என்னை கவனிப்பவர்கள்

நிகழ்வுகள்.புனைவுகள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள்.புனைவுகள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 நவம்பர், 2014

புதிய தலைமுறையில் என் படைப்பு

புதிய தலைமுறை 13 நவம்பர் 2014 இதழ்

      வழக்கமாக  வெள்ளிக்கிழமைகளில்  ரயில் நிலைய புத்தகக் கடையில் புதிய தலைமுறை வார இதழ் வாங்கிப் படிப்பது வழக்கம். இந்த வாரம் அவசரமாக ஓடிவந்து ரயிலில் ஏறியதால் வாங்க இயலவில்லை. மாலையிலும் மறந்தநிலையில் நான் வீட்டுக்குள் நுழையும்போது புதிய தலைமுறை  எங்கள் வீட்டுக்குள்  அமர்ந்திருந்தது.சந்தா கட்டி இருப்பேன் அதனால் வந்திருக்கிறது என்று  வீட்டில் நினைத்துக் கொண்டார்கள் ..எனக்குப் புரிந்துவிட்டது..செப்டம்பர் மாதத்தில் கடிதம் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது புதிய தலைமுறை . அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். எனது கடித்ததை தேர்ந்தெடுத்திருப்பார்கள் . அதனால் அனுப்பி இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆம் அதுவே உண்மையானது ..  எனது கடிதம் பிரசுரமாகி இருப்பதை அறிந்தேன். அதற்காகவே புத்தகத்தை அனுப்பி இருந்தார்கள். பொதுவாக படைப்புகள் பிரசுரமானால் பிரதியை இலவசமாக அனுப்பி வைப்பது மரபு. அதன்படி  புதிய தலைமுறை எனக்கு பிரதியை அனுப்பி வைத்திருந்தது.  இப்போது எல்லா பத்திரிகைகளும்  அப்படி செய்கின்றனவா  என்று தெரியவில்லை. முன்பு குமுதத்தில் எனது கதை இப்படியும் இருக்க முடியுமா?-)  பிரசுரமான போது எனக்கு புத்தகம் அனுப்பப் படவில்லை. ஆனால்  750 ரூபாய் சன்மானமாக அனுப்பி வைத்தது குமுதம் இணையத்தில் எழுதியதன் மூலமே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இப்போது புதிய தலைமுறையில் எனது படைப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. முடிந்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

புதிய தலைமுறை 13.11.2014 இதழில் வெளியான  கடிதம் உங்களுக்கு பரிச்சயமானதுதான்."சரோஜாவிலதான் ரோஜா இருக்குடா" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கடிதம்
ஏறகனவே திடம் கொண்டு போராடு சீனு நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கடித்ததை சில மாற்றங்கள் செய்து அனுப்பி இருந்தேன், அது நிச்சயம் தேர்ந்தெடுக்கப் படும் என்ற நம்பிக்கை இருந்தது/ காரணம் முன்பு அதற்கு நீங்கள் அதற்கு  அளித்த ஆதரவுதான்.

   மூன்று ஆண்டுகளாக வலைப்பூவில் எழுதி வருகிறேன்.சில நேரங்களில் இப்படித் தோன்றும்.நாம் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறோம்? இதனால் என்ன நன்மை? இப்படி இணையத்தில் நேரத்தை செலவழிப்பது சரியா? ஒரு வேளை வலைப்பூவில் எழுதவில்லை என்றால் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அந்த நேரம் செலவிடப் பட்டிருக்கக் கூடும்.

  சிறுவயதில் இருந்து கண்டதையும் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தானும் எழுத வேண்டும் என்ற ஆசை உருவாகி விடுகிறது. சிலருக்கு சரியான களம் அமைந்து விடுகிறது. அல்லது தங்களது விடாமுயற்சியால் அத்தகைய சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் தேடிப்போகாதவர்களுக்கும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் களமாக வலைப்பூக்கள் உள்ளிட்டவை உதவுகின்றன. பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு வெளியாகுமா வெளியாகாதா என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையத்தில் நம்மை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. நாம் என்ன எழுதினாலும் எப்படி எழுதினாலும் பார்ப்பதற்கு படிப்பதற்கு ஒரு நூறு பேராவது இருக்கிறார்கள்.
 எழுதுபவர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாக இணையம் அமைந்துள்ளது.தங்கள் ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு அது துணைபுரியவும் செய்கிறது 

இணையத்தில் எழுதுபவர்கள் பெரும்பாலும் போழுதுபோக்குக்காகவே எழுதுகிறார்கள்.  ஓரளவிற்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் செய்கிறது. என்றாலும் முன்னணிப்  பத்தரிகைகளில் நம் படைப்புகள் இடம் பெறும்போது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது..

எனது வலைப்பக்கத்திற்கு வருகை வந்து  ஊக்கப் படுத்திய்வர்களுக்கும் ஆலோசனை தந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 


இணையத்தில் பலர் மிக சிறப்பாக எழுதுகிறார்கள்..நீங்களும் உங்கள் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள். நிச்சயம்.உங்கள் திறமை அறியப்படும் . 
நன்றியும் வாழ்த்துக்களும் 

---------------------------------------------------------------------------------------------------------