என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 31 அக்டோபர், 2011

காதில் விழுந்த கவிதை

அசுத்தமும் 
சோறுபோடும் 
துப்புரவுத் தொழிலாளி 

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!


ஜூனோ! இதுதான் எங்கள் செல்ல நாயின் பெயர். ஒரு வயதே நிறைந்த அது திடீரென ஒரு நாள் எதிர்பாராவிதமாக இறந்துபோய் எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன் இறப்பு  ஒருமாதத்திற்கும் மேலாக ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது. நாய் இறந்ததில் அப்படி என்ன பரபரப்பு இருக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் படித்தால் உங்களுக்கே தெரியும். எங்கிருந்தோ வந்து எங்களிடம் ஒட்டிக்கொண்ட ஜூனோ  எங்கள் அனைவரையும் அதன்  குறும்புகளாலும்  அன்பாலும் கவர்ந்துவிட்டது. அதன் பிரிவால் எங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை எல்லாம் சேர்த்து இரங்கல் கவிதையாக ஏற்கனவே  (ஜூனோ! எங்கள் செல்லமே! )பதிவிட்டிருந்தேன். அதை படித்தால் அதன் மீது நாங்கள் வைத்திருந்த அன்பு உங்களுக்குப் புரியும்.
     ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் வெளியே போர்டிகோவில் படுத்துகொள்ளும் ஜூனோ அன்று வெளியே செல்ல மறுத்தது. உள்ளே தான் இருப்பேன் என்று அடம்பிடித்தது. இன்று ஒரு நாள் ஹாலில் படுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்.
     ஜூனோவுக்கு ஹாலில் T.V. டேபிளுக்கு கீழே அதற்கென உள்ள பெட்ஷீட் போட்டு படுக்கவைத்தோம். நான், என் மனைவி, மகன்  மூவரும் A/C அறையில் படுத்துக் கொண்டோம். அது எங்கள் அறைக்குள் வருவதற்காக நாங்கள் படுத்திருந்த அறையின் கதவைப் பிராண்டியது. கதவு திறக்கப் படாததால் அதன் இடத்திலேயே போய்  படுத்துக்கொண்டது.

     விடியற்காலை 3.30 மணிக்கு நான் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தேன். பாத்ரூம் போய்விட்டு வரும்போது கவனித்தேன். ஜூனோ அது படுத்திருந்த இடத்தில் காணவில்லை. இது போன்ற சமயங்களில் ஜூனோ இன்னொரு அறையில் கட்டில்மேல் உள்ள மெத்தையில் படுத்து உறங்குது வழக்கம். அந்த அறைக்குச் சென்று பார்த்தேன். நான் நினைத்ததுபோல் கட்டிலில் மெத்தைமீது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. திரும்பிய நான் திடீரென்று சந்தேகம் கொண்டு மீண்டும் சென்று பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். ஜூனோ அசைவற்றுக் கிடப்பதுபோல் தோன்றியது.
ஜூனோ! ஜூனோ! என்று கூப்பிட்டேன். கண் திறக்கவில்லை. மெதுவாக   தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. நான் அதிர்ச்சி அடைந்து எனது மனைவியை அழைத்தேன். மனைவியும் மகனும் ஓடி வந்தனர். அவர்களும் நான் சொல்வதை நம்பாமல் ஜூனோவை எழுப்பிப் பார்த்தனர். எந்தப் பயனும் இல்லை. தூங்குவது போலவே காட்சியளித்த ஜூனோவை அது படுத்திருந்த நிலையை மாற்றிப்போட்டுப் பார்த்தபோதுதான் அது நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு  இறந்து கிடந்ததை உணர்ந்தோம்  . மேலும் அதன் நாக்கு  மட்டும் நீல நிறத்தில் மாறியிருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம்.
                                             

சனி, 29 அக்டோபர், 2011

மாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)


இன்று மாய சதுரம் அமைக்கும் எளிய வழியைப் பார்க்கலாம்.
     1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி மாய சதுரம் அமைத்தால் அதன் கூடுதல் 15 வரும். முதலில் பின் வருமாறு 1 முதல் 9 வரை உள்ள எண்களை பின்வருமாறு எழுதிக்கொள்ளவும்.
      1      2     3
      4      5     6
      7      8     9   



வியாழன், 27 அக்டோபர், 2011

மாயச்சதுரம்

 
           நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் அடிக்கடி வரும்.  எந்தப் பக்கம் கூட்டினாலும் ஒரே எண் வரும்படி மாய சதுரம் அமைக்க போட்டி அறிவிப்பார்கள். 9 கட்டங்கள் கொண்ட அந்த சதுரத்தில் ஒரு சில எண்கள்     மட்டும் இருக்கும் மீதிக் கட்டங்களை காலியாக விட்டுவிடுவார்கள். அதை சரியானபடி நிரப்பி அனுப்பினால் ரேடியோ பரிசளிப்பதாக உறுதி அளிப்பார்கள். மிக எளிமையான அந்த மாய சதுரத்திற்கு நான் மட்டுமே விடை கண்டுபிடித்தது போல ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்புவேன். நீங்கள் 60 ரூபாய்  மணி    ஆர்டர்      அனுப்பினால் போதும் உங்களுக்கு ரேடியோ பார்சலில் வீடு தேடிவரும்  என்று கடிதம் அனுப்புவார்கள். ஒருமுறை வீட்டில் அடம்பிடித்து ரூபாய் வாங்கிக்கொண்டு போஸ்ட் ஆபீஸ் போனால் அந்தப் போஸ்ட் மாஸ்டர்,ரூபாய் அனுப்பினால் ரேடியோ வராது: பார்சலில் செங்கல்தான் வரும் என்று  பயமுறுத்தியதோடு என்னைத் திட்டியும் அனுப்பினார். (அவர் எனது அப்பாவுக்கு தெரிந்தவர் )
   எந்தக் காலமாக இருந்தாலும் ஆசையைத் தூண்டிவிட்டு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது ஈமெயில் ,  S.M.S மூலம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
     அதைவிடுவோம்.எனக்கு மாய சதுரம் அமைப்பதிலே ஈடுபாடு உண்டு
கீழ்க்கண்ட மாய சதுரம் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.1 முதல் 9 எண்கள் வரை பயன் படுத்தப்பட்டுள்ளது.பயன் படுத்திய எண்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இது போன்று வேறு கூடுதல் வரும்படி மாய சதுரங்கள்  அமைக்கமுடியும்.16 மற்றும்  25  கட்டங்களைக்கொண்ட   மாய சதுரங்களையும் அமைக்க முடியும். எவ்வாறு மாய சதுரங்களை உருவாக்குவது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன், 
மாயச்சதுரம் அமைக்கலாம் மாயச்சதுரம் எந்தப் பக்கம் கூட்டினாலும் 15 வருவதைக் காணலாம் 

2

7

6

9

5

1

4

3

8
***********************************************************************************************************************************   இங்கே கிளிக் செய்யவும்         

புதன், 26 அக்டோபர், 2011

ரகசியம்!

அது எப்படி?
உன் முகம் மட்டும் 
நிலவு போல்!
நீ 
மஞ்சளுக்கு பதிலாக 
நிலவைப் 
பயன் படுத்துகிறாயோ!

ஒ!
இப்போதல்லவா தெரிகிறது 
நிலவு தேய்வதன் 
ரகசியம்!


ஞாயிறு, 23 அக்டோபர், 2011

வெற்றிக்கு வழி

முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாகக் கொள்


நம்பிக்கைச் செடியை
நட்டு வை


உழைப்பு என்ற
நீரை ஊற்று


நாணயம் என்ற
நல்லுரம் இடு


உறுதி என்ற
வேலி போடு


எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று


பொறுமையாய்
காவல் இரு


பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!


ஆம்
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில்

சனி, 22 அக்டோபர், 2011

ஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா?-வைரமுத்து


கவிப்பேரரசு வைரமுத்து (Vairamuthu) தன் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மூலமாக நம் நெஞ்சங்களைக் கவர்ந்தவர். திரைப் பாடலுக்கு புதிய பரிமாணம் தந்தவர். புதுக் கவிதைகளை பிரபலப் படுத்தியவர். அனால் அவர் எழுதிய முதல் கவிதை நூல் வைகறை மேகங்கள் முழுவதும் மரபுக் கவிதைகளால் ஆனது. அருமையான சொல்லாட்சியும் பொருளழகும் கொண்ட கவிதைகளாக அவை அமைந்திருப்பதைக் காணலாம். இந்நூலுக்கு கண்ணதாசன் அணிந்துரை எழுதியுள்ளது கவனித்தக்கது.
        இதில் குண்டூசி என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகும். ஒரு சாதாரண  குண்டூசியைப் பார்த்த வைரமுத்துவின கவிச்சிறகு எப்படி பறக்கிறது பாருங்கள்? இதோ அந்தக் கவிதை  
குண்டூசி

என்னைப்போல் இளைத்துப் போனாய்
                             இணைப்புக்குத் தேவை யானாய்
திண்ணைப் போர் புரிந்துகொண்டே
                            சேல்களை ஆட்டும் பெண்ணின்
கண்ணைப் போல் கூர்மையான
                            கழுத்திலாத் தொப்பிக்காரன்
மின்னல்போல் மறைந்து துன்பம்
                           விளைக்கும் நீ இரும்புக்குச்சி

குண்டூசி என்ற பேரைக்
கொடுத்தது சரியா? காமம்
கொண்டாடும் நடிகை வீட்டை
                           கண்ணகி இல்லம் என்று
சொன்னாலும் சொல்லலாம். ஆனால்
                            சுருங்கிய ஊசி உன்னை
குண்டூசி என்றே இங்கே
                            கூறுதல் தவறே? ஆமாம்!


கருப்பாணி பெற்ற பிள்ளை
                            காகிதக் களத்துக் கத்தி
ஒருசிலர் பல் வீட்டிற்கே
                            ஒட்டடை போக்கும் குச்சி
செருப்பாணி போல தைத்துச்
                           சிறுதாளை எல்லாம் ஒன்றாய்
உருவாக்கும் உன்னை தூய
                            ஒற்றுமைச் சின்னம் என்பேன்


விடையிலாக் கேள்வியாக்கி
                            விலையிலாச்  சரக்காய் என்னைப்
படைத்தவன் பாவி; உன்னைப்
                            படைத்தவன் ஞானி; இங்கே
உடையினை அணிந்துகொண்ட
                            உயிர்ப்பிண மனிதர்க் கென்றும்
எடையிலே குறைந்து போனாய்
                           இயல்பிலே உயர்ந்து போனாய்

வெறுப்பினால் உன்னை தூர
                            வீசுவார் ஆமாம்! அந்தக்
கிறுக்கற்குத் தேடும் போது
                           கிடைக்காமல் ஆட வைப்பாய்!
உறுதியாய் உரைப்பேன் இங்கே
                            உனக்குள தன் மானத்தில்
அறுபதில்  ஒரு பங்கேனும்
                            ஆமிந்த  மனிதர்க் கில்லை 

திங்கள், 17 அக்டோபர், 2011

கவியரசு கண்ணதாசன்





நீ!
பட்டி தொட்டிகளும்
அறிந்த பாமரக் கவிஞன்

திரைப் படத்திற்காக  
அழகிய வார்த்தைகளை
கோர்த்து பாடலாக்கியவன்

அதில் வாழ்க்கையும்
இணைத்துப் பாடமாக்கியவன்

நாத்திக நதியில்
நீந்தத் தொடங்கிய
நீ
ஆத்திகக் கடலுக்குள்
மூழ்கி முத்துக்கள் எடுத்து
ஆரமாக்கி  அழகு பார்த்தது
அதியசம்தான்!

நிலையாமையை தத்துவங்களை
நிலைக்கும் வண்ணம்-
இன்றும் நினைக்கும் வண்ணம்
சொன்னவன் நீ?

காதல் ரசம் சொட்டும்
பாடல்களையும் படைப்பாய்!
பக்தி மணம் கமழும்  
பாடல்களையும் சமைப்பாய்!   
  
ஒரு கோப்பையில்
குடியிருந்தபோதும்
உன்  கவிதைகள்
ஒருபோதும்  
தள்ளாடியதில்லை

 கலைத் துறையில்
பல அவதாரங்கள்
எடுத்தவன் நீ?

அரசியல் உன்னை
அரவணைக்கவில்லை?

ஆனாலும்
எந்த அரசியல் தலைவரும்
உன்னை வெறுத்ததில்லை

காவியத் தாயின்  தலைமகனே!
உன் நினைவு நாளில்
உன் வரிகளையே
உனக்கு  காணிக்கை ஆக்குகிறோம்

நீ நிரந்தரமானவன் அழிவதில்லை!
எந்த நிலையிலும்
உனக்கு மரணம் இல்லை!  
 

சனி, 15 அக்டோபர், 2011

புரியாத சோகம்

நிலவைப் பிடிக்க 
நெடுநாள் யோசித்து  
ஒரு நாள் வலை வீசினேன்
அன்று  அமாவாசை
என்பதை அறியாமல்!

சாதனையை 
அணைக்க நினைத்த நான் 
வேதனைத் தீயை 
வெறுங்கையால்  அணைக்கிறேன் 

மண்ணில் கூட 
நடக்கத் தெரியாத நான் 
விண்ணில் பறக்க 
ஆசைப்படுகிறேன் 

ஒருவழிப் பாதையில்
பயணம்  செய்துகொண்டு 
எதிர் வாகனத்தை 
எதிர் பார்க்கிறேன் 

வீதியில் எதையோ 
தொலைத்துவிட்டு 
வீட்டில் தேடுகிறேன்.

இன்னமும் தேடுகிறேன் 
இழந்தது எது 
என்று  தெரியாமல்.

வெளிச்சம் வேண்டுமென்று 
விளக்கைத் தேடினேன் 

விளக்கு என்னவோ
அருகில்தான் 
வெளிச்சம் மட்டும் 
ஏன் வெகு தூரத்தில்?










புதன், 12 அக்டோபர், 2011

நட்சத்திரங்கள் (ஹைக்கூ )


இயற்கை பிடித்த 
இரவுக் குடையில்
வெளிச்சக் கிழிசல்கள்.
விண்மீன்கள்

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தாய்

சொல்லவே முடியாத் துயரில்
    சோர்ந்தே விழுந்தாலும் மழலையை
மெல்ல எடுத் தணைத்து
    மேனியை இதமாய்த்  தடவி
வெல்லக் கட்டி என்றும்
    வேங்கையின் மகனே என்றும்
செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
   சேயினைக் காப்பாள் அன்றோ?            1

காலை  எழுந்த  உடன்
    கடிகாரம் கடிது ஓட
சேலையை சரியாய்க்  கட்ட
    சிறிதுமே நேரமும் இன்றி
வேலை செய்து கொண்டே
   விரைவாய் இடையில் வந்து
பாலை வாயில் இட்டு
 பக்குவமாய்  சுவைக்க வைப்பாள்        2

சத்துணவு நமக்கே தந்து
    சுவையுணவு  மறந்த போதும்
பத்தியம் பலவா ரிருந்து
    பகலிரவாய் விழித்த போதும்
நித்திய வாழ்க்கை தன்னில்
   நிம்மதி இழந்த போதும்
சத்தியத்  தாய் தன் அன்பில்
    சரித்திரம்  படைத்தது நிற்பாள்        3

பச்சிளம் பாலகன் தன்னை
    அம்மா என்றழைக் கும்போதும்
அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
    அறிஞனாய் ஆகும் போதும்
மெச்சி அவன் புகழை
   மேலோர்கள் சொல்லும் போதும்
உச்சியே குளிர்ந்து போவாள்
   உவகையில் திளைத்து நிற்பாள்        4

பேய்குணம் கொண்டே பிள்ளை
    பெருந்துயர் தந்திட் டாலும் 
சேய்குனம் சிறிதும் இன்றி
    சிறுமையை அளித்திட் டாலும்
நாய்குணம் மனதில் கொண்டே
    நல்லன மறந்திட் டாலும்
தாய் குணம்  மாறா தம்மா
    தரணியில் உயர்ந்த தம்மா!               5 

விண்ணைத் தொடும் அளவு
    வளர்ந்திட்ட தென்னை போல்
என்னையே எடுத்துக் கொள்
    என்றீயும்   வாழை     போல்
தன்னையே நினையா நெஞ்சம்
    தன்னலம் பாரா நெஞ்சம்
அன்னையின் அன்பு நெஞ்சம்
    அவனியில் இதை எது மிஞ்சும்?       6



ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)

 ஜன்னல்களை மட்டுமே 
பிடித்துக்கொண்டிருந்த 
கைகளில் அடக்கமாக 
வந்து விழுந்தது 
ஆப்பிள்
ஸ்டீவ் ஜாப்ஸ்

நிலா

வானப்பெண் 
இரவில் சூடிய 
சந்தனப்பொட்டு 

விண்வெளி வீதியில் 
உலா வரும் 
ஒளிக்கதிர் 

நட்சத்திரத் தொண்டர்கள் 
புடைசூழ 
இரவு மைதானத்தில் 
பேரணி நடத்தும் 
பெருந்தலைவர் 

கறுப்புத் தட்டில் 
கணக்கற்ற  நட்சத்திரக் 
கற்கண்டுகள் நடுவே 
வைக்கப்பட்ட லட்டு 

வள்ளுவன் முதல் 
வைரமுத்து வரை 
கவிஞர் பலருக்கு 
சேதிகள் பல சொன்ன 
போதிமரம் 

இருட்டைப் போக்கும் 
ஒளியை 
இரவல்  வாங்கியேனும் 
இப்பூமிக்கு 
ஈந்தளிக்கும் வள்ளல் 

வான ஏட்டில் 
இறைவன் எழுதிய 
இணையிலா 
இயற்கை கவிதை 
****************************************************************

 படித்துவிட்டீர்களா? 













வியாழன், 6 அக்டோபர், 2011

கவிதைச் சூரியன்-வைரமுத்து (VAIRAMUTHU)

  
கருப்பு 
கவிதைச் சூரியனே!

உன் கதிரொளியை 
எதிரொளித்தே 
பல கவிநிலவுகள் 
வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

பல கவி ஏகலைவர்களுக்கு 
கட்டைவிரல் கேட்காத
துரோணர் நீ!

காதலிக்கத் தொடங்குபவர்களுக்கு 
உன் கவிதைகளே 
கை கொடுக்கும் 

காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 
உன் காதல் வரிகள் 
விருந்தாகும் 

காதல் காயங்களுக்கும் 
உன் கவிதைகளே 
மருந்தாகும்  

அது  எப்படி?  
உன் சிந்தனை 
வயலில்  மட்டும் 
கவிதை  பயிர்கள்  
தொடர்ந்து  முளைத்துக்கொண்டே 
இருக்கிறதே! 

நீ 
தமிழ்  இலக்கியத்தையும் 
பாடலில்  இருத்தியவன் 
இலக்கணத்தையும்  கொஞ்சம்  அதில் 
பொருத்தியவன்


உனது  பாடல்களும்  கவிதைகளும் 
திசைகளைக்  கடந்தவை
 
நீ நாத்திகன்தான்!
இருந்தாலும்  
உனக்குப்  பிடித்த  வார்த்தை 
பிரம்மன் 

நீயும்  பிரம்மன்தான்!
உயிர்ப்புள்ள  
கவிதைகளை  படைப்பதால்.

நீ கொஞ்சம் ஒய்வெடு !
மற்ற கவிஞர்கள் 
பிழைத்துக்கொள்ளட்டும்.  
 
  
  
   

புதன், 5 அக்டோபர், 2011

காதலி!

                       காதலிக்கத் துடிக்கும்
                       இளைஞனே !
                       நான் சொல்வதை
                       உன் செவிகள் கேட்குமா?

                       முதலில்
                       முன்னேற்றத்தின்  முதல் படியான
                       முயற்சியைக் காதலி!

                       அறியாமையை போக்கும்
                       அறிவைக் காதலி!

                       சோம்பலைத் துரத்தி
                       உழைப்பைக் காதலி!

                       செயற்கை கவர்ச்சியில்
                       வீழ்ந்துவிடாமல்
                       இயற்கையைக் காதலி!

                       தாயினும் மேலான
                       தாய் மண்ணைக் காதலி!

                       உண்மையாக
                       உறவுகளைக் காதலி!

                       வெற்றி கிட்டும் வரை
                       தோல்வியையும் காதலி!

                       நிச்சயம்
                       உனக்கும்  கிடைப்பாள்
                       ஒரு காதலி!

                       பின்பு
                       வாழ்க்கை முழுதும்
                       அவளை  மட்டும் காதலி!

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஜூனோ! எங்கள் செல்லமே!

( எதிர்பாரா விதமாக இறந்துபோன எங்கள் செல்ல  நாய்க்கு ஒரு இரங்கல் கவிதை )

      சாவெனும் வடிவம் கொண்டு 
            சடு தியில்  காலன் வந்து  
      தாவென   உந்தன் உயிரை 
            தட்டியே பறித்துச் சென்றான் 
      போ வென அவனைச் சொல்ல 
            பூமியில் யாரும் இல்லை      
      ஓ வென அலறுகின்றோம்        
            ஜூனோ உன் பிரிவால் நாங்கள்

      மடிமேல் அமர்ந்துகொள்வாய் 
            மையமாய்  வந்து நிற்பாய் 
      படிமேல் ஏறிச் செல்ல 
            பக்குவமாய் காலை வைப்பாய்
      அடிமேல் அடி என்று 
            அழுத்திச் சொன்னால் போதும் 
      படி தாண்டிச்  செல்ல நீயும் 
            பயந்தது போலே நிற்பாய் 


      காகத்தைப் பாரத்தால் உடனே 
           கத்தி அதைத் துரத்திடுவாய் 
      தேகத்தை விதம் விதமாய்
           வளைத்து நீ உறங்கிடுவாய் 
      சோகத்தை விதைத்துவிட்டு 
           சொல்லாமல் கொள்ளாமல் 
      மேகத்தில் உதித்தெழுந்த 
           மின்னலாய் ஏன் மறைந்தாய் ?

      உரத்த குரலில் எங்கள் பேச்சு 
           சண்டையாய்த் தெரியும் உனக்கு 
     சிரத்தை ஆட்டி ஆட்டி 
           தடுத்திட ஓடி வருவாய் 
     பெருத்த  குரலைக் கொண்டு 
           பேரொலியும் எழுப்பிடுவாய் 
     வெறுத்த மனங்களையும் 
           வெற்றி  கொள்வாயே ஜூனோ 

     எம்பிக் குதித் திடுவாய் 
           எட்டி நீ பார்த்திடுவாய் 
     கம்பிமேல் ஏறிச் செல்வாய்
          கண்டதை கடித் திடுவாய்
     தும்பி பிடித்து வருவாய் 
          துணிகளை கிழித்து விடுவாய் 
     நம்பித்தான் ஏமாந்தோம் 
          நல்லபடி இருப்பாய் என


     அழகிய பொம்மை போலே 
          அனைவரையும் கவர்ந் திழுப்பாய் 
     பழகிய நண்பன் போலே 
          பக்கத்தில் படுத்திருப்பாய் 
     மெழு கெனவே உருக வைப்பாய் 
         மேன்மலும் குறும்பு செய்வாய் 
     அழுகையே நிற்கவில்லை 
          ஐயோ ! நான் என்ன சொல்ல 

     இரவில் உறங்குமுன்னே 
          இல்லத்துள் தானே இருந்தாய்?
     அரவம் தாக்கி உந்தன் 
          ஆருயிர் போன தென்ன?
     அரவம் கேட்கவில்லை 
          அறியாமல் இருந்து விட்டோம் 
     உருவம் குலை  யாமல் 
          உறங்குவது போல் கிடந்தாய்  

     தென்பட்ட இடமெல்லாம் ஜூனோ 
          திரிந்தலைந்த  இடமாகத் தெரியுதடி 
     கண்பட்டுப் போகு மென்று 
          கனவிலும் நினைக் கவில்லை 
     மென்பட்டு மேனி இன்று 
          மண்மூடும் காட்சி கண்டு 
     புண்பட்டுப் போனதம்மா நெஞ்சம் 
          புலம்பியதை நிறுத்தவில்லை

     கூவி நாங்கள் அழைக்கின்றோம் 
         குதித்து நீ வருவாயா?
     தாவி வந்தமர்ந்து மடியில் 
         கொஞ்சத்தான் சொல்வாயா?
     ஆவி பிரித்தெடுத்து உன்னை 
         அழைத்துப் போனதந்த விதியா?
     பாவி இறைவன் அவன் 
          பாதகம் செய்தது சரியா? 

     கண்ணயர்ந்த பின்பு கூட 
          கனவினிலும் நீயே வந்தாய் 
     மன்னுயிர்கள் கோடி இங்கு 
          மகிழ்வாய் வாழ்ந்திருக்க 
     உன்னுயிர் வாழ்வதற்கா 
          உலகத்தில் இடம் இல்லை?
     எண்ணியே நான் பார்க்கின்றேன் 
          இறைவனைத்தான் கேட்கின்றேன்  
================================================================================
இதையும் படியுங்க: