என்னை கவனிப்பவர்கள்

வீட்டுக்குள் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுக்குள் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி

இதையும் படிக்க 

************************************************************************************************************

பகுதி 6 - நிறைவு பகுதி  


   சில நாட்களுக்குப்பின் மீண்டும் இதுபோல் பதிவுகள் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் சிறு சிறு இடைவெளிகளையும் பார்த்து பார்த்து அடைத்து வைத்தும் திரும்பத் திரும்ப பாம்பின் அடையாளங்கள் இருப்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. எது ஆரம்பம் எது  முடிவு என்று தெரியாமல் குழப்பம்தான் நீடித்தது.  இதை வெளியே சொல்வதற்குக் கூட வெட்கமாக இருந்தது.
      சில நாட்களாகத்தான் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு விசாரித்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நெருங்கிய உறவினருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் சற்று தூரத்து உறவினர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு சென்றால் அங்கும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆளுக்கு   ஆள் ஆலோசனைகளும் பரிகாரங்களும் சொல்ல, என் மனைவி செல்லும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.
      ஜூனோவின் மரணம் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நிற்காமல் மேலும் மேலும் குழப்பங்களையும் பயத்தையும் ஏற்படுத்தி விட்டதே என்று சொல்லொணாத  வருத்தம்
அடைந்தேன்.
      இன்று இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். இன்று இரவு இந்த வீட்டில் இருக்கவேண்டாம். ஒரு நாள் மட்டும் அருகிலுள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கி விட்டு அடுத்த நாள் பார்க்கலாம். அன்றும் பாம்பின் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டை மாற்ற வேண்டும் அல்லது  வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுண்ணாம்பு அடித்துவிட்டு பிறகுதான் உள்ளே தங்க வேண்டும் என்ற என் திட்டத்துடன்  அன்றைய பகற்பொழுதைக் கழித்தோம். அன்று விடுமுறை தினம் ஆதலால் இது விஷயமாகவே நாள் முழுதும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.
      இரவு பத்து மணி அளவில் நாங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படத் தயாரானோம்.அதற்கு முன்பாக வழக்கம் போல் தரையில் உள்ள அனைத்தையும் எடுத்துவிட்டு மாவைப் பரப்பிவைத்தோம். உள்புறத்தில் மட்டுமல்லாது வெளிப்புற வாசல் பகுதியிலும் மாவு தூவினோம்.
ஒவ்வரு நாளும் இதுபோல் செய்வது எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறு வழியின்றி செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த வேலையை செய்து முடிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை எழுந்ததும் முதல் வேலையாக அதனை எடுத்து சுத்தப் படுத்தவேண்டும். ஆனாலும் என் மனைவி இதனை தினமும் சலிப்பின்றி செய்தது கஷ்டமாக இருந்தது.
புதியதாக எலி பிடிப்பதற்காக பசை தடவிய அட்டை விற்கிறார்கள். அதை எலி நடமாடுகிற இடங்களில் வைப்பார்கள். எலி அதன் மேலே ஓடும்போது பசையில் கால்கள் மாட்டிக் கொள்ளும்.  சக்திவாய்ந்த பசையாக இருப்பதால் அதிலிருந்து மீள்வது கடினம். தெரியாமல் நம் கைகள் பட்டால் கூட அதை எடுப்பது மிகவும் கடினம். அந்த எலிப்பொறி அட்டைகளை வாங்கி வீட்டினுள் ஆங்காங்கே வைத்தோம்.  
அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். இரவு அக்கா  வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை எதுவும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே படுக்கச் சென்றோம். அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. எப்பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தோம். விடிந்ததும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தோம். வாசலில் தூவி வைத்திருந்த மாவின்மீது எலி ஓடிய தடங்கள்(அதன் கால்களின் பதிவு நன்றாகத் தெரிந்தது) கண்ணில் பட்டதும் மாவு கன்னாபின்னா வென்று கலைந்திருந்ததும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

   பூட்டைத் திறந்து மெதுவாக எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தோம். இந்த முறையும் நாங்கள் கண்ட காட்சி எங்கள் கொஞ்ச நஞ்சம் இருந்த எங்கள்  தைரியத்தைக் குலைத்தது. 
 

தடுமாறிப் போன நாங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானோம். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் மெதுவாக எச்சரிக்கையுடன் ஆராய்ந்தேன். கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. பசை அட்டையிலும் ஒரு பூச்சிகூட அகப்படவில்லை.. வீட்டைக் காலி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்  
அப்போது மண்புழு போன்ற பூச்சி ஒன்று (மண்புழு அல்ல) பளபளவென்று சுருண்டு கிடந்தது. அது நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான். அது காதில் நுழைந்துவிடும் என்றும் சொல்வார்கள். சாதரணமாக அதனை கரப்பன் பூச்சிகளைப் போல துடைப்பம் போன்ற பொருட்களைக்கொண்டு அடித்து கொல்ல முடியாது. நெருப்பில் போட்டுத்தான் கொல்வார்கள். பாம்பு பயத்தில் இருந்த எங்களுக்கு இந்தப் பூச்சிவேறு இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.
ஒரு அட்டையை வைத்து அதை எடுத்து வெளியில்  வீசலாம் என்று எடுக்க முற்பட்டபோது அது வேகமாக அசைந்தது. அதை அடித்து விடலாம் என்று நினைத்தபோது அது பரப்பி வைத்திருந்த மாவின் பக்கமாக நகர்ந்தது. மாவின் மீது அது நகர ஆரம்பித்த போது தடங்கள் தெரியத் தொடங்கியது. 
 அது நகர்ந்து செல்லும் பாதையில் பாம்பின் அளவிற்கு அடையாளம் தெரிந்தது. சிறிது தூரம் நகர்ந்ததும் அது நின்றுவிட்டது. மீண்டும் தூண்டிவிட்டதும் இன்னும் கொஞ்ச தூரம்  நகர்ந்தது. 
 இந்தப் பூச்சியினால்தான் பாம்பு அடையாளங்கள் உருவானதோ? எங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அந்தப் பாம்பு போன்ற புழுவை இன்னொரு இடத்தில்  மாவின் மீது போட்டுப் பார்த்தோம். 
அந்தக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்

        இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பதில் கிடைத்ததுபோல் தோன்றியது. பல முறை சோதனை செய்து பார்த்தோம். கடைசியில் 
இத்தனை பரபரப்புக்கும் காரணம் இந்தப் பாம்பு போன்ற புழுவாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம். 
        ஆனாலும் இத்தனை நாள் அது எப்படி யார் கண்ணிலும் படாமல் இருந்தது?. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா? என்ற கேள்விகளுக் கெல்லாம் விடை கிடைக்கவில்லை. எனினும் இதுபோல் நடக்க வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இப்படித்தான் நடந்திருக்கும் என்று இதோடு ஒரு மாதப் பரபரப்பிற்கு முடிவு கட்டினோம். 
     செல்ல நாயான ஜூனோ வின்  புகைப்படங்களை தினந்தோறும் கணினியில் பார்த்து வருகிறோம். ஜூனோ வையும் மறக்க முடியாது அதன் மரணம்  ஏற்படுத்திய பரபரப்பையும் மறக்க முடியாது. 

       மாவின்மீது உருவான பாம்பின் தடங்கள் மறைந்து விட்டன. ஆனால்  எங்கள் நெஞ்சங்களில் ஏற்பட்ட தடங்களும், தடயங்களும் என்றும் அழியாது. 

 நன்றி!

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு! பகுதி 5


 **********************************************************************************************************
 பகுதி 5 

   மீண்டும் தடங்கள் பதிந்திருந்தது எங்களுக்கு  பெருத்த கவலையை உண்டாகியது. பலவிதமான குழப்பங்களுக்கு உள்ளானோம். வீட்டைக்  காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்குச் சென்று விடலாமோ என்றும் யோசனை செய்தோம். மீண்டும் ஒரு முறை பாம்பு பிடிப்பவரை அழைத்து ஒருமுறை பார்த்துவிட்டு இறுதி முடிவு எடுக்கலாம்  என்று சிலர் கூறினர். ஏற்கனவே பாம்பு பிடிக்க வந்தவன் மேல் கொண்ட அவநம்பிக்கை காரணமாக உண்மையான இருளர் ஒருவரை பல்லாவரத்தில் இருந்து வரவழைத்தோம்.

     அவர் நிதானமாக துணிமணிகள்,புத்தகங்கள்,பெட்டிகள்,டப்பாக்கள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. நிச்சயமாக உள்ளே பாம்பு இருக்காது என்றார்.

     கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் அந்தப் பாம்பின் மீது எங்களுக்கு கோபமாக வந்தது. பாம்பு வரவில்லை என்றால் தடம் மட்டும் எப்படி வந்தது. அந்தத் தடங்கள் வேறு பூச்சிகள் ஏதேனும் சென்ற தடங்களாக இருக்குமோ? என்று கேட்டோம். இது போல் தடங்களை வேறு பூச்சிகள் உருவாக்கும் என்று அவரால் உறுதியாக கூற இயலவில்லை.

     அப்போது நான் வெளியில் இருந்த ஒரு அட்டைப் பூச்சியை எடுத்து வந்து பரப்பிவைத்த மாவின்மீது விட்டேன். அது மாவின்மீது எந்த அடையாளமும் ஏற்படுத்தாமல்  சென்றது. அதுபோல மரவட்டைப் பூச்சியும் எந்த தடங்களையும் உருவாக்கவில்லை. ஜூனோ வைக் கொன்ற அந்தப் பாம்பை விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

  (அழகாக தூங்கிக் கொண்டிருக்கும் ஜூனோ)

     இரவுமுழுவதும் விழித்திருந்து பார்க்கலாமா? அல்லது வீடியோ கேமரா வைத்து பார்க்கலாமா என்றெல்லாம் யோசனை செய்தோம். மனைவியையும் மகனையும் அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துவிட்டு நான் மற்றும் அந்த பாம்பு பிடிப்பவர் இருவரும் இரவு முழுவதும் விழித்திருந்து கண்காணிக்கலாமா என்றும் சிந்தித்தோம். வேறு சில காரணங்களுக்காக அதனை கைவிட்டோம்.

            மனதை திடப் படுத்திக்கொண்டு இரவு முழுவதும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து பார்த்து விடுவது முடிவெடுத்தேன்.
     
   இதற்கிடையில் கதவு ஜன்னல்களில் உள்ள மிகச்சிறிய இடைவெளிகளையும் சரி செய்து விட்டோம். இரவு தூங்குவதற்கு முன்
வழக்கம்போல் ஹாலில் மாவைப் பரப்பி வைத்து  உப்புக் கலவையை அறைகளின் வாசற்படி, ஜன்னல் மற்றும் இதர இடங்களிலும் தூவினோம்.

     இரவு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து பார்த்தேன். காலைவரை அடையாளம் எதுவும் இல்லை. சற்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம்.    அடுத்த சில வாரங்களுக்கு பாம்பு வந்ததற்கான எந்த தடமும் இல்லாததால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனாலும் தினமும் கண்காணித்தலைத் தொடர்ந்தோம். எங்கள் மன உளைச்சல் சிறிது சிறிதாக குறைந்து  கொண்டே வந்தது. எப்படி இருப்பினும் ஜூனோ வைப் பற்றி தினமும் பேசிக்கொண்டிருப்போம். அது எங்களுக்கு திருப்தியைத் தந்தது. 
       கொஞ்சம் உரத்த குரலில் திட்டிவிட்டால் அவ்வளவுதான்; மாடிப்      படியில் சோகமாக அமர்ந்துகொள்ளும். நாமாகக் கூப்பிடும் வரை வராது. ஜூனோ! ஓடி வா! ஓடி வா! என்றால் போதும்; அதற்காகவே காத்திருந்ததுபோல் கட கட வென ஓடி வந்து மடிமீது அமர்ந்து கொள்ளும் அழகே தனி. அதன் நினைவுகள் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

     ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. திடீரென மீண்டும் ஒரு நாள்  அதிகாலை கீழ்க்கண்டவாறு நாங்கள் கண்ட காட்சி எங்கள் சில நாள் நிம்மதியைக் குலைத்தது. 

         
       இதைப் பார்த்ததும் அடுத்த நாள் இரவு இந்த வீட்டில் தங்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டு வேறு என்னவெல்லாம் செய்யலாம் யோசித்துக் கொண்டிருந்தோம்.

                                   ( அடுத்த பகுதியில் நிறைவுறும் )


ஞாயிறு, 27 நவம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி4



செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி1
செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி2 
செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி3 
ஜூனோ எங்கள் செல்லமே  
**********************************************************************************
பகுதி 4
      வளைந்து நெளிந்து சென்ற பாம்பின் தடம், பரப்பி வைத்த மாவில் தெரிந்தால்  அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? முன்தினம்   இரவு தரைப்பகுதியில் இருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அலமாரிகளின்  கீழ்ப் பகுதியையும்  காலி செய்து வைத்திருந்தோம்.
     அந்த அடையாளம் வந்த பாம்பின் தடமா? அல்லது வெளியே சென்ற பாம்பின் தடமா? என்று அறியாமல் குழம்பினோம். படத்தில் பாருங்கள்! எது தொடக்கம் எது முடிவு என்று அறிய முடிகிறதா? பாம்பு பிடிப்பவரை அழைத்து வீடு முழுவதும் தேடிப்  பார்த்துவிட முடிவு செய்தோம். சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணைக்கு போன் செய்து பாம்பு பிடிப்பவரை வரவழைத்தோம்.
     வந்தவர் பாம்பை கண்ணால் பார்த்தீர்களா  என்று கேட்டார். நாங்கள் பார்க்கவில்லை என்று சொன்னோம். பார்த்திருந்தால் எளிதில் பிடிக்கலாம் என்று சொல்லிவிட்டு தரையில் தெரிந்த பதிவை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு கட்டுவிரியன் பாம்புத் தடம் மாதிரி தெரிகிறது என்றார். 

   (ஜூனோ)
       
     எங்கள் செல்ல நாயான ஜூனோ  வீட்டுக்குள் இறந்ததையும் சொன்னோம். எலி, தவளை இருந்தால் அதை பிடிப்பதற்காக பாம்பு வந்திருக்கலாம்.  எலியோ அல்லது தவளையோ வந்த வழியே பாம்பு வந்திருக்கக் கூடும். ஓணான் அணிலோடு விளயாடுவதுபோல பாம்பைப்  பிடிக்க ஜூனோ   முனைந்திருக்கலாம்.அப்போது பாம்பு கடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார். அதை உணராத ஜூனோ மெதுவாக விஷம் ஏறி தூங்கும்போதே இறந்திருக்கலாம்.
     பேசிக்கொண்டே முதலில் வீட்டை வெளிப்புறமாக சுற்றி வந்தார். காம்பவுண்ட் ஓரங்களில் பல இடங்களில் பெருச்சாளி பொந்துகள் காணப்பட்டன. இதுபோன்ற இடங்கள் பாம்பு வசிப்பதற்கு மிகவும் வசதியானது. இங்கே பாம்பு நிச்சயமாக இருக்கும் என்றார்.
     வீட்டின் வெளிப்புறத்தில் பாம்பு நடமாட்டம் இருக்கிறதென்பது எங்களுக்கு நன்றாகத்  தெரியும். வீட்டுக்குள் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள் என்றோம்.
    பீரோ கட்டில், பெட்டிகள் இவற்றையெல்லாம் நகர்த்திவிட்டு மூலை முடுக்குகளை எல்லாம் பார்த்துவிட்டு பாம்பு உள்ளே இல்லை அது வெளியே போயிருக்கும் என்றார்.
   வாசல் மற்றும் தோட்டத்துக் கதவின் கீழ்ப் பகுதியில் சிறிய இடைவெளிகள் இருந்ததை சுட்டிகாட்டி பாம்பு வருவதற்கும் போவதற்கும்   இது போதுமானது என்று பயமுறுத்தியதோடு ஜன்னல்களைப் பார்த்துவிட்டு அதன் வழியாக சில பாம்புகள் ஏறிவரும் என்றும் கிலி ஏற்றினார்.
    பின்னர் உப்பு மிளகு போன்ற சில வாங்கி அவற்றை ஒன்றாகக் கலந்து பல இடங்களில்  தூவிவிட்டார். இந்த வாசனைக்கு எந்த பாம்பும் வராது என்று சொல்லிவிட்டு கணிசமான தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு நடையைக் கட்டினார்.
          அன்று இரவு அவர் சொன்னது போல உப்பு உள்ளிட்ட கலவை  பொருட்களை வாசல்படி ஜன்னல் மற்றும் எந்த இடங்களில் வழியாக பாம்பு நுழைந்திருக்கலாம் என்று நினத்தோமா அங்கெல்லாம் தூவி வைத்தோம், அது மட்டுமல்லாமல் வழக்கம் போல வீட்டிற்குள்ளும் மாவைத் தூவி வைத்தோம்.
     அடுத்த நாள் எந்தத் தடமும் இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றோம்.
      ஆனால் மறுநாளும் எங்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
கீழ்க்கண்டவாறு மீண்டும் தடம் பதிந்திருந்தது.
                              (தொடரும்)
 அடுத்த பகுதிக்கு செல்ல 
பகுதி  5

ஞாயிறு, 13 நவம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி3


     பயம் வந்ததற்குக் காரணம் ஜூனோ பாம்பு கடித்துத்தான் இறந்திருக்கும் என்பதுதான். ஏனென்றால் எங்கள் வீட்டைச் சுற்றி நீண்ட காலமாகவே பாம்புகள் நடமாட்டம் உண்டு. பக்கத்தில் புதர்கள் நிறைந்த காலி மனை இருப்பதால் பாம்புகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவே அது  இருக்கிறது. எங்கள் வீட்டிலும்  மரங்கள் செடிகள் உண்டு. எங்கள் வீட்டுக்குள்ளும் ஓரிருமுறை பாம்பு வந்திருக்கிறது. நாங்கள் அதை வெளியே துரத்தியிருக்கிறோம். பெரும்பாலும் அடிப்பதில்லை. பாம்புகள் எங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
    
     ஜூனோ பாம்பால்தான் இறந்திருக்கும் என்று எல்லோரும் அடித்துச் சொன்னார்கள். பாம்பு நாயைக் கடித்ததால்தான் நீங்கள் தப்பித்தீர்கள். உங்களுக்குவந்த ஆபத்தை ஜூனோ ஏற்றுக்கொண்டது என்றும் கூறினர். எங்களுக்கு ஜூனோவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் வருத்தம் மேலும் கூடியது. 

     ஜூனோ இல்லாத வீடு வெறுமையாக காட்சியளித்தது. ஒரு குழந்தையைப் போல  அது செய்த  குறும்புகள் மறக்கமுடியாதவை. ஓராண்டே எங்களுடன் இருந்தபோதும் நீண்ட காலம் எங்களுடன் இருந்ததுபோலவே உணர்ந்தோம். அதன் விளையாட்டுக்கள் பல சமயங்களில் எங்கள் மன அழுத்தத்தை குறைத்தது. 

     ஒருவேளை அன்று ஜூனோவை வீட்டுக்குள் விடாமல் இருந்திருந்தால் அது உயிர் பிழைத்திருக்குமோ. அதன் இறப்புக்கு நாங்களே காரணமாகி  விட்டோமா? சிறிது குற்ற உணர்வும் எங்களுக்கு ஏற்பட்டது.  

     இவ்வாறெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கையில், ‘ஜூனோவை கடித்துவிட்டு பாம்பு வெளியே போகாமல் உள்ளேயே இருக்கப் போகிறது. நன்றாகப் பாருங்கள்’ என்று ஒருவர் பீதியைக் கிளப்பிவிட்டுப் போனார்.

     நாங்கள் ஜூனோ இறந்து கிடந்த அறையில் தேடிப் பார்த்தோம். எதுவும் கண்ணில் படவில்லை. பாம்பு நிச்சயமாக வெளியே போயிருக்கும் என்று சொன்னேன். ஆனால் என் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

      பாம்பு பெரும்பாலும் ராத்திரியில்தான் வெளியே வரும். பகலில் வீட்டுக்குள்ளேயே எங்காவது ஒளிந்திருக்கும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தோம். இரவு நேரம் ஆகிவிட்டதால் பாம்பு பிடிப்பவர்கள் யாரும் கிடைக்கவில்லை. அப்போது என் மனைவியின் யோசனை ஒன்றை செயல் படுத்த முடிவு  செய்தோம்.
         
          அந்த யோசனை நாங்கள் படுத்திருக்கும் அறையைத் தவிர மீதி அறைகளில் அரிசி  மாவை பரப்பி வைப்பது. தடயங்கள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும் அல்லவா?

        அவ்வாறே செய்தோம். அடுத்த நாள் காலையில் பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
          அந்தக் காட்சியின் புகைப்படம்தான் இது.
 
இதே போல் இன்னொரு இடத்திலும் இருந்தது.                          
                        (தொடரும்)