என்னை கவனிப்பவர்கள்

புதன், 28 மே, 2014

உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13

    கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம். திடீரென்று ஒரு நாள் உங்கள் வலைப்பூ காணாமல் போய்விட்டால் என்ன செய்வது? அப்படி சிலருக்கு நடந்தும் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ  ஹேக்கர்களிடம் சிக்கி வலைப் பூவை இழந்திருக்கிறார்கள் சிலர்.  சமீபத்தில்  அதிக அளவில் எழுதி வந்த நம்பள்கி அவர்களின் வலை தளத்தை காணவில்லை. இந்த வலை தளத்தை அவரே முடக்கி விட்டாரா அல்லது வேறு யாரேனும் கைவரிசை காட்டினார்களா தெரியவில்லை.இதுபோல் ஏமாறுபவர்களில் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் இருக்கின்றனர் என்பது வேடிக்கை .

    பொன்மலர் என்ற தொழில் நுட்பப் பதிவரும் விளம்பர ஆசை காட்டப்பட்டு தன் மெயில் கடவுச்சொல்லை நம்பித் தர, தன் "பொன்மலர் பக்கங்கள்" என்ற வலைப்பூவை இழந்தார். பின்னர் சாமார்த்தியமாக அதை மீட்டெடுத்தது தனிக் கதை.

    நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவுகளை பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்ததுண்டு. தொடக்கத்தில் ஒவ்வொரு பதிவையும் word இல் சேமித்து வைத்திருந்தேன்.ஆனால் தொடர்ந்து அதைப் பின் பற்ற முடியவில்லை. 
    வேறு எளிய வழி ஏதேனும் உண்டா என்று தேடிய போது ப்ளாக்கரிலேயே அந்த வசதி இருப்பதை அறிந்து கொண்டேன். 
(நானெல்லாம் சரியான வெண்குழல் விளக்கு வகையை சேர்ந்தவன் என்பவன் என்பதால் எதையும் தாமதமாகத் தான் புரிந்து கொள்வேன்.ஹிஹி)
   எனது 330 க்கும் மேற்பட்டபதிவுகள் கொண்ட மூங்கில் காற்று வலைப் பூவை பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டேன். 

  நான் பேக் ப் எடுத்து வைத்துக் கொண்டது நல்லதாகப் போயிற்று என்றே நினைக்கிறேன். இப்படி நினைத்தற்குக் காரணம் எனது கூகுள் அக்கவுண்டை திறக்க யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள். அலுவலகத்திலோ அல்லது வேறு கணினிகளிலோ நாம் நமது ஜிமெயில் அக்கவுண்டுகளை பயன்படுத்துவது வழக்கம்தான்.  அப்போதெல்லாம் கூகிள் அவற்றை நமக்கு சுட்டிக் காட்டும் .  பயன்படுத்திய நேரம் இடம்  நமக்கு தெரியும் என்பதால் அவற்றை பொருட்படுத்துவதில்லை . சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மெயில் திறக்கும்போது ஒரு Unusual Activity என்று எச்சரிக்கை செய்தியை கூகிள் காட்டியது . முதலில் அலட்சியம் செய்து விட்டேன். பின்னர் ஏதோ  தோன்ற மீண்டும் விவரங்களைப் பார்த்தபோது சற்று அதிர்ச்சி ஏற்படத்தான் செய்தது. அமெரிக்காவில் ஒருவர் எனது மின்னஞ்சல் கணக்கை திறக்க முயற்சித்ததைக் காட்டியது 




இந்த ஆக்டிவிடி உங்களுடையதாக இல்லாத பட்சத்தில் உங்கள் கடவு சொல்லை மாற்றி விடுங்கள் என்று ஆலோசனை கூறியது கூகுள். அதனால் எனது கடவுச் சொல்லை  மாற்றி விட்டேன். நீங்களும் உங்கள் கடவு சொற்களை  மாற்றிவிடுவது நல்லது.

 இப்போது ப்ளாக் ஐ  பேக் எடுப்பது  எப்படி என்று பார்ப்போம். 
இதைப் பற்றி அறியாத புதிய பதிவர்களுக்கு மட்டுமே.

உங்கள் வலைப்பூவில் sign in செய்து உள்நுழைந்து Dash board இல் செட்டிங்க்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

படி 1

செட்டிங்க்ஸ்  மெனுவில் கடைசி ஆப்ஷனான  Others ஐ க்ளிக் செய்வும் .
பின்னர் Blog Tools பகுதியில் Import Blog-Export blog-delete blog என்ற மூன்று ஆப்ஷன்கள் உள்ளதைக் காணலாம் இதில் Export Blog ஐ தேர்ந்தெடுக்கவும்.
பக்கத்திலேயே Delete Blog ஆப்ஷன் உள்ளதால் கவனமாக இருக்கவேண்டும். தப்பித் தவறி அதனை க்ளிக் செய்துவிடக் கூடாது. 

படி 2











படி 3

கீழ்க்கண்டவாறு ஒரு பெட்டி தோன்றும் அதில் டவுன் லோட் ப்ளாக் ஐ க்ளிக் செய்தால் blog முழுவதும் சிறிது நேரத்தில் டவுன்லோட் ஆகிவிடும் 



அக் கோப்பு கீழ்க்கண்டவாறு தோற்றமளிக்கும்.  இதனை திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் நமது பதிவுகள் அனைத்தும் பின்னூட்டங்களுடன் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

இதனை கணினியிலோ, பென் டிரைவிலோ சி டியிலோ சேமித்து வைத்துக் கொள்ளலாம். 

   அல்லது இன்னொரு ப்ளாக் தொடங்கி அதில் இவற்றை பதிவேற்றிக் கொள்ளலாம். புதிய ப்ளாக்கில் உள் நுழைந்து  படி 1 ஐத் தொடர்ந்து 2ம் படியில் உள்ளது Import Blog  ஐ கிளிக் செய்து  browse  ஆப்ஷன் மூலம் பேக் அப் ஃபைல் சேமிக்கப்பட்ட இடத்தில் இருந்து தேர்வு செய்து Open ஐ க்ளிக் செய்தால் பேக் அப் பைல் அப் லோட் ஆகிவடும்.


    கொடுக்கப்பட்ட எண்களை தட்டச்சு செய்து நாம் ரோபோட் அல்லஎன்பதை உறுதி செய்து Import blog ஐ க்ளிக் செய்தால் போதும் . பழைய ப்ளாக்கின் பதிவுகள் அனைத்தும் புதிய ப்ளாக்கிற்கும் வந்து விடும். இதற்கு சிறிதுநேரம் பிடிக்கும். பதிவுகளின் எண்ணிக்கையை பொறுத்து நேரம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகலாம் .

மேலுள்ள படத்தில் Automatically publish all imported posts and pages என்பதற்கு முன் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்யப்பட்டிருந்தால் அனைத்து பதிவுகளும் பப்ளிஷ் ஆகிவிடும். இரண்டு ப்ளாக்கிலும் பதிவுகள் இருக்கும் நாம் இதை பேக்கப் ஆக மட்டுமே பயன்படுத்துவதால் இந்த செக் பாக்ஸில் உள்ள  டிக்கை நீக்கி விடுவது நல்லது. பதிவுகள் draft ஆக புதிய ப்ளாக்கின் டேஷ் போர்டில் இருக்கும். வேண்டுமானால் பப்ளிஷ் செய்து கொள்ளலாம்

படத்தில் மூங்கில் காற்றின் பதிவுகள் பார்வைகள் பலவிதம் ப்ளாக்கில் இறக்கம் செய்யப்பட்டிருப்பதை  பார்க்கலாம் . இவற்றை பப்ளிஷ் செய்யாமல் வைத்திருக்கிறேன்.

    இவ்வாறு வலைப்பூவை பேக் அப் எடுக்கும்போது பதிவுகளும் கம்மேன்ட்களும் மட்டுமே புதிய பிளாக்கிற்கு ஏற்றம் செய்யவேண்டும். முந்தைய ப்ளாக்கின் டெம்ப்ளேட்டைப் போலவே இருக்க வேண்டும் என்றால் டெம்ப்ளேட்டை முன்னதாக பேக் அப்  எடுத்து வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம். அல்லது புதிய வேறுவித டெம்ப்ளேட்டை அதிலேயே தேர்வு செய்து கொள்ளலாம்.

 
டெம்ப்ளேட் பேக் அப் எடுக்க ப்லாக்கிற்குள் நுழைந்து Template ஆப்ஷனில் Backup/Restore ஐ க்ளிக் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் டெம்ப்ளேட்டை சேமித்து வைத்துக் கொண்டு புதிய ப்ளாக்கிற்கும் பயன் படுத்திக் கொள்ளலாம்



புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

*****************************************************************************

இது போன்ற குறிப்புகளை புதுக் கோட்டை பட்டறையில் சொல்ல நினைத்தேன். நேரமின்மை காரணமாக முடியவில்லை 

***************
கற்றுக்குட்டியின் முந்தைய கணினிக் குறிப்புகள் . 
(ஒரு வேளை யாருக்கேனும் பயன்படலாம்) 



  • Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2
  • எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?
  • எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா? .
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிவது எப்படி?
  • எச்சரிக்கை!கூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்!
  • காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய 
  • EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 
  • காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க ...
  • கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut...
  • விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...

  • *******************************************************************
  • ஞாயிறு, 25 மே, 2014

    புதுக்கோட்டையில்பதிவர் பயிற்சி-புது முயற்சி

       
        அரசியல்,எழுத்து என்று எந்த வகை பிரபலங்களாக இருந்தாலும் இணையத்தை தவிர்க்க இயலாத சூழ்நிலை இன்று உள்ளது. அதனால் அரசியல் வாதிகள்  எழுத்தாளர்கள் இணையத்தின் மூலமாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். கெளரவத்திற்காகவேனும் இணையதளமோ முகநூல் பக்கங்களை வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. பத்திரிகைகளும் வலைப்பூ  முகநூல்,டுவிட்டர் பக்கங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன.
         
           லியோனி பட்டிமன்றக் குழுவின் ஆஸ்தான பேச்சாளர்களில் ஒருவர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் . ஏராளமான  கதை கவிதை  கட்டுரை என்று முன்னணி பத்திரிகைகளில் எழுதி வருபவர். புதுக்கோட்டையில்வசித்து வரும் இவரை இணையம் தன் பக்கம் ஈர்த்துவிட்டது.  பட்டிமன்றங்களில் முழங்கிய இவர் இணைய வெளியிலும் " வளரும் கவிதை" எனற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். கடந்த பதிவர் சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

       இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதும்  எழுத்தாற்றல் மிக்க பலரையும் வலைப்பூக்களில் எழுத  ஊக்குவிக்க வேண்டும் என்பதும் இவரது விருப்பம்.இப்பகுதியில் திறமையான எழுத்தாளர்கள் பலர் இருகிறார்கள். அவர்களை வலையில் எழுதவைக்கவேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் புதுக்கோட்டை பகுதி ஆசிரியர்களை அழைத்து வலைப்பூ தொடங்கி எழுத ஊக்குவிக்கும் வகையில்  நன்கு அறிந்தவர்களைக் கொண்டு பட்டறை ஒன்றை நடத்தினார். அப்போது பதிவெழுத தொடங்கிய சிலர் தொடர்ந்து எழுதி வருவது பாராட்டத் தக்கது. அரும்புகள் மலரட்டும் பாண்டியன் இன்று தமிழ்மணத்தின் முதல் 20 தர வரிசைக்குள் இடம் பிடித்து விட்டார்

       முதல் பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக  இரண்டாவது முறையாக பயிற்சியை நடத்த திட்டமிட்டு  வெற்றிகரமாக நடத்தியும் காட்டி விட்டார் கவிஞர் முத்து நிலவன்.  புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரையும் இணையத்துக்குள் இழுத்து விட வேண்டும் என்ற அவரது தன்னலமற்ற செயல்பாடுகள் ஆச்சர்யத்தை அளித்தன. இணையத்துடன் கூடிய கணினி வசதியுடன் உள்ள இடத்தைப் பிடித்தது முதல் அத்தனை ஏற்பாடுகளும் அவரது தலைமையில் சிறப்பாக இருந்தன.  17.05.2014 மற்றும் 18.05.2014 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது இப்பயிற்சிக்கு வந்து ஆலோசனைகளையும் கூறவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.(மனசாட்சி:  உனக்கு  என்ன தெரியும். உங்களை கூப்பிட்டது ஆச்சர்யம்தான். ஒரு வேளை  எப்படி எழுதக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்குமோ?.)

        நானும் வருவதாக சொல்லி இருந்தேன் ஆனால் எதிர்பாராஅலுவல் காரணமாக முன்பதிவு செய்து வைத்திருந்தும் புறப்பட முடியவில்லை சனிக்கிழமை இரவு புறப்பட்டேன்.புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  முத்துநிலவன் அவர்கள்  பாண்டியன் மற்றும் கஸ்தூரி ரங்கன் ஆகியோருடன் தயாராக இருந்து என்னை அழைத்து சென்றனர்.
    பின்னூட்டப் புயல், வலையுலக மந்திரவாதி திண்டுக்கல்  தனபாலன் வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். 
        இதற்குள் பெரிய மீசையுடன் கம்பீரமாக வந்து நின்றார் கரந்தை ஜெயகுமார். ஏற்கனவே வலைப்படத்தில் உள்ள தோற்றத்திலேயே இருந்ததால் அறிமுகம் தேவைப் படவில்லை. அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரரான அவர்  ராமானுசம் பற்றிய தொடர்பதிவால்  என்னை வெகுவாகக் கவர்ந்தவர். 

        முதல் நாள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பயிற்சியை  தொடங்கி வைத்தார் என்பதை அறிய முடிந்தது. இப்பயற்சியில் கலந்து கொண்ட பலர் தொடக்க நிலையில் உள்ளவர்கள் . முதல் நாளில் மின்னஞ்சல் உருவாக்குவது முதல் வலைப்பூ தொடங்குவது  எப்படி எழுதுவது,தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த மென்பொருள்கள் பயன்படுத்தலாம்   என்பதோடு என்னவெல்லாம் எழுதலாம் எனது பற்றியும்   வல்லுனர்கள் பயிற்சி அளித்ததாக கூறினர் . பங்கு பெற்றவர்கள்  அங்கேயே வலைப்  பூவை தொடங்கி விட்டனர் .

         முதல் நாளில் சொன்னது போக நாம்  என்ன சொல்ல முடியும்ஐயம் மனதுக்குள் இருந்து . நமது அனுபவங்களை மட்டும் சொல்வோம் என்று முடிவு செய்து கொண்டேன்.
    கவிஞர் ஐயா வீட்டில் காலை உணவருந்தி விட்டு பயிற்சி நடக்கும் இடமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா  பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றோம் . தனபாலனும் வந்து விட்டார்.

        முதல் பகுதியாக முதன்மைக் கல்வி அலுவலர் "நட்ட கல்லும் பேசும்" என்ற தலைப்பில் புதுக் கோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் வழியாக பயன்படுத்தப்பட்ட   ராஜராஜன் பெருவழி பற்றி தான் செய்த ஆய்வை பவர் பாயிண்ட்டி ல்  அற்புதமாக விளக்கினார் . கல்வெட்டுக்கள் நினைவு சின்னங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களை  அளித்ததோடு அந்த வழியை அடையாளம் கண்டு பயணம் செய்தும் பார்த்ததும்  அந்த அனுபவத்தை விவரித்ததும் குறிப்பிடத் தக்கது.  முதன்மைக் கல்வி அலுவலர் பணியில் ஒய்வு என்பதே மிகக் குறைவு. 24 மணி மேரமும் பணியைத் தவிர பிறவற்றை நினைத்துப் பார்ப்பது என்பது அரிதினும் அரிதான ஒன்று. இந்நிலையில் அவரது ஆர்வம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
          பட்டறைக்கு தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் சுவாரசியமாக இருந்தது.

        அதற்குள் உணவு இடைவேளை வந்து விட்டது. பிற்பகலில் நீங்கள் பாதியும் தனபாலன் பாதியும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப் பட்டாலும் எதிர்பாரா விதமாக விக்கி பீடியா பங்கேற்பாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ் பெரியார் விக்கிபீடியாவில் எழுதுவது எப்படி என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குமேல் விளக்கமளித்தார் . ஒரு தகவல் களஞ்சியமாக தமிழ் விக்கி பீடியாவை உருவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எழுதியதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்றும் கூறினார்.விக்கி பீடியாவை  பலரும் ஆதாரங்களாகக்  கொண்டு அதுதான்  சரி என்று கூறும் நிலையில் தவறான  கருத்துக்கள்  அல்லது தான் விரும்பும் கருத்துக்களை  பதிவு செய்ய முடியும் என்பதும் மாற்றுக் கருத்துடையவர் அதை திருத்த முடியும் என்பதும் விக்கி பீடியாவின் நம்பகத் தன்மை  சற்று ஐயத்துக்கு இடமாக்கியது  போல் தோன்றியது . மேலும் சில குறைபாடுகளும் உள்ளதையும் கூறினார்.தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தால் அதன் நிர்வாகக் குழுவிலும் சேர்க்கப்படுவார்களாம்.

       தேநீர் இடைவேளைக்குப் பிறகு திண்டுக்கல் தனபாலன் வலைப் பூ பற்றிய பல தகவல்களை தனக்கே உரிய பாணியில் விவரித்தார். HTML மற்றும் ஜாவா நிரல்களை எங்கு எப்போது பயன்படுத்துவது அதனால் என்ன பயன் என்பதையும் விளக்கினார் . பதிவு எழுதுவதற்கு HTML MODE யே  தனபாலன் பயன்படுத்துகிறார். தான் எப்படி வேகமாகப் பின்னூட்டம்  இடுகிறார் என்பதன் ரகசியத்தை சொன்னார்.
    மென்பொருள் படித்தவர்கள்  போல   நிரல்கள் எழுதும் ஆற்றலை தனபாலன் பெற்றிருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. ஏற்கனவே அடிப்படைகளை அறிந்தவர்கள் இவரது ஆலோசனைகளைப் பின்பற்றினால் வலைபதிவை, வடிவமைப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.

        நிறைவடையும் நிலையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது . தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு வலைப்பூ  தொடர்பான அடிப்படை  செயல்பாடுகளை எனக்கு தெரிந்தவரை எடுத்துக் கூறினேன். அனைவரும் அதிகமாக எதிர்பார்த்தது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது பற்றி . ஆனால் நேரமின்மை காரணமாக  விரிவாக கூற முடியவில்லை.

       திண்டுக்கல் ஏற்கனவே தனபாலன் வலைப்பூ  எழுதும் பலருக்கு அவர்கள் பதிவுகளை திரட்டிகளில் இணைத்து உதவி  இருக்கிறார்.நானும் சிலருக்கு  வலைப்பூ வடிவமைக்கவும்  திரட்டிகளில்  இணைக்கவும் உதவி செய்திருக்கிறேன். இப்போதும் தேவைப்படின் உதவத் தயாராக இருக்கிறோம்.

       விடுமுறை தினமாக இருந்த போதிலும் சுமார் 40 பேருக்கு மேல் வந்திருந்து மாலை 5.30 மணி வரை இருந்தது அவர்கள் ஆர்வத்தை காட்டுகிறது. இதில் பெண்களும் கலந்து கொண்டு இணையத்தில் எழுத முன் வந்தது உண்மையில் பாராட்டுக் குரியது.

       நிகழ்வுகள் அனைத்தையும் அவ்வப்போது சுற்றி சுற்றி வந்து சுறுசுறுப்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் மூத்த பதிவர் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல. "எனது எண்ணங்கள்" தமிழ் இளங்கோ ஐயாதான் அவர். அவரது புகைப்பட  ஆர்வத்தை பதிவுகள் மூலம் அறிந்திருந்த போதிலும் நேரில் அதை உறுதி செய்தார் .
    சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப் பதிவில் எழுதி வரும் முனைவர் ஜம்புலிங்கம்  போன்ற அறிஞர் பெருமக்களை சந்திக்க வாய்ப்பாக அமைந்தது புதுக்கோட்டை பயிற்சி

    இடை வேளையின்போதும் ஆலோசனை வழங்கும் தனபாலன்
    புகைப்படம்: தமிழ் இளங்கோ  


       அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து தான் பெற்ற இன்பம் பெருக அனைவரும் பெருக இவ்வையகம் என்ற நோக்குடன் செயல்பட்டு பட்டறையை வெற்றிகரமாக நடத்திய பெருமை முத்துநிலவன்  அவர்களையே சாரும். அவருடன் உடன் இருந்து பணியாற்றிய வர்களுக்கும் , இடம் தந்து இணைய இணைப்புடன் கணினியும் தந்து மதிய  உணவும் தந்து  உதவிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா  பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் .



    ********************************************************************************


    கொசுறு: 

    எல்லா பதிவர் சந்திப்பிலும் நடக்கிற சிறப்பு நிகழ்ச்சி, கற்றது, புகைப்படங்கள். பதிவர் பட்டறைனு எல்லாரும் எழுதுறாங்க. இது தவிர "பிஹைண்ட் த சீன்" நடப்பதை யாருமே எழுதுவதில்லை! நீங்க எதுவுமே சொல்லாவிட்டாலும், சந்திப்பின்போது யார் யாரு தலையெல்லாம் யாரு யாரிடம் உருளும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

    நன்றி:வருண்

    *********************************************************************************
     

    புதன், 14 மே, 2014

    வாயை மூடிப் பேசவும்

       எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிடிக்கு போக நினைத்ததுண்டு. அனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.   நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பார்க்க முடிவு செய்து வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஐ மேக்ஸில் 7 வது ஸ்க்ரீனில் முன்பதிவு செய்தேன். தாமதமாக செய்ததால் இரண்டாவது வரிசையில் அமர்ந்து பார்க்க வேண்டியதாயிற்று. அது ஒரு வித்தியாச அனுபவம்தான்

       முன்னதாக பார்க்கிங் கட்டணம் அதிகம் என்று கேள்விப் பட்டதால் பயணத்திற்கு பேருந்தையே தேர்ந்தெடுத்தேன். குருநானக் கல்லூரி நிறுத்தத்தில் இருந்து ஓரிரு நிமிட நடை தூரத்தில் பீனிக்ஸ் அமைந்திருந்தது

       ஆடம்பர மால்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் கூட்டம் சாரிசாரியாக  குருநானக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பீனிக்சை நோக்கி பீடு  நடை போட்டுக் கொண்டிருந்தது.  கட்டணம்பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல்  நீண்ட வரிசையில் நான்கு சக்கர வாகனங்கள் காத்திருந்தன. 

       சோதனைக்குப்  பிறகு உள்ளே நுழைந்துபின்  பார்க்க இருக்கும் படத்தின் பெயரைப் போலவே வாயை மூடி பேசாமல் சும்மா கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் அங்குலத்திலும் ஆடம்பரம் நிறைந்திருந்தது. வாங்கும் விலையிலோ, நம்ம பர்ஸ் தாங்கும் விலையிலோ பொருட்கள் இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாக கடைகளைக் கடந்து தேடிப் பிடித்து அரங்கிற்குள் நுழைய விளம்பரங்கள் தொடங்கி இருந்தது.

       இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்ததால் பாதி திரையை மட்டுமே  சரியாக பார்க்க முடிந்தது.  அழகான உருவங்கள் கூட பூதாகாரமாக தோன்றி பயமுறுத்தியது . சிறிய அரங்கமாக இருந்ததால் திரையின் அளவும் சற்று சிறியதாக இருந்தால் நலம் எனத் தோன்றியது. படம் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் இடைவேளைக்குப் பின் பெரும்பாலான சீட்டுகள் காலியாகி விட்டன.
     
       பனிமலை என்ற கிராமத்தில் திடீரென்று பேச்சை இழக்க வைக்கும் வினோத நோய் பரவுகிறது. மருந்து கண்டுபிடிக்கும் வரை நோய் பரவாமல் இருக்க யாரும் பேசக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள்.
    பின்னர் தடுப்பூசி கண்டுபிடிக்கப் படுகிறது.இதனால் உயிருக்கு  ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம். பாதிக்கப் பட்டவர்கள் குணமடைந்தாலும்  பேச இயலாமல் போகவும் கொஞ்சம் வாய்ப்பு உள்ளது என்ற வினோத கற்பனையில் கதைக்களம் கட்டப்பட்டிருக்கிறது.

       பேசினால் எந்தப் பிரச்சனையும் தீர்த்துவிட முடியும் என்று நம்பும் நாயகன் மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மான் தமிழில் முதல் படமாம். கல்லூரிக் கன்னியர்களை ஈர்க்கும் அளவுக்கு வசீகரனாகத் தான் தெரிகிறார். உடைந்த பொருள்களை ஒட்டவைக்கும் க்ளூ வை விற்கும் விற்பனைப் பிரதிநிதிதான் துல்ஹர். Mr. Fix it.  என்ற க்ளூ வை தன் பேச்சுத் திறமையால் விற்றுவிடும் திறமைசாலி. தன் பேச்சால் உடைந்த மனங்களையும் ஓட்ட வைக்கிறார். அவரது பேச்சுத் திறமையை நிரூபிக்க இன்னும் அழுத்தமான காட்சிகளை வைத்து இருக்கலாம்.

       துள்ளல் நஸ்ரியாவை இந்தப் படத்தில் காணவில்லை. டாக்டரான நஸ்ரியா தந்தையின் இரண்டாம் மனைவியை ஏற்றுக் கொள்ளாமலும், நிச்சயிக்கப் பட்டவன் தன் மீது செலுத்தும் டாமினேஷேனை விரும்பாமலும்   மென்சோகத்தை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருவது நஸ்ரியா ரசிகர்களுக்கு ஏமாற்றமே. நாயகனின் அணுகுமுறையைக் கண்டு மனதைப் பறிகொடுப்பதை பல படங்களில் பார்த்தாகிவிட்டது. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு பெண்ணின் மனதை மாற்றி, காதலிக்கும் வேலையை இன்னும் எத்தனை படங்களில்தான் நம்ம ஹீரோக்கள் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. 

       படத்தின் இயக்குனர் அவ்வப்போது செய்தி வாசிப்பவராக வந்து ஊடகங்கள், அரசியல்வாதிகள், மக்கள், நடிகர்கள் என அனைவரையும் நையாண்டி  செய்வது  சூப்பர். அவர் செய்தி வாசிக்கும்போது கீழே எழுத்துப் பிழைகளுடன் செய்தி ஓடியது . உண்மையாகவே எழுத்துப் பிழையா அல்லது இயக்குனரின் கைவரிசையா என்று தெரியவில்லை

        ரோஜா புகழ் மதுபாலா எழுத்தாற்றல் உள்ளவர். அவர் கணவர் அதை புரிந்து கொள்ளவில்லை.  மதுபாலாவோ  குறைவாக மதிப்பெண் பெறும் தன் மகனை புரிந்து கொள்ளவில்லை.படிப்பில் வீக்கான பையனைப் பற்றிய கவலைப்படும் மதுபாலாவிடம் அவனது  ஓவியத் திறமையை நாயகன் உணரவைப்பது ஆறுதல் 

      துல்ஹரின் நண்பராக வரும் அர்ஜுன் பப்ளிமாஸ் முகத்தை வைத்துக்  பேச நினைப்பது  ஒன்றும் தன்னையும் அறியாமல் பேசுவது ஒன்றுமாக  கலக்குகிறார்.

       பேசாமல் பேரைக் கெடுத்துக் கொள்வது , பேசிப் பேரைக் கெடுத்துக் கொள்வது இரண்டுக்கும் நிஜ அரசியலில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. பாண்டியராஜன் உண்மையில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் அமர்க்களப் படுத்துகிறார். சுகாதார அமைச்சராக  வரும் அவர் ஏதோதோ பேசி(உளறி) தானே மாட்டிக்கொள்வதும் அதிலிருந்து தப்பிக்க தனக்கும் குரல்போய்விட்டது என்று நடிப்பதும் சுவாரசியம். பாண்டியராஜன் தான் வரும் எல்லாக் காட்சிகளிலும் சிரிக்க வைப்பதற்கு அவரது தி.மு. வும் கை கொடுக்கிறது. கண் கொடுக்கிறது.
     
       மகன் காதல் கல்யாணம் செய்து கொண்டான் என்பதற்காக அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்வது பொருத்தமானதாகத் தெரியாவிட்டாலும் வினு சக்கரவர்த்தியின் நடிப்பு கச்சிதம். வினுசக்கரவர்த்தி  கடைசியில் மனம் மாறினாலும், பேரன் முகத்தைப் பார்த்து மாறுவது போல் அல்லாமல் கதாநாயகனின் பேச்சின் மூலம் மாறுவதுபோல் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

        விஜய் டிவி ப்ராடக்டான ரோபோ சங்கருக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமையக் கூடும். இப்படத்தில் குடிகார சங்கத்தின் தலைவராக வந்து சிரிக்க வைக்கிறார். நல்ல திறமை படைத்தவர் ரோபோ. மிமிக்ரியை மட்டும் நம்பாமல் இன்னும் கிரியேட்டிவாக செயல் பட்டால் பெரிய  ரவுண்டு வர  வாய்ப்பு உள்ளது, நியூக்ளியர் ஸ்டாராக வரும் ஜான் விஜய் தன் முக பாவங்களால் சிரிக்க வைக்கிறார். சில நேரங்களில் பேசாமல் இருந்தாலே தானாக பிரச்சனை சரியாகி விடும். இப்படித்தான் குடிகார சங்கத்திற்கும் நியூக்ளியர் ஸ்டார் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை தீர்வதாகக் காட்டுவது ரசிக்க வைக்கிறது.

        அனாதை இல்லத்தில் வளர்ந்த நாயகன் அதை விட்டு வெளியேறிய பின்னும் அதற்கு உதவுகிறான். "உன் உதவி எல்லாருக்கும் தேவைன்னு ஏன் நினச்சிக்கிட்டு இருக்க" என்று  கேட்கும் அனாதை இல்லத் தலைவியின் கேள்வி பளிச். அனாதை இல்லத்திற்கு வேடந்தாங்கல் என்று பெயர் வைத்தது சாலப் பொருத்தம்.

       இடைவெளிக்குப் பிறகு அரை மணி நேரத்திற்கும் மேல் வசனம் ஏதுமின்றி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது புதுமையல்ல என்றாலும்   அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டதில்  இயக்குனரின் சாமர்த்தியம் தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும் பேச்சு தொடர்பாகவே அமைத்தற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

       குத்துப் பாட்டு இல்லை. முகம் சுளிக்கவைக்கும்  காட்சிகள் இல்லை. குடிகாரர்கள்  இருந்தாலும் குடிக்கும் காட்சி இல்லை. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைந்ததில் திருப்தியே. 

    **********************************************************************************



    வெள்ளி, 2 மே, 2014

    மூன்று தலைமுறை முட்டாள்கள் போதும் அமெரிக்க நீதிமன்ற அதிர்ச்சி தீர்ப்பு

        உலகின் ஒவ்வொருமூலையிலும் ஏதாவது கொடுமைகள் நடந்த வண்ணம்தான் உள்ளன. பெரும்பாலும் அவை அந்தந்த நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாகவே நடைபெறும். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்படும் சில கொடுமைகள் மனித தர்மத்துக்கு எதிரானவையாக அமைவதுண்டு. அதை நீங்களோ நானோ அநியாயம் என்று சொல்லலாம். ஆனால் சட்டம் அதை  நியாயப்படுத்தி விடுகிறது. அல்லது அவற்றை நியாயப் படுத்துவற்காகவே சட்டம் இயற்றப் படுகிறது. ஆதரவற்றவர்களாகவோ கேள்வி கேட்க யாரும் இல்லாதவர்களாக இருந்தால் போதும் சட்டம் சந்தோஷமாக தன் வேலை செய்து விடும். அமெரிக்காவின் இந்த செய்கை எனக்கு அநியாயமாகப் பட்டது. நியாயம் என்று வாதிடுவோரும் இருக்கலாம்.

        அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்களா. அதற்கு முன் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்  இந்த உலகில் அறிவாளிகள் என்பவர் யார்? முட்டாள்தனத்தை எதை வைத்து முடிவு செய்வது? முட்டாள்கள் இந்த உலகத்தில் வாழத் தகுதி அற்றவர்களா?
    அடித்துச் சொன்னது அமெரிக்க நீதி மன்றம்.ஆம்! என்று. இபோது அல்ல கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில். ஆம்  1927 இல் கேரி பக் என்ற அப்பாவி பெண்ணுக்கு எதிராக  இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது அமெரிக்க  உச்ச நீதிமன்றம்

     " கேரி பக்கும் அவரது சகோதரியும் கட்டாயமாக கருத்தடை செய்து கொள்ளவேண்டும் . இவர்கள் பரம்பரை முட்டாள்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன . இவர்களின் சந்ததிகளும் முட்டாள்களாகவே இருப்பார்கள் . அமெரிக்கா முட்டாள்கள் நிறைந்த சமூகமாக மாறிவிடக்கூடாது . மூன்று தலைமுறை முட்டாள்கள் போதும் " 

    “It is better for all the world, if instead of waiting to execute degenerate offspring for crime or to let them starve for their imbecility, society can prevent those who are manifestly unfit from continuing their kind…Three generations of imbeciles are enough.”

    அந்த தீர்ப்பில் இடம் பெற்ற வாசகங்கள்தான் இவை. இந்த தீர்ப்பை வழங்கிய  நீதிபதியின் பெயர்  ஆலிவர் வெண்டில் ஹோம்ஸ். இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது அல்ல. சட்டமே முரணானது என்று வேண்டுமானால் சொல்லலாம்
    Justice Oliver Wendell Holmes. தீர்ப்பு சொன்ன நாட்டாமை

      அமெரிக்காவின் விர்ஜீனியாவில் எம்மா பக் என்பவருக்கு பிறந்த துரதிர்ஷ்ட சாலிதான் இந்த கேரி பக். எம்மா பக் மதிநலம் குறைந்தவராக கருதப்பட்டு விர்ஜீனியாவில்  இது போன்றவர்களுக்கான குடியிருப்புக்கு மாற்றப்பட்டார். எம்மா பக் ஏழு வயது மனநிலையைக் கொண்டவர் என்று கூறப்பட்டது

        பின்னர் ஜான்-ஆலிஸ் டோப்ஸ் என்ற வளர்ப்பு பெற்றோரிடம்(Foster parent) கேரி பக்  ஒப்படைக்கப் பட்டார் ஆறாவது கிரேட் வரை பள்ளிக்கு சென்ற கேரி பின்னர் இக்குடும்பத்தின் வீட்டுவேலைகளை செய்து கொண்டு காலம் கழித்து வந்தார். அப்பாவி கேரி பக்கை தன் பாலியல் இச்சைக்கு பலியாக்கினார் இக்குடும்பத்தின் உறவினர் ஒருவர். அதன் காரணமாக தனது 17 வயதில்   ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கேரி. குழந்தை விவியனை வளர்ப்பதற்கு ஒப்புக்கொண்டு கேரிபக்கை விர்ஜீனிய காப்பகத்திற்கு அனுப்பிவிட்டது டாப்ஸ் குடும்பம்.
      
        இந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளரான டாக்டர் பி.எஸ். பிரிட்டி சிறந்த மன நல மருத்துவராம். அவர் கேரி பக்கின் நடவடிக்கைகளை உற்று நோக்கி ஒரு முடிவுக்கு வந்தார், கேரி பக்கும் மன நலமும் மன உறுதியும் அற்றவர். கேரின் தாயும் இங்கேயே இருந்தவர். அவரது மகளும் தக்க மூளை வளர்ச்சி அற்றவர் என்ற நிலையில், கேரி பெக் மீண்டும் பிள்ளைகள் பெற்றெடுத்தால் அவர்களும் இவர்களைப் போலவே முட்டாள்களாகவே இருப்பர் என்று முடிவெடுத்து ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.
    அப்படி வழக்கு தொடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா  என்று ஆச்சர்யம் உண்டாகலாம்.உண்டு என்று சொன்னது சட்டம்
    இது நடந்த சில ஆண்டுகளுக்கு (1924 ) விர்ஜினீயா சட்ட மன்றம் ஒரு புதிய கருத்தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி மனநலம் குறைந்தவர், மன உறுதி குறைந்தவர்,மூளை வளர்ச்சி குறைந்தவர்கள், தீவிர வலிப்பு நோய் உள்ளவர்கள்  போன்றவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என்று இச்சட்டம் கூறியது.நாட்டின் நலனுக்காக இச்சட்டம் இயற்றப்பட்டது என்று கூறப்பட்டது.

       இதை வைத்தே வழக்கு தொடரப்பட்டது. டாக்டர் பிரிட்டி இடையில் இறந்து விட்டதால் அவருக்குபதிலாக பெல் என்பவர் தொடர்ந்தார், அதனால் இந்த வழக்கு  கேரி vs பெல்  என்றே அழைக்கப் பட்டது.
    இந்த சட்டத்தின் மூலம் முதல் கட்டாய கருத்தடை செய்யப்பட்டது கேரிக்குத்தான். சிலகாலம் கழித்து காப்பகத்திலிருந்து விடுவிக்கப் பட்டார்.
       இவரது சகோதரிக்கும்  இதே போன்று கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. அப்பென்டிசிடிஸ் ஆப்பரேஷன் என்று அழைத்து செல்லப்பட்டு அவர் அறியாமலேயே கருத்தடை செய்து விட்டனர் . பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டார். குழந்தைப் பேறின்மைக்கான காரணத்தை 60 வயது வரை அறியாதவராகவே இருந்தது  கொடுமையின் உச்சம்.
        ஜியார்ஜியா மாநில பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பால் லோம்பார்டோ என்பவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு ஆவணங்களை ஆராய்ந்ததோடு இதில் தொடர்புடைய வழக்கறிஞர்கள், சாட்சிகள், மருத்துவர்கள், பொது மக்கள் அனைவரையும் சந்தித்து தகவல்களை திரட்டி ஒரு ஆய்வுரையை வெளியிட்டார். சட்டப்படி கட்டாய கருத்தடை செய்யப்பட வேண்டும் என்று வழங்கிய இந்த தீர்ப்பு மனித  நேயத்திற்கு எதிரானது, கொடுமையானது என்று உறுதியாக உரைத்தார். இவரின் முயற்சியால் வழங்கப்பட தீர்ப்பு தவறானது என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது..
       கேரி பக் இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அவரை சந்தித்தார் லொம்பார்டோ. அப்போது கேரிக்கு வயது 76. வீல் சேரில் அமர்ந்திருந்தார்  அவரிடம் நடந்ததெல்லாம் உண்மையா என்று கேட்டார். ஆம் என்று புன்னகைத்தார் கேரி. தான் பள்ளியில் பல கிரேடுகளில் தேறியதும் உண்மை என்று தெரிவித்தார். இப்போதும் நாளிதழ்கள் படிப்பதாகவும், குறுக்கெழுத்துப் புதிர்களை  விடுவிப்பதாகவும், ஏனைய பெண்களைப் போலவே வீட்டு வேலைகளை செய்து வந்ததையும் அறிய முடிந்ததாக குறிப்பிட்டார் லொம்பர்டோ.  பள்ளி ஆவணங்களையும் கேரி நண்பர்களயும் விசாரித்ததில் அவை உண்மை என்பதை உறுதி செய்தார்

        மேலும் லொம்பர்டோ கூறுகிறார். "அவரை ஒருவர் சந்திக்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் கேரி. இன்னமும் தான் அவமானப்பட்டதை உணர்வது முகத்தில் தெரிந்தது" என்று உருக்கமாக உரைக்கிறார். அவருடைய சகோதரியும்  இறந்து விட்டதாக கூறியுள்ளார் கேரி. 1983 இல் கேரியும் உயிர் நீத்தார்
      கேரி பக்கின் மகள் விவியனும் முட்டாள் என்றே கருதப்பட்டார். 6 மாத குழந்தையாக இருந்தபோதே இவரை ஆய்வு செய்து இவர் சராசரி அறிவுக்கு குறைவானவர் என்று சான்றளிக்கப்பட்டது..  ஆனால் அவ்வாறு சான்றளித்தவரே பின்னாளில் நான் இவரது அறிவை பரிசோதிக்க வில்லை என்று கூறியது குறிப்பிடத் தக்கது.விவியனின் பள்ளி முன்னேற்ற அறிக்கையை ஆய்வு செய்த லொம்பர்டொ அவர் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பதை அறிந்தார். உரிய வயது வந்ததும் இவருக்கும் கருத்தடை செய்யவெண்டும் என்றே முடிவு செய்திருந்தனர்.ஆனால் எதிர்பாராத நோய் தொற்று காரணமாக தன் எட்டாவது வயதில் மரணம் அடைந்தார் விவியன்.

        லொம்பார்டோவின் முயற்சி காரணமாக  கேரியை தகாத முறையில் நடத்தியதற்காக 2002 இல்விர்ஜீனியா சட்டமன்றம் மன்னிப்பு கோரி தீர்மானம் நிறைவேற்றியது. பரம்பரையையே அழித்தாகி விட்டது. இப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன்? ஒருவருக்கு செய்யும் மிகப் பெரிய தீங்கு என்ன? தடுக்க இயலாத நிலையில் உள்ள ஒருவரின் வம்சத்தை அழிப்பதுதான் இது போன்ற கொடும்பாவம் வேறு ஏதேனும் உண்டா?. 
      அமெரிக்காவில் அறிவாளிகளுக்கு மட்டும்தான் இடமா? கேரிபெக்கின் வாழ்க்கையைப் படித்த பின் என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டது. முட்டாள்களும்,மனவளர்ச்சி குறைந்தவர்களும், வாழ உரிமை இல்லாதவர்களா? குறையே இல்லாதவர்கள் நிறைந்த நாடாக மாற்றுவதற்கு இதுதான் வழியா?
        அமெரிக்காவின் அன்றைய கோரமுகத்தை அறிய நேர்கையில் இன்றும்  மனதில் இனம் புரியாத அச்சமும்  வேதனையும் ஏற்படுகிறது.அமெரிக்கா இது போன்ற விஷயத்தில்  மாறி இருக்கிறதா? அல்லது இன்னமும் முகமூடி அணிந்திருக்கிறதா ? இவற்றிற்கான விடை எனக்குத் தெரியவில்லை.  உங்களுக்கு?

    *********************************************************************************
    கொசுறு :
    1. இந்த தீர்ப்பு தவறானது என்று ஆய்ந்து வெளிப்படுத்தியமைக்கு 1500 டாலர்கள் பரிசாகப் பெற்றார் லொம்பார்டோ.
    2. கேரி பக்கின் கதை தொலைக்காட்சி நாடகமாக 1994இல் ஒளி பரப்பப் பட்டது.
    3.கேரி பக்கின் கருத்தடைக்குப் பின்னர் 1970 வரை அமெரிக்காவில் 65000 பேருக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
    ****************************************************************************************


    இதைப் படித்து விட்டீர்களா?

     

    வியாழன், 1 மே, 2014

    இன்றாவது நினைத்துப் பார்!

    இன்றாவது நினைத்துப் பார்!

    (மே தின சிறப்புக் கவிதை)
                 கட்டிடங்களை
                 பார்க்கும்போதெல்லாம்
                 அஸ்திவாரம் நினைவுக்கு
                 வந்ததுண்டா!
                 இன்றாவது நினைத்துப் பார்!

                 ஆடை அணியும் போதெல்லாம்
                 சரவணா ஸ்டோர்,ஜெயச்சந்திரன் .....
                 தவிர
                 அதை நெய்தவன்
                 நினைவு வந்திருக்கிறதா?
                 இன்றாவது நினைத்துப் பார்!

                 தீப்பெட்டிகளை
                 திறக்கும்போதும்
                 தீக்குச்சியின்
                 மருந்துத் தலைகளை
                 பார்க்கும் போதும்  
                 பாஸ்பரஸ் நெடியில்
                 பணி செய்யும்  
                 மழலைத்  தலைகள்
                 நினைவுக்கு  வருமா!
                 இன்றாவது நினைத்துப் பார்!

                 உன்
                 வியர்வை நாற்றம்
                 போக்கும்
                 வாசனை சோப்பை
                 பயன்படுத்தும்போதெல்லாம்
                 அதற்காக உழைத்தவனின்
                 வியர்வை வாசம்
                 உணர முடிகிறதா?
                 இன்றாவது நினைத்துப் பார்!

                 சாலையில் நடந்து
                 போகையிலும்
                 வாகனங்களில்
                 செல்கையிலும்
                 தகிக்கும் வெய்யிலில்
                 தாரை
                 உருக்கி ஊற்றியவனை
                 நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
                 இன்றாவது நினைத்துப் பார்!

                 நீ பசித்து உண்ணும்போதெல்லாம்
                 தன் பசியைப்
                 போக்க முடியாமல்
                 தடுமாறியும்
                 விடாப்பிடியாக விவசாயம்
                 செய்யும் உழவனை
                 நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
                 இன்றாவது நினைத்துப் பார்!

                 ஐந்து நிமிடம் தாமதமானாலும் 
                 அசிங்க வார்த்தைகளால் 
                 அர்ச்சிக்கும் நீ 
                 உன்னை 
                 பத்திரமாக கொண்டு சேர்த்ததற்காக 
                 நீண்ட நேரம் ஒட்டிய 
                 பேருந்து ஓட்டுனருக்கு 
                 என்றாவது 
                 நன்றி சொல்லி இருக்கிறாயா?
                 இன்றாவது நினைத்துப் பார்

                 நீ பாதுகாப்பாக வாழ்வதற்காக
                 எல்லையில் 
                 கடும் பணியிலும் கொடும் பாலையிலும்
                 உயிரையும் பொருட்படுத்தாது 
                 உழைக்கும் ராணுவ வீரனை 
                 நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
                 இன்றாவது நினைத்துப் பார். 

                 நீ கால்வைக்கத் தயங்கும் இடத்தில்
                 கை வைத்து சுத்தம் செய்யும்  
                 துப்புரவுத் தொழிலாளிக்கு
                 பேரம் பேசாமல் காசு கொடுத்திருக்கிறாயா?
                 இன்றாவது நினைத்துப் பார்!
     
                 அது போகட்டும்
                 சமையல் அறையில் இருந்து
                 வரும் உணவின் வாசம்
                 உன் நாசியைத் துளைக்கும்போதும்
                 நாவில் எச்சில்  வழிய
                 காத்திருக்கும்போதும்
                 உன் வீடடுப்  பெண்களின்
                 சலியா உழைப்பையாவது
                 சற்றே நினைத்திருப்பாயா?
                 இன்றாவது நினைத்துப்பார்!

                 உழைக்கும் மக்களால்தான் 
                 இந்த உலகம் இன்னும் 
                 பிழைத்திருக்கிறது 
                 என்பதை 
                 இன்றாவது நினைத்துப்பார்! 


    ********************************************************** 

    உழைத்துக் களைத்திருக்கும் தொழிலாளர்களே நீங்கள் சிரிப்பதற்காக 



    "இன்னைக்கு ரோட்டில ஒரு
    பிச்சைக்காரனைக்கூட 
    காணோமே?"

    "அவங்களுக்கெல்லாம் 
    உழைப்பாளர் தினம் 
    விடுமுறையாம்".





    ********************************************************************************************

    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

    நாளை : மூன்று தலைமுறை முட்டாள்கள் போதும். நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு 
    படிக்கத் தவறாதீர்