன் கருத்து வேற்றுமை கொண்டார்.

    இளையராஜாவும்  இந்த விஷயத்தை பெரிது படுத்தி இருக்கவேண்டாம், ரஜினி வந்து கேட்டும் இசை அமைக்க ஏற்றுகொள்ளாது பிடிவாதம் பிடித்திருக்க வேண்டியதில்லை.. இந்த விஷயத்தில் தன் குருநாதருக்காக தூது வந்த ரஜினியின் நிலையே இக்கட்டானது.

  இன்னும் பல சந்தேகங்களுக்கு இளையராஜாவின் பதில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.


      **************************
    பல நாட்கள் எனக்கு மட்டும்  ஒரு விஷயம் தெரியாமல் இருந்தது. மணிரத்தினம் இயக்கத்தில் தளபதி படத்தில் "புத்தம் புது பூ பூத்ததோ" என்ற ஒரு பாடல் உண்டாம்(எனக்கு ஆடியோ CD கேட்டுப் பழக்கமில்லை.)அது திரைப்படத்தில் இடம் பெறவில்லை. சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒருவர் பாடியபோதுதான் தெரிந்து கொண்டேன். முதல் முறை கேட்கும்போதே அதன் மெட்டும் இசையும் ஏசுதாஸின் இனிமையான குரலும் என்னைக் கவர்ந்துவிட்டது. ஆரம்ப ஆலாபனை இருக்கிறது பாருங்கள் அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது.இவ்வளவு இனிமையான மயக்கும் பாடலை மணிரத்தினம் ஏன் கட் செய்து விட்டார் என்று புரியவில்லை.இந்த விஷயத்தில் மணிக்கும் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இருவர் பிரிவுக்கும் காரணமாக அமைந்ததாகச் சொல்கிறார்கள். ஏ.ஆர.ரகுமான் என்ற புயல்  வீச அடிப்படையாக இதுதான் அமைந்ததோ?

  இதோ "புத்தம்புது பூ பூத்ததோ" பாடலை கேளுங்கள்.கேட்டவர் மீண்டும் ஒரு முறை தாராளமாகக் கேட்கலாம். கேட்காதவர் முதல் முறையாகக் கேளுங்கள்.


****************************************************************************************************************

இதையும் படித்தீர்களா?
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்- குறைகள்

*********************

செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தியைப் பற்றி சுஜாதா


    இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர்  சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அல்லது புரிய வைக்கத் தவறி விட்டோம். அது எவ்வளவு அவசியமானது  என்பதை காலம் கடந்து உணரப் போகிறோம்.

  நவீன யுகத்தில் காந்தியின் கொள்கைகள் ஒத்துவருமா? இதோ எழுத்துலக  மன்னன்  சுஜாதா மகாத்மா காந்தியின் கிராமப் பொருளாதாரம் பற்றி என்ன கூறுகிறார் என்பதை   அவர் வார்த்தைகளிலேயே பார்க்கலாம். "
  சுஜாதா கூறுகிறார் "காந்தியின் கிராமப் பொருளாதாரம் இன்றைய உலகில் சாத்தியமா? யோசிப்போம்.
    காந்தி கிராமங்கள்  தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று  சொன்னார். கூடுமானவரை ஒரு கிராமத்துக்குத் தேவையான பொருள்கள் கிராமத்திலேயே உற்பத்தியாகி அங்கேயே பயன் படுத்த முடியும் என்று நம்பினார். அதற்காக ஏற்படும்  விஞ்ஞானத் தடைகளை நீக்க வேண்டும் என்றார். நகரத்தை சாராமல் கிராமம் இருக்க முடியுமா? அதுவும் இன்றைய நாளில் நகரத்தின் தாக்கம் கிராமத்துக்கு பல திசைகளிலிருந்து வருகிறது. விஞ்ஞான  வளர்ச்சி காரணமாக நகரத்தின் நுகர்வோர் கலாசாரம் கிராமத்துக்கு வந்து விடுகிறது. கிராமத்தின் பணம் நகரத்தில் செலவழிக்கப் படுகிறது.............
   கிராமத்தில் ஆரம்பத்தில் ஊறு காய்க்கு  மட்டும் இருந்த  சாஷே க்கள் இப்போது எல்லாப் பொருட்களுக்கும் வந்து கிராமத்திலும் இடம் பிடித்துவிட்டன.  இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பெரிய கண்டு  பிடிப்பு இந்த சாஷே தந்திரம்.ஊடகங்களும் தொழில் நுட்பமும் சேர்ந்து திட்டமிட்டு பணம் பிடுங்கும் தந்திரம். அதனால் காந்திஜி சொன்ன தன்னிறைவு வராமல் நகரத்தின் சார்பு அதிகமாகி கிராமங்கள் தங்கள் அடையாளங்களை  இழந்துவிடும் அபாயம் மிக உண்மையானது.

   இப்போதே டிவி சினிமா பாதிப்பால் கிராமத்து கலை வடிவங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.இந்தக் கலைகள் டிவி மூலம் புத்துயிர் பெறுகின்றன என்று நானும் ஆரம்பத்தில் நம்பினேன். சிந்தித்தால் அது நிகழ வில்லை என்பது தெளிவாகிறது...........

   குடியரசு தினவிழாவில் காட்டப்படும் கிராமிய நடனகள் சேட்டுப்  பெண்களும் ஐ .ஏ .எஸ்  மனைவிமார்களும் கொரியோகிராபி செய்தவை
நாட்டுபுறப் பாடல்கள் களையெடுப்பிலும் தாலாட்டிலும் பாடப்படாமல் அவை பாம்குரோவில் ரூம் போட்டு பாடப்படுகின்றன.இவ்வாறான கலாசாரத் தாக்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு கொடுக்கும் விலை.
இத்தனையும் மீறி கிராமங்கள் தங்கள் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா?

      எத்தனையோ தாக்கங்களை சமாளித்தவை நம் இந்திய கிராமங்கள்.
1819இல் கிழக்கிந்தியக் கம்பனியின் ரகசிய கமிட்டி இவ்வாறு அறிவிக்கிறது ".....சிக்கலில்லாத சாதாரணமான இந்த முனிசிபல்  பஞ்சாயத்து அரசாங்கங்களில் பழங்கால முதலே மக்கள் வசித்து வருகிறார்கள். ராஜ்ஜியங்கள் சிதைக்கப் படுவதையோ பங்கு போட்டுக் கொள்ளப் படுவதையோ பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. கிராமத்துக்கு ஹானி ஒன்றும் ஏற்படாதவரை கிராமம் எந்த ராச்சியத்தில் சேர்க்கப் பட்டாலும் எந்த மன்னனுக்கு கட்டுப் பட்டிருக்க நேர்ந்தாலும் அவர்கள் கவலை கொள்வதில்லை. கிராமத்தின் பொருளாதார அமைப்பு கலையாமல் நிற்கிறது."

   காந்திஜி அகிம்சையை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தையும் பலாத்காரத்தை ஆதாரமாகக் கொண்ட இயந்திரப் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு முன்னதே ஏற்றது என்று சொன்னார்.

    இத்தனை நூற்றாண்டுகளாக குலையாமல் பல்வேறு தாக்கங்களை சமாளித்த இந்த கிராமத்து முழுமையான பொருளாதாரம்.இப்போது மிகச் சுலபமாக கலைக்கப் படுகிறது.இந்த தாமதமான காலக் கட்டத்தில் இதை எதிர்ப்பதில் பயனில்லை,

   காந்தி பரிந்துரைக்கும் பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் ஆடம்பரமின்மை,அகிம்சை, உழைப்பில் புனிதத் தன்மை, ஓய்வு  பற்றி மயக்கம்,மானுட கௌரவம். இவைகளைத்தான் வலியுறுத்தினார். அதை இன்றைய[புதிய சூழ்நிலையில் நிச்சயம் கொண்டுவர முடியும். பொருளாதார வியாபார தாக்கங்களை அரவணைத்துக் கொண்டு அவைகளின் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிராமத்தின் ஆதார அடையாளங்களை இழக்காமல் காந்தியின் புதிய சர்வோதயத்தைக் கொண்டு வரமுடியும் என்று நான்  நம்புகிறேன்.
எப்படி? ஆடம்பரமின்மை நவீனப் பொருட்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆடம்பரப் பொருட்கள் வேண்டாம்.செருப்பு  இருக்கட்டும் ஸ்னீக்கர் வேண்டாம். சாஷே வேண்டாம்..ஆனால் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வேண்டும் அதன் மூலம் பிற்பட்ட பள்ளிகளிலும் மிகச் சிறந்த கல்வியைக் கொண்டு வர முடியும்.

   காந்தியின் அகிம்சை தழுவிய பொருளாதாரத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். இயந்திரம் முதாளித்துவத்தின் கையாளாக இருக்கிறது.மனித உழைப்பை வெளியே விரட்டிவிட்டு சிலருடைய கையில் அதிகாரமும் செல்வமும் குவியும்படி செய்கிறது என்று காந்தி கருதினார். அன்னியப் படையெடுப்பால் நாட்டுப் புறங்கள் அதிக பயப்பட வேண்டியதில்ல. நகரப் பிரதேசங்களே படையெடுப்புக்கு இலக்காகின்றன. ரத்தம் தோய்ந்த மேல் நாட்டு வழி நமக்கு ஏற்றதன்று. அந்த வழியில் மேலை நாட்டினருக்கே அலுப்பு தட்டியாயிற்று. இதைத்தான் காந்தி அகிம்சை கலந்த பொருளாதாரம் என்கிறார். வன்முறைக்கு வழி வகுக்காத வழிமுறை.

   "கிராமங்களில் அதிகம் ஒய்வு கூடாது என்றார் காந்தி.உழைக்காமல் உணவுப் பொருட்களையும் பிற தேவைகளையும் செப்பிடு வித்தைக்காரன் போல ஒரு மந்திர சக்தியால் சிருஷ்டித்து விட முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நான் அதைப் பற்றி அஞ்சி நடுங்குகின்றேன்". என்கிறார் காந்தி.
கிராமத்தில் உழைப்புக்கு மதிப்பும் வாய்ப்பும் கொடுக்கும் அளவுக்கு இயந்திர மயமாக்கம் இருந்தால் போதும்.அமெரிக்கா போல ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரே ஒருவர் அறுவடை செய்யும் மாடல் நமக்கு ஏற்றதில்லை.நமக்கு ஆள் பற்றாக் குறை இல்லை.  வாய்ப்புக் குறைவினால்ல்தான் கிராமத்தவர் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். காந்தி உடல் உழைப்பை பவித்ரமாகக் கருதினார்.நம் உடல்களாகிய உயிருள்ள இயந்திரங்களை துருப்பிடிக்க வைத்துவிட்டு உயிரற்ற இயந்திரங்களை ஏற்படுத்த முயல்கிறோம்.என்று வருத்தப் பட்டார்.அவர் எல்லா இயந்திரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஓர் இயந்திரம்தான் என்கிறார்.

  இயந்திரம் என்ற கணிப்பில் காந்திஜி கணிப்பொறியை வரவேற்றிருப்பார்.காரணம் அவர் விரும்பும் மானுட கௌர்வம் கணிப்பொறிகள் வரவால் நமக்குக் கிடைக்கும். இன்றைய அறிவியல் உலகம் செல்லும் திசையில் கிராமங்களை நவீனப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
  அதை எதிர்க்காமல் பயன் படுத்திக்கொண்டு காந்தியின் அடிப்படை அம்சங்களை மறக்காமல் கிராமங்களை அமைக்க கணிப்பொறிகளும் செய்தித் தொடர்பு சாதனங்களும் உதவ வேண்டும்"

  சுஜாதாவின் இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய "நூற்றாண்டின் இறுதியில்  சில சிந்தனைகள்" என்ற நூலில் படித்தது. கொஞ்சம் பெரிய கட்டுரையை கருத்தும் வார்த்தைகளும் சிதையாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்  என்று நினைக்கிறேன்

***********************************************************
இதைப் படித்திருக்கிறீர்களா 



திங்கள், 1 அக்டோபர், 2012

VAO Exam 2012 -விடைகள் சரி பாருங்கள்!


 30.09.2012 அன்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு நடைபெற்றது.தேர்வு எழுதியவர் தங்கள் விடைகளை சரி பார்க்கும் வண்ணம் தேர்வு வினாக்களுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பொது  அறிவு,பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் குறிக்கப் பட்டுள்ளன. தேர்வாணையம் வெளியிட்டுள்ள விடைகளை அப்படியே இந்தப் பக்கத்தில் கீழே கொடுத்திருக்கிறேன். இங்கேயே  காணலாம்.

அல்லது உங்கள் விடைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் கிளிக் செய்து தேர்வாணையத்தின்  பக்கத்திற்கும் சென்று சரி பார்க்கலாம்..

  1. .பொதுத் தமிழ்(General Tamil) விடைகள்
  2. பொது  அறிவு (General Knowledge)விடைகள்
  3. பொது ஆங்கிலம் (Genaral /english)விடைகள் 
 வினாத் தாளில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளுள் சரியான விடை டிக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தவறு இருப்பின் சரியான ஆதாரங்களோடு தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வானையத்திற்கு ஏழு நாட்களுக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கும்படி தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக 08.10.2012 க்குப் பின் வரும் கருத்துக்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதிய  உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவர்கள் எழுதிய சரியான விடைகளை அறிந்து கொள்ள உதவுங்கள்

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விடைகளை மின்னஞ்சலில் பெற விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்மென்ட் பாக்சில் கொடுக்கவும்.

**********************************************************************************************************
ஜெனரல் தமிழ் விடைகளை இங்கே பாருங்கள்  
 
பொது ஆங்கிலம் விடைகளை இங்கே பாருங்கள்

  "பொது அறிவு " விடைகளை இங்கே பாருங்கள்

விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்

    
   கணினி பற்றி எழுத வல்லுநர் பலர் இருக்கிறார்கள் என்றபோதும் ஒரு கடை நிலைப் பயனாளனாக நான் கணினியில் பயன்படுத்திப் பயன் பெற்றவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னைப்போல் உள்ளவர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். 

   விரைவில் விண்டோஸ் 8 வர இருக்கிறது.ஆனாலும் விண்டோஸ்  எக்ஸ்பி இன் ஆதிக்கத்திலிருந்து இப்போதுதான் மெல்ல விடுபட்டு  விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர். விண்டோஸ் 7, XP யை விட மேம்பட்டது. பல வசதிகளை உள்ளடக்கியதாக விண்டோஸ் 7 உள்ளது அவற்றில் ஒன்று  Snipping  Tool. 
    அதை பற்றி சொல்வதற்கு முன்னர் ஒரு அழகான ஷார்ட் கட் கீ பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.
    நீங்கள் நிறைய விண்டோஸ்  திறந்து வைத்திருக்கிறீர்களா?
கீபோர்டில் "விண்டோஸ் + டேப்" கீயை அழுத்தி பாருங்கள். என்ன நடக்கிறது. இந்தப் பதிவின் கடைசியில் பாருங்கள்.
                           ************
   திரையை படம் பிடிக்க (ஸ்க்ரீன் ஷாட் ) பிரிண்ட் ஸ்க்ரீன் கீயைப் பயன் படுத்தி அதை பெயின்ட்டில் ஒட்டி படமாக சேமித்து பயன்படுத்துவது வழக்கம் .அல்லது கேம் ஸ்டூடியோ போன்ற மென் பொருளை  பயன்படுத்துவோம்.

   ஆனால் இவை எதுவும் இன்றி  கணினித்திரை முழுவதையுமோ அல்லது ஒரு நாம் விரும்பிய பகுதியையோ தேர்தெடுத்து படமாக சேமிக்கும் வசதியை இயல்பு நிலையிலேயே விண்டோஸ் 7 கொடுத்துள்ளது.
விண்டோஸ் ஸ்டார்ட் கியை க்ளிக் செய்து All Programs-Accesseries -Snipping tool செல்லுங்கள்

படம் 1

படம் 2 

   வலது பக்க மூலையில் snipping tool   தெரிவதைக் காணலாம். இப்போது திரையின் எப்பகுதி வேண்டுமோ அப்பகுதியை மௌசின்  உதவியுடன் செவ்வக வடிவில் தேர்வு செய்தால் அப்பகுதி மட்டும் காட்சி தனியாக காட்சி அளிக்கும் சேவ் பட்டனை அழுத்தி படத்தை jpeg format  இல் சேமிக்கலாம்.

படம் 3

  சேமிக்கும் முன்  படத்தில் மார்க் செய்ய,  குறிப்பிட்ட இடத்தை ஹைலைட்  செய்ய பென்சில் மற்றும் ஹைலைட்டர்  வசதிகள் உண்டு.
வீடியோக்களையும் பாஸ் செய்து தேவையான காட்சியை  இந்த டூலின் மெல்லாம் சேமிக்கலாம்.

இதில் ஸ்க்ரீன் கேப்சர் செய்ய 4 ஆப்ஷன்கள்  உள்ளன,
New க்கு அருகிலுள்ள அம்புக் குறியை கிளிக் செய்தால் 

  • Free-form Snip.  (நம் விருப்பப்பட்ட வடிவத்தில் மவுசைக் கொண்டு தேர்வு செய்ய ).
  • Rectangular Snip.  (Drag செய்து செவ்வக வடிவில் தேர்ந்தெடுக்க ).
  • Window Snip. ( ஒரு குறிப்பிட்ட விண்டோவை படம் பிடிக்க ).
  • Full-screen Snip.  (முழு திரையையும் படம் பிடிக்க .)
    என்ற  வாய்ப்புகள் காணப்படும் எதை வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். Option பட்டன்  இல் வேறு சில வசதிகளையும் தேர்வு செய்யலாம். 

      நான் பெரும்பாலும் எனது வலைபக்கப் படங்களுக்காண ஸ்க்ரீன் ஷாட் எடுக்க இந்த Tool தான்  பயன் படுத்துகிறேன். 
    நன்றி 
    ***************************************
      விண்டோஸ்+டேப்  கீயை அழுத்தினால் நாம் திறந்த விண்டோக்கள் அழகாக சீட்டுக் கட்டு அடுக்கியது போல் தெரிவதைக் காணலாம்.
  கட்டை விரலால் விண்டோஸ் கீயை அழுத்திப்பிடித்துக்கொண்டு டேப் கீயை இன்னொரு விரலால் விட்டு விட்டு அழுத்த அழகாக விண்டோக்கள்  முன்னே தோன்றுவதை பார்க்கலாம். எது வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

       **********************************************
இதைப் படித்தீர்களா?