என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி3


     பயம் வந்ததற்குக் காரணம் ஜூனோ பாம்பு கடித்துத்தான் இறந்திருக்கும் என்பதுதான். ஏனென்றால் எங்கள் வீட்டைச் சுற்றி நீண்ட காலமாகவே பாம்புகள் நடமாட்டம் உண்டு. பக்கத்தில் புதர்கள் நிறைந்த காலி மனை இருப்பதால் பாம்புகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவே அது  இருக்கிறது. எங்கள் வீட்டிலும்  மரங்கள் செடிகள் உண்டு. எங்கள் வீட்டுக்குள்ளும் ஓரிருமுறை பாம்பு வந்திருக்கிறது. நாங்கள் அதை வெளியே துரத்தியிருக்கிறோம். பெரும்பாலும் அடிப்பதில்லை. பாம்புகள் எங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
    
     ஜூனோ பாம்பால்தான் இறந்திருக்கும் என்று எல்லோரும் அடித்துச் சொன்னார்கள். பாம்பு நாயைக் கடித்ததால்தான் நீங்கள் தப்பித்தீர்கள். உங்களுக்குவந்த ஆபத்தை ஜூனோ ஏற்றுக்கொண்டது என்றும் கூறினர். எங்களுக்கு ஜூனோவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் வருத்தம் மேலும் கூடியது. 

     ஜூனோ இல்லாத வீடு வெறுமையாக காட்சியளித்தது. ஒரு குழந்தையைப் போல  அது செய்த  குறும்புகள் மறக்கமுடியாதவை. ஓராண்டே எங்களுடன் இருந்தபோதும் நீண்ட காலம் எங்களுடன் இருந்ததுபோலவே உணர்ந்தோம். அதன் விளையாட்டுக்கள் பல சமயங்களில் எங்கள் மன அழுத்தத்தை குறைத்தது. 

     ஒருவேளை அன்று ஜூனோவை வீட்டுக்குள் விடாமல் இருந்திருந்தால் அது உயிர் பிழைத்திருக்குமோ. அதன் இறப்புக்கு நாங்களே காரணமாகி  விட்டோமா? சிறிது குற்ற உணர்வும் எங்களுக்கு ஏற்பட்டது.  

     இவ்வாறெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கையில், ஜூனோவை கடித்துவிட்டு பாம்பு வெளியே போகாமல் உள்ளேயே இருக்கப் போகிறது. நன்றாகப் பாருங்கள் என்று ஒருவர் பீதியைக் கிளப்பிவிட்டுப் போனார்.

     நாங்கள் ஜூனோ இறந்து கிடந்த அறையில் தேடிப் பார்த்தோம். எதுவும் கண்ணில் படவில்லை. பாம்பு நிச்சயமாக வெளியே போயிருக்கும் என்று சொன்னேன். ஆனால் என் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

      பாம்பு பெரும்பாலும் ராத்திரியில்தான் வெளியே வரும். பகலில் வீட்டுக்குள்ளேயே எங்காவது ஒளிந்திருக்கும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தோம். இரவு நேரம் ஆகிவிட்டதால் பாம்பு பிடிப்பவர்கள் யாரும் கிடைக்கவில்லை. அப்போது என் மனைவியின் யோசனை ஒன்றை செயல் படுத்த முடிவு  செய்தோம்.
         
          அந்த யோசனை நாங்கள் படுத்திருக்கும் அறையைத் தவிர மீதி அறைகளில் அரிசி  மாவை பரப்பி வைப்பது. தடயங்கள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும் அல்லவா?

        அவ்வாறே செய்தோம். அடுத்த நாள் காலையில் பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
          அந்தக் காட்சியின் புகைப்படம்தான் இது.
 
இதே போல் இன்னொரு இடத்திலும் இருந்தது.                          
                        (தொடரும்)


1 கருத்து:

  1. சார் எனக்கொரு சந்தேகம், ஒரு தடயவியல் அறிஞர் மாதிரி செயல்பட்டிருக்கீங்களே,நாய் இறந்த உடனேயே பதிவு எழுதுனும்னு முடிவு பன்னீட்டீங்களா? புகைப்படத்தை பார்த்து விட்டுத்தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895