என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 31 டிசம்பர், 2012

நீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த வகை?

   
   வலைப்பூ வைத்திருப்பவர்கள் மற்றும் முகநூலில் எழுதுபவர்கள்  தங்கள் எண்ணங்களையும்  படைப்புகளையும் கவிதை கட்டுரை என்று பல்வேறு வடிவங்களில் பதிவுகளாக எழுதி வருகிறார்கள். அதை வாசிப்பவர்களும் பதிவு தொடர்பான தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். பதிவுகளுக்குக் கிடைக்கும் கருத்தை வைத்து எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை அறிய முடியும். என்றாலும் சில நல்ல பதிவுகளுக்கு கருத்துக்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. எப்படி இருப்பினும் கருத்துக்கள் அதிகம் கிடைக்கும்போது பதிவெழுதுபவருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மைதான். எல்லாக் கருத்துக்களும் பாராட்டுக் கருத்துக்களாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கருத்திடுபவர் எப்படி வேண்டுமானாலும் தன் கருத்தை சொல்வார், கிண்டலாகவோ, கோபமாகவோ கூட கருத்திடலாம்.
  எனது பதிவிற்கு இடப்பட்ட  கருத்துக்கள், நான் படித்த மற்ற பதிவர்களின் பதிவுகளுக்குக் கிடைத்த கருத்துக்கள்  இவற்றை வைத்து கருத்திடலை கீழ்க்கண்டவாறு வகைப் படுத்தி இருக்கிறேன்.

1.பொதுவான கருத்திடல்

  அருமை, நன்று, சூப்பர் என்பவை இந்த  வகைக் கருத்துக்களுக்கு உதாரணங்களாகும்.பெரும்பாலான பின்னூட்டக் கருத்துக்கள் இப்படித் தான் காணப்  படுகின்றன.

2.அநாகரீகக் கருத்திடல் : 

    தகாத வார்த்தைகைளைப் பயன்படுத்தி கருத்திடல்.இது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது.

3.விவாதக் கருத்திடல்: 

  பதிவில் உள்ள விவாதத்திற்குரிய விஷயங்களை எடுத்துக் கொண்டு பதிவெழுதுபவரிடமோ அல்லது கருத்திட்ட பிறரிடமோ தொடர்ந்து பின்னூட்டத்தின் மூலமாகவே விவாதிப்பது. சில சமயங்களில் இவை பதிவை விட சுவாரசியாமாக இருப்பதுண்டு.
     என்னைப் பொருத்தவரை இதுபோன்ற கருத்திடலையும்  தவிர்ப்பது நல்லது.விவாதத்தின் மூலம் தன் கருத்தை பிறர் ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது என்பதே என் கருத்து. இது வீண் மனக்கசப்பைத் தான் ஏற்படுத்தும் என்பதை பல பதிவுகளின்  பின்னூட்டங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

 4.ஐயக் கருத்திடல்: 
  பதிவு சம்பந்தமான தனது சந்தேகங்களை கருத்தாகப் பதிவிடல்.பெரும்பாலும்,வரலாறு,அறிவியல் தொழில் நுட்ப பதிவுகளில் இவ் வகைக் கருத்திடலைக் காணலாம்

5.விமர்சனக் கருத்திடல்
  பதிவை அலசி ஆராய்ந்து விமர்சித்தல். கவிதை,கதை,திரை விமர்சனம் போன்றவற்றிற்கு இவ்வகைக் கருத்திடலை பார்க்கலாம்.

6.விளக்க கருத்திடல். : 
   பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள தனிப்பட்ட நபரைப் பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ தவறான தகவல்கள் இருந்தால் சார்ந்தவர் அதைப் பற்றிய விளக்கம் தருதல்.

7. தொடர்பிலாக் கருத்திடல்: 
    பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் உங்கள் வலைப்பதிவு அழகாக உள்ளது,வந்தேன்,நலமா? ரொம்ப நாளாக காணவில்லையே என்பன போன்ற கருத்திடல் இந்த வகைக்குள் அடங்கும்.

8. விளம்பரக் கருத்திடல்: 
   திரட்டிகளில் இணையுங்கள்,என் வலைப் பக்கத்திற்கு வாருங்கள் என்பன போன்ற கருத்திடல்.

9.. முரண் கருத்திடல்: 
  ஒரு பதிவுக்கு ஆதரவாக கருத்திட்டு விட்டு அதற்கு எதிராகப் போடப்படும் பதிவிலும் அதற்கும் ஆதரவாக, அதாவது தான்  முன் இட்ட கருத்துக்கு முரணான கருத்திடல்.

10.கிண்டல்/நையாண்டிக் கருத்திடல்: யாரையும் புண் படுத்தாத வகையில் நகைச்சுவையுடன் கருத்திடல்  

11. வாழ்த்துக் கருத்து: 
   பிறந்த நாள் வாழ்த்து,100 வது பதிவு வாழ்த்து,புத்தாண்டு வாழ்த்து,நன்றி  போன்றவை.

12. குறியீட்டுக் கருத்து:  கருத்துகளை வார்த்தைகளால் தெரிவிக்காமல் Smileys மூலம் கருத்தளிப்பது.

  இதெல்லாம் போக இன்னொரு வகையும் உண்டு அதாவது கருத்திட வேண்டும் நினைத்தும் போடாமல் இருப்பது.

வேறு  சிலவும் விடுபட்டிருக்கலாம்

   மேற்கண்டவற்றில் இரண்டாவது வகையைத் தவிர மற்ற வகைகளை சூழ் நிலைக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கருத்திடல் எந்த வகை?

***************************************************************************************

இதுல ஏதாவது ஒரு கருத்தை சொல்லிட்டுப்  போங்க!


சனி, 29 டிசம்பர், 2012

கெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்தியது ஏன்?

   கிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவி  சிறப்பு நிகழ்ச்சியில்  கோபிநாத்திடம் கெளதம் மேனன் சொல்லிக் கொண்டிருந்த விஷயம் கவனத்தை ஈர்த்தது. எனக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கும்தான் நல்ல கெமிஸ்ட்ரி என்று கூறினார். பின் ஏன் பிரிந்தீர்கள் என்று கோபி நாத் கேட்க, நான் அடுத்த படத்துக்கு ரகுமானுடன் சேர இருக்கும் விஷயம் ஹாரிசுக்கு வேறு யாரோ சொல்லி இருக்கிறார்கள், நான் சொல்ல வில்லை என்று கோபம். இவ்வளவு நாள் நாம் நெருக்கமாகப் பழகி இருக்கிறோம் என்னிடம் சொல்லி இருக்கலாமே! இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து பணிய புரிய வேண்டாம் என்று கெளதம் மேனனுக்கு மெயில் அனுப்பியதாக சொன்னார். தன் மீதுதான் தவறு என்றும் தான் சொல்லி இருக்கலாம் என்றும் தவறை ஒப்புக் கொண்டார். அவர் ஈகோவை விட்டு வந்தால் அவருடன் இணையத் தயார் என்றும் கூறினார் கெளதம்.

     நெருங்கிய நண்பர் இத்தனை நாள் இணைந்திருந்த திருந்த தன்னை விட்டுவிட்டுவேறு இசை அமைப்பாளரை நாடியது மன வருத்தம் அளிக்கக் கூடிய செயல்தான் என்றாலும் இந்தியாவின் நம்பர் 1 இசை அமைப்பாளரான ரகுமானுடன் இணையும் வாய்ப்பை எந்த இயக்குனராவது தவற விடுவாரா? கெளதமும்  ஒரு வியாபாரிதானே! நட்பா? வியாபாரமா என்றால் வியாபாரம்தான்? 

  அடுத்த படத்திற்கு ரகுமான் கிடைப்பாரா? மீண்டும் ஹாரிசுடன் இணையவே கெளதம் மேனனின் விருப்பமாக இருக்கிறது என்பது கௌதமின் கூற்றில் தெரிய வருகிறது. அது இயலாத நிலையில் தற்போது இளையயாராஜாவை தேர்ந்தெடுத் திருப்பார்  கெளதம். தன்னுடைய "நீதானே என் பொன் வசந்தம்" படத்திற்கு இளையராஜாதான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவருடன் இணைந்திருப்பார் என்று நான் கருதவில்லை.  இளம் இசை அமைப்பாளர் யாரையேனும் தேர்ந்தெடுத்திருந்தால் எதிர்காலத்தில் கெளதம்-ஹாரிஸ் மீண்டும் இணைவதில் சிக்கல் ஏற்படக் கூடும் என்றுதான் ராஜாவை இசைக்க வைத்திருப்பார். மேலும் ராஜாவின் நெடுங்காலப் புகழையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் அவர் எண்ணமாக இருந்திருக்கும். 

       நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்றாலும்  ரகுமானோ அல்லது ஹாரிசோ இசை அமைத்திருந்தால் இன்னும் பேசப் பட்டிருக்கும். அதற்காக இளையராஜாவின் இசையை குறைத்து  மதிப்பிடுவதாக அர்த்தமில்லை.

    இன்றைய  இளைஞர்களைப் பொருத்தவரை இளையராஜா முந்தைய தலைமுறையின் இசை அமைப்பாளராக கருதப் படுகிறார். அவருடைய பழைய பாடல்களை யாரும் போற்றத் தவறுவது இல்லை. ஆனால் அவரது புது இசை வடிவங்கள் அவ்வளவாகக் கவர்வதில்லை என்பது உண்மையே! ஆனாலும் ராஜாவை விட்டுக் கொடுக்க மனமில்லை.அதுதான் அவரது வெற்றி.

        யார் எப்படி இணைந்தால் என்ன? நமக்கு தேவை நல்ல படைப்புகள். யார் தந்தாலும் பாரபட்சமின்றி ரசிப்போம்.
*****************************************************************************************
கெளதம் மேனின் பேட்டி
 

***************************************************************************************************************
பதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா?


**************************************************

எது நடக்கக் கூடாதோ அது நடந்தே விட்டது.பாலியல் வன்முறை நிகழ்த்திய கொடியவர்களை தண்டிக்க அந்நியன் வருவானா தண்டனை தருவானா?
இந்தக் கவிதையில் உள்ளது போல  மனதுக்குள் தண்டனை தந்தாவது ஆறுதல் அடைய முடிகிறதா பாருங்கள்!
அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?



வியாழன், 27 டிசம்பர், 2012

பதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா?

   தமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை  வெளியிட்டார். அந்த ஓவியத்திற்கு பொருத்தமான கவிதை எழுதும்படி கூறி இருந்தார். சும்மா எழுதிப் பார்க்கலாமே என்று நானும் முயற்சி செய்தேன். படம் ஒவியம் சரித்திரப் பின்னணியில் இருப்பதால் வெண்பா வடிவத்தை முயன்றிருக்கிறேன்.
(புலவர் இராமானுசம் ஐயா!,, கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா,கவியாழி கண்ணதாசன் ஐயா!,அருணா செல்வம், உள்ளிட்ட மரபுக் கவிஞர்கள் பலரும் மன்னிப்பார்களாக!)


சேற்றில் முளைத்திட்ட  செந்நிறத் தாமரை
ஆற்றில் முளைத்ததே ஆச்சர்யம்! - ஆங்கிருந்த 
மீனிரண்டை  காணவில்லை தேடினேன் -உன்முகத்தில் 
நானிரண்டை கண்டேனே பார்!

தூரெடுத்த கேணியிலே ஊறுநீர்போல் செந்தமிழ்
சாறூறும் என்நெஞ்சில்; சந்தக் கவிசொல்வேன் 
நீர்வீசி தூய்மைதான் செய்வாயா? ஆமென்றால்
சேறுபூசிக் கொள்வேன் இனி  

ஆடும் மயிலழகு அற்பம்தான்  உன்முன்னே 
பாடும் கவிஞன்நான் பகர்கின்றேன்-தீண்டாதே 
ஓடும்  நீருறைந்து போகும்; அதனாலே 
வாடும்  பயிர்கள் அறி.

**************************************************************************************



செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை?

  கிறித்துவ நண்பர்களுக்கு  மனம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 
       இசைக்கும் பக்திக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.பெரும்பாலான பாடல் ஆசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இறை நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இசை மனதை  ஈர்க்கிறதே!. அதன் காரணம் என்ன?  சில இசை வடிவங்கள் உள்ளத்தை உருக வைக்கிறதே அது எப்படி ? நம்மையும் அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறதே ஏன்? 

      அப்படி ஒரு பாடல்தான் திரைப் பாடல்தான் மின்சாரக் கனவு என்ற படத்தில் இடம் பெற்று எல்லோர் மனதையும் கவர்ந்த  'அன்பென்ற மழையிலே' என்ற பாடல் ஏ.ஆர் ரகுமானின் அருமையான மெட்டமைப்பும் அனுராதா ஸ்ரீராமின் காந்தக்  குரலும் வைரமுத்துவின் வைர வரிகளும் அப்பப்பா!
  
       இதில்  எனக்குள் எழுந்த கேள்வி என்னவென்றால் ஒரு நாத்திகராக  (நாத்திகராக  இருந்தாலும் வைரமுத்துவுக்கு பிடித்த வார்த்தை பிரம்மன்) 
வைரமுத்துவால் பக்தி மனம் கவழும் ஒரு பாடலை எப்படி இயற்ற முடிந்தது.

    வைரமுத்து உண்மையில்ஒரு நாத்திகர்தானா என்ற ஐயம் எழும் அளவிற்கு எழுதி இருப்பார். இதோ அந்த வரிகளைப் படித்துப் பாருங்கள் பாடலையும் கேட்டுப் பாருங்கள். 

  இயற்றியவர் நாத்திகர்,பாடியவர் ஹிந்து, இசை அமைத்தவர் இஸ்லாமியர்.பாடலோ கிறித்துவம்.
 இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது


அன்பென்ற  மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே!

கல் வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

                               (அன்பென்ற மழையிலே)

கொசுறு:
   இப்படிப்பட்ட  அருமையான பாடலை எழுதிய வைரமுத்து நீர்ப்பறவை படப் பாடல்களுக்காக விமர்சனத்து உள்ளானார்.உண்மையில் கிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

**************************************************************************************************************
 இதைப் படிச்சாச்சா!


ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சச்சின் ஒய்வு சரியா?என்ன செய்ய வேண்டும்?

    இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டிகளில் மட்டும்  ஒய்வு பெறுவதை அறிவித்துவிட்டார். நான் கூட கடந்த மாதத்தில் விலகி விடு சச்சின் என்று கடுமையான கவிதை எழுதி இருந்தேன். ஆனால் அவர் ஒய்வு முடிவை இவ்வளவு சீக்கிரம் எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. லட்சக்கணக்கான சச்சின் ரசிகர்களில் நானும் ஒருவன்.அவர் புகழுடன் இருக்கும்போதே ஒய்வு பெற வேண்டும்; கிரிக்கெட் போர்டால் வெளியே அனுப்பும் நிலைக்கு வந்து விடக் கூடாது என்பதே என்போன்றவர்களின் எண்ணமாக இருந்தது. இந்திய அணியின் தோல்விக்கு அவர் காரணமாக பேசப்படுவாரோ  என்ற அச்சமே  ரசிகர்கள் அவரது ஓய்வை விரும்பியதற்கு காரணம். 

  ஒரு பக்கம் அவரது ஓய்வை வற்புறுத்தினாலும் இன்னொருபக்கம் இன்னும் ஒரு சதம் அடித்தபின் ஓய்வை அறிவித்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் இப்போது ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவர் எடுத்த முடிவு சரியானதுதான் என்றாலும் ஒன்று,டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் இரண்டிலும் ஒய்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஒய்வு பெற்றிருக்கவேண்டும். சமீப காலங்களில் ஒரு நாள் போட்டிகளைவிட டெஸ்ட் போட்டிகளில்தான் அவரது ஆட்டம் அதிகமாக ஏமாற்றமளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது மிகக் கடினமான ஒன்று. ஒரு நாள் போட்டிகளில் அனுபவத்தை பயன்படுத்தி கணிசமான ஓட்டங்கள் எடுத்து விட முடியும்.

   புகழ்பெற்ற வீரர்கள் ஒரு தொடரின் தொடக்கத்திலேயே இந்த தொடரோடு நான் ஒய்வு பெறப் போகிறேன் என்று அறிவிப்பது வழக்கம். அவர் கடைசியாக விளையாடிய ஒரு நாள் தொடரின்போதே ஒய்வு முடிவை அறிவித்திருந்தால் அவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துடன் வழி அனுப்பி வைத்திருப்பார்கள். மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்திருக்கும். 

    டெஸ்ட் போட்டியிலும் அவரால் நீண்ட நாள் விளையாட முடியும் என்று தோன்றவில்லை. அதிலாவது அவர் தொடக்கத்திலேயே ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும்.
   
       எப்படி இருப்பினும் அவரது சாதனைகள் தற்போதைக்கு யாராலும் எட்ட முடியாததாக இருக்கிறது என்பது நமக்குப் பெருமைதான். இன்றுவரை பிளாஸ்டிக் பேட்டைக் கொண்டு விளையாடும் பிஞ்சுக் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் சச்சின்தான் கனவு நாயகனாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை. பெயரும் புகழும் பணமும் விருதுகளும் அவரைப்போல வேறு வீரர்கள் சம்பாதித்திருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா நாட்டவரும் போற்றும் உயர்குணம் உடையவராகவே களத்தில் இருந்திருக்கிறார். இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது.

     இந்த ஒய்வோடு விளையாட்டுக்கான அவரது பணி முடிந்து விட்டது என்று நான் கருதவில்லை. ஒரு ராஜ்யசபா எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அவர் பொறுப்புடன் செய்யவேண்டிய செயல்கள் பல உள்ளன.
   கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுக்களின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும். கூச்சல், குழப்பம் அமளி இவைதான் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளன. இவற்றிற்கிடையே மென்மையாகப் பேசும் சச்சின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.தன் பதவிக் காலத்திற்குள் வாய்ப்பற்றுக் கிடக்கும் கிராமப்புற  இளைஞர்களும் விளையாட்டில் சாதிக்க வாய்ப்பும் கிடைக்கும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். செய்வாரா?

   அல்லது வழக்கமான எம்.பி.க்கள் போல சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளை கழித்து விட்டு செல்வாரா?
 
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.    *******************************************************

சச்சின்  தொடர்பான பிற பதிவுகள்