என்னை கவனிப்பவர்கள்

புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 நவம்பர், 2017

சோதனை மேல் சோதனை

 

                     (சும்மா  ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே)
 
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனை தான்  வாழ்க்கை என்றால் தாங்காது போ நீ!
                (சோதனை மேல் சோதனை )

நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது-ஒரு
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
                                                  (சோதனை மேல் சோதனை )

ஆதாரம் இருக்குதம்மா   ஆதரவில்லை-நான்
 அவதாரம் இல்லையம்மா தப்பித்து செல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல-எனது
அதிகாரம் செல்லலையே யாரிடம் சொல்ல
ஒரு நாளும்  நானிது போல் அழுதவனல்ல-அந்த
 திருநாளும் வந்ததை நான்  என்னென்று சொல்ல

                                                            (சோதனை மேல் சோதனை ) 

(மாமா!சொத்தை பறிகொடுத்தவன் எல்லாம் பறிச்சவனைப்  பாத்து பயப்படுவாங்க  . பறிச்சவனே பயந்து நின்னா
கடன் வாங்கினவன்  எல்லாம் கந்து வட்டிக்  காரனைப் பாத்து கலங்குவாங்க  . கந்து வட்டிக் காரனே கலங்கி நின்னா யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?)

சாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில-அட
ஒத்த இலைக்குக் கூட இப்ப வழியும் தெரியல
கூட வந்த கூட்டத்துக்கு குறைவே இல்லை-அதில்
ஒருத்தனையும் இப்போ இங்கே காணவும் இல்ல
கோடி கோடி பணம் இருந்தும் பயனும் இல்ல -ஒரு
மோடி வித்தை செய்தால்தான் தீரும் தொல்லை

                                                         (சோதனை மேல் சோதனை )


-----------------------------------------------------------------------------------------------------------


திங்கள், 9 மே, 2016

தேர்தல் ஸ்பெஷல்-ஓட்டல்ல வேட்டு

         உழவன் பசியால் வீழ்வதை மாற்றி
         உணவை அளிக்கும் அவன்தொழில் போற்றி
 
     
         செயற்கையின் சாயம் வெளுக்கும் முன்னர்
         இயற்கை அதனை விளக்கும் முன்னர்


         கற்றுத் தேர்ந்த கலைகளைக் கொண்டு
         சுற்றுச் சூழலை சுத்தமாய் ஆக்கி,


         தீவிர வாத வேர்களை அறுத்து
         தீவிர மான முயற்சிகள் எடுத்து


         மன ஏடுகளில் மதங்களை அழித்து             

         பதிவேடுகளிலும் சாதிகள் ஒழித்து

         அடுத்த தலைமுறை வாழ்ந்திட நினைத்து

         அனைத்து வளங்களும் சுரண்டுதல் தடுத்து

         அரிய தலைமை தேடிப் பிடித்து
         அரசியல் சாக்கடை தூய்மைப் படுத்து


         தேசப் பற்றை கொஞ்சம் நீட்டி

         உலகப் பற்றுடன் உயர் வழி காட்டும்

          உயர்ந்த  தலைவனை உண்மையாய் தேடு

          உன்னத பணிசெய் ஓர்முனைப் போடு 

          ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம் 
          ஓட்டைப் படகில் பயணம்  வேண்டாம் 

          மந்தை ஆடாய்  இன்னுமா வாழ்வாய்? 

          சிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய் 

          உந்தன் கையில் வாக்குச் சீட்டு 

          ஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு

          இலவசக் கவர்ச்சியில் வீழ்ந்துவிடாதே 
          வலையில் சிக்கி,பின் வருந்தி அழாதே 

           அரை வேக்காடாய் அரசியல் செய்யும் 
           கரைவேட் டிகளின்  தன்மை அறிந்து 

          விழிப்பாய் இருந்து வீரத் துடனே 
          கழிசடை எல்லாம் கழித்துக் கட்டு 
          
          எழுதிய விதியை மாற்றிக் காட்டு 
          எழுச்சி கொண்டே போடுஉன் ஓட்டு 

**********************************************************************************************
படித்துவிட்டீர்களா?


எம்.எல்.ஏ.ஆகிறாள் சரிதா-தேர்தல் ஸ்பெஷல்




வெள்ளி, 26 ஜூன், 2015

குலுங்கி அழுது கேட்கிறேன்-"என்னை ஏன் கைவிட்டீர்?"

      
இந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி 
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"ஒரு கைலியின் டைரிக் குறிப்பு
     இளைய தலைமுறையினரே! இது நியாயம்தானா?  இப்போதெல்லாம் நீங்கள் யாரும் என்னை சட்டைசெய்வதில்லையே ( நீ கைலி ஆயிற்றே உன்னை எப்படி சட்டை செய்ய முடியும் என்று பகடி பேச வேண்டாம்)  நடுத்தர வயதினர் மட்டும்தான் எனக்கு தங்கள் இடையில் இடை ஒதுக்கீடு மன்னிக்கவும் இட ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.. அரை டிராயர் காலம் முடிந்தபின் என் ஆட்சி தொடங்கியது பழங்கதை. இப்போதோ நீங்கள் அரை டிராயரும் முக்கால் டிராயரும் பயன்படுத்த முடிவுசெய்துவிட்டீர்களே. வேட்டி கட்டுமுன் என்னை முதலில்  கட்டித்தானே பழகி இருந்தீர்கள்.. ஆடையாகத்தான்  எனக்கு அவ்வளவாக பெரிய மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் என்னை ஒதுக்காமல் இருந்தீர்கள். ஆனால்  சமீப காலங்களில் நான் உங்களால் தீண்டப் படாதவனாகி விட்டேன்.
      திரைப்படத்தில் கூட ரவுடிகளுக்கு என்னை அணிவித்து பயமுறுத்தினீர்கள். ஆனால்இப்போதெல்லாம் திரையில் வரும் ரவுடிகள்  கூட பெர்முடாஸ் அணிந்து அதன் மேலே லுங்கியை சும்மாதானே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் .ஷாருகான் கூட லுங்கி டான்ஸ் ஆடினாலும் டான்ஸ் பிரபலமாச்சே தவிர  லுங்கி பிரபலமாகவில்லையே! 
        என்னால் எவ்வளோ நன்மை அடைந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? என்னை எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பீர்கள். உடலின் ஒரு பாதியை மறைக்கும் ஆடையாக மட்டுமாக இருந்தேன்?. போர்வை இல்லாவிட்டாலும் நடு இரவில் தூங்கும்போது அப்படியே போர்த்திக் கொண்டு உறங்குவதற்கும் அல்லவா உதவினேன் ..வேட்டி கட்டியவர்களுக்கு சிலநேரங்களில்  வேட்டி அவிழுந்து விடும் அபாயம் உண்டு. ஆனால் என்றாவது திடீரென அவிழ்ந்து அவதிக்குள்ளாக்கி இருக்கேறேனா? வேட்டி போல என்மீது படிந்த அழுக்கை காட்டிக் கொடுத்திருக்கிறேனா . வேட்டியில் சட்டென்று வழித்து எடுத்து முகம் துடைக்க முடியுமா?   அம்மாவின் சேலையைப் போல எனக்கும் குழந்தைகளுக்கு தூளியாகும் வாய்ப்பை நீங்கள்தானே அளித்தீர்கள்.  எந்த இடத்தில் கிழித்திருந்தாலும் கிழிசலை காட்டாமல் மறைத்துக கொள்ளும் வசதி என்னைத் தவிர வேறு எந்த உடையில் உண்டு?  அப்படியே முழுவதும் கிழிந்து போனாலும் என்னை நீங்கள் விடவில்லையே! தலையணை உறையாக்கி தைத்துப் போட்டதை ஏன் மறந்து விட்டீர்கள்?. சமையலறையின் கைப்பிடித் துணியாகவும் அல்லவா நான் இருந்திருக்கிறேன். மிச்சம் மீதியை உங்கள் இருசக்கர வாகனங்களை துடைக்க நீங்கள் எடுத்துப் பயன்படுத்தியது இல்லையா? உண்மையை சொல்லுங்கள். உங்கள் வீட்டு மிதியடியாகவும் வாழ்ந்த பின்தானே  என்னை வழி அனுப்பி வைத்தீர்கள்?  இப்போது உங்களுக்கு  என்ன ஆயிற்று. என் மீது ஏனிந்தக் கோபம்.  
ஆண்களுக்கு மட்டுமா நான் ? அரிதாக சில இடங்களில் பெண்களும் என்னை அணிந்திருக்கிறார்களே.
         எனக்கு வில்லனாய் வந்து வாய்த்த பெர்முடாஸில் அப்படி என்னதான் இருக்கிறது? கோகோகோலா வந்ததும் கோலி சோடாவை மறந்ததுபோல ஆகி விட்டது என் நிலை.  லுங்கி கட்டினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கும் பெரிசுகள் கூட இப்போது பெர்முடாஸில் அலைகிறார்களே. பாத்ரூம் போவதற்கும், என்னை அணிந்தால்தானே வசதியாக இருக்கும். எந்த விதத்தில் நான் குறைந்து போனேன்?
     வேட்டியை பிரபலமாக்க வேட்டி  திருவிழா நடத்தினாரே சகாயம்  ஐ.ஏ.எஸ். அவர் கூட நான் இருப்பதை மறந்து விட்டாரே! இல்லாவிட்டால் லுங்கித் திருவிழாவும் சேர்ந்தே அல்லவா நடத்தி இருப்பார். வேட்டிக்கு அட்டகாசமாக விளம்பரம் கொடுக்கும் நம்ம பிரபலங்கள் என்றாவாது கைலிக்கு   விளம்பரம் தர முன் வந்திருக்கிறார்களா? பொங்கலுக்கு இலவச வேட்டி வழங்குவது போல் இலவச   கைலி  வழங்கினால் எத்தனை கைத்தறி நெசவாளர்கள் வாழ்த்துவார்கள்.
        கோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும்  வீட்டுக்குள்ளாவது இருந்தேனே! என்ற நிறைவுடன்தான் இருந்தேன். ஆனால் இப்போது அது கூட இல்லையே! 

      முன்பெல்லாம் பிளாட்பாரத்தில் கடைவிரித்து குறைந்த விலையில் லுங்கி விற்றுக் கொண்டிருப்பார்கள் இப்போது அவர்களும் பெர்முடாசுக்கு மாறி விட்டார்கள். வேட்டிக்காக குரல் கொடுத்த முகநூல்,ட்விட்டர் புரட்சியாளர்கள் எனக்கும் கொஞ்சம் குரல் கொடுப்பார்களா?
       இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் ,பர்மா போன்ற பக்கத்து நாடுகளிலும் என்னை அணிந்துமகிழ்ந்தார்கள்.என்னை சிலர் முஸ்லீம்களின் ஆடை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  . நம்முடைய கால நிலைக்கு நானே பொருத்தமானவன். ஆனால் ஏனோ பலரும் என்னை அநாகரீகமானவர்களின் உடையாகக் கருதி  கோவில்கள் ஹோட்டல்கள் கிளப்புகள் என்று பல இடங்களிலும் அனுமதி மறுக்கிறார்கள். வேட்டி கட்டிய நீதிபதியையே திருப்பி அனுப்பியவர்கள் ஆயிற்றே நம்மவர்கள். கைலி அவர்களுக்கு கேலிப் பொருளாகி விட்டதோ? இறுக்கமான மேலை தேசத்து உடைகளுக்கு அடிமையாகி விட்டவர்களிடம் உருக்கமாக பேசி என்ன பயன்?

     பங்களாதேஷில்  பரிதரா என்ற இடத்தில் லுங்கி அணிந்து கொண்டு வர தடைவிதித்தார்கள் .அதை எதிர்த்து போராட்டமே நடத்தப் பட்டது. உயர் நீதி மன்றம் தலையிட வேண்டிய நிலைக்கு போய் விட்டது, இப்படி படிப்படியாக எனக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வெற்றியும் கண்டு விட்டீர்களே.!இதானல் நீங்கள் அடைந்த பயன்தான் என்ன?
     நான் ஏழைகளின்  ஆடைதான். என்றாலும்   நடுத்தரவர்க்கமும் என்னுடன் நட்பு பாராட்டியது.ஆனால் இப்போது?
கட்டம் போட்டு காட்சி அளித்த  என்னை திட்டம் போட்டு ஒதுக்கி விட்டீர்களே!
கவனிப்பு குறைந்து கிடக்கும் நான் (கு)லுங்கி, அழுது கேட்கிறேன்"என்னை ஏன் கைவிட்டீர்?"


************************************************


நேரம் கிடைக்கும்போது இதையும் படித்துப் பாருங்கள் 


ஞாயிறு, 14 டிசம்பர், 2014

லிங்கா-ஒரு வித்தியாசமான விமர்சனம்


இவ்விமர்சனத்தை கூர்ந்து படியுங்கள் . இது ஒரு வித்தியாசமான விமர்சனம் . என்ன வித்தியசம்னு கடைசியில தெரிஞ்சுக்கோங்க.

                                     இணைய வெளியிலும் லிங்கா  லிங்கா
                                     அச்சு இதழிலும் லிங்கா லிங்கா
                                     தொலைக் காட்சியிலும் லிங்கா லிங்கா
                                     வலைப்பதி வனைத்திலும் லிங்கா லிங்கா
                                     லிங்கா காய்ச்சல் பரவிக் கிடப்பதால்
                                     இங்கே நானும் காய்ச்சலில் வீழ்ந்தேன்.
                                     கமர்சியல் உச்சம் தொட்ட லிங்கா 
                                     விமர்சனம் எழுதிட நானும் விழைந்தேன்  

                                    ரஜினியை மட்டும் நம்பும் படம்தான்
                                    ரசனை என்பது அதற்கப் புறம்தான்
                                    தலைவா! தலைவா! குரல்கள் ஓங்க
                                    ஒலித்திடும் விசில்களால்  அரங்கம் அதிர
                                    ரஜினி தோன்றும்  காட்சிகள் எல்லாம்
                                    ரசிகர் பலர்க்கும் கொண்டாட் டம்தான்
                                    முதுமை முகத்தில்  தெரிந்தும்  லிங்கா
                                    பொதுவாய் கண்கள் உணர்வது 'யங்'காய்

                                    சொந்த செலவில் அணையைக் கட்டியும்
                                    நொந்து போக  வைத்தனர் சதியால்
                                   ஆண்டுகள் பலவும் கடந்து போயின
                                    மீண்டும் அணையை காப்பாற் றிடவே
                                    பேரன் ரஜினியை அனுஷ்கா மூலம்
                                    பேரிடர் தீர்க்க அழைப்பது கதையாம்
                                    கலெக்டராய் வந்து கலக்கும்  ரஜினி
                                    கலங்கவும் வைப்பது கதையில் நன்று
                                    இளைய ரஜினி நண்பர் களுடனே
                                     வளைய வருவது கலகல கலகல

                                     ரத்தின வேலுவின் காமிரா காட்சிகள்
                                    முத்திரை பதிக்குது சித்திரை நிலவாய்
                                     உண்மை அணையைப் பார்ப்பது போலே
                                     கண்முன் அணையை  நிறுத்திய தருமை
                                     கட்டிய கலைஞனை கவிதையில் வாழ்த்தலாம்
                                     கெட்டியாய் பிடித்து கைகளை குலுக்கலாம்
                                     
                                    ஆறே  மாத அவகா சத்தில்
                                    ஊரே போற்றும் படைப்பை அளிப்பது
                                    யாரால் முடியும்;முடித்தார் ஒருவர்
                                    வேறு யார்? கே.எஸ்.ரவிகுமார் அவரே
                                    நிறைகள் மட்டும் நெஞ்சில் நிற்பினும் 
                                    குறைகள் பலவும் கூறிட முடியும் 

                                    புதையல் போல ரஜினி கிடைத்தும்
                                    அதனை தவற விட்டு விட்டனரோ
                                    புதுமை ஏதும் இல்லை என்றாலும்
                                    பதுமை போல அனுஷ்கா , சோனா(க்ஷி)
                                    வந்து போயினர் கிளு கிளுப் பாக
                                    சிந்தை முழுதும் ஜிலு ஜிலுப்பாக 

                                   முன்கதை மிதமாய் செல்லும் ரயில்போல்
                                   பின்கதை கொஞ்சம் பரவா யில்லை
                                    நகைச்சுவைக் காக சந்தானம் இருந்தும்
                                   பகைச்சுவை கொஞ்சம் பஞ்சம் மென்பதால்
                                   சுறுசுறுப் புடனே ரஜினி நடித்தும்
                                   பரபரப் பின்றி  படம் செல்கிறதோ?
                                   ஆஸ்கார்  ரகுமான் இசையமைத் திருக்கிறார்
                                   பாஸ்மார்க் மட்டுமே வாங்கி இருக்கிறார்
                                    நண்பா பாடல் பாலுவின் குரலில்
                                   தெம்பு  குறைவாய் இருக்கிறதென்பேன்
                                    படமிது சூப்பர் என்றே கொள்வோம்
                                   அடுத்தது இதைவிடசுமாராய்  இருந்தால்


*****************************************

பாஸ்! என்ன வித்தியாசம்னு  கண்டு பிடிச்சீங்களா?  

ஒண்ணு  இது கவிதை(?)  நடையில இருக்கு 
இன்னொண்ணு  ரசிகர்கள் கோவிச்சுக்கலைன்னா சொல்றேன் 
நான் இன்னும் படம் பாக்கல பாஸ் !  ஹிஹிஹிஹி 
யாரும் அடிக்க வந்துடாதீங்க . ஒரு  வாரம் நான் எஸ்கேப் 

நன்றி : தொலைகாட்சி,வார இதழ்கள்,, நாளிதழ்கள் ,இணைய இதழ்கள்,வலைப்பூக்கள்

*****************************************************************


கொசுறு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவிதையில் ஒரு படத்தின் விமர்சனத்தை எழுதி இருந்தேன்.பொழுது போகலன்னா படிச்சு பாருங்க

புதன், 1 அக்டோபர், 2014

பாவம் செய்தவர்கள்

     
    அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மின்சார ரயிலில்  கூட்டமில்லை. இருக்கைகள் காலியாகவே இருந்தன. வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"  என் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது. 

    கணவன் மனைவி , ஒரு சிறுவன், ஒருபெண் குழந்தை (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம்)  கொண்ட சிறு குடும்பம் என் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.தனக்கு ஜன்னலோர இடம் வேண்டுமென்று அடம் பிடித்து அமர்ந்த சிறுவன் அதன் பயனை அனுபவிக்காமல் செல்போனில் கேம் விளையாட ஆரம்பித்து விட்டான்.அந்தப் பெண் குழந்தையோ  நிறைய இடம் இருந்தும் தந்தையின் மடிமேல் அமர்ந்தது . அதன் துறுதுறு பார்வையும் சுறுசுறு  செயல்களும், கலகல மொழிகளும் அந்தப் பெட்டியில் இருந்த சொற்ப பேர்களையும் ஈர்த்தது. புத்தகக் கவிதையில் இருந்து அந்தக் குழந்தைக் கவிதையின் பக்கம் என் கவனம் திரும்பியது.

   தன்னையும் தன கணவனையும் சற்று  நேரம் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து அந்தப் பெண் கேட்டாள் "என்னடி! இப்படி லூசு மாதிரி  பாத்துகிட்டே இருக்கே! '

"உன்னை விட அப்பா அழகா இருக்கார்மா" என்று அதிர்வெடியை சிரித்துக்கொண்டே வீசியது அந்த பிஞ்சுக் குழந்தை"

    பொது இடத்தில் இப்படி சொல்லிவிட்டாளே என்று முகம் முழுவதும் கோபம் லேசாகப் பரவ கணவனைப் பார்த்தாள் அந்த மங்கை.  கொஞ்சம் பெருமிதம் அடைந்தாலும் மனைவியின் மன ஓட்டத்தை அறிந்த கணவன் தன சுட்டு விரலை குழந்தையின் வாய் மீது வைத்து மூடினான். அம்மாவின் கோபம் உணர்ந்த குழந்தை, தாவி சென்று அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு சமாதனப் படுத்த முனைந்து . கோபம் கரைந்து போனதை அறிந்து துணிவு கொண்ட குழந்தை அம்மாவின் கன்னத்தை கிள்ளியது . தடுத்தும் கேளாமல் நெற்றியில் வைத்திருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டது. என்ன நினைத்ததோ அதை எடுத்து மூக்கில் வைத்துப் பார்த்து "எப்படி இருக்கு" என்று தலையை ஆட்டி ஆட்டி கேட்டது.

"இது எதுக்குடி? நீ  பெரிய பொண்ணா வளர்ந்ததும் உனக்கு மூக்கு குத்திடலாம்"

"ஐயய்யோ!  வேணாம், மூக்கு குத்தினா வலிக்கும். நான் குத்திக்க மாட்டேன். ஸ்டிக்கர்தான் வச்சுக்குவேன். அப்பா! அம்மாகிட்ட சொல்லு  என்று செல்லமாய் சிணுங்க,

"சரிடா கண்ணு" என்ற கணவனைப்பார்த்து "இப்படியே செல்லம் கொடுத்தா உருப்பட்டா மாதிரிதான்" என்று மனைவியின் முகமொழி கூறுவதுபோல் தோன்றியது 

    அதற்குள் செல்போன் ஒலிக்க தந்தையின் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து ஆன் செய்து தந்தையின்  காதில் வைத்தாள் .பேசி முடிக்கும் வரை அப்படியே வைத்திருந்தாள். பின் மொபைலை நோண்டி கேமராவை கண்டறிந்து விதம் விதமாக செல்பி எடுத்தாள். அதில் தான் அம்மா அப்பா அண்ணனுடன்  இருக்கும் படத்தை மீண்டும் மீண்டும் காட்டி மகிழ்ந்தாள். 

"டேய்!  இங்க பார்டா"  என்று குட்டித் தங்கை அழைப்பதை  கண்டு கொள்ளாமல் இன்னும் செல்போனில் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தான் சிறுவன் .

நான் லேசான பொறாமையுடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் 

"சே! பெண்குழந்தை இல்லாதவர்கள், பாவம் செய்தவர்கள்" 

**********************************************************************************

ஆச்சர்யக் கொசுறு : குழந்தை மம்மி டாடி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை 


************************************************

எச்சரிக்கை: 

   பல்வேறு காரணங்களால் நான் வலைப் பதிவு எழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இக் காலக்கட்டத்தில் பதிவுலகம் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைத்ததால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும்  எழுத வந்துவிட்டேன். என்ன செய்வது? சகித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. ஹிஹிஹி 


ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நான் ரொம்ப நல்லவன் சார்!

 சார்! என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க. அப்படித்தான் எல்லார் கிட்டயும் பேர் வாங்கி இருக்கேன். அதுல என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா!நல்லவனா இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கு தெரியாது.
  எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் ரொம்ப நல்லவன் சார். சின்னவயசுல இருந்தே என்னை அப்படி வளத்துட்டாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா ஒரு நாள் ஹால்ல அரிசியை முறத்தில வச்சுட்டு துணி துவைக்க போய்ட்டாங்க. போறதுக்கு முன்னாடி "நீ ரொம்ப சமத்தாம். ரொம்ப ரொம்ப நல்ல பையனாம். . அரிசிய இறைக்காம  விளையாடனும்"னு சொல்லிட்டு போனாங்க. அம்மா நல்லவன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது,  ஆனா அரிசிய கையில எடுத்து ஹால் பூரா இறைச்சு  விளையாடனும்னு ஆசையா இருந்தது.  என்ன பண்றது என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்களே! என் ஆசைய அடக்கிக்கிட்டேன்.

  எங்கப்பாவோட  பிரண்டு ஒரு நாள் வந்தார் . ஒரு பொம்மைய வாங்கி எனக்கு பிரசன்ட் பண்ணார். அந்த பொம்ம எனக்கு பிடிக்கவே இல்லை. கீழ போட்டு உடைக்கலாம்னு நினைச்சேன். அப்பா அவர் எங்கப்பாகிட்ட சொன்னாரு "உங்க பையன் ரொம்ப நல்ல பையன்னு என் வைப் அடிக்கடி சொல்வா! என் பையன் இருக்கானே ரொம்ப மோசம் எந்த பொருளை கொடுத்தாலும் உடனே உடைச்சிடுவான்"
  அவர் அப்படி சொன்னதும் நான் என்ன சார் பண்ண முடியும்? பொம்மைய தூக்கி போட்டு உடைக்கும் ஆசைய தூக்கி போட்டுட்டேன். புத்தகத்தை கிழிக்கனும் தண்ணியகொட்டணும், குளிக்கறதுக்கு அடம் பிடிக்கணும், ஓ ன்னு கத்தணும் இப்படி எல்லாம் செய்யணும்னுதான் நினைப்பேன்... ஊஹூம்

   எனக்கு ஒரு தங்கை உண்டு  சார். அவளை நைசா கிள்ளனும், முதுகில ஓங்கி அறையனும். அவ அழறத பாத்து சிரிக்கணும் நினைப்பேன். எங்க சார் அதெல்லாம் முடிஞ்சுது.? அக்கம் பக்கத்து வீட்டில இருக்கறவங்க எல்லாம் அவங்க பசங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடறதா எங்க அம்மாக்கிட்ட சொல்வாங்க. உங்க பசங்க பரவாயில்லையே ஒத்துமையா இருக்காங்களேன்னு பாராட்டுவாங்க. அதுக்காகவே சண்டை போடறதில்லை சார்.

  வீட்டிலதான் இப்படின்னா ஸ்கூல்லயும் அப்படித்தான்.  நல்லவன்னா என்ன நெத்தியில எழுதி ஒட்டியா வச்சுருக்கும்? எங்க மிஸ்கூட அப்படித்தான் சொல்வாங்க. ஒருநாள் கிளாஸ்ல எல்லோருக்கும் டிக்டேஷன் குடுத்தாங்க. அதுல சிலதுல்லாம் எனக்கு தெரியல. சரி முன்னாடி இருக்கவன பாத்து எழுத எட்டிப் பாக்கலாம்னு நினச்சேன்.  இன்னொரு பையன் அவனுக்கு முன்னாடி இருந்த பையனை பாத்து எழுதிக்கிட்டிருந்தான், அதை பாத்துட்ட மிஸ் அவன் காதை திருகி அவன் கிட்ட என்னைக் கையா நீட்டி  காமிச்சி, "அவனை  பாரு! அவனுக்கு தெரியலன்னாகூட காப்பி அடிக்க மாட்டான். அவன மாதிரி நல்ல பையனா இருக்கணும்" னு  சொன்னதுக்கப்புறம் காப்பி அடிக்க மனசு வரல சார் எனக்கு 

   பெரியவங்க இருக்கட்டும் என்கூட படிக்கிற  பிரண்ட்சுங்க கிட்ட கூட எனக்கு நல்ல பேருதான் சார். நாங்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவோம். எதிர் டீம் பசங்ககூட என்ன நேர்மைய பாராட்டுவாங்க சார். பேட்ல லேசா பட்டு கேட்ச் புடிப்பாங்க. அது அவங்களுக்கே தெரியாது.  அவுட் கொடுக்காமலே நானே வெளிய போய்டுவேன். இந்த மாதிரி மேட்சுல பேட்டிங் டீம்ல ஒருத்தர அம்பயரா நிப்பாங்க. யாரா இருந்தாலும் ரன் அவுட், ஸ்டம்பிங் அவுட் ஒத்தக்க மாட்டாங்க. நான் மட்டும் கரெக்டா அவுட் குடுத்த்துடுவேன். ஆப்பனன்ட் டீம்காரங்க நான்தான் அம்பயரா இருக்கணும்னு ஒத்தக்கால்ல நிப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன்.

  காலேஜ் போற காலம் வந்துச்சு சார். என்கூட படிக்கிற பசங்க எல்லாம் ஜாலியா பொண்ணுங்க கூட அரட்டை அடிப்பாங்க கிண்டல் பண்ணி விளையாடுவானுங்க.  லேடீஸ் காலேஜ் வாசல்ல சைட் அடிக்க போவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் என்னை கூப்பிட்டுக்கிட்டு போக மாட்டாங்க. எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் ஆனா என்னால அவங்கள மாதிரி என்னால இருக்க  முடியாது.
   அடிக்கடி கட் அடிச்சிட்டு பரங்கி மலை ஜோதியில சினிமா பாப்பானுங்க. அடுத்த நாள் அந்த சினிமாவைப் பத்தி பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருப்பாங்க. நான் பக்கத்தில போகும்போது நிறுத்திட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் இந்த பொண்ணுங்க ரொம்ப மோசம் சார். எங்கிட்ட பேசும்போது மட்டும் பாடத்தைபத்தி மட்டும்தான் பேசுவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் கன்னாபின்னான்னு பேச மாட்டேனாம். எப்படி இருக்கு பாருங்க சார். காலேஜ் லைப் இப்படியே முடிஞ்சு போச்சு .

   அப்புறம் வேலை கிடைச்சது. அங்கயும் இதே கதைதான். நான் திறமையானவனாம் ரொம்ப பொறுமைமையானவனாம். என்கூடவேலை செய்யறவங்களும் அப்படித்தான் சொன்னாங்க.
சாருக்கு மட்டும் எப்படி கோவம் வராம இருக்குன்னு கேப்பாங்க. அப்புறம் எனக்கு எப்படி சார் கோவம் வரும்?

   கல்யாணமாச்சு  சார் எனக்கு. மாமியார் வீட்டில எனக்கு ரொம்ப நல்ல பேரு. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. . என்ன சார் பண்றது. நல்லவனா இருந்துதானே ஆகணும் அப்புறம் என்மனைவிக்கும் என்மேல நல்ல அபிப்ராயம்னா பாத்துக்கோங்களேன்.நம்ப முடியல இல்ல? நம்பறதெல்லாம் நடக்காததும்,நம்பாததெல்லாம் நடக்கறதும்தனே வாழ்க்கை !
   ஒரு நாள் நான் கம்ப்யூட்டர்ல ஒக்காந்து ஏதோ பண்ணிக்கிட்டிருந்தேன். என் மனைவியும் அவங்க பிரண்டும் ஹால்ல பேசிக்கிட்டிருந்தாங்க. "எங்க வீட்டுக்காரர் மாதிரி நல்லவர ரேராத்தான் பாக்க  முடியும். எனக்கு வீட்டு வேலையில ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். லீவு நாள்ல டீ ல்லாம் போட்டு கொடுப்பார்" னு என் மனைவி சொன்னது என் காதில விழுந்தது.

  அப்புறம் என்ன நடந்திருக்கும்னு  நீங்க நினைக்கிறது சரிதான் சார். ஆமாம் நான் எப்படி சும்மா இருக்க முடியும். உடனே கிச்சனுக்குள்ள நுழைஞ்சு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டுப் போய் குடுத்தேன். 

    இப்படியே காலம் போய்க்கிட்டிருந்தது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வீட்டுக்கு திரும்பினதும் டேபிள்ல  5 வது படிக்கிற என் பையனோட ரேங்க் கார்டு பாத்தேன். மார்க்கெல்லாம் குறைவா இருந்தது. எனக்கு கோவமா வந்தது. ரெண்டு சாத்து சாத்தனும்.  கையெழுத்து போடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். எங்க பையனைக் காணோமேன்னு தேடினேன். வெளிய ரோட்ல அவன் ப்ரெண்டு கூட பேசிக்கிட்டிருந்தான் அவன் என்பையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்  "டேய்! எங்கப்பாகிட்ட  ரேங்க் கார்டு இன்னும் காட்டலடா. நான் வாங்கி இருக்கிற ரேங்க்குக்கு என்ன செம அடி அடிப்பாருடா? உங்க அப்பா அடிப்பாரா" ன்னு கேட்டான். என் பையன்சொன்னான், "எங்கப்பா ரொம்ப நல்லவரு அடிக்க மாட்டாருன்னு.
அதை  என் காதில கேட்டுட்டனே சார். அப்புறம் எப்படி நான் அடிக்க முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கு சார் . எதை சொல்றது எதை விடறது.

   என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தியே நல்லவனாக்கிட்டாங்க சார். வேற வழியில்ல இனிவாழ் நாள் முழுசும் நல்லவனா இருக்கவே முடிவு செஞ்சிட்டேன்.  என்ன சார் சொல்லறீங்க?.

******************************************************************************************
 குறிப்பு: இதில் வரும் நான் நானில்லைங்க. முற்றிலும் கற்பனைதான். நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். ரொம்ப நல்லவங்க . ஹிஹிஹி 

*******************************************************************************
படித்து  விட்டீர்களா?
******************************************************************************************************

ஞாயிறு, 28 ஜூலை, 2013

சுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?

  தற்போது  சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ கேட்கவே வேண்டாம். புத்தகக் கண்காட்சியின்போது ஆர்வத்தின் காராணமாக வாங்கி வைத்த நாவல்கள் இன்னமும் படிக்கப் படாமல் (படிக்கமுடியாமல்) அலமாரியில் உறங்குவதாக  பலரும் சொல்கின்றனர். ஆனாலும் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
  ஒரு சிறு கதை எப்படி இருக்கவேண்டும் என்பதை சுஜாதா இப்படிக் கூறுகிறார். தற்போது எழுதுபவர்கள் அதை கருத்தில் கொள்ளலாம்.

   "எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. நல்ல சிறுகதை என்பது சிறிதாக சிறப்பாக விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால் சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லலாம் என்று குத்து மதிப்பாக கொள்ளலாம். நூறு பக்கம் இருந்தால் அதை சிறுகதை என்று ஒப்புக் கொள்வது கடினம்.அதே போல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதை சுருக்கம். நான்கு வரிகளுக்கு கீழ் இருந்தால் கவிதையாக சொல்லிவிடலாம்.சில நேரங்களில் சில கட்டுரைகளை கூட சிறுகதையாகக் கருதலாம். 

   கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள்.ஒரு கதை ஜீவித்திருக்க அது சிறப்பாக சொல்லப் பட்டிருக்க வேண்டும்.யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம். நூற்றாண்டுகாலத்தையோ  சில நிமிஷங்களையோ சொல்லலாம். கருப்போ சிவப்போ,ஏழையோ, பணக்காரனோ, வயதானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ, தர்மகர்த்தாக்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளாகவோ எந்த கதாபாத்திரமும் தடை இல்லை.மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம்.கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்க சிரிக்க சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

    இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதையில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பொது அம்சம்தானுண்டு. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது கதையல்ல. பஸ் டிக்கெட்.. ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை. நல்ல சிறுகதைகள் காலத்தையும் அன்றாட அவலங்களையும் கடக்கின்றன. 

   ஒரு கதை உங்களை பாதித்திருந்தால் ஒரு மாதம்; ஏன் ஒரு வருடம் விட்டுக் கூட அதை நீங்கள் திருப்பி சொல்ல முடியும். இது உங்கள் ஞாபகப் பிரச்சனை அல்ல.கதையின் பெயர்கள்,இடம் பொருள்,ஏற்பாடெல்லாம் ஞாபகம் இராது. ஆனால் கதையின் அடிநாதம், அதில் படித்த ஒரு கருத்தோ வரியோ நிச்சயம்  நினைவிருக்கும். அப்படி இல்லை என்றால் அந்தக் கதை உங்களைப் பொருத்தவரை தோல்விதான்.

    இதே விதிதான் கவிதைக்கும். இதேதான் நாவலுக்கும். ஒரு வாசகன் தனக்கு பிடித்தமான எழுத்தாளனை நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது

   நல்ல கதைகளை அலசிய ஹெல்மெட் பான் ஹைம் என்பவர் அவற்றுக்கு சில அடையாளங்களை சொல்லியிருக்கிறார். சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்துக்கு முன் கதையின் தொண்ணூறு சதவீதம் நடந்து முடிந்திருக்கும். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அதாவது சிறுகதையின் முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரும்பாலான கதைகள்  ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக் காட்டி முடிகின்றன அல்லது கேள்விக் குறியில்.

     மொத்தத்தில் சிறுகதை என்பது அற்புத கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்."

   சுஜாதாவின் வரையறைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

    ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். எப்போதோ படித்ததாக இருந்தாலும் இப்போதும் மனதில் அவ்வப்போது நினைக்கத் தோன்றுபவை சிறந்த சிறுகதைகள் 
அதன் படி என் மனதில் நிற்கும் சில சிறுகதைகள் 

1. காளையர் கோவில் ரதம் 
இது பள்ளியில் Non Detailed புத்தகத்தில் படித்தது. இதை எழுதியவர் ஜெகசிற்பியனா? கோ.வி.மணிசேகரனா? என்று நினைவில் இல்லை.
2. The Blind Dog- R.K.Narayan.  இது ஆங்கில Non detail இல் படித்தது.
3. நந்தவனத்தில் ஓர் ஆண்டி- ஜெயகாந்தன்- இதுவும் Non detailed
4. மாஞ்சு- சுஜாதா - குமுதத்தில் படித்தது என்று நினைக்கிறேன்
5. வெறுங்கையே மீண்டுபோனான்.- எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. விகடனில் படித்தது
  இந்த கதையை மூத்த பதிவர் சென்னை பித்தன்  பதிவாக வெளியிட்டிருந்தார். நானும் இதை அவருடைய வலைப்பக்கத்தில்தான் சமீபத்தில் படித்தேன். 
 7. யாரோ பார்க்கிறார்கள். -எப்போதோ படித்ததை(எங்கு படித்தது என்பது நினைவில் இல்லை) என் விருப்பத்திற்கேற்ப  மாற்றி பதிவிட்டிருக்கிறேன்.
(மேற்குறிப்பிட்டவை எல்லாம் பழைய எழுத்தாளர்கள் எழுதியவை.)

   இது போல சில சிறுகதைகள் உங்களையும் கவர்ந்திருக்கலாம். முடிந்தால் அவற்றை கருத்தில் தெரிவிக்கவும்.

******************************************************************************************

படித்து  விட்டீர்களா?
கணினி! நீ ஒரு டிஜிடல் ரஜினி !
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்

வியாழன், 25 ஜூலை, 2013

மீண்டும் திருவிளையாடல்



                மீண்டும் போட்டி  வைத்தார் 
                சிவபெருமான் 
                உலகை சுற்றிவர 

                அம்மை அப்பனை சுற்றி வரும் 
                அழுகுணி ஆட்டம் கூடாது 
                அழுத்தி சொன்னார் முருகன் 

                 சம்மதித்தார்  சிவபெருமான்.

                 இம்முறை   தோற்கக்  கூடாது;
                 முடிவுடன் விமானம் ஏறி விரைந்தார்
                 வேலன் .

                  மவுசுடனேயே இருக்கும்
                  புத்திசாலிப் பிள்ளையார் 
                  கணினி முன் அமர்ந்தார்
                  சொடுக்கினார் மவுசை
                  அழைத்தார் கூகுளை
                  வலம் வந்தார் பூமியை 
                  நொடியிலே முடிந்தது
                  பழம்  கிடைத்தது 
                  கணினி கைகொடுத்தது 

                  மீண்டும் திருவிளையாடல் 

*********************************************************

எச்சரிக்கை:எனது கணினி அனுபவம் இன்று மாலை அல்லது நாளை 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -போட்டி


திடம் கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் ஆறுதல் பெற்ற கடிதம்.
(எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கடிதம் மூலம் காதலை சொல்லி விடுவார்கள். குமாரை போன்ற நினைத்ததை எழுதத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் காதல் வராதா என்ன?  வந்தால் மனதில் உள்ளதை தன் மனம்  கவர்ந்தவர்களுக்கு எப்படி சொல்வார்கள்?   இப்படி சொல்வார்களோ! )

என்னை கவுத்து போட்ட சரோஜாவுக்கு,

   அது இன்னமோ தெர்ல சரோ, கொஞ்ச நாளா  உன்னை பாக்கறப்பல்லாம் ஒரு மாரியா கிறு கிறுன்னு ஏறுது. ஆய்ரம் கொசு என்ன மொச்சுக்கினு இருந்தாலும் அடிச்சு போட்ட மாதிரி தூங்குவனா. இப்பெல்லாம் இன்னாடான்னா உன் நெனப்புதான் கொசுவா மொச்சுகிட்டு என்ன தூங்க வுடாம பண்ணுது. இது என்னாத்துக்கு?.. எப்போ? இப்படி ஆச்சுன்னு ஒண்ணும் புர்ல 

  இதை  எப்டியாவது உன்கிட்ட சொல்லனும்னு பாக்கறேன். தொண்டை வர்ல வந்து பேச்சு முட்டிக்கினு நிக்குது. எழுதி குடுக்கலாம்னா எனுக்கு அவ்வளவா எழுத வராது. அப்பறம்தான் ஒரு ஐடியா வந்திச்சு . பர்மா பஜார்ல 500 ரூபாக்கு ஒரு செல் போனை வங்கனேன்.அதுல பேசறத அப்படியே பதிவு பண்ணலாம்னு சொன்னாங்களா. அங்க நின்னுக்கிட்ருந்த சீனு ன்னு ஒரு தம்பி கிட்ட எப்பிடி ரிக்கார்ட் பண்றதுன்னு கத்துகிட்டனா? அப்புறம் ஊட்டுக்கு வந்து என் மனச புட்டு புட்டு இதுல சொல்லி இருக்கறன். இதக் கேட்டுட்டு நீ சொல்றதுலதான் என் வாய்க்கையே இருக்கு. சரோ என் மனசை கவுத்த நீ வாய்க்கைய கவுத்துபுடாத!

  நீயும் நானும் ஒண்ணாப்புல இருந்து அஞ்சாப்பு வர ஒண்ணாதான கார்பரேசன் இஸ்கூல்ல  படிச்சோம். ஒரு நாள் குச்சி ஐஸ் வாங்கி சப்பிக்கிட்டிருந்தயா. நான் அதை புடுங்கினு ஓடிட்டனா? நீ உங்கம்மா கிட்ட சொல்ல, உங்கம்மா எங்கப்பாகிட்ட சொல்ல எங்கப்பா என்னை குச்சி எடுத்து வெலாச வந்தப்ப நீதானே "பாவம், வுட்டுடுன்னு சொன்ன. அப்ப வந்த இதுவா இருக்குமோ?. அப்புறம் ஒருநாளு கணக்கு டீச்சர் கணக்கு ஓம் ஒர்க் கேட்டப்ப நீ ஒன் நோட்ட குடுத்து என்ன அடி வாங்காம காப்பாத்தினியே அப்பத்துலேர்ந்து இருக்குமோ?எனக்கு ஒண்ணும் புரியல

   எத்தினியோ எலக்சன் வந்து போயும் இன்னும் அய்க்கா இருக்கிற நம்ம குப்பத்துல அயகா இருக்கிற ஒரே பொண்ணு நீதான. இஸ்கூல்ல படிச்சப்ப கூட இவ்ளோ அயகா நீ இல்லையே. இப்போ எப்படி வந்துச்சு. கருப்பா  இருந்தாலும் கலக்கலா இருக்கறய!. புச்சா புடிச்சிகினு வந்த மீனு வலயிலே துள்ளுமே அந்த மாதிரி கண்ணு, அப்புறம் கோன் ஐஸ் மாரி ஒரு கிளிஞ்சல் இருக்குமே! அத கவுத்து வச்ச மாதிரி மூக்கு, கடல்பஞ்சு மாதிரி உன் கன்னம். தூரமா கருப்பா தெரியற கடல் மாதிரி ஒன் முடி, வெள்ளை உப்பை கோத்து வைச்சது மாதிரி பல்லு. இதெல்லாம் பாத்தா மனசு பேஜாராவாதா நீயே சொல்லு. அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு!உன் பல்லு  இவ்ளோ வெள்ளையா கிதே. அது எப்பிடி? உங்கப்பன் பேஸ்டு கூட வாங்கித்தரமாட்டானே. கஞ்சனாச்சே! சரி, சரி, கோச்சுக்காதே! மாமானரை இனிமே மருவாத இல்லாம பேசமாட்டேன். அப்புறம்.. அது இன்னா கண்ணுக்கே தெரியாத மாதிரி ரெண்டு புருவத்துக்கு நடுவுல இத்துனூண்டு பொட்டு வச்சிக்கினுகிற? அயகாத்தான் இருக்குது இருந்தாலும் கொஞ்சம் பெரிசா வச்சாத்தான் இன்னாவாம். ஒன் ஒதடு மட்டும் லேசா ரோஸா இருக்குதே எப்டி? லிப்டிக் பூசறியா. இனிமே பூசாதே அது நல்லது இல்லையாம். அப்புறம் கல்யாணத்துக்கபுறம்  எனக்கு கஷ்டமா பூடும் 

    அஞ்சு மொழம் பூவு அடி எடுத்து வச்சு வந்த மாதிரி ஒரு நாளு ரேஷன் கடைக்கி அரிசி வாங்க வந்தயே, அரிசிப் பையை தூக்கி இடுப்பில வெக்க  நான்கூட ஒதவி செஞ்சேன். அப்ப உங்கை என்மேல பட்டுச்சி தெரியுமா?  வெண்ணெ  பட்டா எப்படி இருக்கும் அப்படி இருந்துச்சி எனக்கு.
    அப்புறம்  உன்மேல எனக்கு ஒரு இதுன்னு என்கூட சுத்திகினி இருப்பானுங்களே அந்த பசங்களுக்கு தெரிஞ்சிபோச்சா!..என்னாடா உன் ஆளு சரோஜானு பழய பேர் வச்சுக்குனு கீதுன்னு கடுப்பேத்துனானுங்க! எனக்கு வந்துச்சே கோவம். கழுத்தாமுட்லயே ஒன்னு உட்டு, "சரோஜாலதான் ரோஜா இருக்குடா பேமானிங்களா" ன்னு கத்துனனா? பசங்க மெர்சல் ஆயிட்டானுங்க. 

   அந்த  சோமாரிங்களுக்கு என்னா தெரியும் உன்ன பத்தி. அந்த பசங்க செவப்பு தோல் வச்சிகினு எல்லாம் தெரியற மாரி காட்டிக்கினு சுத்திக்கினுகிற பணக்கார பொண்ணுங்களுக்கு நூல் வுட்டுக்கினு இருக்கானுங்க. எவனோ இளவரசனாமே ரயில்ல  உழுந்து செத்தானாமே! அந்த மாதிரி இந்த பசங்க எந்த பஸ்சு கீய வுய போறானுங்களோ. வேணாண்டான்னா கேக்க மாட்றானுங்க.  நீ வேணாம்னு சொல்லு; இந்த பசங்க சாவாசத்த கூட இப்பவே  உட்டுடறேன். நீ சொன்னா கூவத்துல கூட குச்சிடுவன் தெர்யுமா?

     இன்னாடா இவன் இப்படி சொல்றானேன்னு நெனக்காத. காலையில ரோட்டுல கடைபோட்டு  இட்லி விக்கிற உங்கம்மாகூட,  இட்லி விக்க போவாத.  அரை நிக்கர் போட்டுக்கினு தெனோம் ஒடம்பு இளைக்க ஓடிக்கினு கிறானுங்களே அவனுங்கல்லாம் உன்ன ஒரு மாதிரியா பாத்துகினு போறானுங்க. பொண்டாட்டி தொல்லை தாங்காம பீச்சுக்கு வர ஒண்ணு ரெண்டு பெருசுங்க கூட உன்ன பாத்து ஜொள்ளு வுட்டுக்குனு போவுது. சொல்லிட்டேன் சாக்கிரதை.

     அப்பறம்  எவ்வளோ நாள்தான் இப்படியே சுத்திகினி இருக்கறது? உன்ன பாத்துத் தான் செட்டில் ஆவனும்னு எனக்கு ஆசயே வந்துச்சு. நம்பு சரோஜா! இப்பெல்லாம் நான் தண்ணி அடிக்கிறதில்ல. எல்லோர் கிட்டயும் மருவாதியாத்தான் பேசறேன். ரெண்டு நாளைக்கு  முன்னாடி பழைய ஒண்ணாப்பு டீச்சரைப் பாத்தனா.. தூக்கி கட்டின லுங்கிய இறக்கி விட்டு வணக்கம் சொன்னேன்னா பாத்துக்கயேன். 

     உனக்கு சோறாக்க  தெரியாதாமே! உங்கம்மா எங்கம்மா  கிட்ட கொற பட்டுக்கிச்சாம். பரவாயில்ல சரோ! நான் நல்லா சோறாக்குவேன். அதான் எங்கமாவுக்கு ஒடம்பு சரியில்ல இல்ல. எங்கப்பாதான சோறாக்கி போடுவாரு. நானும் கத்துக்கிட்டேன். நான் மீன் கொழம்பு வச்சா இந்த குப்பமே மணக்கும் நாலு நாளிக்கு வச்சிருந்து சாப்பிடலாம்னு எங்கம்மா சொல்லும். அப்புறம் நான் மீன் கொயம்பு வக்கும் போதெல்லாம் அஞ்சலை இல்லை? அதான் எங்க பக்கத்து வூட்ல கிதே அதான், மோப்பம் புச்சிகினு வந்து எனக்கு கொஞ்சம் குடுன்னு கேட்டு பல்ல இளிச்சுகினு  நிக்கும். அதுவும் அது மூஞ்சும் அத்த பாத்தாலே எனக்கு புடிக்கல.

    நீ  என்ன  கட்டிக்கினன்னு வச்சுக்கோயேன், நான் உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன். நான் தெனமும் சம்பாரிச்சி கொண்டு வந்து உன்கிட்ட குடுத்துடுவேன். நீ வூட்டயும் கொயந்தங்களையும் பாத்துகினயன்னா போதும். நம்ம புள்ளைங்களை நல்ல படிக்க வச்சு எஞ்சினியராவும் டாக்டராவும் ஆக்கணும்.இன்னா சொல்ற?

   நாந்தான் பொலம்பிகினு கிறேன்.இன்னும் கண்டுக்காத மாரிதான் போய்க்கினு கீற. இந்த செல்போனை உன்கிட்ட எப்படியாவது குடுத்து அனுப்பறேன். இதை கேட்டுட்டு எனக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லிடு. அப்பால எப்படியோ என்னவோ நடக்கறது நடக்கட்டும்.

                                                                               இப்பிடிக்கு 
                                           உன்னைபாத்து கொயம்பி போய் கெடக்கும் 
                                                                                   குமாரு


=======================================================================

இந்தக் கடிதம் எப்படி எழுதப்பட்டது என்பதற்கான விளக்கம் கீழே லின்கில்
  இந்தக் கடிதம் கடிதம் பிறந்த கதை

வியாழன், 20 ஜூன், 2013

யாரோ உங்களை பாக்கறாங்க!

 

எட்டிப்  பார்த்து படித்த குட்டிக் கதை
                   யாரோ  பார்க்கிறார்கள்
.
  பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரியவர்  பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார், பேருந்து இன்னும் வரவில்லை. லேட்டாகப் போனால் முதலாளி திருப்பி அனுப்பி விடுவாரோ என்கிற கவலை அவர் முகத்தில் தெரிகிறது. கையைப் பிசைந்துகொண்டு கடிகாரத்தையும். சாலையையும் மாறி மாறி பார்த்த்துக்கொண்டிருக்கிறார். ஓர் வழியாக பேருந்து வந்து அதில் அவசரமாக ஏறுகிறார். உட்கார இடமும் கிடைத்துவிட்டது. இப்போது அவரது சிந்தனை தனது அவசர பணத் தேவையை எப்படி சமாளிப்பது என்பதில் இறங்கியது. முதலாளியைக் கேட்டால் கொடுப்பாரோ மாட்டாரோ தெரியவில்லை.
         கல்லூரியில்  படிக்கும் மகள் கேட்ட புத்தகங்கள் வாங்க வேண்டும். மனைவி சொன்ன மளிகைப் பொருட்கள்  வாங்க வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தனது இயலாமையை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார் .அவருக்கு அவர் மேலேயே கோபம் வந்தது.

       அப்போது ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக தன் பாக்கெட்டிலிருந்து சில்லறை எடுக்கிறார். சில்லறை எடுக்கும்போது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று கிழே விழுகிறது.  அதை அவர் கவனிக்கவில்லை. பெரியவரின் காலடியில் அது நகர்ந்து வந்துவிடுகிறது. பெரியவர் அதை எடுத்து கொடுக்க நினைக்கும்போது காசை தவற விட்டவர் முன்னால் சென்றுவிடுகிறார். இப்போது பெரியவர் மனதில் சிறிது சலனம் ஏற்படுகிறது. யாரும்தான்  பார்க்கவில்லையே! அந்தப் பணத்தை நாம் எடுத்துக்கொண்டால் என்ன? நாமாகத் திருடினால் தானே தப்பு. தானாகக் கிடைப்பதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அப்படியே ஏமாற்றுவதாக இருந்தாலும், எவ்வளோ பேர் எப்படி எல்லாமோ ஏமாற்றுகிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். இது பெரிய தவறு ஒன்றுமில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு அதை எடுக்கலாம் என்று கீழே குனியும் முன் சுற்றுமுற்றும் பார்க்கிறார். அப்போதுதான் கவனித்தார். சிறிது தூரத்தில் வெள்ளை சட்டையும் கூலிங் க்ளாசும் அணிந்த  ஒருவர் இவரையே பார்த்துக்கொண்டிருந்தார். லேசாக புன்னகைக்கவும் செய்தார். பணம் விழுந்ததை அவரும் பார்த்திருப்பாரோ?
       பெரியவருக்கு சிறிது நடுக்கம் ஏற்ப்பட்டது. தான் பணத்தை எடுக்க முற்பட்டதை பார்த்துவிட்டாரோ?. சரி சிறிது நேரம் பார்க்கலாம். ஒருவேளை அவர் இறங்கிவிட்டால் அப்போது எடுத்துக்கொள்ளலாம் என்று கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது போல் தோன்றியது. முன்பின் பழக்கமில்லாத அந்த வெள்ளை சட்டைக்காரர் மேல் கோபமாக வந்தது.
      
       வெள்ளை சட்டைக்காரருக்கு பக்கத்தில் இருந்தவர் இறங்கினாரே தவிர,அவர் இறங்கவில்லை. அவரது இடத்தில் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய போலீஸ் காரர் அமர்ந்தார். போலீஸ் காரர் உட்கார்ந்ததும் அவரது பக்கத்தில் இருந்த வெள்ளை சட்டைக்காரர் அவரிடம் என்பக்கமாகப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பணம் விழுந்ததைப் பற்றியும் தன்னைப் பற்றியும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ? பெரியவருக்கு பயம் வந்து விட்டது. அவருடைய பிரச்சனைகள் எல்லாம் மறந்து விட்டன. போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டால் அவமானமாகப் போய்விடுமே என்று நினைத்தவர், சுற்றுமுற்றும் பார்த்தார். பணத்தை தொலைத்தவர் அது தொலைத்தது தெரியாமலே தூரத்தில் நின்று கொண்டிருந்தார். நல்லவேளை! அவர் இறங்கவில்லை  நினைத்த பெரியவர் சட்டென்று அந்தப் பணத்தை கையில் எடுத்து பணத்தை தவற விட்டவரை அழைத்து, இந்தப் பணம் உங்களடையதுதானா பாருங்கள் என்று அவரிடம் கொடுத்தார்.
       அவர் தன் சட்டைப்பயில் கைவிட்டுப் பார்த்து அது அங்கு இல்லாதது கண்டுஅதிர்ச்சி அடைந்து  ஆமாம் சார், என்னோடதுதான்! டிக்கெட் எடுக்கும்போது விழுந்துடிச்சி போல இருக்கு. ரொம்ப நன்றி சார் என்ற சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டதோடு "உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதாலதான் இன்னும் மழை பெய்யுது " என்று உணர்ச்சி வசப்பட்டார் 

      இப்போதுதான் பெரியவருக்கு திருப்தியாக இருந்தது. பெரியவர் வெள்ளை சட்டைக்காரரைப் பார்க்க அவர்  புன்னகையுடன்,"அந்த பணத்தை எடுத்திருந்தா இந்த திருப்தி கிடச்சிருக்குமா?" என்று கேட்பது போல் தோன்றியது.

      அடுத்த நிறுத்தம் வந்தது. அந்த வெள்ளை சட்டைக்காரர் மெதுவாக  எழுந்தார். போலீஸ்காரர் அவரிடம் பக்கத்தில் இருந்த ஸ்டிக்கை எடுத்துக் கொடுக்க அவர்  தடுமாறிக்கொண்டு இறங்குகிறார்.
      "அட! என்ன இது! அந்த கூலிங் க்ளாஸ் அணிந்த வெள்ளை சட்டைக்காரர் கண் தெரியாதவரா? இவரைப் பார்த்துதான் இவ்வளவு  நேரம் பயந்தேனா?
       இந்த உண்மை தெரிந்திருந்தால் நான் பணத்தை எடுத்து விட்டிருப்பேனே? நல்ல காலம்! என்னைக்  தவறு செய்யாமல் தடுத்த அவர் கண் தெரியாதவர் அல்ல. என் கண் திறந்த கடவுள்.
      இப்பொழுது அவர் மனதில் சொல்ல முடியாத திருப்தி நிலவியது.

      'யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வுதான் நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல; நல்லது செய்யவும் அதுதானே தூண்டுகிறது. அந்த யாரோ சமுதாயமாகவும் இருக்கலாம் கடவுளாகவும் இருக்கலாம்.'
 *******************************************************************************************************