என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 19 டிசம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி

இதையும் படிக்க 

************************************************************************************************************

பகுதி 6 - நிறைவு பகுதி  


   சில நாட்களுக்குப்பின் மீண்டும் இதுபோல் பதிவுகள் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் சிறு சிறு இடைவெளிகளையும் பார்த்து பார்த்து அடைத்து வைத்தும் திரும்பத் திரும்ப பாம்பின் அடையாளங்கள் இருப்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. எது ஆரம்பம் எது  முடிவு என்று தெரியாமல் குழப்பம்தான் நீடித்தது.  இதை வெளியே சொல்வதற்குக் கூட வெட்கமாக இருந்தது.
      சில நாட்களாகத்தான் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு விசாரித்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நெருங்கிய உறவினருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் சற்று தூரத்து உறவினர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு சென்றால் அங்கும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆளுக்கு   ஆள் ஆலோசனைகளும் பரிகாரங்களும் சொல்ல, என் மனைவி செல்லும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.
      ஜூனோவின் மரணம் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நிற்காமல் மேலும் மேலும் குழப்பங்களையும் பயத்தையும் ஏற்படுத்தி விட்டதே என்று சொல்லொணாத  வருத்தம்
அடைந்தேன்.
      இன்று இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். இன்று இரவு இந்த வீட்டில் இருக்கவேண்டாம். ஒரு நாள் மட்டும் அருகிலுள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கி விட்டு அடுத்த நாள் பார்க்கலாம். அன்றும் பாம்பின் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டை மாற்ற வேண்டும் அல்லது  வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுண்ணாம்பு அடித்துவிட்டு பிறகுதான் உள்ளே தங்க வேண்டும் என்ற என் திட்டத்துடன்  அன்றைய பகற்பொழுதைக் கழித்தோம். அன்று விடுமுறை தினம் ஆதலால் இது விஷயமாகவே நாள் முழுதும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.
      இரவு பத்து மணி அளவில் நாங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படத் தயாரானோம்.அதற்கு முன்பாக வழக்கம் போல் தரையில் உள்ள அனைத்தையும் எடுத்துவிட்டு மாவைப் பரப்பிவைத்தோம். உள்புறத்தில் மட்டுமல்லாது வெளிப்புற வாசல் பகுதியிலும் மாவு தூவினோம்.
ஒவ்வரு நாளும் இதுபோல் செய்வது எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறு வழியின்றி செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த வேலையை செய்து முடிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை எழுந்ததும் முதல் வேலையாக அதனை எடுத்து சுத்தப் படுத்தவேண்டும். ஆனாலும் என் மனைவி இதனை தினமும் சலிப்பின்றி செய்தது கஷ்டமாக இருந்தது.
புதியதாக எலி பிடிப்பதற்காக பசை தடவிய அட்டை விற்கிறார்கள். அதை எலி நடமாடுகிற இடங்களில் வைப்பார்கள். எலி அதன் மேலே ஓடும்போது பசையில் கால்கள் மாட்டிக் கொள்ளும்.  சக்திவாய்ந்த பசையாக இருப்பதால் அதிலிருந்து மீள்வது கடினம். தெரியாமல் நம் கைகள் பட்டால் கூட அதை எடுப்பது மிகவும் கடினம். அந்த எலிப்பொறி அட்டைகளை வாங்கி வீட்டினுள் ஆங்காங்கே வைத்தோம்.  
அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். இரவு அக்கா  வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை எதுவும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே படுக்கச் சென்றோம். அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. எப்பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தோம். விடிந்ததும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தோம். வாசலில் தூவி வைத்திருந்த மாவின்மீது எலி ஓடிய தடங்கள்(அதன் கால்களின் பதிவு நன்றாகத் தெரிந்தது) கண்ணில் பட்டதும் மாவு கன்னாபின்னா வென்று கலைந்திருந்ததும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

   பூட்டைத் திறந்து மெதுவாக எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தோம். இந்த முறையும் நாங்கள் கண்ட காட்சி எங்கள் கொஞ்ச நஞ்சம் இருந்த எங்கள்  தைரியத்தைக் குலைத்தது. 
 

தடுமாறிப் போன நாங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானோம். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் மெதுவாக எச்சரிக்கையுடன் ஆராய்ந்தேன். கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. பசை அட்டையிலும் ஒரு பூச்சிகூட அகப்படவில்லை.. வீட்டைக் காலி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்  
அப்போது மண்புழு போன்ற பூச்சி ஒன்று (மண்புழு அல்ல) பளபளவென்று சுருண்டு கிடந்தது. அது நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான். அது காதில் நுழைந்துவிடும் என்றும் சொல்வார்கள். சாதரணமாக அதனை கரப்பன் பூச்சிகளைப் போல துடைப்பம் போன்ற பொருட்களைக்கொண்டு அடித்து கொல்ல முடியாது. நெருப்பில் போட்டுத்தான் கொல்வார்கள். பாம்பு பயத்தில் இருந்த எங்களுக்கு இந்தப் பூச்சிவேறு இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.
ஒரு அட்டையை வைத்து அதை எடுத்து வெளியில்  வீசலாம் என்று எடுக்க முற்பட்டபோது அது வேகமாக அசைந்தது. அதை அடித்து விடலாம் என்று நினைத்தபோது அது பரப்பி வைத்திருந்த மாவின் பக்கமாக நகர்ந்தது. மாவின் மீது அது நகர ஆரம்பித்த போது தடங்கள் தெரியத் தொடங்கியது. 
 அது நகர்ந்து செல்லும் பாதையில் பாம்பின் அளவிற்கு அடையாளம் தெரிந்தது. சிறிது தூரம் நகர்ந்ததும் அது நின்றுவிட்டது. மீண்டும் தூண்டிவிட்டதும் இன்னும் கொஞ்ச தூரம்  நகர்ந்தது. 
 இந்தப் பூச்சியினால்தான் பாம்பு அடையாளங்கள் உருவானதோ? எங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அந்தப் பாம்பு போன்ற புழுவை இன்னொரு இடத்தில்  மாவின் மீது போட்டுப் பார்த்தோம். 
அந்தக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்

        இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பதில் கிடைத்ததுபோல் தோன்றியது. பல முறை சோதனை செய்து பார்த்தோம். கடைசியில் 
இத்தனை பரபரப்புக்கும் காரணம் இந்தப் பாம்பு போன்ற புழுவாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம். 
        ஆனாலும் இத்தனை நாள் அது எப்படி யார் கண்ணிலும் படாமல் இருந்தது?. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா? என்ற கேள்விகளுக் கெல்லாம் விடை கிடைக்கவில்லை. எனினும் இதுபோல் நடக்க வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இப்படித்தான் நடந்திருக்கும் என்று இதோடு ஒரு மாதப் பரபரப்பிற்கு முடிவு கட்டினோம். 
     செல்ல நாயான ஜூனோ வின்  புகைப்படங்களை தினந்தோறும் கணினியில் பார்த்து வருகிறோம். ஜூனோ வையும் மறக்க முடியாது அதன் மரணம்  ஏற்படுத்திய பரபரப்பையும் மறக்க முடியாது. 

       மாவின்மீது உருவான பாம்பின் தடங்கள் மறைந்து விட்டன. ஆனால்  எங்கள் நெஞ்சங்களில் ஏற்பட்ட தடங்களும், தடயங்களும் என்றும் அழியாது. 

 நன்றி!

5 கருத்துகள்:

 1. முழுவதையும் படித்தேன். நெஞ்சம் கனக்கவே செய்கிறது. ஜீனோ சுஜாதாவின் இனிய யந்திரா மற்றும் மீண்டும் ஜீனோவின் நாயகன். உங்கள் வீடு நாயகனாகவும் இருந்திருக்கிறான். கனத்த இதயத்துடன் சீனு

  பதிலளிநீக்கு
 2. துப்பறிந்து கடைசியில் பரபரப்பாக கண்டுபிடித்து நிம்மதி வந்ததே !

  பதிலளிநீக்கு
 3. தங்கள் நாய்க்கு தாங்கள் சூட்டியுள்ள பெயர் தங்களை சுஜாதாவின் ரசிகராக அடையாளாம் காட்டுகிறது. :(

  பதிலளிநீக்கு
 4. ;முழுவதும் இன்று தான் படித்தேன். எப்படி தான் அங்கு ஒரு மாதமும் இருந்தீர்களோ? தினம் அரிசிமாவு தூவி,துடைத்து நினைத்தாலே மலைப்பாக இருக்கே. கடைசியில் பாம்பு இல்லை என்றதும் தான் மூச்சே வந்தது.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895