என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

அஞ்சிலே ஒன்றை வைத்தான்! அஞ்சிலே ஒன்றை விட்டான்!


தமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்
புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி
*************************************************************************************************************************


       நான் பிளஸ் 2 படிக்கும்பொழுது நடந்த சம்பவம். எனது தமிழாசிரியர் கம்ப ராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப கண்டிப்பானவர். பாடப் பகுதியை நடத்துவதற்கு முன்பாக அனுமன் துதியாக கம்பர் எழுதிய செய்யுளை விளக்கினார்.

          அஞ்சிலே ஒன்று பெற்றான்;
              அஞ்சிலே ஒன்றைத் தாவி
          அஞ்சிலே ஒன்றா றாக
              ஆரியர்க் காக ஏகி  
          அஞ்சிலே ஒன்று பெற்ற
              அணங்கை கண்டயலார் ஊரில் 
          அஞ்சிலே ஒன்றை வைத்தான்;
              அவன்நம்மை அளித்துக் காப்பான்

-
இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

      இந்தப் பாடலில் வரும் அஞ்சு என்பது பஞ்ச பூதங்களாகிய நீர்,நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு   ஆகியவற்றை குறிக்கும்.
       ஐந்து பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் புத்திரன் ஐந்து பூதங்களில்  ஒன்றாகிய நீரை     ( கடலை) தாண்டி ஐந்து பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் வழியே இலங்கைக்குச் சென்று ஐந்து பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மகளாகிய சீதையைக் கண்டபின் அந்த ஊரிலே ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்பை வைத்த அனுமான் நம்மைக் காப்பான் என்பது இந்தப் பாடலின் பொருள்.

      இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் சொல்லவந்தது இது இல்லை. இந்த செய்யுளை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தபோது நான்  ஜன்னல்  வழியே ஒருவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்
        
      இந்தப் பாடல் அமைப்பு எனக்குப் பிடித்து விட்டதால், நான் பார்த்ததை தொடர்பு படுத்தி  இதே போன்ற செய்யுள்(?) (தமிழாசிரியர்கள் மன்னிக்கவும்) ஒன்றை எழுதினேன். அதனால் வந்தது வினை.

       அஞ்சிலே ஒன்றை அருந்தி
           அச்சுகம் பெரிதென் றெண்ணி
       அஞ்சிலே ஒன்றை விற்ற
           அவதியை மறக்க ஒருவன்
       அஞ்சிலே ஒன்றில் மிதக்கும்
           அருஞ்சுகம் கிடைக்க சுருட்டில்
      அஞ்சிலே ஒன்றை வைத்தான்
            அஞ்சிலே ஒன்றை விட்டான்.

     இதை என் நண்பனிடம் காட்டினேன். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் விளக்கம் கேட்க நான் சொன்னேன்.

      "அஞ்சில  ஒண்ணான தண்ணியடிச்சி, அதுக்கு அடிமை ஆகி அஞ்சில ஒன்னான தன்னுடைய நிலத்தை விற்று அதனால கஷ்டப் பட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் அந்த  துன்பத்தை மறந்து அஞ்சிலே ஒன்றான ஆகாயத்தில் மிதக்கிற மாதிரி இருக்கறதுக்காக வாயிலே சுருட்டை வைத்து அஞ்சில ஒண்ணான நெருப்பை வைத்து, அஞ்சில ஒண்ணான புகையை விட்டான்." என்றேன்

        என் விளக்கத்தைக் கேட்ட என் நண்பன் சிரித்ததோடு என்கையில் இருந்த காகித்தை பிடுங்கி அதை எல்லா மாணவர்களுக்கும் காட்டிய தோடு தமிழாசிரியாரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டான்.

      அதைப் படித்தார் ஆசிரியர். நான் பயந்து கொண்டிருந்தேன்.  கடுமையான தண்டனைகளுக்கு பெயர் போன அவர் என் கவிதையை படித்ததும் சட்டென்று சிரித்துவிட்டார். அதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டி விளக்கம் சொன்னதோடு  முயற்சி செஞ்சா நல்ல கவிஞனா வரலாம்னு வேறு  பாராட்டினார்.

      (அதை உண்மைன்னு அப்படியே நம்பி அப்பப்ப கவிதை எழுதி பயமுறுத்தறது வழக்கமாய்டிச்சி.)
     

     

திங்கள், 26 டிசம்பர், 2011

தமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்


இதையும் படியுங்க
புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி

******************************************************************************************************************************

    
     
         எனது Blogg ன் இன்றைய தமிழ்மணம் தரவரிசை  982
                         அலெக்சா தர வரிசை                 1652971

(மொக்கையா கொஞ்சம் பதிவுகளை போட்டுட்டு  அரச மரத்தடிய சுத்தி வந்து அடி வயித்த தொட்டுப் பார்க்கிற மாதிரி தினமும் ரேங்க் முன்னேறிடும் நினைக்கறது நியாயமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழாம இல்ல.. இருந்தாலும் ..... )

    நான் எனது வலைப் பதிவை 10.09.2010 அன்று துவக்கினேன். தொடர்ந்து பதிவிட வேண்டும் என்றும் நான் முயற்சிக்கவில்லை. மற்ற வலைப்பதிவுகள்  பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. புதிய தலை முறை இதழில் வலைப் பதிவுகளைப் பற்றிய கட்டுரை ஒன்றின்மூலம் கேபிள் சங்கர் என்பவர் ஒரு முன்னணிப் பதிவர்களில் ஒருவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். நான் முதன் முதலில் நேரடியாக URL டைப் அடித்து  பார்த்த வலைப் பதிவு அவருடையதுதான். பிறகு ஒரு சில பதிவர்கள் பற்றியும் வலைப் பதிவுகளைப் பற்றியும், கொஞ்சம் அறிந்து  கொண்டேன். பின்னர் வலைப்பதிவுகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2011 வரை நான் இட்ட பதிவுகள் எட்டு  மட்டுமே. அதன் பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை  அதிகரித்தேன். அப்பொழுது திரட்டிகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலான் வலைப்பதிவுகளில் தமிழ் மத்தின் கருவிப்பட்டை இணைத்திருப்பதைக்  கண்டேன். நானும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைத்தேன். இதன் பிறகுதான் எனது வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இன்டலி,தமிழ் 10 ஆகிய திரட்டிகளிலும் எனது பதிவுகளை பகிரத் தொடங்கினேன்.
       எனது வலைப்பூவின் தர வரிசையை அறிந்துகொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்மணத்தின் தரவரிசையில் 2000 த்திற்கு  மேல்  இருந்தேன். படிப்படியாக 943 ஆக எனது தரவரிசை ஆனது. ஆனால் முன்பைவிட பார்வையாளர்கள் அதிகம்( அதிகம்னா இருவது முப்பது பேறு. ஹிஹி......) இருந்தும். தர வரிசையில் பின்னேற்றம் அடைந்தது. சில நேரங்களில் பதிவிடும்  நாட்களில் தரவரிசையில் பின்னோக்கியும்  பதிவிடாத நாட்களில் முன் நோக்கியும் செல்வது கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.

       முதலில் தமிழ்மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் எனது பதிவுகள் முதலில் பகிரப்படுவது தமிழ்மத்தின்  மூலமே.

       எனது நோக்கம் தமிழ்மணத்தின் தர வரிசையில் இரு நூறு இடங்களுக்குள் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே.

       ஆனால் கிரிக்கெட்டின் டக் வொர்த் லூயிஸ் முறை கூட எப்படின்னு கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் தமிழ் மணத்தின் தர வரிசை கணிப்பு ஒன்றும் புரியவில்லை .

            சில பதிவர்கள் அலெக்சா ரேங்கிங் பற்றி பெருமையாக சொன்னதால் எனது அலெக்சா தரவரிசையில் எந்த இடத்தில்  உள்ளது என்று பார்த்தேன். (உனக்கு இதெல்லாம் தேவையா?) .
        நான் சில வலைபதிவுகளின் தரவரிசையை அலக்சா மற்றும் தமிழ்மணம்  தர வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது. (இந்த வெட்டி வேலைக்கு பதிலா நல்ல பதிவு போட்டா  நாலுபேர் பாப்பாங்க).

      உலக அளவில் கணக்கிடப்படும் அலெக்சா  ரேங்கிங் கிற்கும் தமிழ்மணம் ரேங்கிங் கிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவற்றில் ஒருசிலவற்றை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.   

*************************************************************************************************************************


உங்க கமெண்ட்டால
                       கொஞ்சம் தட்டுங்க !
             நிறைய திட்டுங்க !
             தாராளமா குட்டுங்க! 

இதை படிச்சீங்களா

வெள்ளி, 23 டிசம்பர், 2011

புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?

இத படிச்சிட்டீங்களா 
 புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி 
காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன? 
*************************************************************      வடிவேலு ஒரு வாரமாக தன்னிடம் சொல்லப்பட்ட கணக்குப் புதிருக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போது  பார்த்திபன் அங்கு வருகிறார்.
     
     "வடிவேலு சார்!  தல முடிய இப்படி போட்டு ஏன் பிச்சுக்கிட்டிருக்கீங்க."
        "அடடா இவன் ஏன் இங்க வந்தான். நம்மள சின்னா பின்னமா ஆக்கிட்டில்ல போவான்."
         "எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்?"
         'நீ வாயால பொழச்சிக் கிட்டிருக்க! நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன்!.ஒரு அவசர வேல இருக்கு நான் வரேன்."
      "அப்படி என்னன்னே அவசரம். உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணட்டுமா? எனக்கும் இப்ப வேற வேல இல்ல."
   
     "எனக்கு நீ எப்படியெல்லாம் உதவி பண்ணி இருக்கன்னு இந்த உலகத்துக்கே தெரியும் ஆள விடு! என் மூளைக்கு வேல குடுத்திருக்கேன் அதை நான் முடிக்கணும்."
       
      "இல்லாத ஒண்ணுக்கு  எப்படிடா  வேலை குடுப்ப?"
    
     "உன் வேலயா காட்ட ஆரம்பிச்சிட்டயா? மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா?"
     
    "நம்பிக்கதாண்டா வாழ்கையில ரொம்ப முக்கியம்."
      
   "சரி போவட்டும்.என்னுடைய ஃபிரண்ட்ஸ் என்கிட்டே ஒரு கணக்க கேட்டு அதுக்கு விடைய நான்தான்னு சொல்ல  முடியும்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் என் மூளைய கசக்கிக்கிட்டுருக்கேன்.
      
   அதாவது நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும்.  பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்?
          
      "இந்தக் கேள்விக்கு  பதில் சொன்னா எனக்கு என்ன தருவ."
        
      "அவனுங்க என்ன குடுக்குறாங்களோ அதா உனக்கு அப்படியே தரேன்".
    
        "உனக்கு குடுக்கறத வாங்கறதுக்கு நான் ஒன்னும் கேன கிடையாது. பாக்கெட்ல எவ்வளோ வச்சிருக்க"
      
       "500 ரூபா இருக்கு"
    அதை பிடிங்கிக்கொண்டு வடிவேலுவுடைய காதில் கணக்குக்கு விடை சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
    
    "இவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஐநூறு ரூபா போச்சே. சரி இதுக்கு பதிலா நம்ம பசங்ககிட்ட 1000 ரூபாயா ஆட்டைய போட்டுடலாம்."
  
   நண்பர்களுக்கு  ஃபோன் செய்து வரவழைக்கிறார்.
    "அடேய், நீங்க சொன்ன கணக்குக்கு விடை கண்டுபிடிச்சிட்டண்டா! கண்டுபிடிச்சிட்டேன்."
   
  "உண்மையாவே நீங்களாண்ணே கண்டுபிடிச்சீங்க! யாராவது சொல்லி கொடுத்தாங்களா?"
     "அண்ணன் மூளைய  என்னன்னுடா நினைச்சீங்க! இப்ப சொல்றேன் விடை சொல்றேன் கேட்டுக்கோங்க.

            19 ஆப்பிள்                     95 ரூபா
            80  திராட்சை                  4  ரூபா 
             1  சாத்துக்கொடி           1  ரூபா 
          -------------------------------       ---------------------
          100 பழங்கள்                  100  ரூபா 
         ---------------------------------       -----------------------
     என்ன சரியா? சரி சரி எடுங்க எனக்கு குடுக்க வேண்டியத உடனே குடுங்க"
     " இப்படி எங்கள ஏமாத்திடீங்களேண்ணே!  நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல."
      " என்னடா? ஏன்டா இப்படி பாக்கறீங்க?"
      " போங்கண்ணே! உங்களை நம்பிதானே நாங்க பந்தயம் கட்டினோம்."
     "என்னடா சொல்றீங்க?
      "ஆமாண்ணே! இந்தக் கணக்குக்கு விடை நீங்க சொல்ல மாட்டீங்கன்னு  நாங்க அவன்கிட்ட பந்தயம் கட்டினோம்."
       "யார்ரா அவன்? 
       " அவன்தாண்ணே! உங்க ஃபிரெண்டு குண்டக்க மண்டக்க பார்த்திபன்தான். எங்களுக்கு நஷ்டத்த உண்டாக்கிட்டீங்களே. உங்களை நம்பிதானே பந்தயம் கட்டினோம். நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டீங்களே. உங்களை சும்மா விடமாட்டோம்."
       
     "ஓஹோ! அவன் வேலையா இது.  இந்த தடவையும் மோசம் பண்ணிட்டானே.  அவ்வ்..........  வேணாண்டா அண்ணன் தாங்க மாட்டேண்டா. விட்டுருங்கடா......................"

(இந்தப் புதிருக்கான விடையை கணித முறையில் கண்டு பிடிக்கும் வழியை அறிந்துகொள்ள  நீங்கள் விருப்பம் தெரிவித்தால்  அதனையும் ஒரு பதிவாகப் போடுகிறேன்)


திங்கள், 19 டிசம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி

இதையும் படிக்க 

************************************************************************************************************

பகுதி 6 - நிறைவு பகுதி  


   சில நாட்களுக்குப்பின் மீண்டும் இதுபோல் பதிவுகள் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் சிறு சிறு இடைவெளிகளையும் பார்த்து பார்த்து அடைத்து வைத்தும் திரும்பத் திரும்ப பாம்பின் அடையாளங்கள் இருப்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. எது ஆரம்பம் எது  முடிவு என்று தெரியாமல் குழப்பம்தான் நீடித்தது.  இதை வெளியே சொல்வதற்குக் கூட வெட்கமாக இருந்தது.
      சில நாட்களாகத்தான் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு விசாரித்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நெருங்கிய உறவினருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் சற்று தூரத்து உறவினர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு சென்றால் அங்கும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆளுக்கு   ஆள் ஆலோசனைகளும் பரிகாரங்களும் சொல்ல, என் மனைவி செல்லும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.
      ஜூனோவின் மரணம் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நிற்காமல் மேலும் மேலும் குழப்பங்களையும் பயத்தையும் ஏற்படுத்தி விட்டதே என்று சொல்லொணாத  வருத்தம்
அடைந்தேன்.
      இன்று இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். இன்று இரவு இந்த வீட்டில் இருக்கவேண்டாம். ஒரு நாள் மட்டும் அருகிலுள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கி விட்டு அடுத்த நாள் பார்க்கலாம். அன்றும் பாம்பின் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டை மாற்ற வேண்டும் அல்லது  வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுண்ணாம்பு அடித்துவிட்டு பிறகுதான் உள்ளே தங்க வேண்டும் என்ற என் திட்டத்துடன்  அன்றைய பகற்பொழுதைக் கழித்தோம். அன்று விடுமுறை தினம் ஆதலால் இது விஷயமாகவே நாள் முழுதும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.
      இரவு பத்து மணி அளவில் நாங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படத் தயாரானோம்.அதற்கு முன்பாக வழக்கம் போல் தரையில் உள்ள அனைத்தையும் எடுத்துவிட்டு மாவைப் பரப்பிவைத்தோம். உள்புறத்தில் மட்டுமல்லாது வெளிப்புற வாசல் பகுதியிலும் மாவு தூவினோம்.
ஒவ்வரு நாளும் இதுபோல் செய்வது எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறு வழியின்றி செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த வேலையை செய்து முடிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை எழுந்ததும் முதல் வேலையாக அதனை எடுத்து சுத்தப் படுத்தவேண்டும். ஆனாலும் என் மனைவி இதனை தினமும் சலிப்பின்றி செய்தது கஷ்டமாக இருந்தது.
புதியதாக எலி பிடிப்பதற்காக பசை தடவிய அட்டை விற்கிறார்கள். அதை எலி நடமாடுகிற இடங்களில் வைப்பார்கள். எலி அதன் மேலே ஓடும்போது பசையில் கால்கள் மாட்டிக் கொள்ளும்.  சக்திவாய்ந்த பசையாக இருப்பதால் அதிலிருந்து மீள்வது கடினம். தெரியாமல் நம் கைகள் பட்டால் கூட அதை எடுப்பது மிகவும் கடினம். அந்த எலிப்பொறி அட்டைகளை வாங்கி வீட்டினுள் ஆங்காங்கே வைத்தோம்.  
அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். இரவு அக்கா  வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை எதுவும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே படுக்கச் சென்றோம். அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. எப்பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தோம். விடிந்ததும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தோம். வாசலில் தூவி வைத்திருந்த மாவின்மீது எலி ஓடிய தடங்கள்(அதன் கால்களின் பதிவு நன்றாகத் தெரிந்தது) கண்ணில் பட்டதும் மாவு கன்னாபின்னா வென்று கலைந்திருந்ததும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

   பூட்டைத் திறந்து மெதுவாக எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தோம். இந்த முறையும் நாங்கள் கண்ட காட்சி எங்கள் கொஞ்ச நஞ்சம் இருந்த எங்கள்  தைரியத்தைக் குலைத்தது. 
 

தடுமாறிப் போன நாங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானோம். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் மெதுவாக எச்சரிக்கையுடன் ஆராய்ந்தேன். கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. பசை அட்டையிலும் ஒரு பூச்சிகூட அகப்படவில்லை.. வீட்டைக் காலி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்  
அப்போது மண்புழு போன்ற பூச்சி ஒன்று (மண்புழு அல்ல) பளபளவென்று சுருண்டு கிடந்தது. அது நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான். அது காதில் நுழைந்துவிடும் என்றும் சொல்வார்கள். சாதரணமாக அதனை கரப்பன் பூச்சிகளைப் போல துடைப்பம் போன்ற பொருட்களைக்கொண்டு அடித்து கொல்ல முடியாது. நெருப்பில் போட்டுத்தான் கொல்வார்கள். பாம்பு பயத்தில் இருந்த எங்களுக்கு இந்தப் பூச்சிவேறு இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.
ஒரு அட்டையை வைத்து அதை எடுத்து வெளியில்  வீசலாம் என்று எடுக்க முற்பட்டபோது அது வேகமாக அசைந்தது. அதை அடித்து விடலாம் என்று நினைத்தபோது அது பரப்பி வைத்திருந்த மாவின் பக்கமாக நகர்ந்தது. மாவின் மீது அது நகர ஆரம்பித்த போது தடங்கள் தெரியத் தொடங்கியது. 
 அது நகர்ந்து செல்லும் பாதையில் பாம்பின் அளவிற்கு அடையாளம் தெரிந்தது. சிறிது தூரம் நகர்ந்ததும் அது நின்றுவிட்டது. மீண்டும் தூண்டிவிட்டதும் இன்னும் கொஞ்ச தூரம்  நகர்ந்தது. 
 இந்தப் பூச்சியினால்தான் பாம்பு அடையாளங்கள் உருவானதோ? எங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அந்தப் பாம்பு போன்ற புழுவை இன்னொரு இடத்தில்  மாவின் மீது போட்டுப் பார்த்தோம். 
அந்தக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்

        இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பதில் கிடைத்ததுபோல் தோன்றியது. பல முறை சோதனை செய்து பார்த்தோம். கடைசியில் 
இத்தனை பரபரப்புக்கும் காரணம் இந்தப் பாம்பு போன்ற புழுவாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம். 
        ஆனாலும் இத்தனை நாள் அது எப்படி யார் கண்ணிலும் படாமல் இருந்தது?. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா? என்ற கேள்விகளுக் கெல்லாம் விடை கிடைக்கவில்லை. எனினும் இதுபோல் நடக்க வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இப்படித்தான் நடந்திருக்கும் என்று இதோடு ஒரு மாதப் பரபரப்பிற்கு முடிவு கட்டினோம். 
     செல்ல நாயான ஜூனோ வின்  புகைப்படங்களை தினந்தோறும் கணினியில் பார்த்து வருகிறோம். ஜூனோ வையும் மறக்க முடியாது அதன் மரணம்  ஏற்படுத்திய பரபரப்பையும் மறக்க முடியாது. 

       மாவின்மீது உருவான பாம்பின் தடங்கள் மறைந்து விட்டன. ஆனால்  எங்கள் நெஞ்சங்களில் ஏற்பட்ட தடங்களும், தடயங்களும் என்றும் அழியாது. 

 நன்றி!

வியாழன், 15 டிசம்பர், 2011

புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!

                       ( சும்மா ஒரு கற்பனைதான்)
   கொஞ்ச காலமாக கண்ணில் படாத வடிவேலுவை அவரது நண்பர்கள் சந்தித்து பேசுகிறார்கள்
         “அண்ணே! என்னன்னே உங்களை ரொம்ப நாளா காணோம்
        “அடேய்! நான் இங்க இருந்தா ஏடாகூடம் ஆயிடும்னு என்ன பணம் கட்டி அனுப்பிட்டாங்க. இப்பகூட நான் வந்தது தெரிஞ்சதும் தயவு செஞ்சு வெளிய வராதீங்கன்னு கெஞ்சி      கேட்டுக்கிட்டாங்க. அதனால உள்ளயே இருக்கேன்.  அது சரி நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க அதச் சொல்லுங்க

         “அண்ணே நாங்க ஒரு வாத்தியார்கிட்ட கடன் வாங்கிட்டோம். அவர் என்னடான்னா கடன திருப்பிகுடு இல்லன்னா நான் கேக்குற கணக்குக்கு  பதில் சொல்லுன்னு நச்சரிக்குராறு. சரியான பதில் சொல்லிட்டா  கடன தள்ளுபடி பண்றேன்னு வேற சொல்லிட்டாரு. கடனுக்குக் கூட பதில் சொல்லிடுவோம். ஆனா கணக்குக்கு எப்படிண்ணே பதில் சொல்லுவோம். நீங்க வேற ஊர்ல இல்லையா இதுக்கு பதில் சொல்ல வேற அறிவாளிய நாங்க எங்க போய் தேடறது.

    ஏய்! என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே! சரி கணக்கு என்னனு சொல்லு.அஞ்சு நிமிஷத்துல பதில் சொல்றேன்.
     உங்க கிட்ட நூறு ரூபா இருக்கு.
      அட போடா நூறு பைசாகூட இல்ல.
      அது தெரியாதா எங்களுக்கு. நூறு ரூபா இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும்.  பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்?
      ஏண்டா? வாத்தியார் ரொம்ப வயசானவரோ?
       எப்படிண்ணே கண்டிபிடிச்சீங்க! நீங்க உண்மையிலேயே பெரிய அறிவாளிதான்!
      இல்ல பழங்களோட விலைய வச்சித்தான். சரி, இதுக்கு சரியான விடை சொன்னா எனக்கு என்ன தருவீங்க
      நீங்க என்ன வேணுமோ கேளுங்கன்னே. தரோம்.
      அப்பா சரி,முதல்ல என்ன கேக்கலாம்னு யோசிக்கறன். அப்புறம் கணக்குக்கு விடைய கண்டுபிடிக்கிறேன். இப்போ நீங்க போய்ட்டு வாங்க.
      நம்மள அறிவாளின்னு வேற சொல்லிட்டு போய்ட்டாங்களே. எப்படி விடை கண்டு  பிடிக்கறது. பாப்போம். யார் கைல கால்ல விழுந்தாவது  கண்டு பிடிச்சிடுவோமில்ல. 

விடையைக் காண: புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?

*************************************************************
இதையும் படியுங்க உங்க கருத்த சொல்லுங்க

செவ்வாய், 13 டிசம்பர், 2011

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?


(எங்கேயோ எப்போதோ படித்தது)


    ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்
    “காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

     அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான    பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது  சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால்  வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாதுஎன்றார்  

       இளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.
      
      ஞானி கேட்டார், இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா?
     
           “இல்லை. இதைவிட அழகான  பூக்கள் இருந்தன. பின்னால் அழகான  பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை என்றான் இளைஞன்

       ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் இதுதான் காதல்

           மேலும்  இப்பொழுது இன்னொருபுறம்  புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து  "அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதேஎன்றார்.
      
      இம்முறையும் இளைஞன் அந்த    பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.

         “இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா?மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.

           “இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.

   “இதுதான் கல்யாணம் என்றார் ஞானி புன்னகையுடன். 
*************************************************************
இதையும் படியுங்க!
தமிழா! எழுவாய்! 
மகா கவி பாரதி! நிலையாய் நிற்பவன்  

திங்கள், 12 டிசம்பர், 2011

தமிழா! எழுவாய்!


தமிழர்களின் 
வாழ்வுதனை 
சூது கவ்வும் 

தமிழன் வெல்ல  
விரைவாய்  எழுவாய்!

சும்மா இருந்தால் 
பயனிலை!

 காத்திருக்கிறது 
பல செயப்படுபொருள்கள்!

வா!
தமிழனின் 
தனி இலக்கணத்தை 
பக்கத்து 
மாநிலத்தவருக்கு  
 பயிற்றுவிப்போம்! 

 ***************************************************************************
இதையும் படியுங்க:ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்

 ( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி)


          எட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்
          ஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்

          தோன்றிற்  புகழொடு தோன்றிய தமிழ்மகன்
          சான்றோர் பலரும் போற்றிய கலைமகன்

          முறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்
          நறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்

          தெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்
          நெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்

          பெண்மை பெரிதெனப்  போற்றிச் சொன்னவன்
          உண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்

          தீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்
          நாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்

          காக்கை குருவிகள் நம்மினம் என்றவன்
          கழுதையைக் கூட கட்டி அணைத்தவன்

          சாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்
          வேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்

          தேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்
          ஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்

          கற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்
          அற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்

          சிறுமை கண்டு சீறியும்  எழுந்தவன்
          வறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்

          கண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்
          கண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்

          பாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்
          பதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்

          நதிநீர்  இணைக்க முதல் குரல் கொடுத்தவன்
          அதிக முள்ளதை  பங்கிடப் பகர்ந்தவன்

          இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
          இறந்த பின்னும் நிலையாய்  நிற்பவன்  


***************************************************************************************

மேகம் எனக்கொரு கவிதை தரும்மேகங்கள்
வெண்ணிலவு 
காயவைத்த 
கைக்குட்டைகள்  மேகங்கள்
   மழை நூல்
நூற்கும்
 பஞ்சுகள்


மேகங்கள் 
விண்கடலில்
மிதக்கும் 
வெண்படகுகள்

               

மேகங்கள்
இடி இசையை
உருவாக்கும்
இசைக்கருவிகள்

                      
  மேகங்கள் 
  மின்னல் 
  உற்பத்தி செய்யும்
  மின்னாலைகள் 

    மேகங்கள்
       கருணையின் 
     உருவகங்கள்
                                                                                                                                                
 மேகங்கள்
  வெய்யில் 
 தடுக்கும் 
        வெண்கொற்றக் 
     கொடைகள்  

                                                                
 மேகங்கள்
 காற்றின் திசையில்
 பறக்கும்
 நூலில்லா காற்றாடிகள்
         
                                                            
   மேகங்கள்    
நினைத்த
உருவமாய்
காட்சி அளிக்கும்
அற்புதங்கள் 
                                                                        


  மேகங்கள் 
  பூமிப் பந்தின் 
  பறக்கும் 
  போர்வைகள்

மேகங்கள் 
கன்னியரின் 
கவர்ச்சிமிகு 
கார் குழல்கள்

மேகங்கள் 
கவிஞர்களின் 
கற்பனைக்கு 
தீனிபோடும் 
கருப்பொருள்கள்


       மேகங்கள் காதலுக்கு 
தூது போகும் 
 வெண்புறாக்கள்

மேகங்கள் 
மழைத் துளிகள் 
சுமந்து செல்லும் 
விமானங்கள் 

 மேகங்கள் 
  மலை முகடுகளைப் 
  முட்டிப்பார்க்கும் 
  வெண்பட்டுப்   
  பறவைகள் 
                     
                     
                          வாழ்க மேகங்கள்!
  வளர்க மேகங்கள்!