என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 9 மே, 2021

நகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்


கொரோனா தொற்று : நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்... அதிமுக கொடி  வடிவமைப்பில் பங்காற்றியவர்! | Comedy actor Pandu died due to corona

        அந்த சிறுவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம், ஆனாலும் ஒவியம் படிக்கத் தயங்கினான். சென்னை ஒவியக் கல்லூரியில் பயின்ற அவனது திறமைமீது அபார நம்பிக்கை கொண்ட அவனது ஆசிரியர் அவனை  கலை மற்றும் வடிவமைப்பு பற்றிய 5 ஆண்டு படிப்பை படிக்க ஊக்கப்படுத்தினார். அதில் தேர்ச்சிபெறுபவர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில்தான் இருக்கும் . அந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பரோடாவில் உள்ள புகழ்பெற்ற கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரியில் சேர்ந்தான்.
      படிப்பை முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து அகமதாபாத் வடிவமைப்புக் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் இந்திய அரசின் ஸ்காலர்ஷிப்புடன் பெற்று முடித்தார். மீண்டும் இந்திய அரசின் ஸ்காலர்ஷிப் பெற்று ஃபிரான்சில் உள்ள பல்கலைக் கழகத்தில் வடிவமைப்பில் டாக்டரேட் பட்டம் பெற்றார்,
தென்னிந்தியாவில் கலை மற்றும் வடிவமைப்பிற்காக பிஎச்டி பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே
        சென்னையில் பயின்றபோது தமிழ்நாடு சுற்றுலாத்துறை லோகோ வடிவமைப்பு போட்டி ஒன்றை அறிவித்தது. எத்தனையோ பேர் கலந்து கொண்டாலும் இவர் வரைந்த குடை லோகோ போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அழகான குடைச் சின்னம் சுற்றுலாத்துறையின் சின்னமாக இன்றுவரை உள்ளது. இதற்காக 20000 ரூபாய் பரிசாக கிடைத்தது. 60 களில் 20000 என்றால் இப்போதைய மதிப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்
Live Chennai: Tourist Fair at Chennai Islands Grounds: swelling crowds to  take selfie at the Railway Stall!,Tourist Fair at Chennai Island Grounds,  Railway Stall, Tourism Industrial Fair, Chennai Metro City, Southern  Railways
     இவர் சிறந்ந்த ஓவியர்.உலகம் முழுவதும் பல்வேறு ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஒவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன
        அதிமுக கட்சியின் கொடியும் இவரால் வடிவமைக்கப் பட்டதுதான் இரட்டை இலை சின்னத்தின் வடிவமைப்பில் இவருக்கும் பங்கு உண்டு சன் டிவியின் லோகோக்களை வடிவமைத்ததும் இவரே.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்ய இயலாத நிலையில் ஸ்டிக்கர் தயாரித்து விளம்பரம் செய்யப்பட்டது. அந்த ஸ்டிக்கர்களை வடிவமைத்ததும் இவர்தான்

    இப்போது கணினி கிராஃபிக் மூலம் திரைப்படத்தின் போஸ்டர்கள். டைட்டில்கள் உருவாக்கப் படுகின்றன . அப்போதெல்லாம்  கையினால்தான் டைட்டில்கள் வரையப்பட்டன, நிறையப் படங்களுக்கு டைட்டில்ஸ் இவரது கைவண்ணத்தில் ஒளிர்ந்திருக்கிறது.

     இவ்வளவு அசாத்திய திறமை படைத்தவர் யார்?.. திரைப்படங்களில் முகத்தை அஷ்ட கோணலாக்கி வித்தியாசமான ”ஆங்” என்ற வாய்ஸ் மாடுலேஷனுடன் நம்மை சிரிக்க வைத்த நடிகர் பாண்டு அவர்தான். சமீபத்தில் கொரோனா தொற்று இவரை பலிகொண்ட துயரச் செய்தி நாம் அறிந்ததே

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

      இவர் தனது வாரிசுகளுடன் இணைந்து நடத்தும் Capitaletters என்ற லோகோ பொறித்தல் வடிவமைப்பு நிறுவனம் 43 ஆண்டுகளாக  முன்னணியில் இருந்துவருகிறது.

    250 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் லோகொக்கள் பெயர்ப் பலகைகள் இவரது நிறுவனத்தின் கற்பனையில்  உருவாக்கப் பட்டவை.
     இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இவர்கள் வடிவமைத்த மாதிரிகள் அசத்தலாக உள்ளன

     காதல் கோட்டையில் நடித்தபோதுதான் இவர் பிரபலம் ஆனார். பின்னர் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
    திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்கள் கோமாளித்தனமாக பாத்திரங்களில் நடிப்பதால் அவர்களின் இன்னொரு திறமையுள்ள பக்கங்கள் நமக்குத் தெரிவதில்லை.
       தமிழ்த் திரை உலகைப் பொறுத்தவரை நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களைவிட திறமை பெற்றவர்களாகவும். அறிவார்ந்தவர்களாகவுமே இருந்து வந்திருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள்.சமீபத்தில் மறைந்த விவேக்கும் மக்கள் மனதில் அவ்வாறே நிலைபெற்றார்
    என் எஸ் கிருஷ்ணன், எம்.ஆர். ராதா, சோ, விவேக், போன்றவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களின் திறமைகளை உலகம் அறிந்தது பாண்டுவின் திறமை அவர் இறப்பிற்கு பின்னரே தெரிய வருகிறது

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சார்லி, சின்னி ஜயந்த் தாமு, போன்றவர்களும் திறமை மிக்கவர்களே.

      இவர்கள் இன்னொருவர் வசனத்தில் சவால் விடும் கதாநாயகர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை

நன்றி: விக்கிபிடியா, இணைய தளங்கள், யூடியூப் பேட்டிகள்