என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 26 மார்ச், 2013

நிலா அது வானத்து மேலே!


வானப்பெண் 
இரவில் சூடிய 
சந்தனப்பொட்டு 

விண்வெளி வீதியில் 
உலா வரும் 
ஒளிக்கதிர் 

நட்சத்திரத் தொண்டர்கள் 
புடைசூழ 
இரவு மைதானத்தில் 
பேரணி நடத்தும் 
பெருந்தலைவர் 

கறுப்புத் தட்டில் 
கணக்கற்ற  நட்சத்திரக் 
கற்கண்டுகள் நடுவே 
வைக்கப்பட்ட லட்டு 

இருட்டைப் போக்கும் 
ஒளியை 
இரவல்  வாங்கியேனும் 
இப்பூமிக்கு 
ஈந்தளிக்கும் வள்ளல் 

வானத்து  மேல் அமர்ந்து
பூமியை புன்னகையுடன் 
பார்த்துக் கொண்டிருக்கும் 
பூமிக் காதலி 

நட்சத்திரங்கள்  
நட்புடன்  விளையாடும் 
பூப்பந்து

எத்தனை  முறை
 தேய்ந்து போனாலும் 
ஓய்ந்து  போகாது 
வளர்ந்து  காட்டும் 
தன்னம்பிக்கை  சின்னம்

வள்ளுவன் முதல் 
வைரமுத்து வரை 
கவிஞர் பலருக்கு 
சேதிகள் பல சொன்ன 
போதிமரம் 

வான ஏட்டில் 
இயற்கை  எழுதிய 
இணையிலா  கவிதை

***********************




வெள்ளி, 22 மார்ச், 2013

உண்மையில் நீங்கள் சமூக அக்கறை உள்ளவரா?


  சினிமாவைப் போலவே ஒரு பதிவு ஹிட்டாகுமா ஹிட்டாகாதா என்று கணிக்க முடிவதில்லை. ஒரு சினிமா ஹிட்டாகா  விட்டால் நஷ்டம் ஏற்படும். பதிவு ஹிட்டாகாவிட்டால் நஷ்டம் ஏற்படாது  என்றாலும் கொஞ்சம் மனக் கஷ்டம் ஏற்படுவதுண்டு.  நாம் நம்பிக்கையுடன் எழுதும் சில பதிவுகள் அதிகம் பேரின் கவனத்தைக் கவர்வதில்லை. அல்லது கவரும் விதத்தில் அப்பதிவு எழுதப் படவில்லை. அப்படிப்பட்ட பதிவில் ஒன்றுதான் கடந்தவாரம் நுகர்வோர் உரிமை நாளில்(15.03.213) நான் எழுதிய "நுகர்வு வெறி" என்ற பதிவு. வழக்கத்தை விட மிகக் குறைவானவர்களே பார்த்தபோதும் எப்படியோ தட்டுத் தடுமாறி எட்டு ஓட்டுக்கள் வாங்கி விட்டது.(தற்போதெல்லாம் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்மண வாக்குகள் மிகக் குறைவாகவே கிடைக்கிறது.) அப்பதிவின்  தொடர்ச்சியை எழுதுவதை  கைவிட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் பதிவுலகில் இதெல்லாம் சகஜம் என்பதை உணர்ந்து  தொடர முடிவு செய்து விட்டேன். 
முந்தைய பதிவு :நுகர்வு வெறி

   நாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை  கீழே கொடுக்கப் பட்டவற்றோடு  ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா?
  1. பணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.
  2.  கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.
  3.  பொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.
  4. வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.
  5.   பொருளின் பெயர் சீட்டில் அல்லது உரையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.
  6. இறக்குமதி செய்யாப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
  7.  சந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.
  8. எதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.
  9. சந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,
  10.  நான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.
  11. நுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும்  உதவுவேன்.
  12. எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான்  வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே  வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.
   இப்படி நம்மை நாம் சுயமதிப்பீடு செய்துகொள்வோம்.

(மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு அமைப்புகளின் முகவரிகள் அடுத்த வாரம்)
                                                              (தொடரும்)  


************************************************************

செவ்வாய், 19 மார்ச், 2013

பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!

   குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது,  பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல்  மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில்  குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது  வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப  நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில்  அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம்.

எங்கேயோ  எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது  என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல்   குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
  நம் சமூகத்தில் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும்  பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத  எண்ணங்களோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசங்களை அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். Good Touch எது  Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும்.

தொடுதலின் வகைகள்:
  1. பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக  உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
  2. பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
  3. தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு  சொல்ல வேண்டியது என்னென்ன? இதோ இந்தப் படங்களைப் பாருங்கள் 

                                                             தொடுதல் விதி 
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.

             கட்டியணைப்பது

உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை  கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும் 

                                                                          பரிசு 
சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.


 
                     ரகசியம் 
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும் 



வேண்டாம்னு சொல்லணும்: தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும் 






சொல்லிவிடு
 உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு
                                
                                                
  உன்மீது தவறு இல்லை
தொடுதல்  விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ  அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ  ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது  சொல்லலாம்.

 மேற்கூறிய அனைத்தையும்  குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது.

 அரசுபள்ளிகளில்  படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே! 

இந்த  தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை அக்கறையுடன் எதிர்பார்க்கிறேன்.
  .
******************************************************************************************************************


திங்கள், 18 மார்ச், 2013

இவன் தமிழன்டா!

தலையிடாக் கொள்கை

நாட்டுப் பிரச்சனைகளை
விதம் விதமாய்
வீதியில் நின்று அலசி
தீர்வு கண்டுவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தேன்

அங்கே,

நீயா? நானா? என்று
நங்கையர் பிரச்சனைகள்
தலையிடாக் கொள்கை
தமிழனுக்கு தெரியாதா என்ன?

மீண்டும் வீதிக்கு.............! 

***************************************** 

 

 

வெள்ளி, 15 மார்ச், 2013

நுகர்வு வெறி !

     இன்று நுகர்வோர் உரிமை நாள்.மார்ச் 15 ம் நாள் நுகர்வோர் உரிமை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது.அந்த நாளில்தான் (15.03.1983)அமெரிக்க  நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி அவர்கள் நுகர்வோரின் உரிமைகளைப் பிரகடனம் செய்து உரை நிகழ்த்திய நாள். நாம் பணம் கொடுத்துப் பெறும் எந்த ஒருபொருளும் அல்லது சேவையும் அதன் மதிப்புக்கேற்ப இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் அதை தட்டிக்கேட்கவும் உரியதைப் பெறவும் நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு.நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்க தேவையான அளவு சட்டங்களும் உள்ளன.
 
    சமீப காலங்களில் நுகர்வோரின் உரிமைகள் பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்தாலும் நுகழ்வோர் விழிப்புணர்வு நம்நாட்டில் குறைவு என்றே கூறுகிறார்கள்.  
   படித்தவர்களும்  நுகர்வோர் உரிமைகளை அறியாதவர்களாகவோ அல்லது நமக்கு  எதற்கு இந்த வம்பு என்ற மனப்பான்மை உடையயவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் கௌரவம் கருதியும் உரிமைகளை கேட்கத் தயங்குவது கண்கூடு. இந்த நிலை காரணமாக வாழ்வின் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்கும்போது கூட நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள். அல்லது குறைபாடுடைய சேவையைப் பெறுகிறார்கள்.

   நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரின் பணப் புழக்கம் காரணமாகவும் மீடியாக்களின் விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம்.தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் வகைகளாகக் கொள்ளலாம். 

   பல்வேறு மாயாஜாலம் காட்டும்  விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும்  நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. அவை
  1. ஆராய்ந்து அறியும் பொறுப்பு: நாம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள் அல்லது சேவையின் விலை தரம் ஆகியவற்றைப் பற்றி விழிப்புடன் இருந்து கேள்விகள் கேட்கவேண்டும்.பொருள் அல்லது சேவையை பற்றிய உண்மைகளை வெவேறு இடங்களிலிருந்தும் விசாரித்து அறிந்து வாங்க வேண்டும்.பணத்துக்கு மதிப்பு, சுற்றுச் சூழலுக்கு மதிப்பு,மக்களுக்கு மதிப்பு ஆகியவற்றைப் பற்றியும் கேட்டறிய வேண்டும்.
  2. செயல்படும்  பொறுப்பு: நுகர்வோரான நாம் நம் உரிமைகளை நிலைநாட்டி நமக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படவேண்டியது நமது பொறுப்பாகும். சமுதாயத்தில் இருக்கும் மற்றவர்களோடு நமக்கு உள்ள உறவுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் நமது மதிப்புகளை விட்டுக்கொடுக்காமல் நியாயம் பெறுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
  3. சமுதாயம் பற்றிய சிந்தனை: ஒரு பொருளையோ சேவையையோ நாம்  பயன்படுத்துவதால் மற்ற குடிமக்களுக்கு குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கின்ற வசதியும் வலிமையும் இல்லாத சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படக் கூடிய விளைவுகளை எண்ணிப் பார்த்து உணர்கின்ற தன்மை உடையவர்களாக இருப்பது நமது பொறுப்பாகும். நாம் பயன் படுத்தும் பொருள்களும் சேவைகளும் மற்றவர்களுக்கு துன்பம் தராத சூழ்நிலைகளில் தயாரிக்கப் பட்டவைதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
  4. சுற்றுச் சூழல் பற்றிய சிந்தனை : நம்முடைய நுகர்ச்சியினால் சுற்று சூழலுக்கும் மற்ற வகையிலும் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்.நாம் வாழும் இந்த பூமியும் இயற்கை வளங்களும்  எதிர்காலச் சந்ததியினருக்கும் சொந்தம் என்பதை உனர்ந்து அவற்றை வீணாக்காமல் பாதுகாக்கவும் பொறுப்பேற்க வேண்டும். பொருள்களின் அல்லது சேவைகளின்  உற்பத்தி, பயன்பாடு மற்றும் அப்புறப் படுத்துதல் ஆகியவை சூற்றுச் சூழலுக்கு தீங்கு செய்யாதவையாக இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் நம்முடையதாகும்.
  5. இணைந்து செயல்படல்: நுகர்வோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓர் அமைப்பை நிறுவுகின்ற பொறுப்போடு நுகர்வோர் நலத்தை பாதுகாக்கவும் மேம்படச் செய்யவும் உலகமும் சந்தையும் நீதியுடனும் நேர்மையுடனும் திகழச்செய்ய பாடுபடுபவரோடு துணை நிற்பதும் நம் பொறுப்பாகும்.நுகர்வோர் நலம் பற்றி அறியாத பாமரமக்களுக்கு உதவுவதும் நம் கடமையாகும்.  
     இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நுகர்வு அமைதல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயக்கும். 

  பொறுப்பான  நுகர்வோருக்கான அடையாளங்கள்,மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்களின் முகவரிகள் ஆகியவற்றை அடுத்த வாரம் காண்போம். 
                                                  (தொடரும்)
    *****************************************************************************************************

வியாழன், 14 மார்ச், 2013

குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!


   நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தாலும் அம்மாவும் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது. 

  அவர் ஒரு அற்புதமாக சொல்வார். அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார். அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார். 

      நாட்கள் விரைந்தது . நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை. அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார். நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.

   எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார். சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும்  தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல்  தினந்தோறும் கூறி வந்தார். செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.  எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை  அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது. 

   எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார். நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை. 

   இப்போது  நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம். இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்? அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள். கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது. இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.................... ............................ .................... ............
 ...................... ................................ ................................ ............................... ...................

   சொல்கிறேன் கேளுங்கள்.அவரை நாங்கள்  "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.அவருடைய மனைவியின்  பெயர் "கம்ப்யூட்டர்". இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி. இப்போது சொல்லுங்கள் இவர்களை எப்படி வெளியே அனுப்புவது?

***************************************************************************

ஞாயிறு, 10 மார்ச், 2013

மைனஸ் x மைனஸ் = ப்ளஸ். எப்படி?


 கிட்டத்தட்ட  ஒன்றரை வருடங்களா பதிவெழுதிக்கிட்டு வரேன். ஆரம்பத்தில சில கணிதப் புதிர்களை வடிவேலு காமெடி வடிவத்தில சொல்லி இருந்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. உங்க கஷ்ட காலம் இன்னைக்கு சீரியசா ஒரு கணக்கு பதிவு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  கணக்கு எனக்கு ரொம்ப புடிக்கும், ( நல்லா கவனிக்கணும் புடிக்கும்னு சொன்னேனே தவிர கணக்குல நான் ஒண்ணும் பெரிய அப்பா டக்கர் இல்ல. லட்டு எனக்கு புடிக்கும்னு சொல்றவங்க  எல்லாம் லட்டு நல்லா செய்ய முடியுமா?) நான் ஸ்கூல்ல படிக்கும்போது
1) (+) x (+)= + 
2) (+) x (-) = -
3) (-) x (+) = -
4) (-) x (-) = +     
என்று சொல்லிக் கொடுத்து மனப்பாடம் பண்ணிக்கோ இது ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டாரு எங்க கணக்கு வாத்தியார்.               (+) x (+) = +  ஓ.கே.
(-) x (-) = +  எப்படி சரி (-) தானே வரணும்னு வாத்தியார் கிட்ட கேக்க பயந்துகிட்டு பக்கத்தில இருந்த முதல் ரேங்க் பையன் கிட்ட சொன்னேன் (நான் அப்ப ரெண்டாவது ரேங்க்) அவன் போய் வாத்தியார் கிட்ட சொல்லிவிட அவர் தலையில் நறுக்குன்னு ஒர் குட்டு குட்டி, "என்ன பெரிய மேதாவின்னு நினைப்பா? சொல்றதை ஒழுங்கா படி அப்புறம் தன்னால தெரியும்னு போய்ட்டார்.  (-) x (-) = + எப்படின்னு கூட அப்புறம் எப்படியோ புரிஞ்சிகிட்டேன். ஆனா 'என்ன பெரிய மேதாவின்னு நினைப்பா? ன்னு கேட்டது எதுக்குன்னு இதுவரை புரியல..
   சரி! அது போகட்டும் என் மரமண்டைக்கு புரிஞ்சத உங்களுக்கு சொல்றேன். இதுவரை இதைப் பத்தி தெரியாத யாராது ஒருத்தருக்கு புரிஞ்சாலும் நான் பாஸ் ஆயிட்டேன்னு அர்த்தம்.
    மிகை எண் குறை எண் பெருக்கல்  விதிகளுக்கு நேரடி நிரூபணம் எனக்கு தெரியாது. இருந்தாலும் சுத்தி வளைச்சி அமைப்புச் சீர் முறையில நிரூபிக்க முயற்சி செய்யலாம்.

   எதுவாக  இருந்தாலும் தெரிஞ்சதுல இருந்துதான் தெரியாததுக்கு போகணும் 
  பூச்சியத்தவிட பெரிய எண்களை மிகை எண்கள்னு(ப்ளஸ்) சொல்வாங்க, பூச்சியத்தைவிட சிறிய எண்களை குறை எண்கள்னு (மைனஸ்) சொல்வாங்க.இதெல்லாம் எல்லாருக்கு தெரியும்.
பூச்சியம்  குறை எண்ணும் இல்ல. மிகை எண்ணும் இல்ல.எண்கள்ல பெரியது எது சிறியது எதுன்னு சொல்ல முடியாது. பூச்சியத்தை மைய எண்ணாக வைத்து எண்வரிசை அமைக்கலாம். கீழ் உள்ள எண்கதிரை பாத்தா  ஈசியா புரியம்.

   <----I-------I--------I-----I------I--------I-------I---------I---------I---------I----------I--------I----------->
        -6   -5   -4   -3  -2     -1    0     +1    +2    +3    +4    +5 
0வுக்கு வலது புறம் உள்ள எண்கள் ப்ளஸ் எண்கள்.வலப்புறம் செல்லச் செல்ல எண்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.இதுக்கு முடிவும் இல்ல. 0வுக்கு இடப்புறம் உள்ள எண்கள் குறை எண்கள் (மைனஸ் எண்கள்) இடப்புறம் செல்லச் செல்ல எண்மதிப்பு குறைந்து கொண்டே போகும். இதுக்கும் முடிவு இல்ல

ஒரு எண்வரிசையில அடுத்து வர்ற எண்கள் என்னவாக இருக்கும்னு உங்களுக்கு கண்டு பிடிக்க தெரியும்.
உதாரணத்திற்கு  
-6,-4,-2............
இதனோட அடுத்தடுத்த எண்கள் 0, +2, +4,+6 ...... ன்னு டக்குன்னு சொல்லிடிவீங்க. இது ஏறு வரிசை 
இதே மாதிரி +7,+4,+1........ இந்த வரிசையில அடுத்த எண்கள் -2,-5 -8 ன்னு என்கதிர்ல மூணு மூணா இடப்புறமா தாவி எண்ணினால் கண்டுபிடிச்சிடலாம்.  

 இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா,இதை வச்சுதான மேல சொன்ன மைனஸ் ,ப்ளஸ் விதிகளை சரி பாக்கப் போறோம்

  நமக்கு ஏற்கனவே தெரிஞ்சுது இரண்டு ப்ளஸ்  நம்பரை பெருக்கினால் ப்ளஸ் நம்பர்தான் கிடைக்கும்  
(+4) X (+3)= +12 
(+4) X (+2)= +8
(+4) X (+1)= +4
(+4) X  (0) = 0
(  ) X  ( ) = ( )
 ஒரு வாய்ப்பாடு எழுதி இருக்கேன். இதனோட  அடுத்த வரிசை நிரப்பனும் . வாய்ப்பாடு சொல்லி நிரப்பாம எண்களோட அமைப்பை, வரிசைத் தொடரப்  பாத்து நிரப்பனும்  முன்னாடி இருக்க அமைப்பை பாத்தா முதல் என் +4 எல்லா வரிசயிலும்  அதே எண் தான் இருக்கு, அதனால முதல் எண் +4 இது ஒரு மிகை எண்.
அடுத்த   நடு எண்களை பாருங்க +3,+2,+1,0 அடுத்த எண் -1. ஆகத்தான் இருக்கணும்.இது ஒருகுறை எண் . 
கடைசி எண்களோட வரிசை +12 , +8, +4, 0 இந்த வரிசைல அடுத்த எண் -4. இது இரு மைனஸ் எண். இப்போ காலியா இருக்க வரிசய இப்படி நிரப்பலாம்  
(+4) x (-1) = (-4) மிகை எண்ணை குறை எண்ணால் பெருக்கினா ஒரு குறை எண் கிடைக்குது, அதாவது (+) x (-) = - ரெண்டாவது விதி ஓகே. வா?

இப்ப  இதையே  எடுத்துக்கிட்டு வாய்ப்பாட்டை கொஞ்சம் மாத்தி தொடர்ந்து எழுதுவோம் 

(+4) x (-1) = (-4) 
(+3) x (-1)= (-3) 
(+2) x (-1) = (-2) 
(+1) x (-1) =( -1)
(0) x (-1) = (0) 
(  ) X  ( ) = ( )

இதுவரை ரெண்டாவது விதியை வச்சு பெருக்கி எழுதினோம் அடுத்த வரிசைய தொடர் வரிசை  முறைப்படி எழுதலாம். முதல் எண் ஒவ்வொண்ணா குறைஞ்சிகிட்டே வருது. அதாவது +4,+3,+2,+1,0 அடுத்தது -1 எனவே அடுத்த வரிசையோட முதல் எண் -1,(மைனஸ் எண்)
எல்லா வரிசையிலும் இரண்டாவது எண் -1 எனவே இதிலும் ரெண்டாவது எண் -1(மைனஸ் எண்). ஒவ்வொரு வரிசையிலும் மூன்றாவது எண்ணைப் பார்த்தா ஒண்ணு அதிகாமாகுது. அதாவது -4,-3,-2,-1,0, ... அடுத்த எண் +1 (ப்ளஸ் எண்). எல்லாம் ஒன்னு சேத்தா 
(-1) x (-1) = +1 குறை எண்ணை குறை என்னால் பெருக்கினால் மிகை எண் அதாவது  
 (-) x (-) = + 
மைனஸ் x  மைனஸ் = ப்ளஸ்.
நாலாவது விதி ஓ,கே வா?

மூணாவது விதிய இதில இருந்தே வரவழைக்கலாம்  
(-1) x (-1) = +1
(-1) x  (0) = 0
(  ) X  ( ) = ( )
 முதல் எண்களுக்கு, நடு எண்களுக்கு, கடைசி எண்களுக்கும் அடுத்த எண்ணை வரிசை முறையில் நிரப்பினால் 
(-1) x (1) = -1   .மூணாவது விதி (-) x (+) = -யும் ஓகே ஆயிடிச்சா?

நான்  பாஸ் ஆயிடுவேனா?? உங்க கருத்துகளும் ஓட்டுகளும்தான் சொல்லணும்.

*********************************************************************************************