செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி1
செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி2
செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி3
ஜூனோ எங்கள் செல்லமே
**********************************************************************************
பகுதி 4
வளைந்து நெளிந்து சென்ற பாம்பின் தடம், பரப்பி வைத்த மாவில் தெரிந்தால் அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? முன்தினம் இரவு தரைப்பகுதியில் இருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அலமாரிகளின் கீழ்ப் பகுதியையும் காலி செய்து வைத்திருந்தோம்.
அந்த அடையாளம் வந்த பாம்பின் தடமா? அல்லது வெளியே சென்ற பாம்பின் தடமா? என்று அறியாமல் குழம்பினோம். படத்தில் பாருங்கள்! எது தொடக்கம் எது முடிவு என்று அறிய முடிகிறதா? பாம்பு பிடிப்பவரை அழைத்து வீடு முழுவதும் தேடிப் பார்த்துவிட முடிவு செய்தோம். சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணைக்கு போன் செய்து பாம்பு பிடிப்பவரை வரவழைத்தோம்.
வந்தவர் பாம்பை கண்ணால் பார்த்தீர்களா என்று கேட்டார். நாங்கள் பார்க்கவில்லை என்று சொன்னோம். பார்த்திருந்தால் எளிதில் பிடிக்கலாம் என்று சொல்லிவிட்டு தரையில் தெரிந்த பதிவை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு கட்டுவிரியன் பாம்புத் தடம் மாதிரி தெரிகிறது என்றார்.
(ஜூனோ)
எங்கள் செல்ல நாயான ஜூனோ வீட்டுக்குள் இறந்ததையும் சொன்னோம். எலி, தவளை இருந்தால் அதை பிடிப்பதற்காக பாம்பு வந்திருக்கலாம். எலியோ அல்லது தவளையோ வந்த வழியே பாம்பு வந்திருக்கக் கூடும். ஓணான் அணிலோடு விளயாடுவதுபோல பாம்பைப் பிடிக்க ஜூனோ முனைந்திருக்கலாம்.அப்போது பாம்பு கடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார். அதை உணராத ஜூனோ மெதுவாக விஷம் ஏறி தூங்கும்போதே இறந்திருக்கலாம்.
பேசிக்கொண்டே முதலில் வீட்டை வெளிப்புறமாக சுற்றி வந்தார். காம்பவுண்ட் ஓரங்களில் பல இடங்களில் பெருச்சாளி பொந்துகள் காணப்பட்டன. இதுபோன்ற இடங்கள் பாம்பு வசிப்பதற்கு மிகவும் வசதியானது. இங்கே பாம்பு நிச்சயமாக இருக்கும் என்றார்.
வீட்டின் வெளிப்புறத்தில் பாம்பு நடமாட்டம் இருக்கிறதென்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். வீட்டுக்குள் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள் என்றோம்.
பீரோ கட்டில், பெட்டிகள் இவற்றையெல்லாம் நகர்த்திவிட்டு மூலை முடுக்குகளை எல்லாம் பார்த்துவிட்டு பாம்பு உள்ளே இல்லை அது வெளியே போயிருக்கும் என்றார்.
வாசல் மற்றும் தோட்டத்துக் கதவின் கீழ்ப் பகுதியில் சிறிய இடைவெளிகள் இருந்ததை சுட்டிகாட்டி பாம்பு வருவதற்கும் போவதற்கும் இது போதுமானது என்று பயமுறுத்தியதோடு ஜன்னல்களைப் பார்த்துவிட்டு அதன் வழியாக சில பாம்புகள் ஏறிவரும் என்றும் கிலி ஏற்றினார்.
பின்னர் உப்பு மிளகு போன்ற சில வாங்கி அவற்றை ஒன்றாகக் கலந்து பல இடங்களில் தூவிவிட்டார். இந்த வாசனைக்கு எந்த பாம்பும் வராது என்று சொல்லிவிட்டு கணிசமான தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு நடையைக் கட்டினார்.
அன்று இரவு அவர் சொன்னது போல உப்பு உள்ளிட்ட கலவை பொருட்களை வாசல்படி ஜன்னல் மற்றும் எந்த இடங்களில் வழியாக பாம்பு நுழைந்திருக்கலாம் என்று நினத்தோமா அங்கெல்லாம் தூவி வைத்தோம், அது மட்டுமல்லாமல் வழக்கம் போல வீட்டிற்குள்ளும் மாவைத் தூவி வைத்தோம்.
அடுத்த நாள் எந்தத் தடமும் இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றோம்.
ஆனால் மறுநாளும் எங்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
கீழ்க்கண்டவாறு மீண்டும் தடம் பதிந்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895