கடந்த வாரம் நீயா நானாவில் படிக்கப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். படிப்பு வாரதவர்கள் ஒரு பக்கம்; அவர்களை காலையில் படி கடும்பகல் படி, மாலையில் படி , இரவு படி என்று படியாய் பாடாய் படுத்தும் பெற்றோர் மறுபக்கம்.
முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் இத் தலைமுறைப் பெற்றோர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் கல்வியை விட்டால் நடுத்தர குடும்பத்தினருக்கு நாதியில்லை. அதிக மதிப்பெண் பெறாவிட்டால் வாழ்க்கையே அவ்வளவுதான். என்றெல்லாம் சொல்லி குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்கள் கல்வி என்று குறிப்பிடுவது (நினைத்துக் கொள்வது) 10, +2 வில் அதிக மதிப்பெண் பெற்றுமருத்துவம் மற்றும் இஞ்சினீரிங்கில் இடம் பிடிப்பது) மட்டுமே.
படிப்பு எதற்கு? உடல் உழைப்பின்றி சம்பாதிப்பதற்காகவே கல்வி என்ற மனோபாவமே காணப்படுகிறது. நாம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தோம். நம் பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக் கூடாது எனபது பெற்றோர் உறுதியாய் இருக்கிறார்கள். கல்வியில் வெற்றி பெறாதவன் மட்டும்தான் உடலுழைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்கள்.கல்வி அறிவு பெற்றவன் (மதிப்பெண்முறைப்படி) மற்றவர் களைவிட உயர்ந்தவன். இந்த மனப்பாங்குதான் தங்கள் குழந்தைகளை வருத்தியாவது படிக்க வைத்து விடவேண்டும் என்று முழு மூச்சாக கொண்டு செயல்படுகிறார்கள் .
மிக சிறப்பாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்புகிறார்கள். அதற்காக தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குழந்தைகளை தயார் செய்வதே தமது கடமை என்றும் கொள்கிறார்கள். அப்படி செய்ய முடியாவிட்டால் தங்கள் கடமையில் இருந்து தவறி விட்டதாக நினைக்கிறார்கள். இதையே நீயா நானா நிகழ்ச்சியும் வெளிபடுத்தியது.
ஆனால் படித்தவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் தந்து வேலை தருகிற பெரும்பாலான முதலாளிகள் படிப்பில் சராசரியாக இருந்தவர்களாகவே வரலாறு கூறுகிறது. எழுதப் படிக்கத் தெரியாத அக்பர்தான் நிர்வாகத்திறன் மிக்க மன்னனாக விளங்கினார் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல.
மருத்துவமனையில் நர்சின் கையில் இருந்து விடுபட்டு நேரே நர்சரி பள்ளிக்கு செல்லக் கூடிய சூழல் இன்று உள்ளது. மொத்த வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு பகல் வாழ்க்கை வகுப்பறையில் செலவழிக்கப் படுகிறது. வகுப்பறைக்குள் அத்தனையும் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. வகுப்பறை தாண்டி கற்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.
ஆனால் படித்தவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் தந்து வேலை தருகிற பெரும்பாலான முதலாளிகள் படிப்பில் சராசரியாக இருந்தவர்களாகவே வரலாறு கூறுகிறது. எழுதப் படிக்கத் தெரியாத அக்பர்தான் நிர்வாகத்திறன் மிக்க மன்னனாக விளங்கினார் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல.
மருத்துவமனையில் நர்சின் கையில் இருந்து விடுபட்டு நேரே நர்சரி பள்ளிக்கு செல்லக் கூடிய சூழல் இன்று உள்ளது. மொத்த வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு பகல் வாழ்க்கை வகுப்பறையில் செலவழிக்கப் படுகிறது. வகுப்பறைக்குள் அத்தனையும் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. வகுப்பறை தாண்டி கற்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.
படிப்பு வராதவர்களை தண்டசோறு என்று கூறுதல், 'அவன் மட்டும் எப்படி நல்லா படிக்கிறான்' என்று பிற மாணவர்களோடு ஒப்பிடுதல் போன்றவை எல்லாம் நடுத்தர குடும்பங்களில் சகஜம் என்றாலும் அதிக பட்சமாக "நீ எல்லாம் எதுக்கு இருக்க? செத்துப் போ என்றுகூட சொல்வார்களா? ஆச்சர்யமாகத் தான் இருந்தது . இல்லை இல்லை அதிர்ச்சியாகவும் இருந்து. அவர்கள் மனதார அதை சொல்லியிருக்க மாட்டார்கள் என்றாலும் குழந்தைகளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை எப்படி உணராமல் போனார்கள்? ஒரு வேளை குழந்தை விபரீத முடிவு எடுத்தால் என்ன ஆவது? (இது போன்று நிகழ்ந்தால் முந்தைய தினம் ஆசிரியர் திட்டினார் அதனால்தான் இப்படி நேர்ந்தது ஆசிரியர்களை மாட்டிவிட்டு விடுவார்கள்)
ஆசிரியர்கள் சார்பாக பேசிய ஒருவர் இவர்களை படிக்க வைக்க எடுக்கும் முயற்சிகளையும் அதில் ஏற்படும் தோல்விகளையும் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும் விவரித்தார். ஆனால் இவை பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கே பொருந்தும்.
முன்பெல்லாம் மாணவனை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இருப்பதாக பெற்றோர் கருதினர். அடித்தால் கூட பெற்றோர் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். மாணவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. தேர்வு முடிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அனால் அப்போது அனைத்து வகை மாணவர்களும் அரசு பள்ளிகளில் இருந்தனர். இப்போது சராசரிக்கும் கீழே உள்ள மாணவர்களை தேர்ச்சி வைப்பதற்கு ஆசிரியர்கள் போராட வேண்டி இருக்கிறது. அப்போது படிக்க வைக்க சாம,தான,பேத தண்ட முறைகளை கையாள முடியும் . ஆனால் தற்போது முதல் இரண்டு முறைகள் மட்டுமே கையாளவேண்டும் .
சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல்,
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைத்தல் , தண்டனை கொடுத்தல்
|
ஆனால் இவற்றை ஆசிரியர் செய்ய முடிவதில்லையே தவிர பெற்றோர் இந்த நான்கு முறைகளையும் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக அப்பாக்களை விட அம்மாக்கள் கொடுக்கும் டார்ச்சர் அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது .இதையே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் பேச்சு உறுதிப் படுத்துவதாக அமைந்தது. இவர்கள் பயன்படுத்தும் உத்தி செண்டிமெண்ட் தாக்குதல். அது இப்படி இருக்கும் 'நாங்கதான் கஷ்டப்பட்டோம்; நீங்க கஷ்டப் படக் கூடாது. மத்தவங்களை விட நாம தாழ்ந்து போய்டக் கூடாது. 'உங்க வயசுல எங்களுக்கெல்லாம் சரியான சாப்பாடு இல்ல, துணி மணி இல்ல, செருப்பு இல்ல, புத்தகம் நோட்டு வாங்கிக் கொடுக்க ஆள் இல்லை . எல்லா வசதியும் செஞ்சும் ஏன்படிக்க மாட்டேங்கறீங்க"
'படிக்கலைன்ன பிச்சைதான் எடுக்கணும்' 'மாடுதான் மேய்க்கணும்' 'மூட்டைதான் தூக்கணும்' என்றெல்லாம் சொல்வது அந்த வேலைகளை மட்டும் இழிவு படுத்துவது மட்டும் அன்று. சொல்வது கல்வியை இழிவு படித்துவதாகவே கருதுகிறேன்.
10 ஆம்வகுப்பில் நானூற்று இருபது மார்க் வாங்கிய பெண்ணை அவர் தந்தை குறைபட்டுக் கொண்டதை என்னவென்பது? அந்தப் பெண்ணுக்கே அது குறைவான மார்க்தான் என்ற எண்ணத்தை ஆழப் பதித்து ஒரு தாழ்வு மனப்பானமையை அந்தத் தந்தை உருவாக்கி இருந்தது வேதனைக்குரியது
இந்த மனநிலையை வளர்த்ததில் பெரும்பங்கு மெட்ரிக் பள்ளிகளையே சாரும். 80 சதவீதத்திற்கு குறைவாக எடுத்தவர்கள் கூட சாரசரிக்கும் கீழே என்றுதான் மதிப்பிடப் படுகிறார்கள். சராசரியாக இருந்தால் பள்ளியை விட்டு அனுப்பி விடுவது வழக்கம். சராசரிக்கு குறைவாக உள்ளவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் புகலிடம் கொடுக்கின்றன. இதை சிறப்பு விருந்தினர் கவிஞர் வெண்ணிலா குறிப்பிட்டார்.
ரிசல்ட் அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றும் அதே நடை முறையை அரசு பள்ளிகளும் பின்பற்றுகின்றன. காலை மாலை சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்களை மனப்பாடம் செய்யவைக்கும் பணியில் ஈடுபடவைக்கின்றன. திரும்பத் திரும்ம ப்ளூ பிரிண்ட் மாதிரிதேர்வுகள் மூலம் அனிச்சையாக விடை அளிக்க பயிற்சி அளிக்கப் படுகின்றன. பாடம் என்று ஒன்று இருப்பதே தேர்வுக்காகத்தான். புத்தகத்தை படிக்கத் தேவை இல்லை.புரிந்து கொள்ளத் தேவை இல்லை. கேள்வி பதில்கள் திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.
இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருமே கேள்வி பதில் படிக்க கஷ்டமா இருக்கு பதில் பெரிசா இருக்கு. அந்தக் கேள்வி புரியல. என்றே பேசினர். இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியது ஒன்று மட்டுமே. கேள்வி பதில்தான் படிப்பு என்ற எண்ணமே ஆழமாக விதைக்கப் பட்டுள்ளது. பாடப் புத்தகம் என்று ஒன்று இருப்பதாகவே மாணவர்களுக்கு நினைவில்லை.
நிகழ்ச்சியில் நான் கவனித்த மற்றொரு முக்கியமான விஷயம் பங்கேற்ற பெற்றோர் ஒருவர் கூட தன் குழந்தைகளுக்கு படிப்பு வராததற்கு காரணம் அவர்கள் படிக்கும் பள்ளி என்றோ கற்பிக்கும் ஆசிரியர் என்றோ கூறவில்லை. தன் குழந்தைகள் படிக்காததற்கு காரணம் தன் குழந்தைகளின் கவனக் குறைவே காரணம் என்று நம்புகிறார்கள். மாணவர்கள் கூட தங்கள் ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்று குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் புகழ்( அதிக பணம் பறிக்கும்) பெற்ற தனியார் பள்ளிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதே அரசு பள்ளியில் அந்த பிள்ளைகள் படித்திருந்தால் ஆசிரியர் சரியாக சொல்லிக் கொடுக்க வில்லை, பள்ளி சரி இல்லை. என்று சொல்லி இருப்பார்கள். தனியார் பள்ளி நிர்வாகம் உங்கள் குழந்தை படிக்காததற்கு காரணம் நீங்கள்தான் என்று தங்களை திட்டினாலும் ஏன் அடித்தால் கூட பொறுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது.
நிகழ்ச்சியில் நான் கவனித்த மற்றொரு முக்கியமான விஷயம் பங்கேற்ற பெற்றோர் ஒருவர் கூட தன் குழந்தைகளுக்கு படிப்பு வராததற்கு காரணம் அவர்கள் படிக்கும் பள்ளி என்றோ கற்பிக்கும் ஆசிரியர் என்றோ கூறவில்லை. தன் குழந்தைகள் படிக்காததற்கு காரணம் தன் குழந்தைகளின் கவனக் குறைவே காரணம் என்று நம்புகிறார்கள். மாணவர்கள் கூட தங்கள் ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்று குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் புகழ்( அதிக பணம் பறிக்கும்) பெற்ற தனியார் பள்ளிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதே அரசு பள்ளியில் அந்த பிள்ளைகள் படித்திருந்தால் ஆசிரியர் சரியாக சொல்லிக் கொடுக்க வில்லை, பள்ளி சரி இல்லை. என்று சொல்லி இருப்பார்கள். தனியார் பள்ளி நிர்வாகம் உங்கள் குழந்தை படிக்காததற்கு காரணம் நீங்கள்தான் என்று தங்களை திட்டினாலும் ஏன் அடித்தால் கூட பொறுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது.
எழுத்தாளர் இமயம் அவர்கள் சொன்னது நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. உண்மையில் சாதாரணமாக கற்றவர்களே பெரிய மாற்றங்களுக்கு காரணங்களாக இருந்திருகிறார்கள். அதனால் அதிகம் படிப்பு வராதவர்கள் கவலைப் பட வேண்டியதில்லை.படிப்பு வராதது குற்றமும் இல்லை. அவர்கள் வாழத் தகுதி அற்றவர்களாக நினைத்துக் கொள்ளத் தேவையும் இல்லை என்று சொன்னதை பெற்றோர் மனதில் கொள்ளவேண்டும்.
பதின் பருவத்தில் படிப்பதில் எவ்வளவு கவனச் சிதறல் இருக்கும் என்பதை எடுத்துரைத்தார் உளவியல் மருத்துவர் ஷாலினி. அந்த வயதிற்குரிய இயல்பான சந்தோஷத்தையும் அனுபவித்துக் கொண்டு படிக்கவும் தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் என்றார். விடியற்காலையில் தூக்கக் கலக்கத்தில் படிப்பதால் பயன் ஏதுமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ஆய்வின் அடிப்படையில் கூறியது சிந்திக்க வைப்பதாக இருந்து.
சிறப்பு விருந்தினர் ஞானி குறிப்பிட்டார் 'இன்றைய கல்விமுறை மதிப்பெண் பெறுபவர்களை உருவாக்குகிறதே தவிர தகுதியானவர்களை உருவாக்கவில்லை. அதனால்தான் வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை' என்று கல்வி முறையை குறை கூறினார்.
கல்வியாளர்கள் அறிஞர்கள் வல்லுனர்கள் பலரும் கல்வி முறையை தவறு என்று கூறுகிறார்களே தவிர சரியான முறை என்ன? அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதை சரியாக யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. மாற்று முறை சரியாக அமையாததால் மதிப்பெண் முறை கோலோச்சுகிறது. ஆனால் மாற்றங்களும் கற்றலை ஆர்வமிக்கதாக ஆக்க பரிசோதனை முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அரசு பள்ளிகளில் இன்று பயன்படுத்தடும் 1- 4 வகுப்புகளுக்கு செயல் வழிக்கற்றல் ABL,( Activity Based learning) 5 ம் வகுப்புக்கு SALM, 6- 8 வகுப்புகளுக்கு ALM( Active Learning Methodology) படைப்பாற்றல் கல்வி பயன்படுத்தப் படுகிறது. CCE (Continuous and Comprehensive Evaluation)என்ற தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டு முறை பின்பற்றப் படுகிறது. உண்மையில் மிக அற்புதமான இந்த முறைகளை பெற்றோரும் விரும்பவதில்லை. ஆசிரியர்களும் விரும்புவதில்லை. அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இவை உதவாது என்று கருதப் படுவதே இதற்குக் காரணம் .
( இம்முறையில் மாணவர்கள் தங்கள் வருகையை தாங்களே குறித்துக் கொள்ளலாம் . அதற்கு சுய வருகைப் பதிவேடு என்று பெயர்.தினந்தோறும் வானிலை எப்படி இருக்கிறது என்பதை காலநிலை அட்டவணை மூலம் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பல ஆர்வமூட்டும் செயல்பாடுகள் உள்ளன இவற்றைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.)
எந்தப் பாடமாயினும் கடினமான பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களும் முடிந்தவரை பல்வேறு சுவாரசியமான உத்திகளை கையாளவேண்டும்.(உதாரணம்: தனி ஊசல் என்ற பாடத்தை கற்பிக்க நான் பயன்படுத்திய உத்தி)
கல்வி என்பது குழந்தையின் அனைத்து ஆளுமைகளை வளர்ப்பதாக அமைய வேண்டும்.வகுப்பறையில் அடக்கி ஒடுக்கி வைத்து ஆசிரியர் சொல்வதை மட்டும் கேட்டு திருப்பி சொல்வது எழுதுவது கல்வி அல்ல.நல்ல பண்புகளை நல்ல குடிமக்களை உருவாக்குவதே சிறப்பான கல்வி.
தெளிவாக சிந்திக்க வைக்கின்ற ஆற்றலையும் சிக்கலான சூழ்நிலையில் திடமான முடிவு எடுக்கக் கூடிய பண்பையும் சமூக மேம்பாடு தனி மனித நடத்தையில் உள்ளது என்பதை உணரவைக்கக் கூடியதாகவும் கல்வி அமைய வேண்டும்.
அறிவியலும் கணிதமும் கற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்; பிற பாடங்கள் பட்டம் பெற உதவுமே தவிர வாழ்க்கை வளம் பெற உதவாது என்ற எண்ணத்தை மாற்றவேண்டிய பொறுப்பு அரசு, சமூகம் இரண்டுக்கும் உள்ளது.
வாழ்க்கைக்கு கல்வி முக்கியம்தான். கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல.
வாழ்க்கைக்கு கல்வி முக்கியம்தான். கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல.
ஒரு நல்ல தலைப்பை எடுத்து விவாதித்த நீயா நானாவிற்கு நன்றி.
******************************************************************************
இந்நிகழ்ச்சி பற்றிய கவிஞர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் திரு முத்துநிலவன் அவர்களின் பதிவு
இந்நிகழ்ச்சி பற்றிய கவிஞர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் திரு முத்துநிலவன் அவர்களின் பதிவு
*****************************************************************************************
படிப்பு வராத மக்குப் பாப்பாவின் கவிதை படித்து விட்டீர்களா
**************************************************************************************