என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2013

எச்சரிக்கை!கூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்!

      உலகத்தில் இலவசம் என்று எதுவும் இல்லை. பாதுகாப்பு, ரகசியம் என்றும் எதுவுமில்லை.
( இந்தப் பதிவே அதற்கு உதாரணம். நேற்று இரவு பதிவிட்டேன். தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. காலையில்தான் தமிழ் மணத்தில் இணைத்தேன். தமிழ் 10 இல் இணைக்க முற்பட்டேன். அங்கே இதே பதிவைக் கண்டேன். வேறு யாரோ இணைத்து விட்டார்கள் என்று நினைத்து அதற்கு ஓட்டும் போட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அது யாழ்மின்னல் என்ற வலைதளத்தில் என் அனுமதியின்றி வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்தாவது வெளியிட்டிருக்கலாம். http://www.yarlminnal.com/?p=48743 )
   சமீபத்தில் பத்திரிகைகளில்  படித்திருப்பீர்கள். எட்வர்ட் ஸ்நோடன் என்பவரைப் பற்றி.உலகில் உள்ள அனைத்து நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்லது தனி நபர் தகவல்களையும் திரட்டுகிறது அமெரிக்கா என்ற உண்மையை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியவர்தான் இந்த ஸ்நோடன். . இவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி தேடிவருகிறது அமெரிக்கா. இவருக்கு அடைக்கலம் தரவேண்டாம் என்று உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமேரிக்கா. கூகுள்,ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அமெரிக்காவிற்கு அளித்து வருகிறதாம்.

     அரசாங்கங்கள்  குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக என்று சொல்லி எங்களிடமிருந்து தகவல்கள் கோருகின்றன. ஆனால் அது முற்றிலும் உண்மையா என்பதை நாங்கள் கண்டறிய இயலாது என்று கூறுகிறது கூகுள்.

    பல்வேறு தேடு பொறிகள் இருந்தாலும் கூகுள்தான் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. அவ்வப்போது புதிய தேடுபொறிகள் முளைப்பதும் சிறது சிறிது காலத்திற்குள் காணாமல் போவதும் சகஜமே! அப்படி புதிதாக உருவான தேடு பொறி "டக் டக் கோ" (DuckDuckGo)
   இணையத்தில் யாருடைய தகவல்களை சேகரிக்கவோ, உளவு பார்க்கவோ மாட்டோம் என்ற முழக்கமிடுகிறது 'டக்டக் கோ'. இதனாலேயே இது சற்று பிரபலம் அடைந்துள்ளது. இதற்கும் மேலாக கூகிள். எவ்வாறு இணையப் பயனாளர்களின் விவரங்களை சேகரிக்கிறது, என்பதை தெளிவான பட விளக்கங்களோடு விவரிக்கிறது.. அதனால் எந்த விவரமும் சேகரிக்காத, விளம்பரங்கள் இல்லாத எங்கள்  DuckDuckGo) தேடு பொறியை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறது

கூகுள் எப்படி தகவல் திரட்டுகிறது என்று பார்ப்போமா?
  உதாரணத்திற்கு Google இல் herpes என்று டைப் செய்து தேடுவதாகக்
கொள்வோம்.
தேடுதலின்போது ஒரு லிங்கை கிளிக் செய்ய

உங்கள் தகவல்கள் அந்ததளத்திற்கு உங்கள் தேடுதல் வார்த்தையோடு உங்கள் கணினி மற்றும் பிரவுசர்  விவரங்களை கீழ்க் கண்டவாறு அனுப்பி வைக்கிறது.

இவ்விவரங்கள் மூலம் உங்களை எளிதாக கண்டறிந்து விடுகிறது.

இது  போன்ற சில  தளங்கள் விளம்பரங்களை உடையதாக இருக்கின்றன, இவை விளம்பரம் செய்வதோடு உங்களைப் பற்றிய புரொஃபைலையும் தயாரிக்கின்றன 


இவ்வாறு சேகரிக்கப் படும் விவரங்கள் விற்கப்பட்டுவிடுகின்றன 

      சில சமயங்களில் தேடுவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் ரகசிய குறியீடுகளாக சில வார்த்தைகளை சமூக விரோதிகள் பயன் படுத்த அதை வேறு காரணத்திற்காக நாம் தேட சேமிக்கப் பட்ட இந்த தகவலால் நாம் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம்.

       இது போன்று பல சிக்கல்கள் எழ வாய்ப்பு உண்டு, எனவே உங்கள் சொந்த தகவல்களை சேமிக்காத, யாருக்கும் விற்காத பாதுகாப்பான எங்கள் தேடுபொறியான DuckDuckGo வை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது.

     கூகுள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் டக்டக் கோ எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது போகப் போகத் தான் தெரியும் .

     உலகத்தில்  எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.

*******************************************************************************

இந்த புதிய தேடுபொறியின்  தேடுதல் எப்படி இருக்கிறது என்பதை பயன்படுத்தி விட்டு சொல்கிறேன்.
 ******************************************************************************
என் இரண்டு எச்சல் பற்றிய பதிவுகளை அனுமதி கேட்டு பின்னர் தன் தளத்தில் வெளியிட்ட  4Tamilmedia வுக்கு நன்றி. 

******************************************************************************************


ஞாயிறு, 28 ஜூலை, 2013

சுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?

  தற்போது  சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ கேட்கவே வேண்டாம். புத்தகக் கண்காட்சியின்போது ஆர்வத்தின் காராணமாக வாங்கி வைத்த நாவல்கள் இன்னமும் படிக்கப் படாமல் (படிக்கமுடியாமல்) அலமாரியில் உறங்குவதாக  பலரும் சொல்கின்றனர். ஆனாலும் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
  ஒரு சிறு கதை எப்படி இருக்கவேண்டும் என்பதை சுஜாதா இப்படிக் கூறுகிறார். தற்போது எழுதுபவர்கள் அதை கருத்தில் கொள்ளலாம்.

   "எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. நல்ல சிறுகதை என்பது சிறிதாக சிறப்பாக விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால் சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லலாம் என்று குத்து மதிப்பாக கொள்ளலாம். நூறு பக்கம் இருந்தால் அதை சிறுகதை என்று ஒப்புக் கொள்வது கடினம்.அதே போல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதை சுருக்கம். நான்கு வரிகளுக்கு கீழ் இருந்தால் கவிதையாக சொல்லிவிடலாம்.சில நேரங்களில் சில கட்டுரைகளை கூட சிறுகதையாகக் கருதலாம். 

   கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள்.ஒரு கதை ஜீவித்திருக்க அது சிறப்பாக சொல்லப் பட்டிருக்க வேண்டும்.யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம். நூற்றாண்டுகாலத்தையோ  சில நிமிஷங்களையோ சொல்லலாம். கருப்போ சிவப்போ,ஏழையோ, பணக்காரனோ, வயதானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ, தர்மகர்த்தாக்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளாகவோ எந்த கதாபாத்திரமும் தடை இல்லை.மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம்.கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்க சிரிக்க சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

    இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதையில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பொது அம்சம்தானுண்டு. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது கதையல்ல. பஸ் டிக்கெட்.. ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை. நல்ல சிறுகதைகள் காலத்தையும் அன்றாட அவலங்களையும் கடக்கின்றன. 

   ஒரு கதை உங்களை பாதித்திருந்தால் ஒரு மாதம்; ஏன் ஒரு வருடம் விட்டுக் கூட அதை நீங்கள் திருப்பி சொல்ல முடியும். இது உங்கள் ஞாபகப் பிரச்சனை அல்ல.கதையின் பெயர்கள்,இடம் பொருள்,ஏற்பாடெல்லாம் ஞாபகம் இராது. ஆனால் கதையின் அடிநாதம், அதில் படித்த ஒரு கருத்தோ வரியோ நிச்சயம்  நினைவிருக்கும். அப்படி இல்லை என்றால் அந்தக் கதை உங்களைப் பொருத்தவரை தோல்விதான்.

    இதே விதிதான் கவிதைக்கும். இதேதான் நாவலுக்கும். ஒரு வாசகன் தனக்கு பிடித்தமான எழுத்தாளனை நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது

   நல்ல கதைகளை அலசிய ஹெல்மெட் பான் ஹைம் என்பவர் அவற்றுக்கு சில அடையாளங்களை சொல்லியிருக்கிறார். சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்துக்கு முன் கதையின் தொண்ணூறு சதவீதம் நடந்து முடிந்திருக்கும். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அதாவது சிறுகதையின் முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரும்பாலான கதைகள்  ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக் காட்டி முடிகின்றன அல்லது கேள்விக் குறியில்.

     மொத்தத்தில் சிறுகதை என்பது அற்புத கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்."

   சுஜாதாவின் வரையறைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

    ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். எப்போதோ படித்ததாக இருந்தாலும் இப்போதும் மனதில் அவ்வப்போது நினைக்கத் தோன்றுபவை சிறந்த சிறுகதைகள் 
அதன் படி என் மனதில் நிற்கும் சில சிறுகதைகள் 

1. காளையர் கோவில் ரதம் 
இது பள்ளியில் Non Detailed புத்தகத்தில் படித்தது. இதை எழுதியவர் ஜெகசிற்பியனா? கோ.வி.மணிசேகரனா? என்று நினைவில் இல்லை.
2. The Blind Dog- R.K.Narayan.  இது ஆங்கில Non detail இல் படித்தது.
3. நந்தவனத்தில் ஓர் ஆண்டி- ஜெயகாந்தன்- இதுவும் Non detailed
4. மாஞ்சு- சுஜாதா - குமுதத்தில் படித்தது என்று நினைக்கிறேன்
5. வெறுங்கையே மீண்டுபோனான்.- எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. விகடனில் படித்தது
  இந்த கதையை மூத்த பதிவர் சென்னை பித்தன்  பதிவாக வெளியிட்டிருந்தார். நானும் இதை அவருடைய வலைப்பக்கத்தில்தான் சமீபத்தில் படித்தேன். 
 7. யாரோ பார்க்கிறார்கள். -எப்போதோ படித்ததை(எங்கு படித்தது என்பது நினைவில் இல்லை) என் விருப்பத்திற்கேற்ப  மாற்றி பதிவிட்டிருக்கிறேன்.
(மேற்குறிப்பிட்டவை எல்லாம் பழைய எழுத்தாளர்கள் எழுதியவை.)

   இது போல சில சிறுகதைகள் உங்களையும் கவர்ந்திருக்கலாம். முடிந்தால் அவற்றை கருத்தில் தெரிவிக்கவும்.

******************************************************************************************

படித்து  விட்டீர்களா?
கணினி! நீ ஒரு டிஜிடல் ரஜினி !
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்

சனி, 27 ஜூலை, 2013

கணினி! நீஒரு டிஜிட்டல் ரஜினி!                             கணினி!
                             நீஒரு
                             டிஜிட்டல் ரஜினி!
                             சிறுவரையும் சிறை பிடிக்கிறாய்
                             நடுவயதினருடனும் நட்பு  கொள்கிறாய்
                             வயதானவர்களையும்
                             வசீகரம் செய்கிறாய்.
                             பெண்களையும்  பிடித்திழுக்கிறாய்
                             மடிமேலும் அமர்ந்து கொள்கிறாய்
                             கைக்குள்ளும் அடங்கி விடுகிறாய்
                             நல்லதையும் காட்டுகிறாய்
                             பொல்லாததையும் புகட்டுகிறாய்
                             அந்தரங்கம் அலசுகிறாய்
                             சொந்தமா  பந்தமா நீ
                             உறங்கும் நேரம் தவிர
                             உன்னுடனே இருக்கப்
                             பிரியப் படுகிறாய் 
                             "வல்லவன் நான்" எனக்குள்
                             எல்லாம்  இருக்கிறதென்கிறாய்.
                             உன்னைத்தாண்டியும் உலகம் இருக்கிறது
                             அதை புரிந்து கொள்ளாதவரை
                             நாங்கள் உனக்கு அடிமை-
                             புரிந்து கொள்ளும் காலம் வரும்
                             அப்போது நீ எங்களுக்கு அடிமை 

****************************************************************************************

படித்து  விட்டீர்களா?
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்

வெள்ளி, 26 ஜூலை, 2013

என் முதல் கணினி அனுபவம்

எனது மொக்கைகளின் பிறப்பிடம்
   என்னோட கணினி அனுபவத்தை நீங்கள் எல்லோரும் கேக்கனும்னு தலயில எழுதி இருந்தா சாரி கணிணியில எழுதி இருந்தா அதை யாரால தடுக்க முடியும்.?

   இதுக்கெல்லாம் காரணம் மதுரை தமிழன்தான். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் மதுரை தமிழனுக்கே! 

   எல்லோர் வீட்லயும் கம்ப்யூட்டர் ஒரு ஆளா வந்து ஒக்காந்துகிட்டு இருக்கு. இது நல்லது பன்னுதா கேட்டது பன்னுதா கெட்டது பண்ணுதான்னு குழப்பமாத்தான் இருக்கு, .இருந்தாலும் அது இல்லாம இருக்க முடியல.

  கொஞ்சம் கொஞ்சமா பள்ளிகள் அலுவலகங்களை கணினி ஆக்ரமித்திருந்த நேரம். நாமளும் கத்துகிட்டு கொஞ்சம் பந்தா காட்டலாமே ன்னு ஒரு ஆசை. CSC இல  Exam எழுதி சலுகை விலையில படிங்கன்னு விளம்பரம் வேற தூண்ட, ஒரு கணினி  யோக கணினி  தினத்தில தேர்வு  எழுதி ரிசல்ட் வந்து உனக்கு 60% சலுகைன்னு சொல்லி 900 ரூபா கட்டி சந்தோஷமா சேர்ந்தேன்.அப்பறம்தான் தெரிஞ்சுது எல்லாரக்குமே 60 % சலுகைன்னு.

   முதல்  நாள் Introduction கிளாஸ். பைனரி நம்பர்,முதல் தலைமுறை ரெண்டாம் தலைமுறைன்னு சார்லஸ் பாபேஜ்.ன்னு எதை எதையோ சொல்லி பே பே ன்னு முழிக்க வைக்க அடுத்த நாள் வரலாமா வேணாமான்னு யோசனை பண்ண வச்சுட்டாங்க!. நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.... அடிக்கடி அதைமாத்திக்குவேன். நாம வேலைக்கு போறதுக்கா படிக்கிறோம். சும்மாதான. என்ன ஆனாலும் ஆகட்டும்னு கிளாசுக்கு போக ஆரம்பிச்சிட்டேன். முதல்ல மௌஸ் புடிக்க கத்துக்கணும்னு சொல்லி பெயிண்ட் அப்ளிகேஷன திறந்து குடுத்து  இஷ்டத்துக்கு வரைய சொன்னாங்க. மௌஸை புடிச்சிக்கிட்டு கன்னாபின்னான்னு கிறுக்கினேன். ஸ்க்ரீன்ல அந்த தெரிய ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த கிறுக்கலை கிளியர் எரேசர் டூலை எடுத்து பேப்பர்ல  அழிக்க மாதிரி அழிக்க ஆரம்பிச்சேன். நிறைய கிறுக்கி இருந்ததால சீக்கிரம் அழிக்க முடியல . வேகமா மௌஸ நகத்தி அழிச்சேன் அழிச்சேன் அழிச்சு கிட்டே இருந்தேன். சத்தம் கேடு ஓடி வந்தார் ஒருத்தர். மௌச தேச்சிடுவீங்க போலஇருக்கேன்னு கதறினார்.(ஓனருக்கு சொந்தக்காரரா இருப்பாரோ?) எப்படி கிளியர் பண்றதுன்னு கத்து கொடுத்தார்.

   அப்புறம் அப்படியே ஒரு வாரம் பெயின்ட்ல தேசியக் கோடி, மயில் னு கொஞ்சம் சுவாரசியமா போச்சு. ஆனா நானோ எக்சல் வோர்ட், பவர் பாயின்ட் கத்துக்க வந்தேன். கத்துக் குடுத்தவங்கலாம் அங்கேயே இது மாதிரி கோர்ஸ் படிச்சவங்கதான். எல்லாம் அரட்டை அடிக்கறதுலதான் அதிக கவனம் செலுத்தினாங்க. அங்க எப்படி கத்து கொடுப்பங்கன்னா ஒரு கம்ப்யூடர்ல ஒருத்தர் ஒக்காந்துகிட்டு  இப்படி அப்படின்னு சொல்லி வேகமா சொல்லிகிட்டே போவார். சுத்தி பத்து பேர் நின்னு அதை கத்துக்கணும். ஒண்ணுமே புரியாது. அதுதான் Demonstration கிளாசாம். எல்லார்க்கும் ஒரு சிஸ்டத்தை குடுத்து சொல்லி கொடுத்த மாதிரி ஒர்க் பண்ணுங்க சொல்வாங்க. அவங்க சொல்லி கொடுத்தது MS Dos. அதுல கம்மேண்ட்ஸ் அது இதுன்னு குழப்ப இத கத்துகிட்டு என்ன பண்றது புரியல. நாம சின்சியரா தடுமாறி ஸ்டார்ட் பண்ணற நேரத்தில Instructor  வந்து எழுப்பி இன்னொரு சிஸ்டத்துக்கு அனுப்பிடுவார்.திரும்பி முதல்ல இருந்து ஆரம்பிக்கறதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சிடும். 
  
    கோர்ஸ் முடியற நேரத்தில வோர்ட் எக்சல் ஏதோ அரை குறையா சொல்லி கொடுக்க, ஒண்ணுமே புரியாமலேயே கோர்ஸ் முடிஞ்சிபோச்சு. அப்புறம் எக்ஸாம் எழுதனும்னு வேற சொன்னாங்க. எக்ஸாம் பாஸ் பண்ணா Certificate தருவாங்கலாம். ஒண்ணுமே தெரியாம என்னத்த எக்ஸாம் எழுத? அதோட CSC க்கு டாடா காட்டிட்டு வந்துட்டேன்.

    கொஞ்ச நாளைக்கு கம்ப்யூட்டர் ஆசைய மூட்டை கட்டி வச்சிட்டேன். திடீர்னு நான்  வேல செஞ்ச ஸ்கூலுக்கு பழைய கம்ப்யுயூட்டர் ஒண்ணு ஓசியில வந்தது. ஒண்ணும் தெரியலன்னாலும் அங்க இங்க படிச்சத வச்சு கம்ப்யூட்டர் பத்தி அப்பப்ப பேசுவேன். அதை பாத்து கம்ப்யூட்டர்ல நான் ஒரு அப்பாடக்கர்னு தப்பா நினச்சிட்டாங்க.அதுவரை கம்ப்யூட்டர் இல்லாததால நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறாம இருந்தது. இப்போ கம்ப்யூட்டர் வந்ததுக்கு அப்புறம் எல்லோம் ஒண்ணுகூடி கம்ப்யூட்டர்ல எதாச்சும் செய்து காட்ட சொல்லி நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பாடக்கர் இமேஜ் டப்பா டக்கர் ஆகிடுமேன்னு கவலையாயிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டிருந்தேன் .நல்ல காலம் பவர் கார்டு ரூபத்தில பகவன் ஹெல்ப் பண்ணார். அதாவது பவர் கார்டோட பின் ஒடஞ்சு போயிடுச்சு. அதை மாத்தினாத்தான் கம்ப்யுட்டர் வேலை செய்யும். அதை வாங்கனும்னு சொல்லி ஒரு பத்து நாள் ஓட்டினேன். அப்புறம் எர்த் சரியில்லன்னு சொல்லை கொஞ்ச நாள் தள்ளினேன். எக்சாம்லாம் முடியட்டும்னு ஒரு சாக்கு சொன்னேன். இப்படி சாக்கு போக்கு சொல்லி ஒருமாதத்துக்கு மேல ஆயிடுச்சு. 

    இதுக்குள்ள சனி ஞாயிறு, விடுமுறை வேற வேலை இருக்குன்னு சொல்லி ஸ்கூலுக்கு படை எடுத்து நாள் முழுதும் நான் மட்டுமே ஒக்காந்து  தட்டுத் தடுமாறி டெஸ்க் டாப் பிக்சர் மாத்தறது, விதம் விதமா ஸ்க்ரீன் சேவேர் செட் பண்றது வோர்ட்ல ஏதாவது  டைப் அடிச்சு சேவ் பண்றதுன்னு கத்துக்கிட்டேன். அப்பப்பா. இமேஜ் மெயின்டைன் பண்றது எவ்வளோ கஷ்டம்!
.
      ஒரு நாள் திங்கக் கிழமை முதல்ல போய் கம்ப்யூட்டரை ஆன்பண்ணி Welcome ஸ்க்ரீன் சேவரை ஓட விட்டேன். எல்லாரும் பாத்து சந்தோஷமாயிட்டாங்க. அப்புறம் என்ன?  அப்படியே கொஞ்ச நாள் ஓட, இதுல தமிழ்வர்ற மாதிரி பண்ணுங்கன்னு ஆர்டர் போட்டுட்டாட்டாங்க. அப்பா தமிழ் ஃபான்ட்  பத்தி எல்லாம் தெரியாது. அந்த கம்ப்யூடர்ல பிளாப்பி டிரைவ் மட்டுமே இருந்தது.(ஓசியில குடுத்தவங்க சிடி டிரைவ்  கழட்டிகிட்டு குடுத்தாங்க போல இருக்கு )
அப்ப நெய்வேலியில் இருந்த எங்க அண்ணன் கம்ப்யூட்டர் வச்சிருந்தார். 'குறள்' Software Install பண்ணா தமிழ்ல டைப் அடிக்கலாம்னார் மென்பொருளோட சைஸ்  1.5 MB க்கும் மேல அதனோட சைஸ் இருந்ததால Floppyயில காப்பி பண்ண முடியல. ஏதோ ஒரு பைல் ஸ்பிளிட்டரை யூஸ் பண்ணி மூணு Floppy ல ஸ்பிளிட்டிங் சாப்ட்வேரையும் காபி எடுத்து கொடுத்தார். அதைக் கொண்டு போய் கணினியில் இன்ஸ்டால் செய்து தனித் தனி பைல ஒண்ணா சேக்க படாத பாடு பட்டேன். எப்படி பண்ணியும் வரல. ஒரு பிரவுசிங் சென்டருக்கு போய் எப்படி பண்றதுன்னு கேட்டேன். அவன் பண்ணிட்டான். ஆனா எப்படி பண்றதுன்னு சொல்லத் தெரியல. எப்படியோ பலமுறை முயற்சி செஞ்சு "குறள்" மென்பொருளை இன்ஸ்டால் செஞ்சுட்டேன். அப்புறந்தான் தெரிஞ்சுது ஈசியான தமிழ் எழுத்துருக்கள் நிறைய  இருக்குன்னு. பாமினி,சன் fonts ஒரு இன்டர்நெட் சென்டர்ல காப்பி பண்ணி கொடுக்க வோர்ட் எக்சல்லில் தமிழ் பயன்படுத்தவும் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டேன்.அப்புறம் பவர் பாயிண்டல  பிரசண்டேஷன் அனிமேஷனோட பண்ணவும் நானே தெரிஞ்சிக்கிட்டேன்.
  ஆர்வம்  மேலும் அதிகமாக ஆரம்பிச்சது.தினமலர்ல கம்ப்யூட்டர் மலர் வரும் அதை தவறாம படிப்பேன், அப்புறம் கம்ப்யூட்டர் உலகம்னு ஒரு பத்திரிக்கை சிடியோட விப்பாங்க. அந்த சிடிக்காகவே வாங்கினேன். இன்னொரு கணினி பத்திரிக்கை தமிழ் கம்ப்யுட்டரும் எனக்கு அறிமுகம் ஆச்சு. தமிழ் கம்ப்யூட்டர் கணினி கத்துக்கறவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அதன் மூலம் , மென்பொருளை, வன்பொருட்கள்,இணையம்  ஏரளமான விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. இப்பவும் இந்த புத்தகத்தை வாங்கிட்டுதான் இருக்கேன்.

   இதை எல்லாம் டெஸ்ட் பண்ணி பாக்க கம்ப்யூட்டர் ஒண்ணு சொந்தமா இருந்தா நல்லா இருக்கும்னு நினச்சு ஒருபழைய கம்ப்யுடரை 5000 ரூபா கொடுத்து வாங்கினேன். அப்புறந்தான் தெரிஞ்சுது, அதனோட ஒரத் 3000 கூட இல்லன்னு. அதுல பல ஸ்பேர்களை வாங்கி இனைச்சேன். 

  கொஞ்சம் தெரிஞ்சிக்கறதுக்கும் நிறைய பந்தா காட்டறதுக்கும் COMPUTER ACTIVE, DIGIT,PC FRIEND போன்ற ஆங்கில இதழ்கள் உதவி செஞ்சுது. நான் CPU வை பெரும்பாலும் ஒப்பன் பண்ணியே வச்சிருப்பேன். இதனால உள்ள இருக்கிற பாகங்களை பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது. பார்ட்சை கழட்டறதும் மாற்றதுமா  எங்கிட்ட படாத பட்டுது. அப்பப்ப ரிப்பேர் ஆக ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட 200, 300 ன்னு செலவானதால முடிஞ்சவரை அதையெல்லாம் நானே செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 

    ஹார்ட்  டிஸ்க், சி,டி டிரைவ்  O,S இதனால வர சின்ன சின்ன சிக்கல்களை என்னால தட்டுத் தடுமாறி சரிசெஞ்சுக்க முடிஞ்சுது
போட்டோ  ஷாப்,விசுவல் பேசிக்,HTML, ஜாவா, சி இதெல்லாம் கத்துக்கணும்னு ஆசை. இதெல்லாம் நான் செய்கிற பணிக்கு நேரிடையா உதவப் போறதில்லங்கறதால அதையெல்லாம் விட்டுட்டேன்.

    இன்டர்நெட் வசதி இல்லாததாலே பிரவுசிங் சென்டருக்கு போய் பிரவுஸ் பண்ணி நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சுது, ஆனா அதிகமா செலவு ஆச்சு. அதனால நெட் Connection வாங்க முடிவு செஞ்சேன்.
    பி.எஸ்.என்.எல் ACCOUNT LESS INTERNET CONNECTION, ஹாத்வே  கனெக்சன்  கடைசியா இப்ப பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேன்ட் இணைப்பு கொடுத்திருக்கேன்.ஆரம்பத்தில limited பிளான் ல தான் இருந்தேன். சமீபத்தில்தான் Unlimited க்கு மாறினேன். தொடங்கற[ப்ப இணைய இணைப்பை அரசாணைகள் பாக்கறதுக்கு மட்டும்தான் பயன்பபடுத்தினேன். போகப் போக Net banking, EB Bill payment, Train Ticket resaervation ன்னு விரிவடஞ்சிகிட்டே போச்சு.

   தமிழ் வலைப் பக்கங்கள் நிறைய இருக்கும்னு நான் நினச்சிக் கூட பாக்கல. நானும் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சேன். மூணு பதிவு போட்டேன். யாரும் படிக்காததால அதை அப்படியே விட்டுட்டேன். அப்புறம் . ஒரு வருஷம் கழிச்சி 2011 அக்டோபர்ல திரும்பவும் எழுத ஆரம்பிச்சேன். திரட்டிகள்ள பதிவை இணைக்க படாத பட்டேன்.
  நண்பர்களுடைய  வலைப் பதிவுகள்ல  இருந்து நிறைய விஷயங்களை கத்துக்க முடிஞ்சுது. எப்படியோ சமாளிச்சு இன்னைக்கு வர ஓட்டிக்கிட்டு இருக்கேன். அதுக்கெல்லாம் காரணம் எப்படி எழுதினாலும் ஆதரவளிக்கிற உங்களோட பெரிய மனசுதான் 

   கணினியைப் பாக்கும்போதேல்லாம் 'கற்றது கடுகளவு, இன்னும் இருப்பது கணினி அளவு' ன்னு அது சொல்ற மாதிரியே இருக்கு.

******************************************************************************************
கொசுறு: நண்பர் சுரேஷ் கூட கணினி அனுபவத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.
நானும்  அஞ்சு பேரை கணினி அனுபவம் பற்றி எழுத பரிந்துரைக்கலாம்னு தேடிக்கிட்டிருக்கேன். ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச நிறையப் பேர் புக் ஆயிட்டாங்க. யாராவது சிக்கமலா போயிடுவாங்க!

ரெண்டு பேர் சிக்கிட்டாங்க 
உங்கள் முதல் கணினி அனுபவங்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

1. பரிதி முத்துராசன்
2. கரந்தை S.ஜெயகுமார்


வியாழன், 25 ஜூலை, 2013

மீண்டும் திருவிளையாடல்                மீண்டும் போட்டி  வைத்தார் 
                சிவபெருமான் 
                உலகை சுற்றிவர 

                அம்மை அப்பனை சுற்றி வரும் 
                அழுகுணி ஆட்டம் கூடாது 
                அழுத்தி சொன்னார் முருகன் 

                 சம்மதித்தார்  சிவபெருமான்.

                 இம்முறை   தோற்கக்  கூடாது;
                 முடிவுடன் விமானம் ஏறி விரைந்தார்
                 வேலன் .

                  மவுசுடனேயே இருக்கும்
                  புத்திசாலிப் பிள்ளையார் 
                  கணினி முன் அமர்ந்தார்
                  சொடுக்கினார் மவுசை
                  அழைத்தார் கூகுளை
                  வலம் வந்தார் பூமியை 
                  நொடியிலே முடிந்தது
                  பழம்  கிடைத்தது 
                  கணினி கைகொடுத்தது 

                  மீண்டும் திருவிளையாடல் 

*********************************************************

எச்சரிக்கை:எனது கணினி அனுபவம் இன்று மாலை அல்லது நாளை 

செவ்வாய், 23 ஜூலை, 2013

வெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்

   வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்-இந்த  எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும் அந்தக்  கவிஞரின் பெயர் தாராபாரதி.  

  இந்த வரிகளே இப்படி  என்றால் இந்தக் கவிதை முழுவதும் எப்படி இருக்கும். இந்த வரிகள் அந்தக் கவிதையில் எங்கே புதைந்து கிடக்கும்? அதை அறிந்து கொள்ளும் நெடு நாள் ஆவலில் கன்னிமெரா நூலகம் எனும் புத்தக் காட்டுக்குள் புகுந்தேன்.  அரைமணி  தேடலுக்குப் பின் கிடைத்தது அந்த கவிதை புதையல் .   அது தாராபாரதி  எழுதிய "இது எங்கள் கிழக்கு" என்ற கவிதை நூல். அதில்தான் இந்தக் கவிதை மறைந்து கிடந்தது.  இவரது கவிதை வார்த்தைகளில் புரட்சி ஒலிக்கும். நரம்புகள் முறுக்கேறும். இவர் பாடலின் சந்தங்கள் காந்தமாய் கவர்ந்திழுக்கும். ஆனாலும் அதிகம் ஜொலிக்க முடியாத சூரியனாய் மறைந்து போனதன் காரணம்தான் தெரியவில்லை  இந்தக் கவிஞர் திரைப்பாடல் எழுதி இருந்தால் இன்னொரு அருமையான கவிஞன் கிடைத்திருக்கக் கூடும். 
  யான் பெற்ற கவி இன்பம் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக இந்தக் கவிதையை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

வேலைகளல்ல  வேள்விகளே

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம் 
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும் 
பல்லவி எதற்குப் பாடுகிறாய் 

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் 
வேங்கைப் புலிநீ தூங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று 
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன் 
விழிமுன் சூரியன்  சின்னப் பொறி 
எழு எழு தோழா உன் எழுச்சி -இனி 
இயற்கை மடியில் பெரும்புரட்சி 

நீட்டிப்  படுத்தால் பூமிப்பந்தில்
நீதான் பூமத் தியரேகை-நீ 
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான் 
பூமி வலம் வரும் புதுப் பாதை 

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் 
விரல்கள் பத்தும் மூலதனம் 
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன் 
கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்து சொல் 
சுட்டு விரலின் சுகமாய் வானம் 
சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை 
தோல்விகள்  ஏதும் உனக்கில்லை-இனி 
தொடு வானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடி  வரும்-உன் 
தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-
துருவங் களுக்குப்  பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை 
வேலை களல்ல வேள்விகளே!
*****************************************************

இதைப் படித்து விட்டீர்களா?
கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -போட்டி


ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -போட்டி


திடம் கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் ஆறுதல் பெற்ற கடிதம்.
(எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கடிதம் மூலம் காதலை சொல்லி விடுவார்கள். குமாரை போன்ற நினைத்ததை எழுதத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் காதல் வராதா என்ன?  வந்தால் மனதில் உள்ளதை தன் மனம்  கவர்ந்தவர்களுக்கு எப்படி சொல்வார்கள்?   இப்படி சொல்வார்களோ! )

என்னை கவுத்து போட்ட சரோஜாவுக்கு,

   அது இன்னமோ தெர்ல சரோ, கொஞ்ச நாளா  உன்னை பாக்கறப்பல்லாம் ஒரு மாரியா கிறு கிறுன்னு ஏறுது. ஆய்ரம் கொசு என்ன மொச்சுக்கினு இருந்தாலும் அடிச்சு போட்ட மாதிரி தூங்குவனா. இப்பெல்லாம் இன்னாடான்னா உன் நெனப்புதான் கொசுவா மொச்சுகிட்டு என்ன தூங்க வுடாம பண்ணுது. இது என்னாத்துக்கு?.. எப்போ? இப்படி ஆச்சுன்னு ஒண்ணும் புர்ல 

  இதை  எப்டியாவது உன்கிட்ட சொல்லனும்னு பாக்கறேன். தொண்டை வர்ல வந்து பேச்சு முட்டிக்கினு நிக்குது. எழுதி குடுக்கலாம்னா எனுக்கு அவ்வளவா எழுத வராது. அப்பறம்தான் ஒரு ஐடியா வந்திச்சு . பர்மா பஜார்ல 500 ரூபாக்கு ஒரு செல் போனை வங்கனேன்.அதுல பேசறத அப்படியே பதிவு பண்ணலாம்னு சொன்னாங்களா. அங்க நின்னுக்கிட்ருந்த சீனு ன்னு ஒரு தம்பி கிட்ட எப்பிடி ரிக்கார்ட் பண்றதுன்னு கத்துகிட்டனா? அப்புறம் ஊட்டுக்கு வந்து என் மனச புட்டு புட்டு இதுல சொல்லி இருக்கறன். இதக் கேட்டுட்டு நீ சொல்றதுலதான் என் வாய்க்கையே இருக்கு. சரோ என் மனசை கவுத்த நீ வாய்க்கைய கவுத்துபுடாத!

  நீயும் நானும் ஒண்ணாப்புல இருந்து அஞ்சாப்பு வர ஒண்ணாதான கார்பரேசன் இஸ்கூல்ல  படிச்சோம். ஒரு நாள் குச்சி ஐஸ் வாங்கி சப்பிக்கிட்டிருந்தயா. நான் அதை புடுங்கினு ஓடிட்டனா? நீ உங்கம்மா கிட்ட சொல்ல, உங்கம்மா எங்கப்பாகிட்ட சொல்ல எங்கப்பா என்னை குச்சி எடுத்து வெலாச வந்தப்ப நீதானே "பாவம், வுட்டுடுன்னு சொன்ன. அப்ப வந்த இதுவா இருக்குமோ?. அப்புறம் ஒருநாளு கணக்கு டீச்சர் கணக்கு ஓம் ஒர்க் கேட்டப்ப நீ ஒன் நோட்ட குடுத்து என்ன அடி வாங்காம காப்பாத்தினியே அப்பத்துலேர்ந்து இருக்குமோ?எனக்கு ஒண்ணும் புரியல

   எத்தினியோ எலக்சன் வந்து போயும் இன்னும் அய்க்கா இருக்கிற நம்ம குப்பத்துல அயகா இருக்கிற ஒரே பொண்ணு நீதான. இஸ்கூல்ல படிச்சப்ப கூட இவ்ளோ அயகா நீ இல்லையே. இப்போ எப்படி வந்துச்சு. கருப்பா  இருந்தாலும் கலக்கலா இருக்கறய!. புச்சா புடிச்சிகினு வந்த மீனு வலயிலே துள்ளுமே அந்த மாதிரி கண்ணு, அப்புறம் கோன் ஐஸ் மாரி ஒரு கிளிஞ்சல் இருக்குமே! அத கவுத்து வச்ச மாதிரி மூக்கு, கடல்பஞ்சு மாதிரி உன் கன்னம். தூரமா கருப்பா தெரியற கடல் மாதிரி ஒன் முடி, வெள்ளை உப்பை கோத்து வைச்சது மாதிரி பல்லு. இதெல்லாம் பாத்தா மனசு பேஜாராவாதா நீயே சொல்லு. அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு!உன் பல்லு  இவ்ளோ வெள்ளையா கிதே. அது எப்பிடி? உங்கப்பன் பேஸ்டு கூட வாங்கித்தரமாட்டானே. கஞ்சனாச்சே! சரி, சரி, கோச்சுக்காதே! மாமானரை இனிமே மருவாத இல்லாம பேசமாட்டேன். அப்புறம்.. அது இன்னா கண்ணுக்கே தெரியாத மாதிரி ரெண்டு புருவத்துக்கு நடுவுல இத்துனூண்டு பொட்டு வச்சிக்கினுகிற? அயகாத்தான் இருக்குது இருந்தாலும் கொஞ்சம் பெரிசா வச்சாத்தான் இன்னாவாம். ஒன் ஒதடு மட்டும் லேசா ரோஸா இருக்குதே எப்டி? லிப்டிக் பூசறியா. இனிமே பூசாதே அது நல்லது இல்லையாம். அப்புறம் கல்யாணத்துக்கபுறம்  எனக்கு கஷ்டமா பூடும் 

    அஞ்சு மொழம் பூவு அடி எடுத்து வச்சு வந்த மாதிரி ஒரு நாளு ரேஷன் கடைக்கி அரிசி வாங்க வந்தயே, அரிசிப் பையை தூக்கி இடுப்பில வெக்க  நான்கூட ஒதவி செஞ்சேன். அப்ப உங்கை என்மேல பட்டுச்சி தெரியுமா?  வெண்ணெ  பட்டா எப்படி இருக்கும் அப்படி இருந்துச்சி எனக்கு.
    அப்புறம்  உன்மேல எனக்கு ஒரு இதுன்னு என்கூட சுத்திகினி இருப்பானுங்களே அந்த பசங்களுக்கு தெரிஞ்சிபோச்சா!..என்னாடா உன் ஆளு சரோஜானு பழய பேர் வச்சுக்குனு கீதுன்னு கடுப்பேத்துனானுங்க! எனக்கு வந்துச்சே கோவம். கழுத்தாமுட்லயே ஒன்னு உட்டு, "சரோஜாலதான் ரோஜா இருக்குடா பேமானிங்களா" ன்னு கத்துனனா? பசங்க மெர்சல் ஆயிட்டானுங்க. 

   அந்த  சோமாரிங்களுக்கு என்னா தெரியும் உன்ன பத்தி. அந்த பசங்க செவப்பு தோல் வச்சிகினு எல்லாம் தெரியற மாரி காட்டிக்கினு சுத்திக்கினுகிற பணக்கார பொண்ணுங்களுக்கு நூல் வுட்டுக்கினு இருக்கானுங்க. எவனோ இளவரசனாமே ரயில்ல  உழுந்து செத்தானாமே! அந்த மாதிரி இந்த பசங்க எந்த பஸ்சு கீய வுய போறானுங்களோ. வேணாண்டான்னா கேக்க மாட்றானுங்க.  நீ வேணாம்னு சொல்லு; இந்த பசங்க சாவாசத்த கூட இப்பவே  உட்டுடறேன். நீ சொன்னா கூவத்துல கூட குச்சிடுவன் தெர்யுமா?

     இன்னாடா இவன் இப்படி சொல்றானேன்னு நெனக்காத. காலையில ரோட்டுல கடைபோட்டு  இட்லி விக்கிற உங்கம்மாகூட,  இட்லி விக்க போவாத.  அரை நிக்கர் போட்டுக்கினு தெனோம் ஒடம்பு இளைக்க ஓடிக்கினு கிறானுங்களே அவனுங்கல்லாம் உன்ன ஒரு மாதிரியா பாத்துகினு போறானுங்க. பொண்டாட்டி தொல்லை தாங்காம பீச்சுக்கு வர ஒண்ணு ரெண்டு பெருசுங்க கூட உன்ன பாத்து ஜொள்ளு வுட்டுக்குனு போவுது. சொல்லிட்டேன் சாக்கிரதை.

     அப்பறம்  எவ்வளோ நாள்தான் இப்படியே சுத்திகினி இருக்கறது? உன்ன பாத்துத் தான் செட்டில் ஆவனும்னு எனக்கு ஆசயே வந்துச்சு. நம்பு சரோஜா! இப்பெல்லாம் நான் தண்ணி அடிக்கிறதில்ல. எல்லோர் கிட்டயும் மருவாதியாத்தான் பேசறேன். ரெண்டு நாளைக்கு  முன்னாடி பழைய ஒண்ணாப்பு டீச்சரைப் பாத்தனா.. தூக்கி கட்டின லுங்கிய இறக்கி விட்டு வணக்கம் சொன்னேன்னா பாத்துக்கயேன். 

     உனக்கு சோறாக்க  தெரியாதாமே! உங்கம்மா எங்கம்மா  கிட்ட கொற பட்டுக்கிச்சாம். பரவாயில்ல சரோ! நான் நல்லா சோறாக்குவேன். அதான் எங்கமாவுக்கு ஒடம்பு சரியில்ல இல்ல. எங்கப்பாதான சோறாக்கி போடுவாரு. நானும் கத்துக்கிட்டேன். நான் மீன் கொழம்பு வச்சா இந்த குப்பமே மணக்கும் நாலு நாளிக்கு வச்சிருந்து சாப்பிடலாம்னு எங்கம்மா சொல்லும். அப்புறம் நான் மீன் கொயம்பு வக்கும் போதெல்லாம் அஞ்சலை இல்லை? அதான் எங்க பக்கத்து வூட்ல கிதே அதான், மோப்பம் புச்சிகினு வந்து எனக்கு கொஞ்சம் குடுன்னு கேட்டு பல்ல இளிச்சுகினு  நிக்கும். அதுவும் அது மூஞ்சும் அத்த பாத்தாலே எனக்கு புடிக்கல.

    நீ  என்ன  கட்டிக்கினன்னு வச்சுக்கோயேன், நான் உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன். நான் தெனமும் சம்பாரிச்சி கொண்டு வந்து உன்கிட்ட குடுத்துடுவேன். நீ வூட்டயும் கொயந்தங்களையும் பாத்துகினயன்னா போதும். நம்ம புள்ளைங்களை நல்ல படிக்க வச்சு எஞ்சினியராவும் டாக்டராவும் ஆக்கணும்.இன்னா சொல்ற?

   நாந்தான் பொலம்பிகினு கிறேன்.இன்னும் கண்டுக்காத மாரிதான் போய்க்கினு கீற. இந்த செல்போனை உன்கிட்ட எப்படியாவது குடுத்து அனுப்பறேன். இதை கேட்டுட்டு எனக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லிடு. அப்பால எப்படியோ என்னவோ நடக்கறது நடக்கட்டும்.

                                                                               இப்பிடிக்கு 
                                           உன்னைபாத்து கொயம்பி போய் கெடக்கும் 
                                                                                   குமாரு


=======================================================================

இந்தக் கடிதம் எப்படி எழுதப்பட்டது என்பதற்கான விளக்கம் கீழே லின்கில்
  இந்தக் கடிதம் கடிதம் பிறந்த கதை

வெள்ளி, 19 ஜூலை, 2013

சுறாமீன் தின்கிற பிராமின்-வாலி


       "சுறாமீன் தின்கிற பிராமின்" என்று தைரியமாக தன்னைப் பற்றி  சொல்லிக்கொண்ட பல தலைமுறைக் கவிஞர் வாலி மறைந்து விட்டார். கவியரங்கங்களில் கம்பீரமாக முழுங்கும் அவரது குரலை இனி கேட்க முடியாது. அவரது இழப்பு ஈடு செய்ய  முடியாதது. நேற்று காலையிலேயே தொலைக் காட்சியில் வாலியின் பாடல்களை போடத் துவங்கி விட்டார்கள்.

     திரை இசைக் கவிஞர்களின்  மும்மூர்த்திகளாக கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து மூவரையும் கூறலாம் 

       10000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியபோதும் வாலிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்ற ஐயம் எனக்கு உண்டு 

    அவர் நுழைந்த காலம் அப்படி. கண்ணதாசன் என்ற கவிதை சூரியன் கோலோச்சிய காலத்தில் பாடல் எழுதப் புறப்பட்டது அவருக்கு மிகப் பெரிய சவால் . அவரது  அதிர்ஷ்டம் கண்ணதாசனுக்கும் எம்ஜி ஆருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு. அதன் மூலம் எம்ஜியாரின் மனத்தில் இடம் பிடித்து அற்புதப் பாடல்கள் எழுதி இன்றுவரை நிலைத்து நிற்கும் வாய்ப்பு கிட்டியது . ஆனால் அந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அது எம்ஜிஆர்பாடல் என்பதுதான். பாராட்டெல்லாம் எம்ஜிஆருக்கே சென்று  விடும். அந்தப் பாடல்களில் எம்ஜிஆர்தான் தெரிவாரே தவிர வாலி கண்ணுக்குப் புலப்படமாட்டார். எதிரில்   இருப்பவர்களின் சக்தியில் பாதி வாலிக்கு வந்து விடும்.ஆனால் இந்த வாலியின் பாதி சக்தி எம்ஜியாருக்குப் போனது.

    ஆனால் கண்ணதாசன் பாடல்களுக்கு உரிய பெருமை அவருக்கே கிடைத்தது.  வாலி  பாடல்களில் தன் தனித்தன்மையை அதிகமாக வெளிப்படுத்தாமல் சூழலுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவே கொடுத்தார். கண்ணதாசனோ எத்தைகைய சூழலுக்கும் தன் கருத்தை புகுத்திக் கொண்டார்.  கண்ணதாசன் சகாப்தம் முடியும் நேரத்தில் வைரமுத்து புயலாய் நுழைய  வாலிக்கு,  முந்தைய நிலையே நீடித்தது .

     ஆனாலும் இன்று வரை அவரை நிலைக்கச் செய்தது மெட்டுக்குள் பாட்டை அனாயசமாக, மிக வேகமாக பொருத்திவிடும் அபார ஆற்றல்தான்.தமிழ்ப் புலமையும் சொல்லாடலும் அவருக்கு கைவந்த கலையாக அமைந்தது  அது அவரை இசை அமைப்பாளர்கள் விரும்பும் கவிஞராக மாற்றியது. 

      ஒருமுறை பேட்டியில் கங்கை அமரன குறிப்பிட்டிருந்தார். புதிய கவிஞர் ஒருவருக்கு மெட்டு கொடுக்கப் பட்டதாம். பல நாட்களாகியும் அவரால் எழுத முடியவில்லையாம். படப்பிடிப்பு தொடங்க வேண்டி இருந்ததால் பாடல் அவசரமாக தேவைப்பட வாலிக்கு அந்த மெட்டு தரப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் எழுதி கொடுத்தாராம். வாலியின் திறமைக்கு இவையெல்லாம் ஒரு சான்று. சமீப கால நிகழ்வுகளையும் பாடலில் பொருத்தி  பாடல் எழுதுவதில் அவருக்கு இணை ( உதாரணம் வாடா பின் லேடா) யாருமில்லை

      வைரமுத்து உச்சத்தில் இருந்தபோது இளையராஜாவுடன் கொண்ட கருத்து வேறுபாடு வாலிக்கு ஆதரவாக அமைந்தது. அதனால் பல நல்ல பாடல்கள் எழுதும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வந்தது. ரகுமானுக்கும் முக்காபலா போன்ற பாடல்களுக்கும் வாலி தேவைப்பட்டார்.ஜாலிப் பாடல்கள் என்றால் கூப்பிடுங்கள் வாலியை என்ற நிலை இருந்தது. இத்தகைய பாடல்கள் வெற்றி பெற்றாலும் விமர்சனத்துக்கும் உள்ளானதை தவிர்க்க முடியவில்லை 

  என்னதான் அருமையான பாடல்களை எழுதி இருந்தாலும் இயக்குனர்களின் சாய்சாக வாலி இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்.
இளையராஜாவை  விட்டு மணிரத்தினம் பிரிந்தபோது ரகுமானின் இசை யில் எழுத வைரமுத்துவையே நாடினார். அதன் பின்னர் மணிரத்தினம் படத்தில் வாலி எழுதி இருப்பதாகத் தெரியவில்லை.

   எத்தனை கவிஞர்கள் இடம் பெற்றிருந்தாலும் மற்றவர்களைவிட கவியரங்க மேடைகளில் வாலியின் கவிதைகளுக்கு பலத்த வரவேற்பு இருக்கும். வார்த்தை ஜாலங்கள் செய்து மேடையை தன்வசமாக்கக் கூடிய திறமை வாலிக்கு உண்டு. கலைஞரைப் போற்றுவதை தொழிலாகக் கொண்டிருந்த வைரமுத்து வைப் போல் வாலி, அவரது வாயும் நமது காதும் வலிக்கும் அளவுக்கு புகழ்ந்ததை அடிக்கடி காண முடிந்தது வாலிக்கு பெருமை சேர்ப்பதாக அமையவில்லை.

    பல புது முயற்சிகளையும் செய்யத் தவறவில்லை வாலி புதுக் கவிதையில் ராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரில் விகடனில் எழுதியது பெரும் வரவேற்பு பெற்றது அனைவரும் அறிந்ததே.  

     முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா என்ற பாடலை எழுதி இளைஞர்களை இழுத்த வாலியின் சில பாடல்கள் அவரது பாடல்கள் என்று தெரியாமலேயே ரசிக்கப்ப் பட்டிருக்கின்றன.

எனக்கு பிடித்த வாலியின் பாடல்களில் சில 

வாழ்வே மாயம் படத்தில் இடம்பெற்ற வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்  இந்தப் பாடலில் வரும் 
 "கருவோடு  வந்தது தெருவோடு போவது
 மெய் என்று மேனியை யார் சொன்னது ": என்ற வரிகளைக் கேட்டபின் கண்ணீர் வருவதை நம்மால் தடுக்க முடியாது 

இன்னொரு  பெண்ணோடு வாழ்ந்துகொண்டு மனைவியை துன்புறுத்தும் கணவனை விட்டு விலகுதல் நியாயம் என்பதை அழகான உவமைமூலம் சொல்வதை பாருங்கள். "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்" என்ற பாடலில்
"விரல்களை தாண்டி வளர்வது கண்டு
நகங்களை கூட நறுக்குவதுண்டு"
இதிலென்ன பாவம் "என்று கேட்கும் வாலி 

"அம்மா  என்றழைக்காத உயிரில்லையே!" என்று பாசத்தை குழைத்து வார்த்தைகளாய் வடித்து உள்ளம் உருக வைத்திருப்பார் 
  
       பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார் வாலி . வைணவராக இருந்தபோதிலும் முருகன் மீது பக்தி கொண்டவராம் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்ற உள்ளம் உருகும் பாடல் வாலியிடமிருந்து பிறந்ததாம்.நேற்று  இதை தொலைக்காட்சியில் கவிஞர் பிறைசூடன் தெரிவித்தார்.

"ஸ்ரீரங்க- ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி",என்ற மகாநதி பாடலாகட்டும் தசாவதாரம் படத்தில் இடம் பெற்ற "முகுந்தா , முகுந்தா" என்ற பாடல்களாகட்டும் மனதை கொள்ளை கொள்வன என்பதை மறுக்க முடியாது 

   "காற்றில் வரும் கீதமே என் கண்ணனை நீ அறிவாயா? என்ற பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கக் கூடியது 

10000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளதாக தெரிகிறது.50 ஆண்டுகளில் 10000 பாடல்கள் என்றால் ஓராண்டுக்கு சராசரியாக 200 பாடல்கள்.அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு பாடல். அப்பப்பா! வாலியின் வேகம் வாயு வேகம்தான் .

    இப்படிப் பாடல் பல படைத்த அந்த அற்புதக் கவிஞன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரது  நல்ல பாடல்கள் நம் நெஞ்சோடு எப்போதும் இருக்கும்-இனிக்கும் 

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

======================================================================

 இந்தப் பதிவு படித்த, கேள்விப்பட்ட, தொலைக்காட்சியில் பார்த்த  செய்திகளின்  அடிப்படையில் எழுதப் பட்டது  
*********************************************************************
வாலியின் இறுதி ஊர்வலம் பற்றி கவிஞர் முத்துநிலவன் கூறுவதை பாருங்கள்   
தமிழின் மகாகவி பாரதியின் இறுதி ஊர்வலத்தில் வெறும் பதினெட்டுப் பேர்களே கலந்துகொண்டனர் என்றால், அன்றைய (11-07-1921)தகவல் தொடர்பு நிலையோடு தொடர்புடையதாகத்தான் புரிந்துகொள்கிறோம். இன்றும், தமிழக ஊடகங்களால் கொண்டாடப்பட்ட பிரபல திரைப்படக் கவிஞர் வாலிக்கும் அந்தக் கதிதான் எனும்போது, இந்த அவமானம் யாருக்கு என்னும் கேள்வி எழுகிறது.  மேலும் படிக்க 

கவிஞர் வாலியின் இறுதி நிகழ்ச்சி எழுப்பும் கேள்விகள்
புதன், 17 ஜூலை, 2013

இரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது?

   நேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென்ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று தெரியவில்லை உதவி செய்ய முடியமா? என்று கேட்டார். அவரது  குரலில் பதற்றம் தெரிந்தது. வீடு கட்டிக் கொண்டிருக்கும் அவரது கணக்கில் கொஞ்சம் அதிகமாகப் பணம் இருந்தது என்றும் கூறினார். 
"கவலைப் படாதீர்கள் பின் நம்பர் தெரியாதல்லவா.ATM லிருந்து பணம் எடுக்க முடியாது " என்றேன் நான்.
ATM லிருந்து எடுக்க முடியாது.ஆனால் கடைகளில் இருந்து பொருள்கள் வாங்கி விட முடியும்.பெட்ரோல் போட முடியும் என்றார். வங்கியோ இரவில் திறந்திருக்காது. எனக்கும் இது புதிதாக இருந்தாதால் என்ன செய்வது என்று தெரிய வில்லை. இணையத்தின் மூலமாக ATM கார்டை  ப்ளாக் செய்ய முடிமா என்று பார்த்தேன். அதற்கான வழி எதுவும் தென் படவில்லை. அந்த வங்கியில் TOLL FREE எண் கிடைத்தது. நண்பருக்கு அந்த எண்ணை  தெரிவித்து தொடர்பு கொள்ளுமாறு கூறினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர் மீண்டும்  அந்த என்னை தொடர்பு கொண்ட பொது ATM அட்டையின் எண்ணை கேட்பதாகக் கூறினார். அதை குறித்து வைக்க வில்லை என்றார் .அவரிடம்ருந்து கணக்கு எண்,வங்கி கிளை,ஊர்,தந்தை பெயர், வீட்டு  முகவரி போன்றவற்றை குறித்து கொண்டு நான் அந்த TOLL FREE எண்ணுக்கு முயற்சி செய்தேன். இரண்டாவது முயற்சியில் நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் வாடிக்ஜையாளர் சேவை ஊழியர் லையனில் வந்தார். நான் விவரத்தை தெரிவித்து ATM கார்டை ப்ளாக் செயுமாறு கூறினேன்.அவரோ  வாடிக்கையாளர்தான் நேரடியாக தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றார். "தாமதித்தால் கார்டை தவறாக பயன் படுத்த வாய்ப்பிருக்கிறது .தயவு செய்து ப்ளாக் செய்து விடுங்கள் .உடனே அவரை உங்களை தொடர்பு கொள்ள செய்கிறேன்" என்று கேட்டுக் கொண்டதன் பேரில் விவரங்களை சரிபார்த்து என்னுடைய விவரங்களையும் பதிவு செய்து கொண்டு கார்டை ப்ளாக் செய்து புகார்  எண்ணை அளித்தார். நாளை வங்கி சென்று  இதனை தெரிவிக்க வேண்டும் என்றார். நண்பரை அழைத்து விஷயத்தை சொன்னேன்.
  :நீங்கள் இந்த உதவி செய்யவில்லைஎன்னால் இரவு நிம்மதியாக இருந்திருக்க முடியாது. வீடு கட்டுவதற்காக வைத்த்ருந்த பணம் அந்த அக்கவுண்ட்டில்தான் இருக்கிறது   மிக்க நன்றி" என்றார்.
இணைய இணைப்பு இருந்ததால் இது சாத்தியமாயிற்று. 
நண்பர் சொன்னது போல ATM கார்டை பின் நம்பர் இன்றி பயன்படுத்த முடியும் என்று கேள்விப் பட்டிருந்தபோதிலும் அதை நான் நம்பவில்லை. பலரை விசாரித்ததில் அது உண்மை என்று தெரிய வருகிறது. அப்படியானால் ATM கார்டை மிக   பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது பற்றிய தேடலில் கிடைத்த விவரங்கள்.

  வங்கிகள் சில நிறுவனங்களை MERCHCHANT ESTAMBLISHMENT ஆக வைத்துள்ளன. பெட்ரோல் பங்குகள், சில பெரிய கடைகள், இந்தப் பட்டியலில் உள்ளன. இவற்றில் ATM கார்டை பயன்படுத்தும்போது பின் நம்பர் தேவை இல்லை. பின் நம்பர் இல்லாமலேயே உங்கள் கார்டை தேய்த்து பணம் எடுத்து விடுவார்கள்

    நியாயமாக கார்டை பயன் படுத்தி முடிந்ததும் ரசீதில் கையொப்பம் பெற்றுக் கொள்வார்கள். கடைக்காரர் உங்கள் கையொப்பமும் CARD இல் உள்ள கையொப்பமும் ஒன்றாக இருகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் PIN நம்ப இன்றி பயன்படுத்த வங்கிகள் அனுமதித்திருக்கக் கூடும். உண்மையில் அப்படிப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.  இது சரியான முறையாகவும் தோன்றவில்லை.
இதனால்  கார்டு தொலைந்து விட்டால் அதை தெரிவிப்பதற்குள் கண்டெடுத்தவர் பொருட்களை வாங்கி விட்டு கார்டை தூக்கி எறிந்து விட முடியும். 
எனவே அடிக்கடி ATM/CREDIT கார்டுகள் பயன்படுத்துவோர் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொள்வது நல்லது என்பதை நண்பரின் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.
 1. ATM கார்டில் அதற்குரிய இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.(என் கார்டை பார்த்தபோது அதில் என்னுடைய கையொப்பம் இல்லை.
 2.  கார்டு எண்ணை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
 3.  நீங்கள் வாடிக்கையாளராக உள்ள வங்கியின் தொலைபேசி எண் மற்றும் எமர்ஜென்சி தொலைபேசி எண்ணை கட்டாயம் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
 4. கார்டோடு பின் நம்பரை எழுதி வைக்காதீர்கள்.
 5. கார்டை பணம் எடுப்பதற்காக பிள்ளைகளிடம்  கொடுத்தனுப்பாதீர்கள். கைபேசி,கணினி,போன்றவற்றை கையாள்வதில் பிள்ளைகள் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் விளையாட்டுத் தனம் மற்றும் அலட்சியம் கவன திசை திரும்பல் இவற்றின் காரணமாக  கார்டு போன்றவற்றை தொலைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது 
 6. வங்கிக் கணக்கு எண், வங்கியில் கொடுத்துள்ள வசிப்பிட முகவரி போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 7. ATM இல பணம் எடுக்கப் பட்டால் கைபேசியில் குறுஞ்செய்தி வரும் வசதியை கட்டாயம் பயன்படுத்துங்கள்
 8. கடைகளில் கார்டை பயன் படுத்தும்போது உடனிருந்து கவனியுங்கள் 
 9. கொடுக்கப் படும் ரசீதுகளை பத்திரமாக வைத்திருந்து PASS BOOK என்ட்ரி போட்டு சரி பார்க்கவும்.
 10. உங்கள் ATM கார்டு , கிரெடிட் கார்டு எங்களை தொலைபேசியில் யாரிடமும் சொல்லாதீர்கள். இணையத்திலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இவற்றை தெரிவிக்காதீர்கள்.
 11. கார்டுகளை இருபுறமும் ஜெராக்ஸ் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.இது வெளியில் யார் கைக்கும் கிடைத்து விடக் கூடாது.
 12. ATM/Credit  Card விவரங்களை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் உங்கள் வீட்டில் கூட வைக்காதீர்கள்.
 13. அவ்வப்போது பின் நம்பர்களை மாற்றி விடுங்கள் 
 14. ATM கவுண்டர்களில் முன்பின் தெரியாதவர்களின் உதவியை நாடாதீர்கள்
 15. கார்டு தொலைந்து விட்டால் வேலை நேரமாக இருந்தால் வங்கிக்கு நேரிலோ அல்லது தொலை பெசியிலோ உடனடியாக தெரிவித்து விடுங்கள்
 16. மற்ற நேரங்களில் தொலைந்து விட்டால் ஒவ்வொரு வங்கிக்கும் அவசர உதவிக்காக Toll Free தொலைபேசி என்மூலம் தொடர்பு கொண்டு கார்டை ப்ளாக் செய்யலாம். இதற்கு சற்று பொறுமை அவசியம்
எனது  நண்பரின் வங்கிக கணக்கு SBI இல் இருந்ததால் அதன் எண்ணான
18004253800 இல் தொடர்பு கொண்டேன். நல்ல காலம் வேலை செய்தது.
இதோ இன்னும் சில
வங்கிகளின்  அவசர எண்கள்
State Bank Oof India     1800 425 3800
Indian Bank             1800 425 4422
ICICI Chennai:             42088000 / 33667777
Indian Bank             18004254445
Canara Bank            1800 425 7000

  இணையத்தில்  இந்தப் பட்டியல் கிடைத்தாலும் சோதித்துப் பார்த்ததில் அவற்றில் பல வேலை செய்யவில்லை. மேற்குறிப்பிட்டவற்றை வேலை செய்கிறது. உங்கள் வங்கியில் தற்போது பயன்பாட்டில் உள்ள அவசர தொலைபேசி எண்களை கேட்டு குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
 மேலுள்ள தொடர்பு எண்கள்  அந்தந்த  வங்கிகளின் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை

************************************************************************************************************

திங்கள், 15 ஜூலை, 2013

யாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா?

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : யாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா?

                                           நட்புடன்
                                    டி.என். முரளிதரன்

ஞாயிறு, 14 ஜூலை, 2013

யாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா?


       இளவரசன் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு ஊகங்களுக்கும் பரபரப்புக்கும் மத்தியில் இன்று இளவரசனின் இறுதி சடங்குகள்  நடந்து முடிந்திருக்கின்றன.. காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்வது மடத்தனமானது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் பாடம் கற்க வேண்டும்..தவறான் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
   
    இந்த சம்பவம் இன்னும் சில நாட்களுக்குப் பின் மறந்து போகலாம்.ஆனால் அதன் பாதிப்பு  ஒரு வார காலமாக இருக்கவே செய்தது . அந்த பாதிப்பின் விளைவே  எழுந்ததே  ஒரு கிராமத்துக் கிழவியின்  புலம்பல் .                                              

                                                  ஒருவாரம் ஆகிடிச்சு
                                                         ஆனாலும் உன் பேச்சு
                                                  தெருவோரம் நின்னுகிட்டு  
                                                         இன்னமும்தான் பேசறாங்க
                                                  யாரை தப்பு சொல்லி 
                                                         என்னபண்ண  இளவரசா
                                                   கூறு போட்டு உன் உடம்பை
                                                         கொண்டுவரும் நிலை ஆச்சே

                                                   ஒரு திரிசா இல்லன்ன
                                                          திவ்யா கெடப்பாளே
                                                   ஒருதிவ்யா இல்லனா
                                                              தீபா  இருப்பாளே
                                                   பெருசா அவகிட்ட
                                                             என்னத்த நீ கண்ட
                                                   பரிசா உன் உசுரை
                                                            பாக்காம நீ குடுத்த


                                                  கண்ணுகுளம் வத்திடிச்சி
                                                         காவிரியா காஞ்சிடிச்சு
                                                  பொன்னுமணம் என்னன்னு
                                                         புரியாம  போயிடிச்சு
                                                  என்னாதான் இக்கட்டோ
                                                           எனக்கொண்ணும்   புரியலையே
                                                  கண்ணான உன் உசுரை
                                                          காப்பாத்த முடியலயே

                                                  பத்திரிக்கை உன்னாலே
                                                           பரபரப்பா வித்துடுச்சு
                                                  மத்தவங்க சோகமெல்லாம்
                                                           விளம்பரமா மாறிடிச்சு
                                                  நித்தம்ஒரு சேதி வந்து
                                                           நிம்மதியை தொலைச்சிடிச்சி
                                                  செத்தவன்நீ எழுந்து வந்து
                                                          சொன்னாத்தான் தெரியுமையா

                                                   கொடும்பாவி எவனோதான்
                                                            கொன்னே போட்டானோ
                                                   தடம்மாறி தற்கொலைதான்
                                                            செஞ்சிகிட்டு செத்தாயோ
                                                   ஒடம்பு பின்னமாகி
                                                           ஓரமா நீ கெடந்த
                                                   குடும்பம் உருக்குலஞ்சி
                                                           கண்ணீரில் மிதக்குதையா
   

                                                    உப்பு தண்ணிதானே
                                                            உலகமெல்லாம் நிறைஞ்சிருக்கு
                                                    எப்பவுமே அதர்மம்தான்
                                                            அதிகாரம் செஞ்சிருக்கு
                                                    தப்பு செஞ்சவன் தான்
                                                            தலநிமிந்து நடக்குறானே
                                                    துப்பு கெட்ட உலகமிது
                                                             தூத்தாம என்னசெய்ய?


                                                    ஆதியில வாழ்ந்தசனம்
                                                            சாதியைத்தான் நினச்சதில்ல
                                                    பாதியில வந்த சாதி
                                                            பாடா படுத்துதையா
                                                    சேதம் செஞ்சுதான்
                                                             செல்வாக்கை காட்டணுமா?
                                                     மோதி  சாகணுமா?
                                                             முட்டாளா வாழணுமா?--------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 12 ஜூலை, 2013

லேசா பொறாமைப் படலாம் வாங்க!


  
வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு வெட்டியாக  பதிவு எழுதுபவரா நீங்கள்? வாங்க இவங்களை பாத்து கொஞ்சம் பொறாமைப் படலாம்.
கூகிள் பதிவு எழுதுபவர்கள் சம்பாதிப்பதற்கு ஆட்சென்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட வலைப்பூக்களுக்கு கூகிள் விளம்பரங்களை வழங்குகிறது. அதன் மூலம் கணிசமான வருமானம் பெறுபவர்கள் உண்டு. ஆனால் தமிழில் எழுதுபவர்களுக்கு இந்த விளம்பரங்களை கூகிள் தருவதில்லை. தமிழில் எழுதுபவர் சிலரும் எப்படியோ கூகிள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் பெறுவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு எந்தஅளவுக்கு வருமானம் கிடைக்கறது என்று தெரியவில்லை
 
   சமீபத்தில் ஆட்சென்ஸ்  மூலம் அதிகமாக சம்பாதிக்கும்  முதல் 10 இந்திய பதிவர்களைப் பற்றி அறிய நேர்ந்ததது. இதோ அந்த விவரம்.இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்
பெருமூச்சு விட்டுட்டும் படிக்கலாம் படிச்சிட்டும் பெருமூச்சு விடலாம்.


முதல் இடத்தில் இருப்பவர் அமீத் அகர்வால்.இவரது வலைப பூவின் பெயர் digital insipration; வலைபூ முகவரி www.lebnol.org.  I.I.T இல படித்த பொறியியல் பட்டதாரியான கணினி தொழில் நுட்பப் பற்றி எழுதிவரும் இவர் இந்தியாவின் முதல் முழுநேர தொழில்முறைப் பதிவராம்.இவரது சராசரி வருமானம் $40000. வருடத்திற்கு அல்ல மாதத்திற்கு.
 
2 வது இடம் அமித்பவானி  amitbhawani tech blog என்ற வலைபூ இவருடையது. வலைபூ முகவரி amitbhawani.com/blog கணினி தொழில் நுட்பம், பற்றியே  எழுதுகிறார். இவரது வருமானம்  $20000..இவரது வலைப் பூ எளிமையானவடி வமைப்பில் உள்ளது.
 
3. Shout Me Loud என்ற வலைப்பூவின் உரிமையாளர்  ஹர்ஷ் அகர்வால் .ஒரு மென்பொருள் பொறியாளர் .முன்னணி கணினி தொழில் நுட்ப நிறுவனமான அக்செஞ்சர் நிறுவனத்தில் கிடைத்த வேலையை ஒதுக்கி விட்டு முழு நேர வலைப் பூ எழுதுபவராக மாறினார்.அவர் குடும்பத்தினர் இதை எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லையாம்..இன்று மாதம் 15000$  வருமானம்  ஈட்டுகிறார். முகவரி http://www.shoutmeloud.com/
4.மாதம் 11000$ ஈட்டும் ஜஸ்பால் சிங் http://savedelete.com/ என்ற ப்ளாக் நடத்துகிறார். பெயருக்கேற்ற வகையில் கணினி குறிப்புகள் இவரது வலைப்பூவில் நிறைந்து காணப்படுகிறது.இவரும் மற்றவர்களைப் போலவே பொறியியல் பட்டதாரிதான். ஆனால் மெக்கானிக்கல் படித்தவர்.கணினியின் மீது தீராத  காதல் கொண்ட இவர் தூங்குபோது கூட மடிக் கணினி யுடன்தான் தூங்குவாராம்


5. கணினி அல்லாத துறையில் எழுதுபவர்களில்  முன்னணியில் இருக்கும் பிளாக்கர்  அருண் பிரசாத் தேசாய். பிசினஸ், மார்கெட்டிங் ட்ரெண்ட் பற்றிய செய்திகள் இவரது  trak.in வலைப்பூவில் அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன .இவரது மாத வருமானம் 10000$ களாம். IT பொறியாளராக இருந்த போதும் பிசினஸ் தான் இவரை கவர்ந்திருக்கிறது.

 
6. நிர்மல் பாலச்சந்திரன்: கணினி செல்போன் நுட்பங்கள்  பற்றி எழுதி முன்னிலையில் இருக்கும்  பதிவர் கொச்சியை சேர்ந்த இவர் சிவில் இஞ்சினியர்.முன்னணி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய இவர்    அதனை துறந்து 24 மணி நேர வலைப பதிவர் ஆனார்.இவரது வலைபூ http://www.nirmaltv.comநிர்மல் டிவி.காம் இன் மாத வருமானம் 9000$ 

 
7.  blogsolute.com ஐ தொடங்கி கணினி தொடர்பான செய்திகளை எழுதி வரும் ரோஹித் லாங்டே ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் .இவர் ஈட்டும் டாலர் வருமானம் 8500.கணினி சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் இவர் இணையம் கணினி தொடர்பான சொற்பொழிவுகளும் ஆற்றுகிராரம் .

 
 
 8. ராகுல் பன்சால் :இவரது வலைபூ Devil Workshopகணினி கைபேசி சார்ந்தே இவரது பதிவுகளும் அமைந்திருக்கின்றன . இவரது பொருளீட்டல் மாதந்தோறும் 7000 $. 
9. இன்னும் ஒரு முன்னணி கணினி, வலைபதிவுகள்  சார்ந்து வலைபதிவர் ஹனிசிங் .இவரது வலைப்திவின் பெயர்  Honeytechblog.com.  வருமானம்  6000$ மாதந்தோறும் அட்சென்ஸ் மூலமாக சம்பாதித்து வருகிறார்

 .
 
10. இந்த வரிசையில் இடம் பெற்றுள்ள  தமிழ்நாட்டை சேர்ந்த  ஸ்ரீனிவாசின் வலைபூ 9lessons. முகவரி http://www.9lessons.info/. கணினி மொழிகள் நிரல்கள், தொடர்பாகவே எழுதும் இவரது வருவாய் மாதம்  5000$ . சென்னையில் வசிக்கும் இவர் DR. MGR பல்கலைக் கழகத்தில் படித்த மென்பொறியாளர்


  இவர்களைத் தவிர முன்னிலையில்  இருக்கும் இன்னும் பலரும் உண்டு.

       இவர்களைப் பற்றிய விவரங்களில் இருந்து சில விஷயங்களை  புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் கணினி தொடர்பான தகவல்களை  ஆலோசனைகளை பற்றி எழுதுபவர்கள் தான் பிளாக்கில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற முடியும் என்ற நிலையே தற்போது உள்ளது. இந்த நிலை ஒருநாள் மாறக் கூடும் 

   இவர்கள் யாரும் ஒரே நாளில் இந்த நிலையை அடைந்து விடவில்லை. Adsense  மூலம் வருமானம் ஈட்டுவதற்கு கடின உழைப்பும் உடனடி மேம்படுத்திக் கொள்ளுதலும் அவசியம் என்பதை இவர்களது பதிவுகள் உணர்த்துகின்றன. 
    கூகுளின் adsense அங்கீகாரம் பெற்ற மொழிகளில் தமிழ் இல்லை.  இந்தி மொழிக்கும் Adsense அப்ரூவல்  கிடைக்கவில்லை. இணையத் தொடர்பான முன்னேற்றம் இந்தியாவில் இன்னும் வளர வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

   அதீதமான நம்பிக்கையும்  உள்ளார்ந்த ஈடுபாடும், திட்டமிட்ட செயல்பாடும்   ஆழ்ந்த அறிவும் உடையவர்கள் எப்போதுமே வெற்றி பெறுகிறார்கள்.


நன்றி : தமிழ் கம்ப்யூட்டர் இதழ்  மற்றும் பல்வேறு இணைய  தளங்கள்

*********************************************************************************
எச்சரிக்கை: 1
பல்லு  இருக்கறவன் பக்கோடாவுக்கு ஆசைப்படலாம் பல்லு இல்லாதவன் "பன்"னோட நிறுத்திக்கணும்

எச்சரிக்கை  2 :  இந்தப் பதிவை அவங்கங்க பெட்டர் ஹாப் கிட்ட(ஏன் Best Half ன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க?) காட்டக்கூடிய தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால்  (அடி வாங்கினாலும் வெளிய சொல்லாத) காட்டலாம்

எச்சரிக்கை 3
இந்த top 10 வரிசையை பலர் பலவிதமாக வெளியிட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று உறுதிப் படுத்தப் படவில்லை,


*************************************************************************************** 

எழுத்துக்கள்  சிறியதாக காட்சி அளித்தால் தெரிவிக்கவும்