என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 26 ஜூன், 2015

குலுங்கி அழுது கேட்கிறேன்-"என்னை ஏன் கைவிட்டீர்?"

      
இந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி 
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"ஒரு கைலியின் டைரிக் குறிப்பு
     இளைய தலைமுறையினரே! இது நியாயம்தானா?  இப்போதெல்லாம் நீங்கள் யாரும் என்னை சட்டைசெய்வதில்லையே ( நீ கைலி ஆயிற்றே உன்னை எப்படி சட்டை செய்ய முடியும் என்று பகடி பேச வேண்டாம்)  நடுத்தர வயதினர் மட்டும்தான் எனக்கு தங்கள் இடையில் இடை ஒதுக்கீடு மன்னிக்கவும் இட ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.. அரை டிராயர் காலம் முடிந்தபின் என் ஆட்சி தொடங்கியது பழங்கதை. இப்போதோ நீங்கள் அரை டிராயரும் முக்கால் டிராயரும் பயன்படுத்த முடிவுசெய்துவிட்டீர்களே. வேட்டி கட்டுமுன் என்னை முதலில்  கட்டித்தானே பழகி இருந்தீர்கள்.. ஆடையாகத்தான்  எனக்கு அவ்வளவாக பெரிய மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் என்னை ஒதுக்காமல் இருந்தீர்கள். ஆனால்  சமீப காலங்களில் நான் உங்களால் தீண்டப் படாதவனாகி விட்டேன்.
      திரைப்படத்தில் கூட ரவுடிகளுக்கு என்னை அணிவித்து பயமுறுத்தினீர்கள். ஆனால்இப்போதெல்லாம் திரையில் வரும் ரவுடிகள்  கூட பெர்முடாஸ் அணிந்து அதன் மேலே லுங்கியை சும்மாதானே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் .ஷாருகான் கூட லுங்கி டான்ஸ் ஆடினாலும் டான்ஸ் பிரபலமாச்சே தவிர  லுங்கி பிரபலமாகவில்லையே! 
        என்னால் எவ்வளோ நன்மை அடைந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? என்னை எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பீர்கள். உடலின் ஒரு பாதியை மறைக்கும் ஆடையாக மட்டுமாக இருந்தேன்?. போர்வை இல்லாவிட்டாலும் நடு இரவில் தூங்கும்போது அப்படியே போர்த்திக் கொண்டு உறங்குவதற்கும் அல்லவா உதவினேன் ..வேட்டி கட்டியவர்களுக்கு சிலநேரங்களில்  வேட்டி அவிழுந்து விடும் அபாயம் உண்டு. ஆனால் என்றாவது திடீரென அவிழ்ந்து அவதிக்குள்ளாக்கி இருக்கேறேனா? வேட்டி போல என்மீது படிந்த அழுக்கை காட்டிக் கொடுத்திருக்கிறேனா . வேட்டியில் சட்டென்று வழித்து எடுத்து முகம் துடைக்க முடியுமா?   அம்மாவின் சேலையைப் போல எனக்கும் குழந்தைகளுக்கு தூளியாகும் வாய்ப்பை நீங்கள்தானே அளித்தீர்கள்.  எந்த இடத்தில் கிழித்திருந்தாலும் கிழிசலை காட்டாமல் மறைத்துக கொள்ளும் வசதி என்னைத் தவிர வேறு எந்த உடையில் உண்டு?  அப்படியே முழுவதும் கிழிந்து போனாலும் என்னை நீங்கள் விடவில்லையே! தலையணை உறையாக்கி தைத்துப் போட்டதை ஏன் மறந்து விட்டீர்கள்?. சமையலறையின் கைப்பிடித் துணியாகவும் அல்லவா நான் இருந்திருக்கிறேன். மிச்சம் மீதியை உங்கள் இருசக்கர வாகனங்களை துடைக்க நீங்கள் எடுத்துப் பயன்படுத்தியது இல்லையா? உண்மையை சொல்லுங்கள். உங்கள் வீட்டு மிதியடியாகவும் வாழ்ந்த பின்தானே  என்னை வழி அனுப்பி வைத்தீர்கள்?  இப்போது உங்களுக்கு  என்ன ஆயிற்று. என் மீது ஏனிந்தக் கோபம்.  
ஆண்களுக்கு மட்டுமா நான் ? அரிதாக சில இடங்களில் பெண்களும் என்னை அணிந்திருக்கிறார்களே.
         எனக்கு வில்லனாய் வந்து வாய்த்த பெர்முடாஸில் அப்படி என்னதான் இருக்கிறது? கோகோகோலா வந்ததும் கோலி சோடாவை மறந்ததுபோல ஆகி விட்டது என் நிலை.  லுங்கி கட்டினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கும் பெரிசுகள் கூட இப்போது பெர்முடாஸில் அலைகிறார்களே. பாத்ரூம் போவதற்கும், என்னை அணிந்தால்தானே வசதியாக இருக்கும். எந்த விதத்தில் நான் குறைந்து போனேன்?
     வேட்டியை பிரபலமாக்க வேட்டி  திருவிழா நடத்தினாரே சகாயம்  ஐ.ஏ.எஸ். அவர் கூட நான் இருப்பதை மறந்து விட்டாரே! இல்லாவிட்டால் லுங்கித் திருவிழாவும் சேர்ந்தே அல்லவா நடத்தி இருப்பார். வேட்டிக்கு அட்டகாசமாக விளம்பரம் கொடுக்கும் நம்ம பிரபலங்கள் என்றாவாது கைலிக்கு   விளம்பரம் தர முன் வந்திருக்கிறார்களா? பொங்கலுக்கு இலவச வேட்டி வழங்குவது போல் இலவச   கைலி  வழங்கினால் எத்தனை கைத்தறி நெசவாளர்கள் வாழ்த்துவார்கள்.
        கோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும்  வீட்டுக்குள்ளாவது இருந்தேனே! என்ற நிறைவுடன்தான் இருந்தேன். ஆனால் இப்போது அது கூட இல்லையே! 

      முன்பெல்லாம் பிளாட்பாரத்தில் கடைவிரித்து குறைந்த விலையில் லுங்கி விற்றுக் கொண்டிருப்பார்கள் இப்போது அவர்களும் பெர்முடாசுக்கு மாறி விட்டார்கள். வேட்டிக்காக குரல் கொடுத்த முகநூல்,ட்விட்டர் புரட்சியாளர்கள் எனக்கும் கொஞ்சம் குரல் கொடுப்பார்களா?
       இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் ,பர்மா போன்ற பக்கத்து நாடுகளிலும் என்னை அணிந்துமகிழ்ந்தார்கள்.என்னை சிலர் முஸ்லீம்களின் ஆடை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  . நம்முடைய கால நிலைக்கு நானே பொருத்தமானவன். ஆனால் ஏனோ பலரும் என்னை அநாகரீகமானவர்களின் உடையாகக் கருதி  கோவில்கள் ஹோட்டல்கள் கிளப்புகள் என்று பல இடங்களிலும் அனுமதி மறுக்கிறார்கள். வேட்டி கட்டிய நீதிபதியையே திருப்பி அனுப்பியவர்கள் ஆயிற்றே நம்மவர்கள். கைலி அவர்களுக்கு கேலிப் பொருளாகி விட்டதோ? இறுக்கமான மேலை தேசத்து உடைகளுக்கு அடிமையாகி விட்டவர்களிடம் உருக்கமாக பேசி என்ன பயன்?

     பங்களாதேஷில்  பரிதரா என்ற இடத்தில் லுங்கி அணிந்து கொண்டு வர தடைவிதித்தார்கள் .அதை எதிர்த்து போராட்டமே நடத்தப் பட்டது. உயர் நீதி மன்றம் தலையிட வேண்டிய நிலைக்கு போய் விட்டது, இப்படி படிப்படியாக எனக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வெற்றியும் கண்டு விட்டீர்களே.!இதானல் நீங்கள் அடைந்த பயன்தான் என்ன?
     நான் ஏழைகளின்  ஆடைதான். என்றாலும்   நடுத்தரவர்க்கமும் என்னுடன் நட்பு பாராட்டியது.ஆனால் இப்போது?
கட்டம் போட்டு காட்சி அளித்த  என்னை திட்டம் போட்டு ஒதுக்கி விட்டீர்களே!
கவனிப்பு குறைந்து கிடக்கும் நான் (கு)லுங்கி, அழுது கேட்கிறேன்"என்னை ஏன் கைவிட்டீர்?"


************************************************


நேரம் கிடைக்கும்போது இதையும் படித்துப் பாருங்கள் 


49 கருத்துகள்:

  1. அநேகமாக அடுத்த பொங்கலுக்கு இலவச கைலி வரலாம்...!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா,

    நான் கைவிடவில்லை.

    ஏனென்றால் வீட்டில் யாரும் கைலி கட்டுவதில்லை.

    வேட்டிதான்.

    “லாமா சபக்தானி“ எனக் கைலி என்னிடத்தில் ஒருபோதும் கேட்க முடியாது.:)

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் கைலி . பயன்படுத்துவது இல்லை. வசதியான உடை ஏன் பயன்படுத்துவதை தவிர்க்கிறோம் என்பதற்காகவே இந்தப் பதிவு.

      நீக்கு
    2. நான் கைலியை கைவிடவில்லை அதைப் போல நல்ல இரவு உடை ஏதும் கிடையாது எல்லா சீதோஷ்ண நிலைக்கும் பொருத்தமானது.. நம்ம ஆட்டில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு இரவு உடை கைலிதான் சிறந்தது அது இல்லாமல் பெர்முடா மற்றும் பேண்ட் டைப்பில் உடை அணிந்தால் நிச்சயம் ஜட்டியை கண்டிப்பாக அணியவேண்டும் அப்படி இறுக்கமான ஜட்டியை வெயில் காலத்தில் இரவு நேரத்தில் அணிவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன

      நீக்கு
  3. வணக்கம்,
    ஆஹா அருமையான பதிவு,
    ஆனால் நண்டு பிராண்ட் லுங்கி விளம்பரம் தாங்கள் பார்க்க வில்லையா?

    உண்மைதான் நல்ல வசதியான உடை,

    தாங்கள் சொன்னது போல் சில இடங்களில் பெண்களும், சில நேரங்களில் பெண்களும் பயன்படத்திய உடை,

    பழசானாலும் எல்லாமும்மாக இருந்து போன உடை,

    நன்றி,பகிர்வுக்கு,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்திருக்கிறேன். வேட்டிக்கு பிரபு மம்மூட்டி என்று விளம்பரம் செய்ய முன்வருகிறார்கள் .லுங்கிக்கு வருவார்களா?

      நீக்கு
  4. கவலைப் படாதே லுங்கியே ,என்னைப் போன்றோர் ஆதரித்துக் கொண்டுதானே இருக்கிறோம் ?என் மகன்களுக்கு பெர்முடாஸ் வடிவில் இப்போது நீயும் காலத்திற்கேற்ற கோலம் பூண்டு இருப்பதை பார்த்து மகிழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  5. லுங்கி டேன்ஸ் என்னாச்சு?

    பதிலளிநீக்கு
  6. நிச்சயமாக அது குலுங்கி குலுங்கி
    அழுவது மிகவும் நியாயமானது
    எந்த அளவு அது நம்முடன்
    பின்னிப் பிணைந்து கிடந்தது
    வேட்டி இல்லாத வீடு கூட இருக்கும்
    இது இல்லாத வீடு சாத்தியமில்லாமல்
    அல்லவா இருந்தது
    எனக்கும் கண் கலங்குகிறது
    அருமையான சுவாரஸ்யமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ம்..ம்.ம் ஞாயம் தான் என்ன செய்வது குலுங்கி குலுங்கி அழுவதைத் தவிர வெறும் எதுவும் செய்ய முடியாது. ம்..ம் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டித்தானே உள்ளது. கைலி மட்டும் அல்ல காலத்தால் கை விடப்பட்ட எத்தனையோ உள்ளது உலகில் அழ. வண்டில் மடு கூட விக்கி விக்கி அழும் போய் கேட்டால் கை விளக்கும் கதறி அழும். காலமெல்லாம் இருள் அகற்றி வாழ்வில் ஒளி பாய்ச்சி ஏற்றம் காண வைத்து கை கொடுத்த என்னை கை விட்டு விட்டார்களே என்று. இப்படி எஹ்டனயோ இருக்கும். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான பதிவு ஐயா
    ஒரு காலத்தில் கைலி கட்டிக் கொண்டே அலைந்திருக்கிறேன்
    இன்று வீட்டில்மட்டும் கைலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  9. கைலி குலுங்கி குலுங்கி அழ, நான் குலுங்கி குலுங்கி சிரித்தேன், உங்கள் பதிவைப் படித்துவிட்டு. அருமையான நகைச்சுவை!
    எங்கள் வீட்டில் எப்போதுமே லுங்கி கிடையாது. ஆனால் அக்கா பிள்ளை இப்போதும் லுங்கி தான். அது பழையதானதும் சமையலறையில் கை துடைக்கும் டவலாக மாறும். அது இற்றுப் போகும்வரை பயன்படுத்துவார்கள். அங்கு லுங்கி குலுங்கி குலுங்கி சிரிக்கும் என்று நினைக்கிறேன்.
    காலையில் உங்கள் பதிவைப் படித்து மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாயிற்று! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. லுங்கி டான்ஸ்! :)

    வட இந்தியாவில், குறிப்பாக சீக்கியர்கள் இந்த லுங்கியை [நடுவில் மூட்டாமல்] பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் லுங்கி தான் நன்றாக இருக்கும் என்று நான் சென்னை வரும்போதெல்லாம் வாங்கி வரச் சொல்லுவார் ஒரு பஞ்சாபி நண்பர்! :)

    லுங்கியின் ஆதங்கம் நியாயமானது தான்! அதை பதிவாக்கிய விதம் நன்று.

    பதிலளிநீக்கு
  11. ஒரு கைலிக்குள் இத்தனை சோகங்களா?

    பதிலளிநீக்கு
  12. கைலிக்கு இவ்வளவு பெரிய பதிவா என்று நினைத்தாலும் தேவையான பதிவுதான். நானும் Feel செய்த விஷயம்தான் இது. நான் கைலிக்குத்தான் ஓட்டு போடுவேன். ஏனென்றால் எனக்கு வேஷ்டி கட்ட வராது!!!!!!! எப்போதும் லுங்கிதான்.

    பொது இடங்களில் பெர்முடாஸ் போட்டு வருபவர்களைப் பார்த்தால் எனக்குப் பிடிப்பதில்லை. (உன்னை யார் கேட்டார்கள் என்கிறீர்களா?)

    பதிலளிநீக்கு
  13. லுங்கியினை பயன்படுத்தியவர்கள் அவ்வளவு சீக்கரத்தில் கைவிடமாட்டார்கள் (என் கணவர் சொல்வதை வைத்து சொல்கிறேன். )ஆனாலும் தாங்கள் சொல்வது போல அதற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  14. இது போல எங்கள் (பெண்கள்) விஷயத்திலும் எத்தனை குலுங்கி குலுங்கி அழும் தாவணி கண்டாங்கிச்சேலை இப்படி....
    அட இந்து யோசனை நமக்கு தோணாம போச்சே என நினைக்க வைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த யோசனை என்று படிக்கவும்.
      ஏன் இந்துக்கள் யோசனை என்றாலும் நன்றாகத்தான் இருக்குமோ ?

      நீக்கு
    2. இந்துக்கள் மட்டும் தான் கைலி கட்டுவார்களா என்று சண்டைக்கு யாராவது வரப்போறாங்க.
      கைலியை கண்டுபிடித்தது யார்... முதலில் அணிந்தவர்கள் யார் என்றெலாம் கேள்வி வரும் போல....

      நீக்கு
  15. கைலியின் ஆதங்கம் நியாயமானதே. வித்தியாசமான சிந்தனையோடு உள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. கைலியின் குலுங்கும் அழுகை கேட்கிறது. நான் ஒரு கைலி ஆதரவாளன் கீழை நாடுகளிலும் ஸ்ரீலங்காவிலும் பலராலும் அணியப் படுகிறதே. ஆதங்கப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. சொல்ல மறந்த தகவல் ஒன்று கைலி பற்றி.

    மியான்மார் போன்ற நாடுகளில் கைலிதான் பாரம்பரிய உடை. பேன்ட் அணித்து செல்பவர்களை அவர்கள் "யார்றா இந்த பட்டிக்காட்டான்" என்கிற ரேஞ்சில் ஏற இறங்க பார்ப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  18. நல்லவேளை நான் லுங்கியை தான் பயன்படுத்துகிறேன் சார் .,, செமையான கேள்விகள் சில இடங்களில் சிரிப்பாகவும் இருந்தது ... மாற்றுக் கோணம் ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. In Delhi, if you are seen with lungi people will think that you are a migrant worker from Bihar.

    பதிலளிநீக்கு
  20. or a Bangladeshi refugee illegally living in India

    பதிலளிநீக்கு
  21. கைலி அணிந்து பழக்கமில்லை! ஆனால் கைலியின் பயன்பாடு குறைந்து போனது குறித்து வருத்தமே! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. கைலி அணிந்து பழக்கமில்லை! ஆனால் கைலியின் பயன்பாடு குறைந்து போனது குறித்து வருத்தமே! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. என்னை நானே கைதி ஆக்கிக் கொண்டேன் இல்லத்தில் அடைபட்டு! ஆனால் கைலியுடன்! எப்பொழுதும்

    பதிலளிநீக்கு
  24. செமையான பதிவு அய்யா
    செமையான எழுத்து..
    எதுகை மோனை சும்மா வேளாடுது!
    வெகு நேர்த்தியான பதிவுகளில் ஒன்று ...
    தம +

    பதிலளிநீக்கு
  25. # சமுத்திரம் ஐ.ஏ.எஸ்.#என்பதை சகாயம் என்று திருத்தினால் நலம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன் ஜி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி எப்படித் தவறவிட்டேன் தெரியவில்லை

      நீக்கு
  26. இன்று வரைக்கும் வேஷ்டி தான்.

    பதிலளிநீக்கு
  27. கைலிக்கு என்று இருக்கும் அபிமானிகள் இன்னும் குறையவில்லை என்பதே என் கருத்து. கலைஞர் போன்றவர்கள் வேட்டிக்குப் பதிலாக வெள்ளை கைலியை பயன்படுத்துகிறார்கள். நான் வீட்டில் இருக்கும்போது கைலிதான் எனக்கு சவுகரியம்.
    த.ம.17

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரை ட்ராயருக்குப் பின் கைலி கட்டத் தொடங்கும் வழக்கம் குறைந்து விட்டதாகவே தெரிகிறது. 20 வயதுக்குள் இருக்கும் கைலி கட்டிய இளைஞர்களை காண முடிவதில்லை கைலி இன்று நடுத்தர வயதுக்காரர்களின் உடையாகத்தான் இருக்கிறது

      நீக்கு
  28. சட்டென்று அருகில் எங்காவது வெளியில் சென்று வருவதற்குக் கைலி சரிப்படவில்லை என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். மாற்றுவதற்குச் சோம்பல் பட்டு கைலியை அழ வைத்து விட்டனரே..
    வாழ்க்கை முறை மாற்றம் உடைகளையும் மாற்றுகிறது..

    பதிலளிநீக்கு
  29. எனக்கு கைலி கட்டவே பிடிக்கும்... இங்கும் கைலிதான். என்ன அறைக்குள் மட்டுமே கட்ட முடியும்... கீழே இருக்கும் கடைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் பெர்முடாசோ, பேண்டோ மாட்ட வேண்டும்....

    பதிலளிநீக்கு
  30. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. வித்தியாசமாய் நகைச்சுவையாக..

    பதிலளிநீக்கு
  31. ஹஹஹஹ் நல்ல லுங்கிப் பதிவு...குலுங்கி குலுங்கிச் சிரிச்சேன்.....நான் எப்போதும் லுங்கிக்குத்தான் ஓட்டு....வீடு வந்ததும் உடனே லுங்கிதான்...

    மதுரைத் தமிழன் சொன்னதையும் வழிமொழிகின்றேன்...அப்படியே!

    பதிலளிநீக்கு
  32. நான் இன்னும் சாரம்தான் (கைலி) இந்தியா வரும்போதெல்லாம் வாங்கியும் வருவது சாரம் தான்.சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  33. நிறைய POINTS சொல்லி, நிறைவாக எழுதியுள்ளீர்கள். இதை கவிதையாக்கி, உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பிரசாத் சார். எ
      ன் மின்னஞ்சலுக்கு ஏதும் வரவில்லையே
      tnmdharan@yahoo.com
      tnmdharanaeeo@gmail.com
      இரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பவும்
      உங்கள் கவிதைய் படிக்க ஆவல் கொண்டேன்.

      நீக்கு
  34. வெள்ளைக்காரன் கால்சட்டை, மேல்சாட்டை
    வந்த பின்னாடி நண்பா
    வேட்டி, சால்வை, சாரம், துவாய்
    போனது போனது தான்

    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  35. பணப்புழக்கம் அவ்வளவாக இல்லாத காலங்களில்60--70-80களில்பலரால் முடிந்தது அது மட்டுமே .மேலும்
    1970 , 1972 களில் பெண்களும் லுங்கி அணிந்து ஒரு டாப்ஸ் போட்டுக்கொண்டிருந்த காலமும் உண்டு .ஹிந்தியின் மும்தாஜ் (ஹிந்தி நடிகை சில படங்களில் அணிந்து ஹீரோ வின் ஓட்ட வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் டூயட் பாடுவார் )தமிழில் ஜெயசித்ரா எந்த படம் என்று ஞாபகம் இல்லை லுங்கி அணிந்து ஒடி யாடுவார்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895